PDA

View Full Version : முற்றுப் பெறாத முன்னுரைகள்கலைவேந்தன்
23-06-2007, 01:08 PM
முற்றுப் பெறாத முன்னுரைகள்

அவன்
தன் வசந்த காலக் கனவுகளை
அரங்கேற்றக் காத்திருந்தான்...
இடையில் தான்
அந்த
கருச்சிதைவு...
வடித்த உதிரத்திற்கு அளவில்லை...
உவமை இழந்த கவிதை போல
வெளுத்துப் போனான்...

காவியச் சிற்பம் செதுக்குவதாய் எண்ணி
காலம் காலமாய்
கல்லுடைத்தான்....
வாழ்நாள் முழுக்க
வாக்களித்தே உருக்குலைந்த
இந்திய மக்கள் போல!

இமய மலையை இடிப்பதாய் எண்ணி
கறையான் புற்றைக்
காலி செய்தான்...
இன்றைய பத்திரிகைகள் போல!

மிகுந்த பிரயாசையுடன்
சிரமப் பட்டு
அல்லல் பட்டு
உரிமைக்குக் குரல் கொடுத்தான்...
பாம்பு வாய்த் தவளைப் போல!

அவன் இமைகளைக்
கண்களே கிழித்தன...
இன்றைய அரசியல்வாதியைப் போல!

அமரன்
23-06-2007, 02:25 PM
சமூக அவலங்களை உவமானங்களாக வைத்து கவிதை எழுதியுள்ளீர்கள் கலைவேந்தன். கவிதையின் கரு புரிந்தும் புரியாதது போலவும் உள்ளது. கொஞ்சம் கூறமுடியுமா?

சூரியன்
23-06-2007, 02:39 PM
சிறப்பான கவிதை

கலைவேந்தன்
23-06-2007, 07:59 PM
முற்றுப் பெறாத முன்னுரைகள்

அவன்
தன் வசந்த காலக் கனவுகளை
அரங்கேற்றக் காத்திருந்தான்...
இடையில் தான்
அந்த
கருச்சிதைவு...
வடித்த உதிரத்திற்கு அளவில்லை...
உவமை இழந்த கவிதை போல
வெளுத்துப் போனான்...

காவியச் சிற்பம் செதுக்குவதாய் எண்ணி
காலம் காலமாய்
கல்லுடைத்தான்....
வாழ்நாள் முழுக்க
வாக்களித்தே உருக்குலைந்த
இந்திய மக்கள் போல!

இமய மலையை இடிப்பதாய் எண்ணி
கறையான் புற்றைக்
காலி செய்தான்...
இன்றைய பத்திரிகைகள் போல!

மிகுந்த பிரயாசையுடன்
சிரமப் பட்டு
அல்லல் பட்டு
உரிமைக்குக் குரல் கொடுத்தான்...
பாம்பு வாய்த் தவளைப் போல!

அவன் இமைகளைக்
கண்களே கிழித்தன...
இன்றைய அரசியல்வாதியைப் போல!

ஒரு சராசரித் மனிதன் தன் எண்ணங்கள் ஈடேறுமா என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் போது அவனது தோல்விகள் அவனைச் சித்திரவதைப் படுத்துகின்றன. அந்தத் தோல்விகளுக்கு ஆறுதல் கூறுவதாக அமைத்திருக்கிறேன்.

இந்த பணத்துவ (capitalism)உலகில் ஏழையாக இருப்பவன் கடைசிவரை ஏழையாகவே சாகிறான்.லட்சத்தில ஒருவன் வேண்டுமானால் ஏதோ ஒரு வாய்ப்புப் படகை வைத்து மிகப் பெரிய பணக்காரன் ஆகிறான்.அப்படி வெற்றிபெற்றவர்களின் அந்தரங்கத்தை அலசிப்பார்த்தால் அதற்காக அவன் எத்தனை பேரைச் சரித்திருப்பான் என்று அறியவரும்.

ஆனால் எந்த ஒரு மனிதனும் தன் கனவுகளைக் கை விடுவதில்லை.வெற்றிபெற்றவனின் சரித்திரத்தை ஆயிரம் பேர் எழுத முன் வருவர் தோல்வி பெற்றவன் எண்ணக்குமுறலை வெளிப்படுத்த நம்மைப் போன்ற சில கவிஞர்களே முன்வருவர்.

நான் தோல்வி பெற்றவர்களின் சார்பாக எழுத முன்வந்தவன்.

புரியவைத்துவிட்டேன் என நம்புகிறேன்.
சிலகவிதைகள் எண்ண ஆழத்திலிருந்து வெளிவருபவை அவைகளுக்கு விளக்கம் சொல்லஇயலுமா என்பது ஐயம் தான்!

பாராட்டுக்களுக்கு நன்றி!

அமரன்
23-06-2007, 08:07 PM
பாராட்டுகள் கலைவேந்தன். இத்தனையும் கருக்கலைப்பு என்ற ஒருவார்த்தையில் அடங்கி இருப்பதாக நினைக்கின்றேன். நன்றி. தொடர்ந்து இதேபோன்ற கவிதைகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றேன்.

இளசு
24-06-2007, 02:38 AM
பாராட்டுகள் கலைவேந்தன்.

முற்றுப்பெறாத என்ற தலைப்பும்
அமரன் சொன்னதுபோல் −
கவிதையில் வந்த கருக்கலைப்பும்
சொல்லிவிட்டன கருவை!

தனிமனித துவளல்களுக்கு
சமூக அவலங்களை
உவமையாய்த் தந்ததில்
இரட்டைப் பலன் கவிதைக்கு..! பாராட்டுகள்!!

கலைவேந்தன்
24-06-2007, 12:07 PM
தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி!
எனக்கு ஒரு வருத்தம் மட்டும் இருந்து கொண்டே இருக்கிறது.
நான் பெரும்பாலும் சமூக அவலங்களைச் சாடும் கவிதைகள் தான் எழுதுகிறேன்.
ஆனால் இந்த தமிழ் மனறத்தில் சமூகக் கவிதைகளை வாசிப்பவர்களும் பின்னூட்டம் அட திட்டியாவது எழுதுபவர்கள் குறைவாக இருக்கிறார்கள்.
காதல் முத்தம் சத்தம் மார்பு வர்ணனைகளுக்கு அதிக வாசிப்பாளரும் பின்னூட்டம் இடுபவர்களும் நிறைய இருக்கிறார்கள்.
இன்றைய கால சூழ்நிலையும் இளைஞர்களும் எதற்கு முன்னுரிமை வழங்குகின்றன என்பதையும் புரிந்துகொண்டேன்.
இது ஒரு சமூக சாபமே!

இது என் கண்ணோட்டமே! இதை கூறுவதில் எனக்கு தயக்கம் கிடையாது.

இளசு
05-08-2007, 05:24 PM
உங்கள் கண்ணோட்டத்தில் நானும் இணைக்கிறேன் கலைவேந்தன்..

வாழ்க்கை உணர்வுத்தொகுதிகளின் இடையறாத் தொடுப்பல்லவா?

சில பருவங்களில் சில ரசனைகள் விஞ்சி நிற்பது இயற்கை நியதியல்லவா?

ஆகையால் அவற்றை ஏற்கிறேன்..

ஆனாலும் வயதில் குறைந்த எண்ணற்ற நம் நண்பர்கள்
தணலாய்ச் சீறி சுயபார்வை, சமூக அகழ்தல் என பல கனத்த பரிமாணங்களுடன் படைத்த முத்துகள் நம் கடலில் ஏராளம்!

அவசர யுகம்.. நிதான வாசிப்புக்கும், நிர்வாணப் பின்னூட்டத்துக்கும் நேரமின்மை... இவையே ''நிராகரிப்பு'' தோற்றம் தோன்றக் காரணிகள்!

நானே அதற்கு நல்ல எடுத்துக்காட்டு..

ஒரு காலத்தில் என் பின்னூட்டமில்லாக் கவிதையைக் காண்பதரிது..

இன்று?

பணிச்சுமையும் அதிகம்.. வரும் பதிவுகளும் அதிகம்!
இடைவெளி கூடக்கூட... சுணக்கமும் அதிகம்!


நம் நண்பர்கள் மன்றத்தில் அடிக்கடி வழிமொழியும் வரிகள் இவை:

வடிக்கும்போது கிடைக்கும் சுகமே
படைப்பாளியின் முதல் முழு ஊதியம்..

மற்றவர் படித்தது, பின்னூட்டம் இட்டது
இவை எல்லாம் ஊக்கத்தொகை மட்டுமே!

பணியைத் தொடருங்கள்...
ஊக்கங்கள் உடன் வந்தாலும், பின் தங்கித் தயங்கினாலும்!

விகடன்
05-08-2007, 05:30 PM
வீழ்ச்சிகளை வீணாகிப்போய்க்கொண்டிருக்கும் சமூக வழக்கத்துடன் ஒப்பிட்ட விதம் நன்றே.

பாராட்டுக்கள்

சிவா.ஜி
06-08-2007, 04:45 AM
கருத்தாழமிக்க கவிதை. வரிகளும் அதனுள் பொதிந்த வலிகளும் செவ்வனே சொல்லப்பட்ட கவிதை. உங்கள் சிந்தனை சென்றடையவேண்டிய இடங்களில் சென்றடையும் அதனால் மன்றத்தை குறித்த ஆதங்கம் வேண்டாம் கலைவேந்தன் அவர்களே.
சென்றமுறை கவிதைப்போட்டியில்(கவிதைப்போட்டி−8)கவிதைக்கான வார்த்தைகள்
1. காதல்
2. வெட்கம்
3. முத்தம்
4. கண்ணீர்
5. மாலை
வார்த்தைகளே சொல்லவில்லயா இவைகளை வைத்து அழகான காதல் கவிதைகளை படைக்க முடியுமென்று.அப்படியும் படைக்கப்பட்டது,பதிக்கப்பட்டது.இருந்தும் இதே வார்த்தைகளை வைத்து எழுதப்பட்ட சமூகக் கண்ணோட்டக்கவிதைக்குத்தான் முதல் பரிசு கிடைத்தது.இது எதைக் காட்டுகிறது? இந்த மன்றத்தின் கவிதை ரசிப்புத்தன்மையை தெள்ளத்தெளிவாக எடுத்தியம்பவில்லையா?
இளசு சொன்னதைப்போல் காதல் கவிதைகள் அதிகம் பார்க்கப்படுகிறது என்றால் அவற்றுக்கு பின்னூட்டம் இடுவது சுலபம். ஆனால் உங்கள் கவிதைகளைபோல் உள்ளவைக்கு ஆழ்ந்து படித்து பின்னூட்டமிட வேண்டும். வாசிக்கும் போதே அதன் கரு மனதை பாதிக்கிறது.இதுதான் இப்படிப்பட்ட கவிதைகளுக்கு கிடைக்கும் வெற்றி. ஆகவே தயவுசெய்து துவண்டுவிடாமல் உங்கள் பண்பட்ட படைப்புக்களை பதித்துக்கொண்டே இருங்கள்.அவை நிச்சயம் பார்க்கப்படும்,படிக்கப்படும்,பாராட்டப்படும்.
வாழ்த்துக்கள் கலைவேந்தன்

ஷீ-நிசி
06-08-2007, 05:12 AM
முற்றுப்பெறாத முன்னுரைகள்!

தலைப்பு தாங்கி நிற்கிறது கவிதையை..

ஒவ்வொரு நிகழ்வையும் கூறி ஒவ்வொரு உவமை..

அதில் முதல் உவமை...


உவமை இழந்த கவிதை போல
வெளுத்துப் போனான்...

உவமை இல்லை என்று சொல்வதற்கே உவமையாய் கூறியிருந்தது மிக வித்தியாசமான வரிகள்!

ஒவ்வொரு தோல்வியின் பார்வையிலும் சில எடுத்துகாட்டபட்டுள்ளன...


கண்களே இமையை கிழித்தன..

ஆதங்க வரிகள்...

தொடருங்கள் வேந்தரே!

பென்ஸ்
06-08-2007, 07:29 AM
கலை...

மனங்களை உணர்ந்து கூடுவிட்டு கூடுபாய்ந்து (நன்றி:இளசு) எழுத ஒரு பக்குவமும் வார்த்தைகளை கையாள ஒரு நயமும் வேண்டும்...

பணி பளு வரும்போது கவிதையை வாசித்து அதில் லயிக்க முடிவதில்லை...
வாசித்தாலும் அந்த முயற்சிக்கு "நன்றி, பாராட்டு..." என்று ஒரு வரி பின்னுட்டமும் இட மனம் வருவதில்லை... இங்கு வந்து மனதை உரசி செல்லும் இந்த கவிதையை வாசித்த போது பணியையும் சிறிது மாற்றி வைத்தி பின்னுட்டம் இட அழைக்கிறது இந்த கவிதை....

முதலில் பாராட்டுகள்....
இரண்டாவது வருத்தம்... வேறு ஒன்றும் அல்ல... கவிதையில் ஒரு சாதாரண மனிதனாக உணர்ந்ததை மட்டும் சொல்லி நிறுத்தியது... இது கவிதை முற்று பெறவில்லையோ என்ற ஒரு உணர்வை தருகிறது...

ஒவ்வொரு வசந்ததிலும் துளிர்க்கும் மரம் இலையுதிர்காலத்தை கண்டு பயந்து துளிர்பதை நிறுத்துவது இல்லை...
இலையுதிரும்போது நம்பிக்கையோடு காத்திருக்கிறது, இன்னொரு வசந்ததிற்க்காய்.... இது வாழ்க்கையிம் சுழச்சி.... புயல், வெயில், மழை என்று எல்லாவற்றியும் ஏற்று கொண்டு அதுவும் தன் பணியை செய்து கொண்டு...

ஆனால் மனிதன் மட்டும் ஏன் துவண்டு போகிறான்...????

கரு கலைந்ததால் மலடியாகிவிடுவதில்லை...


நல்ல கவிதை கலை....

இளசு... இந்த முறையும் நீங்கள் முந்தி கொண்டீர்கள்...

பென்ஸ்
06-08-2007, 07:45 AM
கலை....

உங்கள் ஆதங்கம் எனக்கு புரிகிறது....
மன்றம் நுழைந்த நாட்க்களில் கவிதை எழுதிவிட்டு ஒரு பின்னுட்டம் கிடைக்காதா என்று வந்து ஏமாந்து போன நாட்கள் உண்டு....
என்னுடைய பதிவுகள் பல சமீபத்தில் மேல எழுப்ப பட்டபோது, ஒரு பின்னுட்ட*ம் கூட இருந்திருக்கவில்லை...

மன்றத்தில் நான் கவனித்து வரும் ஒரு விசயம், மன்ற நண்பர்களின் லைவரிசை எப்போதும் ஒன்றே போல் இருக்கும்....
காதல் கவிதைகள்...
பதில்கவிதைகள்...
குறுங்கவிதைகள்..
ஹைக்கூகள்...
சமூக கவிதைகள்...

என்று ஒவ்வொரு சீசனில் இருப்பார்கள்...

கவிசமர் கவிதைகளில் வரும் வித்தியாசங்களில் கூட இதை உணரலாம்....

கவிதையை கொட்டுங்கள்...
நனைகிறோம்...
நல்லா இல்லைனா கொட்டுவோம் :−)

paarthiban
07-09-2007, 04:39 PM
கலைவேந்தன் அவர்களை மருபடியும் பார்ப்பதில் மக்ழ்ச்சி.
நானும் ஓர் ஆசிரியர்.

கலைவேந்தன்
07-09-2007, 04:47 PM
நன்றி நண்பர்களே!

பணிகளின் பளுக்களால் வர இயலாமல் போயிற்று!

இனி தொடர்ந்து வர முயற்சிக்கிறேன்!

அக்னி
07-09-2007, 05:12 PM
அருமையான கவிதை...
இன்று மேலெழுந்திருக்காவிட்டால் இலகுவில் கண்டுகொண்டிருக்க மாட்டேன்...

முன்னுரைகளின் முடிவில்,
தொடங்கும் எம் வாழ்வின்,
முதற்பக்கம்...
முன்னுரையிலேயே,
முற்று காணாவிடின்,
வாழ்வு
தொக்கி நிற்கும்...
தெளிவாய் இருப்போம்,
எம் வாழ்வின் முன்னுரைகளில்...

பாராட்டுக்கள் கலைவேந்தன் அவர்களே...