PDA

View Full Version : வழிமாறிய கால்தடங்கள்



ஆதவா
08-07-2007, 04:54 AM
வழிமாறிய கால்தடங்கள் − சற்றே பெரிய சிறுகதை

" எனக்கு பயமா இருக்குடா" அழகு ராஜ் வேர்த்து விறுவிறுக்க சொன்னான். அவன் பார்வையில் பயம் நடனமாடுவது தெளிவாகத் தெரிந்தது.


" பயப்படாதடா!, இந்த பயம் மொத்தல்லயே இருந்திருக்கணும். இப்போ வருத்தப்பட்டு பிரயோசனமில்லை. என்னிக்கி நான் சொல்லி நீ கேட்டிருக்க?" கொஞ்சம் அதட்டலாகவே பதில் கொடுத்ததில் அழகு கொஞ்சம் மிரண்டு போய்விட்டான். பாவம். அவனைச் சொல்லி குற்றமில்லை. குற்றம் அவனை ஒழுங்கு படுத்தாத சமூகத்தின் மேலும் அவன் வயதின் மேலும் தான்.


"ரிசல்ட் கொஞ்ச நேரத்தில வந்திடும். எல்லாம் நல்லபடியாத்தான் இருக்கும். ஏன் கவலைப்படற? நம்மூர்ல இந்த டாக்டர்தான் பெரிய டாக்டர். நல்ல ட்ரீட்மெண்ட். நல்ல ரிசல்ட். யூ டோண்ட் ஹேவ் டு வொரி"


அவனுக்கு ஆறுதல் சொல்லும் அதே நேரத்தில் எனக்கும் பயம் இருந்தது உண்மைதான். அழகுராஜ் நெருங்கிய நண்பன் என்றாலும் சில விஷயங்களில் அவனை ரொம்ப தட்டி கேட்கமுடியாமல் அவன் கொடுத்த பணம் என் வாயை அடைத்தது. அன்றைய தினத்தில் நான் சொல்லச் சொல்ல கேட்காமல் சென்றது எனக்கே சற்று உறுத்தலாகத்தான் இருந்தது. பிரச்சனை இல்லாமல் இருக்கும் என்று நினைத்தேன். நினைப்பதெல்லாம் நடப்பதில்லை என்று ஒரு பழமொழி உண்டு. அதற்கேற்பத்தான் இன்று மருத்துவமனையில் அமர்ந்துகொண்டு வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஒருவேளை ஆம் என்று டாக்டர் சொல்லிவிட்டால்??? நினைத்துப் பார்க்கவே கொடுமையான தருணம் அது. அழகு ராஜை இழக்க எனக்கும் தைரியமில்லை. என்றோ ஒருநாள் அவன் கொளுத்திய ஐந்துநிமிடத்திரி இன்று அவன் வாழ்க்கையையே எரித்துவிட்டால்..... அம்மம்மா.. கடவுளே! டாக்டரிடம் இருந்து நல்ல தகவல் தான் வரணும்..


சிறிது நேரத்தில் டாக்டர் மோகன்ராஜ் வெளியே வந்தார். எனது இதயம் என் வீட்டு சினி ஃபேனைப் போல அதிவேகத்தில் அலறியடித்து சுற்றியது.


" மிஸ்டர் கதிர்!"


" எஸ் டாக்டர் "


" ப்ளீஸ் கம் "


உள்ளம் நடுங்கியது. என்ன சொல்லப்போறாரோ?


" மிஸ்டர் கதிர். நீங்க எதிர்பார்க்காத ரிசல்ட்... எஸ். எச்.ஐ.வி தான்.. அவர் கொஞ்சம் கேர்புல்லா இருந்திருக்கலாம். "


" ஷிட்... ரியலி? வாட் ஆர் யு சேயிங் டாக்டர்? "


" மிஸ்டர் கதிர். பாஸ்ட் இஸ் பாஸ்ட்... ஃபர்கட் இட். அடுத்து என்ன பண்ணப்போறீங்க அப்படீங்கறத பாருங்க.. டேக் கேர் அஃப் ஹிம். "


எனக்குள் ஏதோ ஒரு உருவம் ஆடியது. டாக்டர் என் போன்றோரின் உணர்ச்சிகளை அதிகம் பார்த்திருப்பார் என்று நினைக்கிறேன். எழுந்து சென்று விட்டார்... மெல்ல வெளியே வந்தேன்.


" என்னடா சொன்னார்?" ஆர்வமாகக் கேட்டான் அழகுராஜ்..


என்ன சொல்ல? உனக்கு எயிட்ஸ் டா என்றா? இல்லை எதுவும் இல்லை என்று மறைத்துச் சொல்வதா? என்றோ ஒரு நாள் வேடிக்கையாக "உனக்கும் எய்ட்ஸ் வரும்டா" என்று விளையாண்ட பருவங்கள் இன்று நிஜமாய் நடப்பதை அறிந்ததா? யார் தவறு? உள்ளம் கெடக் கெட காம பானம் ஊற்றிய சினிமாக்களின் தவறா? ஊறிப்போன பழத்தோடு பயணிக்கும் சமூகத்தின் தவறா? இப்போது அதுவல்ல பிரச்சனை. அழகிடம் எப்படி சொல்வது ?


" சொல்லுடா. பிராப்ளம் இல்லைனுதானே சொன்னார்?"


" அழகு! நீ உன்னுடைய கடமைகளை, இனிமே நீ உன் குடும்பத்துக்கு என்ன செய்யணும்கறத மட்டும் நினைச்சுக்கோடா.. எஸ்... யுஆர் எ எச்.ஐ.வி பேஷண்ட். "


சொல்லி முடித்ததும் எனக்குள் தொண்டை அடைபட்டுப் போனது. கண்களில் ஏனோ நீர் வரவில்லை. ஆனால் அழகு அழுதே விட்டான். அவனுக்குள் உண்டான பயம் பீறிட்டி உடைந்து அழுகையாக வந்தது. ஆனால் ஒன்று கவனிக்க வேண்டும். இந்த கரு அவன் விதைத்தது. அது வளர்ந்து அவனையே எட்டி உதைத்திருக்கிறது. திடீர் சாவோ அல்லது வேறு நோய் வந்து செத்தாலோ கூட மனம் நிம்மதியாக இருந்திருக்கும் போலும்... இந்த மரண வருகை மிகக் கேவலமாயிற்றே.. பிழைக்குத் தூண்டிய இதே சமூகம் தான் இவனைத் தூற்றும். காறித் துப்பும்... நாசூக்காக சென்று வந்தவன் கூட ஏளனம் செய்வான். சமூகப் பார்வையின் நிறமே மாறிவிடும்..



ஏதோ ஒரு சுகத்தை இழந்தவாறே வீட்டிற்க்கு வந்து சேர்ந்தேன். முன்னதாக அழகுராஜை அவன் வீட்டில் பத்திரமாக இறக்கிவிட்டுவிட்டு வந்தேன். அவன் வீட்டிற்கு இந்த விஷயம் தெரியாமலே இருக்கட்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம்.


" ஜெஸி, சாப்பாடு வேண்டாம். நான் தூங்கப்போறேன். கொஞ்சம் மனசு சரியில்லைப்பா. மாடியில தூங்கறேன். நீ கீழயே படுத்துக்கோ"


" ஏய் என்னப்பா ஆச்சு... எனிதிங்க் பிராப்ளம்? ரொம்ப டல்லா இருக்கியே? "


" இல்லடா, காலையில பேசலாம். குட் நைட்"


அவள் பதிலை எதிர்பாராமல் மாடிக்கு வந்து படுத்துவிட்டேன். சோகமோ, சுகமோ, மாடியில் வந்து வானத்தைப் பார்த்தவாறு படுப்பது என் வழக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு, திருமணத்திற்குப் பிறகு சோகம் தழுவி மாடியில் படுப்பது இதுவே முதல் முறை..


" டார்லிங்! என்னாச்சு உனக்கு? ஏன் மெத்தைக்கு வந்துட்டே?"


" ப்லீஸ் டா, என்னைத் தனியா விடு. "


" கதிர், லுக்! நீதானே சொன்னே? மனசுல ஏதாவது போட்டு அழுத்தினா வலிக்கும், அதையே இன்னொருத்தர் சேர்ந்து தூக்கினா வலி குறையும்னு... இப்போ ஏம்மா சோகத்தில் இருக்கே? எங்கிட்ட சொல்லமாட்டியா?"


" ஜெஸி! என்னோட பிரண்ட் அழகு இருக்கான்ல?"


" ஆமா"


" அவனுக்கு எச்.ஐ.வி அட்டாக் ஆகியிருக்குப்பா"


" அடக்கடவுளே! "


"ம்ம்... என்னோட சின்னவயசில இருந்து பழக்கம். திடீர்னு இப்படி ஆகும்னு நான் நெனச்சுக் கூட பார்க்கல,"


" எப்படி ஆச்சு கதிர்?. அழகுராஜ் ரொம்ப நல்லவர் தானே? பொம்பள சகவாசம் ரொம்ப ஜாஸ்தியா?"


" ஏன்? பொம்பளங்க மட்டும் தானா எயிட்ஸ் கு காரணம்? "


" இல்லை.. பொதுவா அப்படித்தானே சொல்றாங்க"


" உண்மைதான் ஜெஸி, ரெண்டுமூனு மாசத்துக்கு முன்னால அவன் எங்கயோ ஒரு பொண்ணுகிட்ட போய்ட்டு வந்திருக்கான்.. எனக்குத் தெரியாதுடா.. எந்த விஷயம்னா கூட அவன் எங்கிட்ட சொல்வான். இது மட்டும் மழுப்பிட்டான் ராஸ்கல். தெரிஞ்சிருந்தா போக விட்டிருக்க மாட்டேன்"


" கதிர், அவங்க வீட்டுக்கு இது தெரியுமா?"


" இல்லப்பா.. இன்னிக்குத்தான் ரிசல்ட் கிடச்சுது. ஒருவாரமாவே உடம்பு சரியில்லைன்னு இருந்தான். நான் தான் அவனை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனேன். அப்பவே ஒரு டவுட்... சரி ண்ட்டு ப்ளட் செக்கப் பண்ண கூட்டிட்டுப் போனேன்.... எதிர்பார்க்காத ரிசல்ட் டா... சே! பாவம் அவனோட ஃபேமிலி... நல்லவேளை. அவனுக்குக் கல்யாணம் ஆகல. அவங்கம்மாகிட்ட எப்படிடா போய் நான் முழிப்பேன்? "


" ஓ!! விடுடா... தப்பு பண்ணினா இப்படித்தான்... தண்டனை கிடைக்காம போகாது. அவனுக்காக நீ ஏன் வருத்தப்படற? மொதல்ல அந்தாளோட பழகறத நிறுத்து... "


" இல்லமா... அழகு எனக்கு ரொம்ப க்ளோஸ் பிரண்ட். நெறைய செஞ்சிருக்கான்.. இந்த நேரத்தில அவனுக்குத் தகுந்த உதவி செய்யலைன்னா அது நல்லா இருக்காது"


" கதிர்!! நான் இப்பவே சொல்றேன். உதவி கிதவின்னு என்கிட்ட எதுவும் கேட்காதே! நேத்திவரைக்கும் அழகுராஜ் மேல ஒரு நல்ல அபிப்ராயம் வெச்சிருந்தேன். சே! இப்படிப் பண்ணுவான்னு நெனச்சுக் கூட பார்க்கல. நீயும் ஏதாவது ஹெல்ப் பண்றேன்ன்னு அவன் வீட்டுக்குப் போயிட்டு இருக்காதே! புரிஞ்சுதா?"


" இல்ல ஜெஸிம்மா... தப்பு அவன் பேர்ல இல்ல. இந்த சொசைட்டி பேர்லதான்.."


" இந்த திசை திருப்பி விடற வேலை என்கிட்ட நடக்காது... நான் கீழே போறேன்.. ஒழுங்கா வீட்டுக்குள்ளே வந்துசேரு."


ஜெஸிகா ஒரு மாதிரியான டைப்.. பழகினால் நன்றாக பழகுவாள். தூக்கி எறிந்துவிட்டால் அவ்ளோதான்.. அப்பறம் தடுத்து நிறுத்த முடியாது. அவன் அந்த இடத்துக்குப் போகறேன் என்று சொல்லும்போது நானும் இருந்தேன் என்று சொன்னாலே ரெளத்திர தாண்டவம் ஆடிவிடுவாள். அவளை புரிந்துகொண்ட ஒரே மனிதன் நான் மட்டுமே... பேசாமல் வீட்டிற்குள் வந்து படுத்துக் கொண்டேன். எனது உணர்வுகளைப் புரிந்துகொண்ட அவள், என்னுடைய உறக்கத்திற்கு பங்கமாக வந்து அமையவில்லை..


என்னுடைய நீண்ட கால தோழன் அல்லவா? அதனால் மனது ரொம்பவே பாதித்திருந்தது. அந்த பாதிப்பின் விளைவு, கொடும் கனவாக மாறியது.


பூமியின் மேற்பகுதியில் மிக நீண்ட விரிசல், அதிலிருந்து சில எறும்பினங்கள் ஊறிக்கொண்டு வந்தன.. மெல்ல அது கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து பெரும் மிருகமாக மாறியது.. அதற்கு மூக்கில்லை முழியில்லை,. கண்கள் நத்தையின் கண்கள் போல ஏதோ இரு குச்சியின் நுனியில் இருந்தது. 360 டிகிரிக்கும் திருப்பிக் கொள்ளலாம். காதுகள் கிடையாது. முகமெல்லாம் பெரியம்மை வந்ததுபோல தழும்புகள். சிவப்பு வர்ண ரிப்பன் கட்டியிருந்தது. எனக்குப் பின்னே ஒளிந்துகொண்டிருந்த அழகுராஜ்ஜை உற்று நோக்கியது... நான் என் உயிரை எடுத்துக் கொள்ளச் சொன்னேன். அது எனது இரத்தத்தைக் கீறிப்பார்த்துவிட்டு யூ ஆர் ரிஜக்டட் என்று சொல்லி என்னைத் தள்ளிவிட்டது.... நான் விழுந்து அதை கவனிக்கிறேன்.... அதன் முகத்தில் புதிதாக வாய் உண்டாகி அதனுள் அழகுராஜ் போய்க்கொண்டிருப்பது தெரிந்தது..


என்னே கொடுமையான கனவு இது. உடன் பழகிய நமக்கே இப்படியென்றால் அவனுக்கு எப்படி இருந்திருக்கும்? இந்நேரம் என்ன செய்துகொண்டிருப்பான்? அழுதுகொண்டிருப்பானா? அவன் அம்மாவிடம் சொல்லியிருப்பானோ? இது அதைவிடக்கொடுமையல்லவா? நாளை ஒருநாள் என்னிடம் கேட்பார்களே! நீ என் மகனுக்கு நண்பனாக இருந்து வாங்கித் தந்த பரிசுதானா இந்த எயிட்ஸ்? நீங்கள் இருவரும் தானா போய் வந்தீர்கள்?


அய்யோ இந்த கேள்வி எழுந்தால் எனக்கும் எத்தனை பிரச்சனைகள்? ஊரிலுள்ளவர்கள் சேர்ந்துகொள்வார்கள். எங்கும் ஜோடியாக திரிந்தவர்கள் விபச்சாரத்திற்கும் ஜோடியாகத்தான் சென்றிருப்பார்கள் என்று வதந்தி பரவுமே! இந்த விஷயத்தை நான் நினைக்கவேயில்லை.. ஜெஸி என்னை புரிந்துகொள்வாள் தான். என்றாலும் என்னைப் பிடிக்காத உறவினர்கள் அவளுக்கு மூளைச்சலவை செய்துவிட்டால் நான் தேவையில்லாமல் வெளுத்துவிடுவேனே? ஐந்துநிமிடத் தவறு, இப்போது அழிக்கப்போவது இரு குடும்பத்தையா?


" கதிர், ரொம்ப நேரம் தூங்காதப்பா! ஆபீஸுக்கு நேரமாகலையா?"


" ம்ம்..... தோ கிளம்பறேன்."


ஒருவித சோகக் களை தீராமலே எழுந்து குளியலறை சென்றேன்.... உடலோடு மனதும் ஈரமானது.... கண்ணீரானது ஷவரின் நீரில் காணாமல் போனது.... ஆம் அழுதுவிட்டேன். வாழ்வில் ஒரு நண்பனை இழக்கப் போவது எவ்வளவு கொடுமை என்பது இழந்தவர்களுக்குத் தெரியும்... அதிலும் அழகுராஜ் போன்ற ஒரு நண்பனை இனி எள்ளளவேனும் காண்பது அரிதுதான்... சரி.... அழுகை போதும். இனி நடக்க வேண்டியது என்ன?


" டார்லிங்! டிபனுக்கு என்ன செய்ய? " கிச்சனிலிருந்து குரல் கொடுத்தாள்


" ஏதாவது செய்! சாப்பிடறமாதிரி இருந்தா சரி!"


" சாப்பிடறமாதிரியா? அப்போ இத்தனை நாள் செஞ்சதெல்லாம் சாப்பிடறமாதிரி இல்லையா?"


" ஏ ஏய்! இன்னிக்கு மூட் சரியில்லை... என்கிட்ட விளையாடாதே!"


" என்ன இன்னும் அவனைப்பத்தி நெனச்சுட்டு இருக்கியா?"


" இல்ல இல்ல.."


" சரி, நீ பேப்பர் படிச்சுட்டு இரு, காபி டைனிங்க் டேபிள்ல வெச்சிருக்கேன்,. சாப்பிடு... ஆப் ஏன் அவர்ல சாப்பாடு ரெடி பண்ணிடறேன்....."


" இல்லடா..... நான் கிளம்பறேன். ஆபீஸ்ல நிறைய வேலை இருக்கு.."


" டேய்!! தோ பாரு... சாப்பிடாம போனேன்னு வெயி.... மவனே!"


" கூல் கூல்... சாப்படறேன்.."


ஜெஸிக்கு என் மேல ரொம்ப அக்கறை. இன்னும் சிறுபிள்ளை போலவே குழைவாள். காதல் மனைவியாயிற்றே. எத்தனையோ எதிர்ப்புகளை எதிர்த்துவிட்டு எதுவும் இல்லாத என்னிடம் ஒரு தேவதையாக வந்தவள். இன்றுவரை அவள் நோக எதுவும் நான் செய்ததில்லை. இன்னும் சொல்லப் போனால் அழகுராஜுக்கு அடுத்து எனது உயிர் ஜெஸிகா தான்.... மிக நெருங்கிய தோழி ஜெஸிகா என்று தான் சொல்வேன்.... மனைவி என்பது ஒரு கட்டுப்பாட்டை விதிக்கும்... தோழி, அந்த கட்டுப்பாட்டினுள் வளையவரும்.... கூட்டினுள் அடைந்த பறவைக்கும், நன்றாக பழக்கமடைந்து வெளியே சுற்றிவிட்டு எந்நேரமானாலும் நம் தோளுக்குள் வந்து அமரும் பறவைக்கும் வித்தியாசமுண்டு. அவள் பேச்சிற்கு இணங்க அமர்ந்தேன்....


அழகு ராஜுக்கு அழைத்தேன். அவனே எடுத்தான். பெரும்பாலும் இந்த நேரங்களில் அவன் அம்மாவோ அல்லது அவன் தங்கையோ எடுப்பார்கள்.... இன்று நேரமே எழுந்துவிட்டான் போலும்..


" என்னடா உடம்பு பரவாயில்லையே?"


" இனி நல்லா இருந்து என்னடா பண்ண?"


"ஸ்டுபிட் வீட்டில தெரியவேணாம்... வெளிய வந்து பேசு "


" ம்ம்... வெளியதாண்டா இருக்கேன்"


" எங்கே?"


" சும்மா வாக்கிங் வந்தேன்.... ஏதோ இனிமேதான் வாழனும்னு தோணுதுடா... வாழ்க்கைன்னா என்னன்னு இப்போத்தான் புரியுது.... அதான் வாக்கிங்ல இருந்து யோகா வரைக்கும் முயற்சி பண்றேன்."


" குட்... கவலைப்படாதேடா... எனக்குத் தெரிஞ்சு எய்ட்ஸ் வந்து பத்து பதினஞ்சு வருஷம் உயிரோ இருந்தவங்கள நான் பார்த்திருக்கேண்டா... டோண்ட் ஒர்ரி. நீ கவலைப்பட்டீன்னாத்தான் உடம்பு கெடும்... எப்பவும் போல இரு... ஆனா இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையா உடம்பை வெச்சுக்கோ... "


" என்ன சொல்லுடா..... சாகறதுக்குத் தேதி கன்பர்ம்.. இருந்தாலும் ட்ரை பண்றேன்.... எனக்காக ஒரு ஹெல்ப் பண்ணு... இந்த விஷயத்தை யார்ட்டையும் சொல்லாதே! முக்கியமா உன்னோட ஒய்புக்குக் கூட சொல்லாதே!


" சரிடா... அப்பறமா கூப்பிடறேன்.... கவலைப்படாதே யார்ட்டயும் சொல்லமாட்டேன்.."


" ஓகே... மதியம் லஞ்சுக்கு உங்கவீடுதான்....."


" பைடா.."


விதி அப்படீன்னு ரெண்டு எழுத்து வார்த்தை இருக்கே!! அதோட விளையாட்டு எப்பவுமே விபரீத விளையாட்டுத்தான். என்னோட மனைவிகிட்ட எதுவும் மறைக்காத நான் சொல்லக்கூடாத விஷயத்தைச் சொல்லி இப்போ என்ன பண்றதுண்ணே தெரியல..... மதியம் அவனை வரவிடாம தடுக்கறது ரொம்ப ஈஸி... ஆனா எப்படியும் ஒருநாள் கண்டிப்பா வருவானே! மொதல்ல இவகிட்ட கொஞ்சம் பேசனும்...


வாஷிங் மெஷினில் துணிகளை சலவைக்கு இட்டுக் கொண்டிருந்தாள். மெல்ல இவளை வாஷ் பண்ணவேண்டுமே?


" ஜெஸி! இன்னிக்கு மதியானம் என்ன சமையல்?"


" என்னப்பா! வேலைக்குப் போகாம இதென்ன கேள்வி? என்ன செய்யறது?"


" சிக்கன் செய்யமுடியுமாடா?"


" என்ன திடீர்னு சிக்கன்? விசேசமா?"


" இல்ல... மதியம் ஒருத்தர் விருந்துக்கு வரார்..... அதுதான்,"


" யாருடா அது?"


" ம்ம்... அழகு ராஜ் தான்."


" என்ன வெளையாடறையா? அந்த ஆளை உள்ளேயே விடக்கூடாதுன்னு நேத்திக்கு நைட்டு சொன்னேன்ல..? திரும்பவும் முருங்கை மரத்தில ஏறிட்டயா? இதில சிக்கன் சமைச்சுப் போடனுமா நானு? "


" ஏய் ஏய்! கூல் டவுன்.. பாவம்டா அவன்... ஏதோ தெரியாம தப்பு பண்ணீட்டான்... நாமதான அவனை கவனிக்கணும்.."


" நீ கூட கவனிக்கக்கூடாது.. அவன் உள்ளே வந்தான்னா நடக்கறதே வேற.."


" ப்ளீஸ்மா... புரிஞ்சுக்கோ.... அவன் பண்ண தப்புக்கு தண்டனை கிடைச்சாச்சு... அதுக்கு மேலயும் நாம தப்பு பண்றது சரியில்ல.. நீ படிச்சிருக்கே! உனக்குத் தெரியாததா நான் சொல்லப் போறேன்?"


" இந்த கதையே வேணாம்.. ஐ வோண்ட் அலோ ஹிம்.. யு டோண்ட் ஹேவ் டு சே எனிதிங். "


காலம் எப்போதுமே நிற்காமல் ஓடும் இதயம் மாதிரி.. இதயம் கூட சில நேரங்களில் நின்றுவிடக் காண்கிறோம்... ஆனால் காலம் நிற்பதில்லை. காலத்தைப் பின்னுக்குத் தள்ளவும் வழியில்லை. அன்று பற்கள் தெரிய சந்தோச விளிம்பில் விஷம் குடித்தவன் இன்று அதற்குண்டான பலனை அனுபவிப்பதோடு அல்லாமல் இன்னும் என்னென்ன கணைகள் விழும் என்பது தெரியாமல் இருக்கிறான்... காலத்தின் ஓட்டம் மன ஓட்டத்தைவிட அதிகமாகிவிடுகிறது சில நேரங்களில்... எந்த ஒரு தவறுக்கும் திருந்தும் சந்தர்ப்பம் இருக்கும்... திருந்துவதற்குத் துளியும் இடமற்ற நரகத்தில் விழுந்து தொலைத்துவிட்ட அழகின் கதியை என்னவென்று சொல்ல? மதியம் வெகு விரைவில் வந்துவிட்டது.... அல்லது அது போன்ற உணர்வு,. அவனிடமும் சொல்ல முடியாமல் இவளிடமும் சொல்லமுடியாமல் இரண்டு திசையில் செல்லும் குதிரைகள் பூட்டப்பட்ட வாகனமாய் தத்தளித்துக் கொண்டிருந்தேன். அலுவலகம் போகவில்லை. அவன் வருவானே என்று ஜெஸிகாவும் சமையல் ஏதும் செய்யவில்லை.


வாசலில் வண்டியின் சப்தம் கேட்டது.... கூடவே எனது இதயத்தின் வேகம் அதிகரிக்கும் சப்தமும்தான். அவனே தான். அழகு ராஜ்... நேற்றுவரை அழகுராஜாக இருந்தவன் இன்று அழுக்கு ராஜ் ஆக மாறிவிட்டான். ஏதோ ஒரு சந்தோசம் அவனை அழுத்தியிருக்கவேண்டும்... சிரிப்போடு வந்தான். என்ன நடக்கப் போகிறதோ?


" கதிர் "


" வாங்க சார்!.. ரொம்ப டயர்டா இருக்கீங்க போல..... எல்லாம் எய்ட்ஸ் பண்ற வேலையா?"


" ஜெஸி! கம்முனு இரு.. அவனை நோகடிக்காத"


" கதிர் ! நீ சும்மா இரு,. என்னங்க மிஸ்டர்... இது தான் நீங்க ஒழுங்கா இருக்கிற லட்சணமா? உங்களுக்கு ஒரு தங்கச்சி இருக்கா, அவளை நீங்க புரிஞ்சுக்கிட்டீங்களா? அவளுக்கு உணர்ச்சிகள் இருக்கும் தானே? நீங்க போறதுக்கு முன்னாடி உங்க குடும்பத்தை யோசிச்சுப் பார்த்தீங்களா? "


" ஜெஸி! ப்ளீஸ். அவன போகவிடு எதுவும் பேசாத.."


" ஐ வோண்ட் ஸ்பீக், பட் ஹி மஸ்ஸிண்ட் கம் ஹியர்."


" அழகு நீ வீட்டுக்குப் போ! நான் கூப்பிடறேன்.."


" கதிர். உனக்கும் சொல்றேன்.. அவன் கூட இனிமே பேசறது பழகறது எல்லாம் வெச்சுக்காத.. அப்பறம் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. மைண்ட் இட்"


அவள் போட்ட கத்தலில் அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் எட்டிப் பார்த்து விஷயத்தை அறிந்துகொண்டார்கள். எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது நடந்தே விட்டது.. புரிந்துகொள்வாள் என்று நினைத்து அசால்டாக விட்டது எவ்வளவு பெரிய தப்பு.... அந்த இடமே ஏதோ டிவி சீரியல் நடந்தவாறு ஆகிவிட்டது.. அழகு நிரம்ப சோகமாக திரும்பிச் சென்றான்... கூட செல்லக் கூட துணிவில்லை... இனி அவன் என்னை என்ன நினைப்பான்? தனக்கு நெருங்கிய தோழனே தன்னை தவிர்க்கிறான் என்று தானே!?? பிரச்சனை பெரிதாகிறதே! சில விஷயங்களை மனைவியிடம் சொல்லக் கூடாது என்று கேள்விப்படுகிறோமே? அது சரிதானா?


அழகு வீட்டிற்குப் போனதும் அழைத்தான்.


" கதிர்... விடுடா... உன் ஒய்ப் சொல்றதும் சரிதானே! என்னோட குடும்பத்தைப் பத்தி நான் நினைச்சிருந்தா அங்கெல்லாம் போயிருப்பேனா? "


" சாரிடா... நேத்து நைட்டே அவகிட்ட விஷயத்தை சொல்லீட்டேன். அவளும் என்னை மாதிரியே விஷயத்தை ஹாண்டில் பண்ணுவா னு நினைச்சேன்.... எனக்கு ஒரே குழப்பமா வேற இருந்துச்சி"


" அட்லீஸ்ட் என்கிட்டயாவது நீ சொல்லி வரவிடாம தடுத்திருக்கலாமே? "


" அதான் சொன்னேன்ல,, ஒரே குழப்பம்டா... என்ன பண்றதுன்னே எனக்குத் தெரியல."


" இட்ஸ் ஓகே. ஐல் டாக் டு யு லேடர். பை நவ்."


" பை டா"


கொஞ்சம் தலைவலித்தது. கண்கள் சொக்கியது... ஏனோ ஜெஸியின் மடியில் உறங்கவேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.. அவளிடம் இந்த நிலையில் எதுவும் சொல்லமுடியாது. தன்னை கன்வின்ஸ் பண்ணத்தான் நடிக்கிறான் என்று எண்ணுவாள்... இந்த பிரச்சனை இதுவரை தானா? இல்லை நீளுமா?


ஆண்டவா! எதற்க்காக ஆண்/பெண்களைப் படைக்கிறாய்? எதற்க்காக காமவெறியைத் தூண்டுகிறாய்? உனது காலடியில் கிடக்க எங்களால் முடியாது என்று ஒதுங்குபவர்கள் சிலர்தான் இந்த மாதிரி செய்கிறார்களோ? உன்னை நினைத்திருந்தால்,, உன் மேல் பயம் இருந்திருந்தால், நீ இருப்பதை அடிக்கடி எங்களுக்குத் தெளிவு படுத்தியிருந்தால், நீ எங்களை நல்லபடியாக சமைத்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்குமா?


உனக்கெங்கே போனது புத்தி என்று சொல்கிறாயா? ஆமாம்... கூட இருந்த எனக்கெங்கே போனது புத்தி? இல்லை இலவசமாக நோய் வாங்கிய..... இல்லை இல்லை. காசு கொடுத்து நோய் வாங்கிய அவனுக்கு எங்கே போனது புத்தி? நானோ அல்லது அவனோ இல்லை அந்த பெண்ணோ கூட நினைத்திருந்தால் தடுத்திருக்கலாமோ? இனி புலம்பி என்ன பிரயோசனம்? முடிந்துவிட்டது.... அவன் வாழ்க்கையும் அந்த சம்பவங்களும்....


அதீத களைப்பில் தூங்கிவிட்டேன். மணி நான்கு இருக்கும்.... ஒருவித தலைவலியோடுதான் எழுந்தேன்... ஜெஸிகாவிடம் சொல்லி தலைக்கு அமிர்தாஞ்சன் தடவி விடச் சொன்னேன். நல்ல மூடில் இருக்கிறாள் போலும். தடவி விட்டாள். அழகு வீட்டிலிருந்து அந்த நேரத்தில் அழைப்பு வந்தது... எடுத்து பேசினேன்.


" ஹலோ! கதிர் தம்பியா?"


" சொல்லுங்கம்மா. அவன் எங்கே? திடீர்னு போன் பண்ணியிருக்கீங்க.?"


" தம்பி உண்மையைச் சொல்லு. அவனுக்கு என்னாச்சு? "


பொய்மை உடைந்துவிட்டதா? உண்மை வெளிப்பட்டுவிட்டதா?


" என்னம்மா பிரச்சனை? ஒன்னும் புரியலையே?"


" என் மகனுக்கு எச்ஐவி னு சொல்றாங்கப்பா. நீதானே அவன் கூட ஆஸ்பத்திரிக்குப் போனே?"


" என்னம்மா இது பேத்தல்... யார் இந்த மாதிரி உளறினா?"


" அவன் பேர்ல பிளட் ரிப்போர்ட் இருக்கே!"


" பிளட் ரிப்போர்ட்டா? உங்களுக்கு எப்படி கிடைச்சுது?"


" அவனோட கப்போர்ட்ல இருந்துச்சுப்பா.... எனக்கு ஒரே பயமா இருக்கு... நீ இங்க வா.."


" சரி இருங்க வரேன்"


அய்யய்யோ இது பூதாகார பிரச்சனையாகப் போகுதே! எங்கே முடியும்?


ஜெஸிகா கொஞ்சம் உர் றென்றே இருந்தாள்.... இருந்துவிட்டு போகட்டும்.... அவளை எப்படியும் நம் வழிக்குக் கொண்டுவந்துவிடலாம்.. முதலில் இந்த பிரச்சனையைப் பார்க்கலாம். அழகு எங்கே போனான்? அம்மா எப்படி பார்த்தாள்?


எனது வண்டி பறந்தது... சீக்கிரமே அவன் வீட்டிற்குச் சென்றது.. மிக நெரிசலான பாதையில் வீடு அமைந்திருந்தது. வாடகை வீடுதான் என்றாலும் தனி வீடு, நல்ல வசதி. ஓரளவு வசதியான குடும்பம். அழகுடைய வருமானமே பெருமளவில் இருந்தது. வீட்டினுள்ளே நுழைந்ததும் ஒருவித அழுகை சப்தம் கேட்டது... ஏதோ வழிதவறி இழவு வீட்டிற்கு வந்ததுபோல..


அழகுராஜின் அம்மா கண்கள் வீங்க அழுதிருப்பது தெரிந்தது.. அழகின் வண்டியைக் காணவில்லை. அலைபேசியில் அடித்தாலும் கிடைக்கவில்லை. இனி என்ன சமாதானம் சொல்ல? எப்படி மறைக்க? எனது பாடு ஒரே திண்டாட்டமாக இருக்கிறதே!


" ஏம்பா நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா தானே சுத்தறீங்க? இப்பப் பாரு.... உங்க அசிங்கம் எப்படி வெளிய வந்திருக்குன்னு..."


அழகு ராஜின் அப்பா பொறிந்து தள்ளினார்.. அவர்கள் என்ன நினைக்கக் கூடாது என்று நினைத்தேனோ அதே நினைவு.... எந்த சம்பவம் நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அதே சம்பவம்.... வாழ்வு வட்டம் இவ்வளவு சிறியது என்பதை அறியாமல் போனேன்... அது அறிவின் பிழையா? விதியின் பிழையா?


" சொல்லுப்பா கதிர்... உன்னை நம்பிதானே என்னோட பையனை அனுப்பறோம்.. இப்போ பாரு... எச்ஐவி வாங்கிட்டு வந்திருக்கான்... எங்க போனீங்க? எவகிட்ட படுத்தீங்க? என்னோட ஒரே பையனை இப்படி அநியாயமா கொல்ற அளவுக்குப் போயிட்டியேப்பா?? இதுதான் நீங்க கத்துக்கிட்ட ஒழுக்கமா? அவன் உனக்குப் பண்ணினதுக்கு நீ செய்யற நன்றி இதுதானா?"


என்னால் எதுவும் பேசமுடியவில்லை... உண்மையில் என் தவறு அவனை கண்டிப்பாகத் தடுக்காதது. அதுவே ஒரு கொலைக்குச் சமமாக எனது மனம் நினைத்துக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில் அவன் உடன் இருந்தாலாவது வலி குறையலாம்.. இவர்களின் கேள்விக்கு என்னால் பதில் அளிக்க முடியவில்லை...


" கதிர்! உன்னை என்னோட பையனா நினச்சேன்... நீ இப்படி பண்ணுவேன்னு எதிர்பார்க்கல.... இனிமே இங்கே வராதே! எங்க பையன எப்படிப் பார்த்துக்கணும்னு எங்களுக்குத் தெரியும். மொதல்ல வெளிய போ!"


எனக்கு வேற வழி தெரியவில்லை. ஒரு வார்த்தை கூட பேசாமல் வந்துவிட்டேன்... ஏற்கனவே தலைவலி இருந்தமையால் இந்த மனக்கஷ்டம் வேறு இணைந்து புணர்ந்து உடல் நிலையை ஏதோ செய்தது.... கண்கள் கலங்கிக் கொண்டே இருந்தது.. கண்ணீரைத் துடைத்துத் துடைத்து எனது கைக்குட்டை நனைந்தது. வீட்டில் ஜெஸிகா மன்றத்தில் உலாவிக் கொண்டிருந்தாள். என்னைக் கண்டதும் என் நிலையைக் கண்டதும் டாக்டரிடம் போகலாமா என்று வினவினாள்... மறுத்துவிட்டு உறங்கினேன்...


அன்று கண்ட கனவு வரவில்லை... ஏனோ தெரியவில்லை. கனவுகளுக்கு நேரம் காலம் தெரிவதில்லை.. இன்றைய கனவில் ஜெஸிகா வந்தாள்.... சிறிது நேரத்தில் போய்விட்டாள்... இப்போது இதை விவரித்துச் சொல்லவும் முடியாது.. மெல்ல எழுந்து கவனித்தேன்.. இரவு 11 மணி. வெகு நேர உறக்கம்... அருகில் ஜெஸிகாவும் நன்கு உறங்கியிருந்தாள்... என்னை எவ்வளவு தூரம் நம்பியிருக்கிறாள் என்பதை நினைக்கும்போது எனக்குள் பூரிப்பு. ஒரு வார்த்தை கூட, 'அழகோடு நீயும் அந்தமாதிரி இடத்துக்குப் போனாயா?' என்று கேட்கவில்லை.... நம்பிக்கையும் அதைக் காப்பாற்றும் விதமும் எனக்குள் நான் இட்ட கட்டுப்பாட்டினை கட்டிக் காக்கிறது.


அதிகாலை 6 மணிக்கு அலாரம் அடித்த மாதிரி உணர்வு..... ஜெஸிகா எழுப்பிவிட்டாள்.


" கதிர்.... எழுந்திரு.... பேட் நியூஸ் ஃபார் யூ "


" எதா இருந்தாலும் எட்டு மணிக்கு மேல சொல்லுடா செல்லம். ப்ளீஸ் லெட் மி ஸ்லீப்.."


" இது அழகு ராஜ் சம்பந்தப்பட்டதுப்பா..."


" என்ன நியூஸ்?"


" உங்க பிரண்ட் தற்கொலை பண்ணிகிட்டாரு.."


" யேய் உளறாத. அவன் அப்படிப்பட்ட ஆள் இல்லை"


" அவங்க வீட்ல இருந்து இன்னிக்குக் காலையில போன் வந்துச்சுப்பா "


" ஈஸ் இட்? "


" கிளம்பு..... அவங்க வீட்ல உன்னை நேத்தே திட்டியிருப்பாங்க. அழகுராஜ் அவங்க அம்மாகிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டாராம்... உனக்கும் அவன் போனதுக்கும் சம்பந்தமில்லைனு... இன்னிக்கு காலையில பைக்ரோமேட் சாப்பிட்டு சூசைட் பண்ணிக்கிட்டாராம். "


காட்.... எதிர்பாராத முடிவு. அழகு இப்படி பண்ணுவான்னு சுத்தமாக நினைக்கவில்லை. எச்ஐவி என்று தெரிந்த மூன்றாம் நாளே உயிர் இல்லை... இதென்ன கனவா? இத்தனை வலிகளை ஒட்டுமொத்தமாய் ஒரே நேரத்தில் என்னால் எப்படி சுமக்கமுடியும் இறைவா? எனது நண்பன் உலகில் இல்லையா? நம்பவே முடியவில்லை... எவளோ ஒருத்தி விரித்த வலையில் சிக்கி உயிரிழந்தானா இவன்? இல்லை.. இருக்காது...


ஜெஸிகாவும் நானும் வண்டியில் புறப்பட்டோம். எனது மனம் என்னிடமே இல்லை. அவன் இறந்ததற்கு எய்ட்ஸ் ஒரு காரணம் தான்.. ஆனால் அதன் பின்னே வந்த அம்புகள் எத்தனை எத்தனை? முதலில் இந்த சமுதாயம் ஒழுங்காக இருக்கிறதா? ஆணுறை பயன்படுத்தச் சொல்லித்தான் விளம்பரம் வருகிறதே தவிர போகாதே என்று அடித்துச் சொல்கிறார்களா? இல்லை... ஒருவேளை அப்படி எய்ட்ஸ் வந்தவர்களை இந்த சமுதாயம் எப்படி நடத்துகிறது? பேச்சுக் கணைகளாலேயே கொல்கிறார்கள். எனது மனைவி இதற்கு ஒரு உதாரணம்... அவர்கள் தொழு நோயாளி போல நினைத்துக் கொல்(ள்)கிறது இந்த பாழாய்ப் போன சமுதாயம். இந்த சூழ்நிலையில் நான் யாரைப் போய் குற்றம் சொல்ல?


எயிட்ஸ்,, இன்றுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாத நோயாக இருக்கிறது. அதன் வருகையும் நம்மவர்கள் அதில் வீழ்தலும் அதிகமாகிவிட்டது. விழிப்புணர்வு இல்லாத நிலையில் விழிப்பிறலல் ஆகிவிடுகிறது. சரியான வழிகாட்டுதல் இல்லாமையும் முறையற்ற கல்வி முறையும் விழிப்புணர்வு இல்லாத நிலைக்குக் காரணங்களாக அமைகிறது.


நானும் ஜெஸியும் வண்டியை நிறுத்திவிட்டு அவன் வீட்டிற்குள் நுழைந்தோம்..... ஜெஸிக்கு எப்படி இருந்ததோ எனக்குத் தெரியாது... நான் ஒரு கொலையாளியாகவே உணர்ந்தேன். மிக அமைதியான நித்திரையில் அழகுராஜ் இருந்தான்... ஓலம் இட்டுக் கொண்டே அவன் அன்னை என்னை நோக்கி வந்தார்.... கையில் அரிவாள் தூக்கிக் கொண்டு ஓடி வரும் காளியைப் போல எனக்குத் தென்பட்டது...

ஓவியன்
08-07-2007, 07:50 PM
ஆதவா மூச்சு விடாமல் படித்தேன் இந்த நீளா........................மான கதையை!.

சமூதாய நன்நோக்கு மிக்க ஒரு கருவினை கையிலெடுத்துக் கருவினைக் கையாண்ட விதம் பிரமிக்க வைத்தது!.
அந்த சம்பவத்தை அலசி ஆராய்ந்து திறமையாகப் பின்னப்பட்ட ஒரு வலையாகவே தெரிகிறது இந்தக் கதை!.

தப்பு பண்ண வழி விடும் சமூதாயம் தப்பைச் சரி செய்ய வழி விடுவதில்லை.........................

அழகுராஜைப் போல் எத்தனை பேர் இந்த உலகில்......................

மரண தண்டனை தீர்ப்பளிக்கப் பட்ட குற்றவாளிகளுக்குக் கூட மேன் முறையீட்டில் தண்டனை குறையலாம், ஆனால் உயிர்க் கொல்லி நோயால் தாக்கப் பட்டவர்களுக்கு....................

சிந்திக்க வேண்டும் எல்லோருமே...........

சிந்திக்க வைத்தமைக்கு நன்றிகளும் பாராட்டுக்களும் ஆதவா!.

தங்கவேல்
09-07-2007, 02:49 AM
ஆதவா, மிக நல்ல கதை. ஆனால் நீளம். ஆனாலும் நல்ல கரு. ..

ஆதவா
09-07-2007, 05:52 AM
ஆதவா மூச்சு விடாமல் படித்தேன் இந்த நீளா........................மான கதையை!.

சமூதாய நன்நோக்கு மிக்க ஒரு கருவினை கையிலெடுத்துக் கருவினைக் கையாண்ட விதம் பிரமிக்க வைத்தது!.
அந்த சம்பவத்தை அலசி ஆராய்ந்து திறமையாகப் பின்னப்பட்ட ஒரு வலையாகவே தெரிகிறது இந்தக் கதை!.

தப்பு பண்ண வழி விடும் சமூதாயம் தப்பைச் சரி செய்ய வழி விடுவதில்லை.........................

அழகுராஜைப் போல் எத்தனை பேர் இந்த உலகில்......................

மரண தண்டனை தீர்ப்பளிக்கப் பட்ட குற்றவாளிகளுக்குக் கூட மேன் முறையீட்டில் தண்டனை குறையலாம், ஆனால் உயிர்க் கொல்லி நோயால் தாக்கப் பட்டவர்களுக்கு....................

சிந்திக்க வேண்டும் எல்லோருமே...........

சிந்திக்க வைத்தமைக்கு நன்றிகளும் பாராட்டுக்களும் ஆதவா!.

ஓவியன்... மிக அழகாக விமர்சனம் செய்கிறீர்கள்.. நன்றியும் பாராட்டுக்களும். என் வாழ்வில் நான் கண்ட** மூன்று ச*ம்ப*வ*ங்க*ளை மைய*மாக*க் கொண்டு எழுதிய*து... கூட*வே சிறு க*ற்ப*னை. எள்ள*ள*விலும் அனுப*வ*மோ ஆராய்ந்த* விஷ*ய*ங்க*ளோ கிடையாது. முத*லில் சிறு சிறு பாக*ங்க*ளாக*த்தான் இட*லாம் என்றிருந்தேன் ஆனால் ப*டிப்ப*வ*ர்க*ளை ஏன் காக்க*வைக்க*வேண்டும் என்று நினைத்து முழுவ*துமாக*வே போட்டுவிட்டேன்... ந*ன்றிங்க* ஓவிய*ன்

ஆதவா
09-07-2007, 05:53 AM
ஆதவா, மிக நல்ல கதை. ஆனால் நீளம். ஆனாலும் நல்ல கரு. ..

மிகவும் நன்றிங்க தங்கவேல். இதேமாதிரி கரு யாரேனும் எழுதியிருக்கக் கூடும்.... ஆனால் என்னைப் பொருத்தவரை நான் கண்ட கதைகளில் இந்த கருவைக் காணவில்லை... மிக மிக நன்றி/./.

ஷீ-நிசி
09-07-2007, 06:10 AM
பொறுமையாக படித்து பின்னூட்டமிடுகிறேன் ஆதவா...

gayathri.jagannathan
09-07-2007, 10:48 AM
நீங்கள் சொல்லியிருப்பது சரிதான் ஆதவா.... விழிப்புணர்ச்சி ஊட்ட முயல்வோர் பாதுகாப்பைப் பற்றிச் சொல்கிறார்களே தவிர, ஒழுக்க உணர்ச்சியைப் பற்றிக் கூற* மறக்கின்றனர்...

அது தவிர... இந்நோயால் பாதிக்கப்பட்ட பலர்... அதற்கு மேலும் திருந்தாமல்.. தம் குடும்பத்தினருக்கும் இந்நோயைப் பரிசாக அளிக்கின்றனர்...

ஒழுக்கம் என்பது ஏட்டளவில் போய் விட்ட இந்நாளில்.. இளைய தலைமுறையினரின் கதி என்ன?...

உலக அளவில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையின் படி பார்த்தால் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது...
ஆனால் பொருளாதாரத்தில்? 13வது இடம் (இது சரியா எனத் தெரியவில்லை...)...

அதே நேரம்...தாம் நோய்வாய்ப்பட்டுள்ளோம் எனத் தெரிந்தவுடன்... திருந்தி வாழ முற்படுவோரை இச்சமுதாயம் படுத்தும் பாடு.. அப்பப்பா...

வாழ்த்துக்கள் ஆதவா... இக்கதையின் தாக்கம் ஆழமானது....

அமரன்
09-07-2007, 11:12 AM
ஆதவா. கதையின் வடிவில் சாடி இருகின்றீர்கள். போகாதே என்று சொல்வதில்லை. பாதுகாப்பாக இரு என்கின்றார்கள். சரியான கேள்வி. சுமுதாயத்தின் மீது கோபம் ஞாயமானது. இதுக்கு மேல் எதுவும் சொல்லத் தோன்றவில்லை. வலிக்கும் உண்மையை அழகாக சொல்லியுள்ளீர்கள். பாராட்டுகள். எத்தனையோ பேர் சொல்லியும்,எத்தனையோ எழுதியும் திருந்தாத சமுதாயம்....சீ...கேவலமான சமுதாயம்.
பாரத்தை அதிகரித்து விட்டீர்கள் ஆதவா...

அன்புரசிகன்
09-07-2007, 11:49 AM
இது கதையாகவே இருக்கட்டும்...

மதி
09-07-2007, 11:59 AM
ஆதவா...
ஒரே மூச்சில் படித்தேன்.
மனதில் எழும் எண்ணங்களை கதை வடிவில் சொல்லியிருக்கிறீர்கள். இதில் உறவுகளும் அதன் நிலைபாடுகளும் கவனிக்கத் தக்கவை. பல நேரங்களில் எய்ட்ஸ் என்றாலே தகாத உறவுகள் மூலம் மட்டுமே வரும் என படித்தவரும் எண்ணிக் கொண்டுள்ளனர். அறிவையும் மீறி ஆழ்மனத்தின் தாக்கத்தால் உண்டாகும் எண்ணமிது.

தனக்கு எய்ட்ஸ் எனத் தெரிந்த அடுத்தநாள், வாழ ஆசைப்பட்டு வாக்கிங் முதல் யோகா செய்ய முயல்கிறான். ஆயினும் அன்று நண்பன் வீட்டில் நேர்ந்த சம்பவம், வீட்டில் நடந்ததாக நாம் நினைக்கும் சம்பவம் எல்லாம் சேர்த்து தன்னம்பிக்கை துளிரை வேருடன் சாய்த்து அவன் உயிரை மாய்க்கும் அளவுக்கு போய்விட்டது.

இதில் கதையின் மையக்கருவைத் தவிர நான் அதிசயித்த உங்க நுணுக்கம், சிறுவயதிலிருந்தே நண்பனாய் இருந்தவனுக்கு எய்ட்ஸ் என்று தெரிந்தும் தன் கணவன் நல்லவன் என நம்பும் ஜெஸியின் உள்ளம். இல்லை இக்கதை கதிரின் சிந்தனையாக சொல்லப்படுதால் ஜெஸியின் சிந்தனைகளும் எண்ணங்களும் விடுபட்டு விட்டனவா?
(படித்தவுடன் மனதில் தோன்றியவை. கோர்வையாக இல்லாவிட்டால் மன்னியுங்கள்.)

பென்ஸ்
09-07-2007, 02:05 PM
நான் இவ்வளவு போறுமை எடுத்து ஒரே நேரத்தில் கதைகள் வாசிப்பது கிடையாது, அப்படி வாசித்ததில் சில நம்ம ராகவன் மற்றும் மோகன் எழுதிய கதைகள் தாம்... நமக்கு மயூ எழுதுற சின்ன சின்ன கதைகள்தான் சரி என்று ஓடிடுவேன்....
ரொம்ப நாளுக்கு பிறகு அமைதியாக கதையை உள்வாங்கி வாசித்தேன் ஆதவா....
உனக்கு கவிதிறமை இருக்கும் அளவுக்கு கதை திறமை வரவில்லை என்று முதலிலையே கூறி துவங்குகிறேன்....
வாசித்து முடித்த உடம் மனதில் தோன்றிய எண்ணக்கள்
1, இந்த கதையை இப்படி இளுத்து இருக்கவேண்டாம்...
2, ஏட்ஸ் வந்தவன் தற்கொலை செய்வதாக காட்டி இன்னும் அது மட்டும்தான் வழி என்று காட்டி இருக்க வேண்டாம்..
3, கதையின் முடிவு சொல்ல வந்ததை உரைக்க சொல்லவில்லையோ??? (சொல்ல வந்தது : எட்ஸ் வந்தவர்களை அன்புடம் ஆதரித்து, ஊக்கமளிக்க வேன்டும்... சரிதானே??)

இனி கதையின் போக்கில் விமர்சணம்....

எல்லா கதைக்கும் உரித்தான சுவாரிசியத்துடன் துவங்கி இருக்கிறிர்கள், மயுரேசன் போல உவமைகள் கொடுத்து கதை தொடங்காதது வித்தியசமாக இருந்தது...
தான் நோயாளி என்று அறிந்து , மரணம் தன்னை தொடுகிறது என்று தெரிந்ததும் வாழ விரும்பும் மனம்... அதன் விருப்பங்களை முளையிலையே கிள்ளும் சமுதாய எண்ணங்கள்.....


" வாங்க சார்!.. ரொம்ப டயர்டா இருக்கீங்க போல..... எல்லாம் எய்ட்ஸ் பண்ற வேலையா?"
" ஜெஸி! கம்முனு இரு.. அவனை நோகடிக்காத"
" கதிர் ! நீ சும்மா இரு,. என்னங்க மிஸ்டர்... இது தான் நீங்க ஒழுங்கா இருக்கிற லட்சணமா? உங்களுக்கு ஒரு தங்கச்சி இருக்கா, அவளை நீங்க புரிஞ்சுக்கிட்டீங்களா? அவளுக்கு உணர்ச்சிகள் இருக்கும் தானே? நீங்க போறதுக்கு முன்னாடி உங்க குடும்பத்தை யோசிச்சுப் பார்த்தீங்களா? "

" ஜெஸி! ப்ளீஸ். அவன போகவிடு எதுவும் பேசாத.."

தன் கணவனின் நண்பன் எய்ட்ஸ் நோயாளி என்றதும், அவள் தன் கணவணின் நண்பன் வருவதை விரும்பவில்லையென்றல் அந்த இடத்தை தவிர்த்திருக்க வேண்டும்... ஏளனமான கேலி பேச்சு செய்திருக்க வேண்டாம், ஜெஸியை அவன் கதிர் அப்போதே கண்டித்திருக்கவேண்டும், இயலாமையை காட்ட கூடாது....

மனைவியிடம் தன் நண்பனை பற்றி சொல்லியதும் தன்னை போல் எடுத்து கொள்வாள் என்று நியாயபடுத்தி கொண்டாலும், அது சரியானதாக படவில்லை. தான் யோக்கியன் என்று காண்பிக்க தன் நண்பர்களை குறை சொல்லும் ஒரு சாதாரணமானவனாக காட்டி கொள்கிறானோ...???

" சொல்லுப்பா கதிர்... உன்னை நம்பிதானே என்னோட பையனை அனுப்பறோம்.. இப்போ பாரு... எச்ஐவி வாங்கிட்டு வந்திருக்கான்... எங்க போனீங்க? எவகிட்ட படுத்தீங்க? என்னோட ஒரே பையனை இப்படி அநியாயமா கொல்ற அளவுக்குப் போயிட்டியேப்பா?? இதுதான் நீங்க கத்துக்கிட்ட ஒழுக்கமா? அவன் உனக்குப் பண்ணினதுக்கு நீ செய்யற நன்றி இதுதானா?"


அழ*கு வீட்டில் உள்ள*வ*ர்க*ள் த*ன்னை இவ்வாற*கு குறை கூறிய*தும் அப்போதெ த*ன் க*ருத்து ம*றுப்பை சொல்லி இருக்க* வேன்டும் இந்த** கதிர்.... அவ*ர்க*ள் த*ன் வ*ருத்த*மான* ம*ன*நிலையில் சொல்லிய*தாக* இருந்தாலும் ப*ழியை அவ*சிய*ம*ல்லாம*ல் சும*க்க* வேண்டிய*தில்லை....

அவ*ன் ம*ர*ன*ம் க*தையின் முடிவாக* காட்ட* ப*ட்டிருன்த*து என்னால் ஏற்று கொள்ள* முடிய*வில்லை...
மேலும் க*ண*வ*ன் ம*னைவி உரையால* சிறிது செய*ற்க்கையாய் இருப்ப*தாய் தோன்றிய*து....

ந*ல்ல* முய*ற்சி க*விதை ஆத*வா... ஆனால் என் விம*ர்ச*ண*த்தில் ஜஸ்ட் பாஸ்...

அக்னி
09-07-2007, 07:07 PM
மனதில் கனதி...
வேறு வார்த்தைகளை விடாமல் கட்டிவிட்டது...

மேலும் மேலும் சமுதாய சீர்திருத்தக் கதைகளைத் தாருங்கள் ஆதவரே...
பாராட்டுக்களுடன், நன்றியும்....

ஓவியன்
09-07-2007, 07:31 PM
பென்ஸ் அண்ணாவின் விமர்சனத்தை இரசித்தேன்!

நன்றிகள் அண்ணா!

இளசு
09-07-2007, 08:18 PM
மண்ணில் பிறந்த அனைவருக்கும் மரணம் நிச்சயம் என்று தெரிந்தும் வாழ்கிறபோது மனிதன் செய்யும்
ஆசாபாச அத்துமீறல்கள் ஒன்றிரண்டல்ல..

அம்மை, கொள்ளை, காசம், மேகநோய் என ஒவ்வொன்றாய் அறிவியலால் வென்று வர வர..

ஒரு திறமையான சதுரங்க எதிரியாய்..

விபத்து, புற்று, புகை, மது என இயற்கை மனிதனுக்கெதிராய் காய் நகர்த்தி
சமன்பாட்டை நிலைநாட்டிக்கொள்ளப் பார்க்கிறது..

அந்த சதுரங்கத்தில் ஒரு அதிரடி மூவ் : ஹெச்.ஐ.வி.

நரம்பு+ஹார்மோன்களின் தூண்டலுக்கும்
நீண்டு வாழ விரும்பும் தற்காப்பு உள்ளுணர்வுக்கும்
நடக்கும் பலே பந்தயம்..


ஆரம்பத்தில் கூட்டுச்சிகிச்சையால் இந்நோயை வெகுவாய்க் கட்டுப்படுத்த மனிதனால் இன்றைக்கு முடிவது − அறியலில் பதில் மூவ்..

ஒரு தடுப்புசி வந்துவிட்டால், மனிதனின் வெற்றி மூவ்!

(அடுத்தும் இயற்கை இன்னொரு புதிய நகர்த்தல் செய்யும்)

நிற்க....

இந்நோய் பற்றி அறிந்தும், அக்கணச் சுகத்துக்காக மயங்குபவர்களிடம்
சுய அக்கறை, பாதுக்காப்புணர்ச்சி குறைவு− இல்லை!

கயவனான ஆண், கண்ணியமில்லா பெண் இவர்களால் தற்காப்பில்லா நிலையில் பாதிக்கப்படும் நபர்கள்/குழந்தைகளிடம் மட்டுமே
சமுகம் இரக்கமும் அக்கறையும் காட்டுவது பொருத்தம்.

அறிந்தே இந்த ஆபத்தை விலைக்கு வாங்க முற்படுவோருக்கு
இந்தக்கதை ஒரு எச்சரிக்கை மணி...

சமூக அக்கறயை நல்ல தர்க்கவாதம், சம்பவங்கள், பாத்திரங்களுடன் சேர்த்து பின்னிய ஆதவனுக்கு பாராட்டுகள்.


−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−

ஒரு மருத்துவக்குறிப்பு:


ஆணுறை போலவே, 'சர்கம்ஸிஷன்'−ம் ஹெச்.ஐ,வி. தொற்றும் அபாயத்தை
பாதிக்கு மேல் குறைக்க வல்லது.

ஆப்பிரிக்கா, இந்தியாவில் − சொல்லியும் கேட்காமல் பெருகிவரும் இதைக் கட்டுப்படுத்த, கட்டாய சர்கம்ஸிஷன் கொண்டுவந்தாலும் தப்பில்லை!

ஆதவா
10-07-2007, 07:28 AM
பொறுமையாக படித்து பின்னூட்டமிடுகிறேன் ஆதவா...
நிச்ச*ய*மாக*..........

நீங்கள் சொல்லியிருப்பது சரிதான் ஆதவா.... விழிப்புணர்ச்சி ஊட்ட முயல்வோர் பாதுகாப்பைப் பற்றிச் சொல்கிறார்களே தவிர, ஒழுக்க உணர்ச்சியைப் பற்றிக் கூற* மறக்கின்றனர்...

அது தவிர... இந்நோயால் பாதிக்கப்பட்ட பலர்... அதற்கு மேலும் திருந்தாமல்.. தம் குடும்பத்தினருக்கும் இந்நோயைப் பரிசாக அளிக்கின்றனர்...

ஒழுக்கம் என்பது ஏட்டளவில் போய் விட்ட இந்நாளில்.. இளைய தலைமுறையினரின் கதி என்ன?...

உலக அளவில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையின் படி பார்த்தால் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது...
ஆனால் பொருளாதாரத்தில்? 13வது இடம் (இது சரியா எனத் தெரியவில்லை...)...

அதே நேரம்...தாம் நோய்வாய்ப்பட்டுள்ளோம் எனத் தெரிந்தவுடன்... திருந்தி வாழ முற்படுவோரை இச்சமுதாயம் படுத்தும் பாடு.. அப்பப்பா...

வாழ்த்துக்கள் ஆதவா... இக்கதையின் தாக்கம் ஆழமானது....

மிக மிக நன்றிங்க காயத்திரி அவர்களே! உங்கள் பாராட்டு எனக்கு மிகுந்த ம*ன* ம*கிழ்ச்சியைத் த*ருகிற*து. பொறுமையாக* ப*டித்து பின்னூட்ட*ம் இட்ட*மைக்கு மிக*வும் ந*ன்றிக*ள் ப*ல*.....

ஆதவா
10-07-2007, 07:31 AM
ஆதவா. கதையின் வடிவில் சாடி இருகின்றீர்கள். போகாதே என்று சொல்வதில்லை. பாதுகாப்பாக இரு என்கின்றார்கள். சரியான கேள்வி. சுமுதாயத்தின் மீது கோபம் ஞாயமானது. இதுக்கு மேல் எதுவும் சொல்லத் தோன்றவில்லை. வலிக்கும் உண்மையை அழகாக சொல்லியுள்ளீர்கள். பாராட்டுகள். எத்தனையோ பேர் சொல்லியும்,எத்தனையோ எழுதியும் திருந்தாத சமுதாயம்....சீ...கேவலமான சமுதாயம்.
பாரத்தை அதிகரித்து விட்டீர்கள் ஆதவா...

மிக மிக நன்றி அமரன். என்னைக் கேட்டால் சரியான விழிப்புணர்ச்சி நமக்கு கிட்டுவதில்லை என்பதே உண்மை. சமுதாயமே நாம் தான்.,. நாம் செய்யும் தவறே சமுதாயத்தின் தவறு. நாம் ஒவ்வொருவரும் திருந்தும் போது தானாய் திருந்திவிடும் சமுதாயம்... நன்றிகள் கோடி அமரன்

ஆதவா
10-07-2007, 07:33 AM
இது கதையாகவே இருக்கட்டும்...

முழுவதுமாகவா ????? கொஞ்சம் புரியும்படி சொல்லுங்கள் அன்பு
நன்றிங்க அன்பு......

ஆதவா
10-07-2007, 07:36 AM
ஆதவா...
ஒரே மூச்சில் படித்தேன்.
இதில் கதையின் மையக்கருவைத் தவிர நான் அதிசயித்த உங்க நுணுக்கம், சிறுவயதிலிருந்தே நண்பனாய் இருந்தவனுக்கு எய்ட்ஸ் என்று தெரிந்தும் தன் கணவன் நல்லவன் என நம்பும் ஜெஸியின் உள்ளம். இல்லை இக்கதை கதிரின் சிந்தனையாக சொல்லப்படுதால் ஜெஸியின் சிந்தனைகளும் எண்ணங்களும் விடுபட்டு விட்டனவா?
(படித்தவுடன் மனதில் தோன்றியவை. கோர்வையாக இல்லாவிட்டால் மன்னியுங்கள்.)

மிகவும் நன்றிங்க மதி.. நீங்கள் சொல்வதுபடி நான் நினைக்கவில்லை. காரணம் எழுத்துத் திறமை இன்மை தான். இதே கதையை நம் ராகவரோ அல்லது மயூரேசனோ எழுதியிருந்தால் ஜெஸியின் எண்ணங்கள் மிகச் சரியாக அமைந்திருக்கலாம்.... (மன்னிப்பு எதற்கு?) மிகவும் நன்றிங்க..... கதை நீளமாக இருப்பதே ஒரு குறை என்று நினைத்திருந்தேன்..... எல்லாருமே அதை சரிபடுத்திவிட்டீர்கள்.

ஆதவா
10-07-2007, 07:44 AM
பென்ஸ் அண்ணா உங்கள் விமர்சனம் படித்தேன்..... மிக அருமை... தவறு நேர்ந்த இடங்களைச் சுட்டிக் காண்பித்துள்ளீர்கள்... அது அடுத்த கதைக்கு எனக்கு மிகவும் உதவும் என்று நினைக்கிறேன். மனதில் பட்டதை சொன்னதற்கு மிகவும் நன்றி... ( நீங்கள் சொன்னமாதிரி, இவ்வளவு நீள கதை படித்ததற்கே நன்றி. ). நான் முன்பு சொன்னமாதிரி இதில் கற்பனை என்பது வசனங்கள் மட்டும் தான். மற்றவை என் வாழ்வில் நான் கண்டவை... எனது மிக மிக நெருங்கிய உறவினரின் நண்பர், தனக்கு எய்ட்ஸ் உள்ள விஷயம் வீட்டுக்குத் தெரிந்துபோய் தற்கொலை செய்துகொண்டார்... அதே பைக்ரோமேட்... இந்த ரசாயனம் ஸ்கிரீன் மேக்கிங்க் களில் உபயோகப்படுத்தப்படும்.. நான் எய்ட்ஸ் நோயாளி என்று ஒருவரை பார்த்திருக்கிறேன் என்றால் அது அவர்தான்.. ஆனால் நீன்ட நாட்கள் கழித்துதான் இறந்தார்... அவரால் சொற்களையும் உடல் நிலையையும் தாக்கு பிடிக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார். ( இத*ற்கு அவ*ர் ம*னைவி உட*ந்தை என்று கேள்விப்ப*ட்டேன். ) ம*ற்ற*படி த*ற்கொலையாக*த்தான் முடிக்க*வேண்டும் என்ற* எண்ண*ம் என*க்கும் இல்லை... த*விர* இங்கே க*திர*வ*னை ஒரு கொலையாளியாக* காண்பித்த*மை,.... நாமெல்லாம் இப்ப*டி இல்லாதவைகளைப் பேசிப்பேசி ப*ல*ரை கொல்கிறோமே என்ப*த*னால்தான்..
உங்க*ள் விம*ர்ச*ன*ம் என*க்கு ம*ன*நிறைவு... மிக*வும் ந*ன்றிக*ள் கோடி....

பென்ஸ்
10-07-2007, 07:47 AM
அட திட்டினா கூட நன்றி சொல்லுற ஒரே இடம் .. இதுதான்யா :icon_03: :D

ஆதவா
10-07-2007, 07:50 AM
இளசு அண்ணா....

நீங்கள் சொல்வது உண்மைதான்.... ஒருவேளை அப்படி ஒரு தடுப்பூசி வந்தால் நமக்குள் இருக்கும் ஒழுக்கம் இன்னும் சீர்கெடும் என்பது என்கருத்து, ஒரு மருத்துவராய் நீங்கள் கொடுத்த தகவல்களும், ஒரு விமர்சகராய் அதைக் குழைத்துக் கொடுத்த விதமும் மிக அருமை.. மிகவும் நன்றிங்க அண்ணா....

(ஓரளவு தேறிட்டேன்னு நினைக்கிறேன்....:D )

ஆதவா
10-07-2007, 07:51 AM
அட திட்டினா கூட நன்றி சொல்லுற ஒரே இடம் .. இதுதான்யா :icon_03: :D

சேச்சே! திட்டுவதாக நான் எடுத்துக் கொண்டால் அது என் வளர்ச்சிக்குக் கேடு.....

alaguraj
10-07-2007, 09:51 AM
இந்த பாசத்துக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போறேன்!!

ஆதவா....எதா இருந்தாலும் பேசி தீர்த்துக்குவோம்...


(கத நல்லாருக்குது...............)

அமரன்
10-07-2007, 09:55 AM
இந்த பாசத்துக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போறேன்!!

ஆதவா....எதா இருந்தாலும் பேசி தீர்த்துக்குவோம்...
(கத நல்லாருக்குது...............)

அழகுராஜ்....ஹ.....ஹ....ஹா...

Gobalan
10-07-2007, 05:31 PM
பல பேர் வாழ்க்கையின் நெறி தவறி பயணிக்கும் இன்னாளில் கடவுள் கற்பிக்கும் பாடம் தான் இந்த ஏய்ட்ஸ் நோய்.

எல்லோருக்கும் தெரிந்தவையே சில சமூக கோட்பாடுகள். படித்தவர், படிக்காதவர், செல்வந்தர், ஏழை, கிராமத்தார், நகரத்தில் வசிப்பவர், ஆண், பெண் எல்லோருக்கும் எப்போதும் போதிக்க படுவதே இந்த கோட்பாடுகள், வரம்புகள். அதை எப்போது பெரும் பான்மையான மனித வர்க்கம் முறியடிக்க முயற்சிச்க்கிறதோ அப்போது இது போல் இயற்க்கையின் முலமாக கடவுள் அதனை சரிகட்டிகிறார்.

பல உறிப்பினர்கள் ஏய்ட்ஸ் விளம்பரங்களில் ஒழுக்க உணர்ச்சியை பற்றி கூறவில்லை என்று சுற்றி காட்டிருக்கிறார்கள். ஒழுக்க நெறிகளை பற்றி நிச்சியமாக அலோசனை தருகிரார்கள் ஏய்ட்ஸ் சென்டர்களில் தனியாகவும், கைதாள்கள், சிறிய புத்தகங்கள் மூலமாகவும். இந்த விளம்பரங்களின் பின் இருக்கும் எண்ணம் என்னவென்ரால், அது இதுதான். வேசிகளிடம் ஆண்கள் போவதை நிறுத்த முடியுமா, என்றால் அது முடியாத ஒன்று என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இந்த தொழில் மினத வர்க்கம் ஆரம்பித்த நாட்களிலுருந்தே இருக்கிறது என்பதும் தெரிந்ததே. ஆதனால் தான் எய்ட்ஸ்ஸை தடுக்கும் உபாயங்களுக்கு முக்கியத்துவம் தருகிரார்கள் இதனை சார்ந்திருக்கும் விளம்பரங்களில். எதை தடுத்து குறைக்க முடியுமோ அதை சரிவர செய்தால் இந்த வியாதியை லிமிட்டுக்குள் கொண்டுவரலாம் என்ற நம்பிக்கை. இது தான் சிறந்த வழி என்பது என் கருத்து கூட.

நிற்க. ஆதவா, மிக நல்ல நடையுடன் எழுதிய கதை. நீளமாக எழுதீருக்கும் சிறிய கதை ஏய்ட்ஸ்வியாதியால் அவுதிபடும் நபர்களுக்கு நம் சமுகத்தில் நடக்கும் அவமானங்களையும், அனியாயங்களையும் பிரதிபலிக்கிறது. நல்ல கதை. பாராட்டுக்கள், ஆதவா. நன்றி.

ஆதவா
14-07-2007, 06:26 PM
அழகு ராஜ் என்ற பதிவர் இருப்பது சத்தியமாக தெரியாது.... தெரிந்திருந்தால் நிச்சயம் போட்டிருக்கமாட்டேன்.. மன்னிக்கவும் அழகு ராஜ் அவர்களே! படித்து கருத்திட்டமைக்கு மிகவும் நன்றி.
கோபாலன்.. உங்கள் கருத்து மனமகிழ்வைத் தருகிறது... எனது கதைக்கு ஓரளவு வெற்றியும் கிடைத்துவிட்டது.. மிகவும் நன்றிங்க கோபாலன்..

மனோஜ்
01-09-2007, 07:02 PM
மிக அருமையான கதை நல்லகருத்து நன்றி ஆதவா

ஓவியா
01-09-2007, 08:48 PM
முதலில் தோளைத்தட்டி 'சபாஷ்' ஆதவா. கதை கண்ணீரை வரவைக்கின்றது. முக்கியமாக வார்த்தை உபயோகம், மற்றும் வசனம் கதையை மிக அழகாகவும் நேர்த்தியாகவும் நகர்த்தி சென்றுள்ளது.

மீண்டும் உன் கைவண்ணத்தில் எண்ணில்லா கதைகளை படிக்க காத்திருக்கு அன்பு நெஞ்சங்களின் முதல் வரிசையில் நானும் இருப்பேன்.

உன் எழுத்தின் ரசிகையாக இருப்பேதே உன்னிடமிருந்து எனக்கு கிடைக்கும் முதல் பரிசு :music-smiley-008:


கதை,

http://www.isabelperez.com/webquest/aids/images/Stop-AIDS-Hand.gif

ஏய்ட்ஸ் நோயாளிகளை சமூகம் ஏற்க்கும் காலம் இன்னும் வேகுதூரமே!!
அவர்களை கண்டு அஞ்சி ஓடுபவர்களே அதிகம்.
முக்கியமாக அழகுராஜின் நண்பனின் மனைவியின் வசனம், சுடும் நெருப்பிற்க்கு சமம்.