PDA

View Full Version : விமர்சனம் செய்வது எப்படி?



ஆதவா
20-07-2007, 05:50 PM
விமர்சனங்கள்:

இன்றைக்கு நம் மன்றத்தில் விமர்சிப்பவர்கள் என்று பார்த்தால் மிகவும் குறைவானவர்களே இருக்கிறார்கள். அதிலும் பணிப்பளுவில் பல கவிதைகளை அவர்கள் கவனிப்பதில்லை. இன்றைக்கு நம் மன்றத்தில் வேறெந்த மன்றத்திலும் இல்லாத அளவிற்கு கவிதைகள் அதிலும் தரமான கவிதைகள் பெருகிக் கொண்டிருக்கின்றன. புதுப்புது கவிஞர்களும் வந்துகொண்டிருக்கிறார்கள்.

ஆனால் சிலர் விமர்சனம் செய்வதில் தயங்குவது அல்லது செய்யாமல் இருப்பது ஏன்?

மன்ற ஆஸ்தான விமர்சகர்களாகிய இளசு பென்ஸ் ஆகியோர் பற்றி சொல்லிவிட்டு எனது கருத்தை அடுத்த பதிவில் தொடங்குகிறேன்.

இளசு:

விமர்சனங்கள் செய்வதில் நம் மன்றத்தில் இளசு அண்ணாவுக்கு இணை வேறு எவருமில்லை. ஆற்று நீரை அள்ளி மொண்டு குடிப்பது அவரோட வேலை (இதை யார் சொன்னார் என்று சொல்லுங்கள் பார்ப்போம்.) மன்றத்தில் உள்ள எல்லா கவிஞர்களும் இளசு பெயர் நம் கவிதைக்கு வந்திருக்காதா என்று ஏங்குவார்கள்.

நிறை : மிக ஆழமான வரிகளில் விமர்சனங்கள். சில சமயங்களில் கவிதையை மிஞ்சும் விமர்சனங்கள்

குறை : கவிதையில் இன்ன குறை இருக்கிறது என்று சுட்டிக் காட்டாமை...

பென்ஸ் :

இளசு அண்ணாவுக்கு அடுத்து பென்ஸ். சில சமயங்களில் அவரை மிஞ்சுகிறாரோ என்று சந்தேகம் வரும்... ஆனால் இருவரின் பாதையும் வேறு. மனவியலாக கொஞ்சம் அலசுபவர் பென்ஸ். ஆங்காங்கே ஏழுத்துப் பீழைகாள் சாரிங்க.. எழுத்துப்பிழைகள் இருந்தாலும் கருத்தைப் படிக்கும்போது இவர் ஏதோ மனோதத்துவ டாக்டர் போலும் என்று எண்ணத்தோன்றும்.. சில

நிறை : இளசு அண்ணாவுக்கு அடுத்து விமர்சனங்களில் தூள் கிளப்பும் வாரிசு. கவிதையின் நிறைகுறைகளை நன்றாக அலசி எடுப்பது.. அக்குவேறு ஆணிவேறாக பிரிப்பது..

குறை : எஸ்கேப்/ எழுத்துப்பிழை.

தற்சமயங்களில் ஓவியன் அமரன் ஆகியோர் நல்ல விமர்சனங்கள் செய்கிறார்கள்.. இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் வேண்டும்.. எழுத்துக்களை அடக்கி இளசு அண்ணாபோல் விமர்சனம் செய்யமுடியாவிடினும் ஓரளவு முயற்சிக்கவேண்டும்.. சில சமயங்களில் காயத்திரி, நேரம் கிடைத்தால் ஓவியா, ஷீ-நிசி, என்றாவது ஒருமுறை வாத்தியார், இன்னும் பலர்..

சிலர் விமர்ச்சிக்க முடியாமல் தயங்குகிறார்கள்... அல்லது அப்படியும் இருக்கிறார்கள் என்று நினைக்கீறேன்.. அவர்களுக்காக இந்த திரி தொடங்கியிருக்கிறேன். அவரவர் தத்தம் அனுபவங்களைப் பகிருங்கள்...

ஒரு கவிதைக்கு எனக்கு எப்படி விமர்சனம் வருகிறது என்பதை மட்டும் ஒரு பதிவாக சொல்லிவிடுகிறேன். மற்றவை இளசு அண்ணாவும் பென்ஸும் விளாவாரியாக சொல்ல நம் மன்ற நண்பர்கள் அதையும் மிஞ்சும் அளவுக்கு தம் அனுபவங்கள் அல்லது கருத்துக்களை இடுமாறு கேட்டுக் கொள்கிறேன்..

தொடரும்....

இளசு
20-07-2007, 05:53 PM
ஆதவா...

மிக நல்ல திரி இது..

கொளுத்தி இருக்கிறாய்
கொழுந்துவிட்டு வளரட்டும்..
நானும் உடன் வருவேன்..

ஆதவா
20-07-2007, 05:57 PM
இளசு அண்ணா.. உங்களை குறிவைத்து ஆரம்பித்த திரிதான்.... எல்லாரும் தங்கள் கருத்துக்களையும் விமர்சனம் செய்வது பற்றிய ஆலோசனைகளையும் வழங்குவார்கள் என்ற நப்பாசையில் ஆரம்பித்த திரி..

aren
20-07-2007, 05:59 PM
எப்படி கவிதைகளுக்கு விமர்சனம் எழுதுவது என்று தெரியாமல் நான் இந்த பக்கமே வராமல் இருந்தேன். காரணம் கவிதையின் அர்த்தம் என்னவென்று தெரியாமல் இருப்பதால்தான்.

இந்த ஒரு வாரமாகத்தான் நான் இந்தப்பக்கமே வருகிறேன்.

உங்கள் விளக்கம் என்னைப் போன்றோர்களுக்கு ஒரு ஊக்கமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

அமரன்
20-07-2007, 06:01 PM
இளசு அண்ணா,பென்சண்ணா, தாமரை அண்ணா ,ஆதவா அனைவரும் சொல்லுங்கள்..கற்று தேருகின்றேன்...அதவா நல்ல திரி. நன்றி.

அக்னி
20-07-2007, 06:09 PM
விமர்சனமா...
அதற்கு இல்லை சனமா..?
ஆதவரே உங்கள் விமர்சனத் திரியைத் தொடருங்கள்...
பின்னர் ஹவுஸ் ஃபுள்தான்....

ஓவியன்
20-07-2007, 06:10 PM
ஆகா அருமையான ஒரு திரி ஆதவா!

ஒரு ஆக்கத்தைப் பதித்துவிட்டு அதற்கு இளசு அண்ணா பென்ஷூ அண்ணா, தாமரை அண்ணா மற்றும் ஆதவா ஆகியோரின் பின்னூட்டம் கிடைக்காதா என்று ஏங்கி அவை கிடைத்தபோது ஆனந்தத்தில் எத்தனையோமுறை திளைத்திருக்கிறேன். இப்போது அவர்களின் விமர்சன இரகசியம் அறிய ஒரு சந்தர்ப்பம், அதனூடு என்னையும் இந்த விமர்ச்சிக்கும் கலையில் வளர்க்க மிக்க ஆவலோடு, ஆதவனுக்கு நன்றி பகர்ந்து திரியின் வெற்றிகர நகர்விற்காகக் காத்திருக்கிறேன்.

ஆதவா
20-07-2007, 06:18 PM
இளசு அண்ணா,பென்சண்ணா, தாமரை அண்ணா ,ஆதவா அனைவரும் சொல்லுங்கள்..கற்று தேருகின்றேன்...அதவா நல்ல திரி. நன்றி.

கடுதாசிவழ்க்கை
அமர(ன்) கவிதைகள்

நண்பர்களே! எனது படைப்புகளில் உள்ள நிறைகளைச் சுட்டுவதன் மூலம் ஓரடி வளர்ந்தால் குறைகளைச் சுட்டுவதன் மூலம் பல அடி வளர்கின்றேன். எனவே எனது படைப்புகளில் உள்ள நிறைகளுடன் குறைகளையும் சுட்டிக்காட்டுங்கள். நன்றி.


வழ்க்கை என்று தமிழில் சொல்லில்லையே அமரரே!! :D

அமரன்
20-07-2007, 06:20 PM
நன்றி ஆதவா..திருத்திவிட்டேன்.

இனியவள்
20-07-2007, 06:26 PM
எனக்கு ரொம்ப ரொம்ப பிரயோசனப்படப்போகும் திரி
ஆரம்பித்தமைக்கு நன்றி ஆதவரே....

ஷீ-நிசி
20-07-2007, 06:32 PM
வாழ்த்துக்கள் ஆதவா.....

நல்ல நல்ல திரிகளை உருவாக்கி வரும் ஆதவாவிற்கு என் வாழ்த்துக்கள்!

இளசு மற்றும் பென்ஸ் அவர்கள் மிக அதிகமாய் இத்திரிக்கு உயிரூட்டவேண்டும் என்பது என் வேண்டுகோள்!

ஓவியன்
20-07-2007, 06:35 PM
இளசு மற்றும் பென்ஸ் அவர்கள் மிக அதிகமாய் இத்திரிக்கு உயிரூட்டவேண்டும் என்பது என் வேண்டுகோள்!

ஷீ!
நீங்கள் ஒவ்வொரு கவிதைக்கும் தவறாமல் பின்னூட்டம் இடுபவராக இருந்தாலும் அதிகமாக விமர்சிபதில்லையே என்று நான் எண்ணுவதுண்டு. என் ஏக்கத்தை நீங்கள் தீர்க்கவேண்டுமென இந்த திரியின் வாயிலாக வேண்டிக் கொள்கிறேன்.

ஷீ-நிசி
20-07-2007, 06:39 PM
உண்மைதான் ஓவியன்.. மனம் விரும்பினாலும் நேரமில்லாத காரணங்களினால் என்னால் இயலவில்லை... கவிதைகள் பெருகிகொண்டிருக்கிறது.. என்னால் இயலவில்லை... ஆனால் கண்டிப்பாக தொடருகிறேன் ஓவியன்,...

ஓவியன்
20-07-2007, 06:47 PM
நன்றி ஷீ!
தொடருங்கள் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இளசு
21-07-2007, 08:41 AM
விமர்சனம் இருக்கட்டும்..

சிலர் வந்து நம் கவிதையை. ஆக்கத்தைப் படித்துவிட்டாவது ( அல்லது அந்தப் பக்கத்தைத் திறந்துவிட்டாவது) சென்றார்களா என ஒரு ஏக்கம் பிசையும் பாருங்கள்..

படைப்பாளிக்கே உரிய பிரத்தியேக மனவலி அது..

இப்போது இருப்பதுபோல் யார் யார் நம் திரியைப் பார்வையிட்டார்கள் என அறிய முடியாக் காலம் அது... (இப்போதும் ''மறைவில்'' வருவோரை அறிய இயலாது)

நண்பன் இவ்வேதனையை அழகாய் முன்பு வெளிப்படுத்தியிருந்தார்..
''பின்னூட்டம் இல்லையென்றாலும் பரவாயில்லை..
நான் மதிக்கும் சிலர் இதைப் பார்த்தார்கள் என்று அறிந்தால் போதும்''



தன் குழந்தையை அலங்கரித்து கூடத்தில் இட்ட தாய்
மற்றவர்கள் கொஞ்சினார்களா குழந்தையை
மையும் பொட்டும் என் மழலைக்கு அந்தக் கொஞ்சல்களால் கலைந்ததா..
கன்னம் முத்தங்களாலும் கிள்ளல்களாலும் கன்றிச் சிவந்ததா
என எட்டி எட்டிப் பார்க்கும்
வெட்கங்கெட்ட தாய் − படைப்பாளி!

இதுவும் நண்பனின் கவிதையின் கருவே!!

இங்கே பூ, ஆதவா போன்றோர் விமர்சனங்களை ஏற்று அதையொட்டி தரும் மேலூட்டங்களே ஒரு பட்டயப்படிப்புக்கேற்ற தலைப்பு எனலாம்.



வசனங்களை வெட்டி கவிதை எனச் சொல்லிப்பதிக்கும்
எனக்குள்ளும் வெட்கங்கெட்ட தாய் இருக்கிறாள்..
காக்கைக்கும்...!!!!!!

நான் சிலர் விமர்சனம் வராதா என ஏங்கி தேய்ந்திருக்கிறேன் −

அவர்களைப்பற்றியும் இத்திரியில் சொல்லி மரியாதை செலுத்த ஆசை!

விமர்சனத் திலகம் என ஒருவரை அழைப்பேன்..
ஒரிரு வரிகள்தான் இருக்கும்.. ஆஹா என உச்சரிக்க வைக்கும்..
அடுத்தவர் கவிதைக்கு மட்டும் சொல்லி, எனக்கு இல்லையென்றால்
கொஞ்சம் பொறாமையும் ஏராளமான ஏக்கமும் வரவைக்கும்..

அவர் − இப்போது மன்றம் வராத கண்ஸ்5001
அதே உணர்வுகளை இப்போது எனக்குள் எழுப்புபவர் −
என் அன்பு இளவல் முகிலன்..

இன்னும் சொல்வேன்..

ஓவியன்
21-07-2007, 08:47 AM
அண்ணா நாங்கள் எல்லோரும் உங்கள் விமர்சனம் வராதா என்று ஏங்குகிறோம், ஆனால் நீங்களே விமர்சனம் வராதா என்று ஏங்கிய ஒருவர் இருந்திருக்கிறார் என்றால் கவலையாக இருக்கிறது - அவர் இருந்த காலத்தில் நாங்கள் மன்றத்தில் இருக்கவில்லையே என்று......

தொடரும் உங்கள் விமர்சனம் பற்றிய பார்வைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்......

இன்பா
21-07-2007, 08:55 AM
படைப்பாளியை மிகவும் மகிழ்விப்பது விமர்சனங்கள் தான் என்பதில் இருவேறு கருத்திற்க்கிடமில்ல...

ஏனோ தமிழ் மன்றம் வந்தாலே அரசியல் பகுதியில் நோட்டமிட்டு சென்று விடுகிறேன்...

இன்னும் பல பகுதிகளுக்குள் நுழைந்தால் தான் ஆர்வம் வரும்...

இந்த* திரியை க*ண்ட*பின் என*க்கும் க*விதைக*ள் ப*க்க*ம் வ*ல*ம்வ*ர* ஞானோத*ய*ம் பிற*ந்திருக்கிற*து போல* உண*ர்வு...

ஆக்கப்பூர்வமான திரிக்கு நன்றிகலந்த வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்.

சிவா.ஜி
21-07-2007, 09:11 AM
பாராட்டப்படாவிட்டாலும் பார்க்கப்பட்டது என்பதே அந்த படைப்பை தந்த படைப்பாளிக்கு மகிழ்ச்சிதான். ஆதவாவின் பின்னூட்டங்கள் பெரும்பாலும் நல்ல அலசல்களாகவே இருக்கின்றன. பிழைகளை மறக்காமல் சுட்டிக்காட்டுவார். அதுவே அடுத்தமுறை நல்ல படைப்பை தர உதவுகின்றது. இளசு அவர்களின் விமர்சனங்களும் மிக அழகாக தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் பொருத்தமான உவமானங்களோடு இருக்கிறது. இவர்களின் பின்னூட்டங்களைப் பார்த்துதான் நானும் மேலோட்டமாக விமர்சிக்காமல் கொஞ்சம் அகலமாக விமர்சிக்கத் தொடங்கினேன். இந்தத் திரி அதை இன்னும் மெருகேற்றும் என்பது நிச்சயம். ஆதவாவுக்கு நன்றிகள்.

அமரன்
21-07-2007, 09:34 AM
ஆதவன் கவிதைப்பட்டறையில் ஆரம்பிக்கும் திரிகள் பலரை கவிஞனாக்குகின்றது பலரை மேம்படுத்துகின்றது. அந்த வரிசையில் வரிப்புலி அவர்களின் கவி ஆர்வத்தை தூண்டு உள்ளது இத்திரி. நண்பனே வரிப்புலி கவிதைப்பகுதிகளில் உங்களை காண ஆவலாக உள்ளது. வாருங்கள்.
அன்புடன் அழைக்கும்
அமரன்

ஓவியன்
21-07-2007, 07:25 PM
உண்மைதான் அமர்!
இந்த கவிப் பட்டறை வரிப்புலியையும் ஒரு கவிஞனாக மாற்றினால் எல்லோருக்கும் சந்தோசமே...............

ஆதவா
21-07-2007, 07:49 PM
நண்பர்களே ! உண்மையை சொல்லப்போனால் இந்த திரி ஆரம்பித்த நோக்கமே வேறு... தலைப்பை சற்று மாற்றி எழுதியதை கொஞ்சம் மாற்றி இடலாமே என்று நினைத்தேன்.. நல்ல வரவேற்பு பெற்றது.... மகிழ்ச்சி அளிக்கிறது. நாளை எனது கருத்தை பதிக்கிறேன்,,

இளசு அண்ணாவை குறிவைத்து எழுதப்பட்ட திரியென்பதால் அவரின் நினைவுகளோடு பல விபரங்கள் தெரிந்துகொள்ளலாம் என்பதில் ஐயமில்லை.

விமர்சன திலகம் கண்ஸ் என்று ஏற்கனவே பட்டமிட்டது நினைவிருக்கலாம். அவர் பதித்தது ஆயிரம் பதிவுகள்தான் என்றாலும் அத்தனையும் முத்துக்களாக இருந்திருக்கவேண்டும்.

முகிலன் அவர்களின் விமர்சனங்கள் நான் கண்டிருக்கிறேன். எனது ஓரிரு அனுபவங்கள், கதைகளுக்கு விமர்சனம் இட்டிருக்கிறார்.

மேலும் தொடரும் இளசு அண்ணாவின் பதிப்புக்கு காத்திருக்கிறேன்.

ஆதவா
25-07-2007, 06:37 AM
விமர்சனம் எழுதுவது பெரும் கலை..

பெரும்பாலும் நாம் பாராட்டுக்கள் மட்டுமே எழுதுகிறோம். விமர்சனம் எழுதுவதில்லை, ஒரு படைப்பை தரம்பிரித்து அதில் இன்னது நல்லது இன்னது தவறு என்று ஆராய்ந்து எழுதுவதே விமர்சனம். பாராட்டுக்கள் மனநிறைவை கொடுக்கலாம். விமர்சனம் மட்டுமே அடுத்த பரிமாணங்களுக்கு ஏற்றிவிடும். ஆகவே விமர்சிப்பது என்பது ஆசிரியர் தொழில் போல.

இதற்குத் தகுதி? :

ஒரு படைப்பை எழுதத்தெரிந்தவன் தான் விமர்சிக்கவேண்டுமென்பதில்லை. தகுதி இதற்கு நிர்ணயிக்கப்படுவதில்லை. இசைவிமர்சகர் சுப்புடுவுக்கு என்ன இசை தெரியுமா? கிடையாது. நமக்குத் தெரிந்ததை சொல்லுவதும் சொல்லுவதில் கருத்தும் ஞாயமும் இருக்கவேண்டும். எழுதியவரை பாதிக்காத வண்ணம் நாம் எழுதவேண்டும். அதேசமயம் படைப்பை விட அதிக ஈர்ப்பு உள்ளதாக இருக்கவேண்டும். இங்கே அப்படி எழுதுபவர்கள் சிலரே!. ஒரு கதையோ கவிதையோ விமர்சிக்கும் முன்னர் நாம் அதைப்பற்றிய அடிப்படை அறிவை கொஞ்சமாவது வளர்த்தியிருக்கவேண்டும். நமக்குள் ஓரளவு அதன்படி ஞானம் இருக்கவேண்டும். அப்படி இல்லையென்றால் அடுத்தவர் விமர்சனத்தையோ அல்லது நமக்குள் நாமே ஒரு படைப்பின் விமர்சனத்தையோ பார்வையிட்டு/எழுதிக் கொள்ளவேண்டும். முதன்முதலில் எழுத முயற்சிப்பவர்கள் எடுத்தவுடனே பெரும் விமர்சனமிட்டு பெரியாளாக முயற்சிப்பதைவிட ஓரளவு தெரிந்ததை இடலாம்.

மீண்டும் நன்றாக கவனிக்கவேண்டிய ஒன்று என்னவென்றால், விமர்சனம் என்பது கத்திபோல கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தால் கையைப் பதம் பார்த்துவிடும். படைப்பாளி ஒருவன் படைப்பை எழுதுவதே விமர்சனத்திற்காகத்தான்.. ஒருவர் ஒரு படைப்பை விமர்சித்தாலே அவருக்கு அந்த படைப்பின் நோக்கம் முற்றிலும் தெரிந்துவிடும் என்ற மறைமுகப்பார்வை உள்ளது. வெறும் பாராட்டுக்களை எதிர்பார்த்து படைப்பாளி படைப்பை படைத்தால் அது வீணாக பாயும் நீராகத்தான் இருக்கும். ஆகவே தகுதி தெரிந்துதான் விமர்சிக்கவேண்டும் என்பதில்லை. யார்வேண்டுமானாலும் செய்யலாம்.

விமர்சனம் :

ஒரு படைப்பை விமர்சிக்கும் போது அதனை முழுவதுமாக படித்து மனதில் இருத்திக் கொள்ளவேண்டும். படைப்பாளி எழுதிய கரு என்ன என்று சட்டென மனதுக்குள் நுழைந்துவிடவேண்டும். இசங்கள் நிறைந்த கவிதை எனில் சற்று நேரம் பிடிக்கலாம். ஆனால் உள்ளர்த்தம் வலிமையாக இருக்கும் என்பதை உணர்ந்து படித்துக்கொள்ளவேண்டும். அத்துடன் அவர் எழுதிய சிறப்புகள் தவறுகள் என்று ஒவ்வொன்றையும் பட்டியலிட்டுக் கொள்ளவேண்டும். இத்தோடு நில்லாமல் அந்த கருவில் நாம் காணுவதென்ன என்பதையும் அங்கே சுட்டிக் காட்டவேண்டும். விமர்சனம் என்பது கம்பு சுத்துகிற வேலையல்ல. மிக எளிதானது. இப்போது கீழ்கண்ட ஒரு கவிதையைப் பாருங்கள் :

நேற்றிரவு
நிலவை யாரோ
களவாடிவிட்டார்களாம்;

இனி அங்கே ஒளி வீசிட
நிலவிற்கு பதிலாய்
நீ செல்ல வேண்டுமாம்!

நட்சத்திரங்களெல்லாம்
இன்று காலைமுதல்
என்னை நச்சரிக்கின்றன;

நிலவை களவாடியது
நான்தானென்று தெரியாமல்
என்னிடமே!

முடியாது என்று
புறமுதுகு காட்டினேன்;

நட்சத்திரங்களெல்லாம்
கண்ணீர் விட்டன;

முதன்முதலாக அன்று
பூமியிலிருந்து
மழை பெய்திட ஆரம்பித்தது!!

அழுகையில் மனமிளகி
அரைமனதாக ஒப்புக்கொண்டு;
அவைகளிடமே கேட்டேன்!

நீங்கள் பறிகொடுத்த
நிலவில் கறை இருந்திடுமே;
நான் அனுப்பும் நிலவில்
துளி கறையும் காணப்படாதே!

உங்கள் சூரியத்தலைவன்
கண்டுபிடித்தால் -உங்களை
சுட்டெரித்திடுவானே என்று!?

விடை தெரியாமல்
விழிகளெல்லாம் நனைந்தன
கண்ணீரால் நட்சத்திரங்களுக்கு;

வினாவெழுப்பிய நானே
விடையளித்தேன்!

நட்சத்திரங்களெல்லாம்
முகம் பிரகாசிக்க
புன்னகைத்தன!

என்ன தெரியுமா?

நான் அனுப்பும் நிலவிற்கு
கறையாய் -நானே
அவளுடன் ஒட்டிக்கொள்கிறேன் என்று!!!


இந்த கவிதையின் கரு என்னவென்றால்

காதல் சம்பந்தமானது. வானத்தில் நிலவைக் காணவில்லை. நட்சத்திரங்கள் கவிதைநாயகனிடம் போய் அவன் காதலியைக்கேட்டார்களாம். அவைகளுக்கு திருடியதே கவிதை நாயகன்தான் என்பது தெரியாது. கண்ணீர் விட்டனவாம். பூமியிலிருந்து மழைவந்ததாம், இவனும் ஒத்துக்கொண்டானாம், ஒரிஜினல் நிலவில் கறையிருக்கும் இப்போது அனுப்பும் நிலவாகிய தன் காதலியிடம் கறையிருக்காது,; ஆகவே நானே கறையாக ஒட்டிக் கொள்கிறேன் என்கிறானாம்.. கவிதை முடிகிறது.

கருவை தெளிவாக மனதுக்குள் ஏற்றிய பிறகு விமர்சனம் தொடங்கலாம்.

முதலில்
1. கவிதையின் சிறப்பு
2. கருவைப்பற்றிய ஒரு பார்வை (உங்களுக்கு என்ன தெரியுமோ அது..) (சிறப்புகளை விவரித்தால் போதும்)
3. கவிதையில் ஏற்பட்டுள்ள தவறுகள்.
4. பாராட்டுக்கள்.

இதன் அடிப்படையில் விமர்சனம் செய்யவேண்டும். முதலில் நாம் காண இருப்பது சிறப்பு: (சுருக்கமாக சொல்லிவிடுகிறேன்)

1. நட்சத்திரங்கள் அழுவதும், அதனால் பூமியிலிருந்து மழை பெய்வதும், நிலவு காணாமல் போவதும், இறுதியாக கறையாக காதலன் ஒட்டிக் கொள்வதும் கவிதையில் சிறப்பு.. (மேலும் இருந்தாலும் சொல்லலாம்.)

2. கவிதையின் கரு சற்று வித்தியாசம். பெரும்பாலும் கவிதையில் நிலவுக்குப்போவதும் நட்சத்திரங்களை ஒப்பிடுவதுமாகத்தான் எழுதுவார்கள். சற்று வித்தியாசமாய் நிலவு காணாமல் போவதும் நட்சத்திரங்கள் பூமிக்கு வருவதும் நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. அத்துடன் கவிதையின் எளிமை படிப்பவரை உடனே ஈர்க்கும் வகையிலும் உடனே மனதினுள் நுழையும் வகையிலும் அமைந்ததும் கவிதையின் சிறப்பாக தெரிகிறது. (மேலும் இருந்தாலும் சொல்லலாம்)

3. களவு போன நிலவுக்கும் கறை இருந்திருக்கும். களவாடியது காதலன். எனில் அவனிடம் இருக்கும் நிலவுக்கும் கறை இருந்திருக்கவேண்டும்.. ஆனால் இங்கே காதலன் "நான் அனுப்பும் நிலவில் துளி கறையும் காணப்படாதே! " என்று சொல்வது முரணாக இருக்கிறது.. ஒருவேளை காதலனிடம் வந்ததால் நிலவின் கறை போயிற்று என்றாலும் அதைக் குறிப்பிடவில்லை... (மேலும் இருந்தாலும் சொல்லலாம்)

4. பாராட்டுக்கள், கவிதை அருமை, பிரமாதம் இப்படி உங்கள் பாராட்டுக்களை எப்படிவேண்டுமானாலும் சொல்லலாம்.. அது அந்தந்த கவிதையைப் பொருத்து........

உங்களுக்கு படைப்பு பிடிக்காவிடில் அதற்கான காரணத்தைச் சொல்லவேண்டும். அது ஏற்கக்கூடியதாக இருக்கவேண்டும். தவறுகளை பட்டியலிடவேண்டும். படைப்பாளியை நோகும்வண்ணம் விமர்சிக்கக் கூடாது. அது அவர் வளர்ச்சிக்குத் தடையாக இருக்க நேரிடலாம். நம்மால் பயன் உண்டாவதென்னவோ அதை மேற்கொள்ளலாம். அடுத்து இதனால் நமக்கு என்ன பயன்?

இளசு, பென்ஸ் போன்றோரின் விமர்சனங்களை எடுத்துப் படித்தலும், விமர்சன அறிவை பெருக்குதலும் நமக்கும் பயன் விளைவிக்கும்.. ஒரு கருத்தில் மாற்று கருத்து உண்டாகும், நமக்குள் புதிய கருத்துக்கள் தோன்றும். அறிவு பெருகும், ஒரு படைப்பாளியை ஊக்குவித்த திருப்தி கிடைக்கும், அந்த படைப்பாளிக்கும் தான் எழுதியவற்றுள் என்ன தவறு நேர்ந்திருந்தது என்று கவனிக்கவும் அதைக் களைந்த அடுத்த படைப்பு புனையவும் ஒரு வளர்ச்சிப்பாதையில் போகவும் தோன்றும். எழுத்துக்கள் என்றுமே பயன்/விளைவு ஏற்படுத்தக்கூடியவை, நமது சொந்த எழுத்துக்கள் எனும்போது அதன் பயன் இன்னும் கூடும்.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருப்பின் இங்கே கேட்கலாம். தெரிந்ததை சொல்லுகிறேன். இல்லையெனில் இளசு பென்ஸ் ஆகியோர் இருக்க கவலை எதற்கு?

ஷீ-நிசி
25-07-2007, 07:25 AM
நல்ல விளக்கம் ஆதவா... இந்த கவிதையை மேற்கோள் காட்டி நீ விமர்சனம் எழுதுவது எப்படியென்பது மிக இலகுவான வகையில் சொல்லியிருந்தது விமர்சிக்க விரும்பும் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் இருக்கும்.

அமரன்
25-07-2007, 07:34 AM
ஆதவா..பாடம் அருமை. விமர்சனம் செய்வது எப்படி என புரிந்துகொண்டேன்...நன்றி.

இன்பா
25-07-2007, 08:59 AM
விமர்சனத்திற்க்கு வரையரை கொடுத்த ஆதவா−வுக்கு நன்றி

மனோஜ்
25-07-2007, 09:19 AM
மிக்க நன்ற ஆதவா நான் விமர்சனத்தில் அவ்வளவாக ஈடுபடுவதில்லை காரணம் தான் உங்களுக்கு தெரியுமே இனி முயற்சிக்கிறோன் ஊக்கம் கொடுக்கும் திரிக்கு நனறி

சூரியன்
25-07-2007, 01:13 PM
மிகவும் பயனுள்ள திரி.ஆதவா.

lolluvathiyar
25-07-2007, 03:28 PM
கவிதைக்கு எப்படி விமர்சனம் தர வேண்டும் என்று அருமையாக விளக்கம் தந்திருகிறீர்கள் ஆதவரே.
நான் படைத்த நிரைய விவாதம் அல்லது வரலாறு படைப்புகளுக்கு விம்ர்சனம் வாராமல் இருப்பதை பற்றி அவ்வளவாக நான் கவலை படுவதில்லை, காரனம் அது ரசிக்க படைக்க பட்டதல்ல. விவாதிக்க படைக்க பட்டது. அனைவருக்கும் அதில் ஆர்வம் இருக்காது.

ஆனால் நான் படைக்கும் கவிதைகளுக்கு மன்றத்து புலிகள் விமர்சனம் வராதா என்று நான் ஏங்குவேன்.
எனக்கும் கவிதைக்கும் எட்டாம் பொருத்தம் என்பதால் நான் படித்த சில கவிதைகளுக்கு சரியான விமர்சனம் தராமல் சென்றதற்க்கு இந்த திரியை பார்த்து இப்பொழுது கூச்ச படுகிறேன்.
அடுத்த முரை என்னால் முயன்ற வரை விமர்சனம் பதிகிறேன்
நன்றி

ஆதவா
25-07-2007, 06:37 PM
அனைவருக்கும் நன்றி.. என் எண்ணத்தை தான் அங்கே கொடுத்தேன். விமர்சனத்தில் நானும் கத்துக்குட்டிதான். இளசு அவர்கள் இன்னும் எழுதுவார் என்ற நம்பிக்கையில்
ஆதவன்

ஆதவா
25-07-2007, 06:42 PM
கவிதைக்கு எப்படி விமர்சனம் தர வேண்டும் என்று அருமையாக விளக்கம் தந்திருகிறீர்கள் ஆதவரே.
நான் படைத்த நிரைய விவாதம் அல்லது வரலாறு படைப்புகளுக்கு விம்ர்சனம் வாராமல் இருப்பதை பற்றி அவ்வளவாக நான் கவலை படுவதில்லை, காரனம் அது ரசிக்க படைக்க பட்டதல்ல. விவாதிக்க படைக்க பட்டது. அனைவருக்கும் அதில் ஆர்வம் இருக்காது.

ஆனால் நான் படைக்கும் கவிதைகளுக்கு மன்றத்து புலிகள் விமர்சனம் வராதா என்று நான் ஏங்குவேன்.
எனக்கும் கவிதைக்கும் எட்டாம் பொருத்தம் என்பதால் நான் படித்த சில கவிதைகளுக்கு சரியான விமர்சனம் தராமல் சென்றதற்க்கு இந்த திரியை பார்த்து இப்பொழுது கூச்ச படுகிறேன்.
அடுத்த முரை என்னால் முயன்ற வரை விமர்சனம் பதிகிறேன்
நன்றி


வாத்தியாரே! நீங்கள் எழுதிய பல படைப்புகளை நான் பார்வையிட்டிருக்கமாட்டேன்.. எனது சூழ்நிலை அப்படி.. முடிந்தால் படித்திருக்கலாம். அதற்கு தலைகுனிகிறேன்.. கவிதைகள் எனும்போது ஒரு ஆர்வம். ஆகையால் உடனடியாக படித்துவிடுகிறேன். அத்தோடு நீங்கள் தொடர்ந்து நகைச்சுவையாக கவிதை எழுதாமல் ஏதேனும் சமூக சம்பந்தமாகவோ குடும்பம் கலை, காதல் இது சம்பந்தமாகவோ எழுதலாமே?

ஆதவா
09-08-2007, 10:50 AM
இளசு அண்ணா பென்ஸ் மற்றும் பல விமர்சன அதிபதிகளின் கவனத்திற்கு..

பாடங்கள் கொடுக்கவும்..

kalaianpan
09-08-2007, 06:56 PM
தமிழ் மன்றத்தில் கற்கவவேண்டியவை நிறய உன்டு.....
அற்புதமான இடத்திற்கு வந்துவிட்டேன்.....
அறிமுகப்ப்டுத்திய நண்பருக்கு நன்றிகள்.....

:icon_b: :icon_b: :icon_b:

ஆர்.ஈஸ்வரன்
15-01-2008, 10:17 AM
நல்லதொரு திரியை உருவாக்கியமைக்கு நன்றி. இன்று தான் முதல் முறையாகப் பார்க்கிறேன்

பூஜா
19-02-2008, 04:57 PM
தெரிந்து கொள்ள நிறைய விசயங்கள் இருக்கின்றது இங்கே,ஆனால் நேரம்தான் அதிகம் இன்றி அவஸ்தையாய் உள்ளது.

பூஜா

பென்ஸ்
03-08-2008, 08:32 PM
அன்பின் ஆதவா...

மன்றத்தில் பலர் மேல் எனக்கு அதீத மரியாதை உண்டு..
அதில் மூக்கியமானவர்களில் நீங்களும் ஒருவர்.
நாம் சந்தித்ததில்லை, உங்களை பற்றி நான் அறியாமல் இருந்திருந்தால், உங்களை நானும் ஒரு வயதான தாத்தாவாக தான் மனதில் கருதி வைத்திருந்திருப்பேன்.....

விமர்சன வீரனாக என்னை புகழ்த்த போது என் உள்மனம் ஒரு நொடி மகிழ்ந்தது என்னவோ சரிதான்.. ஆனால் அடுத்த நொடி என்னில் எழுந்த கேள்வி..."நீ அதற்க்கு தகுதியானவனா...??"
ஏன்னை நான் அறிந்து சொல்லுவதென்றால்... "இல்லை",
"மந்துகாலன் மாதிரி..." என்ரு எங்கள் ஊரில் ஒரு பழமொழி சொல்லுவார்கள்..."யானைகால் வியாதிகாரன் (மந்துகால்) சிறு குழந்தைகளை மிதித்துவிடுவேன் மிதித்துவிடுவேன்" அதன் தோற்றத்தை வைத்து பயமுறுத்துவது போல்... நானும் வெறும் எழுத்து தோற்றத்தில் மிதந்து வருகிறேன்....

விமர்சனம் எழுதுவது பற்றி எனக்கு அதிகமாக தெரியாது.... ஆனால் என்கருத்தில் விமர்சனம் என்ன, அதை நான் எவ்வாறு செய்கிறேன் என்பதே இங்கு பதிக்கிறேன்.....

விமர்சனமும், கவிதையை போன்றே....
வாசிக்கும் மனநிலையை பொறுத்து பொருள் எழுத்து கொள்ளபடும்...

விமர்சனமும், கவிதையை போன்றே....
சிக்கலான விடயத்தை வேளிப்படையாக சொல்லாதே....

விமர்சனமும், கவிதையை போன்றே....
மனவோட்டங்களை பின்னூட்டமாக்குதல் (நன்றி: பூர்னிமா)

கவிதை, கதை வாசிக்கும் போது அதை புரிந்து கொள்ள முயற்ச்சீக்கிறேன்... புரிதலை ஒத்து மனதில் எழும் சிந்தனைகளுக்கு வார்த்தை கொடுக்கிறேன்.... அதை எழுதியவர் என்ன மனநிலையில் இருந்து எழுத முயற்ச்சி செய்திருக்கிறார் என்று அறிய முயலுகிறேன், என் புரிதலை அப்படியே பதிக்கிறேன்... சில நேரம் சரியாய்.. பல நேரம் தவறாய்....

மன்றத்தில் விமர்சனம் எழுதும் போது பலரும் தனிநபர் சார்ந்த விமர்சனங்கள் எழுத கண்டிருக்கிறேன்..... இது அவர்கள் இடையே உள்ள நட்பை வளர்க்க உதவலாம், ஆனால் கவிதையை வளர்க்க உதவுவதில்லை.....

இந்த உலகின் அனைவருக்கும் நேசிக்கபடல், அங்கிகரிக்கபடல், கவணிக்கபடல் என்ற தேவைகள் இருக்கின்றன, கவிதையில் அதை பாசிட்டிவாக காண்பித்து வெற்றி பெற்றால் நலம்... நக்கீரனாக அதில் குற்றம் கண்டுபிடித்து சிறப்பாக இருப்பவர்களும் உண்டு. இருவருமே கவிதைக்கு கொடுக்கும் சிரத்தை வெற்றியை கொடுக்கும்.

தொடரும்....

பென்ஸ்
04-08-2008, 02:31 AM
விமர்சனம் எதிர்பாத்தே பதிவுகள் வருகின்றன. விமர்சனம் ஒரு படைப்பாளிக்கு கிடைக்கும் அங்கிகாரம். ஆதவா கூறியது போல இங்கு இளசுவின் விமர்சனம் எதிர்பார்த்து இங்கு பதிப்பவர்கள் அதிகம் நான் உட்பட...

மன்றத்தில் நான் 2004-ல் இனைந்திருந்தாலும், பதிவுகள் கொடுக்க துவங்கியது 2005 அக்டோபர் மாதத்தில்.... "மனகுப்பையிலிருந்து. (http://tamilmantram.com/vb/showthread.php?t=5812)." என்று என் மனதில் இருந்த சிறு குப்பைகளை கொட்ட துவங்க்கிய காலம் அது....

எனக்கான முதல் பாராட்டு கொடுத்தது "அனிதன் ஹிட்லர்" அவர் பின் ராகவன், பிரதிப், தவறாமல் இளசு, சுவேதா என்று எல்லோரும் பாராட்டுகள் கொடுத்திருந்தாலும்... வெறும் இரண்டே கவிதையை கொடுத்து விட்டு... விமர்சனக்களுக்காக காத்திருந்தேன்....

பாரதி முதல் கேள்வியை கேட்க... நானும் "வெக்கங்கெட்ட தாயை போல்" என் பதிவில் தயவு செய்து விமர்சிக்க கெஞ்சினேன்.... (http://tamilmantram.com/vb/showpost.php?p=132985&postcount=17)

இளசு, பிரியன் போன்றவர்களின் அன்பும், கனிவான பின்னுட்டங்களும், இன்று நானும் மன்றத்தில்.....

மன்றத்தில் பலவகை விமர்சகர்கள் இருக்கிறர்கள்... பலர், மிக மிக சிறப்பான விமர்சனம் செய்பவர்கள்....

ஆனால் சில மட்டும் ஏன் மிக மிக எதிர்பாக்க படுகிறார்கள்..????

ஏன்....!!!!

பாஸிடீவ் அலைவரிசை விமர்சனங்கள் .... எழுதுபவரின் எழுத்தை உள்வாங்கி, கவிதையின் உள் சென்று, கவிஞனின் மனம் படித்து எழுதும்
சில வரிகள்....விமர்சனம்

இதை இளசு மிக மிக சரியாக செய்வார்....

ஒரு சாதாரண கவிதையை அசாதாரண விமர்சனம் மூலம் மன்ற மக்களுக்கு தெளிய, தெரிய வைப்பதில் இவர் வெற்றியை காண்பிக்கிறார்....

ஆனால்...!!!!


தொடரும்....

meera
04-08-2008, 07:16 AM
நான் மன்றத்தில் நிறைய இடங்களில் உலவுவதில்லை என்பதை என்றே உணர்ந்தேன். மன்றம் வந்த போது நான் முதலில் வாசித்த கவிதை கவிதாவினுடயது. கொஞ்சம் கிறுக்க மட்டுமே தெரிந்த நான் காவிதாவின் கவிதையில் உந்தப்பட்டு கவிதை என்ற பெயரில் கிறுக்கிக்கொண்டிருந்தேன். அது வெறும் கிறுக்கல் என்று தெரிந்தும் மனம் வேண்டியது மன்றச் சொந்தங்களின் விமர்சனத்தை. இளசு அண்ண,தாமரை அண்ணா, பென்ஸ், ஓவியா,ராகவன், முகிலன் இப்படி எல்லாருடைய விமர்சனம் எதிர்பார்த்தே என் படைப்புகள் இருக்கும். இவர்கள் அனைவரின் செதுக்களே நான் உருப்பெற்ற சிற்பமாக இன்று சற்றேனும் நிமிர்ந்திருப்பது. ஆனால் எனக்கு விமர்சிக்க தெரியாது என்பதே உண்மை. பென்ஸ் அடிக்கடி சொல்வது மீராவுக்கு தெரிந்ததெல்லம் வெறும் ஒற்றை வார்த்தை."உங்கள் கவிதை அருமை".நான் அதிகமாய் சொல்லி இருப்பது இந்த வார்த்தைகள் தான். ஆனால் சில கவிதைகளில் குறை கண்டும் சொல்லாமல் விட்டதும் உண்டு. ஏனெனில் அவர்கள் நம்மால் வருந்துவார்களோ என்ற பயம். ஆனால் இந்த திரி என் தவறை சுட்டி காட்டியதுடன்,விமர்கிக்கவும் கற்று தருகிறது. நன்றி ஆதவா. உன் விமர்சனங்கள் கண்டு சில வேளைகளில் நான் வியந்திருக்கிறேன்.உன்னைப்போல் விமர்சிக்க இயலவில்லையே என்று ஏங்கியதும் உண்டு.

நன்றி பென்ஸ் இந்த திரியை மேலேலுப்பியதற்கு.

பென்ஸ்
07-08-2008, 02:06 AM
மன்றத்தில் என்னை கவர்ந்த விமர்சனங்கள் பல... அதில் சிலவற்றை சுட்டி காட்டி அதன் பெருமைகலை சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

முதல் கவிதை: உதிர்தல் (http://tamilmantram.com/vb/showthread.php?t=5686)
எழுதியவர்: கவிதா

மிக மெல்லிய விசயங்களை கூட , அழகாக கையாள முடியும் என்பது இந்த கவிதை விமர்சகர்கள் சொல்லி இருப்பார்கள்....
நண்பன் - ஒரு கவிதையை எப்படி வரி வரியாக விமர்சிக்க முடியும் என்பதை நண்பன் காண்பித்திருப்பார்... அதற்க்கு இனையாக கவிதாவும் வரம்புக்குட்பட்டு விவரித்திருப்பார்....

நல்ல விமர்சனத்திற்க்கு கவிதைகள் வரி வரியாக விமர்சணம் செய்யபட வேண்டும் என்பதற்க்கு இந்த விமர்சணம் எடுத்துக்காட்டு....

இரண்டாம் கவிதை: பூத்துக்குலுங்கும் மரம் (http://tamilmantram.com/vb/showthread.php?t=5078) , அங்கே எவரும் இல்லை (http://tamilmantram.com/vb/showthread.php?t=5079) ,
எழுதியவர் : கவிதா
சில கவிதைகள் மிக மிக சென்சிடிவானவை.... பண்பட்டவர் பகுதியில் பதிக்க வேண்டாம், அத்தனை அருமையாக எழுதபட்டிருக்கும்... அப்படி பட்ட கவிதைகளை விமர்சிக்கும் போது பொருளை வெளிப்படையாக பேசுவது காரியத்தை கெடுத்துவிடும்.... சில இலைமறை காயாய் மட்டுமே பேசபட வேண்டும்....
அதை இங்கே இளசுவும் .. நானும் செய்து இருப்போம்....

இப்படியே பல கவிதை விமர்சணங்கள் இருந்தாலும் நம் மன்றதின் சிறப்பு கவிதைக்கு விமர்சனமாய் கவிதை கொடுப்பது....

தாமரைசெல்வன் மன்றதிதில் அதிகம் பத்தித்த நாட்க்களில் இந்த வகை விமர்சனக்களை காணமுடியும்....
இதில்...
பதில் கவிதை - காதலிப்பதாக சொல்லாதே (http://tamilmantram.com/vb/showthread.php?t=5476)
கவிதை: கவிதா , பதில்: பென்ஸ்

மாற்றுகருத்து கவிதை- என் தோட்டம் (http://tamilmantram.com/vb/showthread.php?t=5825)
கவிதை: இளசு , பதில்: பென்ஸ்

ஒத்தகருத்து கவிதை - நாகரா அவர்களின் பின்னூட்டங்கள் அனைத்தும்....

மாற்றுகருத்து கவிதைகள், பதில் கவிதைகள் கொடுக்கும் போது க்கவிதை எழுதியவர் தன் கவிதை அங்கீகரிக்க பட்டிருப்பதை உணர்த்தாலும், அது அவர் அடி மனதில் ஒரு கருத்து வேறுபாட்டை கொடுப்பது மறுக்கமுடியாடதது....

புதியவர்களிடம் தவறை சுட்டிக்காட்டும் போதும் தன் கவிதைகள் வாசிக்கபட்டு, அங்கிகரிக்கபடுவதை உணர்த்தாலும், எங்கோ மூலையில் ஒரு கீறல் விழுகிறது.

இந்த கருத்துகளை நான் அறிந்திருந்தும்...
நான் நானாகவே எழுதுகிறேன்....

என் எண்ண ஓட்டங்களை பின்னூட்டங்களாக்கி கொடுக்கிறேன்.....(நன்றி: பூர்னிமா).


கேள்வி: பின்னூட்டம் எழுதுவது எப்படி திரி, பின்னூட்டம் இன்றி இருக்குது.... இது எதனால் இருக்கலாம்....???

பென்ஸ்
07-08-2008, 02:11 AM
என் அன்பின் தாமரை செல்வனை இந்த திரியை தொட சொல்லி அழைக்கிறென்...

தாமரை
07-08-2008, 04:03 AM
ஒவ்வொரு எழுத்தும், செயலும், அசைவும், விமர்சனமே!

அட, பயபுள்ள எப்பொழுதும் போல பினாத்த ஆரம்பிச்சுட்டானே, என்று மனசில நினைச்சுகிட்டு தலையில கை வச்சீங்களே இப்போ, அதுதாங்க விமர்சனம்.

மூலமாய் எழுதிய கவிதை கூட உங்களில் தோன்றிய ஒரு விமர்சனம் தான்,

அந்த நிலவைக் காணவில்லை கவிதையைப் பாருங்கள்..

அது அந்தக் காதலியின் குளுமையான அழகைப் பற்றிய விமர்சனம் தானே!

எதிர் வீட்டுக்காரி புதுப்புடவை எடுத்தால், கணவன் வதைபடுவது கூட விமர்சனம்தான்..

ஒரு கண்சிமிட்டல், புருவ நெளிப்பு, உதட்டுப் பிதுக்கல், பெருமூச்சு, சுருங்கிய கண், குவிந்த இதழ்கள், விரலசைப்பு, தலைசாய்ப்பு, விரல்கோலம், தாளம் என விமர்சனங்கள் வெளிப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன..

ஆனால் நேருக்குநேர் காண முடிய இணையதளத்து எழுத்தில் விமர்சனம்.. கொஞ்சம் வித்தியாசமானது தான்.

இதில் புரிந்துணர்வு இருபக்கத்தாருக்கும் இருக்கத்தான் தேவை இருக்கிறது.

விமர்சிப்பவருக்கும், விமர்சிக்கப்படுவதைப் படைத்தவருக்கும்..

தாயும் பிள்ளையும் ஆன போதிலும்
வாயும் வயிறும் வேறடா...

கவிஞர் கண்ணதாசன் அழகாகச் சொல்லி இருப்பார்..

நாம் படைத்தவற்றை, நாம் எழுதியதை, நம் விமர்சனத்தை நாம் நாமாக நினைக்கிறோம். அது அப்படித்தான். தாய் தன் குழந்தையைத் தானாக நினைத்தல்.

எண்ணங்களால் வாழ்கிறோம். எண்ணங்கள் நாமாகிறோம். நம்மை விட்டுப் பிரிந்து விழுந்த எண்ணங்களையும் நாம் நாமாகவே எண்ணுகிறோம்.

விமர்சனத்தில் முக்கியமானது மனிதர்களை எழுத்துக்களிடமிருந்து பிரித்து விடல்.

தாமரை எழுதி இருக்கிறார்.. அமரன் எழுதி இருக்கிறார். சாம்பவி எழுதி இருக்கிறார், நமக்குப் புரியவில்லை என்று என்று எழுத்துக்களின் மீது மனிதனைச் சுமத்தாதீர்கள்.

ஏனென்றால் அவை பிறப்பித்தவரை விட்டுத் தனியே வாழத் துவங்கி விட்டன. திருக்குறளை தெருவோரக் குடிமகன் எழுதி இருந்தாலும் சரி, ராஜராஜ சோழன் எழுதி இருந்தாலும் சரி..

திருக்குறளை வைத்துதான் நாம் வள்ளுவனை அடையாளம் காணுகிறோமே தவிர.. வள்ளுவனை வைத்து திருக்குறள் அல்ல.

இளசின் விமர்சனம் என அடையாளப்படுத்தியது யார்.. இளசா அவரின் விமர்சனங்களா?

இளசின் விமர்சனத்திற்கு சரியான விமர்சனம் பென்ஸ் எழுதும் விமர்சனங்கள். அவரின் சாயல் படிந்து காணப்படுவது...

விமர்சனங்களில் பலவகை உண்டு.. பல நோக்கங்கள் உண்டு. எதையும் மிகச் சரி என்று சொல்ல முடியாது. எதையும் தவறானது என்றும் சொல்ல முடியாது..

எல்லாமும் சரிக்கும் தவறுக்கும் இடைப் பட்டவையே.

தேவை உணர்ந்து அளிக்கப்படும் விமர்சனம் - விமர்சனம் உணர்தல்

இரண்டுமே மிக அத்தியாவசியமாய் தேவை.

பலவகை விமர்சனங்களில் தேவை உணர்ந்து அளிக்கப்படும் விமர்சனம் மிகச் சிறந்தது.

இன்னும் சமயம் கிடைக்கும் பொழுது விவரமாகச் சிந்தித்து எழுதுகிறேன்.

rajatemp
07-08-2008, 05:36 AM
விமர்சனம்
படித்ததில் மனதில் தோன்றுவது ( அது எத்த்னை வகையாயினும்)

shibly591
07-08-2008, 06:10 AM
விமர்சனம் எழுதுவது பெரும் கலை..

முதலில்
1. கவிதையின் சிறப்பு
2. கருவைப்பற்றிய ஒரு பார்வை (உங்களுக்கு என்ன தெரியுமோ அது..) (சிறப்புகளை விவரித்தால் போதும்)
3. கவிதையில் ஏற்பட்டுள்ள தவறுகள்.
4. பாராட்டுக்கள்.

இதன் அடிப்படையில் விமர்சனம் செய்யவேண்டும். முதலில் நாம் காண இருப்பது சிறப்பு: (சுருக்கமாக சொல்லிவிடுகிறேன்)



நல்லதொரு திரி ஆதவா.....

விமர்சனம் செய்ய தயக்கம் என்பது எங்கள் மௌனத்தின் பொருள் அல்ல....

முடிந்தவரை நேரியலாகவே விமர்சிக்க வேண்டும் என்றே நான் கருதுகிறேன்...

குறைகளை மட்டும் காண்பவன் உண்மையில் அந்தப்படைப்பை சரி வர விளங்கிக்கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன்...

படைப்பு எப்படி படைக்கப்பட்டது என்பது அந்தப்படைப்பை படைத்த படைப்பாளின் மனநிலை மற்றும் ;ளாது அப்படைப்புக்கான பின்னணிக்காரணி போன்றவைகளிலும் தங்கியிருக்கும்..அதை கவனத்தில் கொள்ளாது அது தவறு இது தவறு என்றெல்லாம் சுட்டி நிற்க முடியாது...

விமர்சிக்கத்தெரிந்தவன் முதலில் மற்றவர்களின் மனநிலையை புரியத்தக்கவனாக இருக்க வேண்டும்..

எடுத்த எடுப்பில் நிறைவாக விமர்சிப்பதுவும் பொருத்தமானதல்ல..அது படைப்பாளியின் வளர்ச்சியை குந்தகமாக்கி விடும் அபாயத்தை கொண்டிருக்கிறது...

எது எப்படியோ...நாசூக்காக குறைகளை சொல்வதும் வெளிப்படையாக நிறைகளை விபரிப்பதுவுமே நல்லதொரு விமர்சனத்தின் தன்மை என நான் நினைக்கிறேன்...

தொடர்க ஆதவா.

தாமரை
07-08-2008, 12:34 PM
தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வதற்கும் பொதுவான ஒரு இடத்தில் விமர்சனம் செய்வதிலும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. பொது இடமான இதைப் போன்ற இடங்களில் விமர்சனம் செய்யும் பொழுது அந்த விமர்சனம் விமர்சிப்பவர், விமர்சனம் செய்பவர் இருவரையும் தாண்டி பலருக்கும் போய்ச் சேருகிறது.

என் கவிதையை இளசு விமர்சிப்பதை மனோ படிக்கிறார். இதனால் என்னைப் பற்றியும் இளசுவைப் பற்றியும் மனோ மனதில் ஒரு தாக்கம் ஏற்படுகிறது.

விமர்சனம்

குறைகளை அடுக்குவதாய் இருந்தால் இளசு கீழே இறங்குகிறார்.
குறைகளை மறைப்பதாய் இருந்தால் நான் கீழே இறங்குகிறேன்.
நிறைகளை அடுக்குவதாய் இருந்தால் இளசு மேலே ஏறுகிறார்.
நிறைகளை மறைப்பதாய் இருந்தால் நான் மேலே ஏறுகிறேன்

படைப்பு ஒரு மூலையில் ஏனென்றால் முழுதாய் விமர்சிக்கப்படவில்லை. படைப்பாளி விமர்சிக்கப்படுவதால்.

விமர்சிப்பவன் விமர்சன நாகரீகமாய் ஆதவன் சொன்ன வழிகளைக் கையாள்கிறான், நல்ல விமர்சகன் என்றப் பெயரும் பெறுகிறான். அதாவது

1. கவிதையின் சிறப்பு
2. கருவைப்பற்றிய ஒரு பார்வை (உங்களுக்கு என்ன தெரியுமோ அது..) (சிறப்புகளை விவரித்தால் போதும்)
3. கவிதையில் ஏற்பட்டுள்ள தவறுகள்.
4. பாராட்டுக்கள்.

விமர்சிக்கப் பட்டவன் ஊக்கமோ அல்லது தாக்கமோ பெறுகிறான். நல்லபடைப்பாளி எனப் பெயரும் எடுக்க விழைகிறான்.

இப்படி ஒரு மாதிரியான அமைப்பு அமைந்த பிறகு நம் மன்றத்தில் நடந்த உண்மை நிகழ்ச்சியைச் சொல்லவேண்டியது என் கடமையாகிறது


எழுதுபவர்கள் : இவர்களால் ஏற்படும் மாறுபாடுகள்தான் மிக அதிகம், சிலர் மிக புத்திசாலிகள்,, இவர்களை எப்பொழுதுமே புகழ்ந்துகொண்டே இருக்க முடியாது.. விமர்சனத்தின் தரத்தைக் கொண்டு எழுதுபவர்கள் உண்மையாய் விமர்சிக்கிறார்களா இல்லை பொய்யாய் விமர்சிக்கிறார்களா என்று அறிந்து பொய் விமர்சனங்களுக்கு சம்பிரதாய நன்றியும், உண்மை விமர்சனங்களுக்குச் சில உண்மை நன்றிகளையும் உரித்தாக்கி விமர்சனத்தை விமர்சிக்கும் மக்கள் நம் மன்றில் மிகவும் அதிகம்.

ஒரு கவிதையைக் கண்டேன்.. முதலில் ஒருவர் ஒரு பொருள்படுவதாகச் சொல்லி ஆஹா ஓஹோ எனப் புகழ்ந்திருந்தார்..சூப்பர், சரியாப் பிடிச்சீங்க என்று அவருக்குத் தாளம் போட்டு பதில் இருந்தது. இன்னொருவர், இன்னொரு விதமாய்ச் சொல்லி அதுதான் சூப்பர் என்றுச் சொல்லி இருந்தார். அதற்கும் இன்னொரு விதமாய் பாராட்டி விமர்சனம் எழுதியதற்கு நன்றி சொல்லப்பட்டிருந்தது..

என்றோ ஒரு நாள் அதே கவிதை என் கண்ணில் பட்டது. கவிதையைப் படித்து விட்டு, விமர்சனங்கள், பதில்கள் எல்லாவற்றையும் படித்து விட்டு கவிதையை மனசில் அலசிக் கொண்டிருக்கும் பொழுது சில நெருடல்கள் தெரிவது போலிருந்தால், தெரிந்த நண்பராக இருக்கும் பட்சத்தில் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு முரண்களை விவாதித்தேன், அவர்களின் சிந்தனையில் எப்படி அந்த நெருடல்கள் காணப்படவில்லை என அறிந்து கொள்ள..

அப்பொழுது அவர் எழுத நினைத்ததே வேறு கரு என்றும், அதை நேரிடையாகச் சொல்லாமல் உருவகமாகச் சொல்லப் புகுந்ததால் பிசிறுகள் தட்டி வந்ததையும் அறிந்தேன்

ஆக என்ன கரு என்பதும் புரியாமல் படைப்பாளிக்கு உற்சாகமூட்டும் விதமாக சிறப்புகளை எடுத்துச் சொல்லி விமர்சிப்பது என்பது இது போன்றச் சில சம்பவங்களுக்குப் பிறகு படைப்பாளிக்குச் சலித்துவிடுகிறது.


விமர்சனத்தின் நோக்கம் என்பதை இதனால் தெளிவுபடுத்தப் பட வேண்டியதாகிறது.

விமர்சனம் பின்கண்ட விதங்களில் பலரூபமெடுக்கும். எல்லாவற்றிற்கும் ஒரே அளவுகோல் என்பது பொருந்தாத ஒன்று.

1. புதிய எழுத்தாளர்
2. பழகிய எழுத்தாளரின் புதிய முயற்சி..
3. இந்த இடத்திலேயே மூத்தோர்
4. சர்ச்சைக்குரிய கருத்துக்கள் கொண்ட படைப்பு
5. அனைவரும் ஒத்துக் கொள்ளக் கூடிய பொதுவியலான படைப்பு
6. வித்தியாசமானப் புது நோக்கு, சிந்தனை
7. பொழுது போக்கு அம்சம் நிறைந்தது
8. பயனுள்ள கருத்துக்கள்
9. கற்றுக் கொள்ளும் முயற்சி
10. சரியான / தவறான விமர்சனங்கள் (ஆமாம் விமர்சனங்களே விமர்சிக்கப்படுவது நம் தளத்தில் உண்டு)

இப்படி விதவிதமான கலவை கொண்டது.

ஒரே கவிதை ஒரே மனிதரால் பல வேறுவிதமான சமயங்களில் வெவ்வேறு விதங்களாக பார்க்கப்படுகிறது.

விமர்சிப்பவனுக்கு எப்படி அடிப்படையில் சில குணாதிசயங்கள் தேவையோ விமர்சனம் எதிர்நோக்குபவனுக்கும் அதேபோல் சில அடிப்படை குணாதிசயங்கள் தேவைப்படுகின்றன, ஏனென்றால் பொதுஇடத்தில் தன் படைப்பை பார்வைக்கு வைப்பவர் எப்படிப்பட்ட மனநிலையில் இருக்கிறார் என்பது அறிவதற்கு இயலாத ஒன்று..

படைத்தவன் தான் மிகச்சிறியவன் என்றும் தான் எழுதியதை மற்றவர் அங்கீகாரம் செய்வார்களா என்றும் அச்சத்தில் இருப்பான்.. சிவாஜி, ராகவன், பிரதீப், பூமகள் போன்றவர்களின் பின்னூட்ட வகை இவர்களுக்கு மிகவும் பயன் கொடுக்கக் கூடிய ஒன்று.


படைத்தவன் தான் மிகச் சிறந்த கருத்தைச் சொல்லியதாக, மிக அழகான கவிதையை எழுதியதாக பெருமையில் இருப்பான். அவர்களுக்கு இளசு, பென்ஸ், அமரன், ஆதவன் (லிஸ்ட்ல சேக்கலாமா?), ராகவன், சாலை ஜெயராமன் போன்றோரின் பின்னூட்ட வகை ஊக்கம் சேர்ப்பதாக இருக்கும். முதல் வகையினரை விட இரண்டாம் வகையினர் இவர்களின் பின்னூட்டங்களை மிகவும் ரசிப்பர்.

முதல்வகையினருக்கு இவர்கள் இரண்டாம் வகையினருக்கு பின்னூட்டம் அளித்துப் பாராட்டப்பட்டதால், தம்மைப் பாராட்டும் பொழுது மகிழ்ச்சி பன்மடங்காகிறது.


ஷிப்லியின் கருத்தில் சிலவற்றில் நான் மாறுபடுகிறேன், காரணம் இருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட மனநிலையில் இருந்து பார்த்தால் மட்டுமே புரியும் எழுத்துக்கள்.. பிண்ணனி தெரிந்தால் மட்டுமே புரியும் அழுத்தங்கள்..

இவற்றைத் தாங்கி நிற்க வேண்டியவை நாம் எழுதிய எழுத்துக்கள் அல்லவா? மறைபொருளாய், வஞ்சப்புகழ்ச்சியாய் எழுதும் பொழுது இவை புரியாமல் இருக்கட்டும் எனக் கவிஞனாக நினைத்து எழுதினாலொழிய நல்ல படைப்புகள் உருவாவதில்லை,

விமர்சிக்கப்படுபவை படைப்புகள் தானே தவிர படைத்தவர் அல்ல. இந்த மனநிலையை விமர்சனம் எதிர்நோக்குபவர் கண்டிப்பாய் கொள்ளவேண்டும்..


பொதுமன்றத்திலான விமர்சனத்தில் இருக்கவேண்டிய 10 விஷயங்கள்

1. பண்பாடு
2. நான் என்ன புரிந்து கொண்டேன்
3. சிறப்புகள்
4. மாற்றுக் கருத்துகள் (குறைகள் அல்ல கவனிக்கவும்)
5. இதைப் போன்ற ஒத்த, மாறுபட்ட கருத்துகள்
6. எது அழகு
7. எது திகட்டல்
8. எது நெருடல்
9. படைப்பில் என்ன மேலோங்கி நிற்கிறது
10. படைத்தவருக்கு நன்றி

(இதையெல்லாம் நான் செய்கிறேனா? ம்ம் அதான் நான் விமர்சனமே செய்வதில்லையே விவாதமில்லையா செய்கிறேன். :D)


இன்னும் வரும்

யவனிகா
07-08-2008, 01:38 PM
திரி அருமையாகச் செல்கிறது...விமர்சிப்பது பற்றி எனக்கு அறிவு அதிகம் இல்லை...

உணர்வுப்பூர்வமாக என்னை சிந்திக்க வைத்தால் ஓகே...அடுத்த படைப்பைப் படிக்கும் போதும் முந்தியதையே நினைக்க வைத்தால்...சிறந்தது...அன்றிரவு உறங்கும் வரை நெருடிக் கொண்டிருந்தால் மிகச் சிறந்தது...அடுத்த நாள் விழிக்கும் போதும் நினைவுக்கு வந்தால் மிக மிக சிறந்தது....

இப்படித்தான் என்னுடைய விமர்சன அறிவு... இந்தத்திரி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்...தாமரை அண்ணா சொன்னதை யோசித்து கொஞ்சம் அறிவுப்பூர்வமாகவும் அணுகலாம் கவிதைகளை...யாருடைய கவிதையாவது கையில் கிடைக்கட்டும்...அக்கு அக்காய் பிரித்துப் போட்டு அலசி காயப்போடப்போறேன்.

தாமரை
07-08-2008, 02:50 PM
விமர்சிப்பதில் இருக்கவேண்டிய இன்னும் சில விஷயங்களும் இருக்கின்றன,

1, கரு
2. சொல்லாடல், வெளிப்படுத்திய விதம்

இவை இரண்டும் தனித்தனி. கருவில் ஒப்புமை இருக்கலாம் வேற்றுமையும் இருக்கலாம். கருவை ஒப்புக் கொள்கிறோமா இல்லையா என்பதை தெளிவாகச் சொல்லுதல் மிக முக்கியமாகிறது, கருவை விட்டுவிட்டு ஒருசில வார்த்தையழகை மட்டுமே விமர்சித்தல் தவறாகிறது. கருவை விமர்சிக்க பல கோணங்களில் கருவைக் காண வேண்டும்.

சில கவிஞர்கள் ஒரு கோணத்தில் மட்டுமே ஒரு கருவை கிரகித்துப் பிரசவிக்கின்றனர். உதாரணமாகநம் இறையனாரின் பாடலுக்கே வருவோம்

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீய நட்பின் மயிலியல்
செறிஎயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீஅறியும் பூவே

கவிதையில் காதல் சுவை சொட்டுகிறது.. காதல் மயக்கம். தலைவியின் கூந்தல் மணம் தலைவனைப் பித்துகொள்ள வைக்கிறது. ஒரு காதலனின் பார்வையில் கவிதை மிகச் சரி..

ஆனால் உலகியலுக்கு வரும்பொழுது கூந்தல் மணம் எனத் தவறான ஒரு அடிப்படையைத் தருவதால் பிரச்சனை எழுப்பப்படுகிறது.

அந்த அளவு கூர் நோக்கங்கள் தேவையில்லை. ஆனால் .....

சில கவிதைகளைக் கண்டால், இரு தனிப்பட்ட உருவகங்களை இணைக்க முயன்றிருப்பார்கள். இரண்டும் தனித்தனியே சரியாக இருப்பதாய்த் தோன்றும். ஆனால் ஒரே கவிதையில் இணைக்கப்படும்பொழுது

இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் சண்டை போட்டுக் கொண்டிருக்கும்.

இரண்டு பின்னூட்டங்களுக்குப் பிறகு இதுதான் கரு என்று கவிஞரே விளக்கி இருப்பார்.

இதற்குப் பின்னர் அந்த ஒட்டாமல் போனது ஏன் என்ற கேள்வி மறக்கப்பட்டு விடுகிறது. கவிஞரும் தன் கவிதையை மற்றவர்களுக்குப் புரிந்து கொள்ளும் திறனில்லை என்ற மயக்கத்துடன் விட்டு விடுகிறார்.

இந்த விமர்சனங்களால் என்ன பயன்? ஒன்றுமில்லை. கவிஞரின் நடையிலும் மாறுதலில்லை. விமர்சகனின் பார்வையிலும் மாற்றமில்லை.

உருவகம் சரிதான். கோர்வை இப்படி இருந்தால் தெளிவுபடும் என்று சொல்லுவதால் எழுதியவருக்கு மீள்பார்வைச் செய்ய ஏற்புடையதாய் இருக்கும். பலர் சொல்லுவதில்லை.

உலகியிலை உரசிப் பார்க்கும் கருக்கள் விமர்சனத்திற்கு உட்பட்டவையே, கருவில் தெளிவு பெற விமர்சகர்கள் கேள்வி கேட்பதில் தவறில்லை. கருவை விமர்சிக்காத விமர்சனங்கள் வெறும் பின்னூட்டங்களே!.

கருவைத்தான் - தன் கருத்தைத்தான் ஒரு எழுத்தாளன் பார்வைக்கு வைக்கிறான். அந்தக் கருவே விமர்சிக்கப்படாமல் போவது தவறு.
அதேசமயம் விமர்சனம் எதிர் நோக்குபவர் கருவில் பிழையுண்டு என்று அறியப்பெற்றதும் உணர்ச்சிவசப்படுகின்றனர். நான் சொல்ல வந்தது புரியவில்லை அதனால்தான் இப்படிச் சொல்கின்றனர் என்று சொல்லிவிட்டு எஸ்கேப் அதுதாங்க தப்பித்து விடுகின்றனர்.

ஆனால் எந்தக் கோணத்தில எந்த வார்த்தைகளால் அது தவறாகப் பட்டது என திருப்பிப் பார்ப்பதில்லை, இதனால் கருவை அலசுவோர் ஒரு அளவுடன் நின்று விடுகின்றனர். சொல்லப் போனால் நம் மன்றத்தில் கூடக் கருவை அலசுதல் என்பது குறைவுதான்.


அடுத்து சொல்லப்பட்ட முறை. ஒரு கருத்திற்கு பலமுகங்கள் உண்டு. எந்தக் கோணத்தில அந்தக்கருவை அணுகி இருக்கிறார், அப்படி அணுகினால் அந்தக் கரு எப்படிச் சரி என்று தோன்றுகிறது என்பது தெளிவாகத் தெரிதல் வேண்டும். அது ஒப்புக் கொள்ளும் படியாகவும் இருக்க வேண்டும்.

இங்குதான் நம் மன்றத்தில் மிகப்பெரிய சறுக்கல் இருக்கிறது. எழுத்தாளரின் கோணம் என்ன என்பதை படிப்பவர்களில் பலபேர் பார்ப்பதுமில்லை. அந்தக் கோணத்தில் பார்த்தால் கரு சரிதானா? அவர் சொல்வது சரிதானா என்றும் கவனிப்பதில்லை. கருவை விமர்சிக்க கொள்ளும் ஆர்வத்தில் பாதி கூட பார்வைக் கோணத்தை அறிந்து கொள்வதிலும் வேறுபட்டப் பார்வைகளில் அதே கரு எப்படித் தெரிகிறது என்பதும் மறக்கப் பட்டு விடுகிறது.

வார்த்தை அழகுகள் - அழுக்குகள்.. சில சமயம் இதுசரிதான் என்று நாம் நம்பிக் கொண்டிருப்பவை தவறு எனச் சிலர் சொல்லும்பொழுது ஏற்படும் அதிர்ச்சியை விட, நாம் எழுதிய வாக்கியம் தவறான அர்த்தம் தருகிறது என்பதைப் பலரால் ஜீரணிக்க முடிவதில்லை.

வாக்கிய அமைப்பிலேயே தவறுகள் இருக்கும் இந்தக் கவிதையின் விமர்சனத்தை எப்படிச் செய்வது?

அதே கவிதையைத் திருத்தி திருப்பி அதாவது சொற்களைச் சரிப்படுத்தி எழுதுவதின் மூலம் நாசூக்காய்ச் சொல்லலாம்.

அந்தக் கோணத்திலும் அதே கருவை வரவழைத்துக் காட்டலாம். இதைத்தான் பென்ஸ், இளசு போன்றவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்து கொண்டிருக்கிறார்கள். குற்றம் சொன்ன மாதிரியும் இல்லாமல் விமர்சனமும் செய்து.. இடித்துரைக்காமல் எடுத்துரைத்து..

கரு, சொல்லப்பட்ட விதம் இரண்டு மட்டும்தானா? இன்னும் இருக்கிறது..

நுணுக்கங்கள்.. வேலைப்பாடுகள்.. மாநிறமயில் போன்ற புதுமைகள் :D இவற்றிலும் சிறிது அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது. இவற்றைத் தொட்டால் நேரடியாக எழுதியவனின் இதயத்தையேத் தொடலாம்.

கவிதைக்குச் சொல்லழகு போல இன்னும் சில சிறப்புகள் உண்டு. புதுக்கவிதை உலகில் அவை மறக்கப்பட்டாலும் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த நுட்பங்களைத் தொட்டவரே மிகச் சிறந்த விமர்சகராகக் கருதப்படுகிறார். என்னதான் கருவை ஆழமாக அலசினாலும் வார்த்தை வார்த்தையாக விமர்சித்தாலும் அந்தக் கவிதைக் கென்று இருக்கும் ஒருத் தனித்தன்மையை அடையாளம் காட்டுதல் என்பதுதான் விமர்சனத்திலேயே உச்சம். இதுதான் விமர்சிக்கப்படுபவருக்கு, விமர்சிப்பவருக்கு மற்றும் வாசிப்பவருக்கு ஆகிய அனைவருக்கும் ஒரு ஈர்ப்பினை தரக்கூடியதாகும்.


சிறப்பானச் சொல்லடுக்குகளை எடுத்துக் காட்டி சிலாகிப்பது. சிறப்பில்லாதச் சொற்களுக்கு மாற்றுச் சொற்களில் பதிலளிப்பது.. இவற்றின் மூலமே சொற்களின் அழகை விமர்சிக்கிறார்கள்..

விமர்சனம் பெறுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய நுணுக்கம் இது..

இன்னும் வரும்

பென்ஸ்
07-08-2008, 02:59 PM
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்...!!!!

(சுட்டது.. ஆனால் இதமாய்...!!!!)

பாராட்டுகள் செல்வன்...

தாமரை
07-08-2008, 03:03 PM
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்...!!!!

(சுட்டது.. ஆனால் இதமாய்...!!!!)

பாராட்டுகள் செல்வன்...

:D:D:D:D:D:D:D:D:D

நீங்கள் கேட்ட பின்னால்தானே யோசிக்கவே ஆரம்பித்தேன்.

இன்னும் ஒரு பகுதி எழுதிட்டு திருப்பதி போகணும்...

அடுத்துத் திங்கள் கிழமைதான்...

mukilan
07-08-2008, 03:03 PM
விமர்சனம் எழுதும் கலை பற்றிய பாடம் இது. இதை விமர்சிக்கவோ பாராட்டவோ தேவையில்லை.

உண்மைகளை எடுத்துக்காட்டுடன் சுவை பட விளக்கிய ஆதவா, பென்ஸ், செல்வர் ஆகியோர்க்கு என் மனமார்ந்த நன்றி.

செல்வரின் சொல்வன்மை பார்த்து வியந்து நிற்கிறேன்.

அதனால் தான் யாரும் இவருடன் வாய்கொடுத்து மாட்டிக் கொள்வதில்லை என நண்பர்கள் சொல்லக் கேள்வி.

தாமரை
07-08-2008, 03:13 PM
இப்பொழுது இரண்டாம் பகுதியில் உள்ளதை இங்கு இணைத்தால் எனது கட்டுரை நிறைவு..

விமர்சிக்கப்படுபவரின் தேவை அறிந்து விமர்சித்தல்..

சிலபல பின்னூட்டங்களுக்குப் பிறகு படைப்பாளியின் எண்ணம், பார்வை, கோணம், என்ன முயற்சிக்கிறார், எந்த ஸ்டைலில் எழுதுகிறார் எனப் பல நுணுக்கங்கள் புரிந்து விடுகின்றன, (உண்மையிலேயே விமர்சனக் கண்ணோட்டத்தில் அவர் படைப்பை அணுகி இருந்தால்).

ஒவ்வொருவருக்கும் தன் படைப்பு இப்படி இருக்க வேண்டும் என்று ஒரு கனவு இருக்கும். விமர்சனத்திற்கான பின்னூட்டங்களிலும் அடுத்தடுத்து வரும் படைப்புகளிலும் அவரின் இந்த ஆர்வம் தன்னாலேயே வெளிப்படும். பின்னூட்டங்களுக்கு அவர்கள் கொடுக்கும் பதில்களில் அந்த ஆர்வம் ஆழப் புதைந்து கிட்க்கும்.

எனவே விமர்சனம் செய்தாயிற்று முடிந்தது என்று விட்டு விடாமல் அதற்கானப் பதில்களைப் படித்துப் புரிந்து கொள்ளுதல் மிக அவசியமாகிறது.

அதாவது

படைப்பு விமர்சிக்கப் படுகிறது - அடுத்தப் படைப்பு உயர்வடைகிறது
விமர்சனம் விமர்சிக்கப் படுகிறது - அடுத்த விமர்சனம் உயர்வடைகிறது.
விமர்சனம் உயர்வடைகிறது - படைப்பும் உயர்வடைகிறது
விமர்சனம் செய்தவர் ஆர்வத்தால் படைக்கத் தொடங்குகிறார் (பென்ஸ் உங்களைச் சொல்லலை :D)
படைத்தவர் உற்சாகமாய் விமர்சிக்கக் கற்கிறார்..

இப்படி இரண்டறக்கலத்தல்

இதுதான் விமர்சனம் - படைப்பு இரண்டிற்கும் பெருமை..

இத்துடன் என் நீண்ட உரையை முடித்து வாய்ப்புக் கொடுத்தவர்களுக்கு நன்றி கூறி அமர்கிறேன்..

(இவ்வளவு சொன்ன பிறகு என் விமர்சன எதிர்பார்ப்பை நீங்கள் கஷ்டப்படாமல் அறியத் தராமல் இருப்பேனா?. நான் எனக்கு அளிக்கப்படும் விமர்சனங்களில் மிகவும் ரசிப்பது என்ன தெரியுமா? கேள்விகளைத்தான்!)

தீபா
07-08-2008, 03:26 PM
:D:D:D:D:D:D:D:D:D

திருப்பதி போகணும்...

அடுத்துத் திங்கள் கிழமைதான்...

அடடா!!! நான் அடுத்தவாரம்.... ஜஸ்ட் மிஸ்... :sprachlos020:.

தீபா
08-08-2008, 06:52 AM
நல்ல விளக்கங்கள்.. திரு.ஆதவா ஆரம்பித்த திரியின் நோக்கம் நிறைவேறி வருகிறது என்று நினைக்கிறேன்.

விமர்சனம் என்பது ஒருவருடைய எண்ணமே அன்றி வேறில்லை. அவ்விமர்சனத்தை எடுத்துக்கொள்ளும் எண்ணமே படைப்பின் உயர்வு தாழ்வுக்கு வழி. உதாரணத்திற்கு

திரு.சிவா.ஜி அவர்கள் எழுதிய கோஹினூர் கொலைகள் முடிவு சரியில்லை என்று திரு.ஆரென் அவர்கள் சொல்ல, அந்த விமர்சனம் அவரது அடுத்த நிலைக்குச் சென்று முடிவை மாற்றியமைத்தது.. இது பாஸிடிவாக எடுத்துக்கொள்ளத் தெரிந்தவர்களின் நிலை. சிலர் விடாபிடி. தான் செய்தது சரியே என்று ஒற்றைக்காலில் தவமிருப்பவர்களும் உண்டு. நெகடிவ். விமர்சனங்களால் ஒரு படைப்பு உயர்கிறதா என்று கேட்டால்...

ஆம் என்று சொல்லலாம்.. அது எவ்வளவு தூரம் தாக்கம் தருகிறது என்பதைப் பொறுத்து.

இல்லை என்று சொல்லலாம்.. ஒரு படைப்பின் அடுத்த கட்டம், படைப்பாளியின் தேடலில் இருக்கிறது...... அது விமர்சனத்தை மீறி.....

ஒரு தளத்தில் நண்பர் ஒருவர் கவிதை எழுதியிருந்தார்... ஆஹா காரங்கள் எழுந்தன பின்னூக்கங்களாக.... ஒருவர் விளக்கம் கேட்டார்.. கவிஞர் விளக்கம் சொன்னார். அதற்கும் ஆஹா!! ஓஹோ!!! அப்படியென்றால் அவர்கள் கருத்தைப் படிக்கிறார்களா என்பது சந்தேகம். இரண்டாவது எதிர்கருத்தே இல்லை என்று ஆணித்தரமாக அடிக்கிறார்கள் என்பது......

அதே தினத்தில் நானும் என் கருத்தைப் பதித்திருந்தேன்.. உண்மையில் கவிஞருடைய விளக்கத்தில் " பூவும் பொட்டும் மனைவிக்கு மட்டும் சொந்தம்" என்று எழுதியிருந்தார். இந்த வரியை மாற்றாமல் தந்திருக்கிறேன். அப்படியென்றால் கணவனுக்கு சொந்தமில்லை என்ற கருத்து பின்புலத்தில் இருக்கிறது. அல்லவா? நானோ, கணவனுக்கும் அது சொந்தம்தான் என்று வாதாடினேன்.... ஆனால், அதை ஏற்றுக் கொள்ளவேயில்லை மேலும் மனைவிக்கு மட்டும் சொந்தம் என்றுதான் சொன்னேன், கணவனுக்கு சொந்தமில்லை என்று சொல்லவில்லை என்று கண்மூடித்தனமான விவாதம்வேறு...

ஒரு கருத்தைப் பதிக்கும் போது அது வேறு கருத்து சொல்கிறதா என்று கவனிக்கவேண்டும்.. விமர்சனத்தில் இது முக்கியம்.

பூவும் பொட்டும் மனைவிக்கு மட்டும் சொந்தம் - கணவனுக்கு சொந்தமில்லை என்று அர்த்தம்
பூவும் பொட்டும் மனைவிக்குச் சொந்தம் - கணவனுக்குப் பங்கில்லை என்று அர்த்தம் வரவில்லை.

ஒரு படைப்பாளி சொல்வது எல்லாமே தவறு என்று ஒப்புக்கொள்ள முடியாது
ஒரு விமர்சகன் சொல்வது எல்லாமே சரி என்று ஒப்புக்கொள்ள முடியாது.

விமர்சனம் என்பது என்ன... ஒரு அலசல்.. அது அப்படியும் இருக்கலாம் இப்படியும் இருக்கலாம். இப்படித்தான் இருக்கவேண்டும் என்று எதுவுமில்லை.

ஒரு சிறந்த விமர்சகன் என்பது இன்னொரு விமர்சகனால் பார்க்கப்பட்டால் மட்டுமே... பாராட்டு சொல்பவனெல்லாம் சிறந்த விமர்சகன் என்று ஒப்புக் கொள்ள முடியாது.

தவறு மட்டுமே சுட்டிக் காட்டிக் கொண்டிருப்பதும், விமர்சனமல்ல.

எதிர்கவிதை எழுதிவிட்டால் அது விமர்சனமாகிவிடுமா? இல்லை. அது எதிர்கவிதை என்ற பட்டியலில் சேருமே ஒழிய, அப்படைப்பிற்கான முழுமையான விமர்சனமாகாது.. அப்படைப்பிற்கான அலசலாக அது அமையாது. அல்லது அப்படி அமையப்பெற்ற எதிர்கவிதையாக இருக்கவேண்டும்.

பாராட்டு, நன்றி, ஆஹோ, ஓஹோ, பேஸ்.... எல்லாமே போலி வார்த்தைகள்.. இதுவும் விமர்சன பட்டியலில் சேராது. இதை சிலர் பல வார்த்தைகளை வைத்து செய்வார்கள்.. சிலருக்கு நேரமில்லை.. ஓரிரு வார்த்தைகள்.

விமர்சனம் படைப்பின் ஒவ்வொரு எழுத்திலும் இருக்கிறது.

ஒரு பிழை குறிப்பதும், வித்தியாசமான கருவை சுட்டுவதும் நேரம் கிடைக்காத எந்த ஒருவரும் விமர்சனமாக செய்யலாம்... ஒரு கவிதை உங்களுக்குப் புரியவில்லையா? அதை ஏற்காமல் அதற்குண்டா விளக்கம் கேட்டுப் பெறலாம்.. அதுவும் விமர்சன உத்தி. அவ்விளக்கத்திற்கு கவிதை பொருந்துகிறதா என்று கண்டால்... அது விமர்சனம்..

சிலருக்கு பாணி இருக்கிறது.. அவரது நடையில் அது தெரியும்..

இளசுவுக்கு ஒரு பாணி..
பென்ஸுக்கு ஒரு பாணி..
அமரன், அக்னி, ஆதவன், நாகரா, என்று பலரும்...
(தாமரை அதிகமாய் விமர்சனம் செய்து இதுவரை நான் பார்த்ததில்லை)

அவரது நடையை அக்கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்.. சிலருக்கு நேரமின்மை... அதனால் சொற்களைச் சுருக்கி, விளக்கத்தை விவரிக்கிறார்கள். சிலருக்கு நேரம் வாய்த்திருக்கிறது... பந்தி பந்தியாக செய்கிறார்கள்...

உண்மையில், விமர்சனம் வரிகளைப் பொறுத்தல்ல.. வார்த்தைகளைப் பொறுத்து..

நேரம் கிடைத்தால் தொடருகிறேன்.

அமரன்
11-08-2008, 07:41 AM
அருமை..

பொதிக் கவிதைகளை பிரித்துக் காட்டுவதா.. பொடி வைத்து விமர்சிப்பதா.. எது சிறந்தது? சொல்லின் செல்வனே..

தாமரை
11-08-2008, 10:08 AM
பொருள் புதைந்த கவிதைகள் விமர்சனத்திற்காக வைக்கப்படுகின்றவா என்பதுதான் முதலில் கேட்டுக் கொள்ளவேண்டிய கேள்வியாகும். விமர்சனத்திற்காக வைக்கப்படாதக் கவிதையை ஏன் விமர்சிக்க வேண்டும் அமரா?

அப்படி பொருள் புதைந்த ஒரு கவிதையை விமர்சனத்திற்காக வைப்பவர் அதற்கேற்றார் போல் தலைப்பிலோ அல்லது கவிதையின் ஒரு வார்த்தையிலோ இது பொதுக்கருத்து என்பதற்கான அடையாளம் இருக்கும். அவற்றை பொருள் விரித்து விமர்சிக்கலாம்..

ஆனால் அந்நியமான அத்தியாயம் போன்றவற்றை பொடி வைத்து விட்டு விடுவது சாலச் சிறந்தது. :D

எப்பொழுதும் விமர்சனம் செய்யும் பொழுது ஒரு சின்ன விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும்..

எளிதில் புரியும் விஷயங்களை சுருக்கமாகவும், சுருங்கச் சொன்ன விஷயங்களை விரிவாகவும் அலசினால் கவிதையின் மகத்துவம் அழகாக விளங்கும்.

நதி
19-08-2008, 10:37 PM
///எதிர்கவிதை எழுதிவிட்டால் அது விமர்சனமாகிவிடுமா? இல்லை. அது எதிர்கவிதை என்ற பட்டியலில் சேருமே ஒழிய, அப்படைப்பிற்கான முழுமையான விமர்சனமாகாது.. அப்படைப்பிற்கான அலசலாக அது அமையாது. அல்லது அப்படி அமையப்பெற்ற எதிர்கவிதையாக இருக்கவேண்டும்.///

எதிர்க்கவிதை என்றால் என்ன? பதப்படை வியூகத்தை உடைத்து கருத்தினைத் தனிமைப்படுத்தி எதிராடுவதுதானே. இது ஒரு வித கரு அலசல்தானே...

ஒரு சொன்னக் கணக்கு..

கவிஞன் தாய்.. கவிதை சேய்.. சேயின் சேய் எதிர்க்கவிதை. அழகும் ஆரோக்கியமும் நிறைந்த பேரன் கிடைத்ததை விட பாட்டியின் சிறப்பை விட சிறந்த சிறப்பு ஏதுமுண்டோ. பேரன் பிறந்ததும் பாட்டிக்கு பொறுப்புக் கூடுது. பக்குவம் கூடுது.. எல்லாத்துக்கும் மேலாக முதிர்ச்சி கூடுது.. தொடர் சந்ததியில் இவை பிரதிபலித்தால் எதிர்க்கவிதை விமர்சனம் பட்டைதீட்ட நல்ல ஆயுதம்தானே

தீபா
20-08-2008, 04:30 AM
///எதிர்கவிதை எழுதிவிட்டால் அது விமர்சனமாகிவிடுமா? இல்லை. அது எதிர்கவிதை என்ற பட்டியலில் சேருமே ஒழிய, அப்படைப்பிற்கான முழுமையான விமர்சனமாகாது.. அப்படைப்பிற்கான அலசலாக அது அமையாது. அல்லது அப்படி அமையப்பெற்ற எதிர்கவிதையாக இருக்கவேண்டும்.///

எதிர்க்கவிதை என்றால் என்ன? பதப்படை வியூகத்தை உடைத்து கருத்தினைத் தனிமைப்படுத்தி எதிராடுவதுதானே. இது ஒரு வித கரு அலசல்தானே...

ஒரு சொன்னக் கணக்கு..

கவிஞன் தாய்.. கவிதை சேய்.. சேயின் சேய் எதிர்க்கவிதை. அழகும் ஆரோக்கியமும் நிறைந்த பேரன் கிடைத்ததை விட பாட்டியின் சிறப்பை விட சிறந்த சிறப்பு ஏதுமுண்டோ. பேரன் பிறந்ததும் பாட்டிக்கு பொறுப்புக் கூடுது. பக்குவம் கூடுது.. எல்லாத்துக்கும் மேலாக முதிர்ச்சி கூடுது.. தொடர் சந்ததியில் இவை பிரதிபலித்தால் எதிர்க்கவிதை விமர்சனம் பட்டைதீட்ட நல்ல ஆயுதம்தானே


திரு.ரவுத்திரன், இது உங்கள் பார்வை.. நான் சொன்னது என்னோட பார்வை. இரண்டுக்குமான மோதலுக்கு நான் வரவில்லை.

எனக்குள்ளாக நான் வரையறுத்து வைத்துள்ளேன். அதனால்தான் அப்படியாக அமையப்பெற்ற எதிர்கவிதை முழுவிமர்சனம் ஆகலாம் என்ற சந்தேகத்தையும் உடன் இணைத்திருக்கிறேன்.

நன்றி

arun
20-08-2008, 06:34 PM
கவிதைகளுக்கு விமர்சனம் எழுதுவதற்கே தனி கலை வேண்டும்

எனக்கு அதெல்லாம் தெரியாது

மனதுக்கு பிடித்து இருந்தால் ஒற்றை வரியில் சூப்பர் என்று கூட சில நேரங்களில் பதித்து இருப்பேன்

அது அந்த கவிதையை எழுதிய எழுத்தாளருக்கு நான் கொடுக்கும் சிறிய ஊக்கம் என்பது எனது கருத்து (பின்னூட்டம் இடாமல் செல்வதற்கு இது எவ்வளவோ மேல் என்றும் எனக்கு தோன்றும்)

வெறும் ஒற்றை வார்த்தை கூட பல படைப்புகளை கொடுக்க தூண்டும் என்பது எனது கருத்து