PDA

View Full Version : சோனி vs ஞானி - பாகம் 4leomohan
16-07-2007, 10:24 AM
முந்தைய பாகங்கள்

மீண்டும் ஞானி ( 1 2 3 ... Last Page) (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7202)
ஞானி - தத்துவ கதை தொகுப்பு ( 1 2) (ஞானி - தத்துவ கதை தொகுப்பு ( 1 2))
மீண்டும் ஞானி - பாகம் 3 ( 1 2 3 ... Last Page)


1. சந்திப்பு

என் மகன் முதன் முறையாக பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ளப் போகிறான்.

அப்பா நீ முதல் போட்டியில் ரொம்ப பயந்தாயா என்றான்

ஆமாம்பா. முதல் போட்டியில் பயம் இருக்கும். அந்த பயம் எனக்கு ஒவ்வொரு மேடை ஏறும் போதும் இருந்தது. ஆனால் அந்த பயம் தான் எனக்கு நன்றாக செய்ய வேண்டும் என்ற வேகத்தையும் கொடுத்தது.

இது நேற்று இரவு நடந்த பேச்சு.

அவன் பள்ளிக் கூடத்திற்கு செல்ல பெருமாள் கோவிலை தாண்டி வேகமாக சென்றுக் கொண்டிருக்கும் போது கிழிந்த சட்டையுடன் தாடியுடன் குளிக்காத ஒரு உருவம் தென்பட்டது. அவன் கண்களில் ஞானியிடம் கண்ட அதே ஒளி. சே, ஞானி மேல் ரொம்ப தான் டிபென்டென்ஸி அதிகமாயிட்டுது. ஞானியை வேறு வெகு நாட்களாக காணவில்லை.

அவனை தாண்டி போக நினைக்கும் போது, சட்டென்று குறுக்கே கை நீட்டினான்.

என்ன என்று வினவினேன்.

ஏதாவது போட்டுட்டு போ என்றான்.

பையை துலாவி பார்த்துவிட்டு சில்லறை இல்லை என்றேன்.

சில்லறை இருந்தா எத்தனை போட்டிருப்பே என்றான்

இரண்டு ரூபாய் போட்டிருப்பேன் என்றேன்.

எத்தனை இருக்கு கையில என்றான் விடாமல்

பத்து ரூபாய் தாள் இருக்கு என்றேன்.

கொடு என்றான்

சங்கடமாக எடுத்து கொடுத்தேன். பத்து ரூபாய் எடுத்துக் கொண்டு எட்டு ரூபாய் சில்லறையை திருப்பி தந்தான். வியந்தேன்.

உன் பெயர் என்ன என்றேன். ஐயோ ஞானி என்று சொல்லி விடக்கூடாது என்று மனதில் வேணடிக் கொண்டேன்.

பேரெல்லாம் தெரியாது. எல்லாம் சோனிப்பயலேன்னு கூப்பிடுவாங்க என்றான்.

நீ சோனியா என்றேன்.

ஆம் என்றான்.

சரி சோனி நீ இங்க தான் இருப்பியா என்றேன்.

இல்லை சில நேரம் மேற்கு தெருவில் இருப்பேன்

அப்புறம்?

தெற்கு தெருவுக்கு போயிடுவேன்

அப்புறம்?

வடக்கு தெருவில் இருப்பேன்.

அப்புறம் என்றேன் பொறுமையாக.

கிழக்கு தெருவுக்கு முன்னாடி உட்கார்ந்திருப்பேன்.

அப்புறம் - மிகவும் என் பொறுமையை சோதித்தான்.

அப்புறம் என்ன இங்கே தான் திருப்பி வந்துடுவேன் என்றான் ஹாயாக.

கடுப்பை அடக்கிக் கொண்டு, அடுத்த கேள்வி கேட்கலாம் என்பதற்கு முன்னால் அவன் கேட்டான்.

ஏன் உனக்கு வேலை வெட்டி இல்லையா?

ஏன் கேட்கறே?

பின்னே பிச்சைகாரன்கிட்டே இத்தனை நேரம் பேசிகிட்டு இருக்கே?

அவன் கேட்டது சுரீர் என்றது. சட்டென்று அங்கிருந்து விலகினேன்.

அன்புரசிகன்
16-07-2007, 10:31 AM
பின்னே பிச்சைகாரன்கிட்டே இத்தனை நேரம் பேசிகிட்டு இருக்கே?

அவன் கேட்டது சுரீர் என்றது. சட்டென்று அங்கிருந்து விலகினேன்.

சரியான கேள்வி

நன்றி மேகன்

leomohan
16-07-2007, 10:33 AM
2. பிச்சைகாரனிடம் பிச்சை

என் மனைவின் பிறந்த நாள் என்பதால் சிவன் கோவிலுக்கு அழைத்து வந்திருந்தேன். குறுகிய சந்தில் காரை நிறுத்தினேன். என் மனைவி காலை துலாவிக் கொண்டிருந்தாள்.

என்ன பண்றே நீ என்றேன்

செருப்பை வண்டியில் விட்டுட்டு வரேன். ஏன் தண்டத்துக்கு 50 காசு கொடுக்கனும்.

ஐயோ. சரி எக்கெடு கெட்டாவது போ. சீக்கிரம் வா. மழையால ரோடு சகதியாக இருக்கு. கேட்டாத்தானே.

ஏங்க பொறந்த நாளைக்கும் என்னை திட்டறீங்க என்று சலித்துக் கொண்டாள்.


செருப்பை நான் செருப்பு ஸ்டாண்டில் விட்டு டோக்கன் வாங்கிக் கொண்டேன்.


சரி சரி வா என்று அவளை அழைத்தவாறே உள்ளே நுழைந்தோம். நல்ல தரிசனம். இலவச தரிசனம். கூட்டம் அதிகம் இல்லை. இறைவனை பார்க்க வரும் இடத்திலும் ஜருகன்டி பண்ணி தொந்தரவு இல்லாமல் இருந்தது மனதிற்கு இதமாக இருந்தது.

மகிழ்ச்சியுடன் வெளியே வரும்போது எதிர்பட்டான் சோனி.

அவனை பார்த்தும் கண்டுக் கொள்ளாமல் மேல் தொடர்ந்தேன் நடையை.

அவன் நிறுத்தி கை நீட்டினான்.

இரண்டு ரூபாய் சில்லறையாக எடுத்து நீட்டினேன்.

இரண்டு ரூபா தானா

அப்புறம்

இலவச தரிசனம் காசு மிச்சமாச்சுல்லே. போடு என்றான் மிகவும் உரிமையுடன்.

அடப்பாவி நாங்க இலவசம் தரிசனம் செய்த வரையில் நோட் பண்ணி வைத்திருக்கிறானே என்று சொல்லிக் கொண்டேன் மனதில்.

என் மனைவி பிச்சைகாரனிடமெல்லாம் சகவாசமா என்பது போல் பார்த்தாள்.

சரியென்று 5 ரூபாய் எடுத்து நீட்டிவிட்டு விலகினேன்.

நில்லு என்றான்.


என்ன என்று கேட்டேன்.

அவன் பையிலிருந்து பத்து 50 காசுகளை எடுத்து நீட்டினான்.

எதுக்கு என்று கேட்டேன்.

உன் வீட்டுக்காரி 50 காசை மிச்சப்படுத்த செருப்பை காரில் விட்டுட்டு வந்துட்டாளே. இதை வச்சிகிட்டு அடுத்த பத்து தடவைக்காவது செருப்பு ஸ்டாண்டில் செருப்பை போட்டுட்டு போ.

சுட்டெரிக்கும் பார்வையில் அவனை முறைத்தேன்.

முறைக்காதே. பிச்சைகாரனுக்கு இரண்டு ரூபாய் போடறே. அங்க ஸ்டாண்டு வச்சி பொழைப்பை பண்றவனுக்கு 50 காசு போட மாட்டேங்கறே.

பி்ச்சைகாரனிடம் பிச்சை வாங்கும் அளவிற்கு வைத்துவிட்டாளே என்று என் மனைவியை பார்வையால் நொறுக்கி தள்ளிக் கொண்டே அவசரமாக அங்கிருந்து அகன்றேன்.

அக்னி
16-07-2007, 10:33 AM
ஹா ஹா ஹா...
சிரிப்பைத் தந்தாலும் சிந்தையில் பொறி கலங்கவைக்கிறது கேள்விகள்...
சோனியின் அழுங்குப்பிடியில் மறுபடி மறுபடி மாட்டும் ஞானி பரிதாப ஜீவன்...

பாராட்டுக்கள்...

அன்புரசிகன்
16-07-2007, 10:42 AM
முறைக்காதே. பிச்சைகாரனுக்கு இரண்டு ரூபாய் போடறே. அங்க ஸ்டாண்டு வச்சி பொழைப்பை பண்றவனுக்கு 50 காசு போட மாட்டேங்கறே.


உண்மை தான். நன்றாக உள்ளன மோகன்

ஷீ-நிசி
16-07-2007, 10:52 AM
சோனியின் பதில்களும்... கேள்வியும் சிந்தனையை தூண்ட வைக்கின்றன....

leomohan
16-07-2007, 11:00 AM
நன்றி ஷீ−நிசி. உங்களிடமிருந்து எப்போதும் பாராட்டே கிடைக்கிறது. நல்ல விமர்சனங்களையும் criticism மும் தாருங்கள். தயங்காமல் ஏற்றுக் கொள்கிறேன்.

lolluvathiyar
16-07-2007, 11:16 AM
நகைசுவையாகவும், அதே சமயம் வித்தியாசமாகவும் இருந்தது.
இரண்டாவது கதையில் நல்ல மெசேஜும் இருந்தது. தொடருங்கள்

அமரன்
16-07-2007, 12:15 PM
;) ;) ;) ;) ;) ;) ;) ;)
நன்றி மோகன்..

alaguraj
16-07-2007, 12:39 PM
உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்.. லியோ... உம்மிடம் ரோஜா தோட்டமே.........

leomohan
16-07-2007, 03:24 PM
நன்றி அமரன், வாத்தியார், அழகுராஜ்.

shivasevagan
17-07-2007, 04:26 PM
அருமையான கதைகள் மோகன் நண்பரே!

leomohan
18-07-2007, 07:42 AM
3. திருட்டு

பையனை பள்ளியில் விட்டு வரும் போது கோவில் வாசலில் மீண்டும் தென்பட்டான் சோனி. யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான். பேசிக் கொண்டிருந்தவர் தலையில் அடித்துக் கொண்டு போய் விட்டார்.

அருகில் சென்று என்ன சோனி நீ என்ன அப்படி கேட்டுட்டே அவர் தலையில் அடிச்சிகிட்டு போறாரே

ஹா ஹா அதுவா என்று சிரித்துவிட்டு பேசத்துவங்கினான்.

நா அவர்கிட்டே என்ன வேண்டிக்கிட்டே பெருமாள்கிட்டேன்னு கேட்டேன்.

அதுக்கு அவன், நான் என்ன வேண்டிகிட்டா உனக்கு என்னன்னு சொன்னான்.

நீ என்ன வேண்டிக்கிட்டாலும் அது நடக்காது.

ஏன் அப்படி சொல்றே.

பின்னே, வரும்போது வெறுங்காலோட வந்தே. போகும்போது யாரோட செருப்பையில்ல போட்டுட்டு போறே - அப்படின்னு சொன்னேன்.

தலையிலே அடிச்சிகிட்டு செருப்பை விட்டுட்டு போயிட்டான் என்று சொல்லி முடித்தான்.

எனக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

சரி அதைவிடு. ஒரு நாள் என் வீட்டுக்கு சாப்பிட வா என்றேன்.

எதுத்கு மயக்க மறந்தை போட்டு என் கண்ணு கிட்னி எல்லாம் புடிங்கிக்க வா

நான் திகைத்து நின்றேன். சமுதாயத்தின் அடிமட்டு நிலையில் இருக்கும் ஒரு பிச்சைகாரன் கூட இலவசமாக செல்வந்தர்கள் அழைத்தால் அதிலும் அவர்கள் காசு பார்க்க ஏதாவது உள்நோக்கம் இருக்கும் என்ற நிலையாகிவிட்டதே. இவன் பார்வையில் செல்வந்தர்கள் எல்லாம் உழைக்காமல் ஊரை ஏமாத்தி பிழைப்பவர்கள் என்று எண்ணம் வந்துவிட்டதே என்று வருந்தினேன்.

சோனி, நான் அப்படி பட்ட ஆளு இல்லேப்பா உழைச்சி தான் முன்னுக்கு வந்திருக்கேன் என்று சொல்லிவிட்டு அகல முயன்றேன்.

என்ன போறே. குடுக்க வேண்டிய இரண்டு ரூபாயை குடுத்துட்டு போ என்றான் உரிமையாக.

leomohan
18-07-2007, 07:52 AM
4. தங்க திருவோடு

சோனியை பார்க்கும் போதெல்லாம் இவனை சுத்தப்படுத்தினால் என்ன என்று நினைப்பேன். நானும் சுகாதாரமாக இருப்பேன். மற்றவர்களும் சுகாதாரமாக இருப்பதையே விரும்புவேன்.
ஆனால் இவனோ கொசு கடித்து தடித்த கால்கள், அழுக்கேறிய தலைமுடி, கிழிசல்கள் என்று கண்றாவியாக இருந்தான்.

என் அழைப்பை ஏற்று ஒரு நாள் வீட்டிற்கு வந்தான்.

அவனுகென்று சோப்பு, சீப்பு, வேட்டி அரை கை சட்டை என்று எல்லாம் வாங்கி வைத்திருந்தேன். ஒன்றும் பேசாமல் குளித்து முடித்து, சவரம் செய்து, வேட்டி சட்டை அணிந்து வந்து அமர்ந்தான்.

பெரிய இலை வைத்து வகை வகையாய் சமைத்து போட்டாள் என் மனைவி.
போட போட சாப்பிட்டுக் கொண்டே இருந்தான். நாங்கள் நால்வர் சராசரியாக 4 நாட்கள் சாப்பிடும் உணவு உள்ளே போயிருக்கும். என் மனைவி, என்னங்க பகாசூரன் மாதிரி சாப்பிடறான் என்று கேட்க, கம்னு இரு, மைக்ரோ வேவ்ல இன்னும் அரிசி வை என்றேன்.

சாப்பிட்டு முடித்தும் வெற்றிலை பாக்கு கொடுத்தேன். அமைதியாக சாப்பிட்டான்.

ஒரு திருப்பளி குடு என்றான்.

நானும் எடுத்து வந்து கொடுத்தேன்.


அவன் கையில் இருந்த அழுக்கேறிய அந்த திருவோட்டை எடுத்து நெம்பினான். சட்டென்று உள்ளிருந்து ஒரு தங்க திருவோடு வெளிய வந்தது. வியந்து நின்றேன்.

அதை எடுத்து என்னிடம் கொடுத்து, நீ போட்ட சாப்பாட்டுக்காக என்று சொன்னான்.

சோனி, இது தங்கமா. எங்கிருந்து கிடைச்சுது உனக்கு.

அதுவா பெருமாள் கொடுத்தார்.

நிஜமாவா. நான் நம்பலை.

சட்டென்று திரும்பி வாங்கிக் கொண்டான். ஏன் பெருமாள் வந்து கொடுக்க முடியாதா என்று கேட்டான்.

சாத்தியமில்லை.

நீ ஆத்திகன் தானே. உன்னை மாதிரி கடவுளை நம்பாத ஆத்திகனை விட கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்திகனே மேல். உன்னை போன்ற நம்பிக்கை இல்லாத பக்தர்களால் தான் கடவுளுக்கே கெட்ட பெயர் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றான்.

என் மனைவி, நீங்க வாய் வெச்சிகிட்டு சும்மா இருக்கக்கூடாது. அந்நியாயமா ஒரு 100 கிராம் தங்கம் போச்சே என்றாள்.

நான் செய்வதறியாது நின்றேன்.

leomohan
18-07-2007, 08:03 AM
5. ஞானியும் சோனியும்.

வெகு நாட்களாக ஞானியையும் சோனியையும் சந்திக்க வைக்க ஆவலாக இருந்தேன்.

சோனியை சந்தித்து திருவோடு விஷயத்திற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். கலியுகத்தில் கடவுள் இருப்பதற்காக எந்த அறிகுறியும் இல்லாததால் தான் கடவுள் நம்பிகையிலும் சந்தேகம் வந்தது என்று கூறினேன். மேலும் பழக்க தோஷத்தால் கோவிலுக்கு போவதும் வணங்குவதுமாகிவிட்டது. இனி நிஜமான கடவுள் பக்தியுடன் கோவிலுக்கு வருவேன் என்று உறுதி மொழி அளித்தேன். நான் ஏன் அவனிடம் இதையெல்லாம் சொன்னேன் என்று எனக்கே தெரியாது.

அவனை அழைத்துக் கொண்டு ஞானியின் வீட்டிற்கு சென்றேன். நல்ல வேளை அவனும் இருந்தான்.

ஞானி இவர் தான் சோனி. உன்னை போலவே அற்புதமான விஷயங்களை சொல்றாரு என்றேன்.

ஞானி ஒரு வணக்கம் போட்டான். மரியாதை தெரியாதவன் அல்ல ஞானி. ஆனால் யாருக்கு மரியாதை காட்ட வேண்டும் என்று அவனுக்கு தெரியும்.

சோனியிடம் இவர் தான் ஞானி. என்னுடைய நீண்ட கால நண்பர். உன் கிட்டே சொன்னேன் இல்லையா என்றேன்.

சோனியும் ஒரு வணக்கம் போட்டான்.

இரண்டு மாமேதைகளை சந்திக்க வைத்ததில் எனக்கு ஒரு மகிழ்ச்சி. ஆனால் விவகாரம் எப்போதும் மாமேதைகள் சந்கிக்கும் போது ஏற்படும் என்பதை நான் அறியவில்லை. மாமேதைகளுக்கும் மமதை உண்டா.

ஏதோ பேசிக் கொண்டிருந்தோம் சட்டென்று சோனி, என்ன தான் நீ சொல்ல ஞானி, என்னை மாதிரி ஒரு மூணு நாள் உன்னால கோவில் வாசல்ல பிச்சை எடுக்க முடியுமா என்று தடாலடியாக ஒரு கேள்வி கேட்டான்.

என்னடா இது ஒரு நாள் முதல்வர் பேட்டியில் அர்ஜூன் கேட்டது போல் ஆகிவிட்டதே என்று அரண்டு போனேன்.

ஞானி அமைதியாக இருந்தான். சே, ஞானி வெறும் மேல்தட்டு ஆலோசர் மட்டும் தான் போலும். திண்ணையில் உட்கார்ந்துக் கொண்டு வேர்ல்ட் எக்கானமிலே என்று வெட்டி பேச்சு பேசும் ஒரு வாய் சொல் வீரர் தானோ என்று தோன்றியது.

நான் எதிர்பார்க்காத விதத்தில் சட்டென்று சரி, அடுத்த வாரம் திங்கள்-புதன் நான் நீ உட்கார்ந்த இடத்தில் பிச்சை எடுக்கறேன் என்றான் ஞானி.

சபாஷ் சரியான போட்டி என்று உள்ளூர மகிழ்ந்தாலும் என்னடா இது பிரச்சனை என்றும் மனதில் தோன்றியது.

மூலை கடையில் மூவரும் தேனீர் அருந்திவிட்டு விடை பெற்றோம்.

lolluvathiyar
18-07-2007, 09:20 AM
அப்பப்பா மோகன் சில கருத்துகளை கேட்க ஆச்சரியமாக இருக்கும்
நீங்கள் நல்ல கருத்துகளை பிச்சைகாரன் திரு வாக்கின் மூலம் வர வைகிறீர்கள்.
ஒருவேலை அந்த பிச்சைகாரர் தான் பெருமாளோ என்னவோ.

அக்னி
18-07-2007, 11:12 AM
இப்படி சஸ்பென்ஸ் வைத்து, காக்க வைத்துவிட்டீர்களே...
பிச்சை எப்பிடிப் போச்சுது...???
:icon_hmm: :icon_hmm: :icon_hmm: யோசனையுடன்...

leomohan
18-07-2007, 04:28 PM
இப்படி சஸ்பென்ஸ் வைத்து, காக்க வைத்துவிட்டீர்களே...
பிச்சை எப்பிடிப் போச்சுது...???
:icon_hmm: :icon_hmm: :icon_hmm: யோசனையுடன்...


ஹா ஹா. அதுக்குத்தான் இந்த கேப். நன்றி அக்னி. பிச்சை விபரம் விரைவில்

மனோஜ்
18-07-2007, 06:21 PM
அருமையான தத்துவங்கள் உணர்த்தும் கதைகள்
நன்றி மோகன் சார் தொடருங்கள்

alaguraj
18-07-2007, 07:24 PM
தொடருங்கள் மோகன்...ஆவலுடன் அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம்... ஜென் கதைகளை விட நன்றாக உள்ளது.

leomohan
19-07-2007, 06:52 AM
நன்றி மனோஜ். நன்றி அழகுராஜ்.

leomohan
19-07-2007, 12:06 PM
6. ஞானி எடுத்த பிச்சை


வியாழன் ஞானியை சந்தித்தேன். பிச்சை எடுத்து கிடைத்த காசுகளை நோட்டாக மாற்றி ஒரு கற்றை ரூபாய் என் கையில் கொடுத்தான்.

போய் சோனிக்கிட்டே கொடு. அவனுக்கு சராசரியா வர வருமானத்தை விட நாலு மடங்கு.


அப்படியா என்று ஆச்சர்யப்பட்டேன். எப்படி ஞானி முடிஞ்சுது உன்னாலே என்றான். சற்று கறுத்திருந்தான். ஆனால் களைத்திருக்கவில்லை. ஞானி எப்போதுமே சுறுசுறுப்பு தான்.

அப்படி கேள் என்று ஒரு அசத்தல் பார்வை கொடுத்தான். மமதை தலை தூக்கியது. மின்னல் வெட்டில் வந்து சென்றது.

ஒரு காகித்தை எடுத்து கோவிலை வரைந்தான். பிறகு விளக்கம் கொடுத்தான்.

இது தான் கோவில். கோவிலை சுத்தி நான்கு தெருக்கள். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு தெரு.

கிழக்கு தெருவில் ஒரு பள்ளிக்கூடம் இருக்கிறது. காலையில் அங்கு உட்கார்ந்தால் நல்ல வசூல். பள்ளிக்கு பிள்ளைகளை கொண்டு விடும் பெற்றோர்கள் நாள் தொடங்கும்போது புன்னியம் செய்யலாம் என்று காசு போட்டு போகிறார்கள். காலையில் அங்கு தான் ஜாகை.

அடே

தெற்கு தெருவில் ஒரு ஆஸ்பத்திரி. மக்கள் நோயால் கஷ்டப்பட்டுதான் ஆஸ்பத்திரி வருகிறார்கள். பிச்சைக்காரனுக்கு காசு போட்டால் புன்னியம் என்று தானம் செய்கிறார்கள். Consulting Hours காலை பத்து மணிக்கு மேல். அப்போது அங்கு சென்று அமர்ந்துக் கொண்டேன்.

அப்புறம்

வடக்கு தெருவில் ஒரு மாதர் சங்கம். பணக்கார பெண்கள் வந்து செல்லும் இடம். ஒரு பெண்மணி 5 ரூபாய் போட்டால் 10 ரூபாய் போட்டு தன் கௌரவத்தை ஏற்றிக் கொள்வார்கள் மற்றவர். நல்ல வசூல். மதியத்திற்கு மேல் இங்கு தான் வாசம்.

அடடே

அப்புறம் மேற்கு தெருவில் ஒரு அரசாங்க அலுவலகம். லஞ்சம் வாங்கி பையை நிறைத்துக் கொண்டு வீடு திரும்பும் அதிகாரிகள் அந்த பாவ பணத்தில் இறைவனுக்கும் ஒரு பங்கு கொடுப்பதாக நினைத்து எனக்கு வாரி வழங்கி போவார்கள்.

அட்ரா சக்கை.

உன் சோனியை போல் தப்பான நேரத்தில் தப்பான இடத்தில் உட்கார்ந்தா அவனுக்கு கிடைச்சது தான் எனக்கும் கிடைச்சிருக்கும்.

ஹா ஹா.


இப்போது தெரியுதா ஞானிக்கும் சோனிக்கும் வித்தியாசம் என்றான் வெற்றி புன்னகையுடன்.

Hats Off ஞானி. ஞானின்னா ஞானிதான் என்று களிப்போடு சொன்னேன்.

பறந்து போனான் ஞானி.

lolluvathiyar
19-07-2007, 03:30 PM
அப்புறம் மேற்கு தெருவில் ஒரு அரசாங்க அலுவலகம். லஞ்சம் வாங்கி பையை நிறைத்துக் கொண்டு வீடு திரும்பும் அதிகாரிகள் அந்த பாவ பணத்தில் இறைவனுக்கும் ஒரு பங்கு கொடுப்பதாக நினைத்து எனக்கு வாரி வழங்கி போவார்கள்.


ஒரு வருசத்துல கோடிஸ்வர ஆயிரலாமே

leomohan
21-07-2007, 01:33 PM
7. அட்ராசக்கை

சோனியை சந்தித்து ஞானி கொடுத்த கற்றை ரூபாய் நோட்டுகளை தந்தேன்.

பார்த்தாயா ஞானியின் சாமார்த்தியம் என்றேன் நகைப்புடன்.

என்னிடமிருந்து வாங்கி அதை கோவில் உண்டியலில் போட்டான்.

ஏன் என்று ஆச்சர்யத்துடன் கேட்டேன்.

நான் உழைச்சி சம்பாதிக்காத காசு எனக்கு சேராது என்றான்.

ஹா ஹா பிச்சை எடுப்பது உழைத்து சம்பாதிப்பதா என்று கேட்டேன்.

அதை பத்தி அப்புறம் பேசுவோம் என்றான்.

சரி இப்ப என்ன சொல்றே ஞானியின் சாமார்த்தியம் பற்றி என்றேன் அவனை வெறுப்பேற்றுவது போல.

ச்சோ ச்சோ உன் ஞானியை விட முட்டாள் நான் ஒலகத்தில பாத்ததில்லே என்றான்.

என்ன என்றேன் அதிர்ச்சியுடன்.

ஆமா. மூனு நாளு இது மாதிரி பிச்சை எடுத்திருந்தான்னா பரலோகம் போயிருப்பான் உன் ஞானி.

உன் ஞானியா. ஞானி என்னடான்னா உன் சோனி என்கிறான், இவன் உன் ஞானி என்கிறான். விளையாடறாங்களா என்று மனதில் நினைத்துக் கொண்டே ஏன் என்று வினவினேன்.

பின்னே. மூனு நாளு பிச்சை எடுக்கறது சுலபம். ஒரு வாரம் இருந்திருந்தா செத்தே போயிருப்பான் அவன்.

ஏன்

கிழக்கால காலையில் உட்கார்ந்தா வெயிலு. மறுபடியும் மேற்கால காலையில் உட்கார்ந்தா வெயிலு. வாட்டி வதக்கிடும்.

அப்ப மாதர் சங்கம்.

ஹா ஹா. அது மாசத்துல மூனு நாளு தான் நடக்குது. இந்த வாட்டி இவன் போய் சேர்ந்தான் அங்கே.

அப்ப அரசாங்க அலுவலகம்

லஞ்சம் வாங்கி வாழற பொழப்பு ஒரு பொழப்பாய்யா. அதுல கிடைச்ச பணத்துல எனக்கு பிச்சை கூட வேணாம்.

அப்ப மருத்துவமனை

ஏம்பா இப்ப தான் டென்கு, ப்ளேக், மூளைக்காச்சல், இன்னும் என்னன்னவோ தொத்து வியாதியெல்லாம் வருதே. ஆஸ்பத்திரி குப்பை பக்கத்துல உக்காந்து வியாதிக்காரங்களோட திரிஞ்சா வியாதி வராதா. அப்புறம் எப்படி லீவு போடாமா பிச்சை எடுக்க முடியும்.

திகைத்து நின்றேன்.

இப்ப தெரியுதா ஏன் ஞானி பரலோகம் போயிடுவான்னு சொன்னேன்னு. ஞானிக்கு எல்லாம் தெரியும் தான். ஆனா என் வேலை எனக்கு அவனை விட நல்லா தெரியும். போய் சொல்லு உன் ஞானிகிட்டே.

ஞானி கூக்ளி போட்டு என்னை அவுட் செய்தான் என்று நினைத்தால் சோனி என் முதல் பாலில் சிக்ஸர் அடித்துவிட்டானே என்று நினைத்து சிலையாக நின்றேன்.

lolluvathiyar
21-07-2007, 01:41 PM
எப்பவுமே சோனி தான் ஜெயிப்பாரு (இனியும் மரியாதை தரலீனா வம்பா பொயிடும்) போல இருக்கு.

leomohan
21-07-2007, 01:46 PM
ஹா ஹா. நன்றி வாத்தியார்.

கந்தனை கூட நாம் அவன் என்று தானே அழைக்கிறோம்.

மனோஜ்
21-07-2007, 02:11 PM
சோனி சோனியாஇல்லாம ஞானசோனிய செயல்படுவது அருமை

leomohan
21-07-2007, 06:07 PM
நன்றி மனோஜ் அவர்களே.

பாரதி
21-07-2007, 10:49 PM
வல்லவனுக்கு வல்லவன் வையத்தில் உண்டு என்று கூறுவதை நிரூபிக்கும் விதத்தில் இருக்கிறதே....! சிறப்பாக கதை சொல்கிறீர்கள் மோகன்!!

leomohan
22-07-2007, 06:57 AM
நன்றி பாரதி.

leomohan
24-07-2007, 07:09 PM
8. கடவுளுக்கே காவல்

வழக்கம் போல கடனுக்கு கோவிலுக்கு போகாமல் நிஜமாகவே கடவுளை காண தோன்றியதால் அன்று கோவிலுக்கு போனேன். அருகிலிருந்து பிள்ளையார் கோவிலுக்காவது சென்று வரலாம் என்று போனவன் என்னையும் அறியாமல் பெருமாள் கோவில் வாசலில்.

என்ன சோனி எப்படி இருக்கே

பலே

சட்டென்று அவனுடைய திருவோட்டை எட்டி பார்த்தேன். இரண்டு இரண்டு ரூபாய் நாணயங்கள், ஒரு சில ஒரு ரூபாய் நாணயங்கள்.

என்ன வசூல் கம்மியா இன்னிக்கு?

ஆமா. இன்னிக்கு கூட்டம் கம்மி தான்.

அப்ப நேத்து முந்தாநேத்து இதுக்கு முன்னால கிடைச்சதெல்லாம்

அட நான் என்ன உன்னை மாதிரி குடும்பஸ்தனா, புள்ளையா குட்டியா வீடா வாசலா வாகனமா கடனா. அந்நியன்னிக்கு வசூலாகறதை செலவு பண்ணிடுவேன்.

உன் செலவை விட ஜாஸ்தியா வசூலாயிடிச்சின்னா

அதை உண்டியலில் போட்டுடுவேன்

என் கண்களை அகல விரித்து ஆச்சர்யத்தை வெளிப்படையாக காட்டினேன். ஞானி ஸ்டைலில் என்னை அசட்டை செய்தான் சோனி.

ஒரு விஷயம் சொல்லு சோனி. இத்தனை புத்திசாலியா இருக்கே ஏதாவது வேலை வெட்டி செய்யக் கூடாதா.

வேலை செஞ்சிகிட்டுதானே இருக்கேன்.


என்ன வேலை செஞ்சிகிட்டு இருக்கியா

ஆமா

என்னடா இது குண்டை தூக்கி போடுகிறான். ஏதாவது டிடெக்டிவ் வேலையா என்று வியந்தேன்.

எங்கே

இங்க தான்

பிச்சை எடுக்கறது ஒரு வேலையா

நான் பிச்சை எடுக்கறதை சொல்லலை

பின்னே

நான் தான் பெருமாளுக்கு காவல்.

ஹா ஹா. உலகத்தை காக்கற பெருமாளுக்கே நீ காவலா. நல்ல தமாஷூதான்.

சிரிக்கிறியா நீ. கொஞ்ச வருஷத்துக்கு முன்னால என்னோட ஒரு பெரியவர் இருந்தாரு. ஒரு நாளு ராத்திரியிலே உள்ள இருந்த ஐம்பொன் சிலையை நாலு பேரு திருடிகிட்டு ஓடப்பாத்தாங்க. ஏய் புடிடா புடிடான்னு கத்திக்கிட்டே அந்த பெரியவர் ஓடினாரு. நாங்களும் ஓடினோம். சிலையை வச்சிருந்தவன் காலை புடிச்சிகிட்டாரு பெரியவரு. அவன் அவரோட கழுத்தை மெதிசிட்டான். அப்புறம் நாங்கெல்லாம் திருடங்களை புடிச்சி சிலையை காப்பாத்திட்டோம். சாவற நேரத்துல அந்த பெரியவரு சொன்னாரு, தம்பி, நாமெல்லாம் பிச்சைக்காரங்க இல்லை. உலகத்தை பெருமாளு காப்பாத்தறாரு, நாம பெருமாளை காப்பாத்தறோம் அப்படின்னு.
அந்நிலேர்ந்து நான் பெருமாளுக்கு காவல் காரன். எனக்கு சம்பளம் கொடுக்கறது உங்களை மாதிரி ஆளுங்க.

ஞானியும் சோனியும் பேசி முடித்த பிறகு நான் என்றாவது பேசியிருக்கிறேனா. இனம் புரியாத ஒரு உணர்ச்சியுடன் அவன் 8 ரூபாய் எடுத்துக் கொண்டு பாக்கியை உண்டியலில் போட்டுவிட்டு அருகிலிருந்த உணவகத்தை நோக்கி நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன். வெகு நேரமாய்.

lolluvathiyar
25-07-2007, 09:53 AM
சோனி எங்கேயோ போயிட்டு இருக்காரு
அநேகமா விரைவில் மோகனும் பெருமாளுக்கு காவல் புரிய ஆசை படராரோ என்னவோ

leomohan
25-08-2007, 09:25 AM
சோனி எங்கேயோ போயிட்டு இருக்காரு
அநேகமா விரைவில் மோகனும் பெருமாளுக்கு காவல் புரிய ஆசை படராரோ என்னவோ

இல்லை வாத்தியார். பெருமாள் ஆகாவிட்டாலும் மனிதராக மக்கள் ஆகவேண்டும் என்பதே என் விருப்பம். உலகில் அனைத்து திசைகளிலும் நடந்துக் கொண்டிருக்கும் தீவிரவாதம் மனதை வருத்துகிறது.

ஒரு மனிதனின் உயிரை எடுக்க எவருக்கும் உரிமை இல்லை. இந்த சூழ்நிலைகளில் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களும் தீவிரவாதிகள் தான்.

மிகவும் நுட்பமான பிரச்சனைகள் இருக்க ஆயுதம் எடுத்து பல வேண்டாத பிரச்சனைகளுக்கு மக்கள் அழைப்பு விடுக்கிறார்கள்.

மனோஜ்
25-08-2007, 09:30 AM
கடவுலை பாது காக்கும் காவலர்கள் அருமை மோகன் சார்

இளசு
29-08-2007, 07:59 PM
. மனிதராக மக்கள் ஆகவேண்டும் என்பதே என் விருப்பம். உலகில் அனைத்து திசைகளிலும் நடந்துக் கொண்டிருக்கும் தீவிரவாதம் மனதை வருத்துகிறது.

ஒரு மனிதனின் உயிரை எடுக்க எவருக்கும் உரிமை இல்லை. இந்த சூழ்நிலைகளில் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களும் தீவிரவாதிகள் தான்.

மிகவும் நுட்பமான பிரச்சனைகள் இருக்க ஆயுதம் எடுத்து பல வேண்டாத பிரச்சனைகளுக்கு மக்கள் அழைப்பு விடுக்கிறார்கள்.

உண்மைதான் மோகன்..

ஹைதராபாத்தில் மாண்டதுபோல்
நம் குழந்தைகளும் மாண்டால்தான்
விழிப்போம் என வாளாவிருக்கக்கூடாது..

இதை அடியோடு அனைவரும் சேர்ந்து அகற்றும் காலம் வந்துவிட்டது!

ஓவியா
01-09-2007, 11:09 PM
நான் மிகவும் விரும்பி படிக்கும் ஒரு திரி இது, அனைத்தும் பதிவுகளும் நீங்கள் பஹரீனிலிருந்து லண்டனுக்கு வந்து என்னை கொட்டுவது போல் சுல் என்று உறைக்கும்.

உறைப்பான உங்கள் பதிவுகளுக்கு எனது நன்றிகள். என்றும் தொடருங்கள்.

திருவள்ளுவர் எழுதிய குறள்கள் போல் இவை அட்லீஸ்ட் ஒரு 100 பயனுல்ல கருக்களை அடங்கிய ஒரு புத்தகமாக வெளிவர எனது வாழ்த்துக்கள்.

leomohan
02-09-2007, 05:51 AM
நான் மிகவும் விரும்பி படிக்கும் ஒரு திரி இது, அனைத்தும் பதிவுகளும் நீங்கள் பஹரீனிலிருந்து லண்டனுக்கு வந்து என்னை கொட்டுவது போல் சுல் என்று உறைக்கும்.

உறைப்பான உங்கள் பதிவுகளுக்கு எனது நன்றிகள். என்றும் தொடருங்கள்.

திருவள்ளுவர் எழுதிய குறள்கள் போல் இவைஅட்லீசஸ்ட் ஒரு 100 பயனுல்ல கருக்களை அடங்கிய ஒரு புத்தகமாக வெளிவர எனது வாழ்த்துக்கள்.

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஓவியா.

இளசு
06-09-2007, 08:21 PM
மோகன்

சென்ற வாரம் குமுதத்தில் ஞானி யார் என்ற கேள்விக்கு
வைரமுத்து அளித்த பதில் நன்றாக இருந்தது..

உங்களுடன் பகிர ஆசை:

நான்மறையைக் கற்றவன் அல்லன் ஞானி;
நான் மறையக் கற்றவனே ஞானி

leomohan
14-09-2007, 06:26 AM
மோகன்

சென்ற வாரம் குமுதத்தில் ஞானி யார் என்ற கேள்விக்கு
வைரமுத்து அளித்த பதில் நன்றாக இருந்தது..

உங்களுடன் பகிர ஆசை:

நான்மறையைக் கற்றவன் அல்லன் ஞானி;
நான் மறையக் கற்றவனே ஞானி

நல்ல வரிகள் இளசு. நன்றி.

s_mohanraju
14-09-2007, 11:31 AM
ஒரு மனிதனின் உயிரை எடுக்க எவருக்கும் உரிமை இல்லை. இந்த சூழ்நிலைகளில் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களும் தீவிரவாதிகள் தான்.

.

கன்னத்தில் பலாரேன அரைந்தார்பொல உள்ளன இந்த வரிகள்

ஞானி சொனியுடன் பழகி உங்களுக்கும் கொஞ்ச விஷயங்கள் தெரிய ஆரம்பித்துவிட்டதே