PDA

View Full Version : எட்டாம் வகுப்பு - தமிழ்ப் புத்தகம்



பாரதி
16-07-2007, 06:12 PM
அன்பு நண்பர்களே,

தற்செயலாக எட்டாம் வகுப்பு தமிழ்ப்பாடப் புத்தகத்தை காண நேர்ந்தது. அதில் இருந்த சில விசயங்கள் இது வரை நான் அறியாதது. அவற்றை உங்களின் பார்வைக்குத் தருகிறேன். இதில் வராதவற்றை அறிந்த நண்பர்கள் அறியத்தந்தால் நன்றி உடையவனாக இருப்பேன்.

−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−

காப்பியம்: கதைத்தலைவனின் வாழ்க்கையின் முழுமையைப் பாடியது காப்பியம்.

பிரபந்தம்: ஒருவரின் வாழ்க்கையின் ஒரு சில பகுதிகளை விரிவாக்கிப் பாடியது. சிற்றிலக்கியம் என்பதைப் பிரபந்தம் என்றும் அழைப்பர்.தமிழில் 96 வகைச் சிற்றிலக்கியங்கள் உள்ளன.

பதிகம்: ஒரு பொருளைக் குறித்துப் பத்துச் செய்யுள் பாடுவது.

சதகம்: ஒரு பொருளைக் குறித்து நூறு செய்யுள் பாடுவது.

அந்தாதி: அந்தம்+ஆதி. ஒரு செய்யுளின் இறுதி எழுத்தோ,
அசையோ, சீரோ, அடியோ அதைத் தொடர்ந்து வரும் செய்யுளின் முதலாக அமையும். (அவ்வாறு நூறு வெண்பாக்கள் பாடுவதை அந்தாதி இலக்கியம் என்பர்)

உலா: ஒரு தலைவன் வீதியில் உலாவரும் போது அவனைப் பார்த்த மகளிர் அவனை நினைத்து, அவன் வயப்பட்டு வருந்துவதை உலாப்பிரபந்தம் என்பர். அவ்வாறு வருந்துபவர் ஏழு பருவத்துப் பெண்டிராவர்.
5-7 வயது உள்ளவர் - பேதை
8-11 வயது உள்ளவர் - பெதும்பை
12-13 வயது உள்ளவர் - மங்கை
14-19 வயது உள்ளவர் - மடந்தை
20-25 வயது உள்ளவர் - அரிவை
26-31 வயது உள்ளவர் - தெரிவை
32-40 வயது உள்ளவர் - பேரிளம் பெண்
உலா வரும் தலைவன் இறைவனாகவோ, மன்னனாகவோ ஒப்பற்றதோர் தலைவனாகவோ இருத்தல் வேண்டும்.

பிள்ளைத்தமிழ்:தெய்வத்தையோ, அரசனையோ, ஒப்பற்ற பெரியார் ஒருவரையோ பிள்ளைப்பருவத்தில் வைத்துப்பாடப்பெறுவது பிள்ளைத்தமிழ். பிள்ளை பிறந்து மூன்றாம் திங்கள் தொடங்கி இருபத்தோராம் திங்கள் முடியவுள்ள காலப்பகுதியைப் பத்துப் பருவங்களாகப் பகுத்துப் பாடுவர். பருவத்துக்கு பத்து ஆசிரிய விருத்தங்கள் பாடப்பெறும். காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிற்றில், சிறு தேர், சிறுபறை என்பன அப்பத்துப்பருவங்கள். இவையனைத்தும் ஆண்பாற்பிள்ளைத்தமிழுக்கு உரியன. இவற்றில் சிற்றில், சிறுபறை, சிறு தேர் ஆகியவற்றை நீக்கி விட்டு அவற்றிற்கு பதிலாக கழங்கு, அம்மானை,ஊசல், நீராடல் ஆகியவற்றில் ஏதேனும் மூன்றை சேர்த்துப்பாடுவது பெண்பாற் பிள்ளைத் தமிழாகும்.

கலம்பகம்: பலவகை மலர்களைக் கோத்துக் கதம்பம் கட்டுவது போலப் பலவகைப் பாக்களையும், பாவினங்களையும் கொண்டு செய்யப்பெறும் இலக்கிய வகையைக் கலம்பகம் என்பர்.

பரணி: போர்க்களத்தில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வெற்றி வீரனுக்குத்தான் பரணி பாடப்படும். போரில் தோற்றவனின் பெயர் நூலுக்குச் சூட்டப்பெறும்!

==========================================================

ஏலாதி: ஏலம்+ஆதி = ஏலாதி.ஏலக்காய், இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் ஆறு பொருட்கள் சேர்ந்த மருந்து உடல் பிணி போக்கி நலம் செய்யும். அது போல இந்நூலின் ஒவ்வொரு செய்யுளிலும் சொல்லப்பட்ட ஆறு கருத்துக்களும் மக்களுடைய மன
நோயாகிய அறியாமையைப் போக்கித் தெளிவைத் தர வல்லன.

மூன்று மருந்துப்பொருட்களின் பெயரால் அமைந்த மருந்தின் பெயரைக் கொண்டது 'திரிகடுகம்'. (ஆங்கில வார்த்தை மூன்று 'திரீ' எவ்வாறு இத்துடன் தொடர்புடையதாய் அமைந்தது!?)

ஐந்து மருந்துப்பொருட்களின் கலப்பால் அமைந்த பொருட்களின் பெயரைக்கொண்டது சிறுபஞ்ச மூலம்.


நன்றி: தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம்.

அமரன்
16-07-2007, 06:15 PM
பாரதி அண்ணா..! இவை எனக்குப் புதியவை அரிய தமிழ் தகவல்களுக்கு நன்றி அண்ணா.

இளசு
16-07-2007, 06:17 PM
அருமை பாரதி..

'பேக் டு பேஸிக்ஸ்' என்ற ஆங்கில சொலவடை உண்டு..
வேரைத் தேடி?

மன்றத்தில் முன்பு பிரபலமான தெரிந்தால் கூறுங்களுக்கு
எட்டாம் வகுப்பு அறிவியல் பாடநூலில் லாவண்யா உள்ளிட்ட
நண்பர்கள் விடை கண்டு பதித்தது நினைவுக்கு வருகிறது..

ஒரு சில எனக்கு இங்கே நீ இட்டதில் அரைகுறையாய் தெரிந்தாலும்
முழுக்க வாசித்த பின் எத்தனை அறியாதவை என அறிந்தேன்..

அறிய..அறிய..அறியாமை பெருகும்..

நன்றி பாரதி!

ஓவியன்
16-07-2007, 06:20 PM
அமரன் கூறியது போன்று நீங்கள் குறிப்பிட்ட பல விடயங்கள் எனக்கும் புதியனவாகவே இருந்தது. ஏனென்றால் நாங்கள் படித்த பாட விதானம் வேறு...........

தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா!

இவ்வாறான தகவல்களை மேலும்
எதிர்பார்க்கும்
ஓவியன்!.

அமரன்
16-07-2007, 06:23 PM
ஆம் ஓவியன் நான் பத்தாவது வரை தமிழ் படித்தேன். இவை பாடவிதானத்தில் இல்லை.

இனியவள்
16-07-2007, 06:26 PM
தகவலுக்கு நன்றி பாரதி அண்ணா..

அனைத்துமே எனக்கு புதியது நீங்கள் கூறியவற்றில்

ம்ம் ஆமாம் அமர் தரம் 11ல் கூட இல்லை

பாரதி
16-07-2007, 06:32 PM
கருத்துக்கு நன்றி அமரன்.

அன்பு அண்ணா...
தற்செயலாக படித்தபின்னரே மலைத்தேன். எத்தனை விதமான இலக்கியங்கள்...! இலக்கணத்தைப் பின்பற்றியே எத்தனை உட்பிரிவுகள்...! எல்லாவற்றிற்கும் காரணங்களை உள்ளடக்கிய பெயர்கள்...! மரத்தை முழுமையாகக்கூட காணாதவனுக்கு வேர்களையும் காண்பித்தால் எப்படி பிரமிப்பானோ... அந்த நிலைதான் எனக்கு..! நன்றி அண்ணா.

அன்பு ஓவியன்,
இவையெல்லாம் சங்ககால இலக்கிய வகைகளில் சில. உதாரணத்திற்கு கலிங்கத்துப்பரணி, திருவரங்கன் உலா, திருவந்தாதி என்றெல்லாம் பெயரைக் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் அவற்றின் மூலம் என்ன என்பதை கோடிட்டு காட்டும் ஒரு சிறிய முயற்சியே இது. நான் படிக்கும் காலத்திலும் இது போன்று படித்ததில்லை..!

பாரதி
16-07-2007, 06:33 PM
கருத்துக்கு நன்றி இனியவள்.

ஓவியன்
17-07-2007, 04:41 PM
அன்பு ஓவியன்,
இவையெல்லாம் சங்ககால இலக்கிய வகைகளில் சில. உதாரணத்திற்கு கலிங்கத்துப்பரணி, திருவரங்கன் உலா, திருவந்தாதி என்றெல்லாம் பெயரைக் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் அவற்றின் மூலம் என்ன என்பதை கோடிட்டு காட்டும் ஒரு சிறிய முயற்சியே இது. நான் படிக்கும் காலத்திலும் இது போன்று படித்ததில்லை..!

உண்மை தான் அண்ணா!

இப்போது நாம் முன்பிருந்ததை விட கொஞ்சம் பண்பட்டிருக்கிறோம், எனவே இந்தக் காலங்களில் அவற்றைத் தேடிப் படிப்பது நிச்சயம் பயனளிக்க கூடியதே. அதற்கு இந்த மூலமறிதல் அத்தியவசியமானதே.......

மீண்டும் நன்றிகள் அண்ணா!.

பாரதி
22-03-2008, 08:02 AM
கருத்துக்கு நன்றி ஓவியன்.

சுகந்தப்ரீதன்
22-03-2008, 10:50 AM
அருமை அண்ணா..பகிர்தலுக்கு நன்றி..!!

தொல்காப்பியம், திவ்யபிரபந்தம், கலிங்கத்துபரணி போன்றவை அறிந்திருந்தாலும் அதன் ஆழம் அறியவில்லை இதுவரை.. எனக்கும் எட்டாம் வகுப்பில் இதுவெல்லாம் இருந்ததில்லை..!! அறிய தகவல் தந்து உதவியமைக்கு வாழ்த்துக்கள் அண்ணா..!! தொடர்ந்து தாருங்களேன்..!!

பூமகள்
25-07-2008, 07:54 AM
இலக்கண இலக்கிய அடிப்படை வேர்களை மீண்டும் அகழ்ந்து கண்டெடுத்துக் கொடுத்ததில்... மகிழ்ந்தேன் பாரதி அண்ணா..

என் பாட புத்தகத்தில் இவை படித்த நினைவு மங்கலாக.. சில செய்திகள் தவிர.. பல முக்கியமான செய்திகள் மறந்தே விட்டேன்.. மழைக்கு பின்.. அடித்துச் சென்ற மணற் துகள் போல..... தேர்வுக்கு பின்... அழிந்து போன பாட நினைவுகள்...

எஞ்சிய மணற் துகளாக அடியில் சிக்கிய சில நினைவுகளை மீட்டெடுத்து மகிழ்ந்தேன்..

மகளிரின் ஒவ்வொரு வயது கால இடைவெளிக்குமான பெயர்கள் இன்றும் நினைவில்...

பெரியண்ணாவின் பின்னூட்டம் பதிவுக்கு மணி மகுடம்..

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் பாரதி அண்ணா..!!
இன்னும் கொடுங்கள்..!! :)

சுஜா
25-07-2008, 11:52 AM
அருமையான தகவல் தந்த பாரதி அண்ணாவிற்கு எனது பாராட்டுகள் .
இதே போல் பல அருமையான தமிழ் பற்றிய தகவல் தரவேண்டும் என்று விரும்பி கேட்டுகொள்கிறேன்