PDA

View Full Version : உறவுகள்



சிவா.ஜி
18-07-2007, 05:30 AM
'அந்தக்காலத்தில்...' என
ஆரம்பித்தாலே
'அப்பா ப்ளீஸ்......' என
அலுப்பாய்
வாய் பொத்தும் பிள்ளைகள்!

'இப்படித்தான் ஒருமுறை
நானும் நன்பர்களும்.....' என
இரவில் இல்லாளிடம்
இயம்பத்தொடங்கினால்...
'அயர்வாய் இருக்கு
அப்புறம் சொல்லுங்கள்...'
அவளும் அப்படியே கண்ணயர,
தனியனாய் நான்!

இழந்த காலங்களின்
இறக்காத நினைவுகளை
இறக்க முடியாமல் தவித்து,
நடு இரவில் கணிணியை உயிர்த்து,
கவலைகளை கவிதையாய் பெயர்த்து
மன்றத்தில் பதித்தேன்!

எத்தனை உறவுகள்
என் சொல்லுக்கு செவி கொடுக்க!!
நெகிழ்கிறேன்,மன்றத்தால்
மகிழ்கிறேன்!

ஓவியன்
18-07-2007, 06:03 AM
இது ரசனைகள் சம்மந்தப் பட்ட விடயம் சிவா!,
ரசனை ஒரே அலை வரிசையாக இருக்கையிலேயே மற்றவரின் விடயங்களைப் பகிர்ந்து கொள்ள முன் வருவார்கள். எனக்கு சாண்டில்யனின் புத்தகம் பிடிக்கும் என்பதற்காக இக்காலக் குழந்தைகளிடம் அதனைக் கொடுத்தால் அவர்கள் என்னை ஒரு மாதிரியாகப் பார்கிறார்கள், அவர்களுக்கு ஹரிப் போட்டரைக் கூட புத்தகமாகப் படிப்பதிலும் திரைப் படமாகப் பார்ப்பதே பெட்டர் எனும் நிலை!. அவர்களது சூழலும் அப்படியே அவர்களை வளர்க்கிறது, நேரத்துடன் ஓட விட்டு.........

எனக்குக் கூட இதே வகையான சம்பவங்கள் நிறையவே நடந்துள்ளது, வீட்டிலல்ல நண்பர்களிடை.....
வீட்டிலே என் கலையார்வத்திற்கு தீனி போட்டனர் அப்பாவும் அம்மாவும் அது எனக்கு கிடைத்த வரம், என் ஆரம்பகால ஓவியங்களுக்கெல்லாம் அம்மா தான் ஆலோசகர். அவர் கருவைத் தர நான் உயிர் கொடுப்பேன். பல போட்டிகளுக்குப் பங்கபற்ற போகும் போது அம்மாவிடம் தான் கேட்பேன் எப்படி நான் வரைய வேண்டுமென்று.........
அதன் படி வரைந்து நான் வென்ற போட்டிகள் ஏராளம். அப்பாவும் அப்படியே அவருடன் நான் கதைத்த விடயங்களை எல்லாம் இங்கே பதித்தால் பண்பட்டவர் பகுதிக்குப் போட்டு விடுவார்கள். ஆனால் உறவினர்கள் என் பெற்றோரை நித்தமும் சாடினர் பிள்ளைகளை வளர்க்கும் விதம் தவறென்று........
நண்பர்களும் அப்படியே.....

ஆனால் இப்போது என் பெற்றோரை நினைத்துப் பெருமைப் படுகிறேன், அவர் தம் வளர்ப்பு முறைக்காக. இது எல்லோருக்கும் அமைவதில்லை, அதனாலே ஒத்த அலை வரிசை உள்ள இடங்களைத் தேட வேண்டியுள்ளது.......

விகடன்
18-07-2007, 06:03 AM
கடந்த காலத்தை மீட்கும்போது உணரும் அந்த இன்பமானாதும் ரணப்படுத்துவதுமான அநுபவத்தை சொல்லி மாளாது.

ம்ம்ம்ம்ம்
அதெல்லாம் அந்தகாலம். பசுமை நிறைந்த... ஒரு காலம்.
பலகோடி கொடுத்தாலும் கிடைக்காத காலம்.

−−−−−−−
சிவனே என்று இருந்து வேலை பார்த்த என்னை இப்படி புலம்ப விட்டுவிட்டீரே சிவா.ஜீ

ஷீ-நிசி
18-07-2007, 06:26 AM
அடடா.... நிகழ்வினை கவிதையாக்கி... வடித்திருக்கிறீர்கள் சிவா... ரசித்தேன்...

ஆதவா
18-07-2007, 06:36 AM
நல்லகவிதை சிவா....

எல்லாம் நன்று.. கொஞ்சம் இடைவெளிவிட்டு எழுதியிருக்கவேண்டும் என்பது என் கருத்து... கீழ்கண்டவாறு..

'அந்தக்காலத்தில்...' என
ஆரம்பித்தாலே
'அப்பா ப்ளீஸ்......' என
அலுப்பாய்
வாய் பொத்தும் பிள்ளைகள்!

'இப்படித்தான் ஒருமுறை
நானும் நன்பர்களும்.....' என
இரவில் இல்லாளிடம்
இயம்பத்தொடங்கினால்...
'அயர்வாய் இருக்கு
அப்புறம் சொல்லுங்கள்...'
அவளும் அப்படியே கண்ணயர,
தனியனாய் நான்!

இழந்த காலங்களின்
இறக்காத நினைவுகளை
இறக்க முடியாமல் தவித்து,
நடு இரவில் கணிணியை உயிர்த்து,
கவலைகளை கவிதையாய் பெயர்த்து
மன்றத்தில் பதித்தேன்!

எத்தனை உறவுகள்
என் சொல்லுக்கு செவி கொடுக்க!!
நெகிழ்கிறேன்,மன்றத்தால்
மகிழ்கிறேன்!----------------------------

பெரும்பாலும் பெற்றோர்கள் இந்த மாதிரியான விஷயங்களை ஊக்குவிப்பதில்லை. அவர்களுக்கு இது பிடித்திருந்தால் கூட ....

கவிதையால் விளையப்போவது எதுவுமில்லை... ஆனால் மனவிளைச்சல் அதிகமுண்டு.. அது புரிந்துகொள்பவர்களுக்குத்தான் புரியும்...

எத்தனையோ இன்னல்களுக்கு இடையே அமர்ந்து இந்த பதிவை எழுதுவதில் எனக்கு எவ்வளவு சந்தோசம் என்பது எனக்குமட்டுமே தெரியும்... உடன் இருக்கும் நண்பர்கள் கூட "இதையெல்லாம் எழுதி உனக்கென்ன பணமா வந்திருச்சு?" என்று திட்டுவார்கள்....

மனமகிழ்ச்சி வேறு... பணமகிழ்ச்சி வேறு... சரிவிகிதத்தில் இரண்டும் இருக்கவேண்டும்..

இழந்த காலங்களின் இறக்காத நினைவுகள் என்ற வரியே தூக்கி நிறுத்துகிறது கவிதையை... நினைவுகளின் தொகுப்பு கவிதை. நெஞ்சத்தின் மகிழ்ச்சி கவிதை...
கவலைகளை கவிதையாக்கத் தெரிந்த நமக்கு கவலைகளை மகிழ்ச்சியாக்கவும் தெரியவேண்டும்.. இல்லையா சிவா அவர்களே?

உங்கள் கவிதையை இங்கே இடுங்கள்..... மகிழ்ச்சி பொங்க (வைக்க) நாங்கள் இருக்கிறோம்...

சிவா.ஜி
18-07-2007, 06:45 AM
'எந்தக்குழந்தையும் நல்லக்குழந்தைதான் மண்ணில் பிறக்கயிலே
அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே'
என்ற அற்புதமான வரிகளுக்கேற்ப உயர்ந்த பெற்றோர்களால் வளர்க்கப்பட்டிருக்கிறீர்கள் ஓவியன். நீங்கள் சொல்லும் அந்த தலைமுறை இடைவெளி சில சமயம் நமக்கு கஷ்டமாக இருந்தாலும் அவர்கள் பார்வயில் இருந்து பார்க்கும்போது சரியானவர்களாகவே தெரிகிறார்கள். அழகான பின்னுட்டத்திற்கு நன்றி ஓவியன்.

என்ன செய்ய விராடன்,எத்தனையோ அலுவல்களுக்கிடையே நம்மையறியாமல் நம்மை நடந்ததை நினைக்கத்தூண்டும் எத்தனையோ நிகழ்வுகள் நடந்தேறிக்கொண்டுதான் இருக்கிறது. நன்றி விராடன்.

நம் மன்றம் இருக்கும் தைரியத்தில்தான் எனக்கு கவிதையே வருகிறது. நன்றி ஷீ−நிசி.

ஷீ-நிசி
18-07-2007, 06:45 AM
சிறப்பான விமர்சனம் ஆதவா..... நிஜமான வரிகள்!

சிவா.ஜி
18-07-2007, 06:49 AM
மனமார்ந்த நன்றி ஆதவா. நீங்கள் பிரித்துக்கொடுத்திருப்பது மிக அழகாக உள்ளது. உங்கள் பின்னூட்டம் மகிழ்வை மட்டும் தரவில்லை, புத்துணர்ச்சியும் சேர்த்து தந்துள்ளது. மிக மிக நன்றி ஆதவா.

இனியவள்
18-07-2007, 06:50 AM
கவிதை அருமை சிவா வாழ்த்துக்கள்..

அந்தக்காலத்தை கதைக்க தொடங்கினாலே
எந்தக்காலத்தில் ஜயா இருக்கிறீர் நீர்
என்று கேட்கும் காலம்மீது .....

அமரன்
18-07-2007, 08:10 AM
சிவா....! நான் கவிதை எழுதுவேன் என்பதே வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாது. கணினிமுன்னால் இருந்தால் என்ன செய்கிறான் என எல்லோரும் முடியைப் பிய்த்துக்கொள்கின்றனர். ஒரு வேளை தெரிந்தால் ஊக்குவிப்பார்களோ தெரியாது...காரணம் நேரம். வாழ்க்கை பிரச்சினை, அசதி எனப் பல....கவிதை எனும் பெயரில் நான் கிறுக்குபவற்றை ஏற்று தட்டியும் குட்டியும் வளர்க்கும் ஆசானாக நண்பர்கள் பலரை தந்தது மன்றம் என்னும் தாய்.....அதிகம் சொல்ல வேண்டும் என நினைக்க வைத்த கவிதை. ஓவியனும்,ஆதவாவும் முந்திக்கொண்டு என்னை பேசவிடாது செய்துவிட்டனர். பாராட்டுகள்..


(இது வாழ்த்துக்கவிதைகள் பகுதியில் இருந்தால் சிறப்பு. என்ன சொல்கின்றீர்கள்)

சிவா.ஜி
18-07-2007, 09:38 AM
(இது வாழ்த்துக்கவிதைகள் பகுதியில் இருந்தால் சிறப்பு. என்ன சொல்கின்றீர்கள்)
இது வாழ்த்துக்கவிதையல்ல அமரன். நன்றியால் நெகிழ்ந்த கவிதை. மனதின் குரல் கேட்க செவி திறந்து வைத்திருக்கும் அருமையான மன்ற உறவுகளுக்காக. குட்டியும் தோளில் தட்டியும் செதுக்கும் அன்பு சிற்பிகளுக்காக.

அமரன்
18-07-2007, 09:39 AM
சரி சிவா....புரிந்"தேன்"

aren
18-07-2007, 06:27 PM
சிவா.ஜி அவர்களே,

ஒரு வார்த்தையில் சொல்லவேண்டுமென்றால் "பிரமாதம்".

இதுதான் உண்மை. உண்மையை அப்பட்டமாக அப்படியே இங்கே கொண்டுவந்து பதித்திருக்கிறீர்கள். அமர்க்களம். பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

ரிஷிசேது
18-07-2007, 06:33 PM
சிவா நிதர்சனங்கள் கவிதையானதில்
கவிதை மெய்யானது...
நாம் நேற்றைய குழ்ந்தைகள்
நம் குழந்தைகள்
நாளைய பெற்றோர்...

இது ஒரு தொடர் சங்கிலி...

வாழ்த்துக்கள்
ரிஷிசேது

சிவா.ஜி
19-07-2007, 04:54 AM
மனம் நிறைந்த மகிழ்வோடு ஆரென் அவர்களுக்கும், ரிஷிசேது அவர்களும் என் நன்றிகள்.