PDA

View Full Version : ராம்பாலின் மின்மினிப் பூச்சிகளும்.. கனவுī



rambal
23-05-2003, 03:00 PM
ராம்பாலின் மின்மினிப் பூச்சிகளும்.. கனவுலகமும்...

(முன்குறிப்பு:
இந்தப் பதிப்பை பதிக்கலாமா வேண்டாமா என்று ஏகப்பட்ட குழப்பங்களுக்கு இடையில்...
தற்பெருமை பேசுவது போலாகுமோ என்ற ஐயத்தில்...
யாராவது தப்பாக எடுத்துக் கொண்டால் என்கின்ற பயத்தில்...
இறுதியாக, தமிழ் மன்றக் கவிதைகள் பக்கத்தைப் பற்றிய பதிப்பில் என்னுடைய கவிதைகள் பற்றி
எழுதாமல் விட்டு விட்டால்..
இப்படி பல நீண்ட தர்க்க விவாதங்களுக்குப் பிறகு..
என்னுடைய சுயவிமர்சணம் போன்று
என்னைவிட்டு விலகி ஒரு பார்வையாளனாக..
ஒரு விமர்சகனாக..
மன்றத்தின் கண்காணிப்பாளராக...
எதிர் சீட்டில் அமர்ந்து நான் ரசித்தவைகளை மட்டும் உங்களுக்கு தரப் போகிறேன்...
அநேகமாக முடிந்தவரை உண்மையைத்தான் எழுதுகிறேன்..
இதுவும் அதே போல் இருக்கும் என்ற நம்பிக்கையில்...)

மன்றத்தில் முக்கியமாக கருதப்படும் கவிஞர்களுல் இவரும் ஒருவர்..
இவர் எல்லா பரிமாணங்களையும் பரீட்சார்த்தமுறையில் முயற்சித்துப் பார்த்திருக்கிறார்..
இதுதான் இவரது பாணி என்று அறுதியிட்டுக் கூற முடியாமல்..
எல்லாவித பரிமாணங்களிலும் எழுதிப் பார்த்திருக்கிறார் கவிஞர்...
கொஞ்சம் கோபம்.. எதையும் எதிர்மறையாகப் பார்க்கும் பார்வை.. ஆக்ரோசம்.. இப்படி ஒரு எரிமலையாகவே
வாழ்ந்து கொண்டிருக்கும் இவரது கவிதைகள் பற்றி ஓர் அலசல்..

முதலில் நான் ரசித்த வரிகள்...

விடை தெரியா
பயணம்
தினம் செல்லும்
சவப்பையாய்..

மனமே..

மரிக்கின்ற வயதில்
தொண்டைக்குழி ஏறி
இறங்கினால்
இத்தனை
ஆண்டு காலம்
நீ
வாழ்ந்த வாழ்க்கைக்கு
அர்த்தம் ஏது?
********

குப்பைக்காரனின் கோணிப்பையாய்
இதயம்...
குப்பைகளாய் உன்
நினைவுகள்...
பைக்குள் அடங்க மறுத்து
அவ்வப்பொழுது....

என்னைக் கொன்றுவிடு

இவரது எல்லைகள் கொஞ்சம் விசாலமானது.. பார்வைகள் விசித்திரமானது.. கவலைகள் அதீதமானது..
அப்படி அவர் பட்ட கவலைகள் கொஞ்சம் எல்லை மீறிய சிந்தனை..

கவலைகள்..

என் ஆயுளை நானே
கிழித்துக் கொண்டிருக்கிறேன்...
ஒரு நாள்
கிழிப்பதற்கு நாட்காட்டி இருக்கும்...
நான் இருக்க மாட்டேன்...
பின்பு நாட்காட்டியைக் கிழிப்பது யார்?
இதைப்பற்றிய கவலைதான் எனக்கு...


கவிதைகள் எப்படி எழுதுகிறார் என்பதைப் பற்றி கொஞ்சம் விஸ்தாரணமாகவும் விளக்கியுள்ளார்..
அதற்கு அவர் பயன்படுத்திய வார்த்தைகள் ஓவியமாய்....

மனக் குளத்தில்
வார்த்தை பிடிக்க
கொக்காய்
ஒற்றைக்காலில்
தவமிருந்த கதையை
எப்படிச் சொல்வேன்?

நிலவில் அமர்ந்து
தூண்டில் வீசி
நட்சத்திரம் பிடிக்கப் போய்
பிரபஞ்ச அழகில்
லயித்து
சொக்கிப் போய் நின்றதை
எப்படிச் சொல்வேன்?

எப்படிச் சொல்வேன்?

எப்படிச் சொல்வேன் என்று கேட்டுக்கொண்டே எல்லாவற்றையும் ஒப்பித்துவிடுகிறார்..

காத்திருத்தலின் அவஸ்தைகளை வித்யாசமான கோணத்தில் இவர் சொல்லியிருக்கும் அழகு அலாதியானது..

பார்க்கும்..

கிழிந்த தகரத்தைத் தைத்து
நகரும் தேன்கூடாய்
மாநகரப் பேருந்துகள்
நின்று போகும்...
...........
..........
.........
உதடுகளுக்கு வேலை நிறுத்தம்
கொடுத்து
காத்திருத்தல்கள்
முக்கியமாய்ப் போன
பொழுதில்
அமைதியாய்
பார்க்கும்....

இப்படி வெறு எதுவுமெ செய்யாமல் காத்திருக்கும் போது சுற்றி நிகழ்ந்தவைகளை அருமையாய் பதிந்துள்ளார்..
மற்றொரு இடத்தில்

காத்திருத்தல் தேசம்...

............
..........
மரணமடைந்த பின்னும்
வெட்டியானுக்காக
காத்திருந்து
எரிந்ததில்
கழிந்தது
இரண்டு நாள்...

இப்படி காத்திருத்தல்களால் அதிகம் பாதிக்கப்பட்டதால் வெளிப்பட்ட கவிதைகள் ஒரு ரகம் என்றால் மனிதர்களை
இவர் பதிந்திருக்கும், பார்த்திருக்கும் கோணம் கொஞ்சம் வித்யாசமானது..

வாடிக்கை மனிதர்கள்..

அரசு அங்காடியின்
நீண்ட வரிசையில்
நிற்கும் பொழுது
ஏறிவிட்ட விலைவாசி பேசும்..
..........
..........
..........
ஓய்வு பெறுவதற்குள்
ஊருக்கு ஒதுக்குப்புறத்தில்
ஒரு மனையடி வாங்கி
வீடு கட்டி பார்த்து
ஓய்வாய் நாற்காலியில்
அமர்ந்து
செய்தித்தாள் படித்து
கண் மூடும்..

இப்படியாக தன்னைச் சுற்றி நிகழும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் தன்க்கும் சம்பந்தமே இல்லை என எட்டி நிற்கும்
மனிதர்களை சாடியுள்ளார் என்றால் அடுத்து வருவது இன்னும் கொஞ்சம் மாறுபட்டது..

நடிப்பு விதேசிகள்..

நத்தை வாழ்வு
வாழ்ந்து கொண்டு
ஊர்க்குருவி
வாழ்வு வாழ்வதாய்
புறம் பேசித் திரியும்..

என்ன செய்வது
மாயமான் வேட்டைக்குப் போன
இந்த நடிப்பு விதேசிகளை?
பாவப்பட்டவர் கணக்கில்தான்
சேர்க்க வேண்டும்..

வெளிநாட்டிற்கு வேலைக்குப் போன மனிதகளைப் பற்றிய பதிவு இது.. ஆனால், இந்த மனிதகளுக்காக இரக்கப்பட்டு பாவப்பட்டோர்
கணக்கில் சேர்க்கச் சொல்கிறார் கவிஞர்..
இன்னொரு இடத்தில் மனிதர்களை நாட்டு விலங்கினம் என்று சாடி உள்ளார்..

விலங்கினம்..

கம்பி கட்டி
மண்ணைப் பிரித்து
இது என் எல்லை
என்று
தம்பட்டம் அடிக்கும்..
ஆயுதம் குவித்து
கேட்பாரற்ற வேலி காக்கும்..
...............
..............
இப்படித்தான்
மனிதன் என்ற நாட்டு விலங்கினம்
தனித்தனித் தீவாய் போனது
கண்டு
காட்டு விலங்கினம்
சிரித்துக் கொண்டிருக்கிறது...

இப்படி பல்வகை மனிதர்களைப் பற்றி பலவகை சாடல்கள்.. அதீதமாய் மனிதம் மீது வைத்த காதலே இந்த மனிதர்கள் பற்றிய பதிப்புகள்...
இதற்கு அடுத்தபடியாக இவர் சுற்றித் திரிந்தது சுயதேடல் கவிதைகள் தான்..
அநியாயத்திற்கு சுயம் தேடி உள்ளார் கவிஞர்..

ஓட்டைப் பானையில்
இருந்து சொட்டு சொட்டாய்
ஒழுகுகிறாய்..

தீயில் பொசுங்கி
நீரில் கரைந்து
காற்றில் கலந்து
காணாமல் போகப்போகும்
மனமே...

மனத்தைப் பற்றிய பதிப்பு இது.. இவ்வளவு அருமையாய் மனதைப் பற்றி சொல்லி உள்ளார்..
மற்றொரு இடத்தில் இந்தப் பாழாய்ப்போன மனத்தை அடக்க பிரம்பு வேண்டும் என்கிறார் கவிஞர்..

ஒரு பிரம்பு வேண்டும்..

மணிக்கொரு
பேச்சு பேசி
நொடிக்கு ஒரு
நிறம் மாறி
கடந்து போனவளை
திரும்பிப் பார்த்து
கொஞ்சம் அலை
பாய்ந்து விட்டு
எதிர்ப்படுபவளைக் கண்டு
கொஞ்சம் வழிந்து விட்டு
அடுத்த கணம்
ஒதுக்கிவிட்டுப் போன வாகன
ஓட்டுனனை திட்டிவிட்டு
...........
............
என் பிரியத்திற்குரிய எதிரியாய்
எப்பொழுதும் என்னை
சுற்றிவிட்டு வேடிக்கை பார்த்து
நான் படும் அவஸ்தை கண்டு
ரகசிய சிரிப்பு வேறு..
..........
.........
எந்தத் தேடுதலின் முடிவிலும்
அடுத்த தேடுதலை
தயாராய் வைத்து..
இப்படி என் உடன் பிறந்த
இம்சையான மனதை அடித்து
அடக்குவதற்கு ஒரு பிரம்புதான்
தேடிக்கொண்டிருக்கிறேன்..

இப்படி இவரது தேடுதல்கள் இருக்க அடுத்த நிலைக்கு தாவி கடவுளைத் தேடுகிறார் கவிஞர்..

பரம்பொருள்..

வெற்றிடமாய் எங்கும் நான்
வியாபித்திருக்க
ஒற்றைப் புள்ளியில் நீ
மையமாய் குவிந்திருக்கிறாய்..

பட்டமாய் நான்
பறந்து கொண்டிருக்க
ஆட்டுவிக்கும்
கயிறாய் நீ..
..........
..........
நான் முடிவைப்பற்றிய
பயத்திலிருக்க
நீயோ முடியாத முடிவாய்
தொடர்ந்துகொண்டிருக்கிறாய்..

உன்னைத்தேடி நான்
எங்கெங்கோ ஓடிக்கொண்டிருக்க
என்னுள் நீ
ஒளிந்திருக்கிறாய்...

இப்படியாக கடைசியாகக் கடவுளை தனக்குள் கண்டு கொண்ட கவிஞரின் ஆசைகள் அதிகம்..

ஆசைகள்..

கண்ணடிக்கும்
நட்சத்திரங்கள் கொண்டு
தட்டாங்கல் விளையாடி...
......
........
........
யாசகம் வந்து கேட்பவருக்கு
கோணி நிறைய பணம்
கொடுத்து அனுப்பிட...

இப்படி இவரது ஆசைகள் ரசிப்பிற்குறியவை...

வாழ்வின் மெல்லிய உணர்ச்சிகளை இவர் பதிந்திருக்கும் அழகிற்கே இவரை என்ன சொல்லி வாழ்த்தினாலும் தகும்..

மெல்ல நகும்....

முதல் தேதி
சம்பளப் பணத்தை
எண்ணி முடித்ததும்
மெல்ல நகும்....

நீண்ட நேர காத்திருப்புக்குப் பின்
அலுவலக நேரப் பேருந்து
காலியாக வந்தால் சீட்டில் அமர்ந்ததும்
மெல்ல நகும்...

இப்படி எல்லோர் வாழ்விலும் நடக்கும் ஒரு மெல்லிய சந்தோச உணர்ச்சியின் இறுதியில் தொக்கி நிற்கும்
மெல்ல நகுவதைக் கூட தனது கூரிய பார்வையால் பதிந்துள்ளார் கவிஞர்..

மழை மேல் அப்படி ஒரு மோகம் கவிஞருக்கு...
மழையில் நனையச் சொல்லி கோரிக்கை வைக்கிறார் கவிஞர்..

மழையில் நனைந்து பார்....

மழை உருவாக்கிய
தற்காலிக சிற்றாற்றில்
கவிழ்ந்தாலும்
கவலையே இல்லாமல்
விட்டுப் பழகலாம்
காகிதக் கப்பல்!
..............
..............
..........
இந்தச் சுகம் கிடைக்குமா?
ஜன்னல் கம்பி பிடித்துக் கொண்டே
மழையை ஏதோ
நிர்வாணப் பெண்ணை
வேடிக்கை பார்ப்பது போல்
பார்ப்பதில்....

இப்படி எல்லோரையும் மழையில் நனைய வேண்டும் என்றும் அந்தசுகத்தை அனுபவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார் கவிஞர்..

சமூகத்தின் மீது கொண்டுள்ள அதீதப் பற்றினால் இவரது கவிதைகளில் ஒரு சிகப்பு வாடை அடிக்கும்..
கோபம் கொப்பளிக்கும்.. ஏளனம் சிரிக்கும்..

பூமி தினம்..

கண்ணி வெடி
விதைக்கப் பட்ட
சாலைகள்..
கையில் ஏகே47
தூக்கிய சிறார்கள்..
இது ஒரு தேசம்..
............
............
ஒரு ரொட்டிக்கு
ஒரு கூடை நிறைய
பணக்கட்டு..
சதை வியாபாரம்..
இது ஒரு தேசம்...

இப்படியாக உலகத்தில் உள்ள தேசங்களைப் பற்றி குமுறியுள்ளார் கவிஞர்.. இலங்கைத் தமிழர் பிரச்சினை அற்ரிக் கூட
பதியப் பட்ட ஒரு பதிப்பும் அப்படித்தான்..

நீ மட்டும் எங்கே?

இன்று
கண்ணிவெடிகள்
அகற்றப்பட்டு சாலைகள்
எல்லாம்
பேறுகாலம் முடிந்த தாயாய்..
............
..........
..........
அடி பட்ட இடத்திற்கு மருந்தாய்
வைத்த இந்த மண் நம்முடய..
ஏலேலோ பாடி உன் குரல் கலந்த
வீசும் காற்றும் நம்முடைய..
இந்தக் குருவிகளும்
பட்டாமூச்சிகளும் கூட..
இனி பீரங்கிகளுக்குக் கூட
வேலையிருக்கா..

இந்த தருணத்திற்காகத்தானே..
நட்பு, குடும்பம், பிள்ளை
வேண்டாம் என்று
ஓடிப் போனாயே..

இப்போது
நீ மட்டும் எங்கே நண்பனே?

இது ஒரு உணமை நிகழ்வு.. இது போன்று காணாமல் போன நபர்கள் அங்கு அதிகம். அவர்களுக்காக இந்தக் கவிதை..

சர்ரியலிசக் கவிதைகளும் எழுதியுள்ளார்..
என் பிணமும் கனவுகளும்...

இடுகாட்டில் என் பிணம்
எரிந்து கொண்டிருக்கிறது...
வெந்த சதைகளை
பக்குவம் பார்த்து
நான்
ருசி பார்த்துக் கொண்டிருக்கிறேன்...
வலையில் ஊஞ்சலாடிக் கொண்டே
நான் இந்தக் காட்சியை காண்கிறேன்....
கணிணியின் இயக்கங்களை
செயல் புரிய வைக்கும்
மந்திரங்களை தொலைத்த
ஒரு சவப் பொழுதின் இரவில்
நான் கனவு காண்கிறேன்....
இப்படியாக
அந்தக் கனவு
நீட்டித்து
என் மாம்சங்களை
கூறு போட ஆரம்பித்த நேரத்தில்....
(மீண்டும் ஆரம்பத்தில் இருந்து படிக்க)

அதீதக் கோபம்.. சுய தேடல்கள்.. சுய விமர்சணங்கள்.. மனித மனங்கள்.. மனித வாழ்வு.. கடவுள்.. இப்படி இவரது எல்லைகள்
நீண்டு கொண்டே செல்வதால்..
இப்படியாக ராம்பால் கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டு மின்மினிப் பூச்சிகளாக தனது கவிதைகளை மன்றத்தில் பறந்து திரிய விட்டுள்ளார்..

இத்துடன் கவிதைகள் பக்கங்களை திரும்பிப் பார்க்கும் இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொள்கிறேன்..
நன்றி...

karikaalan
23-05-2003, 04:52 PM
யதார்த்த வாதி வெகுஜன விரோதி என்பார்கள். ஆனாலும் அவர் யதார்த்தமாக இருப்பதை வெறுப்பதில்லை.
உண்மையை எடுத்துச்சொன்னால் அது தற்பெருமையாகாது.

ராம்பால்ஜி, நல்ல தொகுப்பு. படிக்கப் படிக்க, சுவை அதிகரித்தது. வாழ்த்துக்கள்.

===கரிகாலன்

poo
23-05-2003, 05:02 PM
அந்த முக்கிய நபரைப்பற்றிய உன் விமர்சணம் நன்றாகவே உள்ளது ராம்..

நிலா
23-05-2003, 10:23 PM
சுயவிமர்சனம் நன்றாகயிருக்கிறது! வாழ்த்துக்கள் நண்பரே!

lavanya
23-05-2003, 11:55 PM
அந்த முக்கியமான நபருக்கு என் பாராட்டுக்கள் ராம்பால்ஜி......
ஆனால் ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும்..அவரில்லையேல்
நீங்கள் இல்லை....

Nanban
24-05-2003, 08:10 PM
ராம்பாலின் மின்மினிப் பூச்சிகளும்.. கனவுலகமும்...

(முன்குறிப்பு:
இந்தப் பதிப்பை பதிக்கலாமா வேண்டாமா என்று ஏகப்பட்ட குழப்பங்களுக்கு இடையில்...
தற்பெருமை பேசுவது போலாகுமோ என்ற ஐயத்தில்...
யாராவது தப்பாக எடுத்துக் கொண்டால் என்கின்ற பயத்தில்...
இறுதியாக, தமிழ் மன்றக் கவிதைகள் பக்கத்தைப் பற்றிய பதிப்பில் என்னுடைய கவிதைகள் பற்றி
எழுதாமல் விட்டு விட்டால்..
இப்படி பல நீண்ட தர்க்க விவாதங்களுக்குப் பிறகு..
என்னுடைய சுயவிமர்சணம் போன்று
என்னைவிட்டு விலகி ஒரு பார்வையாளனாக..
ஒரு விமர்சகனாக..
மன்றத்தின் கண்காணிப்பாளராக...
எதிர் சீட்டில் அமர்ந்து நான் ரசித்தவைகளை மட்டும் உங்களுக்கு தரப் போகிறேன்...
அநேகமாக முடிந்தவரை உண்மையைத்தான் எழுதுகிறேன்..
இதுவும் அதே போல் இருக்கும் என்ற நம்பிக்கையில்...)


தயக்கங்களின் இறுதியில், சுய விமர்சனம் வெற்றி பெற்றதாகவே கருதுகிறேன்...
விருப்பு, வெறுப்பின்றி, ஒரு அலசல். நடந்து வந்த பாதையைத் திரும்பப் பார்ப்பதே ஒரு அலாதி சுகம் தான். அந்த அனுபவங்கள், ஒரு இனிமையையும் திருப்தியையும் கொடுக்கும். இத்தகைய ஒரு சுய விமர்சனத்தில், நாமும் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் உண்டு. அடிக்கடி பழையதைப் படித்துப் பார்க்கும் பழக்கமும் உண்டு. வெளிப்படையாக எழுதியதில்லை. சுயவிமர்சனத்தில் ஈடுபடுவதில் சிறிதும் தவறில்லை. நேர்மையாகத் திறனாய்வு செய்யும் பக்குவம் இருந்தால். அது உங்களிடம் நிறையவே இருக்கிறது. (Critique என்ற வார்த்தைக்கு தமிழ் பதம் கேட்டிருந்தார் - கரிகாலன் என்று நினைக்கிறேன். சரியான பதம் - திறனாய்வு.)



மன்றத்தில் முக்கியமாக கருதப்படும் கவிஞர்களுல் இவரும் ஒருவர்..
கருதப்படுபவர் அல்ல...... முக்கியமானவரே நீங்கள் தான். நம் கவிதைக்கு இவரது விமர்சனம் வந்தாகிவிட்டதா என்று தான் முதலில் தேடுவேன். அத்தனைக்கு முக்கியமான ஆள். அநேகமாக, இங்குள்ள அத்தனை படைப்பாளிகளும் அதை எதிர்பார்ப்பார்கள் என்றே எண்ணுகிறேன்.


இவர் எல்லா பரிமாணங்களையும் பரீட்சார்த்தமுறையில் முயற்சித்துப் பார்த்திருக்கிறார்..
இதுதான் இவரது பாணி என்று அறுதியிட்டுக் கூற முடியாமல்..
எல்லாவித பரிமாணங்களிலும் எழுதிப் பார்த்திருக்கிறார் கவிஞர்...

நான் கல்விமுறையில் இலக்கியமோ, இலக்கணங்களோ கற்றவன் இல்லை. ஆர்வம் கொண்டு தான் இது நாள் வரையிலும் எழுதி வந்திருக்கிறேன். ஆனால், நீங்கள் உபயோகிக்கும் சில பல இலக்கண பதங்களுக்கு அர்த்தம் தேடி, புத்தகங்கள் வாங்கி, படித்து, நிறைய கற்றுக் கொள்ளவும் வைத்தீர்கள். இந்த வரிசையில் தான் ஹைகூவின் இலக்கணத்தைப் பற்றி இன்று ஒரு தகவலைப் பதிவு செய்திருக்கிறேன். மேலும், நான் படித்தவைகளைப் பதிவு செய்யவும் முயற்சிப்பேன்.

மேலும், இந்த சுய விமர்சனத்தால், இடையில் சில நாட்கள் பங்கேற்க முடியாமல் போன பொழுது, படைக்கப் பட்ட சில கவிதை வரிகளையும் இங்கே படிக்க முடிந்ததிற்கும் நன்றி சொல்ல வேண்டும். குறிப்பான சில வரிகள் இங்கே:




கவலைகள்..


என் ஆயுளை நானே
கிழித்துக் கொண்டிருக்கிறேன்...
ஒரு நாள்
கிழிப்பதற்கு நாட்காட்டி இருக்கும்...
நான் இருக்க மாட்டேன்...
பின்பு நாட்காட்டியைக் கிழிப்பது யார்?
இதைப்பற்றிய கவலைதான் எனக்கு...



ஒரு பிரம்பு வேண்டும்..

எந்தத் தேடுதலின் முடிவிலும்
அடுத்த தேடுதலை
தயாராய் வைத்து..
இப்படி என் உடன் பிறந்த
இம்சையான மனதை அடித்து
அடக்குவதற்கு ஒரு பிரம்புதான்
தேடிக்கொண்டிருக்கிறேன்..


தேடுதல்கள் முடிந்து போகும் பொழுது, தான் மனதிற்கு மரணம் சம்பவிக்கிறது. நாட்காட்டியைக் கிழிப்பதற்கு தசையும், நரம்பும், ரத்தமும் இருக்கும். ஜீவன்தான் இருக்காது...... இந்த மனதை அடித்து அடக்க எந்த ஒரு பிரம்பிற்கும் சக்தி கிடையாது. பிரம்பிற்குள்ளும் புகுந்து அதை தனதாக்கிக் கொண்டு, பின் ஒரு புதிய பிரம்பைத் தேடச் சொல்லும்.

கவிதைகளை ஒன்றுக்கொன்று தொடர்பு வைத்துக் கொள்ள செய்வதில், உங்களுக்கு இணை வேறு யாருமில்லை.


[quote]

பரம்பொருள்..
[color=blue]
வெற்றிடமாய் எங்கும் நான்
வியாபித்திருக்க
ஒற்றைப் புள்ளியில் நீ
மையமாய் குவிந்திருக்கிறாய்..



தேடுதல்களை ஒரு ஒற்றைப் புள்ளியில் கொண்டு வந்து நிறுத்தி, இறைவனைக் காண முயற்சிப்பது எல்லோராலும் எளிதாக அறிய முடியாத முயற்சி. மேற்கோள்கள் காட்டப்பட்ட இந்த மூன்று கவிதைகளுமே தான் வாழ்க்கையின் மொத்த முயற்சியும். எல்லோரும் ஒரு நாள் இந்த முயற்சியில் தான் ஈடுபடுவார்கள். சிலரால் சொல்ல முடிகிறது. பலருக்குச் சொல்லத் தெரிவதில்லை. பிறர் சொல்லும் பொழுது ஆமோதிப்பர். அத்தகைய ஆமோதிப்புகளில், என்னுடையதும் ஒன்று.

பாராட்டுகள், ராம்பால், அவர்களே......

rambal
07-04-2004, 04:12 PM
இது போன்ற ஒரு சுய விமர்சணம் எழுத ஆசைதான்..
விரைவில் எழுதுவேன் என்ற
நம்பிக்கையில்..

kavitha
08-04-2004, 11:06 AM
ஒரே கல்லில் தேன்கூடு!