PDA

View Full Version : "செல்"லரிப்பு!!!..



poo
27-05-2003, 05:35 PM
அஞ்சலகத்தின்
அவசரத்தந்தி அழைப்புகள்..
ஜன்னலில் முகம்புதைத்து
விஞ்ஞானம் புரியாமல்
விழித்த விழிகள்...

ரயில்வேகேட்டில்
எண்கள் இல்லா தொலைபேசிகள்..
வியப்பாய் பேசிக்கொண்ட
விடியல்கள்...

செவ்வகப்பெட்டி..
நகரப்பேருந்து பயணியாய் ரிசீவர்..
வட்ட நாணயமிட்டு
விரல் சுளுக்கச்சுற்றி
முனை கிடைத்ததும்
முனைப்புடன் நிமிடங்கள்
முடியும்முன் மூச்சுவிட மறந்து
க(த்திய)தைத்த காலங்கள்..

வளர்ந்துகொண்டேயிருந்தேன்..
வளர்ந்துகொண்டிருப்பதை பார்த்து
வாய்பிளந்திருக்கிறேன்.

இன்று..
தகவல் தொடர்பில்
தனியிடமாம் இந்தியாவிற்கு..
புதுவரவாய்.... "செல்(பேசி)கள்"...

மொத்த தொகையில்
பத்துசதவீதம் பயனாளிகள்..
சொத்தைமட்டும்
சொத்தையாக்கும் வித்தையல்ல..
என் தேசத்தையும்தான்..

வியாபார வளர்ச்சிக்கான
உரம்..
நிறம் மாறும் அவலம்..
வரப்பிரசாதம்..பக்தனுக்கு
வலிய வேதனைகளை
வழங்கிக்கொண்டு..

நட(ன)மாடும் விபச்சாரத்தின்
விலாசங்கள்..
தீவிரவாதிகளின்
சண்டை புறாக்கள்..
அரசியல்வாதிகளின்
அடிதடி ஆயுதங்கள்..
கடத்தலுக்கு கடவுச்சொல்..
இப்படியாக... உணர்வுச்செல்களை
உசுப்பிவிடும் உன்னத சக்தி!!?..

காழ்மீர்தொட்டு தமிழகம்..
ஊடகம் வாயிலாக
உளவுவேலை..
இந்திய இதயத்தை
பதம்பார்க்கும் பணி..

அதிகமாக உபயோகித்தால்
உடலில் புற்று..
அடிக்கடி உரு(எண்)மாறினால்
தேசத்தில் புற்று..

என் தேசத்து வரைபடத்தை
செல்லரித்துக்கொண்டிருக்கும்
செல்(பேசி)களை
தோண்டிப்புதையுங்கள்..
தொல்லியல்துறை
தோண்டாத இடம்தேடி..

முத்து
27-05-2003, 05:44 PM
அருமையான கவிதை பூ அவர்களே...வித்தியாசமான கண்ணோட்டம்...செல்பேசி பற்றி....

Nanban
27-05-2003, 05:53 PM
இந்த செல்களூக்கு வசதியாக, 10 சதவிகித மக்கள் உபயோகிக்கும் இதற்காக,

மற்ற அனைவரும் அதிக கட்டணம் கட்ட வேண்டும். வியாபார்களுக்கு இருக்கும் மதிப்பு

மக்களுக்குக் கிடையாது. இந்த அரசியல் வாதிகள் - வியாபாரிகள் கூட்டணி மக்களை

ஏமாற்றும் ஒரு கூட்டணி. இதற்குப் பெயர் முன்னேற்றமில்லை.

prabha_friend
28-05-2003, 06:16 AM
தேசப்பற்று மிக்க கவிதை .

karikaalan
28-05-2003, 12:34 PM
சமாசாரத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளாததால் வந்த கவிதை -- விசனக் கவிதை.

உலகெங்கிலுமே -- caller pays -- விதிதான் அமல். அவ்வாறிருக்கும்போது, பாரதத்தில் மட்டும் செல்பேசிகளைப் பொறுத்தவரை துவக்கத்திலிருந்து வரும்போதும், அனுப்பும்போதும் கட்டணம் இருந்தது. ஏன்? அரசு நிறுவனமான -- முந்தைய DoT, தற்போதைய BSNL -- ஒரு குறிப்பிட்ட மென்பொருள் தங்களது நெட்வொர்க்கில் பதிக்காதிருந்தனர்.

போட்டி பெருகியவுடன், BSNL விழித்துக்கொண்டது. வீட்டிலுள்ள பேசியிலிருந்து, செல்லுக்குப் பேசினால், அதிகக் கட்டணம். இதில் அநியாயம் எங்கே கண்டீர், பூ ஜி?

===கரிகாலன்

poo
28-05-2003, 04:25 PM
அண்ணலே தாங்கள் தவறாக புரிந்துகொண்டுள்ளீர்...(மன்னிக்கவும்!)
நான் கட்டணம்பற்றி சொல்லவரவில்லை... "செல்கள்" தவறாக பயன்படுத்தப்படுகிறதென்பதை சொல்லவந்தேன்!!!

rambal
28-05-2003, 06:25 PM
நிதர்சண உண்மையை..
கொஞ்சம் காட்டத்துடன்..
இன்றைய நிலவரத்துடன் ஒப்பிட்டு
பதிந்திருப்பது அழகு..
பாராட்டுக்கள் பூவிற்கு..

puthusu
28-05-2003, 10:53 PM
எந்த நல்ல கண்டுபிடிப்பும் எப்போதுமே சிலரால் தவறாக பயன்படுத்தப்படுகிறது;'செல்' விசயத்தில் அதன்
விபரீதத்தை அழகாகச் சொல்லியுள்ளார் பூ!பாராட்டுக்கள்!!

karikaalan
29-05-2003, 11:53 AM
அண்ணலே தாங்கள் தவறாக புரிந்துகொண்டுள்ளீர்...(மன்னிக்கவும்!)
நான் கட்டணம்பற்றி சொல்லவரவில்லை... "செல்கள்" தவறாக பயன்படுத்தப்படுகிறதென்பதை சொல்லவந்தேன்!!!

மன்னிக்கவும். கட்டணம் பற்றி அடியேன் பிரஸ்தாபித்திருக்கவேண்டாம்.

செல்கள் மட்டுமன்றி பழைய போன்களும் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. செல்களில் ஒரு வசதி -- ஒட்டுக் கேட்க அல்வா மாதிரி. அதனால் பிடிபடுவோரும் அதிகம். அவ்வளவே. அதனால் தீமைகள் பெருகிவிட்டாற்போல் ஒரு தோற்றம்.

ஆனால் செல்களால் பயன் அதிகமாகவே இருப்பதாக அடியேன் உணர்கிறேன் - நுகர்வோன் என்கிற கோணத்திலிருந்து பார்த்தால்.

===கரிகாலன்

gankrish
30-05-2003, 05:03 AM
அதிகமாக உபயோகித்தால்
உடலில் புற்று..
அடிக்கடி உரு(எண்)மாறினால்
தேசத்தில் புற்று..

அற்புதம் பூ. நல்ல ஒரு கவிதை. இந்த செல்லால் செல் அறித்து போய்யுள்ளது இந்தியா மட்டுமில்லை உலகம் பூராவும் தான்.

karikaalan
30-05-2003, 04:13 PM
இன்னோர் விஷயம். செல்போனுடைய சிம் கார்டுகளை மாற்றினால் மட்டும் போதாது, ஒட்டுக்கேட்பவர்களிடமிருந்து தப்ப! நம்முடைய செல்போன் ஒட்டுக்கேட்கப்படுகிறது என்ற சந்தேகம் வந்தாலே உடனே சிம் கார்டு + போன் கருவி இரண்டையும் தலையைச் சுற்றி எங்காவது சாக்கடையில் எறிந்து விடவும் -- மறக்காமல் இரண்டையும் சின்னாபின்னமாக்கிவிடவும். வேறு சிம் கார்டு + போன் கருவி வாங்கிவைத்துக்கொள்ளவும் -- அடுத்தமுறை ஒட்டுக்கேட்கப்படும் வரை!

===கரிகாலன்

விகடன்
21-08-2008, 11:15 AM
கவிதை, கச்சிதமாக நடை பின்பற்றப்பட்டதுடன் தகவல்களும் வரிக்கு வரி சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கு பாராட்டுக்கள்.

பிரதிகூலங்களை பட்டியலிட்டு கவிதை புனையப்பட்டதைப் போன்று அனுகூலங்களுக்கும் ஒன்றை எழுதியிருக்கலாமே....