PDA

View Full Version : இதயத்தில் முள்சிவா.ஜி
14-07-2007, 09:19 AM
உள்ளங்காலில்
முள்ளால் ரணம்!
முளையிலேயே
கிள்ளாமல் விட்டதால்
எல்லாமே ஆனது விஷம்!
எடுக்க வேண்டுமாம் காலை
மறுத்தால்
அடுத்து வருமாம் நமனின் ஓலை!
கால் வெட்டுப்பட்டதால்
முடங்கிவிட்டது
காலனின் ஓலை!
தொடங்கிவிட்டது
காதலின் வேலை!
காலிழந்ததால்
காதலிலழந்தாய்−என்ற
காதலியின் சொல்..என்
இதயத்தில் முள்!
மீண்டுமொரு முள்தைத்த,
நாள் பட்ட
சீழ்பட்ட
கால் வெட்டிய கதை
இப்போது இதயத்துக்குமா?
சீழ் பிடித்த இதயம் சீராகுமா....?
அழைப்புமணியோசை........
எவனாயிருக்கும்....?
எமனாயிருக்குமோ.......?

அமரன்
14-07-2007, 09:25 AM
சிவா..மீண்டும் ஒரு அருமையான கவிதை. நமன் யமனின் இன்னொரு பெயர். இதுபோன்ற பல சொற்களை இன்னும் அறிமுகப்படுத்துங்கள்.

காலில் காயம்.
காலை அகற்றினேன்
காதல் அகன்றது..

இதயத்தில் காயம்
அகற்றமுடியுமா..
காதலையும்−உன்
நினைவுகளையும்...

அடிக்கும் மணி
காதலன் மணியாகலாம்.
காலனின்
மணியாக கூடாது.

வாழ்த்துக்கள்.

அக்னி
14-07-2007, 09:26 AM
உடலின் காயம் ஆறினாலும்,
மனதின் காயம் ஆறாதே...

அழகைப் பார்த்தா,
வலிமை பார்த்தா,
சொத்துப் பார்த்தா,
புகழ் பார்த்தா,
காதலித்தாய்..?

நான் பார்க்கவில்லையே...
காயம் கொண்ட உடல்... வாழ்கின்றது...
காயம் பட்ட மனது, உயிரோடு தினமும் சாகின்றது...

எமனைத் தடுத்த, இழப்பு...
காதலை எடுத்துப் போனதே...
இறைவா!
கண்ணீர் ஊற்றாய் சுரக்கும் கொடையை
எடுத்துவிட்டு,
எனது இழப்பை நிரவிவிடு...
காதலை திரும்பத் தந்துவிடு...

இப்படி ஆகுமென்றிருந்தால்,
காலையும் காதலையும் இழக்காமலே,
காலனை அணைத்திருப்பேன்...
உன் நினைவிலாவது வாழ்ந்திருப்பேன் உன்னோடு...

அருமையான கவி சிவா.ஜி...
பாராட்டுக்கள்....

மனோஜ்
14-07-2007, 09:31 AM
சிறப்பான கவிதை நண்பரே
காலில் தைத்தது மனதில் உருவ குத்தியது கொடுமைதான்

இதயம்
14-07-2007, 09:35 AM
காதலின் தகுதியாக புற அழகை நினைப்பவர்களுக்கு நெஞ்சில் நெருஞ்சி முள்ளின் வேதனையை தரும் கவிதை. நல்லதொரு கருத்தை நயம்பட உரைத்த (சிவா.)ஜிக்கு ஒரு ஜே..!!

aren
14-07-2007, 09:37 AM
அருமை சிவா அவர்களே. வார்த்தைகளின் ஜாலம் அருமை. பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

சிவா.ஜி
14-07-2007, 09:44 AM
மிக்க நன்றி அமரன்,அக்னி,மனோஜ்,இதயம் மற்றும் ஆரென் அனைவருக்கும். அமரனின் பதில் கவிதையும்,அக்னியின் அசத்தல் கவிதையும் அற்புதம். நாமனைவரும் மன்றப்பள்ளியின் மாணவர்களென்பதில் மிக மிக பெருமை கொள்கிறேன்.காதலின் வலியை இதயத்தைத்தவிர யாரால் அதிகம் உணர முடியும். நன்றி இதயம் அவர்களே.

இனியவள்
14-07-2007, 09:45 AM
கவிதை அருமை சிவா

தைக்கப் குத்தப் பட்ட
முள் எனது காலில்
அல்ல உயிருக்கு என
நீ என்னை வெறுத்து
ஓதுக்கிய பின்னல்லவா
தெரிந்து கொண்டேன்..

உள்ளத்தைக் காதலித்தாய்
என நான் நினைத்திருக்க
நீ காதலித்தது உருவத்தை
என ஒரு சிறு விபத்தால்
எனக்குணர்த்த பெரும்
விபத்தைத் தவிர்த்துக்
கொண்டேன்

சிவா.ஜி
14-07-2007, 09:47 AM
நன்றி இனியவள். சிறு விபத்து பெரு விபத்தை தவிர்த்தது...உடனுக்குடன் வந்த பதில் கவிதை அழகு பாராட்டுக்கள்.

ஓவியன்
20-07-2007, 02:08 PM
எவனாயிருக்கும்....?
எமனாயிருக்குமோ.......?

அருமையாக வலிகளை வார்த்தைகளில் வடித்தமைக்குப் பாராட்டுக்கள் சிவா.ஜி!

உள்ளத்தைப் பார்த்து வந்ததெங்கள் காதல் என்னும் பலர், உண்மையில் இந்தக் கவிதையில் உள்ளவேறு நடந்து கொள்வது உண்மையில் கொடுமையான ஒரு விடயமே..........

அவர்களுக்கு சாட்டையடி கொடுக்கட்டும் உங்கள் வரிகள்..........

சிவா.ஜி
21-07-2007, 06:54 AM
நன்றி ஓவியன். வலியிலேயே பெரிய வலி புறக்கணிப்புதான். அதுவும் காதல் மறுக்கப்படும்போது வேதனை கூடுகிறது. அழகான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி ஓவியன்.