PDA

View Full Version : கடுதாசி வாழ்க்கை



அமரன்
20-07-2007, 02:11 PM
பத்து மாதங்கள் சுமந்தது
போதவில்லை என் தெய்வத்துக்கு.
இன்னொரு பத்து மாதத்துக்கு
பத்து ஆண்டுகள் காத்திருந்தது...

சிங்கமென அப்பா சொல்ல
கண்ணே என அம்மா சொல்ல
தங்கையை விரும்பினேன்.

கொஞ்சுதமிழ் பேசுவாள்.
மழலையால் மயங்குவேன்.
மணிப்பாட்டு இசைப்பேன்.
தலையசைத்து கேட்பாள்.

எத்தனை எதிர்பார்ப்புகள்

ஊர்ந்து சென்ற மாதங்களில்
பள்ளி முடிந்த ஒருநாளில்
அழைத்துச் சென்றார் அப்பா
பிரசவ ஆஸ்பத்திரிக்கு..

பூவொன்று மலர்ந்திருக்க
வாடி இருந்தது கொடி.

தங்கை அழவில்லையாம்.

நான் அழுதால் துடிப்பவள்
அழாததற்கு துடிக்கிறாளே..
காரணம் புரியவில்லை.
புரிந்தபோது ரணமானேன்...

முட்களின் வேகத்தில்
கோடுகள் தாண்டினேன்.
அணைத்துக் கொண்டது
கடுதாசி வாழ்க்கை.

இன்று
தங்கச்சிக்குப் பிறந்த நாள்
தரத்தில் குறைவில்லாத
சுரத்தில் நிறைவில்லாத
தங்கச்சிலை பிறந்த நாள்...

மடிமீது வைத்து
தட்டிசொன்ன வாழ்த்தில்
பட்டாம்பூச்சி சிறகடிப்பது
பகிர்வாய் தெரிந்தது..

தொழில்நுட்பம் வளர்ந்தாலும்
தொடர்கின்றது.
எமது கடுதாசி வாழ்க்கை.

ஓவியன்
20-07-2007, 02:34 PM
அமர் என்னையும் உங்கள் வலிகளில் நனைத்துவிட்டதே உங்கள் வரிகள், உங்கள் தங்கைக்கு அப்படி ஒரு குறையை வைத்த ஆண்டவன் கண்ணிருந்தும் குருடன் தான்.........

கொஞ்சுதமிழ் பேசுவாள்.
மழலையால் மயங்குவேன்.
மணிப்பாட்டு இசைப்பேன்.
தலையசைத்து கேட்பாள்.

எவ்வளவு எதிர்பார்ப்புடன் இருந்திருக்கிறீர்கள், நான் கூட எனக்கு ஒரு தங்கை இல்லையே என்று அடிக்கடி ஏங்குவதுண்டு.........

எனக்குத் தான் தங்கையே இல்லை அதனால் என் ஏங்கங்கள் நிறைவேறாதது ஒன்றுமே பெரிய பிரச்சினை இல்லை.
ஆனால் ஏங்கிய உங்களுக்கு தங்கையைக் கொடுத்து இன்னமும் இன்னமும் உங்கள் ஏங்கங்களை நிறைவேற்றாத ஆண்டவன் பொல்லாதவனே!.

இப்போது கவிதைக்கு வருகிறேன்........
மிக அழகாக வார்த்தைப் பிரயோகம் செய்தமைக்கு உமக்கு ஒரு சபாஷ்...


மடிமீது வைத்து
தட்டிசொன்ன வாழ்த்தில்
பட்டாம்பூச்சி சிறகடிப்பது
பகிழ்வாய் தெரிந்தது..

மடியடக்க கணினியினூடு வாழ்த்து அனுப்பியதைச் சொன்ன விதம் அழகு, தங்கையை மடியில் வைத்து வாழ்த்துச் சொன்ன மாதிரி பொருள் தருவது அருமை. நிரம்பவே இரசித்தேன் இந்த வரிகளை.

நான் அழுதால் துடிப்பவள்
அழாததற்கு துடிக்கிறாளே..
காரணம் புரியவில்லை.
புரிந்தபோது ரணமானேன்...

இந்த வரிகள் தான் எனக்கு கவிதையின் கருவைத் தொட வைத்தன, அந்த வகையில் இந்தக் கவிதையின் முதுகெலும்பு இந்த வரிகளே!.
உங்களது அருமையான வரிகளுக்கும் உங்கள் அன்புத் தங்கை மீது நீங்கள் கொண்ட பாசத்திற்கும் எனது பாராட்டுக்கள்.

உங்கள் அன்புத் தங்கையின் பிறந்த நாளுக்கு உங்கள் வாழ்த்துடன் என் வாழ்த்துக்களும் சேரட்டும் அமர்!...................

ரிஷிசேது
20-07-2007, 03:20 PM
வெகு அருமை. பாராட்டுக்கள்

இனியவள்
20-07-2007, 04:08 PM
அருமையான கவி அமர் வாழ்த்துக்களோடு பாராட்டுக்களும் அமர்

aren
20-07-2007, 05:05 PM
அமர் அருமையான கவிதை. கல்நெஞ்சையும் கரையவைத்துவிடும் வார்த்தைகள். பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஆதவா
20-07-2007, 05:15 PM
வாழ்த்துக்கள் அமர்.

கடதாசி என்ற பெயரை இதுவரை நான் கேட்டதில்லை. கடுதாசி என்பதே சரி.. அதுவும் பேச்சுவழக்கில்... எழுத்தில் கடிதம் (நிருபணம்/நிருபம் என்று சொல்வார்களோ?) என்றுதான்..

கவிதை முழுக்க எழுத்துத் தமிழில் (written) இருக்க, "பத்தலை" என்ற வார்த்தை பேச்சு வழக்கில்(Spoken) வந்துவிட்டது.... இடையே செறுகப்பட்டதுபோல.

"பள்ளி மூடிந்த நாள்" அல்ல.. முடிந்த நாள்" அல்லது "மூடிய நாள்"

சரி இனி கவிதைக்குள் செல்வோம். பொதுவாக காதலிக்கு மாங்கு மாங்கென்று கவிதை படைக்கும் நாம் அதில் ஒரு சதவீதமாவது உடன்பிறந்த தங்கைக்கு எழுதுவோமா என்றால் இல்லை... ரத்தபாசம் என்ற சிறப்பு இருப்பதை வாலிபம் மறைத்துக் கொள்கிறது. சூரியன் மட்டுமே போதுமென்று தலைசாய்த்திருக்குமானால் சூரியகாந்தியினால் வாழமுடியாது.... மண்ணில்லையேல் மழையெதற்கு?

பத்துவருட இடைவெளியில் பெறுவது இன்றைக்கு இழுக்காக கருதப்படுகிறது; சிலருக்கு பிள்ளை பெறுவதே.....

பூவொன்று மலர்ந்திருக்க,
வாடி இருந்தது கொடி.....

இது சரிவராதே... பூவைப் பிரசவித்த கொடி என்றும் வாடியிருக்காது.. பத்துமாத வாட்டம் அன்று பொலிவை அல்லவா தந்திருக்கும்.... எந்த ஒரு தாய்க்கும்,

ஆனால் தங்கை அழவில்லை என்று கொடியாகிய தாய் வருத்தப்படுவதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது..... அப்படி ஒரு குழந்தை பிறக்குமானால் அது அதிசயமே...

குழந்தை தன் தாய் வயிற்றில் இருக்கும்போது கொப்பூள்கொடி மூலம் சுவாசிக்கிறது.. (இதுசரியா? இளசு அண்ணா/) அது முதன்முதலாக உலகைக் காணும்போது காற்றுப் பட்டே அழுகிறது... மற்றபடி அழுவதில் வேறெந்த காரணமும் இல்லை.

கடுதாசி அனுப்பிக் கொண்டே இருங்கள்.. ஒவ்வொரு நொடிக்கும் உங்கள் மனக் கணிணீயின் மூலம்....

வாழ்த்துக்கள்...

அமரன்
20-07-2007, 05:24 PM
ஆதவா பிழைகளைச் சுட்டியும் நிறைகளைச் சுட்டியும் என்னை வளர்க்கும் உங்களுக்கு நன்றி... எழுத்துகளில் நீங்கள் சொன்ன தவறுகளைத் திருத்திவிட்டேன்.....குழந்தை பிறந்ததும் அழாதுவிட்டால் அதனால் பேச முடியாது என்று எங்கோ படித்த ஞாபகம் அதனாலேயே...நீங்கள் சொன்ன வரிகள் குடிவந்தது..அது சரியா தவறா என்பது எனக்குத் தெரியவில்லை...தவறெனும் பட்சத்தில் வேறு வரிகளைப் போட்டுவிடுகின்றேன்.
பத்து வருட இடைவெளி என்பது இங்கே இறைவனால் வகுக்கபட்டது ஆதவா.

அன்புரசிகன்
20-07-2007, 05:31 PM
எந்த வார்த்தையை விமர்சிக்க... தங்கைக்காக எழுதியிருக்கிறீர்கள். வாசிக்கும் போதே சிறிது கண்கலங்கிவிட்டேனய்யா...

பாராட்டுக்கள்...

ஆதவா
20-07-2007, 05:33 PM
ஆதவா பிழைகளைச் சுட்டியும் நிறைகளைச் சுட்டியும் என்னை வளர்க்கும் உங்களுக்கு நன்றி... எழுத்துகளில் நீங்கள் சொன்ன தவறுகளைத் திருத்திவிட்டேன்.....குழந்தை பிறந்ததும் அழாதுவிட்டால் அதனால் பேச முடியாது என்று எங்கோ படித்த ஞாபகம் அதனாலேயே...நீங்கள் சொன்ன வரிகள் குடிவந்தது..அது சரியா தவறா என்பது எனக்குத் தெரியவில்லை...தவறெனும் பட்சத்தில் வேறு வரிகளைப் போட்டுவிடுகின்றேன்.

நீக்கம் வேண்டாம் அமரன்./... அது என் கருத்து மட்டுமே.. இளசு அண்ணா தக்க பதில் அளிப்பார் என்று நினைக்கிறேன்.

ஷீ-நிசி
20-07-2007, 06:37 PM
தங்கைக்கோர் கீதம் அறிவேன்... தங்கைக்கோர் கவிதை! மிக அழகாக கடுதாசியில் வளர்ந்த அதீத பாசம்.. அதன் பால் உண்டான கவிதை...

வாழ்த்துக்கள் அமரன்!

ஓவியன்
20-07-2007, 06:44 PM
கடதாசி என்ற பெயரை இதுவரை நான் கேட்டதில்லை. கடுதாசி என்பதே சரி.. அதுவும் பேச்சுவழக்கில்......
ஆதவா!

கடதாசியா?, கடுதாசியா எது சரியென்று தெரியவில்லை.............
ஏனென்றால் ஈழத்தில் நாங்கள் கடதாசி என்று தான் படித்த ஞாபகம், கடுதாசி என்பதை பேச்சு வழக்காக நினைத்திருக்கிறேன்.

ஆதவா
20-07-2007, 06:52 PM
ஆதவா!

கடதாசியா?, கடுதாசியா எது சரியென்று தெரியவில்லை.............
ஏனென்றால் ஈழத்தில் நாங்கள் கடதாசி என்று தான் படித்த ஞாபகம், கடுதாசி என்பதை பேச்சு வழக்காக நினைத்திருக்கிறேன்.

கடுதாசி என்ற வழக்கு உண்டு ஓவியன்..... ஒருவேளை ஈழத்தில் கடதாசி என்று சொல்லுவார்கள் என்று நினைக்கிறேன். என்றாலும் அவை அனைத்தும் பேச்சு வழக்குகளே..

அமரன்
20-07-2007, 07:42 PM
உற்சாக மருந்து தந்த ஓவியன்,ரிஷி,இனியவள் ஆரென் அண்ணா, அன்புரசிகன்,ஷீ அனைவருக்கும் நன்றிகள்.

ஓவியன் கவிதையை பிரித்துப் பார்த்து அழகாக ஆழமாக, பின்னூட்டமிட்டுள்ளீர்கள். நான் என்ன நினைத்து வரிகளை எழுதினேனோ அவற்றை அப்பட்டமாகச் சொல்லி என்னை மீண்டும் ஒரு முறை கலங்கடித்து விட்டீர்கள் நன்றி.

அன்பு உங்கள் கலங்கிய கண்கள் பாசத்திலும் கவிதையிலும் எனது வெற்றியைக் காட்டுகின்றது.

அனைத்து நெஞ்சங்களுக்கும் மீண்டும் எனது நன்றிகள்.

அக்னி
20-07-2007, 07:48 PM
தூரம் பிரித்து வைத்த பாசம்...
கொடிது...
நன்னாளில், நாமின்றி...
கனவில், விம்பங்களாய் கலக்கும் சந்தோஷம்,
வேதனையின் உச்சம்...
அதனைத்தாண்டியும், வேதனையைப் புதைத்து, வார்த்தைகளில் கலகலத்து,
எமக்குள் அழுது, உறவுகளோடு சிரித்து,
உணர்கின்றேன் அமரன் நானும் இந்த வேதனையை...
இன்னும் எத்தனையோ உள்ளங்களோடு...

மூன்று முறை வாசித்த போதிலும், கவிதையை விமர்சிக்கவோ, கருத்திடவோ முடியவில்லை அமரன்...
அதனால், வாழ்த்துக்கள்... உங்களுக்கும், எங்கள் தங்கைக்கும்....

சிவா.ஜி
21-07-2007, 04:56 AM
கவிதை வரிகளும், கருவும் கண் கலங்க வைத்துவிட்டன அமரன். மழலை என்பது எத்தனை இன்பம்,அது கிட்டாமல் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் எவ்வளவு வேதனையடந்திருப்பீர்கள்.. அத்தனை சோகத்தையும் வார்த்தைகளில் வடித்து எங்களையும் கலங்கவைத்துவிட்டீர்கள். ஒரு கவிதையின் வெற்றி அது சரியாக சென்றடைவதில்தான் இருக்கிறது. அந்த வகையில் இது வெற்றிபெற்ற வரிகள். பாராட்டுவதை விட உங்களோடு உணர்வுகளை பகிர்ந்து கொள்வதுதான் சிறந்தது. ஓசையில்லா அந்த புல்லாங்குழலுக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

lolluvathiyar
21-07-2007, 05:36 AM
பிறந்து உறவாடாத ஒரு தங்கைக்கு எழுதும் முகவரி இல்லா கடிதம் வடித்த அமரன் உன்மையில் அருமை

அமரன்
27-07-2007, 01:30 PM
நன்ரி அக்னி,சிவா,வாத்தியார்.

சிவா அழகான பின்னூட்டம். ஒரு கவிதையின் வெற்றி அது சரியாக சென்றடைவட்ஜில்தான் இருக்கிறது. உண்மைதான் சிவா. எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதுவது என்பது மிகவும் முக்கியமானது. கடினமானதும் கூட. என்னுள் இருந்த சில சந்தேகங்கள் தீர்த்த வரி இது. நன்றி நண்பனே...!

அக்னி பலசொற்களில் நான் சொன்னதை சொற்ப சொற்களில் சொல்லிவிட்டீர்கள். பாராட்டுக்கள் தோழா...!