PDA

View Full Version : சிறுவன் தந்த பாடம் -மீனாகுமார்
18-07-2007, 04:36 PM
பெங்களூரூவில் நான் வாழ்ந்த போது, ஒருநாள் என் நண்பனைக் காணப் புறப்பட்டேன். ஜெய்நகர் நான்காவது பிளாக்கிலிருந்து கிளம்பி என் நண்பனின் வீடு இருக்கும் ஹோரமாவு பகுதிக்கு விரைந்தேன், என்னுடைய இளஞ்சிவப்பு நிறமுடைய ஹோண்டா டையோ ஸ்கூட்டரில்.

என்னதான் சொல்லுங்க.. சன்கிளாஸ் கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டு, இரண்டு சக்கர வாகனத்தில் ஸ்டைலாக காலை மேலே தூக்கி அமர்ந்து, கிக் ஸ்டார்ட் செய்து பின் காலை ஒதுக்கி வைத்து, வலது கையினால் அந்த ஆக்ஸிலரேட்டரை விர்ர்ர்ருருக்கென்று திருகிய பின்னர் நம் முகத்தில வீசிடும் காற்று நம் தலைமுடியை சற்றே விலக்கிச் செல்லும் நேரத்தில் நாம் அந்த சாலையில் வழிந்தோடிடும் பிற வாகனங்களுக்கிடையில் நம் வண்டியைச் செலுத்திச் செல்லும் சுகம், விமானமே ஓட்டியிருந்தாலும், வேறு எதிலுமே வராதப்பா.

ஹோசூர் ரோட்டைக் கடந்து பழைய-மெட்ராஸ் சாலையில் காற்றைக் கிழித்துச் சென்று கொண்டிருந்தேன். அன்று ஞாயிற்றுக்கிழமை காலை பதினோறு மணி இருக்கும். நானும் என் நண்பனின் விசயமாக ஆழ்ந்த சிந்தனையிலே சென்று கொண்டிருந்தேன். சற்றே தூரத்தில் ஒரு சிறுவன் லிப்டுக்காக கையை உயர்த்தினான்.

பொதுவாக ரோட்டில் செல்லும் போது நம்மை யார் எதற்க்காக சீண்டினாலும் கண்டு கொள்ளாமல் செல்வதே நல்லது. அந்த அடிப்படையிலேதான் பல நாள் எந்தப் பிரச்சனையிலும் சிக்காது வாழ்ந்து கொண்டிருந்தேன். ஆனால் இன்று என்னவோ.. அந்த சின்னப் பையனைப் பார்த்தவுடன் மனம் சரியாக 1.5 விநாடிகளுக்குள் சரிந்து விட்டது. சர்ர்ர்ரரக் என்று நிறுத்தினேன். எங்கப்பா போகணும் - வினவினேன். ஐ.டி.பார்க் என்றான். நான் ஐ.டி.பார்க் போகவில்லையப்பா.. ரிங்-ரோட்டு பாலத்திலே இடது புறம் திரும்பிவிடுவேனே- என்றேன். அப்படியென்றால் அந்தப்பாலத்தின் பக்கத்தில் இறக்கிவிட்டுவிடுவீர்களா என்றான். நானும் சரி என்று அவனை பின்னால் அமர வைத்து புறப்பட்டேன். நான் பேசியதிலிருந்து நான் தமிழ்தான் பேசுவேன் என்பதை அறிந்து கொண்டான். அண்ணே நான் சீக்கிரமா ஐ.டி.பார்க் போகணும்ணே என்று ஆரம்பித்தான். அப்படியா, என்ன விசயம் என்றேன். எனக்கு ஒரு தம்பி இருக்கிறான். அவனுக்கு இன்று ஜெய்நகர் ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் சின்ன இருதய ஆப்பரேசன். அதற்கு பணம் தேவைப்பட்டது. எங்களுக்குத் தெரிந்த ஒருவர் ஐ.டி.பார்க்கிலே இருக்கிறார். அவர் தருகிறேன் என்றார். அதனால் அப்பணத்தை வாங்கச் செல்கிறேன் என்று கூறினான்.

அப்படியா என்ற நான் உங்க அப்பா பணம் கொடுக்கவில்லையா என்றேன். அதற்கு -எங்க அப்பா எங்க குடும்பத்துல இல்லை. அம்மா மட்டும் தான். அவர்கள் தம்பியைப் பார்த்துக் கொண்டு ஆஸ்பத்திரியில் இருக்கிறார்கள். என்னைப் போய் 800 ரூபாய் பணம் வாங்கிவரச் சொன்னார்கள் என்றான். மேலும் இன்னும் 3 மணி நேரத்திற்க்குள் செல்ல வேண்டும் என்றும் கூறினான். அவன் வேறு எதுவும் சொல்லவில்லை. நானும் சற்று நேரம் மௌனமாக இருந்தேன்.

ஒரு நிமிடம் கரைந்திருக்கும். அச்சிறுவனை இறக்கிவிடும் பாலம் கண்ணல் பட்டது. என் மனது அவனது நிலையை விரிவாக எண்ண ஆரம்பித்தது. ஐ.டி.பார்க் இன்னும் 10-15 கிலோமீட்டருக்கு மேல் இருக்கக்கூடும். இவன் இனி பஸ்ஸோ, இல்லை என்னைப்போல் இன்னொருவரையோ பிடித்து ஐ.டி.பார்க் போய் அவரைப் பார்த்து, திரும்பி ஜெய்நகருக்கு செல்வதற்க்கு இன்னும் குறைந்தது 5-6 மணி நேரம் பிடிக்கும். அச்சிறுவனைப் பார்க்க உண்மையிலேயே பாவமாக இருந்தது. சரி, இச்சிறுவனுக்கு நாமே உதவி பண்ணினால் என்ன என்று மனம் எண்ணியது. ம்ம்... என்னிடம் இப்போது 200 ரூபாய் தான் உள்ளது. சரி இவனுக்கு நாம் 500 ரூபாய் உதவி செய்யலாம் என்று முடிவு செய்தேன். ஆனால் இவன் கூறுவதை எப்படி நம்புவது என்று மனது சற்று யோசித்தது. அவன் என்னிடம் உரையாடிய யாவும் என் கண் முன்னே வந்தது. முதன்முதல் உரையாடல் மட்டுமே அவன் ஆரம்பித்தான். பின்னால் முக்கால் வாசி பாகம் நானே அவனைக் கேட்டுத் தெரிந்து கொண்டது.. ஆகையால் அவன் மீது எனக்கு 80 சதவிகிதம் நம்பிக்கை பிறந்தது. சரி அவனது நிலை உண்மையானால் என் உதவி அவனுக்கு சரியான நேரத்தில் செய்யப்பட்டது. அப்படியே அவன் ஏமாற்றினாலும் 500 ரூபாய் தானே என்று எண்ணினேன். 500 ரூபாய் ஏமாற்றம் தக்க நேரத்தில் செய்த உதவியை விட சிறியதாக தோன்றியது. பாலத்தின் மேலே செல்ல வேண்டிய என் வாகனம் இப்போது நேரே சென்று அடுத்த கடைத்தெருக்கள் ஏதேனும் தென்படுகிறதா என வேய்ந்தது.

சுமார் பத்து நிமிட பயணங்களுக்குப் பின் என்னுடைய ஏடிஎம் கார்டை மிஷின் வாங்கிக் கொண்டு 500 ரூபாயைத் துப்பியது. அதை நான் அச்சிறுவனிடம் கொடுத்து, நீ ஐ.டி.பார்க்கெல்லாம் போக வேண்டாம். இந்த பணத்தை வைத்துக் கொள் என்று 500 ரூபாயை அவனிடம் திணித்தேன். அவன் முகத்தில் மலர்ச்சி. அவனை ஜெய்நகருக்கு போகும் பாதையில் உள்ள பேரூந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டு என் நண்பனின் வீட்டை நோக்கி விரைந்தேன். மனது லேசாக இருந்தது.

நண்பனின் வீட்டை அடைந்த பின் அவனிடம் இக்கதையைக் கூறினேன். நான் எதிர்பார்க்கா வண்ணம் அவன் விழுந்து விழுந்து சிரித்தான். நூறு சதவிகிதம் நீ ஏமாந்திருக்கிறாய் என்று அடித்துக் கூறினான். நான் மீண்டும் அச்சம்பத்தினை திருப்பிப் பார்த்தேன். இப்போது 50 சதவிகிதம் ஏமாற்றியிருப்பது போல் தெரிந்தது. உண்மை தெரியாவிட்டாலும் நான் ஏமாந்து விட்டேன் என்று என்னால் உணர முடிந்தது. சிறிதளவு கோபம் வந்தது. ஆனால் இதை நம்பவே முடியவில்லை என்னால்.

நூதன திருட்டு பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். இதுவும் அந்த வகைகளில் ஒன்றோ.. ஒரு சிறு பிசகு கூட இல்லாமல் மிகவும் நேர்த்தியாக என்னிடம் நடித்திருக்கிறானா அச்சிறுவன். கண்டிப்பாக அவன் பின்னால் இருந்து யாரோ தான் அவனை இயக்கியிருக்க வேண்டும். இந்த திருட்டை யோசித்தவர்களைப் பாராட்ட வேண்டும் போல்தான் இருந்தது.

வாழ்வில் மீண்டும் கற்ற நீதி- ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றத்தான் செய்வார்கள்.

mgandhi
18-07-2007, 05:43 PM
பாத்திரம் அறிந்து பிச்சை இடவேண்டும்.

மனோஜ்
18-07-2007, 06:02 PM
இது ஒரு படிப்பினை
இதனால் உண்மையாக உதவுதற்கும் மனம் வருவதில்லை
உணர்ந்து செயல் படுதல் நலம்

தங்கவேல்
19-07-2007, 03:42 AM
விழித்துகொண்டு இருக்கும்போதே பறித்துக்கொள்ளும் உலகம் இது. மீனாகுமார் உங்கள் அனுபவம் எங்களுக்கு படிப்பினை...

aren
19-07-2007, 03:56 AM
இதுவே உண்மையாகவும் இருந்திருக்கலாம். அவனுக்கு பணம் தேவைபட்டிருக்கலாம். எப்படி அவன் உங்களை ஏமாத்தினான் என்று உறுதியாக சொல்கிறீர்கள்.

அமரன்
19-07-2007, 08:24 AM
ஆரென் அண்ணா 500ஐக் கொடுத்ததும் சொல்லி விட்டுப் புறப்படுகின்றானே....அவனுக்குத் தேவை 800 அல்லவா....?
நல்ல படிப்பினைக் கதைமூலம் சொன்ன மீனாகுமாருக்கு நன்றி.

Gobalan
21-07-2007, 03:41 PM
பெரிய நகரங்களில் இது சாதரணமாக நடக்கும் விஷயம் தான். சின்ன பிள்ளைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு எப்படி அப்பாவி தனமாக முகம் வைத்து கொண்டு பேசி வருவோர், போவோர்களை ஏமாற்றவேண்டும் என்று கற்று கொடுக்கபடுவார்கள். இது போல் தான் என் நண்பன் மும்பையில் பல வருடங்கள் முன் ஏமாற்ற பட்டான்.

அவன் கூட்டமாக இருக்கும் லோகல்ரயிலில் வீ.டீ. யிலிருந்து டாணே துரிதவண்டியில் போய் கொண்டிருக்கும் போது, பக்கத்தில் ஒரு சின்ன பையன் நிற்க்கவும், ஹேண்டில்லை பிடிக்ககூட இடம் இல்லாமல், என் நண்பனின் பந்தலூன்னை பிடித்து கொண்டு வந்து இருக்கிறான். அந்த வண்டி போகும் வேகத்தில் அப்பப்போது கை விட்டு விட்டு, திரும்ப பிடிப்பதுமாக இருந்திருக்கிறான் அந்த பையன். அதை கவனித்த என் நண்பன் சின்ன பையன் தானே என்று இரக்கம் கொண்டு அதை பெரிதாக நினைக்காமல் விட்டு விட்டான். ஆந்த பையன் இறண்டு ஸ்டாப்புகள் முன்னே இறங்கிருக்கிறான். டாணே அடைந்து என் நண்பன் ஸ்டேஷன் வெளியே உள்ள ப்ஸ் ஸ்டாப்பில் அவன் போக வேண்டிய ப்ஸ்ஸில் ஏறிய பிறகு டிக்கட் வாங்குவத்ற்க்காக பர்ஸ்ஸை பின் பாக்கட்டிலுருந்து எடுத்திருக்கிறான். அப்போது தான் அவனுக்கு தெரிந்திருக்கிறது அங்கு பர்ஸ் இல்லை ஆனால், அதே அளவு உள்ள ஒரு சின்ன கார்ட−போர்ட் அட்டை சொரிகிருப்பது. அவனுக்கு ஷாக்! எவ்வளவு நேர்த்தியாக தன் பாக்கட்டை அடித்திருக்கிறார்கள் என்று. அவன் பர்ஸ்ஸை எடுப்பதும் மற்றும் இல்லாமல், அந்த பாக்கட்டில் ஒரு அதே அளவு கார்ட−போர்ட் அட்டையை வேறு சொறிகிருக்கிறார்கள். இத்தனைக்கும் என் நண்பன் மும்பையிலேயே பிறந்து வளர்ந்தவன். அவன் அந்த சின்ன பையன் தான் செய்திருப்பான் என்று மிக ஆணித்திறமாக நம்புகிறான். இது நடந்து 20து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. சின்ன பிள்ளைகளை வைத்து ஏமாற்றுவது பல வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது. முன்பு மும்பை, டில்லி போன்ற பெரிய நகரங்களில் நடந்த கூத்து இப்போது பாரதம் முழுவதும் பரவி இருக்க கூடும்.

நன்றி.

இதயம்
22-07-2007, 04:56 AM
கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவுதல் மிக அவசியம். மனிதனின் இரக்க குணத்தை பயன்படுத்தி இன்று பல தொழில்கள் நடக்கின்றன, பிச்சையெடுப்பதையும் சேர்த்து..! சில நேரங்களில் நம் இரக்க குணத்தால் உதவிவிட்டு அது நம்மை ஏமாற்ற செய்யப்பட்ட உத்தி என தெரிய வரும் போது மனம் மிகவும் வருந்தும். அதன் பின் நல்லவர்கள் கஷ்டத்தில் இருந்தால் கூட உதவ தயங்குவோம்.

நாம் உதவும் போது அந்த உதவி சரியாக போய் சேருகிறதா மற்றும் பயனை அடைகிறதா என்று உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது. காரணம், உதவினோம் என்ற மன திருப்தியை விட, ஏமாந்துவிட்டோம் என்ற குற்ற உணர்ச்சி மிக கஷ்டத்தை கொடுக்கும். நம் உதவியின் பயனை உறுதிப்படுத்த சூழ்நிலையோ, இடமோ சரியாக அமையா விட்டால் கடவுளை சாட்சியாக வைத்துவிட்டு போய்விடுவது தான் சிறந்தது. ஆனால், உறுதிப்படுத்தப்படாத உதவிகள் ஏமாற்றுபேர்வழிகளை ஊக்கப்படுத்திவிடும் என்பதை மறந்து விடக்கூடாது.

ஓவியன்
22-07-2007, 05:49 AM
பலருடைய அனுபவப் பகிர்வுகள் என்னைப் போன்றோருக்கு உதவியாக இருக்கும்.....

நன்றிகள் அனைவருக்குமே........

சிவா.ஜி
22-07-2007, 01:43 PM
இதயம் அவர்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி. இரக்க குணத்தையே இளிச்சவாய்த்தனமாக எடுத்துக்கொள்ளும் ஏமாற்றுக்காரர்கள் நிறைய உண்டு. எனவே பாத்திரமறிந்து பிச்சையிடுவதுதான் சிறந்தது.

விகடன்
27-07-2007, 02:31 PM
இப்படியான நேரங்களில் ஒன்றுமே செய்யமுடியாது மீனாகுமார். உன்மையாக இருந்துவிட்டால் என்றொரு ஐயம் இருக்கிறதல்லவா?

இதற்கு ஒரே ஒரு வழி, அவர்களின் கைகளில் பணமாக கொடுக்காது பொருளாக அல்லது சேவையாக கொடுப்பதே. அதாவது, பசி என்பவனுக்கு உணவாக வாங்கி கொடுட்த்தல், இந்தச் சிறுவனின் பிரச்சினைக்கு வைத்தியசாலை சென்று பணத்தி கட்ட முற்படல் போன்றவை.