PDA

View Full Version : மகன் தந்தைக்காற்றும்



ரிஷிசேது
20-07-2007, 03:31 PM
இது இலையுதிர் காலம்
இங்கு மரங்கள்
மொட்டையாய்...

நீதிபதியாய் இருந்தவராம்
மகன்கள் மூன்றுண்டாம்
இருவர் வெளிநாட்டில்
மூன்றாமவன்
கொண்டுவிட்டான்
பைத்தியமென்று
இவர் அவனை பைத்தியமென்கிறார்...

நீ சொல்வாயே
குதிரை ஓட்டும் போது
லகான்களை மட்டுமல்ல
சாட்டையையும்
பயன்படுத்தத் தெரிந்திருக்கவேண்டுமென்று...
நான் சாட்டையைத் தொலைத்துவிட்டு
குதிரையை ஓட்டிக்கொண்டிருந்தேன்....

இரயில் எஞ்சின் ஓட்டுபவராம்
பிள்ளைகள் இரண்டுண்டாம்
இருவரும் சேர்ந்தே கொண்டுவந்துவிட்டார்கள்...
இவர் தண்டவாளங்கள் சேராதவரை
பயணம் இனிதென்கிறார்...

இது இலையுதிர்காலம்
வசந்தத்திற்கு பின்வரும் காலம்

நீ சொல்வாயே
பீஷ்மரை போலொரு தாத்தா
தசரதன் போலொரு தந்தை
பரதன் போலொரு தம்பி
வேண்டுமென்று

எனக்கு அது போலவே
வாய்த்திருந்தது- ஆனால்
நான் வேண்டியது
அபிமன்யு போலொரு
பிள்ளைக்கல்லவா?....

இங்கு எனக்கு எல்லாமே
கிடைக்கிறது...
நல்ல நண்பர்களும் கூட
ஆனாலும் எனக்கு
எதோ வேண்டும்போல் ......

நீ சொல்வாயே
உறவுகளைக் கத்தியைப் போல்
கையாளவேண்டுமென்றும்
உறைக்குள் வைத்திருப்பதில்
பயனில்லை எப்போதும்
பயன்ப்டுத்திக் கொண்டிருக்கவேண்டுமென்றும்...
நான் பயன்படுத்தத் தெரியாமல்
கையையல்லவா
நறுக்கிக்கொண்டேன்....

எப்படியிருக்கிறான்
என் பேரன்
போனமுறை வந்தபோது
சொன்னானென்று
வாங்கி வைத்திருக்கிறேன்
நிறைய இனிப்புகளை...

இது இலையுதிர் காலம்
நீயிப்போது
வசந்தத்திலிருக்கிறாய்
நானும்கூட இப்படியிருந்தவன்தானே
எனக்கு நடப்பதுதான்
உனக்கும் -
இது
சாபமல்ல
எச்சரிக்கை
உன் பிள்ளையை
மகாபாரதம் படிக்கச்சொல்
உனக்கு உதவியாயிருக்கும்......

அப்புறம்....

இது இலையுதிர்காலம்
இங்கு நிழலில்லை

அடிக்கடி இங்கு வந்து
அலையாதே
உனக்கு
வெயில் ஆகாது....

ஏனெனில்
இன்னமும்
நீ
என் மகனல்லவா?......

ஆதவா
20-07-2007, 06:06 PM
வணக்கம் ரிஷி.. நான் படிக்கும் உங்களின் முதல் நீளக் கவிதை. இப்படியும் எழுத முடியுமா என்று யோசிக்க வைத்த கவிதை.

இழந்த மரத்திற்குத்தான் தெரியும் வலியும் வேதனையும்... இலையுதிர் காலங்களுக்கு அடுத்து முடிவொன்று இருப்பதை உணர்த்திக் கொண்டே புத்தியை தீட்டிக் கொண்டிருக்கும் பெரிசுகளுக்கும்.

தந்தை இடும் கடித ஏவலுக்குச் செவி சாய்ப்பவன் இன்றைய மகனாக இருக்கக் காணுவது எங்கோ சில இடங்களில்.... ஏன். என் வீட்டில்கூட காணமுடியாது. ஆனால் கடிதத்தில் அக்கறைகள் அப்பியிருக்கும், அதை சேறென்று குப்பையில் தள்ளுவோர் உளர்... சிலரைப் போல.

அக்கறை மிகுந்த தகப்பனின் கடிதம் (அல்லது அதுபோல) தான் செய்த அல்லது செய்துகொண்டிருக்கிற பிழைகளின் பகிர்வுகள், இன்றைக்கு அவன் இருக்கும் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு பிழையோடிருந்தாலும் புத்திமதிசொல்லுதல்..

இருவேறு இடங்களில் எனக்குப் புரிதல் அற்றுப் போனாலும் மொத்த கவிதை மனதுக்குள்.

சொல்லவந்ததை சொல்லியவிதம் சிலாகிக்கவைக்கிறது மேலும்..

வாழ்த்துக்கள் ரிஷி.

ரிஷிசேது
20-07-2007, 06:52 PM
நன்றி ஆதவா அவர்களே, உறவுகள் வாழ்க்கை முழுவதும்
இயல்பாய் இருப்பது முடியாமல் போய்விடும் அவலம் சொல்லவே நினைத்தேன் . உறவுகளில் அம்மாவும் , மனைவியும் தவிர உண்மையைச் சொன்னால் மற்றவை பெரு வேளைகளில் தடுமாறிப்போகும்
நண்பர்களை உறவுகளாகக் கொண்டால் ஒரு வேளை நம்மோடு இன்னும் கொஞ்ச தூரம் வரக்கூடும்

நீண்ட விமர்சணத்திர்க்கும் அதில் காட்டியிருக்கும் கரிசன*த்திற்கும் நன்றி
ரிஷிசேது

ஆதவா
20-07-2007, 08:15 PM
நண்பரே!
ஒத்த இயல்பாய் அமைந்து வாழும் கூட்டங்களும் உண்டு.. ஆனால் சதவிகிதத்தில் அவை கண்ணுக்குப் புலப்படாத தூரத்தில் இருக்கிறது. எந்த ஒரு உறவும் ஒட்டுவதில்லை. அதாவது ஒழுங்காய்.. அம்மா , மனைவி மட்டும் இதில் விதிவிலக்கென்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்... இருக்கலாம். உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா?

நண்பர்களை உறவுகளாகக் கொள்ளும் உங்கள் கருத்தில் உடன்பாடு எனக்குண்டு..

சில சமயங்களில் மனதைப் பிசைந்து கவிதை கொடுக்க மனமே தயங்கும். வேறு எவராவது ஒருவரின் ரூபத்தில் தாங்கிக் கொண்டிருந்தால் விம்மியழும்.. உங்கள் கவிதை என்க்கு அவ்வாறு..

உறவுப்பாலங்களின் உறுதி எனக்கு அற்றுப்போயிருக்கிறது... நீங்கள் குறிப்பிட்டவைகளாகவும் இருக்கலாம்..

அமரன்
21-07-2007, 09:31 AM
உணர்வுகளை வரிகளில் கொண்டு வந்த ரிஷிக்கு பாராட்டுக்கள். கவிதை அருமை ரிஷி.