PDA

View Full Version : தந்தை மகனுக்காற்றும்....



ரிஷிசேது
19-07-2007, 07:10 PM
அப்பா எப்படி இருக்கிறீர்கள்?
கூட்டுப்புழுவை ரசித்தபடி
ஆரம்பித்த நம் சினேகம்
மீட்டர்பெட்டியில் கட்டிய
குருவிக்கூட்டைக் கலைத்ததில்
முடிந்துபோனது-பின் நாம்
அப்பா பிள்ளைகளானோம்....

அப்பா ஞாபகமிருக்கிறதா?
நடுங்கும் பயத்தோடு
தவளை தின்னும் பாம்பை
அருகிருந்து படம்பிடித்தோமே
அந்த அசாத்திய தைரியம் இப்போது
எனக்குக் கொஞ்சம் விட்டுத்தான் போயிற்று
நீங்களில்லாது....

அலையடித்த ஈரம் காய்வதற்குள்
கவிதை சொல்லும்
போட்டி வைத்துக்கொள்வோமே
அதில்தான் நான்
கவிதைச்சூத்திரம் கற்றேன்...
இப்போது கவிதைசொல்லிகளிடம்
போட்டியிட அதுதான் உதவுகிறது

உங்களுக்கு உடன்பாடில்லா
என் கவிதைகளைத்தான்
நான் இப்போது விற்றுக்கொண்டிருக்கிறேன்
உடைந்த பலூன் வைத்து விளையாட முயலும்
பலூன்காரனின் குழந்தைகள் போல...

அம்மாவின் பட்டுப்புடவையில்
நீங்கள் வண்ணம் ரசித்தபோது
நான் அதில் நெளியும்
செத்தபுழுக்களின்
நைந்த உடல் கண்டேன் -
அப்போதுதான் நீங்களும் நானும்
வேறுபட ஆரம்பித்தோம்
கவிதைகளாலும்...

அப்பா காலம் எவ்வளவு வேடிக்கையானது
பிரிவே இல்லாத உறவுகளே இல்லையா?

ஞாபகமிருக்கிறதா நம்
மொட்டைமாடி இரவுகளும்
சம்பாஷணைகளும்..?

உங்களுக்குப்பிடிக்காத என்
கவிதைகளைப் போலத்தான்
உங்களுக்கு அவளையும் பிடிக்கவில்லை
அவள் அவளுக்குப் பிடித்தவர்களையல்லவா
விட்டு விட்டு வந்திருக்கிறாள்?

நீங்கள் சொல்வீர்களே
எப்போதும் ஆசானாய் இருக்க முயலும்
உறவுகள் வெறுக்கத்தக்கவை - நீயே
உனக்கு ஆசானாயிரு என்று
அதில் எனக்கு சம்மதம்
ஆனால் உங்களுக்கு?....

அப்பா நான் என் குழந்தைக்கு
இப்போது மொட்டைமாடி
இரவுகளில் நகரும் நட்சத்திரங்களையும்
தேயும் நிலவையும்
ரசிக்க சொல்லித்தருகிறேன்...

அப்பா என்னோடு வந்துவிடுங்கள்
காலம் இன்னமும்
ரசிக்கமுடிந்ததாய்த்தானிருக்கிறது
என் வீடு மீட்டர் பெட்டிகளில்லாதது
ஆனால் இங்கே நிறைய மரங்களும்
பூக்களும் பறவைகளுமுண்டு ...

அப்பா எனக்கு நிறைய
நம்பிக்கையிருக்கிறது
நீங்கள் வருவீர்கள் என்று..
ஏனெனில்,
இன்னமும் நீங்கள்
தூறலில் நனையும்
வானவில்லையும்
இரவில் நகரும்
நட்சத்திரங்களையும்
ரசித்திருக்கிறீர்களாமே...

ஓவியன்
19-07-2007, 07:18 PM
ரிஷி!
கனமான ஒரு கவிதை!, ஒரு கதையையே கவிதைகளாக.................
மிகவும் ரசித்தேன் என்பதைவிட என்னையும் வலிகளில் பங்கெடுக்க வைத்தது உங்கள் வரிகள்!.

அருமையாக* எழுதுகிறீர்க*ள் − உங்க*ளுக்கு என் வாழ்த்துக்க*ளும் பாராட்டுக்க*ளும்...........

இனியவள்
19-07-2007, 07:29 PM
கவிதை அருமை ரிஷீ

காதல் திருமணத்தால் தந்தை மகனிடையே
ஏற்பட்ட பிரிவினை அழகாகவும் திரும்பி
வருவாரா தந்தை வருவார் எனது ஆசை
என ஆசையோடு காத்திருக்கும் மகனுக்கு
அப்பாவான மகன்

வாழ்த்துக்கள் ரிஷீ

அன்புரசிகன்
19-07-2007, 07:38 PM
மிக மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள். மனம் ஒருமுறை கலங்கி விட்டது. உங்களுக்கு 50 இ−பணம்.

அமரன்
20-07-2007, 08:56 AM
ரிஷீ.ஒரு கதையை கவிதையாகச் சொல்லி கனமாக்கிவிட்டீர்கள்.

கூட்டுப்புழு, மீட்டர் பெட்டி என நிகழ்கால வாழ்க்கையை வைத்து பின்னியதோடு.
பட்டுப்புடவை வாங்கிக்கொடுத்து ரசிக்கும் மனிதர்களுக்கு பட்டுப்புழுவின் மரணம் தெரிவதில்லையே.அசத்தியதோடு..

அப்பா சொன்னதை மகன் கடைப்பிடிக்க அப்பா மறந்ததை சாடியதோடு..
பார்க்கையில் விஞ்சி நிற்கிறது பாசம்.
பாராட்டுக்கள் ரிஷி.

ரிஷிசேது
20-07-2007, 03:17 PM
பாராட்டுகளும் வாழ்த்துகளும் தந்த அனைவருக்கும் நன்றிகள் தனித்தனியே...
ரிஷிசேது

ஆதவா
20-07-2007, 06:17 PM
தந்தைக்குத் தனயன் கடிதமோ?

ஒரு உறவை, அதுவளர்ந்த முறையை, வாழ்க்கைச் செறிவை, அழகுபட விவரித்திருப்பது கவிதைகளில் இன்று காணூகிறேன். வாழ்த்துக்கள் ரிஷி.

தந்தை, ஒவ்வொரு மகனுக்கும் முதல் நண்பன். அதுஅது அவர்கள் நடந்துகொள்ளும் முறையில்.. சில இடங்களில் எங்கே இருவருக்கும் ஒரு பெரும் பிரிவினை (Breakaway) நடக்கிறது என்பதை அந்தந்த இடங்கள் ஆணியடித்துச் சொல்லும் விதம்... அவரின்றி அணுக்களும் குறையும் என்ற நம்பிக்கை வந்த விதம்.. எந்த இடத்தில் இருவருக்கும் நினைவுகள் பிரிந்தது என்று சொல்லிய முறை... அனைத்தும் புதுமை ரிஷி.

பலூன்காரனின் குழந்தை - நல்ல ஒப்புமை நிறைந்த வரிகள்... அத்தோடு புழுக்களின் நைந்த உடலை திறமையாகவும் வெளிப்படையாகவும் சொல்லியது...

நண்பராக இருந்தாலும் ஏதோ ஒரு மூலையில் உறங்கிக் கொண்டிருக்கும் தந்தை என்ற அதிகாரம் ஓங்கியிருக்கத்தான் செய்யும். காதலிலும்..

சில மாற்றங்களுக்கு என்றுமே மனம் விரும்பும்... பால்யகாலத்தில் பாம்பு பிடித்த கதைகள் தனயனுக்கும் நேராதா என்று ஏங்கும் தந்தைகள் தம் தந்தைகளை நினைத்துக் கொள்கிறார்கள்.. எங்கோ தொலைந்துபோன சில உறவுகள் தந்தையை நினைத்து அழுவதை, மனம் தைரியத்தை விட்டு ஒழித்ததைக் கண்டு உணராமலில்லை.

கவிதை அழ்கு.. சொன்ன காட்சியழகு..

வாழ்த்துக்கள் ரிஷி

lolluvathiyar
21-07-2007, 05:02 AM
90 சதவீதம் கவிதைகள் காதலுக்கு தான் எழுதபுகின்றன*
5 சதவீத கவிதைகள் தாய்க்கு எழுத படுகின்றன*
5 சதவீத கவிதைகள் இயற்கை, சமூகம், நாடு, மொழி இவற்றிக்கு எழுத படுகின்றன*
தந்தைக்கும் கவிதை எழுதிய கவிதை நான் படித்தது இதுவே.
நன்றி ஐயா

சிவா.ஜி
21-07-2007, 06:25 AM
ஒரு காயம் பட்ட தனையனின் உள்ளத்தில் உள்ளதை வெகு அழகாக வடித்திருக்கிறீர்கள். காதல் திருமணம் தந்தையையும் தனையனையும் பிரித்தாலும் மீண்டும் ஒரு இணைப்பு நிகழாதா என் ஏங்கும் மகனின் மனப்போராட்டம் அருமையாக வெளிப்பட்டிருகிறது. மனமார்ந்த பாராட்டுக்கள் ரிஷி.