PDA

View Full Version : புள்ளிவிபரத்திணைக்களம் அறிவிப்பு!



அரசன்
16-07-2007, 04:37 PM
ஆண்டின் முதற்காலாண்டில் தொழிலின்மை வீதம் வீழ்ச்சி தொகை மதிப்பு புள்ளிவிபரத்திணைக்களம் தெரிவிப்பு



2007ஆம் ஆண்டின் முதற்காலாண்டில் நாட்டின் தொழிலின்மை வீதமானது முன்னெப்போதும் இல்லாதவாறு குறைவடைந்துள்ளதாக தொகை மதிப்பு புள்ளிவிபர திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலாம் காலாண்டில் தொழிலின்மை வீதமானது 6.2 ஆக காணப்படுகின்றது. இது கடந்த காலங்களில் கிடைத்த தொழிலின்மை வீதம் தொடர்பான ஆகக் குறைந்த பதிவாகும். தொழிலின்மை என்பது தொழிற்படையின் மொத்த எண்ணிக்கையில் தொழிலற்ற ஆட்களின் சதவீதமாகும்.

தொழிலற்ற ஆட்கள் எனப்படும் போது ஆய்வுக்குரிய காலப்பகுதியில் எதுவித தொழிலையும் கொண்டிராதோர் வேலை தேடுவோர் வேலை கிடைக்கக் கூடியதாக இருக்கும் நபர்கள் ஆகியோரை உள்ளடக்கியதாகும்.

2006 ஆம் ஆண்டு முதலாம் காலாண்டில் தொழிலற்றோர் 6.8 சதவீதமாக காணப்பட்டனர். ஆண்களில் 5.5 வீதமானோரும் பெண்களில் 10.1 வீதமானோரும் தொழிலற்றவர்களாக இருந்தனர்.

ஆனால் 2007 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் தொழிலின்மை வீதமானது முன்னைய வருடத்தை விட 0.6 வீதம் குறைவடைந்து 6.2 வீதமாக காணப்படுகிறது.

இவ்வாண்டின் முதலாம் காலாண்டில் ஆண்களில் 4.4 வீதமானோரும் பெண்களில் 9.5 வீதமானோரும் தொழிலற்றவர்களாக உள்ளதாக தொகை மதிப்பீட்டு புள்ளிவிபர திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாண்டு முதலாம் காலாண்டில் தொழிலற்றோரின் எண்ணிக்கை 4 இலட்சத்து 62 ஆயிரம் ஆகும். இக்காலாண்டில் மொத்த தொழில் நிலையில் அரச துறை 12.6 சதவீதத்தையும், தனியார் துறை 4.41 சதவீதத்தையும் கொண்டிருந்தது. இக்காலப் பகுதியில் இளம் வயதுத் தொகுதியினர் மற்றும் பெண்களிடையேயான தொழிலின்மை வீதம் சார்பு ரீதியில் உயர்வாகக் காணப்பட்டது.

15 19 வயதுப் பிரிவுக்குட்பட்டோரின் தொழிலின்மை வீதம் 2006 முதலாம் காலாண்டில் 31.3 வீதமாக இருந்த அதேவேளை இவ்வருடம் 18.9 வீதமாக வீழ்ச்சியடைந்திருந்தது. 2007 இன் தொடர்பான வீதங்களில் குறிப்பிடத்தக்க வேறுபாடு காணப்படாத போதிலும் பெண்களிடையேயான தொழிலின்மை வீதம், ஆண்களைவிட இரு மடங்கை விட அதிகமாக காணப்பட்டது.

தொழிலின்மை வீதமானது ஏனையோரை விட படித்த இளைஞர்களிடையே தொடர்ந்தும் உயர்வாக காணப்படுகின்றது. க.பொ.த. (உ/த) மற்றும் அதற்கு கூடிய தகைமை உடையோரிடையேயான தொழிலின்மை வீதம் இக்காலப்பகுதியில் 12.3 வீதமாக காணப்படும் அதேவேளை குறைவான கல்வித்தகைமை உடையோரிற்கிடையிலான தொழிலின்மை வீதம் மிகக்குறைவாக காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

இவ்வாண்டில் முதலாம் காலாண்டில் தரம் 5ற்கு கீழான கல்வித் தகைமை உடையோரிற்கிடையிலான தொழிலின்மை 1.4 வீதமாகவும் தரம் 5 9 வரையான தகை உடையோரில் 5.6 வீதமாகவும் க.பொ.த. (சா/த) தகைமை உடையோரில் தொழிலின்மை 5.6 வீதமாகவும் க.பொ.த. (உ/த) தகைமை உடையோரில் 12.3 வீதமாகவும் தொழிலின்மை காணப்படுகின்றது.


நன்றி: வீரகேசரி