PDA

View Full Version : வீடு...



ரிஷிசேது
18-07-2007, 05:59 PM
என் வீடு உல்லாசமானது
அங்கு எந்த இரைச்சலுமில்லை
எப்போதும் வாலாட்டும் ஓர் நாட்டுநாயும்
அவ்வப்போது வந்துபோகுமொரு பூனையும்
இன்னபிற மாடுகன்றுகளும்-எந்தவித
ஆக்கிரமிப்பில்லாமல் விடியுமென் பொழுதுகளும்
என் வீடு மிக உல்லாசமானது


கிராமத்து வீட்டு முற்றம்-வானமே
கூரையாய் நட்சத்திரங்களே விளக்குகளாய்
என் வீட்டு முற்றம் முழுக்க மல்லிகைபூக்கள்
மழையும் சூரியனும் அடிக்கடி வீடு வந்துபோகும்
அப்போதெல்லாம் படுத்தவுடன் தூக்கம் வரும்
நகரத்தின் சாயம் பூசிய என்
புதியவீடு கிராமத்திற்கு
பொருந்தாமல் போயிற்று
சாண வாசமில்லாத்தரை
வழுக்கிப்போயிற்று ஆறே மாதத்தில்
என் அப்பத்தாவை


வீடென்பது வெறும் வண்ணச்சுவர்களாலோ
வழுக்கும் தரையாலோ நிச்சயிக்கப்படுவதல்ல
வீடு வரையரையில்லா சந்தோஷத்தாலானது-ஒரு
அன்யோன்யமும் இயல்பாய் இருத்தலுமானது
என் பழைய வீட்டில் எத்தனையோமுறை நாய்களும்
கோழிகளும் வந்துபோயின அசிங்கம்கூட செய்தன
என் புதியவீடு பலத்த பாதுகாப்பிற்குட்படுத்தப்பட்டது
எல்லா வழிகளும் எப்போதும் அடைபட்டும்
தானியங்கி கதவுகள் கொண்டதாயுமிருக்கிறது


தொலைகாட்சியில்
தொலைந்துபோயிற்று என் வீடு
இப்போது நகரமுமற்று கிராமமுமில்லா
ஒரு கொலையுண்ட நிலையிலிருக்கிறது
முற்றத்தை வாஸ்து எடுத்துக்கொண்டான்
குழந்தைகள் கணினியிலும் சுட்டியிலும்
விளையாடின


நான் என் பழைய வீட்டின் வாசனைகளை தேடி
இறந்துகொண்டிருக்கிறேன்
அந்த வீடு மிக உல்லாசமானது....

aren
18-07-2007, 06:04 PM
அருமையான கவிதை வரிகள் ரிஷி. ஆமாம் வாழ்ந்த வீட்டையும் அதன் சுற்றுப்புறத்தையும் மறப்பது என்பது அவ்வளவு எளிதல்ல.

கவிதை நன்றாக வந்திருக்கிறது. தொடருங்கள். தொடர்ந்து கலக்குங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஓவியன்
18-07-2007, 06:10 PM
ரிஷி!

கிராமத்து சுகங்களை இந்த நகரத்து நரக வாழ்க்கையில் ஒரு முறை வாழ்ந்து பார்த்தவன் தான் அறிவான்...............
நானும் கிராமத்திலிருந்து நகரம் வந்தவன் உங்கள் கவி வரிகளின் யதார்த்தம் உறைத்த*து.........

வாழ்த்துக்கள் ரிஷி − இன்னும் நிறைய எழுதுங்கள் நண்பரே!.

அமரன்
18-07-2007, 06:16 PM
தாயக்த்தில் எனது கூடு பற்றிய நினைவுகளைத் தட்டி எழுப்பியது கவிதை...நன்றி ரிஷி..

ரிஷிசேது
18-07-2007, 06:38 PM
நன்றிகள் ... அமரன், ஒவியன் மற்றும் ஆரென் அவர்களுக்கு..

alaguraj
18-07-2007, 07:18 PM
சபாஷ், மிகவும் நன்றாக ஆரம்பித்துள்ளீர்கள். தொடருங்கள்.....
ஆரென், ஓவியன், அமரன்..இன்னும் எத்தனையோ மோதிரக் கைகளால் குட்டுடன்(பாராட்டு) தொடர வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
19-07-2007, 05:15 AM
வீடு என்பது எப்படி இருக்கவேண்டுமென்று உங்கள் கிராமத்து வீ சொல்கிறது.
எப்படி இருக்கிறதென்று நகர வீட்டின் விவரிப்பு சொல்கிறது.
அப்பத்தாவைப்போல் எத்தனை கிராமத்து இதயங்கள் நகர நரகத்துக்கு வந்து மூச்சு முட்டிக்கொண்டிருக்கின்றன.

என் வீடு உல்லாசமானது
அங்கு எந்த இரைச்சலுமில்லை
எப்போதும் வாலாட்டும் ஓர் நாட்டுநாயும்
அவ்வப்போது வந்துபோகுமொரு பூனையும்
இன்னபிற மாடுகன்றுகளும்-எந்தவித
ஆக்கிரமிப்பில்லாமல் விடியுமென் பொழுதுகளும்
என் வீடு மிக உல்லாசமானது


இப்படி ஒரு வீடிருந்தால் எல்லோரும் அன்பு செய்வார். எல்லோரும் எல்லோரையும் நேசிப்பார். அழகான ஆழமான கவிதை.
பாராட்டுக்கள் ரிஷிசேது. இன்னும் நிறைய கொடுங்கள்.