Log in

View Full Version : தமிழ்மன்றமெனும் காதல் தென்றலும்.. பட்டாம்பூச்சிகளும்..



rambal
22-05-2003, 11:10 AM
தமிழ்மன்றமெனும் காதல் தென்றலும்.. பட்டாம்பூச்சிகளும்...

கவிதைகள் பக்கம்.. மிக முக்கிய பக்கம்.. இதை ஒரு தனி பதிப்பாய் பதிய முடியா காரணத்தினால்
தவிர்க்க முடியா முக்கிய நபர்களைப் பற்றி தனிப் பதிப்பாய் பதித்து அலசிவிட்டேன்..

மன்றத்தில், எல்லாவித கவிதைகளும் உண்டு..
இழந்த வீட்டை மீட்க வேண்டும் என்ற கனவுகளும் உண்டு..
நான் அவனில்லை எனும் தத்துவார்த்தமும் உண்டு..
குறும்பா? குறும்பாய் சிரிக்கும் போன்சாய் வகை மரங்களும் உண்டு..
வெளித்தாழ்ப்பாள் எனும் சேம் சைடு கோல் போட்ட பெண்ணீயமும் உண்டு..
அப்பாவும் புருசனும் ஒரே மாதிரி எனும் பெண்ணீயக் குமுறல்களும் உண்டு..
என்ன இல்லை என்பதற்கு.. எல்லாம் உண்டு என்று சிரிக்கின்றன பட்டாம்பூச்சிகளாய் கவிதைகள்..

ஆனால்,
இதில் முக்கிய விடயம் என்னவென்றால்..
ஒரு மொழியின் வலிமை அந்த மொழியில் இருக்கும் காதல் கவிதைகளில்தான் அடங்கியிருக்கிறது..
இந்த மன்றமெனும் தமிழில் காதல் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து இருக்கிறது..

தமிழா? காதலா? பட்டிமன்றம் வைக்கும் அளவிற்கு காதலாய் விரவி இருக்கின்றன கவிதைகள் பக்கம்..

காதல் எனும் வெட்டியான்
புதைத்துவிட்டுப் போன
விதைகள்..
பூக்களாய் மலர்ந்து
இருக்கின்றன
மன்றமெங்கும்...


நான் ரசித்து மகிழ்ந்த காதல் பூக்கள்...

முற்றத்து கோழிக்கு
குறுணையை போல
நீ வீசிவிட்டு போகும்
பார்வைகளை
என்றேனும் பிடித்து
கழுத்தறுத்து சமைப்பாயோ
என்ற பயத்தோடு
கொறித்து கொண்டிருக்கிறது
என் காதல்......
என் காதல் (லாவண்யா)

உன் காரணங்கள்
சரியானதாகவே இருக்கலாம்...
என்னைவிட அவள் உனக்கு
எல்லாவிதங்களிலும்
பொருத்தமானவளாகவே
இருந்து விட்டு போகட்டும்....
என்னை விட
நெருக்கமாய் பிரியமுடன்
எவள் உன்னை
நேசித்திருக்க முடியும்...?
பதில் சொல் காதலா? (லாவண்யா)

யார் முந்துவது வார்த்தைகளுக்குள் சண்டை
என்னவனோடு பேசத்தயாராய் நான்!
காரணம் நீ (நிலா)

கண்ணை மூடினால், வருகின்ற கனவில் நீ..!
கண்ணைத் திறந்தால், இல்லாத கனவாய் நீ..!!
காத்திருக்கிறேன் (வந்தியத்தேவன்)

என்னைப் போலவே
என் தலையணைக்கும் ஜலதோசம்..
நேற்றைய
அழுகையின் மிச்சம்..
துக்கம் புதிய அகநானூறு.. (கன்ஸ்)

இப்படியாக காதலாக இறைந்து கிடக்கிறது... தமிழ் மன்றமெனும் பூஞ்சோலை...

முதலில் லாவண்யா..
காதல் பாடும் குயில்...
வித்யாசமான பார்வைகள் கொண்ட இவரது கவிதைகளுக்கென்று தனியாய்
ஒரு வாசகர் வட்டம் இல்லாததுதான் குறை.. அந்தக் குறை விரைவில் தீரும் என்ற நம்பிக்கையில்..

இவரது காதல் பார்வை சற்று அதிர்ச்சி அளிக்கக்கூடியது..

எப்படியாவது சொல்லி விட
ஒத்திகைப் பார்த்துக் கொண்டிருந்தன...
உதடுகளும் மனசும்
உன்னை நேசிக்கிறேன் என்பதை...
..........
...........
..........
...........
..........
இப்போதெல்லாம்
உனக்கென இல்லையெனிலும்
தினம் தினம் எழுதிக் கொண்டிருக்கிறேன்
சில கவிதைகளை-சில ரத்தம் கசியும்
ஞாபகங்களுடனும்
படித்து பாதுகாத்து வைத்திருக்கும்
என் மனைவிக்காகவும்.....

ஆனாலும்

மேலும் ஒன்று.. சற்று எதார்த்தமான ஒன்று.. அவளுக்கு அவன் மீதான காதல் எப்போது வந்திருக்கும்..
இதைப் பற்றி அலசுகிறார் கவிஞர்..

சின்ன சின்ன விஷேசங்களுக்கு
அனுப்பிய உன் வாழ்த்து
அட்டைகளில் மருந்துக்கும்
இல்லை விஷமங்கள்
இருந்திருக்க கூடாதா
என மனசு ஏங்கியதே
அப்போதா...?

எப்போது வந்திருக்கும்
உன் மீதான
என் காதல்.....?

எப்போது வந்திருக்கும்?

இப்படியாக சிலாகித்து காதல் எழுதினாலும்..
ஒரு சிறு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து பெண்ணீயத்தை சாடி ஆண்களே கவிதை எழுதாத
(நல்லவேளையாக யாரும் எழுதவில்லை) நிலையில் தைரியமாக சேம் சைடு கோல் போட்டதற்காகவே
பாராட்டலாம்..

வெளித் தாழ்ப்பாள் மீது
ஏன் உனக்கு வெறுப்பு
அவை நல்லதே செய்தாலும் கூட....


உனக்கு தீங்குகள் நடந்தாலும் சரி....
நல்லது நடந்தாலும் சரி
எது நடந்தாலும்
வெளித்தாழ்ப்பாளின் மீதே
விசாரணை நடக்கிறது....

வெளித்தாழ்ப்பாளுக்கு நீ
வைத்திருக்கும் பெயர்
ஆணாதிக்கம்......!

வெளித்தாழ்ப்பாள்..

இவர் எழுதியது குறைவானாலும் நிறைவான கவிதைகள்..
இவரிடம் இருந்து நான் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்...

அடுத்ததும் ஒரு பெண் கவிஞை.. பெயர் நிலா.. தமிழ் பாடலசிரியர்களால்.. கவிஞர்களால்..
அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் இதுவாகத்தானிருக்கும்.. இந்தப் பெயரே கவிதை எழுதினால்?
அருமையான கவிதைகள்.. சில இடங்களில் அறைந்து விட்ட ஆணியாய் அந்த இடத்தை விட்டு
கண்கள் நகராமல் மையம் கொண்டு ஈரம் கசிந்ததென்றால் மிகையாகாது...

இழந்தது எது என்றே தெரியாமல்
தேடிக்கொண்டிருக்கிறது மானுடக்கூட்டம்!
.................
.................
.............
உயிரற்ற பணம் உயிர் கேட்கிறது!
உணர்வற்ற மனிதன் விலை பேசுகின்றான்
விழிகள் திறந்திருப்பினும் விழிப்பில்லாமல்!
ஓயாத ஓசைகள் !ஒழியாத அலுவல்கள்!
இதற்கு மத்தியில்
தனிமை தேடி நான்......................
...............
.............

பைத்தியக்கார உலகம்..

இப்படியாக தொடர்கிறது இந்தக் கவிதை..
இந்த வரிகளை கவிஞர் அனுபவித்து அழகாய் பதிந்துள்ளார்.. சத்திய வார்த்தைகள்.. இந்தக் கவிதை
படித்து கொஞ்ச நேரம் ஒன்றும் செய்யாமல் அமைதியாக உட்கார்ந்து சிந்திக்க ஆரம்பித்துவிட்டேன்..
இது போன்ற வரிகளைப் படித்து அதில் மனம் தொக்கி நிற்பது.. மிக அரிது..

இவரது மற்றுமொரு கவிதை.. வாழ்க்கையை நம்பிக்கையாய் பார்க்க சொல்லும் பாடம்..

முற்றுப்புள்ளி முடிவல்ல...
மறுவாழ்வின் தொடக்கம்!

வீழ்வதில் தவறென்ன?எழ நீ முனைந்து விட்டால்!

வீழ்வதில் தவறென்ன?

மீண்டு விட முடியும் என்ற வைராக்கியம் இருந்துவிட்டால் வீழ்வது கேவலமானது அல்ல.. அருமையான
எளிமையான வார்த்தை பிரயோகங்கள்..
<span style='color:blue'>
பள்ளிப்போகையிலே கனிந்திருக்கும் முகம்
மாலையில் வீடு திரும்புகையில் கன்னியிருக்கும்!
காரணம் கேட்டதில்லை அவளை!

தீர்க்கமாய் ஒருபுன்னகை புரிந்து
அமைதியாய் அடிக்கடி ஒன்னு சொல்லுவாள்
"கையில வச்சு தாங்குற புருஷனானாலும்
சொந்த கால்ல நிக்கனும் நீ!"
புருஷன்னு கேட்டவுடனே போம்மான்னு
வெட்கிஓடியது நினைவிற்கு வந்துதொலைக்கிறது!
............
...........
..........
கனவில் அடிக்கடி வருவாள் முன்னெல்லாம்!
இருவரும் பேசியதில்லை!
தலை கோதுவாள்!
கன்னம் கிள்ளுவாள்!
அவள் சுதந்திரமாய் சுவாசிப்பதாய் எனக்குள் தோன்றும்!
வேகமாய் விழி திறந்தால் கண்ணீர்
நனைத்திருக்கும் தலையணையை
கல்யாணமானதிலிருந்து கொஞ்ச நாளாக் காணோம்
காத்திருக்கிறேன் இன்றாவது வருவாளானு
ஒன்னே ஒன்னு சொல்லனும்

அம்மா
அப்பாவும்,புருஷனும் ஒரே மாதிரின்னு........
</span>
இது காலகாலமாய் நடந்து வரும் கொடுமை.. அதை அப்படியே பிசகாமல்.. ஆனால், சொன்ன விதம்..
முடித்த விதம்.. இதில்தான் கவிஞர் தன் பாணியை பதித்து விடுகிறார்.. ஒரு சிறுகதை படித்த பாதிப்பு..
இன்னும் இவரது வாழ்க்கை, பைத்தியக்காரன்... எனும் நீளும் பட்டியல் ஒரு தொடர்கதைதான்..
புதுமுகமாய் மன்றத்தில் உலவி தனக்கென்று தனி ஒரு இடம்
பிடித்திருக்கும் நிலாவிற்கு என் வாழ்த்துக்கள்..

அடுத்தபடியாக ஆண் கவிஞர்கள்..
முதலில் ஹ�மாயூனின் வீடு வசப்படும்.. இழந்த வீட்டை மீட்பது மட்டுமே கவிஞரின் கனவல்ல.. அந்த வீட்டில்
பூக்கள் வாசம் செய்வதற்காகவும் அந்த பூக்களில் வண்டுகள் வாசம் செய்வதற்காகவும் அந்த வீட்டை மீட்க
வேண்டும் என்று கண்ணீர் விடுகிறார் கவிஞர்.. அது வாழ்க்கையின் எதார்த்தம் நிறைந்த கவிதை..

ஒரு அமைதியான
தெருவில் எங்கள்
வீடு...பார்ப்பவர்களை
கவரும் தோற்றத்துடன்
இருந்தது.
.............
..............
.............
..........
எனக்கு பூக்கள்
மீது அப்படி
ஒரு மோகம்
எனவே மாடியில்
விதவிதமான
மலர் செடிகள்
மணம் பரப்பியபடி.

காலங்கள்
உருண்டோடின
எங்கள் வீடு
கைமாறிப் போனது.
............
.........
..........
பூக்களை
ரசிக்காதவர்கள்
தன் வாழ்க்கையை
வாழத் தெரியாதவர்கள்.

எங்களுக்கு
மட்டும் வீடு
தொலையவில்லை
பூக்களை
நேசிக்கும்
வண்டுகளுக்கும்தான்
.........
........
..........

என்றாவது
ஒரு நாள்
எங்கள் வீடு
வசப்படும்
என்ற நினைவுகளுடனே
வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்

அந்த வீட்டில்
நாங்கள்
மட்டும்
வாழ்வதற்க்காக
அல்ல.

நான்
நேசிக்கும்
பூக்களும்
பூக்களை
நேசிக்கும்
வண்டுகளும்
வாழ்வதற்க்காகத்தான் !!

வீடு வசப்படும்...

இப்படி இருக்கையில், அடுத்த வரும் கவிஞர்.. அவர் பார்வை வித்யாசமானது.. அவர் எழுதும் எழுத்துக்கும் அவர் வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லை
என்று கூறுகிறார்.. அதுதான் இன்றைய அவசர உலகின் எதார்த்தம்.. அழகாய் ஒரு சிற்பியைப் போல் செதுக்கியுள்ளார் கவிஞர்..
மதுரைக்குமரன் அவர்கள் எழுதிய அது நானில்லை.. உங்கள் பார்வைக்கு..

என் கவிதைகளைக் கொண்டு
என்னை முழுதும் அறிந்துவிட்டதாய் எண்ணாதே...
அது நானில்லை !
..............
............
வார்த்தைகளால் மட்டுமே
விளக்கி விட முடிவதற்கு
மனித மனம் என்ன
அவ்வளவு எளிதா?...

நெஞ்சைத் தொட்டுச் சொல்....
நீ உன் கவிதை மட்டும் தானா?
.........
.........
என் கவிதைகளைக் கொண்டு
என்னை முழுதும் அறிந்துவிட்டதாய் எண்ணாதே...
அது மட்டுமே நானில்லை !

அது நானில்லை..

அடுத்து வரும் நபர் மன்றத்தில் அவ்வளவாக எழுதவில்லை. ஆனால், அவரை மறுதலிக்கவோ மறைக்கவோ முடியாது. அவர் வந்தியத்தேவன்..
இவர் எழுதிய கவிதைகள் சொற்பமே என்றாலும் இலக்கணவிளக்கத்தோடு வெளி வந்த இவரது கவிதைகள் ரசிப்பிற்குரியவை..
காதலி வெளிநாடு போய்விட்டாள்.. காதலன் தனிமையில்.. இங்கு அவள் நினைவில்.. ஒரு வித்யாசமான கரு..
அதை சொன்னவிதம் அலாதியானது..

நீ இல்லாமல்
தனியாய் நேற்றைக்கு
கடற்கரை சென்றிருந்தேன்..
கடல், தன் அலைகளை அனுப்பி
நீ எங்கேயென விசாரித்தது..
நான் உண்மையைச் சொன்னதும்
அது நிறைய அழுதிருக்க வேண்டும்..
பிறகென்ன..?
கடல்நீரெல்லாம் கண்ணீரைப் போல்
அவ்வளவு கரித்ததே..!!
...........
..........
..........
நீ சம்பாதிக்கும்
முதல் டாலர் நோட்டில்
ஒரு காகிதக் கப்பல் செய்து
நம் காதலைச் சொல்லி
பக்கத்துக் கடற்கரையிலிருந்து
எனக்குத் தூதனுப்பு..
மெரீனாவில் நான் கண்டெடுத்துக் கொள்கிறேன்..!!
..........
..........
மறக்காமல் நயாகரா சென்று பார்..
நீ இல்லாமல் இங்கு
என் கண்களில் கொட்டும் கண்ணீரை விட
கம்மியாய்க் கொட்டுகிறது தண்ணீர் என்று
காற்று வாக்கில் கேள்விப்பட்டேன்..!!

கண்ணை மூடினால், வருகின்ற கனவில் நீ..!
கண்ணைத் திறந்தால், இல்லாத கனவாய் நீ..!!
.........
..........

காத்திருக்கிறேன்

இப்படியாக தனது உள்ளக்குமுறல்களை இயற்கையை துணைக்கழைத்துக் கொண்டு வெளிப்படுத்துகிறார் கவிஞர்..

இவர் இப்படி என்றால் அடுத்து வரப்போகும் நபரோ.. எல்லோருக்கும் ஒரு படி மேலே போய்..
தனது காதல் கவிதைகளை.. தனது அகத்தில் ஏற்பட்ட காதலை கவிதைகளாக.. புதிய அகநானூறு என்று ஆரம்பித்துவிட்டார்..
அவர் கன்ஸ்...
அத்தனையும் காதலின் அற்புத வரிகள்...

விடிந்து நெடுநேரமானதை
என் புலன்கள் உணர்த்துகின்றன...
உணர்வுகள் மட்டும் உறக்கத்தில்!
கண் விழிக்க
இன்னமும் நான் விரும்பவில்லை....
நேற்றைய கனவின் மிச்சத்தில் நீ...

காரணம் (புதிய அகநானூறு)

முதன் முதலாய்
நம் கரங்கள் சந்தித்துக் கொண்டபோது
நான் வருடியதென்னவோ
உன் விரல்களைத்தான்...
ஆனால்
வருடப்பட்டதென்னவோ
என் இதயமும் கூடத்தான்!

முதல் ஸ்பரிசம்

இப்படியாக இவர் தனது காதலை புதிய அகநானூறாக கொட்டிக் கொண்டிருக்கிறார்.. அவர் நானூறை அடைந்து மன்றத்தை சிறப்பிக்க
வாழ்த்துக்கள்..

இவர் எழுதியது கொஞ்சம் தான். ஆனால், அதில் நான் ரசித்த வரிகள் என்றால் இவைகளே.. அவர் விஷ்ணு எனும் டிஸ்கிரீட்பிளேக்..

கைவிரல்களும் தொடாமல்
கண்ணுள்ளே நீர்த் துளிகளைக்

கட்டிப்பொடும் வித்தயை கற்றுக்கொள்

சுகமான சுமை என்பது

தனது குறும்பா மற்றும் மாறுபட்ட சிந்தனைகளால் மன்றத்தில் ஆடிவரும் தென்றல் கவிதா அவர்கள்..
இவரிடம் இருந்தும் இன்னும் நிறைய கவிதைகள் எதிர்பார்க்கிறேன்..
இவரது கவிதைகள் சமூகம் சார்ந்தே இருக்கும்..

அப்படியான ஒரு கவிதை...

பல கட்சி
கூட்டணி
பிரிகிறது நாடு

நமது நாட்டில்
கெளரவரைக் காணவில்லை
பார்க்குமிடமெல்லாம்
பஞ்ச பாண்டவர்
ஆம்
கெளரவம் இல்லை
பஞ்சம் இருக்கிறது.

அரசியல்

அரசியலை இவர் அலசியிருக்கும் அழகே தனிதான்..

அடுத்து சுமா.. இவரின் குறும்பாக்கள் குறும்பனவை.. சில அதிர்ச்சியானவை.. சில ரசிப்பிற்குரியவை..

இராமனை இனி பூமியில்
தேடிப் பிரயோஜனமில்லை...
தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்!

ஆயுதங்கள் கண்டு பிடிக்கப்பட்டன
அமைதியை முன்னிட்டுப் போர் -
நாடெங்கும் மயான அமைதி!

குறும்பாக்கள்

இப்படி குறும்பா மூலம் அவ்வப்பொழுது மன்றத்தில் பிரவேசிக்கும் இவரும் விரைவில் தனக்கென்று தனியிடம் அமைக்கப்போவது உறுதி...

இப்படியான தமிழ் மன்றத்தில் கடந்த 52 நாட்களில் மன்றத்தையே கோலாட்சுவது போல் பட்டாம்பூச்சிகளாய் கவிதைகள்
பறந்து கொண்டிருக்கின்றன.. தென்றலாய் காதல் உலவிக் கொண்டிருக்கிறது... வாழ்க தமிழ்..
விரைவில் நான் குறிப்பிட்ட நபர்கள் அதிகம் எழுதுவார்கள் என்ற நம்பிக்கையுடன்...

(பின் குறிப்பு:- இந்த ஒட்டு மொத்த அலசலில் ஒரே ஒரு முக்கிய நபர் மட்டும் விட்டுப் போய் இருக்கிறார்.. அவரைப் பற்றியும் விரைவில்...
அத்தோடு கவிதைகளைத் திரும்பிப்பார்க்கும் நிகழ்ச்சி முடிவிற்கு வரும்)

poo
22-05-2003, 03:32 PM
ராம்... இதமாய் வருடித்தரும் உன் விமர்சணங்கள் நிச்சயம் நல்ல உரமாக இருக்குமென்பதில் சந்தேகமில்லை..

ஆமாம் யார் அந்த ஒருவர்??!!!!!

prabha_friend
22-05-2003, 03:41 PM
இத்தனை நாள் இவர்கள் எழுதிய கவிதைகளை படிக்க மறந்தேனே என்ன செய்ய?
வருத்தப்படுவதை தவிற....

gankrish
23-05-2003, 06:49 AM
ராம் இந்த மன்றத்தில் ஒவ்வொருவரின் கவிதையும் அலசி ஆராய்ந்து அதற்க்கேற்ப்படி விமர்சனம் தருவதில் உங்களை விட்டால் யார் இருக்கிறார்கள். என் போல் இருப்பவர்களெல்லாம் கவிதையை படித்து விட்டு ... (நன்றாக இருக்கு.. அருமை) இப்படி ஒரு வரி விமர்சனம் தான் எழுதுகிறோம். நானெல்லாம் படித்து மகிழ்கிறேன் எல்லா கவிதைகளையும். விமர்சனம் எழுதும் தகுதி எனக்கில்லை. அதனால் தான் நான் சில கவிதைகளை படித்து விட்டு செல்கிறேன். (என்னை மன்னிப்பீர்களாக).

இங்கு படைக்கப்படும் கவிதைகள அனைத்தும் முத்தானவை. முடிந்தால் இதை தொகுத்து `தமிழ் மன்றக்கவிதைகள்' என்று புத்தகமாக வெளியிடலாம். அந்த அளவுக்கு அருமையாக உள்ளது.

ராம் உங்களின் விமர்சனப்படைப்புக்கு தலை வணங்குகிறேன்.

இந்த நேரத்தில் நான் பூ, ராம், இளசு, லாவண்யா, வந்தியதேவன், கன்ஸ்.. மதுரைக்குமாரன், நண்பன்.. எல்லோருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். உங்கள் படைப்பு அனைத்தும் உயிரோவியம்.

நிலா
23-05-2003, 10:22 PM
இந்த நேரத்தில் நான் பூ, ராம், இளசு, லாவண்யா, வந்தியதேவன், கன்ஸ்.. மதுரைக்குமாரன், நண்பன்.. எல்லோருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். உங்கள் படைப்பு அனைத்தும் உயிரோவியம்.



என்னை விட்டுடீங்களே? சும்மா தான் கேட்டேன்!

நண்பர் ராம்பாலுக்கு .....
என்கவிதை பற்றிய உங்கள் கருத்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

எழுதுங்கள் என்பதை விட முதுகில் தட்டிக்கொடுத்து எழுதச்சொன்னால்
பலன் கண்டிப்பாய் கூடும் எனும் சூட்சுமம் அறிந்தவர் நீங்கள்!
வாழ்த்துக்கள் நண்பரே!

lavanya
24-05-2003, 12:00 AM
பல பணிகள்... பல இடையூறுகள் முன்புபோல் இப்பக்கம் வந்து எல்லாவற்றையும்
படிக்க முடியாத சூழல்..இப்போது உங்கள் கவிதை அலசல்கள் பற்றி படிக்கும்போது
நல்லனவற்றை எல்லாம் தொலைத்து விட்டோமோ என வருந்தும் கைக்குழந்தை
நிலையில் இருக்கிறேன்.... பாராட்டுக்கள் ராம்பால்ஜி.... கவிதைகள் பக்கம்
இனி நானும் கவனம் செலுத்த முயற்சிக்கிறேன்.நன்றி

Nanban
24-05-2003, 07:27 PM
ராம்பாலின் அனைத்து அலசல்களையும் print வைத்துக் கொண்டுள்ளேன். அத்தனையும் மிக அருமை. கருத்துகளும், கவிதைகளும் கலந்திருக்கும் பொழுது தான் பொலிவு பெறுகின்றன. பொங்கி நுரைத்து வழிகின்றன.

பல கவிஞர்களுக்கும் தனித்தனியே வாழ்த்துச் சொன்னோமா இல்லையா என்று தெரியவில்லை. இப்பொழுது, சந்தர்ப்பம் கிட்டியது. வாழ்த்துகள் அனைத்து கவிஞர்களுக்கும்..............

gankrish
26-05-2003, 05:11 AM
நிலா மன்னித்துவிடுங்கள்... மறக்கவில்லை உம்மை.. (ஆனால் அச்சில் எழுத மறந்துவிட்டேன்)

நிலா
28-05-2003, 09:43 PM
நிலா மன்னித்துவிடுங்கள்... மறக்கவில்லை உம்மை.. (ஆனால் அச்சில் எழுத மறந்துவிட்டேன்)


நன்றி நண்பரே! எனக்கு பதில் தந்தமைக்கு!

rambal
07-04-2004, 04:25 PM
புதிய கண்காணிப்பாளராகிய நிலாவிற்கு வாழ்த்துக்கள்..

நிறையக் கவிதைகள் வந்துவிட்டன மன்றத்தில்.

இந்தப் பக்கம் எட்டிக் கூடப் பார்க்கவில்லை..

விரைவில்..