PDA

View Full Version : அம்மாவின் ஆசை....தங்கவேல்
18-07-2007, 01:04 PM
அரசு உயர்நிலைப்பள்ளி. ஆறாம் வகுப்பு. நீண்ட கூரைக்கொட்டகை. பெரு மணல். அதில் மரப்பலகை. தெற்கு புறம் எனது வகுப்பு மாணவர்களின் சேமிப்பு காசில் வாங்கி பெயிண்ட் அடித்த பிளாக் போர்டு. அடுத்தவாறு சமையல் அறை. சுடச்சுட மதிய சாப்பாடு மணக்க மணக்க தயாராகி கொண்டிருக்கும். அந்த சாம்பாருக்கும் ஒரு மணமுன்டு. படிக்கும் போதே சாம்பாரின் வாசனையோடு படித்த, கேட்டரிங் படிக்காத மாணவர்கள் நாங்கள். வாதாமரம் என்ற ஒரு மரம். பச்சை பசேலென்று இலைகளை விரித்து எங்களை வெயிலில் இருந்து இன்னொரு தாயாய் காக்கும். பள்ளியின் அருகில் காவிரி ஆறு. ஆற்றை ஒட்டி, நெற்பயிர் விளையும் வயல்வெளிகள். அவற்றுக்கு இடையே மூச்சாய் பாயும் கிளை ஆறு என்று பார்வை போதையை தரக்கூடிய இயற்கை சூழ்ந்த பள்ளியின் ஆறாம் வகுப்பு மாணவனாகிய எனக்கு அன்று ஒரே பரபரப்பு.

காலையில் தாத்தா, என்னை தூக்கி வந்து சலூனில் முடி வெட்டி குளத்தில் குளிப்பாட்டி விட்டார். ( காலை நேரத்தில் குளத்து தண்ணி வெதுவெதுப்பாக இருக்கும் நம் அம்மாக்களின் அணைப்பை போல) அம்மா ஒரிஜினல், கலப்படம் அற்ற தேங்காய் எண்ணெய் தடவி இடது பக்கம் வாகு எடுத்து தலை சீவி விட்டார். தீபாவளிக்கு எடுத்த புது சட்டை அணிந்து மாமாவின் சைக்கிளில் ஜம் என்று பள்ளிக்கு பயணம். அன்று முழுதும் வகுப்பில் எங்களுக்குள் ஒரே பேச்சுதான். வகுப்பில் எனது தோழிகள் பூவும் பொட்டுமாக கலர் கலரான உடை உடுத்தி, அமர்க்களமாக இருந்தனை. சுவரு இருபக்கம் மட்டும் இருந்ததால் அவ்வப்போது அவர் வந்து விட்டாரா என்று அனைவரும் பார்ப்போம். அதை பார்க்கும் ஆசிரியர்கள் புன்னகைத்துக்கொள்வார்கள்.

மாலை நேரம். நாங்கள் தான் முதலில் என்று பி.டி (விளையாட்டு) வாத்தியார் வந்து சொல்ல எல்லாம் வரிசையில் நிற்க, தமிழ்வாத்தியார் என் அம்மாவை அழைத்துக் கொண்டு வந்தார்.

" தங்கம் இந்தாப்பா இதை போட்டுக்க " என்று இரட்டைவட தங்க சங்கிலி ஒன்றையும், ஒரு ஒற்றை வட சங்கிலி ஒன்றையும் தர, எனக்கு வெட்கம் வந்து விட்டது. பெண்கள் அணியும் அணிகலன் அல்லவா அது.

மறுத்தேன். அம்மாவுக்கு முகம் சுருங்கிவிட்டது. அதைக்கண்ட கைத்தொழில் டீச்சர் வாங்கி என் கழுத்தில் அணிவித்தார். அவர் சொன்னால் நான் தட்டாமல் கேட்பேன். (யாரோ சொன்னார்கள். ஒரு ஆடவனின் முதல் காதலி அவனது அழகிய டீச்சர் தான் என்று) மாலை நேரத்து வெயிலில் போட்டோகிராபர் படம் எடுக்க ஒரு வழியாய் அன்றைய பரபரப்பு எங்களுக்குள் முடிவுக்கு வந்தது. ஒரு வாரம் கழித்து, வகுப்பாசிரியர் வந்து போட்டோவைக்காட்ட, வாங்கி ஆர்வமாய் பார்த்தேன். எனக்கு முன்புறம் அமர்ந்து இருந்த சகதோழனின் முகத்துக்கு பின்னால், என் அம்மா ஆசையுடன் அணிவித்த இரட்டைவட, ஒற்றைவட சங்கிலிகள் மறைந்து விட்டன. அம்மாக்களின் அன்பு என்றும் இலைமறையாகத்தான் இருக்குமோ ?

ஷீ-நிசி
18-07-2007, 01:16 PM
காட்சிகள் கண்முன் விரிந்தன நணபரே!


படிக்கும் போதே சாம்பாரின் வாசனையோடு படித்த, கேட்டரிங் படிக்காத மாணவர்கள் நாங்கள்.

இதை வெகுவாய் ரசித்தேன்....

மீனாகுமார்
18-07-2007, 01:44 PM
அம்மாக்களின் அன்பு என்றும் இலைமறையாகத்தான் இருக்குமோ ?

அம்மாவின் அன்பு.
அது இறைவனே வந்தாலும் அளந்திட முடியாது.
இந்த சின்ன நிகழ்ச்சியின்மூலம் அன்பின் தன்மையை விளக்கியிருப்பது அருமை.

இது போல் இன்னும் சம்பவங்களைத் தொடருங்கள்.

namsec
18-07-2007, 04:02 PM
" தங்கம் இந்தாப்பா இதை போட்டுக்க "

மகன்கள் என்றுமே தாய்க்கு தங்கம்தான்

Gobalan
19-07-2007, 04:42 PM
வெகு அழகாக வர்ணித்துருக்றீர்கள் நம் ஊரில் இருக்கும் பெரும்பாலன ஸ்கூல்களின் சூழ்நிலைபற்றி. ஸ்கூலில் படிக்கும் போது இருந்த ஆர்வ மற்றும் அமைதியான மனநிலை வயதாகாக நம்மை விட்டு அகன்று விடுகிறது. உங்களின் இந்த பதிப்பு என்னை மீண்டும் அந்த மனநிலையை ஏங்க செய்கின்றது.

ஆனால் அம்மாவின் அன்பு எப்போதும் நிர்ந்தரமாக இருக்கும் ஒன்று. அவர் இருக்குவரை இதை நம் கண்கூடாக காணலாம். அவர் காலத்திற்க்கு பிறகு நம் மனதில் எப்போது நிலைத்திருக்கும்.
தங்கவேல், இந்த நல்ல படைப்புக்கு நன்றி.

விகடன்
27-07-2007, 03:40 PM
ஆமாம் தங்கவேல். வாழ்க்கையில் எதன் மேல அதீத அக்கறை காட்டுகின்றோமோ அவையெல்லாம் நம்மை ஏமாற்றிவிடுவது சகஜம். எமது எதிர்பார்ப்பளவிற்கு திருப்திபடுத்துவது கிடையாது.

மனோஜ்
27-07-2007, 03:49 PM
அன்னை அன்பையும் கெஞ்சும் இயற்கை சூழலுடன் படிப்பையும் கண்களில் கொண்டு வந்தமைக்கு நன்றி நண்பரே

அமரன்
27-07-2007, 03:55 PM
பாராட்டுக்கள் தங்கவேல். அம்மாவின் அன்பு இலைமறை காயில்லை. பலர் அவற்ரைப் புரிந்துகொள்வதில்லை அல்லது புரிய முயற்சிப்பதில்லை என்பதுதான் சரியானது. பழைய பள்ளி நினைவுகளை தட்டி எழுப்பிய கதை. நன்றி தங்கம்.