PDA

View Full Version : அம்மா.. தங்கை.. நான்...அமரன்
21-07-2007, 03:12 PM
மோட்டார் வண்டியில் காற்றுடன் போட்டி போட்டுக்கொண்டு வீதியில் பறந்தேன். நடைபயணி கடவையில் இருந்த விளக்கு சிவப்பைக் காட்டியதும் நான் வேகத்தைகுறைக்க பக்கத்தில் வந்த பேரூந்தால் முடியவில்லை. அம்மா என்ற அலறல். கூடியவர்கள் ஓட்டுநரை திட்ட ஓரமாக இருந்தார் ஒருவர். முச்சக்கர வண்டியில் வந்த ஒரேஒரு மனிதரின் உதவியுடன் மருத்துவசாலையில் செர்த்த பின்னரே அவரின் முகத்தை பார்த்தேன். என்னை பார்ப்பது போல இருந்தது. யார் இவர்? எனக்கும் தெரியவில்லை. அவரும் சொல்லவில்லை. பாக்கட்டில் காசுக்காகிதங்களே இருந்தன.

எனது வீட்டில் தகவல் சொன்னேன். அப்பாவே அவரை மருத்துவமனையில் வைத்து கவனித்தார். ஒருவாரம் கழித்து அவரை வீட்டுக்கு போகலாம் என்றார்கள். எங்கே போவது? அவர்தான் யாழ்ப்பாணப் பிரஜையாமே? நம் வீட்டுக்கே வந்தார். அப்பாவின் முகத்திலும் அம்மாவின் முகத்திலும் கவலை ரேகைகள். இன்னொருவருக்கு வலிக்கும்போது இவர்களுக்கும் வலிக்கிறதே? புனிதர்கள்தான் நினைத்த எனக்கு வலித்தது அவர்கள் பேசியபோது. "தம்பி இவர்தான் உன் அப்பா. கதிர்காமத்திற்கு வந்தபோது உன்னை தொலைத்து விட்டார்கள். நாங்கள் உன்னை எடுத்து வந்தோம். மருத்துவமனையில் பார்த்தபோது உன்னை மாதிரியே இருந்தார் விசாரித்ததில் தெரிந்து கொண்டோம்" நிறையச் சொன்னார்கள் இதுதான் ஆணி அடித்ததுப்போல் நிலைத்து நிற்கிறது.அப்புறம் என்ன? விமானத்தில் அனுப்பினார்கள் விரும்பினால் திரும்பி வா என்ற அன்பான நிபந்தனையுடன்.

நாற்பது பேரையும் அவர்களின் பொருட்சுமைகளுடன் மனச்சுமைகளையும் சுமந்துகொண்டு கொழும்பிலிருந்து புறப்பட்டது விமானம்.
எனக்குப் பக்கத்தில் என் முதுமை உருவம். என் அப்பாவாம். யாருக்கு யாரென ஆண்டவன் எப்போதோ எழுதிவைத்தாலும் சடங்குகளின் மூலம்தானே அவை நிச்சயிக்கப்படுகின்றன. அப்படிப்பார்க்கும்போது இவர்தான் எனது அப்பாவென்று இரண்டு வாரத்திற்கு முன்னர்தான் நிச்சயம் செய்தனர் இவர்கள்தான் என் பெற்றோர் என்று நான் நிச்சயம் செய்த இருவர். விபத்தில் அறிமுகமானவர் அப்பா என்ற பட்டத்துடன் இருக்க 20 வருடம் அப்பாவாக இருந்தவர் யாரோ ஆகிறார். ஐந்து வருட ஆட்சியாளருக்கும் அம்மா அப்பாவுக்கும் வித்தியாசமில்லாத ஒரு வாழ்க்கை. வேடிக்கை வாழ்க்கை.


45 நிமிடங்கள் வானத்தில் பறந்த அலுமினிய பறவை மடிமீது சுமந்த தாயை முத்தட்டது. "யாழ்ப்பாணத்தை அடைந்து விட்டோம்" வாழ்க்கை பயணத்தின் அறிமுகமான பயணி சொன்னார். மௌனத்தை பதிலாக்கிவிட்டு சப்பாத்து கால்கலால் பலமாக மண்ணை மிதித்தேன். என் கோபம் தெரியவேண்டாமா? அடுத்த 30 நிமிடத்தில் பலரின் அறிமுகத்திய அன்னையை காணப்போகின்றேன். பிள்ளைகளில்லாதோருக்கு இவ்வளவு காலம் பிள்ளையாக இருந்தவனுக்கு பெற்ற தாயை பார்க்க போகின்றேன் என்பது களிப்பை ஏற்படுத்துகிறதே? இதை என்ன வென்று சொல்வது?புரியவில்லை...புரியாமலேயே பழைய கோயிலை அடைந்தேன்....

சுமந்தவள் கண்களில் பிரகாசம். இருண்டிருந்தனவோ..இத்தனை நாட்கள். கண்ணை சுருக்கிப் பார்கிறாளே? புரிந்தது...இருட்டில்தான் வாழ்ந்திருகிறாள். கட்டி அணைத்துகொண்டாள் கூடவே நானும்...என் உயரத்தில் ஒருத்தியை காட்டி உன் தங்கை என்ற அந்த நொடியில் என் தனிமை விலகியது போல் இருந்தது. காட்சிப்பொருளாக நினைத்து ஊர் மக்கள் வந்து பார்த்தனர். . என் அண்ணா என்று அறிமுகபடுத்தும் குயிலிசை, விஷேட உணவுகளை சாப்பிடும்போது அண்ணாவுக்கு கொடுத்தாயா எனக்கேட்பதும் அதற்கு முன்னே எனக்கு தந்துவிட்ட அம்மாவின் தலை அசைப்பும்...இதுதான் சொர்க்கமோ என் நினைக்கவைத்தன..புதிய வகையான ஒரு பாச உலகம் இது. பத்து நாட்கள் அவ்வுலகத்தில் வாழ்ந்துவிட்டேன்.இந்த நாட்களில் வேளியே போகவே இல்லை. பதினோராம் நாள். இரவுக் காட்சிக்கு போக புறப்பட்டேன். கூட வந்த தங்கையை தடுத்து நிறுத்தினாள் அன்னை. ஏதேதோ சொல்லி தடுத்து விட்டாள். கனவானது அன்றைய சினிமா மட்டுமா?

வெளியே காத்தாட நடந்த என்னை தடுத்து நிறுத்தியது அப்பாவின் குரல். "ஏம்மா அவன் எவ்வளவு ஆசையாகக் கூப்பிட்டான். அவளும் சந்தோசமாக போனாளே. ஏன் தடுத்தாய்". காதுகள் தானாகவே கூர்மையாகின. "எனக்கு தெரியும் அவன் என்மகன்... ஊருக்கு தேவை அவன் என் மகன் என்பதற்கு ஆதாரம்.இருக்கா நம்மிடம்? இருவரும் தனியாக படத்திற்குப் போவதை தப்பாக பேச சிலர் இருப்பார்கள். அவர்களால் அவள் வாழ்க்கை பாதிக்கபடாதா? அவளுக்கும் நான் அம்மாங்க" அவள் சொன்னதும் எனக்கு ஏதோ புரிந்தது. அம்மாவுக்கு அவள் மகள் மட்டுமல்ல எனக்கு தங்கையும்தானே...இதோ இப்போது கொழும்பை நோக்கிச் செல்லும் விமானத்தில் நான். பக்கத்தில் இப்போ வேறொருவர்.


நண்பர்களே..இது எனது ஐந்தாயிரமாவது பதிப்பு. ஏதோ தோன்றியதை எழுதி உங்கள் பார்வைக்கு வைத்து விட்டு தலைகுனிந்து நிற்கின்றேன். குட்டுபவர்கள் குட்டுங்கள். தட்டுபவர்கள் தட்டுங்கள். இரண்டுமே ஆசிர்வாதமே...

அன்புரசிகன்
21-07-2007, 03:46 PM
என் உயரத்தில் ஒருத்தியை காட்டி உன் தங்கை என்ற அந்த நொடியில் என் தனிமை விலகியது போல் இருந்தது.

என்னைப்பாதித்த வரிகள் இவை. உங்கள் 5000 ஆவது பதிவு சற்று வித்தியாசமான கருத்துடன் கூடி நிற்கிறது.

ஆனாலும் அண்ணணுடன் தங்கை செல்லும் போது சமூகம் தப்பாகத்தான் எண்ணுமா என எனக்குள் ஒரு கேள்வி. நீண்டகாலம் பிரிந்தாலும் ஒரே வயிற்றில் பிறந்தவர்கள் அல்லவா? எனக்கும் சொந்தத்தங்கை இல்லை என ஒரு மனவருத்தம் உள்ளது. சித்தியின் மகள் தான் என் சகோதரர்களுக்கெல்லாம் செல்ல குட்டி மகாராணி. ...

அண்ணன் தங்கையை பார்த்து அவ்வாறு கூறியது யாழ்ப்பாணத்தில் நடந்த உண்மை சம்பவமா?

மற்றப்படி நன்றாகவே உள்ளது...

வாழ்த்துக்கள் ..

அமரன்
21-07-2007, 03:54 PM
நன்றி..அன்பு...அவன் அண்ணன் என்பது தாய்க்குத் தெரியும்..சமூகத்துக்கு...?.எப்போதோ தொலைந்த மகன் என்று சொன்னால் ஆதாரம் கேட்கும் உலகம் அல்லவா இது..?ஆதாரம்? இவர்கள் தொலைத்தார்கள். அவர்கள் எடுத்தார்கள். உருவம் சொன்னது. உறவு புரிந்தது. சட்டையின் நிறங்கள் உறுதிப்படுத்தலாம். தொலைத்த திகதி உறுதிப்படுத்தலாம். இதெல்லாம் போதுமா பொல்லாத சமூகத்துக்கு? வெறும் வாயையே மெல்வோர் அவல் கிடைத்தல் விடுவார்களா?

ஓவியன்
21-07-2007, 06:25 PM
அமர் மன்னிக்கவும் விளக்கமாக பின்னர் விமர்சிக்கிறேனே.......................!

ஆதவா
21-07-2007, 07:06 PM
ஐயாயிரமாவது பதிப்பு. அட்சர நட்சத்திரம்..

கதை எழுதுவதில் ஆதவன் பூஜ்யம். ஆனால் படிப்பதில் கெட்டி. உமது கதை வாசல் தலையெடுப்புக்கு வந்தனம்... கருவோ சிந்திக்கவைக்கும்....

கதையில் முழுவதுமாக ஒரு அனுபவத்தை பகிர்ந்தமாதிரி இருக்கிறது. சம்பாஷணைகள் ஏதுமில்லை. பெயரளவிலாவது கொண்டுவந்திருக்கலாமே அமரன். அத்தோடு அவசர கதியில் எழுதிய கதை போல உணர்கிறேன்..

தன் தங்கை என்றாலும் அந்த நேரத்தில் அவன் மனதில் எந்த ஒரு நினைவுமிருந்திருக்காது என்றாலும் அம்மாவின் கரிசனம் அதிலும் புத்திசாலித்தனமிகுந்த கரிசனம் அட போடவைக்கும் வரிகளாய்.
கவிதை படுத்தியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். ஆனால் நீளம் மிகுந்திருக்கும். இங்கே காட்சிகளாய்க் காணுவதும் சுகம் தான்.

கவிதை எழுதுவதை விட கதை எழுதுவது அவ்வளவு சுலபமல்ல. இங்கே ராகவன் மயூரேசன் மோகன் போல பலருள்ளார்கள்.. நாம் தெரிந்துகொள்ள அதிகமிருக்கிறது.

வாழ்த்துக்கள் அமரன்.. நான் படிக்கும் உங்களின் முதல் கதை. முத்தாரமான கவிதையாக.. இன்னும் பல எழுத வாழ்த்துக்கள்

அமரன்
21-07-2007, 07:25 PM
ஆதவா..நேற்று ஓவியன் 5000 ஆவது பதிவுக்கு வாழ்த்துத்திரி ஆரம்பித்ததும் வித்தியாசமாக ஏதாவது செய்யலாம் என நினைத்தேன். கதை எழுதலாம் என நினைத்தேன். எதை எழுதுவது எப்படி எழுதுவது எதுவுமே யோசிக்காது 5000 ஆவது பதிவு கதையாக இருக்குமென சொன்னேன். இன்று 4999 ஆவது பதிவைப் பதிந்த பின்னரே எதை எழுதலாம் என யோசித்தேன். ஒரு மணித்தியாலத்தில் இக்கருவை கதையாக்கினேன். உரையாடல் சேர்க்க நினைத்தேன். நீளம் கருதி விட்டு விட்டேன். சிறப்பான விமர்சனத்திற்கு நன்றி ஆதவா?

பாரதி
21-07-2007, 10:37 PM
மிகப்பெரிய கதையை மிகச்சுருக்கமாக சொன்னது போல தோன்றுகிறது. சில நேரங்களில் நம்முடைய உணர்வுகளை எழுத்தில் வடிப்பது கடினமாக இருக்கும். இக்கதை அத்தகைய தருணத்தில் எழுதப்பட்டிருக்கலாம்.
கதையில் அப்பாவை சற்று விலக்கி வைத்தே பார்ப்பதாக தோன்றுகிறது. எனக்குப் பக்கத்தில் என் முதுமை உருவம் − வாழ்க்கைப்பயணத்தில் அறிமுகமான பயணி என்ற உவமைகள் இதைப் புலப்படுத்துகின்றன. தங்கைக்காக தனியே இருப்பதென முடிவு செய்து கிளம்புவது சற்றும் எதிர்பார்க்காதது. முதல் கதைக்கு என் பாராட்டுக்கள். தொடர்ந்து கதைகளைத் தர வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
22-07-2007, 04:41 AM
முதலில் என் மனமார்ந்த பாராட்டுக்கள் அமரன். இனி கதைக்குள் வருவோம்..
கதை சொல்வதில் நிறைய பாணி இருக்கிறது இது narration என்ற வகையைச் சேர்ந்தது. வசனமில்லாமல் நிகழ்வை விவரிக்கும் பாணி. அழகான கற்பனை சிறந்த சொல்லாடலுடன் அமைந்த கதை. நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் சரி. நானே என் அனுபவத்தில் உணர்ந்தது. என் நன்பன் ஒருவனின் தங்கையும் அவனும் ஒரு வயது வித்தியாசத்தில் பிறந்தவர்கள். அவர்கள் சேர்ந்து நடந்து போகும்போது அவர்களை இன்னாரென்று தெரியாதவர்கள் வேறுமாதிரியாகப் பார்த்தார்கள்,பேசவும் செய்தார்கள். இதை அவனே என்னிடம் வருத்தத்துடன் சொல்லியிருக்கிறான். உங்கள் கதையின் நாயகன் எடுத்த அந்த முடிவு வேதனை தரும் முடிவாக இருந்தாலும்,தங்கையின் நல் வாழ்வுக்காக எடுத்த சரியான முடிவு.இன்னும் நிறைய எழுதுங்கள் அமரன். வாழ்த்துக்கள்.

lolluvathiyar
22-07-2007, 07:36 AM
5000 ஆம் பதிவாக கதை தந்து இருக்கும் அமரன் அவர்களை வாழ்த்துகிறேன். கதை நன்றாக எழுதி இருகிறீர்கள். கடைசி வரி புரியவில்லை.கடைசியில் உங்கள் பக்கத்தில் அமர்ந்திருப்பவர் யார்?

எனக்கு ஒரு சந்தேகம் கொழும்பு சிங்கள் அரசின் கட்டுபாட்டில் இருகிறது.
யாழ்பானம் விடுதலை புலிகளின் கட்டுபாட்டில் இருகிறது. இந்த இரண்டு பகுதிக்கும் இடையில் விமான போக்குவரத்து இருகிறதா?

சூரியன்
22-07-2007, 07:42 AM
இதை எப்படி விமர்சிப்பது என்று தெரியவில்லை அமர்.

அமரன்
22-07-2007, 07:57 AM
பாரதி அண்ணாவிடமிருந்து நான் வாங்கும் முதல் விமர்சனம். பேரானந்தக் கடலில் மூழ்குகின்றேன். நன்றி அண்ணா.ஆம் அண்ணா எழுத நினைத்து உட்கார்ந்தால் நீளம் அதிகமாக தெரிந்தது. கசப்பான சில சம்பவங்கள் நிழலாடி எழுதவிடாமல் சதி செய்தன. அதனால் சுருக்கினேன். நீங்கள் சொல்வது சரியே..அப்பாவை சற்றே விலக்கியே வைத்தேன். நிஜ வாழ்வின் பாதிப்பு எழுதும் சிலவேளைகளில் உத்தரவின்றியே ஒட்டிக்கொள்கின்றது. உங்கள் ஆசியுடன் தொடர்ந்து கதைகளைத் தர முயற்சிகின்றேன்.

அன்புரசிகன்
22-07-2007, 08:05 AM
வாத்தியாரின் கேள்விக்கு... யாழ்ப்பாணம் என்பது இலங்கையின் வடபுலத்திலுள்ள ஒரு குடாநாடு. கொழும்பு இலங்கையின் மேல்மாகாணத்தில் உள்ளபகுதி. யாழ்ப்பாணம் தற்சமயம் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இரண்டையும் பிரிக்கும் ஆனையிறவு - வன்னிப்பகுதி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதாலும் அரசாங்கம் யாழ் குடாநாட்டிற்கான தரைவழிப்பாதையை மூடியிருப்பதாலும் கடல் மற்றும் வான்வழிப்போக்குவரத்து தான் மக்கள் பிரயாண ஊடகமாக உள்ளது.

அமரன்
22-07-2007, 08:17 AM
சிவா...! நாம் நடந்து போகும்போது எத்தனையோ விசயங்களைப் பார்கின்றோம். கேட்கின்றோம். அவற்றை எழுத்தில் கொண்டுவரும்போது சில நேரங்களில் சுலபமாக இருக்கும். பல நேரங்களில் கடினமாக இருக்கும். பொதுவாக கவிதைகளில் சுலபமாக செருகிவிடுவேன். ஆனால் கதையில் அது முடியவில்லை. கதை எழுதுவதிலோ படிப்பதிலோ பெரிதாக பரிச்சயம் இல்லை. கதை எழுதுவது பற்றி உன்ங்களுக்குத் தெரிந்தவற்றை ஒரு திரி ஆரம்பித்து பகிந்துகொண்டால் இன்னும் வளமாக எழுதலாம் என்பது எனது கருத்து. நேரம் கிடைத்தால் செய்யுங்களேன்.

வசனம் குறைந்த கதை..உண்மைதான் மணிரத்னம் (எனக்குப் பிடித்த இயக்குனர்) பட பாத்திரங்கள் போலவே நானும். பேசுவது குறைவு. அது எழுதும்போது வந்துவிட்டது.

வாத்தியாருக்கு நன்றி. அவரின் கேள்விக்கு பதிலளித்த அன்புக்கு என் அன்பு முத்தங்கள்.

ஏனுங்க சூரியரே..! அவ்வளவு குப்பையா..? நன்றிங்க.

இனியவள்
22-07-2007, 09:44 AM
அமர் கதை நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் அமர் :icon_good:

விபரம் அறிந்ததிலிருந்து
தாய் தந்தையென நான்
நினைத்திருந்த உறவு
தூர விலகி இது தான்
உன் உண்மையான
உறவென சொல்லிட
ஏழாம் அதிசயமாய்
புது உறவை நோக்கினேன்,...

ஒற்றைப்பிள்ளையாய் தனிமையில்
நான் ஏங்கியிருக்கையில் புதுவரவாய்
வந்த என் நிஜ உறவில் சிட்டாய் ஒர்
தங்கையெனும் உறவுப்புஸ்பம்..

வானத்தில் குதித்தேன் இறக்கை
விரித்துக் குதித்தேன் பறவையாய்.
அன்போடு நிஜ சொந்தம் என்னை
ஆராதிக்க நிழல் சொந்தம் என்
மன*க்கண்ணில் இருந்து மறைந்தது
நிலவை மறைக்கும் மேகமாய்...

ஊராரின் உணர்வுகளுக்கு முதன்மை
கொடுத்து என் உணர்ச்சிகளை
அடக்க முற்பட்ட போழியான
இந்த சமுகத்தில் இருந்து
புறப்படுகின்றேன் நிஜமாய்
இருந்து நிழலாய்ப்போன
என் சொந்தத்திடம்

படித்ததும் தோன்றிய கவிதையிது இக்கதைக்கு பொருந்துமா :sprachlos020:

இணைய நண்பன்
22-07-2007, 07:04 PM
முதலில் எனது வாழ்த்துக்கள்.கதையை படித்தேன்.நீங்கள் சொன்ன கருத்தையும் ஏற்கலாம்.உலகம் ஆயிரம் சொன்னாலும் பெற்றவர்களுக்கு தெரியும் தானே உண்மை எதுவென்று.மறுபுறம் பார்த்தால் இந்த உலகின் பார்வை வித்தியாசமானது.மொத்தத்தில் சுருக்கமாக கதையை சொல்லி இருக்கிறீர்கள்

அமரன்
22-07-2007, 07:08 PM
நன்றி இனியவள் மற்றும் இக்ராம்.

இக்ராம் நீங்கள் சொல்வது சரியே..ஆனாலும் அவள் வாழப்போவது இதே சமூகத்தில்தானே....

இனியவள் கதையை அப்படியே கவிதையாகச் சொன்னது அருமை. நல்ல வேளை நான் இதை கவிதையாக எழுதவில்லை. எழுதியிருந்தால் நல்ல கவிதை ஒன்று கிடைத்திருக்காதே...

ஓவியன்
23-07-2007, 02:46 AM
அமர் சுருக்கென்று தைத்து வலி தந்த ஒரு கதை...........!
என்னெவென்று சொல்லத் தெரியவில்லை..............!
இதுவரை மகனாக வளர்த்தவனைப் பிரிந்து நிற்கும் தாய்,தந்தை................!
தொலைத்த மகனை மீளப் பெற்ற தாய்,தந்தை.......................!
இது வரை ஆண் சகோதரனைக் காணா தங்கை...............!
இவர்களிடை புயலில் சிக்கிய துரும்பென அல்லாடும் தனயன்...................!

யார் பக்கம் நியாயம் இருக்கிறதென்று கூறுவது சிரமென்றாலும், உங்கள் கதை ஆதவாவின் "சாவி" கவிதையை எனக்குள் மீண்டும் ஞாபகப் படித்தியது.

சமூகத்திற்காக தன் பாசமெனும் சாவியைத் தொலைக்கும் அம்மா, தன் தங்கைக்காக* மீள எல்லாச் சாவிகளையும் தொலைத்து கொழும்பு திரும்பும் தனயன்.............!

நான் கரு சரியென்று சொல்ல மாட்டேன், சமூகத்தின் பார்வைக்காக இப்படித் தான் வாழவேண்டுமென்று வாழ்வதில் எனக்கு ஏனோ பிடிப்பில்லை.

மற்றும் படி, கதையின் வரிகள் அருமை, இன்னும் கொஞ்சம் விளக்கி விமர்சித்திருக்கலாம் என்று பலர் கேட்டது உண்மையென்றாலும் இது இன்னொரு வகைக் கதை.

நவீன சித்திரம் போல விரும்பியவர்கள் விரும்பியமாதிரி விளங்கிக் கொள்ளலாம். அது கூட நல்லது தானே................!

பாராட்டுக்கள் அமர்.............:aktion033: !

அமரன்
23-07-2007, 08:16 AM
வரே..வா...
ஓவியனின் வார்த்தைகளில் உள்வாங்கிய கதை அப்பட்டமாக தெரிகிறது..
நியாயம்..அல்லது...பாத்திரங்களின் செயல் சரியா பிழையா படிப்பவர்களே தெரிந்து கொள்ளட்டும்..என நினைத்தேன்..
சமூகத்திற்காக வாழ்வது என்பது தப்பென்று சொல்ல முடியாது...
நாலாயிரம் கெட்டவர்களுக்காக வாழ்வதை விட நாலு நல்லவர்களுக்கா வாழ்ந்து மடியலாம்...சமூகத்தினால் நான் பாதிக்கப்படும்போது நான் இந்த வகையைச் சேர்ந்தவன்..
வேறு ஒருவர் பாதிக்கப்படும்போது கதையில் வரும் தனயன் நானாகிவிடுவேன்.
நன்றி ஓவியன்..

ஓவியன்
23-07-2007, 05:25 PM
சமூகத்திற்காக வாழ்வது என்பது தப்பென்று சொல்ல முடியாது...
சொல்ல முடியாதுதான், ஆனால் இன்று நீங்கள் நன்றாக இருக்கையில் போற்றும் அதே சமூகம், துரதிஸ்ட வசமாக வாழ்க்கையில் தோல்விகளைச் சந்திக்கையில் திரும்பிக் கூடப் பார்க்காது. ஆகையால் சமூகத்தின் பார்வைக்காக நான் இப்படித் தான் இருக்க வேண்டுமென்று (நான் சமூக விரோதியாக இருக்க வேண்டுமென்று சொல்லவில்லை, மாறாக் எங்கள் குடும்பத்துடன் எங்கள் உழைப்பில் இனிமையாக இருக்கலாம் என்று தான் சொல்கிறேன்) சொல்வதை நான் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். இது என் தனிப்பட்ட கருத்தே அமரா....!

யாரையும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.......!.

விகடன்
27-07-2007, 10:29 AM
குட்டுவதற்காக நான் வரவில்லை அமர். தட்டிக்கொடுக்கின்றான். இப்படிப்பட்ட பல ஐயங்கள் பலர் மனதில் உருவாகி உருவாகி அணைந்து கொள்ளும். அதை வெளிப்படுத்த பயம். வெளிப்படுத்தினால் தம்மை தரக்கிறைவாக எண்ணி விடுவாரோ என்ற தயக்கமே.

அதேவேளை நினைத்தது நிகழ்ந்துவிட்டால்...

"நான் அப்பவுன் நினைத்தேன். ஆனால் சொல்லவில்லை " என்று சொல்லிக்கொள்வார்.

ஆக மொத்தத்தில் சமுதாயத்தில் களத்தில் வராது கழுத்திங்கீழ் புதைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் விடயத்தை வெளிக்கொண்டுவந்திருக்கிறீர்கள்.

பாராட்டுக்கள்.

pradeepkt
27-07-2007, 10:37 AM
சிறப்பு!!!!

வாழ்த்துகள்!

அமரன்
27-07-2007, 12:01 PM
நன்றி விராடன்.
நன்றி பிரதீப் அண்ணா.

இளசு
31-07-2007, 05:36 AM
முதலில் இரண்டு சிறப்பு வாழ்த்துகள் அமரா..

1) முதல் சிறுகதைக்கு...
குளத்தில் முதலில் குதிப்பது போன்ற தீரச்செயல் அது.. பாராட்டுகள்!

2) 5000 வது முத்திரைப்பதிவை எட்டியமைக்கு!
அசராமல் பங்களிக்கும் அசாத்திய திறமையான வேகம்..
கதையின் முதல்வரியில் வரும் காரோட்டும் வேகம் போல..
அந்த விவேகம் குறையா வேகத்திறனுக்கு அடுத்த பாராட்டு!

−−−−−−−−−−−−−−−−−−−−−
மிகச் சுருக்கி படித்தவர் மனதில் காட்சி, வசனங்களை ஓடவிடும் வண்ணம்
கோட்டோவிய பாணி கதை சொன்ன விதம் புதிது.. ரசித்தேன்!

ஆழ்மன/ சமூக படிமங்களை பாரதி, ஓவியன், விராடன் உள்ளிட்ட நம் நண்பர் குழு அழகாய் அலசியுள்ளது..

கதைமாந்தரின் மன அமைவு, நடவடிக்கைகளை அவர்போக்கில் சொல்வது படைப்பாளி பணி!
அதை விரும்பி மகிழ்ந்து, விரும்பாது மனம் மருகி, அய்யோ இப்படி நடந்திருக்கலாமோ என ஏங்கி −−− இவை வாசகர் பணி!

இருப்பக்க பணியும் இங்கே செவ்வனே நிறைவேறியிருப்பதால்..
இது வெற்றிப்படைப்பு!

ஆதலால் அமரா.. உனக்கு மூன்றாவது வாழ்த்து!

அமரன்
31-07-2007, 07:13 AM
நன்றி அண்ணா. ஒரு வாழ்த்துக்கே ஏங்குபோது மூன்று வாழ்த்துக்கள் சேர்த்து சொல்லி மகிழ்ச்சியடைய வைத்துவிட்டீர்கள்.

ஓவியா
02-09-2007, 09:46 PM
புதுக்கதை எழுத்தாளார் அமரனுக்கு பாராட்டுகள்.

கதையின் ஆரம்பம் நன்று, பின் செல்லும் விதமும் நன்று, ஆனால் அவசரமில்லாமல் கொஞ்சம் நீட்டி எழுதியிருக்கலாம். பரவாயில்லை, இதானே முதல் கதை, அப்ப இப்படிதான் சில இசயங்கள் விட்டுப்போகும்.

குரு'க்கள் கோட்டினால் தானே கோடி புண்ணியம்.
பாரதியண்ணா தன் கடமையை செவ்வன செய்துள்ளார். ஹி

என் பாராட்டுகளுடன் வாழ்த்துக்களும்.

அடுத்த கதையை வெகு விரைவில் தரவும்.

MURALINITHISH
22-09-2008, 09:34 AM
அண்ணனும் தங்கையும் ஆனாலும் சமூக பார்வையில் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதை என்பதும் ஆணும் பெண்ணும் என்பதே அதனால்தான் அந்த காலங்களில் பெண்களை ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு ஆண்களை விட்டு (தகப்பனே ஆனாலும்) தள்ளியே வைத்தனர்