PDA

View Full Version : படைப்பும், படைப்பாளியும்........... ஓஷோவின் பார்வையில் (2)



Nanban
23-05-2003, 12:30 PM
படைத்தல் என்பது எந்த ஒரு செய்கையும் குறிப்பிடுவது அல்ல - ஓவியம், கவிதை எழுதுவது, இசைப்பது, நடனமாடுவது என்று எந்த ஒன்றையும் தனித்திட்டு வழ்ங்குவது அல்ல. படைத்தல் என்பது எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு செய்கை, ஒரு நிகழ்வு - இவற்றின் மீது படைக்கும் குணத்தை சுமத்தும் பொழுது, ஆற்றலை ஏற்றுப் பொழுது, அந்த சாதரண செய்கை, நிகழ்வு, படைப்பாக உருப் பெறுகிறது. செய்கை தனித்து படைப்பாக உயர்வு பெறுவதில்லை. உங்களால் ஓவியம் செய்ய முடியும் - படைத்தல் என்ற தகுதியைப் பெறாமலே. நடனமாட முடியும் - கலை இல்லாமலேயே. இது போல, உங்களால் சமைக்க முடியும் - படைக்கும் உணர்வு பெற முடியும். படையல் என்ற பெயரிலேயே ஒரு வழிபாட்டு முறை கண்டது நம் பரம்பரை அல்லவா? தரையைச் சுத்தம் செய்வதைக் கூட உயிர்ப்புடன் செய்ய முடியும். ஆலயத் திருப்பணிக்காக தரையைச் சுத்தம் செய்வதென்றால், எத்தனை ஆர்வத்துடன், உயிர்ப்புடன் அக்காரியத்தில் ஈடுபடுகிறீர்கள்? ஈடுபாடு இல்லையேல், படைத்தல் இல்லை. சக்தி இல்லை. ஒரு செய்லின் மீது, நீங்கள் காட்டும் ஈடுபாடும், ஆர்வமும் கொடுக்கும் சக்தி தான் படைத்தலை உண்டாக்குகிறது. படைத்தல் என்பது ஒரு செயலின் மீது, உங்கள் காட்டும் ஈடுபாடு, ஆர்வம், அந்த செயலை நோக்கிய உங்கள் சிந்தனை, பார்வை, அணுகுமுறை இவையே.

நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் - படைப்பு என்பதை எந்த செயல்களையும், எல்கைகளையும் குறிப்பிட்டு அடைத்து விடாதீர்கள். ஒவ்வொரு மனிதனும் படைப்பாளியே! அவன் எதைச் செய்தாலும், ஈடுபாட்டுடன் செய்யும் பொழுது அது படைப்பாகிறது! நடப்பதாகட்டும், மௌனமாக ஓரிடத்தில் அமர்ந்து இருப்பதாகட்டும், சக்தி அவனிடமிருந்து வெளிப்படும். ஒரு மரத்தடியில், மௌனமாகத் தியானம் செய்த புத்தா இந்த உலகின் ஒரு ஒப்பற்ற படைப்பாளி. அவர் மக்களுக்குத் துன்பத்திலிருந்து விடுதலை என்ற நோக்கத்தில் ஆர்வத்துடன், ஈடுபாட்டுடன் இயங்கினார். ஆர்வத்துடன், ஈடுபாட்டுடன் இயங்கினால், எந்த ஒரு செயலும் படைப்பு நிலையை எய்தி விடும்.

ஓவ்வொருவரும் ஓவியனாக முடியாது; தேவையுமில்லை. எல்லோருமே ஓவியனாகிவிட்டால், ரசிப்பதற்கு ஆளில்லாமல் ஆகிவிடும். அந்த செயலைச் செய்வதற்கான ஆர்வம், ஈடுபாடு இல்லாமல் போய்விடும். படைக்கும் ஆற்றல் விலகிப் போய், அது வெறும் செய்கையாக மாறிவிடும். நம் நட்சத்திர நடிக, நடிகைகள், தங்கள் வாரிசுகளைக் களம் இறக்கிக் கண்டதென்ன? நடிப்பு என்ற செய்கையைத் தான் அந்த வாரிசுகளால் செய்ய முடிகிறது. Creativity is not there in their actions. அதுபோலவே, ஒவ்வொருவரும் நாட்டியத்திலும், நிருத்தத்திலும், மேதையாக வேண்டும் என்று நினைக்க வேண்டாம். இதெல்லாம் இல்லாமலே படைக்கும் ஆற்றல் பெற்றவராக முடியும்.

நீங்கள் எதைச் செய்தாலும், ஆனந்தத்துடன், நேசத்துடன், ஆதாயமற்ற நோக்குடன், செய்தால், அதுவே படைப்பு; ஆற்றல். அது உங்களுக்கு வளர்ச்சியைக் கொடுக்கும் - உள்ளத்தின் வளர்ச்சி. அந்த வளர்ச்சியை நீங்கள் உளப்பூர்வமாக உங்கள் உள்ளத்தில் அனுபவித்தால், அதுவே தெய்வீகம்; ஆன்மீகம், படைத்தல் - எல்லாம்.

மேலும், மேலும் நீங்கள் ஆக்கத்தில் ஈடுபடும் பொழுது, செய்வதை மனம் லயித்து செய்யும் பொழுது, நீங்கள் கடவுளின் தன்மயை அடைகிறீர்கள். ஆக்கத்தின் உச்சத்தை உங்கள் செயல்கள் எட்டும் பொழுது, நீங்கள் கடவுளின் உள்ளே வாழ ஆரம்பிக்கிறீர்கள். அப்படியானால், நீங்கள் படைப்பாளிதான். ஏனென்றால், கடவுளை உணர ஒரு படைப்பாளியால் தான் முடியும். ஆக, நீங்கள் ஒரு படைப்பாளியாக வேண்டுமென்றால், செய்வதை நேசிக்க ஆரம்பியுங்கள். ஒவ்வொரு செயலையும், ஒரு தியானமாக நினையுங்கள் - அது, எதுவாக வேண்டுமென்றாலும் இருந்துவிட்டுப் போகட்டும் - உப்புமா கிண்டுவதாகக் கூட இருக்கட்டும். நேசியுங்கள், நீங்கள் செய்வதை.

ஒரு காரியத்தை யாராவது செய்யும் பொழுது, ஒரு இனிய பாட்டை முணுமுணுத்துக் கொண்டு, மெல்லியதாக ஆடிக்கொண்டு, பரவசத்துடன் செய்து பாருங்கள். செயல் முடிந்ததும், உங்களுக்கே செய்து முடித்ததை சற்று நேரம் உற்றுப் பார்க்கத் தோன்றும், ரசிக்கத் தோன்றும், ஆம் நீங்கள் படைத்தது அல்லவா, அது? கொண்டாடத்தானே செய்வீர்கள்? அந்த செயலையே காதலிக்கக் கூட ஆரம்பித்து விடுவீர்கள்.

நீங்கள் படைத்த அந்த செயலை, யாருமே கண்டு கொள்ளாமல் போகலாம். சரித்திரம் அதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் போய்விடும். பத்திரிக்கைகள் அதைச் செய்தியாக வெளியிடாமல் போகலாம். அது முற்றிலும் நமக்கு சம்பந்தமற்றது. அந்தச் செய்கையை செய்யும் பொழுது, நாம் அனுபவித்தோமே ஆனந்தம் அது விலைமதிப்பற்றது. அதன் மதிப்பு நம் உள்ளீடானது. (The value is intrinsic).

நாம் புகழ் பெற வேண்டும் என்றும், அதற்காக படைப்பதைக் கற்க வேண்டுமென்றும், பிக்காஸோ போன்ற ஓவியக்காரன் ஆகணும் என்று நினைப்பீகளால், நீங்கள் எல்லாவற்றையும் தவற விட்டுவிட்டீர்கள். நீங்கள் வெறும் அரசியல் செய்பவராய், மோகம் கொண்டவராய் தான் மாற முடியும். நீங்கள் ஈடுபாட்டுடன் செய்யும் செய்கையினால், புகழ் வந்தால் நல்லது. உலகம் ஏற்றுக் கொண்டால் மகிழ்ச்சி. பாரதியை, மகாகவி என்று போற்ற ஆரம்பித்தது, அவர் காலத்தில் அல்லவே? ஆனால், அவர் நம்பிக்கையுடன் கவிதை செய்தார். ஆனந்தத்துடன் பள்ளு பாடினார். அவர் அளவில் ஈடுபாட்டுடன் காரியங்கள் செய்தார். புகழ் பின்னர் தான் வந்தது.

உங்கள் செய்கை, உங்களின் காதலாக இருக்கட்டும். சின்னச் சின்னச் செயல்கள் கூட பெறும் மதிப்பு பெறும், காதலுடனும், ஈடுபாட்டுடனும் செய்யும் பொழுது. எனக்கு படைக்கும் சக்தி இல்லையென்று ஒது போதும் எண்ணாதீர்கள். அவநம்பிக்கை கொள்ளாதீர்கள். நம்பிக்கைகளே உங்களை வழி நடத்திச் செல்லும். நம்பிக்கைகள் வெற்றிடங்கள் அல்ல. அவைகளுக்கும் சக்தி உண்டு. மனதின் கதவுகளைத் திறக்கும், அடைக்கும். தவறான நம்பிக்கைகள், உங்களிடம் இருக்குமானால், அவைகள், உங்களைச் சுற்றி மூடிய கதவுகளாகத் தொங்கும், கழுத்தை இறுக்கும், மூச்சுத் திணறச் செய்யும். நான் படைக்கும் திறன் அற்றவன் என்று எண்ணும் பொழுது, அது உங்கள் ஆக்க சக்தியை மேலும் பாதிக்கும். தடையேற்படுத்தும். மனதை இளக்கி எந்த வடிவமும் பெறும் சக்தியைக் குறைத்து, கடினமாக்கி, கல்லாக்கிவிடும். ஓடும் சக்தியைக் குறைத்து, தேக்க நிலையை உண்டாக்கும்.

இந்த உலகம், ஒரு சிலரைத் தான் படைப்பாளி என்று கூறுகிறது - ஒரு சில ஓவியர்கள், ஒரு சில கவிஞர்கள் என்று லட்சத்தில் சிலரைக் குறிப்பிட்டுக் கூறுகிறது. இது முட்டாள்த்தனம். பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் ஆக்கும், படைக்கும் சக்தி பெற்றவனாகவே பிறக்கிறான். ஒரு குழந்தையைக் கவனித்துப் பாருங்கள் - உங்களுக்குப் புரியும் அதனிடமுள்ள படைக்கும் ஆற்றல். அதை நாம் கொன்றுவிடுகிறோம். இதைச் செய், அதைச் செய்யாதே என்று தடைகள் வித்தித்தே, அந்த ஆக்க சக்தியை அகற்றி விடுகிறோம். தவறான நம் நம்பிக்கைகளை அதன் மீது திணிக்கிறோம். அதன் கவனத்தைத் திசை திருப்புகிறோம். ஆதாயம் தேடி காரியம் செய்யும், அரசியல் செய்யும் சூழ்ச்சிகளை, மோகத்தை ஊட்டுகிறோம். எதிர்பார்ப்புகள் நிறைந்த மனிதனால், படைக்கும் சக்தி பெற இயலாது. எதிர்பார்ப்புகள் செய்யும் காரியத்தின் மீதான ஈடுபாட்டைக் குறைத்து விடுகிறது. செய்யும் காரியம் விளைவிக்கும் ஆதாயத்தின் மீது ஆர்வம் வந்து விடுகிறது. பலனை எதிர்பார்த்துக் காரியம் செய்யும் பொழுது, ஆதம திருப்தியற்ற காரியத்தை செய்கிறான். இப்படிப்பட்ட மனிதன், ஒரு ஓவியன் ஆனால், இந்த ஓவியம் பரிசு பெறுமா என்று எண்ணுகிறான். செயலில் கவனத்தை விட்டு, எதிர்காலத்தில் என்னவாகும் என்ற எண்ணத்திற்குப் போகிறது. காரியம் படைப்பாற்றலை இழந்து, வெறும் செயலாகிறது. ஓவியம், வெறும் வண்ணங்களாகப் போகிறது. கோடுகளாகப் போகிறது. படைபாளியோ, செய்கையில் கவனம் செலுத்துகிறான். ஆக்கத்தில் தான் அவன் கவனமெல்லாம். பரிபூரணமாக. இது பிற்காலத்தில், இது என்னவாகும் என்ற கவலை இல்லை அவனுக்கு. இந்த நிமிடத்தில் செய்யும் செயல், அவனுடைய பூரண கவனத்தையும், ஈடுபாட்டையும், ஆர்வத்தையும் வசீகரித்துக் கொள்ள, முழு படைப்பாற்றலும் வெளிப்படுகிறது. படைப்பாளிக்கு எதிர்காலத்தைய பற்றிய நோக்கமுமில்லை; அச்சமுமில்லை. அவன் நிகழ்காலத்தில் வாழுகிறான். ஒவ்வொரு நிமிடத்தையும் உயிர்ப்புடன் வாழ்கிறான்.

பிறக்கும் மனிதனின் படைப்பாற்றல் அகற்றப் படுகிறது. சமூகத்தின் - நம் தாய், தந்தையர், நாம் என்று எல்லோரும் உள்ளிட்ட சமூகத்தின், விதிகளும், விதிகளுக்காக நம் மீது ஏற்றப் பட்ட நிர்பந்தங்களையும் பின்பற்றி, செயல்களில் ஈடுபடுவதிலிருந்து விலகி, செயலை நிகழச் செய்வது மட்டுமே நம் பணி என்று முடங்கிப் போய்விடுகிறோம். நம் மனது நிர்ப்பந்தனம் செய்யப்படுகிறது. (Ours minds are conditioned). இந்த நிர்ப்பந்தனங்களிலிருந்து விடுபட, நாம் தான் முயற்சிக்க வேண்டுமே அன்றி, நிர்ப்பந்தனம் செய்த, செய்ய முயற்சிக்கின்ற, சமூகத்தைச் சாடிக் கொண்டே, காலம் கழிப்பதில் பயனில்லை. அவற்றிலிருந்து வெளியேறுங்கள், உங்கள் மனதில் கொட்டபட்டுள்ள தானியங்கி கணிப்புகளை (உங்கள் சுயம் சிந்திக்கும் முன்னரே, இது நல்லது, கெட்டது என்று முடிவு கட்டிவிடும் மனநிலை - hypnotic auto-suggestions) தவிர்த்து விடுங்கள். உங்கள் வாழ்க்கையை, நீங்கள் வாழ முயற்சியுங்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் எண்ணத்தைக் கொண்டு, நீங்கள் வாழாதீர்கள் - உடன் நீங்கள் கண்டு கொள்வீர்கள் - உங்களின் சக்தியை, ஆக்கத்தை.

இந்த, இந்த செயல்கள் தான் பணம் செய்ய வழி வகுத்துக் கொடுக்கும் என்று இந்த சமூகம் கூறிய தொழிலைத் தான் இத்தனை நாட்களும் நீங்கள் செய்து வந்தீர்கள் - உங்கள் மனம் அதை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும். வருமானமற்ற செயல் என்று கூறி, நீங்கள் ஆர்வத்துடன். லயிப்புடன் ஈடுபட்டவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்தது. அந்த நீரோட்டப் பாதைகளை அடைத்தது அல்லது அழித்தது. பணம் படைப்பற்றலைக் குறைக்கும், குலைக்கும். பணம் செய்ய நீங்கள் செய்தவற்றையே மீண்டும், மீண்டும் செய்ய வேண்டி வரும் பொழுது, ஆக்கும் சக்தி இழந்து, புதிது புதிதாக படைக்கும் சக்தி இழந்து, நின்ற இடத்திலேயே சுழற்சி நிலையை அடைகிறீர்கள் - repetitive cycle. இந்த சுழற்சி நிலையிலிருந்து விடுபட, அதிகாரம் தேடுகிறீர்கள். புதிதாக பணியாள் நியமித்து, இந்த சுழற்சியை விட்டு விட்டு, மற்றுமொரு பெரியதோர் சக்கர சுழலை நோக்கி ஓடுகிறீர்கள். அதிகாரம், power........ இவைகளே முக்கியமாக்கும் பொழுது, காரியம் செய்வதில் லயிப்பை இழந்துவிட்டு, ஏற்கனவே முறைப்படுத்தப்பட்ட வழி முறைகளே போதுமென்று நினைத்துவிட்டு, எந்திர கதியில் இயங்குகிறீர்கள். அதிகாரத்தை நீங்கள் உபயோகிக்கும் பொழுது, ஆக்கும் சக்தியை இழந்து, சிலருக்கு மேல் நோக்கிப் பயணம் வகுத்து, பலருக்கு அழிவை உண்டு பண்ணி, அற்பமான வாழ்வையே வாழ்கிறீர்கள்.

ஆக்க சக்தியினால் மட்டுமே, உங்களால் இந்த உலகிற்கு பயனுள்ளவற்றை வழங்க முடியும். உங்கள் உள்ளிருந்து தான் படைக்கும் சக்தி வரமுடியுமே தவிர, உங்கள் படைப்பாற்றல், இந்த உலகிலிருந்து எதையும் பெற்றுக் கொள்ள முயற்சிக்காது. படைப்பாற்றல் மிக்கவன் இந்த உலகிற்கு அழகைக் கொடுக்கிறான். உலகின் அழகை ரசிக்கிறான். அவன் செல்லும் பொழுது, ஒரு நல்ல உலகை பிறருக்காக விட்டுச் செல்கிறான். அவனை யாருக்குமே தெரியாமல் இருக்கலாம். அல்லது சிலர் மட்டுமே அறிந்திருக்கலாம். அவன் நோக்கம் தன்னை எத்தனை பேர் அறிந்தார்கள் என்பதல்ல. அவன் தன்னை முழுமையானவனாக்கிக் கொண்டு, தன் உள்ளீட்டு மதிப்புகளைப் பெற்றவனாக. தன்னைத் தானே மதிப்பவனாக தன் வாழவை நடத்திச் சென்று முடிக்கிறான்.

பணம், அதிகாரம், பெருமை இவையெல்லாம் அழிவு சக்திகள். இவற்றை முழுமையாக நீங்கள் அறிந்து, தவிர்த்தால், உங்களின் படைபாற்றல், பங்கமில்லாதிருக்கும். உங்களின் படைப்பாற்றல் உங்களுக்குப் பணம், அதிகாரம், பெருமை இவற்றை கொடுக்கவும் செய்யலாம்; கொடுக்காமலும் போகலாம். நீங்கள் குறித்துக் கொள்ள வேண்டியது, இவற்றைத் தேடி, ஓடி, உங்கள் ஆக்க சக்தியை, ஈடுபாட்டை, லயிப்பைக் குறத்துக் கொள்ளாதீர்கள். அவை உங்களை வந்தடைந்தாலும், லாகவமாக அவற்றைக் கையாளுங்கள். அவை உங்களின் படைப்பாற்றலை, உங்களின் இளகி ஓடும் மன ஓட்டத்தை தடுத்து அணையாக மாறவிடாது பார்த்துக் கொள்ளுங்கள். மேலும், படைக்கும் உங்கள் ஆற்றல் அவற்றைப் பெற்றுத் தராமலும் போகலாம். உங்களை ஏழ்மை நிலையிலேயே வைத்திருக்கலாம். உங்களுக்கு வாழ்க்கையில் பூச்செண்டுகளைத் தராதிருக்கலாம் அல்லது கஷ்டத்தைத் தந்திருக்கலாம். ஆனால், அது உங்களுக்கு மனத்திருப்தியைத் தரும்; மனநிறைவைத் தரும். வாழ்வைக் கொண்டாடச் செய்யும்; ஆனந்ததைத் தரும். கடவுளின் வாழ்க்கையை உங்களால் வாழ முடியும்.

(இன்னமும் முடியவில்லை ......... )

rambal
23-05-2003, 03:03 PM
சிருஷ்டித்தல் என்பது மகோன்னதமான அனுபவம்..
அத்தோடு கொண்டாடுதலும் சேர்ந்து கொண்டால் அதுதான் சிறந்த படைப்பு..
வாழ்க்கையைக் கொண்டாடச் சொன்ன என் குருவின் வாத்தைகளை இங்கு கொண்டு
வந்த நண்பருக்குப் பாராட்டுக்கள்..

prabha_friend
23-05-2003, 03:29 PM
நண்பரே . இனி நம் மன்ற நண்பர்களிடம் இருந்து பல அறிய படைப்புக்கள் வெளிவரும் என நினைக்கிறேன் . படைப்புகளை படைக்கத் தூண்டும் , இந்த படைப்பாளியின் படைப்புக்கு , இன்னமும் பக்குவப் படாத சிறுவனின் பணிவான வணக்கங்கள் .

நிலா
23-05-2003, 09:09 PM
சுயநம்பிக்கையின் வலிமை உணர்த்தும் வரிகள்! வாழ்த்துக்கள் நண்பரே!தொடருங்கள்!