PDA

View Full Version : நான் இறந்தேன்....



ரிஷிசேது
24-07-2007, 07:12 PM
வாழ்வியல் நீட்டிப்பிற்கான
எல்லா வழிகளையும் முட்டி மோதி
பார்த்தாயிற்று ..

சுவாசமும் துடிப்பும்
ஏற்ற இரக்கமாயிருப்பதையும்
இதயம், இயக்கத்தை இனி
எப்போது வேண்டுமானாலும்
நிறுத்தி விட கூடுமெனவும்
கூறிப் போனார் மருத்துவர்
நகரும் நொடி முள்ளும்
நிமிட முள்ளும் எண்ணிக் கொண்டிருந்தன
எனக்கான நேரத்தை ...

நகர்ந்து போங்கள்
உறவினர்களே, பிள்ளைகளே
நகர்ந்து போங்கள்
நான் என் இறுதி நேரத்தை
வாழ்ந்து விட வேண்டும் - எனக்கு
கடைசி பஸ்சைப் பிடித்து வீடு போகும்
அவசரமில்லை - உங்களைப் போல்

என்னைப் பற்றி உங்களிடையே
என் முன்னே பேசிக் கொள்வதில்
ஒவ்வாமையும் ஒத்துப் போதலையும்
காண்கிறேன் ..
நகருங்கள் எனை விட்டு
நிதானமாய் இறக்கிறேன்

என் பிள்ளைகளும்
உறவுகளும் நினைப்பது போல்
நான் நல்லவனோ, கெட்டவனோ இல்லை
வாழ்வு சிலருக்கு ரோஜா மலர்
படுக்கையாகவும் - சிலருக்கு
முள் படுக்கையாகவும் மாறி விடுகிறது ...

சம்பாதிக்கும் சற்று முன் வரை
எனக்கான தேவைகள் - இத்தனை
பெரியதாயில்லை ..
கடைசி நிமிடங்களில்
நான் சேர்த்து வைத்தது,
உதவிகள் செய்தது, பெற்றது
கூனிக் குறுகி அவமானமாய் உணர்ந்தது
எதுவும் ஞாபகத்துக்கு வரவில்லை.

நான்
வாழ்ந்ததும் இறந்ததும் கூட
தலைமுறைகள் மறந்து விடக் கூடும்
என்னிடம்
விட்டுப் போகவும் இந்த நிமிடத்தில்
எதுவுமேயில்லை -
வெறுமையாய் இறப்பது - நான்
பிறப்பது போலிருக்கிறது

ஒரு வேளை
யாரேனும் என் இறப்பிற்காய்
அழவும், யாரேனும் சந்தோஷிக்கவும்
கூடுமாயின் அவர்களுக்கிடையே வாழ்ந்திருப்பேன்
உண்மையில்
மரணம் எத்தனை இனிமையாயிருக்கிறது ..

ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள்
மருத்துவர் உதடு பிதுக்கிப் போகிறார்
கடைசி மூச்சு திணறலாய் உணர்ந்து
விட்டு விட்டு வெளியேற கண்கள்
காட்சிகளிலிருந்து விடைபெற
நான் இறந்தேன் ...

அறிஞர்
24-07-2007, 07:21 PM
இறக்கும் தருவாயில் ஏற்படும் நினைப்புகள்...
உங்கள் வரிகள்.... யோசிக்க வைக்கிறது..

வாழும் வாழ்க்கை எப்படி இருக்கிறது.. என...

அமரன்
24-07-2007, 07:30 PM
ரிஷி-இறக்கும்போது எத்தனை எத்தனை சிந்தனைகள்.
செய்த தவறுகளை நினைத்துக் கவலைப்படுவோர் சிலர்.
முற்றுபெற்றாத தருணங்களை நினைத்து ஏங்கொவோர் என எத்தனை வகை..
உங்கள் வரிகளில் அவை அப்படியே கொண்டுவரப்பட்டிருகின்றன..
அதிலும் இவ்வரிகள்...

விட்டுப் போகவும் இந்த நிமிடத்தில்
எதுவுமேயில்லை -
வெறுமையாய் இறப்பது - நான்
பிறப்பது போலிருக்கிறது


போகும்போது எதுவுமில்லை.
வரம்போதும் எதுவுமில்லை..
இறப்புக்கூட பிறப்பாக தெரிகிறது..
பாராட்டுக்கள் ரிஷி.

இனியவள்
24-07-2007, 07:35 PM
ரிஷி கவிதை பிரமாதம்

ஒரு மனிதனின் கடைசி
நிமிடங்கள்..

செய்த பாவத்தை நினைத்து
வருத்தப் படும் பொன்னான*
நிமிடங்கள்...

சிவா.ஜி
25-07-2007, 04:51 AM
வாழ்வின் கடைசி நிமிடங்களை இதை விட அருமையாய் சொல்ல முடியாது.
ஒரு வேளை
யாரேனும் என் இறப்பிற்காய்
அழவும், யாரேனும் சந்தோஷிக்கவும்
கூடுமாயின் அவர்களுக்கிடையே வாழ்ந்திருப்பேன்
உண்மையில்
மரணம் எத்தனை இனிமையாயிருக்கிறது ..

உண்மைதான் இறந்தும் வாழ்பவர்கள் இருவிதமாகவும் வாழ்கிறார்கள்.
அன்பால் அடையாளம் காணப்பட்டு.....
வெறுப்பால் நினைக்கப்பட்டு....
ஆனால் எந்த நிலையையுமே உணராமல் நிம்மதியான
உறக்கத்திற்கு கொண்டு செல்லும்
மரணம் இனிமையானதுதான்.
உணர்வுகளை மிக அழகான வார்த்தைகளாய் வடித்து
படிப்பவர்களை சிந்திக்க வைத்து விட்டீர்கள்
பாராட்டுக்கள் ரிஷி.

lolluvathiyar
26-07-2007, 10:14 AM
தன் இறப்பதாக கற்பனை பன்னி கூட கவிதை வடிக்கும் ஆற்றல்
எப்படி பாராட்ட தெரியவில்லை.
ஆனால் கவிதை மிக நன்றாக புரிந்தது
அது சரி அனுபவித்து எழுதியது போல் இருக்கே
நீங்கள் ஆவியா

ரிஷிசேது
26-07-2007, 07:10 PM
விமர்சித்த அனைவருக்கும் நன்றி. லொள்ளுவாத்தியார் அவர்களே நீங்கள் சொல்லுவதிலும் கொஞ்ச்ம் நிஜமுண்டு, கற்பனையில் இறந்தேன்.
நன்றிகளுடன்
ரிஷிசேது

ஓவியன்
03-08-2007, 02:01 PM
வித்தியாசமான கருவும் கற்பனையும் ரிஷி!
அதற்கு என் பாராட்டுக்கள் முதலில்..........!

எந்த ஒரு கொடுமைக் காரனும் இறக்கும் வேளையில் தான் செய்தவற்றை ஒரு தடவை திருப்பிப் பார்ப்பானாம்.....!

அதனையே உயிருடன் இருக்கையில் செய்து பார்த்தால்...............?
எத்தனை பேர்களது வாழ்வு வசந்தமாகும், விட்ட தவறுகளைத் திருத்திக் கொள்ளலாம் இப்படிப் பற்பல அனுகூலங்கள்...........

இறக்கும் போது கூட எந்தக் கவலையுமே இன்றி சந்தோசமாக இறந்து போகலாம்.