PDA

View Full Version : விவேகம் உண்மையான ஆலோசகன்rajaji
06-07-2007, 06:12 AM
" தேகபுரி " என்ற இராஜதானியில், " மனம் " என்னும் அரசன் ஆண்டுவந்தான். இந்த அரசனின் அமைச்சனது பெயர் " விவேகி ". அரசனுக்கு ஆறு நண்பர்கள் இருந்தனர். அவர்கள் முறையே காம, குரோத, லோப, மோக, மத, மாற்சரியம் என்ற நாமகரணம் பூண்டவர்களாக இருந்தனர்.

மனமாகிய அரசனும் அவனது சிநேகிதர்களும் உலகில் காணப்படும் சகல தீச்செயல்களிலும் அழுந்தி தேகபுரியாகிய இராஜதானியை மிகவும் இழிநிலைக்குள்ளாக்கி விட்டனர். " விவேகி " ஆகிய அமைச்சன் நேர்வழிகளை எடுத்துரைத்துப் புத்திமதி கூறினால், அவைகளை புறக்கணித்துவிட்டு அறுவர் புத்தியை மறுக்காது ஏற்று, அல்லும் பகலும் அலட்சிய வாழ்வு வாழலானான். ஒருமுறை அரசன் மதுபோதையில் வீதி ஓரத்தில் புரண்டபடி கிடந்தான். இன்னொரு தினம் அறிவற்ற அவல நிலையில் ஒரு கிடங்குக்குள் கிடந்தான். ஒவ்வொரு தருணமும் அரசனைக் காப்பாற்றியது அவனது அமைச்சனாகிய " விவேகியே ". நாளடைவில் தனது அமைச்சனின் அரிய புத்திமதிகளைக் கேட்டு நடவாத புத்தியீனத்தையும் தனது துன்மதி நிறைந்த நண்பர்களினால் நேர்ந்த அனர்த்தங்களையும் எண்ணி எண்ணி வெட்கி உணரலானான். பல விசனங்களின் பின்பே இவ்வுணர்வு வரலாயிற்று. முடிவில் தனது கடந்த கால வாழ்க்கையை எண்ணி மனம் பச்சாதாபமடைந்து, தனது ஆறு நண்பர்களது உறவுக் கயிற்றை வெட்டி, தனது உயிர் போன்ற அமைச்சனது வழி செல்வது எனத் தீர்மானித்து விட்டான்.

மனமாகிய அரசன் தனது கடைசிக் காலத்தில் காவி உடை தரித்து, தலை மொட்டை தட்டி, உருத்திராட்சமாலை தரித்து, கமண்டலம் ஏந்தும் கையுடன், சாந்தரூபியாகக் காட்சி தந்தார். நிழல் போன்று நீங்காது, உடன் திரிந்த அறுவர்களும் வாயில் கையை வைத்தபடி அரசனுக்கு அண்மையில் வருவதற்கும் அஞ்சினவர்களாய் நின்றனர். " விவேகி " ஆகிய அமைச்சனது சொற்கேட்டு நடக்கும்போது தங்களது செல்வாக்கு ஒரு செல்லாக் காசாகி விட்டது என்பதனைத் தாமாகவே உணர்ந்து கொண்டனர்.


நீதி : எப்போதும் விவேகத்தின் வழி நடந்தால் துன்பங்கள் ஏற்படாது.

(இது சுவாமி ராமதாஸின் அருளுரைகளில் இருந்து மீள் பதிப்பு செய்யப்பட்டது)

aren
06-07-2007, 06:37 AM
அதனால்தான் விவேகத்துடன் நடந்துகொள்ளுங்கள் என்று சொல்கிறார்களா?

அமரன்
06-07-2007, 08:49 AM
நல்ல நீதிக்கதை ராஜாஜி. மனிதனை வைத்து இராச்சியம் அமைத்து நீதி போதித்த கதையைத் தந்துள்ளீர்கள். தொடருங்கள் உங்கள் இந்த சேவையை. நன்றி.

விகடன்
05-08-2007, 07:51 PM
அந்தக்காலத்தில் பாட்டி பாட்டன் சொன்ன நீதிக்கதைகளிற்கு பின்னர் இன்றுதான் வாசிக்கிறேன் (அறிகிறேன்)

மகிழ்ச்சியும் உற்றேன். நன்றி