PDA

View Full Version : சிறு துளி பெருவெள்ளம்



ரிஷிசேது
04-07-2007, 04:42 PM
1.
மிகவும் குழப்புகிறது
வழிகாட்டிகள்..
போகும் திசையறியாது
திரும்புகிறேன் புறப்பட்ட இடத்திற்கே

2,

இருப்பதும் இல்லாததுமாயிருக்கிறது
வானம் -
எனக்கு சொல்லப்பட்ட கடவுள்களைப்போல்

3.

இதை விருட்சமென மலைக்காதே
நேற்றைய விதையென்றறி

4.
இறப்பின் முகவரியை
எழுதிப்போயிற்று
முகச்சுருக்கமாயும்
நரைகளாயும்
காலம் -
அனுபவங்களெனவும் சொல்லலாம்

5.
இனி செய்ய ஒன்றுமேயில்லையென்ற
ஒரு முடிவிலா கணத்தில்
இறந்துபோனான் வழிப்போக்கன்
இருப்பவர்கள் கவலைப்பட்டனர்
அவனுடலை எரிப்பதா புதைப்பதாவென..

6.
என்னை துரத்தும்
எண்ணங்களிலிருந்து
என்னை விடுவித்தேன்
பறவைபோலானேன்...

7.
ஒரு புல்லைப்போல் புதிதாகவும்
பறவையைப்போல் எச்சரிக்கையாயும்
பாம்பைப்போல் தந்திரசாலியாகவும்
மாறியபோது மரணமானது என்
குழந்தைத்தனம்
பின் எப்போதும் நான் குழந்தையானதில்லை...

8. எல்லோரையும்
உன் பெயர் சொல்லியே அழைக்கிறேன்
உன் பெயர் தெரிந்தபின்
வேறொன்றும் அழகாயில்லை

9.
ஆம் பெயரிலென்ன
என்னை எப்படி வேண்டுமானாலும்
கூப்பிட்டுப்போ
உன் குரல் கேட்டால் போதும்

10.
பறவைகள் சொல்லும்
வாழ்வின் தத்துவம்
அந்த நொடிகளில்
வாழவும் மறக்கவும்
11.
உனக்கான ஒரு பாடல்
எழுதிய பிறகு நல்ல மழை
பாடல் படகானது
மழை நீரெல்லாம்
உன் பாடல்...
12.
புதுப்புத்தக வாசனையாய்
உன் நினைவுகள்
நடுவே வைக்கப்பட்ட
மயிலிறகும் அதன்
போடாகுட்டிகளுமாய்
நிஜம்...

அக்னி
04-07-2007, 05:05 PM
1.
மிகவும் குழப்புகிறது
வழிகாட்டிகள்..
போகும் திசையறியாது
திரும்புகிறேன் புறப்பட்ட இடத்திற்கே
இப்போது அதற்கும் வழியில்லை...
வழிகாட்டி எங்கே என்று வழிகாட்டவும் வழிகாட்டி தேவையாகிப் போனது...

2,

இருப்பதும் இல்லாததுமாயிருக்கிறது
வானம் -
எனக்கு சொல்லப்பட்ட கடவுள்களைப்போல்
சோகத்திற்கும், தோல்விகளுக்கும் வானமே எல்லையாகாமல்,
இன்பத்திற்கும், வெற்றிக்கும் வானமே எல்லையாக,
வரையறுக்கப்படட்டும்...

3.

இதை விருட்சமென மலைக்காதே
நேற்றைய விதையென்றறி
நாளை இன்னும் பல விதைகள் இன்றைய விடுட்சத்திடமிருந்து...

4.
இறப்பின் முகவரியை
எழுதிப்போயிற்று
முகச்சுருக்கமாயும்
நரைகளாயும்
காலம் -
அனுபவங்களெனவும் சொல்லலாம்
இறப்பின் முகவரி, முகத்தின் வரி பார்த்து...
பிறப்பின் முகவரி எதைப் பார்த்து..?

5.
இனி செய்ய ஒன்றுமேயில்லையென்ற
ஒரு முடிவிலா கணத்தில்
இறந்துபோனான் வழிப்போக்கன்
இருப்பவர்கள் கவலைப்பட்டனர்
அவனுடலை எரிப்பதா புதைப்பதாவென..
எரிப்பதா புதைப்பதா, என்று எண்ணியே,
உடலம் அழுகவைத்து, நடுவில் வைத்து,
சுற்றி இருந்து, அழும் மானிடகூட்டம்...

6.
என்னை துரத்தும்
எண்ணங்களிலிருந்து
என்னை விடுவித்தேன்
பறவைபோலானேன்...
பறவையின் வரவை எதிர்பார்த்து,
காத்திருக்கும் வல்லூறு,
சந்தோஷித்தது...

7.
ஒரு புல்லைப்போல் புதிதாகவும்
பறவையைப்போல் எச்சரிக்கையாயும்
பாம்பைப்போல் தந்திரசாலியாகவும்
மாறியபோது மரணமானது என்
குழந்தைத்தனம்
பின் எப்போதும் நான் குழந்தையானதில்லை...
குழந்தைத் தனம் போனால், வராதது...
அதன்பின் ஏழ்மையே...

8. எல்லோரையும்
உன் பெயர் சொல்லியே அழைக்கிறேன்
உன் பெயர் தெரிந்தபின்
வேறொன்றும் அழகாயில்லை
என் கண் குருடாய்ப் போனது...

9.
ஆம் பெயரிலென்ன
என்னை எப்படி வேண்டுமானாலும்
கூப்பிட்டுப்போ
உன் குரல் கேட்டால் போதும்
கூப்பிட்டு வா,
போகாதே...
என்னை ஜடமாக்கி...

10.
பறவைகள் சொல்லும்
வாழ்வின் தத்துவம்
அந்த நொடிகளில்
வாழவும் மறக்கவும்
ஆனால், ஆறாம் அறிவு,
மறக்காமல்
வாழத்தானே நிர்ப்பந்திக்கிறது...

11.
உனக்கான ஒரு பாடல்
எழுதிய பிறகு நல்ல மழை
பாடல் படகானது
மழை நீரெல்லாம்
உன் பாடல்...
நான் பிடிக்கும்,
குடை உன்னைத்,
தடுக்கும் அடையாளமல்ல...
என்னை நனைக்க,
இன்னும் பலமாகப் பெய்,
என்ற எதிர்பார்ப்பு...

12.
புதுப்புத்தக வாசனையாய்
உன் நினைவுகள்
நடுவே வைக்கப்பட்ட
மயிலிறகும் அதன்
போடாகுட்டிகளுமாய்
நிஜம்...
எதிர்பார்த்தே ஏமாந்த நெஞ்சம்...

ஒரு டஜன்,
குட்டிக் குட்டிக் கவிதைகளில்,
சுண்டியிழுக்கின்றீர்கள்,
மனதை...
பாராட்டுக்கள்... ரிஷிகேது...

இனியவள்
04-07-2007, 05:24 PM
கவிகள் அருமை ரிஷி வாழ்த்துக்கள்

வாசிக்க வாசிக்க திவட்டாதது கவிகளே....

ரிஷிசேது
04-07-2007, 07:29 PM
மிக்க நன்றி அக்னி மற்றும் இனியவளுக்கும்.

இளசு
04-07-2007, 08:58 PM
வாழ்த்துகள் ரிஷிசேது அவர்களே..

தத்துவங்களும் காதலும் மல்லுக்கட்டி நிற்கும்
சின்ன சின்ன கவிதைகள் அத்தனையும் அழகு..

கல்யாண்ஜி, தபூசங்கர் அதிகம் வாசிப்பீர்கள் என நினைக்கிறேன்.. சரியா?

அமரன்
05-07-2007, 09:54 AM
அருமையான கவிதைகள். ஆழமான சிந்தனைகள். நன்றிகள் ரிசி.