PDA

View Full Version : கருணை தேவதையின் உதவி



பட்டாம்பூச்சி
28-06-2007, 05:24 AM
உதவி செய்ய வந்த தேவதை பற்றிய ஜெர்மானியக் கதை.

யாருமே இல்லாத பனிப்பிரதேசம் ஒன்றில் தனியாக ஒரு விறகுவெட்டி வாழ்ந்துகொண்டு இருந்தான். பனியின் ஊடாகவே அவன் அங்கி ருந்த மரங்களை வெட்டி அருகில் உள்ள சந்தைக்குக் கொண்டுசென்று விற்று வருவான். துணைக்கு யாருமே கிடையாது. அவனுக்கு இருந்த ஒரே பிரச்னை பசி. எப்போதும் ஏதாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால், அந்த அளவுக்கு அவனிடம் பணமில்லை. இருப்பதைக் கொண்டு வாழ்க்கையை ஓட்டி வந்தான்.

அவன் மீது கருணை கொண்ட ஒரு தேவதை, ஒரு நாள் அவன் முன் தோன்றினாள். தான் உதவி செய்ய வந்திருப்பதாகவும், என்ன தேவை என்றாலும் கேட்கலாம் என்றாள். அவனுக்கு என்ன கேட்பது என்று புரியவில்லை. உன் வாழ்க்கைக்குத் தேவையான எதை வேண்டுமானாலும் கேள், தருகிறேன் என்றாள். உடனே அவன் தனக்கு ஒரு பெரிய பழரொட்டி வேண்டும் என்று கேட்டான்.

ஐயோ, இவ்வளவு அப்பாவியாக இருக்கிறானே என்று நினைத்து வேறு ஏதாவது கேள் என்றாள்.

உடனே அவன், நீ தேவதை என்று நான் எப்படி நம்புவது? முதலில் ஒரு ரொட்டியை வரவழைத் துக் கொடு! என்றான். உடனே அவள் கையை உயர்த்த, மறு நிமிஷம் விதவிதமான ருசிகளில் ரொட்டிகள் அங்கே தோன்றின.

விறகுவெட்டி வேண்டிய மட்டும் சாப்பிட்டான். அவனிடம் தேவதை, நீ நல்லவனாக இருக்கிறாய். வேறு ஏதாவது ஒன்றைக் கேள் என்று சொன்னாள். விறகுவெட்டி ரொம்ப யோசித்துவிட்டு, இவ்வளவு ரொட்டி யையும் என்னால் ஒரே நேரத்தில் சாப்பிட முடியாது. ஆகவே, இதை சூடாக பாதுகாக்க அடுப்பு வேண்டும் என்று கேட்டான்.

அவள், இவ்வளவுதானா உன் ஆசை? உன் வாழ்க்கையை உயர்த்திக்கொள்ள ஏதாவது கேட்கக் கூடாதா? என்று கேட்டாள். அவனோ, ஒரு ரொட்டிக்காக நான் எவ்வளவு பாடு பட்டிருக்கிறேன் என்று உனக்குத் தெரியாது. எனக்கு அந்த அடுப்பை மட்டும் கொடு என்றான். அவளும் மறுநிமிஷம் மிக நவீன அடுப்பு ஒன்றை வரவழைத்துத் தந்தாள்.

அப்போதும் அந்தத் தேவதைக்கு, விறகுவெட்டிக்குத் தேவையான உதவியை தான் செய்யவிலை என்ற ஆதங்கமே இருந்தது. வேறு ஏதேனும் கேள், தருகிறேன் என்றாள். அவன் அவளிடம், எனது துணிகளைத் துவைப்பதற்கு ஆள் யாருமே இல்லை. ஆகவே நீ ஏன் எனது வேலைக்காரியாக இருக்கக் கூடாது? என்று கேட்டான்.

அவ்வளவுதான், மறுநிமிஷம் அந்த தேவதை விறகுவெட்டியின் வீட்டில் வேலைக்காரியாக மாற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதிலிருந்து அவளும் எல்லா கஷ்டங்களையும் அனுபவிக்க நேரிட்டது. அன்றிலிருந்து தான் தேவதைகள் மனிதர்களுக்கு உதவி செய்ய வருவதே இல்லை என்பதாகக் கதை முடிகிறது.

நன்றி : ஆனந்தவிகடன் (எஸ்.ராமகிருஷ்ணனின் கேள்விக்குறி தொடரிலிருந்து)

அமரன்
28-06-2007, 12:45 PM
பட்டு உங்களிடமிருந்து இரண்டாவது நீதிக்கதை. சின்ன வயதில் இப்படிப்பல நீதிக்கதைகளைக் கேட்டேன். இப்போ மன்றத்தில். தொடருங்கள்...
அன்புடன்

அன்புரசிகன்
28-06-2007, 01:32 PM
நன்றாக உள்ளது. இது போல் பல தாங்க பாட்டி. ச்சீ பட்டாம்பூச்சி. :D

அக்னி
28-06-2007, 04:23 PM
அதுதான் சொல்வார்கள், பிச்சை இடுவதானாலும் பாத்திரம் அறிந்து இடச்சொல்லி...
சிறகடியுங்கள் பட்டாம்பூச்சி...

maxman
02-07-2007, 07:34 PM
நன்றி பட்டாம்பூச்சி அவர்களே!

இளசு
02-07-2007, 07:43 PM
எஸ், ராமகிருஷ்ணன் − அறிவையும் உணர்வையும் இணைக்கும் முடிச்சை வருடும்படி எழுதுபவர்..

கேள்விக்குறி அவரின் மைல்கல் தொடர்..

அவரின் படைப்பின் விள்ளலை இங்கே அளித்த பட்டாம்பூச்சிக்கு நன்றி..

rajaji
06-07-2007, 01:49 AM
அழகான நீதிக்கதை, உதவியைக் கூட தீர ஆராய்ந்துதான் செய்ய வேண்டும், காரணம் சில வேளைகளில் உதவி பெறுபவர் விரும்பியோ விரும்பாமலோ உதவி செய்தவரை மாட்டி விடக்கூடும்.

விகடன்
12-08-2007, 06:20 AM
பட்டாம்பூச்சியின் விறகுவிட்டிக்கதை அசத்தல். அதிலும் தற்காலத்தில் தேவதைகள் ஏன் வருவதில்லை என்பதற்கு ஒரு கதை சொன்னீர்கள் பாருங்கள்!
அததாங்க இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு சொல்லித் தப்பித்துக் கொள்வதற்கு ஒரு சிறந்த துணுக்கு. ஏனென்றால் இந்தக்காலத்து குழந்தைகள் கேற்கும் கேள்விகளுக்கு பதிலே சொல்லமுடியாமல் விழிக்கவேண்டியல்லவா உள்ளது.