PDA

View Full Version : வல்லிபுனம் பிரிந்த உமை



Logan
25-06-2007, 07:08 PM
வல்லிபுனம் பிரிந்த உமை
சொல்லி மனம் வாடுகின்றோம்..!!!

வட்டநிலாத் தொட்டில் கட்டி
மெட்டுவைத்துப் பாட்டுப் பாடி
சொட்டுச் சொட்டாய் சேர்த்ததிந்த வாழ்வு

பட்டு மெத்தை பஞ்சணைகள்
சற்றுமில்லாப் பாய் நிலத்தில்
பற்றுதலாய்ப் படுத்துறங்கி வாழ்ந்தீர்
தமிழ்த் தேசியத்தை மேவுகொண்டு
வன்னியிலே வாழ்வுகண்டபோதும்
மொட்டுகளாய் சிட்டுகளாய்
பட்டெனவே சிறகடிக்கும் காலம்
வல்லிபுனம் வந்த உமை
எத்தர்களும் ஏய்ப்பர்களும்
ஒற்றர்படைக் கூட்டங்களும்
திட்டமிட்டுச் செய்த சதியாலே...

வட்டநிலாப் போலக் குண்டு - எங்கள்
சிட்டுகளின் மேல்விழுந்து
சட்டனவே சிறகுடைத்ததேனோ - உமை
கொல்லியதேன் குண்டு மழையாலே
ஏதிலியோ மண்ணெமதின் வாழ்வு
எறிகணையோ எங்களுக்குச் சோறு..!?

ஏரெடுத்துப் போரடிக்கும் தமிழன் - இன்று
போரெடுத்துப் புரட்சிசெய்யும்போது
தமிழ் ஈழமண்ணில் வேரெடுத்த நாமோ
புலம் பெயர்ந்து வாழ்வதுவும் ஒரு வாழ்வோ..!
மனம் வெதும்பி வாழுகிறோம் இங்கே
வல்லிபுனம் பிரிந்த உமை நாளும்

புத்தியில்லாக் குண்டு கொல்லும்
யுத்தம் எங்கள் வாழ்வு இல்லை
ஒற்றை ஆட்சி என்று சொல்லி
ஒன்றாய் வாழ்ந்து ஊராய்க் கொல்லும்
அன்னியரின் ஆட்சி ஏதும் வேண்டாம்

பட்டினியோ கஞ்சி கூழோ
சுதந்திரமாய்ச் சுற்றிவந்து
நிம்மதியாய்ப் படுத்துறங்கும் - எம்
சொந்த வாழ்வு எங்களுக்கு வேண்டும் - எம்
சொந்த வாழ்வு எங்களுக்கு வேண்டும்.

அன்றொருநாள்
அதி காலை வந்து
ஆழியலை மோதி எங்கள்
மேதினியை நாசமெனக் கொள்ள அதில்
ஓடமாகி உள்னீருமாடி - நீர்
தமிழ்ச் சூரராகி மீண்டீர்..!

இன்றெதனால்
கொலையாளன் குண்டில்
குதறுகளம் ஆனீரேன் தமிழ் மண்ணில்
வெண் பூவே..! வெண் புறாவே..!!
நீவீர் அனைவருமே என்றென்றும்
ஆவியாய் எம் மூச்சாய் நாளும்
செஞ் சோதியிற் சேரினும் நீராய் - எம்
விடுதலை வேள்விதோறும் - அதை
வென்றும் ஞாலம் வாழும்போதும் - எம்மோடு
வாழுவீர் காலகாலம்.

உமை இழந்து தமை இழந்த
இவ்வுலக அனைத்து மாந்தர்க்கும்
உமைப் பெற்றோர்க்கும் உற்றார்க்கும் - எம்
தமிழீழ மண்ணிற்கும் - இது
எந்தனின் துயரார்ந்த பாவாய்ச் சேரும்.


- லோகன் செல்லம்