PDA

View Full Version : கிரீச்சிடும் கதவுகளும் துருப்பிடித்த தாரிஷிசேது
21-07-2007, 01:43 PM
எல்லாக் கதவுகளும்
மூடியே தானிருக்கிறது
கதவினை தட்டும்போது
பயம் கலந்த எதிர்பார்ப்புண்டு
யாரெனும் தெரிந்தவராயுமிருக்கலாம் - தட்டுவது
சந்தேகம் தீர்க்க சின்ன துளைபோட்டு
கதவினிலே கண்பார்வை கண்ணாடியும்
வைத்தாயிற்று - தட்டுவது யாரெனப் பார்க்க.
யார் மீதும் நம்பிக்கையில்லை
எதிர் வீடு பக்கத்து வீடென
யார் மீதும் நம்பிக்கையில்லை
மனைவி சொல்வது போல்
எந்தப் புற்றில் எந்த பாம்பு இருக்குமோ?

ஒவ்வொரு முறையும்
எதிர்வீட்டுக் கதவு
தட்டப்படும்போதோ
திறக்கப்படும்போதோ
என்னையும் மீறி
என் பார்வை நீளும்
அவர்கள் வீட்டின
திறக்கப்படாத
அந்தரங்கமறிய ..

அவர்களின் அனுமதியின்றி
அவ்வப்போது வெளியே
போய் திரும்பும் மகனை
கடிந்து கொள்கிறாள்
இன்னுமொரு திறக்கப்படாத
கதவினையுடைய
பக்கத்து வீட்டுக்காரி..

அலுவலகத்திலிருந்து
முன்னதாக வீடு திரும்பிய நான் இன்னும் அனுமதிக்கப்படவேயில்லை
என் வீட்டிற்குள்..
மனைவி கதவில் பொருத்தப்பட்ட சிறுகண்ணாடி வழியே பார்த்த பின்னும்
என் செல்லில் பேசி சந்தேகம் தீர்ந்த பின்
கதவு திறக்கையில்,
சந்தோஷமாய் வெளியேறிற்று
புழுக்கமாய் அடைபட்டிருந்த காற்று ..
நகரங்கள் இன்னமும்
ஒரு நம்பிக்கையின்
வரையறைக்குள்
வரவியலாத நிலைக்கு
தள்ளப்பட்டிருக்கும்
சூழ்நிலையில் ..

கிராமங்களில்
இன்னமும்
சில வீடுகளுக்கு
கதவுகளேயில்லை என்பதும்
யார் வரினும்
தலைமுறைகளை
நினைவு கூறும் பெரிசுகளும்
பிரியங்கள் நிறைந்த
பாஷையில் தரும்
வர்ணிக்கவியலா பாதுகாப்பை
நகரத்தின்
கிரீச்சிடும் கதவுகளும்
துருப்பிடித்த தாட்பாளும்
கேள்விக்குறியாக்கி
தனித்தீவை உருவாக்குவதில்
எனக்குடன்பாடில்லை
தைரியமிருந்தால் வாருங்கள்
என் பக்கத்து, எதிர்வீட்டு
நண்பர்களே
உடைத்தெரிவோம்
கதவுகளை ..

lolluvathiyar
21-07-2007, 02:01 PM
கவிதை அருமை, நகரம் பாதுகாப்பில்லாதது கிராமம் பாதுகாப்பானது
என்ற உன்மையை கவிதை வடிவில் தந்திருகிறீர்கள்
முற்றிலும் உன்மை

சிவா.ஜி
21-07-2007, 02:14 PM
வீட்டுக்கதவுகள் மட்டும் மூடியிருக்கவில்லை,நகரத்தின் நாகரீகத்தில் மனிதர்களின் மனக்கதவுகளும்தான் அடைபட்டே கிடக்கின்றன.
இரண்டுமே உடைத்தெறியப்படவேண்டியவை. எத்தனைப்பேர் முன்வருவார்கள்.
கவிதையில் சொன்னது போல் இன்னும் சில கிராமங்கள் இயல்பைத்
தொலைக்காமல் இருக்கத்தான் செய்கிறது.
மனதை பாதித்த கவிதை. அருமை ரிஷி. பாராட்டுக்கள்

மனோஜ்
21-07-2007, 02:15 PM
நகரம் அது நரகம் என்பதை கவிதை விளக்குவது அருமை நன்றி

இனியவள்
21-07-2007, 02:19 PM
கவிதை அருமை ரிஷி பாராட்டுக்கள்

ஆதவா
21-07-2007, 07:32 PM
சிலர் பாதுகாப்பு கருது வளையத்தில் இருப்பார்கள். குறிப்பிட்ட வரையறைக்கும் வரமறுப்பவர்கள். இன்றைய நவீனத்தில் கதவோட்டை வழி பார்க்கவேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. திரையில் தெரிந்துவிடுகிறது இன்னாரென்று.

கிராமம் வேறு... சூழ்நிலைகள் மனிதர்கள் நம்பிக்கைகள் என்று முக்காலும் மாறியிருக்கும். உணர்வுகளை கிளப்பு அனுப்பிவிட்டு ஜடமாய் உறங்குபவர்கள் நகரத்தினர்... எல்லாரும் என்று சொல்வதும் ஆகாது..

பக்கத்துவீட்டினர் பாசமாய் பழகும் விதம் இன்னும் பெரும்பாலான நகரங்களில் இருக்கிறது.. நடுத்தரவர்க்கமாய். ஆனால் பெட்டிகளாய் அடுக்கப்பட்ட வீடுகளில் முகம் மட்டுமல்ல உருவம் இருப்பதும் தெரியாமல் போவார் உளர். இன்றும்.

உடைத்தெறிய நம்பிக்கை உண்டு.. கதவுகள் தாங்கிக் கொள்ளும். கதவுக்குப் பிந்தைய மனிதர்கள் பிறகு பொருத்திக் கொள்வார்கள் உடைக்கமுடியாத கதவு வும் அதி நவீனமாய் வந்தாரைப் பார்க்கும் சிறு கண்ணாடியும்.

கவிதை அழகு. சொன்ன விதம் அழகு. வரியமைப்புகள் ஓரிரு இடத்தில் நீண்டு சுருங்கி இருப்பதும், கவிதை நீளமும் மிகச்சிறு குறைகளாய்த் தெரியலாம்.

வாழ்த்துக்கள்.

இதயம்
22-07-2007, 04:36 AM
கதவுகள் என்பவை சுதந்திரத்தை பறிப்பவை அல்ல. அவை பாதுகாப்பு,அந்தரங்கம், தனிமை ஆகியவற்றின் எல்லைகளை அடுத்தவர்களுக்கு எடுத்துக்காட்டுபவை. அதனால் கதவுகளின் பங்கு ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம். இல்லையென்றால் சுதந்திரம் என்ற பெயரில் அடுத்தவன் மூக்கைத்தொடும் அபாயம் ஏற்படும். இதனால் மேற்சொன்னவற்றிற்கு பங்கம் ஏற்படும். எனவே கதவை உடைத்தெறிவதை விட அவசியப்படும் பொழுது திறந்து வைப்பது சிறந்தது.

உங்கள் கவிதையின் உட்கருத்து சிறப்பானது. பாராட்டுக்கள்..!!

அமரன்
22-07-2007, 05:25 PM
ரிஷி. பக்கத்து வீட்டுக்காரனுடன் ஹாய் என்னும் உறவு: சிலருக்கு பக்கத்து வீட்டு உறவுகளின் முகமே தெரியாது. இன்னும் சிலர் அங்கே இருப்பது கூட பலருக்குத் தெரியாது. காரணம் என்ன? இயந்திர வாழ்க்கையா? அல்லது உணர்வுகளை தொலைத்த வாழ்க்கையா? எனக்குத் தெரிவது நாகரிக வாழ்க்கை. அதிகம் பேசுவது, ஆழாமாக பழகுவது என பலவற்றுக்கு அநாகரிக முத்திரை குத்தப்பட்டுள்ளது. மனம் திறந்து பேச மறப்போர் எப்படி கதவு திறப்பார்கள்?

கொலை, கொள்ளை என எத்தனை நடகின்றது. ஒரு வீட்டில் கொலை நடப்பது அண்டை வீட்டுக்கு தெரியாது. கொள்ளை அடிப்பவன் சுத்ந்திரமாக செய்வான். அவனா வீட்டின் உரிமையாளன். யாருக்கும் தெரியாது. இவற்றினால்தான் கதவுகள் திறக்க காலதாமதமோ...?


கிராமம் ஒரு குடும்பம். எனது அனுபவத்தில் சொல்கின்றேன்.நான் ஏதாவது தப்புச் செய்துவிட்டு வீட்டுக்குப் போகமுன்னே தொலைபேசி இல்லாத கிராமத்தில் செய்தி சீக்கிரம் போய்விடும். நண்பர்களுக்கு நகைச்சுவையாக சொல்வேன். நான் சைக்கிளில் போனால் செய்தி ஏரோப்பிளேனில் போகிறது. காரணம் கிராமத்தில் எல்லோரும் ஒரு குடும்பம். நான் யார் என்பது எல்லோருக்கும் தெரியும். அங்கே யாருக்கும் யாரும் பயப்படத் தேவை இல்லை.

இன்னும் சொல்லலாம் நீண்டு விடும். அதே நிலமை நகரத்திலும் வரவேண்டும். நினைவுகளையும் ஆதங்கங்களையும் தட்டி எழுப்பிய கவிதை. நன்றியுடன் பாராட்டுகளும்.

ரிஷிசேது
22-07-2007, 05:31 PM
விமர்சித்த அனைவருக்கும் நன்றிகள்
தமிழ்மன்றம் என்னை கவிதையின் அடுத்தகட்டத்திற்கு கொண்டுபோவதாகவே உணர்கிறேன்
அமரன். ஆதவா,இதயத்தின் விமர்சனங்கள் அருமை

நன்றிகளுடன்,
ரிஷிசேது

ஷீ-நிசி
23-07-2007, 09:14 AM
கையகொடுங்க ரிஷி! மிக அற்புதமான கரு.... ஆனால் இன்னும் கவிதைபடுத்தியிருக்கலாம்...

அவள் கதவை திறந்த அந்த கணம்.. உள்ளிருந்து புழுங்கிபோன காற்று வெளியேறியது.. (காற்றே புழுங்கிபோனது! மிக வித்தியாசமான கற்பனை) நகரத்தின் பல வீடுகளில் இது உண்மை... கிராமத்தில் பாதுகாப்பு குறைவில்லாத ஒன்று.. எதிர் வீடு பக்கத்து வீட்டு ஆட்களை கூப்பிட்டீர்கள் சரி.. எப்படி உடைத்தெறிய முடியும், வாழ்க்கையோடு பின்னிவிட்ட இந்த உடைக்க இயலா கதவுகளை (!?)