PDA

View Full Version : அனுபவ குறள் - புத்தகம்!!



மீனாகுமார்
22-06-2007, 11:11 AM
---------------------------------
குறிப்பு: தொடர்ச்சியாக எழுதப்பட்ட இந்த அனுபவ குறளைத் தொகுத்து புத்தக வடிவமாக்கி கீழேயுள்ள சுட்டியில் அமைத்திருக்கிறேன்.

தலைப்பு: யாவர்க்கும் திருக்குறள்

http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=170

நன்றி.
---------------------------------

அனுபவ குறள் -

என் பண்ணிரண்டு வயதில் ஒருநாள் என்னை யாரோ ஒருவர் அறிவுகெட்டவனே- என்று திட்டிவிட்டார். அன்று என் மனமே என்னிடமில்லை.

அறிவு கெட்டவன், மதி கெட்டவன் என்றால் என்ன என்று ஆராய்ந்தேன். அறிவு என்றால் என்ன என்ற கேள்வி என்னைக் குடைந்து கொண்டிருந்தது.

அப்போது −
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

என்று பள்ளிக்கூடத்தில் படித்த்த ஞாபகம் வரவே... திருக்குறள் புத்தகத்தை எடுத்தேன்.

ம்... சரி.. யார் என்ன சொல்வதை நாம் கேட்டாலும் அதில் என்ன உண்மை இருக்கிறது.. அதன் உண்மையான பொருளென்ன என்பதை ஆராய்வது அறிவு... என்ன அருமையான சொற்களைய்யா... அறிவில்லாதவன் யார் சொல்வதையும் அப்படியே கேட்டு நம்பி பின்னர் ஏமாந்திடுவான். அறிவுடையவன் ஏமாற மாட்டான்.

உண்மைதான். அறிவிற்க்கு நல்லதொரு விளக்கம் கிடைத்தது.
ஆனால் அது மட்டுமா அறிவு??. திருக்குறள் புத்தகத்தை மீண்டும் புரட்டினேன். 43வது அதிகாரமான அறிவுடைமை அதிகாரத்தில் என் கண்கள் நிலைத்தன. நான் படித்த அந்தக் குறள்-

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அதறி கல்லா தவர்.

இக்குறளை அன்று நான் படித்திருந்தாலும் என்னால் முழு அளவில் புரிந்து கொள்ள முடியவில்லை. அதே குறள் என் மனதினுல் பல ஆண்டுகள் ஓடிக்கொண்டே இருந்த்த. பின்னர் சில ஆண்டுகள் கழித்து இக்குறளை மீண்டும் மீண்டும் படித்து பொருள் விளங்கினேன். அதில் ஒரு குறிப்பு. இக்குறளில் -ஆவ தறிவார்- என்ற சொல் மிகவும் ஆழம் வாய்ந்தது.

ஒருவரால் வரப்போவதை எவ்வாறு முன்னமே அறிய முடியும் ?
நாளை நடக்கப்போவதை... அடுத்த வாரம் நடக்கப்போவதை...
அடுத்த மாதம் நடக்கப்போவதை... அடுத்த ஆண்டு நடக்கப்போவதை... ஐந்தாண்டு கழித்து நடக்கப்போவதை ! இதெல்லாம் ஒருவரால் அறிந்திருக்க வேண்டுமென்றால் அவையெல்லாம் அவரால் சரியாக திட்டமிடபட்டிருக்கப்பட வேண்டும். வரக்கூடிய இன்னல்களை முன்னமே அறிந்திருக்க வேண்டும். அவ்வாறு இன்னல் வருங்கால் அவற்றை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டிருக்க வேண்டும்.

இதை ஆங்கில முறையில் கூறலாயின்... Planning, Scheduling, Managing, Risk Identifying, Mitigation developing.. என்ற பற்பல விரிவான அத்தனை துறைகளும் இந்த ஒரே சொல்லான -ஆவ தறிவார்- சொல்லில் அடங்கியிருப்பது புரிந்த்த. அதை நினைத்துப்பார்க்கவே பிரம்மிப்பாக இருந்தது.

இப்போது எனக்கு அறிவு என்ற சொல்லிற்க்கான பொருள் விரிந்து கொண்டே செல்வது போல் தோன்றியது.


அனுபவக்குறளும் குறளின் போற்றுதலும் தொடரும்.....

அமரன்
22-06-2007, 11:14 AM
மீனாகுமார்! திட்டமிட்டுச்செய்தால் ஆவது அறியலாம் என்பதை அழகாக சொல்லியுள்ளார் வள்ளுவர். அதை எமக்குத் தந்த உங்களுக்கு நன்றி. தொடர்ந்து இதே போன்று தாருங்கள்

praveen
22-06-2007, 12:17 PM
இதை தானே அவ்வையும் அனுவை துளைத்து அதனுள் ஏழு கடலையும் புகுத்தியது போல குறுகத் தறித்த குறள் என்று பாடியுள்ளார்.

அக்னி
22-06-2007, 12:31 PM
சுவாரசியமான திரி தொடங்கியமைக்கு பாராட்டுக்கள்...
குறள்களை குறிப்பிடும்போது, இரண்டாவது குறளைக் குறிப்பிட்டதைப் போல,
குறள் வடிவிலேயே தொடர்ந்தும் தாருங்கள்...
ஆமாம்,
நீங்கள் ஆசிரியரா?
ஆசிரியர் அல்லாது போனால், சிறு வருத்தம்.
ஏனென்றால், உங்கள் விளக்கும் முறை எளிமையாக, விளங்குவதோடு, ஒன்றித்து வாசிக்கவும் விளங்கவும் வைக்கிறது.

மீண்டும் பாராட்டுக்கள்... தொடருங்கள்...

பென்ஸ்
22-06-2007, 12:31 PM
சபாஷ் மீனாகுமார்...

உலக பொதுமொழி என்ன பொது நூல்தானே குறள்...
அதை அனுபவ நீதியாக சொல்லும் போது.. ஆகா ஆகா.. தொடருங்கள்..

மீனாகுமார்
23-06-2007, 09:53 AM
அறிவு இன்னும் வேறு என்னவெல்லாம் தன்மை கொண்டது என்று ஆராய்ந்து பார்த்த போது அறிவு அற்றங்காக்குங்கருவி என்றாரே வள்ளுவர் பெருமான்....

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.

மனிதன் கடந்த காலத்தையே தான் அறிவான். ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அறியாவண்ணம் அமைந்துள்ள இவ்வுலகில்... அதை எப்படி கையாள்வது என்று ஆராயும் போதுதான்
அறிவின் துணை நமக்குத் தேவைப்படுகிறது. மிக முக்கியமாக பின்நாளில் வரப்போகும் துன்பத்தை உணர, உணர்ந்துபின் அதைத் தவிப்பதற்கான திட்டமிடல் போன்றவை செய்ய அறிவின் துணை
அவசியமே. அதனாலே அறிவு அற்றங் காக்கும் கருவி.

இளமையிலே பார்க்கும் பொருள் எல்லாம் பசுமையாகத் தோன்றும் என்பார்கள். அது இளமைக்கே உரிய அழகு. அந்த இளமையின் வேகம்.. மிக விரைவான வேகம். அதே வேகத்தில் மனதும் சென்று கொண்டுதான் இருக்கும். மனதும் இளமையும் ஒரு வேகத்தில் செல்ல, படிப்படியாக வாழ்வில் பிரச்சனைகளைச் சந்திக்க ஆரம்பித்த பின்னர்.. மனதின் வேகம் மெதுவாக குறையும். சரியாக சொல்ல வேண்டுமாயின்... மனது பக்குவப்படும். பின்னர் எது சரி, எது தவறு என்று எளிதாக விளங்கும். அனுபவத்தினால் பெறும் அறிவின் அளவும் பெருகும். அப்போது மனம் சென்ற இடமெல்லாம் செல்லாமல் சரியான திசையிலே மட்டும் பறந்தோடும். காலப்போக்கில் மனது
பக்குவப்படும் வேளையில் மனத்தை ஒரு நிலைப்படுத்தி நன்மை தரும் செயல்களில் மட்டுமே செலுத்தும் போது, வாழ்வு இனிக்கும்.

சென்ற இடத்தில் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.

இன்னும் அறிவு பற்றி சிறு ஆராய்ச்சி முடித்து விட்டு பின்னர் வீரம் விளைஞ்ச மண்ணு நம்ம மண்ணு...

lolluvathiyar
23-06-2007, 01:30 PM
மீனாகுமார், திருகுறள் நீங்கள் தந்த விளக்கம் உன்மையானதாக புதுமையானதாக் இருகிறது.
உங்கள் அவதாரை பார்த்தவாரே குறளை படிக்கும் போது நன்றாக புரிகிறது
நண்றி, தொடருங்கள்

மீனாகுமார்
23-06-2007, 02:41 PM
சுவாரசியமான திரி தொடங்கியமைக்கு பாராட்டுக்கள்...
குறள்களை குறிப்பிடும்போது, இரண்டாவது குறளைக் குறிப்பிட்டதைப் போல,
குறள் வடிவிலேயே தொடர்ந்தும் தாருங்கள்...
ஆமாம்,
நீங்கள் ஆசிரியரா?
ஆசிரியர் அல்லாது போனால், சிறு வருத்தம்.
ஏனென்றால், உங்கள் விளக்கும் முறை எளிமையாக, விளங்குவதோடு, ஒன்றித்து வாசிக்கவும் விளங்கவும் வைக்கிறது.

மீண்டும் பாராட்டுக்கள்... தொடருங்கள்...

நன்றி அக்னி. குறளை குறள் வடிவிலேயே தருகிறேன். நான் ஆசிரியர் இல்லை. மென்பொருள் பொறியில் துறையில் பொறியாளராகவும், இயக்குனராகவும் (Director) பணிபுரிகிறேன். தமிழில் Master of Arts (M.A.) படிக்க விரும்புகிறேன் இன்னும் சில ஆண்டுகளில்...

மீனாகுமார்
23-06-2007, 04:00 PM
இத் தொடரை வாசிப்பவர்களுக்கு ஒன்றை விளக்க கடமைப்பட்டிருக்கிறேன். திருக்குறளுக்கு பலர் விரிவுரை எழுதியுள்ளனர். நான் இங்கு திருக்குறளுக்கு விளக்கமோ, விரிவுரையோ எழுத முயலவில்லை. என் அனுபவத்தில் திருக்குறள் எனக்கு எவ்வாறு துணை நின்றது என்பதையும் நான் திருக்குறளில் புரிந்து கொண்ட சில நுணுக்கங்களையும் மட்டுமே வெளிப்படுத்த முயல்கிறேன்.

அனைத்து குறளையும் கொடுப்பதென்பது இயலாத காரியம். என்னை முக்கியமாக பாதித்த குறள்களை மட்டுமே சான்றுக்கு எடுத்துக் கொள்கிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிழையேதும் இருப்பின் உடனே சுட்டிக்காட்டவும் உங்கள் அனுவங்களையும் பகிர்ந்து கொள்ளவு தயங்க வேண்டாமென்றும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் எனக்கு நேரம் கிடைப்பதைப் பொறுத்தே இத்தொடரின் வேகமும் இருக்கும் என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மீனாகுமார்
23-06-2007, 04:03 PM
இன்றைய நவீன இயந்திர உலகில் தகவல் தொடர்புகள் (Communication) பன்மடங்கு பெருகிவிட்டது. இயந்திரங்கள் பேசிக்கொள்வது ஒரு புறம் இருந்தாலும், ஒருவருக்கொருவர் தகவல் பரிமாற்றமும் முன்பில்லாத அளவுக்கு இப்போது பெருகியுள்ளது. அவ்வாறு தகவல் பரிமாறிக் கொள்ளும் வேளையிலே பற்பல தவறுகள் நிகழ வாய்ப்பிருக்கிறது.
எழுத்துப் பிழைகளை எளிதில் கண்டுபிடித்திடலாம். முக்கியமாக அவை கருத்தையும் பொருளையும் பெரும்பாலும் பாதிப்பதில்லை. ஆனால் முக்கியமாக ஒரு பொருளை சொல்பவரும் அதை பெறுபவரும் ஒரே பொருளைத்தான் கொள்கிறார்களா என்பதில்தான் பற்பல சிக்கல்கள் வருகின்றன.

ஒரு விசயத்தைச் சொல்பவர் அவர் மனதினுள் ஒரு கருப்பொருளோடு (Context) சுருக்கமாக சொல்வார். அப்போது கூட இருக்கும் சில தகவல்களையும் சேர்த்து சொல்ல மறந்திடுவார். ஆனால் அதைப் பெறுபவர் வேறு விதங்களில் பொருள் கொள்ள வாய்ப்பிருக்கிறது.இங்கு தான் பல சிக்கல்கள் இயற்கையாகவே தோன்றுகின்றன. இது இன்றைய நவீன உலகில் அன்றாடம் நிகழும் நிகழ்வாகும்.

எண்பொருள் வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.

நாம் பிறருக்குச் சொல்ல வேண்டியதை தெளிவாகவும் முழுமையாகவும் குறிப்பாகவும் பிறரிடம்
சொல்லி நாம் பிறர் கூறுவதைக் கேட்கும் போது கவனமாக் கேட்டு கூறியவரின் கருத்தை அவர் வழியிலேயே புரிந்து கொண்டிருக்கின்றோமா என்பதையும் சரிபார்த்துக் கொள்வது
அறிவுடையவரின் செயல்.

இந்த தகவல் பரிமாற்றத்தில் சொல்வன்மை என்ற அதிகாரமும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதை பின்னர் பார்க்கலாம்.

மேலும் உலகத்தோடு ஒட்ட வாழ்வது அறிவு. அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவது அறிவுடையார் செயல் என்பது வள்ளுவர் வாக்கு.

எவ்வ துறைவ துலக முலகத்தோ
டவ்வ துறைவ தறிவு.

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ
தஞ்சல் அறிவார் தொழில்.

அறிவு பற்றி எனக்கு நல்ல கருத்து பிறந்து ஆழப் பதிந்தும் விட்டது.

அடுத்து வீரம் பற்றி சில அனுபவம்.

alaguraj
24-06-2007, 05:39 AM
நல்ல புதுமையான முயற்சி, தொடர்ந்து கொடுங்கள், விகடன் போன்ற நிறுவனங்கள் பார்த்தால் புத்தகமாகவும் வரலாம்.

சூரியன்
24-06-2007, 06:07 AM
புதுமையான முயற்சி

மீனாகுமார்
24-06-2007, 12:32 PM
நம் நாடுகளில் போர் என்றால் அக்காலத்தில் சில சட்டதிட்டங்களும் நியாய தர்மங்களும் இருந்தன. சில சமயங்களில் சிலர் அதை மீறியிருந்தாலும் பெரும்பாலும் அவை கடைப்பிடிக்கப்பட்டன. எதிரி என்றாலும் நேருக்கு நேர் மோதுவதையே வீரம் என்று
கருதினர். உன் வித்தையெல்லாம் வீரத்தையெல்லாம் முகத்தின் முன்னே காட்டுவதே வீரமாக இருந்தது. மறைந்திருந்து தாக்குவது, தூங்கும் போது போர் புரிவதோ, இல்லை எதிரி தூங்கும் போது கல்லைப் போட்டு கொல்வதோ வீரமாக கருதப்படவில்லை.

அதே போல் இரவில் போர் புரிவது, அதாவது ஆதவன் மறைந்தபின் போர் புரிவது வீரமாக கருதப்படவில்லை. வீரப்புண் என்பது முன்னால் நெஞ்சிலே வாங்கியிருக்க வேண்டும். குருதி வழிந்தாலும் முன் மார்பிலிருந்து வழிய வேண்டும். புறமுதுகு காட்டுவது கேவலமாக கருதப்பட்டது. நெஞ்சில் துணிவிருந்தால் அது நேருக்கு நேராய் வரட்டும் என்றிருந்தது.

ஆனால் அதே கால கட்டங்களில் புவியின் பிற பகுதிகளில் போர் வேறு முறையில் புரியப்பட்டது. எந்த முறை கையாள்கிறோம் என்பதில் அவர்களிடம் ஒரு வரைமுறையில்லை. ஆனால் வெற்றி தோல்வி மட்டுமே குறியாக இருந்தது. அதனால் போர் என்றால் இரவு 2 மணிக்கு எல்லோரும் தூங்கிய பின்னரே ஆரம்பிப்பார்கள். இருளில்
எதிரியின் கண்ணில் படாது சென்று தாக்குவது ஒரு முறையாக இருந்தது. நம் மண்ணில் அவையெல்லாம் கோழைத்தனமாக கருதப்பட்டது.

வேறு வழியின்றி நாமும் இன்று அம்முறைக்கு மாற வேண்டியதாகி விட்டது. சீனாவை பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே ஓர் மன்னன் ஒரே நாடாக இணைத்து விட்டான். முக்கியமாக பின்னால் வந்த மன்னர்களும் அதே ராஜ்ஜியத்தை பின்பற்றி ஆண்டார்கள். ஆனால் இந்தியாவில் அவ்வாறு இல்லாததால் பற்பல குறுநில
மன்னர்கள் ஆண்டார்கள். அவர்களிடம் ஒற்றுமையும் இல்லை. ஆனால் அப்படி ஒரு ஒற்றுமைக்கான தேவையும் இல்லாதிருந்தது. ஏனெனில் இந்தியாவே ஒரு தனி உலகம் போல் இயங்கிக் கொண்டிருந்தது. பின்னர் பற்பல தாக்குதல்கள் நிகழ்ந்ததெல்லாம் வரலாறு.

சரி. நம் காட்சிக்கு வருவோம். அந்த கடுமையான போர்க்களத்தில் ஆண் யானையானது எதிரிகளால் தன் உடல் முழுக்க அம்புகளால் துளைக்கப்பட்டிருந்தும், மிகுந்த மன வலிமையோடும் ஊக்கத்தோடும் தன் இறுதி மூச்சு வரை பகைவர்களை எதிர்த்து போராடும். அதன் வலிமைக்கும் ஊக்கத்திற்க்கும் ஈடு இணையே இல்லை.

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றும் களிறு.

இது வீரம் வலிமை ஊக்கம் ஆகிய மூன்றும் இணைந்த உச்சத்தின் மாபெரும் சான்று.

இக்குறள் என் மனதைக் கொள்ளை கொண்டு பசுமரத்தாணி போல் பதிந்த குறள்.

மீனாகுமார்
24-06-2007, 12:36 PM
பொருட்செல்வம் அழியும் தன்மையுடையது. பணம் இன்று வரும்
நாளை போகும் என்பார்கள். ஒருவனுடைய வாழ்வில் எது நிலையாக
நிற்கிறது ? அவன் கற்ற பாடங்களும் அந்த பாடத்தினால் அவன்
உள்ளம் பெரும் வலிமையும்.

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.

ஒருவன் தன் குழந்தைகட்கு பொருள் சேர்க்கின்றானா இல்லையா
என்பது முக்கியமில்லை. ஆனால் அவன் வாழ்வு முழுதும் நிலைத்து நிற்கும் வலிமையான உள்ளத்தைப் பெறுவது எப்படி என்று அவன் குழந்தைகட்கு கற்றுக்கொடுப்பதுதான் மிக முக்கியம். அது அவன் கொடுக்கப்போகும் பொருட்களின் மதிப்பை விட பன்மடங்கு அதிகமாகும்.

மீனாகுமார்
24-06-2007, 12:38 PM
ஊக்கம் இல்லாத உடல் பிணம். ஊக்கமில்லாதவனால் எந்த ஒரு பிரயோஜனமுமில்லை. ஒருவன் எது வைத்திருந்தாலும் அவன் அது வைத்திருப்பதாக கருதப்பட மாட்டாது. ஒருவனிடம் ஊக்கமிருந்தால் அவனிடம் எது இருந்தாலும் இல்லையென்றாலும் அவன் அனைத்தும் கொண்டதாகவே கருதப்படுவான்.

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.

மீனாகுமார்
24-06-2007, 12:41 PM
ஊக்கமுடைமை பற்றிய அத்தனை குறள்களும் அற்புதம். எல்லா குறள்களுமே ஊக்கத்தின் முக்கியத்துவத்தையும் அதன் சிறப்பையும் அழகாக எடுத்துரைக்கின்றன.

இந்த குறளைப்பாருங்கள் -

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.

உருவத்தில் பெரியதாக இருந்தாலும் ஊக்கம் கொண்ட புலி தாக்கினால் யானை பயந்து மிகக் கவனமாக கையாளும். ஊக்கமுடையவர்களிடம் வெகு ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும்.

அதே போல் உருவம் எப்படி இருக்கிறது என்பது முக்கியமில்லை. ஊக்கம் இருந்தால் எந்த உலகையும் ஆளலாம்.

ஊக்கமுடையவரிடம் மட்டும் ஆக்கம் நிறைந்து இருக்கும். ஒருவர் வாழ்வின் உயர்வும் அவர் கொண்ட ஊக்கத்தின் அளவைப் பொறுத்தே இருக்கும்.

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.


அறிவும் பெற்று ஊக்கமும் பெற்றாகி விட்டது. நம் பயணத்தைத் தொடர்வோம்.

மீனாகுமார்
24-06-2007, 08:16 PM
நீங்கள் முதன்முதலில் பங்குபெற்ற கூட்டம் (Meeting/Conference) உங்களுக்கு நன்றாக ஞாபகம் இருக்கும். அது அலுவலக கூட்டமாக இருக்கலாம் இல்லை வேறு எந்த கூட்டமாக இருந்தாலும் நீங்கள் பெரும்பாலும் அமைதியாக பிறர் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்திருப்பீர்கள். ஒவ்வொருவர் பேசுவதையும் கவனமாகவும் வியப்பாகவும் கூட பார்த்திருக்கலாம். நாம் முதன்முதலில் சிலர்முன்போ பலர்முன்போ பேசும் போது சிறிது பயமும் அதிக கவனமும் இருக்கும். தவறுகள் கண்டிப்பாக வந்திருக்கும். பிறகு நாமே திருத்திக்கொண்டு நமக்கென்று ஒரு ஸ்டைலையும் உருவாக்கியிருக்கலாம். போரில் கூட எளிதில் பங்குபெற்றிடலாம். ஆனால் கற்றவர் உள்ள அவையில் ஒரு சொல்லை சொல்லிப்பாருங்களேன். அவ்வளவு ஏன் ? இந்த தமிழ்மன்றத்திலேயே தவறான ஒரு செய்தியைச் சொல்லிப்பாருங்களேன். அதன் விளைவு எப்படியிருக்குமென்று.

அதனாலே ஆராயாமலும் நன்றாக யோசிக்காமலும் தான் சொல்லப்போகும் சொல்லினால் விளையப் போகும் விளைவுகளையும் சிந்திக்காமல் ஒருவர் பேச முற்படுவாராயின் அவர் படும் துன்பம் நாம் பலமுறை பார்த்திருப்போம். எனவே நாம் சொல்லப்போகும் சொல்லை கவனமாக கூற வேண்டும். நமக்கு வரும் துன்பமும் இன்பமும் நாம் சொல்லும் சொல்லினாலேயே அமைகிறது.

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு.


யோசிப்பதற்க்கு எவ்வளவு நேரம் கூட எடுத்துக்கொள்ளலாம். ஆனால் சொல்வதை சுருக்கமாக தெளிவாக செயலூட்டம் (effective) மிக்கதாக கூற வேண்டும். நாம் சொல்லும் சொல் எவ்வாறு எத்தகைய தன்மை பெற்றிருக் வேண்டும் ?

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.


நாம் ஒரு சொல்லைச் சொன்னால், அதைச் சொன்ன பின்பு யாரும் பேசக்கூடாது. அதை எதிர்த்து ஒரு குரலும் வரக்கூடாது. அவ்வண்ணம் யோசித்து சரியான சொல்லைத் தேர்வு செய்து சொல்ல வேண்டும்.

இந்தக் குறள் என் சொல்வன்மையை மிக வெகுவாக உருமாற்றிக் கொடுத்தது. இது என் மனதைக் கொள்ளை கொண்ட மற்றுமொரு குறள். சிந்தித்து பேசுபவன் மனிதன். பேசிவிட்டு சிந்திப்பவன் முட்டாள் என்றும் கூற கேட்டிருக்கிறேன்.

இளசு
04-07-2007, 09:43 PM
மிக மிக மிக பாராட்டுக்குரிய திரி..

நன்றியும் வாழ்த்துகளும் − மீனாகுமார்..


மேலாண்மை, தகவல் தொடர்பு, சொல்லாற்றல் பற்றி இக்காலச் சூழல்களில்
நம் குறள்களைப் பொருத்தி, சுயமேம்பாடு, ரசனையைச் சொல்லி
மிக சுவாரசியமாய்க் கொண்டுபோகிறீர்கள்..

அருமையான இப்பணிக்கு என் ஊக்கமும் பாராட்டும்... தொடருங்கள்!

அக்னி
05-07-2007, 04:15 PM
அனுபவக்குறள்கள் அசத்தல்...
வித்தியாசமாக ஒன்றிக்கின்றது மனதில்...
பாராட்டுக்கள்...
உங்கள் நேரம் கிடைக்கையில், தவறாமல் தாருங்கள்...

பி.கு:− தாங்கள் விரும்பியபடியே M.A. படித்து முடிக்க வாழ்த்துகின்றேன்...

மீனாகுமார்
06-07-2007, 02:08 PM
நன்றி, பெருந்தகைகளே....

மீனாகுமார்
06-07-2007, 02:09 PM
சில காலங்களுக்கு முன்னர் நாட்டை ஆளும் பொறுப்பும் சக்தியும் மன்னனிடமும் மற்றும் சிலரிடமும்மட்டுமே இருந்தது. சாராண குடிமகன் தன் வேலைகளை செவ்வனே செய்து விட்டு சந்தோசமாக வாழ்வு நடத்தி வந்தான். இன்றோ எந்த ஒரு வேலை செய்ய வேண்டுமாயினும் பலரின் உதவி தேவைப்படுகிறதே. நம் வீட்டிலிருக்கும் எந்த ஒரு பொருளையும் நாமே செய்ததில்லையே. யாரோ எங்கோ செய்த பொருட்கள் - நாம் காசு கொடுத்து வாங்கி வந்து அனுபவிக்கிறோம். தொலைபேசி வசதி, மின்சார வசதி, வாகனங்கள், மின்சார சாதனங்கள் என்று.... நாம் நம் வாழ்வில் பலரைச் சார்ந்துள்ளோம். நாம் உருப்படியாக எதையும் படைத்தோமா என்று தெரியாது. ஆனால் காசு மட்டும் இருந்தால் எதை வேண்டுமானாலும் வாங்கி அனுபவிக்கலாம். இல்லையா பின்னே.

இப்படி ஒவ்வொரு விசயத்திற்க்கும் பிறரைச் சார்ந்து வாழும் தன்மை மிக மிக அதிகரித்துவிட்டது. இதெல்லாம் இல்லாமல் ஒரு வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்குப் போய்விட்டோம். இவ்வாறு சார்ந்திருப்பதினால் ஒருவரோடு ஒருவர் பேசுவது அதிகரித்துள்ளது. எந்த ஒரு செயலும் அனுபவம் பெற்ற பலரிடம் கேட்டு செய்தோமாயின் மிக சிறப்பாக அமைகிறது. அங்ஙனம் பலரிடம் பேசும் போது விவாதம் வருகிறது. அப்போது அனுபவமும் அறிவும் பெற்றவன் சும்மா உட்கார்ந்திருந்தால் அவனால் பயன் விளையாது. அவன் கண்டவற்றை பிறரிடம் அவர் புரிந்து கொள்ளும் அளவுக்கு தெளிவாகவும் இனிமையாகவும் உரைக்கின், அவர் கூறிய சொல்லை பிறர் எளிதில் ஏற்பர்.

அவ்வாறு அழகாக எடுத்துரைப்பதே ஒரு கலை என்பார்கள். அது எல்லார்க்கும் எளிதாக அமைந்து விடாது. இயற்கையாகவே பெற்றிருப்பின் அது இறைவன் தந்த வரம். இல்லை பலரைப்பார்த்தும் கற்றுக்கொள்ளலாம். பழக பழக வந்து விடும். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பது பழமொழி. அவ்வாறு சரியாக பேசும் திறமையும் பெற்று நல்ல அறிவுத்திறனோடு கூடியவரிடம் பிறர் பேசி வெற்றி பெறுதல் என்பது மிக மிக கடினமே.

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.

சொல்வன்மை பெற்று, எதற்க்கும் சோர்ந்திடாது எவர்க்கும், எச்சபைக்கும் அஞ்சாதவனை வெல்வது யார்க்கும் அரியதாகும்.

அங்ஙனம் சொல் திறம் பெற்று, எந்த ஒரு விசயத்தையும் விரைந்து அறிந்து, முடிவெடுத்து இனிமையாக்கக் கூறுபவனின் ஏவலுக்கு இந்த உலகம் பணியும். அவன் சொல்வதைக் கேட்கும்.

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.


இத்தன்மை எந்த ஒரு துறைக்கும் பொருந்துவது வியப்பான இயல்பு. இன்றைய தொழில்உலகில் இத்தன்மை பெற்றிருப்பவன் தொழிலில் கொடிகட்டிப் பறப்பான். அரசியலில் இருப்பவனை உலகம் பின்தொடரும்.

மீனாகுமார்
06-07-2007, 02:11 PM
யாரிடம் பேசுகிறோம். எதற்காக பேசுகிறோம். என்ன பேசப்போகிறோம் என்பதனை நம் பார்வையில் உணர்கிறோம். அதே போல் கேட்பவர் நம்மிடம் என்ன கேட்கப்போகிறார், அவருக்கு என்னவெல்லாம் தெரியும், அவர் நம்மிடம் எதை எதிர் பார்க்கிறார் என்பதையும் உணர்ந்து அதற்க்கு ஏற்றாற்போல் வார்த்தைகளையடக்கி வாக்கியங்களை உருவாக்கி பேசுவதை விட மேலானது எதுவுமில்லை.

பேசுவதற்க்குத் தேவையானவை-

1. யார் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்றறிவது.
2. நம்மிடமுள்ள அனுவபமும் அறிவும் அதற்க்கு பொருந்துமா என்றறிவது. பொருந்தாவிட்டால் பேசவே பேசாதீர்கள்.
3. சரியான கருத்தை வடிவமைப்பது.
4. சரியான சொற்களைத் தேர்ந்தெடுப்பது. - இது மிக முக்கியம். தேவைக்கு குறைவான-அதிகமான சொற்கள் சந்தேகங்களை உண்டு பண்ணும். அதிகமான சொற்கள் பிரச்சனைகளுக்கு அழைப்பு.
5. சொற்களை வாக்கியங்களை இனிமையாக பேசுவது.

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கும் இல்.

கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.

அக்னி
07-07-2007, 04:20 PM
மிக அருமை அனுபவக்குறள்கள்...
படம்போல தெளிவாகத் தெரிகிறது வாசிக்கையிலேயே... உண்ர்கின்றேன் மனதில்...
எளிய விளக்கங்கள், சுவையாக, இன்னும் குறள்களில் தொடர, வாழ்த்துகின்றேன்...

இளசு
07-07-2007, 04:49 PM
மிக அருமை மீனாகுமார் அவர்களே..

மேலாண்மை வகுப்புகளில் வரும் தொடர்பாற்றல், பேரம் பேசும் ஆற்றல் இவற்றுடனும், அன்றாட வாழ்வியல் அனுபவங்களுடனும் குறளைச் சட்டென பொருத்திப்பார்க்க உதவும் உங்கள் சரளாமன எழுத்து நடை அருமை!

உங்கள் ரசிகனாக்கிவிட்டீர்கள்.. தொடருங்கள்!

அக்னி
07-07-2007, 04:54 PM
ஆமாம் அண்ணா..,
பாடசாலை நாட்களில், திருக்குறள் போட்டி என்று வைத்து, திருகுவார்கள்...
பாடமாக்கி ஒப்புவித்து பரிசில்கள் பெற்றிருந்தாலும்,
அர்த்தங்கள் தெரியாமல் பாடமாக்கியதாக மட்டுமே போனது...
ஆனால்,
மீனாகுமார் அவர்கள் போன்று அன்று கற்பித்திருந்தால் ஆசையாக அறிந்திருப்போம் என்று மனதில் பட்டதால்தான்,
ஆசிரியரா நீங்கள் என்று மீனாகுமார் அவர்களைக் கேட்டிருந்தேன்...

மீனாகுமார்
07-07-2007, 07:59 PM
உண்மைதான் தோழர்களே... கற்பிக்கும் விதம் மிக முக்கியம். எதையும் புரிந்து படித்து விட்டால் அது மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து விடும். நம் பள்ளிக்கூடங்களில் அவ்வாறு படிப்பதற்க்கு பெரும்பாலும் நேரம் அமைவதில்லை. அதனாலேயே நானும் பள்ளிக்கூட கல்வியில் மிகவும் குன்றிய மதிப்பெண்களையே பெற்றேன். ஆனால் கல்லூரியில் நாம் நம் விருப்பம் போல் படிப்பதற்க்கு சந்தர்ப்பம் கிடைக்கும். நானும் என் கல்லூரி படிப்பில் விளாசி விட்டேன்...

சரி. அனுபவக்குறள் தொடரும்....

மீனாகுமார்
07-07-2007, 08:00 PM
அறிவு பற்றி முன்பு ஆழ ஆராய்ந்தோம். அந்த அறிவைப் பெறுவது எப்படி ? நாம் இப்பூமியில் தோன்றிய நாளில் சிறிய வேலைகளைச் மட்டுமே செய்யத் தெரிந்தவராக வந்தோம். அதில் எந்த வித ஏற்ற தாழ்வு இல்லை. எல்லோருமே ஒரே அளவு அறிவைப் பெற்றிருந்தோம் என்றும் சொல்லலாம். ஆனால் வளர்ந்துவிட்ட பின் வெவ்வேறு திறனளவு கொண்டுள்ளோம். அறிவை நாம் பல வழிகளில் பெறுகிறோம்.

புத்தியின் வழியே அறிவு வெகுவாகவோ மெதுவாகவோ வளரும். புத்தியை மூன்று வகையாக பிரிப்பர். கற்பூர புத்தி. வாழை மட்டை புத்தி. கரித்துண்டு வகை புத்தி. ஒருவர் ஒரு விசயத்தை சொல்ல வருவதற்க்கு முன்பாகவே சட்டெனவும் சரியாகவும் புரிந்து கொள்ளும் தன்மை இந்த கற்பூர புத்தி. சட்டென பத்திக்கும். அடுத்தது கரித்துண்டு. கொஞ்சம் சூடேற்றி வகைப்படுத்திக் கொடுத்தால் பத்திக்கும். அதாவது ஒரு விசயத்தை விளக்கிச் சொன்னால் சரியாக புரிந்து கொள்ளும் தன்மை. வாழை மட்டை என்னதான் பத்த வைத்தாலும் பத்திக் கொள்ள வெகு நேரம் பிடிக்கும். இந்த வகையை நாம் இங்கு பார்க்கப் போவதில்லை.

கற்பூரமாக இருந்தாலும் கரியாக இருந்தாலும் இந்த உலகம் நடக்கும் விதத்தை இந்த உலகத்தைப் பார்த்துத்தான் கற்றுக் கொள்ள முடியும். வேறு வழியில்லை. வேறு உலகில் எப்படி இருக்கிறதோ நமக்குத் தெரியாது. இந்த உலகம் இப்படித்தான் இயங்குகிறது. அதனால் நாம் நம் அறிவை வளர்க்க வேண்டுமானால் முதலில் கவனிக்க வேண்டும். இங்கு என்ன நடக்கிறது என்பதை உணர வேண்டும். அப்படி உணர்வதற்க்கான வழிகள் யாவை ??

மீனாகுமார்
07-07-2007, 08:01 PM
நாம் ஒரு முறை செய்தித்தாள் படித்தால் நாம் உண்மையில் எவ்வளவு செய்தி படித்திருக்கிறோம் ? ஒரு செய்தித்தாளில் 100 செய்திகள் இருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் ஒரு முறை படித்த பின் எத்தனை செய்திகளை படித்திருப்பீர்கள். ஒருவர் 24, மற்றொருவர் 40, இன்னுமொருவர் 65. செய்தித்தாளை வரிகள் விடாமல் படிப்பவர்களைப் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். அவர்கள் வேண்டுமானால் 95-100 வரை படிப்பர். உண்மையில் 100 செய்திகள் இருந்தாலும் நாம் பாதி செய்திகளையே படிக்கிறோம் என்பது யதார்த்தமான உண்மை. நாம் அவ்வளவு தான் கவனிக்கிறோம்.

செய்தித்தாளும் உடனடிச் செய்திகளும் (breaking news) வராத காலத்திலே செவிகளால் கேட்டு உணர்வதே முக்கியமான வழியாக இருந்திருக்க வேண்டும். இன்றும் செவிகளால் கேட்டு அறிவது நிறையவே இருக்கிறது. 4.50 பேரூந்து வந்து விட்டதான்னு தெரியலையே. யாரிடமாவது கேட்போமான்னு நினைத்துக் கொண்டிருக்கும் போதே பக்கத்திலொருவர் இன்னொருவரிடம் அதே கேள்வியைக் கேட்பார். அவரும் -இல்ல சார்.. இன்னைக்கு இன்னும் காணல... லேட்டு போல...- ன்னு சொல்லும் போது நாம் ஏதும் செய்யாமலேயே நமக்குத் தேவையான தகவல் காற்றில் பறந்து வந்து கொண்டிருந்ததைக் கேட்டிருந்தோமேயானால்........

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.

மீனாகுமார்
07-07-2007, 08:03 PM
ஆங்கில புத்தகங்களில் கவனித்தல் (Listening) பற்றி எக்கச்சக்க பாடங்கள் உள்ளன. செயலூட்டம் மிக்கவர்கள் (Effective people) வளவள கொழகொழ என்று பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள். கூர்மையாக கவனிப்பார்கள். யாரும் பேசாதிருக்கும் போதுதான் அவர்கள் பேசுவார்கள். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது வேறு யாராவது பேச ஆரம்பித்தாலும் கூட பேச்சை நிறுத்தி கவனிக்க ஆரம்பித்து விடுவார்கள். இதைத்தான் வள்ளுவர் கூறியது-

செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.

இந்த கேட்கும், கவனிக்கும் திறனை ஒரு செல்வம் என்றே கூறுகிறார். அதுவும் இது அறிவுத் திறனை வளர்க்கும் செல்வம் அல்லவா... எனவே இது செல்வத்திற்ககெல்லாம் தலையாய செல்வம் என்கிறார் திருவள்ளுவர்.

செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.

மீனாகுமார்
07-07-2007, 09:28 PM
சில சமயங்களில் நாம் கேட்பது உடனடியாகவே உதவிவிடும். பலசமயங்களில் இன்று கவனித்த செய்திகள் இன்னொருநாள் பயன் கொடுக்கும். ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்து வரும் பெரியவர்களில் சொற்களை நாம் கூர்ந்து கவனித்திருந்தால் அது கண்டிப்பாக நமக்கு பின்னொருநாளில் நாம் துன்பப்படும் வேளையில் ஊன்றுகோலாக உதவி செய்யும்.

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்.

சரி. யார் எதைச் சொன்னாலும் கேட்டு விடலாமா ? இங்கு தான் அறிவையும் கேள்வி ஞானத்தையும் இயைந்து பயன்படுத்த வேண்டும். எவ்வளவு அளவாக இருந்தாலும் அது நல்ல விசயங்களையே கேட்க வேண்டும். நமக்கோ மற்றவர்க்கோ தீங்கு விளைவிக்கும் விசயமென்றால் உடனடியாக நிறுத்திவிட வேண்டும். இன்றைய உலகில் தேவையில்லாத விசயங்கள் தேவையின் அளவுக்கு வெகு அதிகமாக கிடக்கின்றன. அவையெல்லாம் கவனிக்காது பார்க்காது உணராது விட்டு விட வேண்டும். உதாரணமாக, இணையத்தில் தேவையில்லாத செய்திகளும் மனத்தை அலக்கழிக்கும் விசயங்களும் ஏராளமாக கொள்ளளவில் உள்ளன. அவைகளில் நம் பொன்னான நேரத்தை செலவு செய்வதை தவிர்க்க வேண்டும்.

நல்ல விசயங்களைக் கேட்கும் போது தான், நம் மனதில் நல்ல எண்ணங்கள் தோன்றும். நல்ல எண்ணங்கள் தோன்றினால் தான் நல்ல செயல்கள் உருவாகும். நல்லவைகளே நடக்கும். எனவே... கெட்டவைகளிலிருந்து சற்றும் யோசிக்காமல் உடனே விலகுவது அவசியம்.

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.

அன்று பேசுவதற்க்கோ, பாடுவதற்க்கோ, நடனமாடுவதற்க்கோ மேடைகள் இருந்தன. ரசிகர்கள் ஏராளமானோர் இருந்தார்கள். மேடையில் ஏறுபவர்கள் அவ்வளவு சாதாரணமாக ஏறிவிட முடியாது. உண்மையான திறமை இருந்தால் மட்டுமே இடம் பிடிக்க முடியும். மேடையில் ஏற்றுபவர்களைத் தேர்வு செய்யும் குழுக்கள் பல விதி முறைகளையும் தேர்வுகளையும் கையாளும். ஆனால் இன்று...

இந்த வலைப்பூக்களும் (blogs) விவாத மேடைகளும் (forums) யார் வேண்டுமானாலும் எல்லோருக்கும் தம் எண்ணங்களைச் செய்யலாம் என்று முன்பிருந்த மேடை வழக்கங்களைத் தகர்த்தெறிகின்றன. அது நல்ல விசயமாக இருந்தாலும் கூடவே நம் தேர்வு செய்யும் குழுக்களின் விதிகளும், தேர்வுகளும் இப்போது எல்லோர் மீதும் செய்விக்கப்படும். அவ்வளவுதான்.

மீனாகுமார்
10-07-2007, 10:47 AM
கேள்வி பற்றியும் அதன் தன்மை பற்றியும் ஆய்ந்தோம். அடுத்து....

துன்பம். நீர் போன்று வழிந்தோடும் வாழ்வில் அவ்வப்போது வந்து போகும் துன்பம். துன்பமில்லாத வாழ்வு சுவையாக இருக்காதென்பர். சில துன்பங்கள் உடனே நீங்கி விடும். சில துன்பங்கள் நீங்க சில காலமாகும். இன்னும் சில துன்பங்கள் போகிற போக்கில் சுவடுகளை ஏற்படுத்தி விட்டுச் செல்லும். சரி. எது எப்படியாயினும், என்னைத் துன்பம் தொற்றிக் கொள்ளும் போது நான் முதலில் என்னைக் கேட்கும் கேள்வி.... இவ்வுலகிலேயே முதன்முதலில் நான் தான் இத்துன்பத்தை அனுபவிக்கப் போறேனா ?? என்றுதான். அங்கேயே எனக்கு சில விடைகள் கிடைத்து விடுகிறது. அப்போ எனக்கு முன்னர் அதே துன்பத்தை அனுபவித்தவர்கள் அதிலிருந்து எப்படி மீண்டார்கள் என்று. அதை அறிந்து கொண்டும் நம் சூழ்நிலையையும் பொறுத்து சரியான முடிவெடுத்து துன்பத்தைக் கையாள்வது பழகிப் போய்விடும்.

சரி. அவ்வாறு துன்பம் வரப் பெறின் நம் ஞானத்திற்க்கும் எட்டாத அளவு சென்று விட்ட பின் என்ன செய்வது என்று தெரியாமல் பல முறை விழித்திருக்கலாம். அப்போது தான் பெரியவர்களின் துணை நமக்கு மிகவும் ஊன்றுகோலாக இருக்கும். பெரியவர்களின் வார்த்தைகள் நமக்கு மிகவும் மருந்தாக அமையும். நான் சில முறைகள் சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் போது என் மனநிலையை உணர்ந்து என்னவென்பதை அறிந்து என்ன செய்யலாம் என்று பல யோசனைகளைத் தெரிவிப்பார் என் தாயும் என் தந்தையுமாகிய என் அம்மா. அவர்களிடம் பேசிவிட்ட பின்னர் மனது லேசாகிவிடும். மனதில் என்ன செய்யலாம் என்ற திட்டமும் உருவாகிவிடும். இதே போல் நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் நம்மைச் சுற்றி இருக்கும் பெரியவர்கள் நமக்குத் துன்பம் ஏற்படும் போது மிகவும் உதவியாக இருப்பார்கள். பல சமயங்களில் -ஆஹா அவர்கள் இருக்கிறார்கள்.. அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்- என்று எண்ணும் போது கலக்கமுற்ற மனது விடுதலை பெற்ற பறவையாக சிறகடிக்கும்.

மீனாகுமார்
10-07-2007, 10:55 AM
கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு நான் கூறுவது அனுபவமாய்ப் புரியும். கூட்டுக் குடும்பங்கள் என்று சிதைந்து விட்டதோ அப்போதே பல துன்பங்களும் தொற்றிக்கொண்டு விட்டன. சரி. விசயத்துக்கு வருவோம். இவ்வாறு துன்பம் நம்மை வாட்டும் போது பெரியவர்களின் துணை நமக்கு மிகவும் ஆறுதலாக இருக்கும். அவர்களின் சொற்கள் நமக்கு மருந்தாக அமையும். ஆகையால் எப்பாடு பட்டும் மூத்தவர்களின் பெரியவர்களின் துணையை நட்பினை ஆராய்ந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன்அறிந்து தேர்ந்து கொளல்.

மீனாகுமார்
10-07-2007, 11:13 AM
பெரியவர் என்றால் யாரை குறிப்பிடுகிறார் வள்ளுவர் என்று பல முறை சிந்தித்திருக்கிறேன். வயதில் மூத்தவர் மட்டும் பெரியவரா. சரி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கிரிக்கெட் விளையாடுவாரா ? அவர்தான் நாட்டிற்க்கே முதல்வராச்சே.... சிரிசாந்த் பந்து வீச, ஆறு பந்துகளையும் ஆறு ஆறுகளாக மாற்றுவாரா... இல்லை. எய்ட்ஸ் நோய்க்குத் தான் அவரே மருந்து கண்டு பிடித்துவிடுவாரா ??? முடியுமா.... கண்டிப்பாக முடியும். ஆனால் இன்றே செய்யச் சொன்னால் அவர்களால் முடியாது. சில காலங்கள் பயிற்சி கொடுத்தால் கண்டிப்பாக முடியலாம்.

இங்கு கீழே இருக்கும் செய்தி என்ன.... அந்தந்த துறையில் அனுபவம் பெற்றவர் அந்தந்த துறையில் மூத்தவராகிறார்.. பெரியவராகிறார். எனவே பெரியவர் என்று கூறும் போது வயதை மட்டும் குறிக்கவில்லை.. அனுபவத்தையும் அறிவையும் சேர்த்து குறிப்பது தெளிவாகிறது.

அப்படிப்பட்ட பெரியவர்கள் நம் கூட இருக்கும் போது நமக்கு மிகவும் பாதுகாப்பாக இருக்கும். நாம் தவறு செய்யும் போது நம்மைக் கடிந்து நாம் செய்யும் தவறைச் சுட்டிக்காட்டுவார்கள் அவர்கள். அப்படிப்பட்ட பெரியவர்களைச் சபையில் கொள்ளாத மன்னன் வெளியிலிருந்து கெடுப்பவர்கள் இல்லையென்றாலும் தானாக முட்டாள்தனமான காரியத்தைச் செய்து கெட்டுவிடுவான்.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்.

இது மன்னருக்கு மட்டுமல்ல.. இன்று யாவர்க்கும் பொருந்தும். இடித்து அறிவுரை கூறும் பெரியவர்களோ, நண்பனோ.. உறவினர்களோ இல்லாது போனால் நாமே கெட்டுவிடுவோம்.

இளசு
10-07-2007, 10:30 PM
அரசியல் தொடங்கி வலைப்பூவரை இக்காலச் சூழல்களில் பொருத்தி
நீங்கள் எழுதிவரும் இக்குறள் தொடர்..

இம்மன்றத்தின் பெரும் பெருமைக்குரிய பதிவுகளில் ஒன்று..

என் வாழ்த்துகளும் ஊக்கமும்..மீனாகுமார் அவர்களே..
தொடருங்கள்..நன்றி!

மீனாகுமார்
12-07-2007, 05:02 PM
நீங்களே இரு முறை வாழ்ந்து பாருங்கள். ஒரு முறை எந்தப் பெரியவரின் உதவியும் இல்லாது. மறுமுறை உங்கள் மனதை வென்ற பெரியவர்களின் துணையோடும் வாழ்ந்து பாருங்கள்.

சரி. இப்படி எல்லவற்றுக்குமே பெரியவர்களை சார்ந்து இருக்கலாமா... எல்லாவற்றிற்க்குமே பெரியவர்களைச் சார்ந்திருப்போமேயானால் நாம் நம் சொந்த புத்தியைப் பயன்படுத்துவதையே நிறுத்திவிடுவோம். ஆகையினாலே.. பிரச்சனைகளை முடிந்த மட்டில் நாமே சமாளிக்க பார்க்க வேண்டும். நம்மை அது வெகுவாக பாதிக்கும் போது பெரியவர்களை அணுக வேண்டும். நம் நாடுகளில் பெரியவர்களிடம் கேட்டு கேட்டு பழகியே முற்காலத்தில் நிறையப் பேர் சொந்தமாக யோசிப்பதேயில்லை. மேலை நாடுகளில் இப்படி பெரியவர்களின் துணை கிடைப்பதில்லை. அதனால் அவர்கள் வாலிப வயதிலிருந்தே யோசிப்பதற்க்கு நிர்பந்தப்படுத்தப்படுகிறார்கள்.

மீனாகுமார்
12-07-2007, 05:12 PM
இன்னொரு முக்கியமான விசயம் இங்கு கவனிக்க வேண்டும். அனுபவ அறிவு பெரியதா.. இல்லை... பிறர் சொல் கேட்டு நடப்பது பெரியதா... இங்கு குழப்பம் பலமுறை வந்திருக்கிறது...

சிறு குழந்தையிடம் -ஏய் அந்த தீயைத் தொடாதே.. சுடும்- என்று கூறினால்.. முதலில் தன் அம்மாவோ அப்பாவோ கூறுகிறார்களே என்ற காரணத்திற்க்காக தொடாமல் இருக்கும். சில முறைகள்... பின்னர் ஒரு சமயம் அது தன் அவா தாங்காது ஒரு முறை தொட்டுவிடும். சூடு எப்படி இருக்கும் என்பது இப்போது அதன் மூளையில் தெளிவாக எழுதப்படுகிறது... வேறு ஒருமுறை அது தீயைத் தொடவே தொடாது.... அது அனுபவ அறிவு. அதனால் எந்த அறிவு சிறந்தது என்றால் அனுபவ அறிவே என்பது புலப்படுகிறது.

ஆனால் எல்லாவற்றையும் அனுபவித்தே உணர முடியுமா.... இல்லை... இறந்தால் எப்படி இருக்கும் என்பதையும்.. எயிட்ஸ் வந்தால் எப்படி இருக்கும் என்பதையும் சொந்த அனுபவத்தினால் உணர முடியாது. பிறரைப் பார்த்தை தெரிந்து கொள்ள வேண்டும்.

பெரியவர்கள் சொல்வதைக் கேட்பதே.. நமக்குப் பின்னால் வரும் இன்னல்களிலிருந்து தப்பிப்தற்க்காகவே...

ஆகவே.. சொந்த புத்தியை எங்கு பயன்படுத்த வேண்டும், சொல் புத்தியை எங்கு பயன்படுத்த வேண்டும் என்பதே தெளிவாக உணர வேண்டும்.

Bala manian
12-07-2007, 09:12 PM
குறள் பற்றி குரல் கொடுக்க பலர் இருக்க, அனுபவ ரீதியாக, புரியக்கூடிய முறையில் குரல் கொடுக்கும் மீனாகுமாருக்கு வாழ்த்துகள் பல.

அறிஞர்
12-07-2007, 09:21 PM
மீனாக்குமார்.. கலக்குறீங்க...

தனி உரையே வெளியிடலாம் போல...

இது மாதிரி சம்பவங்களை இணைத்து திருக்குறள் உரைகளை சேர்த்து வையுங்கள்.. பிற்காலத்தில் உதவும்.

மீனாகுமார்
13-07-2007, 09:55 PM
நன்றி பெருந்தகைகளே...

இன்னும் சில முக்கிய குறள்களைக் காண தொடர்வோம்....

மீனாகுமார்
13-07-2007, 09:56 PM
பெரியாரைத் துணைகோடல் அதிகாரத்தில் பெரியவர்களின் துணையின் தன்மை எப்படிப்பட்டது, அது எவ்வளவு வலிமை வாய்ந்தது, அதை எப்படி பேணி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார் வள்ளுவர் பெருமான்.

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.

பெரியவர்களின் நட்பைப் பெறுதல் அரிய வாய்ப்பாகும். அதை எவ்வாறாயினும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை.

பெரியவர்களை தம்மோடு பெற்றுக் கொள்ளுதல் நமக்குரிய வலிமையில் எல்லாம் தலை.

பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.

நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுதல் பலரோடு செய்யும் பகைமையை விடக் கொடியதாகும்.

lolluvathiyar
14-07-2007, 08:09 AM
குறளை இவ்வளவு எளிதாக விளக்கம் நான் எங்கும் பெற்றதில்லை, மீனாகுமார் அவர்களே, இன்றைய வாஜ்பாய் வரை எடுத்துகாட்டு தந்து விளக்கம் தந்திருகிறீர்கள்
நண்றி, தொடருங்கள்

இளசு
15-07-2007, 06:59 AM
பெரியாரைத் துணைக்கோடல்.

இன்று 'மென்ட்டர்ஷிப்' எல்லாத்துறைகளும் எத்துணை அவசியம் என உணரப்பட்டு கடைப்பிடிக்கச் சொல்லி வருகிறார்கள்..

மீனாகுமாரின் சமகால வாழ்வியல் ஒட்டிய அனுபவக்குறள் −
மன்றத்தின் மிக முக்கிய தொடர்..

பாராட்டும் நன்றியும் மீனாகுமார் அவர்களே..

aren
15-07-2007, 08:21 AM
அழகான தெளிவான விளக்கம் மீனாகுமார் அவர்களே. பல புரியாத விஷயங்கள் இப்பொழுது எனக்கு கொஞ்சம் புரிவதுபோல் இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

மீனாகுமார்
15-07-2007, 04:22 PM
பெரியவர்களின் துணை எவ்வளவு சிறப்பானது, அதை எப்போது எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பார்த்தோம். இனி ஒரு செயலைச் செய்யும் முன்னர் யாது செய்ய வேண்டும் என்பதைக் காண்போம்.

நம் உள்ளத்தில் பல குறிக்கோள்கள் இருக்கலாம். பல கனவுகள் இருக்கலாம். அவையெல்லாம் செயல்களாக செய்யும் போது முதலில் அதற்க்குரிய திறன், வலிமை, கால அளவு தேவையான பொருட்கள் இருக்கின்றனவா என்று அச்செயலைத் தொடங்குவதற்க்கு முன் தீர ஆராய வேண்டும். ஒரு செயலைச் செய்யும் முன் அதில் என்னவெல்லாம் செய்ய இயலும் எதுவெல்லாம் இயலாது என்பதை அறிய வேண்டும். பின்னர் அதைச் செய்வதற்க்கு தேவையான திறமை நம்மிடம் இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். தேவையான ஆட்கள், பொருட்கள், எவ்வளவு காலம் தேவை போன்றவைகளையும் ஆராய வேண்டும். நவீன உலகில் Project Management துறையில் ஒரு ப்ராஜக்ட்க்குத் தேவையானவையென அளவு (Scope) காலம் (Time) செலவு (Cost) என்று Triple Constraint என கூறுவார்கள். இவ்வளவையும் ஆராய்ந்து பின்னர் எதை எதை எப்போது செய்ய வேண்டும் என்று திட்டமிடல் வேண்டும். அப்படித் திட்டமிடும் போதே அந்த செயலைச் செய்து விட முடியுமா வேறு என்னவெல்லாம் பிரச்சனைகள் வரலாம் என்று பல கேள்விகள் எழும். அதற்க்கு விடையும் கண்டு பிடிக்க வேண்டும்.

இவ்வாறு நன்கு பிரித்து ஆராய்ந்த பின்னே தான் ஒரு செயலைச் செய்ய முயல வேண்டும். இவ்வாறு ஆராயாமல் தம் ஊக்கத்தின் மிகுதியினாலும் ஆசையின் பிடியினாலும் செய்யத் தொடங்கிவிட்ட செயல் பெரும்பாலும் இடையிலேயே முறிந்து விடும்.

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முறிந்தார் பலர்.

ஒரு செயலைச் செய்ய வேண்டிய வலிமை தமக்கு இருக்கிறதா என்று ஆராயாமல் ஊக்கத்தின் மிகுதியால் செய்ய முயற்சித்து பாதியிலேயே அச் செயலை முடிக்காமல் முறிந்தவர் பலர்.

இது ஒரு முக்கியமான குறள்.

மீனாகுமார்
15-07-2007, 04:23 PM
வலிமை என்பதை போர்களத்தில் வீரமாகவும் கற்றோர் நிறைந்திருக்கும் அவையில் அறிவின் வலிமையாகும் மேலும் விளையாட்டில் வீரர்கள் மற்றும் அணியின் வலிமையாகவும் பொருள் கொள்ளலாம். வணிகத்தில் தம் கொள்ளளவு (Capacity) யாக கருதலாம். இப்படி இடத்திற்க்கேற்ப வலிமை என்ற அருமையான சொல்லின் பொருள் மாறும். இவ்வாறு பல் வேறு சூழ்நிலைகளுக்கு ஒரே தத்துவமாக பொருந்துவது குறளின் தனிச்சிறப்பு.

கீழே உள்ள குறளைப் படியுங்கள். நான் கூறுவது விளங்கும்.

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.

வினைவலி - செய்யக்கூடிய செயலின் வலி. இது எந்த செயலாகவும் இருக்கலாம். போர், விளையாட்டு, வணிகம், பேச்சுப்போட்டி என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம். செயலின் வலிமை, தன்னுடைய வலிமை, மாற்றான், எதிரி போன்றவர்களின் வலிமை, தனக்கும் எதிரிக்கும் துணை நிற்பவர்களின் (சகஊழியர்கள்) வலிமை, ஆகிய யாவற்றையும் ஆராய்ந்த பின்பே அச் செயலை செய்ய விளைய வேண்டும்.

இளசு
15-07-2007, 04:35 PM
பாதியில் முடிக்காமல் விட்ட சாதனைகள் எத்தனை எத்தனை இவ்வுலகில்..

அவற்றின் கூட்டு − சாதிக்கப்பட்ட முழுமைகளைவிட பல மடங்காகும்..

சக்தி விரயமாகமல் முன் திட்டமிடச் சொல்லும் அனுபவக்குறள் விளக்கம் அருமை!

நன்றி மீனாகுமார் அவர்களே..


(அமரனின் பரிந்துரைக்கு நன்றி − இம்முக்கியத் திரியை ஒட்டிவைக்கலாம்)

பாரதி
15-07-2007, 05:01 PM
சிறப்பான முயற்சி மீனா குமார். மனமார்ந்த பாராட்டுக்கள்.
ஒட்டி வைக்கலாம் என்ற அண்ணனின் பரிந்துரை மிகவும் சரியானது.

மீனாகுமார்
17-07-2007, 04:02 PM
தன் வலிமையின் திறனை அறிந்து அதன் படி நடந்து கொள்வது நாம் நம் வேலை பார்க்கும் இடத்திலோ இல்லை நம்முடைய மிகப் பெரிய செயல்களில் மட்டுமோ பொருந்தும் என்பதில்லை. நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அது பொருந்தும்.

உதாரணமாக தொலைக்காட்சிப் பெட்டியும், கணினி மானிட்டரையும் அளவுக்கு மேல் தினமும் பார்த்து வந்தால் அது நமது கண்ணின் திறனைக் காட்டிலும் அதிகமாக பயன்படுத்துவதாகும். அப்போது கண் தன் பயன்பாடு தாங்காமல் கோளாறு ஏற்படலாம். மனிதனாக வாழ்ந்தால் கண்டிப்பாக மூன்று வேளை நேரா நேரத்துக்கு சாப்பாடு சாப்பிட வேண்டும். அல்லாது போனால் உங்கள் வயிறு உங்களைக் கோபித்துக் கொண்டு அல்சர் போன்ற வியாதிகளை ஆரம்பிக்கும். ஒரே நாளில் 100 மைல் ஒட முடியாது. முயன்றால் என்ன ஆகுமென்பதை அறிவீர்கள். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியை அறிவீர்கள்.

மென்மையானது மயிலிறகு என்றாலும் அதை ஏற்றும் வண்டியின் திறனறிந்து அதன் அளவு தான் ஏற்ற வேண்டும். அதற்க்கு மேல் ஏற்றினால் வண்டியின் அச்சே முறிந்து விடும்.

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.

அதே போல் மரத்தின் நுனிக்கொம்பிற்க்கு ஏறிய பின்னும் மேலும் ஏற நினைத்தால் அது அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடியும்.

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்
உயிர்க்கிறுதி யாகி விடும்.

மீனாகுமார்
17-07-2007, 04:03 PM
அகலக்கால் வைக்காதே என்று கூறுவர்.
விரலுக்கேத்த வீக்கம் என்றும் கூறுவர்.
ஆழம் தெரியாமல் காலை விடாதே என்றும் கூறுவதுண்டு.

சரி ஆழம் தெரியாது காலை விடக்கூடாது என்று மேலோட்டமாக பார்த்தால் புரிகிறது. ஆனால் அந்த ஆழத்தை எப்படி அறிவது என்று நாம் எப்போதாவது நம்மைக் கேட்டிருக்கிறோமா. ஒவ்வொரு பொருளையும் அளந்து அதன் தரமும் அளவும் தன்மையும் தெரிந்திருக்க வேண்டும். ஆழத்தை அறிய பல்வேறு வழிமுறைகளைக் கடைப்பிடிக்கலாம். முன்னே அறிந்திருந்த அனுவங்களையும் பயன்படுத்தலாம். கடலின் ஆழத்தை எப்படி அதனுக்குள் செல்லாமல் சோனோகிராபி மூலம் அறிகிறார்கள். எழும்பு உடைந்துள்ளதா என்பதை எக்ஸ்-ரே மூலம். தூரத்தை ஒலி ஒளியின் மூலம் என அளக்க முடியும்.

எதை அளக்க முடியுமோ அதைத்தான் நன்கு தெரிந்து கொள்ள முடியும். அதாவது ஒவ்வொரு நாளும் எவ்வளவு பயன்படுத்துகிறோம் என்று. எதை நன்கு அறிய முடியுமோ அதைத்தான் கட்டுப்படுத்த முடியும்.

சரி. நம் திறனளவு தெரிந்த பின், அதை அடைய நம்மால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
அதே செயலே கண்ணும் கருத்துமாய் நின்று விடாமுயற்சி செய்பவர்களுக்கு முடியாத செயல் எதுவுமில்லை.

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.
இதன் மூலம் ஒரு செயலை எதுவரை செய்ய இயலும், எப்படி அளப்பது, அதை காலப்போக்கில் எவ்வளவு செய்து கொண்டிருக்கிறோம், இன்னும் தரமாகவோ வேகமாகவோ செய்ய யாது செய்ய வேண்டும், எதெல்லாம் செய்யத் தேவையில்லை என்பதை அறிகிறோம்.

மீனாகுமார்
17-07-2007, 04:39 PM
பிறருக்கு ஈவதாயினும் தன்னுடைய பொருளும் செல்வமும் அளவறிந்து அதற்கேற்றார் போல் பிறருக்கு கொடுத்திடுக என்கிறார் வள்ளுவர். அது தான் பொருளைப் போற்றி வழங்கும் நெறியாகும்.

ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி.

மீனாகுமார்
17-07-2007, 04:43 PM
ஒருவன் தம்முடைய செல்வத்தை எப்படி நிர்வாகிப்பது ?? தற்போது இருக்கும் செல்வத்தின் அளவு, வருமானத்தின் அளவு, செலவின் அளவு. இவைகளைப் பொறுத்தது.

இந்த மூன்றையும் அளந்து அதற்க்கேற்றார் போல் ஒருவன் வாழவில்லையென்றால் அவன் வாழ்வு கெட்டு விடும்.

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.

அதே போல் வருமானம் வருகின்ற வழி சிறியதாக இருப்பினும் அது போகும் வழி அதைவிட அகலமாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு பார்த்துக் கொண்டால் நமக்குத் துன்பம் வராது. இல்லாவிட்டால் எல்லாவிதமான துன்பங்களும் வரும். கடனட்டை (கிரிடிட் கார்டு) வாங்கிக் கொண்டு கடனைக் கட்டமுடியாமல் தவிப்பவர் எத்தனை பேர் உள்ளனர். அவர் யாவும் அளவறிந்து செலவிடாதவர். அவர்களை அக்கடனிலிருந்து மீட்க பலர் ஸ்தாபனங்கள் தொடங்கியுள்ளனர்.

ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை.

அக்னி
17-07-2007, 08:22 PM
மீண்டும் ஒரு தடவை வாசிக்க வேண்டும்...
மிகவும் தூண்டுகின்றது உங்கள் எழுத்து நடை...
வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்... தொடர்ந்தும் தாருங்கள்...

ஆதவா
18-07-2007, 06:59 AM
சிறப்பான எளிமையான விளக்கம்..... இன்னும் முழுமையாக படிக்கவில்லை.... ஆனால் இதை பிரிண்ட் எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ள சொல்கிறது மனம்...

வாழ்த்துக்கள்.

மீனாகுமார்
19-07-2007, 03:59 PM
வலியறிதலைத் தொடர்ந்து ஒரு மாற்றத்திற்க்கு, அடுத்து ஒரு முக்கிய அதிகாரத்தைக் காண்போம்.

இவ்வுலகம் எப்போதுமே சமநிலையற்றதாகவே உள்ளது. ஒரு கிலோ அரிசியின் விலை என்ன ? ஒரு ஆப்பிள்-ஐ.பாடின் விலை என்ன ? உலகிலுள்ள முதல் நூறு செல்வந்தர்கள் கூடியிருக்கும் ஒர் கூட்டத்தில் ஒரு கிலோ அரிசி எடுத்துச் சென்று அவர்கள் அதற்க்கு எவ்வளவு விலை கொடுப்பார்கள் என்று கேட்போம். பின்னர், அவர்களை ஒரு அறையில் அடைத்து வைத்து ஆளுக்கு நூறு ஆப்பிள்-ஐ.பாடைக் கொடுத்து விடுவோம். பின்னர் பதினைந்து நாட்கள் கழித்து ஒரு கிலோ அரிசியோடு அவர்களைக் காணச் செல்வோம். இப்போது அவர்கள் இந்த அரிசிக்கு எவ்வளவு விலை கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள் என்று கேட்போம்.

இதே போல் நூறு உழவர்கள் இருக்கும் கூட்டத்தில் ஒரு ஆப்பிள்-ஐ.பாடை எடுத்துச் சென்று என்ன விலை தருவார்கள் என்றும் கேட்போம்.

இன்றைய உலகில் ஒருவர் மற்றவரைச் சார்ந்திருந்தாலும், உழவுத் தொழிலைச் சார்ந்தே மற்ற எல்லா தொழில்களும் உள்ளன. உழவுத் தொழிலை ஒரு மாதம் இவ்வுலகில் நிறுத்தி விடுவோம். அப்படிச் செய்யின் இவ்வுலகமே தன் இயக்கத்தை நிறுத்தி விடும்.

எனவே தொழில்களுக்கெல்லாம் தலையாய தொழில் இந்த உழவுத் தொழில்.

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.

உழவுத் தொழில் புரிபவர் மிகவும் மேன்மையானவர். அவர் உருவாக்கி பண்டங்களை பிறர் உண்டு வாழ்வர். பண்டைய காலத்தில் உழவர்கள்தான் மிகவும் மேன்மக்களாக கருதப்பட்டனர்.

இது ஒரு முக்கியமான குறள். அனைவரும் மனதில் பதிக்க வேண்டிய குறள்.

மீனாகுமார்
19-07-2007, 04:02 PM
உழவுத் தொழில் செய்பவரே உலகத்துக்கே அச்சாணி போன்றவர் என்கிறார் நம் பெருமான்.

உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃதாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.

உழுதுண்டு வாழ்பவர் பிறரைச் சார்ந்திருந்தாலும், ஒரு சமயம் அச் சார்பு இல்லாவிடினும் அவரால் வாழ முடியும். உழவரைச் சார்ந்திருக்கும் ஒவ்வொருவரும் அவர் இல்லாவிட்டால் இவ்வுலகில் வாழ முடியாது. அவரெல்லாம் உழவர் உருவாக்கிய பொருளை உண்டு அவரைத் தொழுது பின்னே செல்பவர். எவ்வளவு உண்மையான கருத்து.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்றாரே எம்பெருமான் பாரதியார்.

மீனாகுமார்
25-07-2007, 04:25 PM
பல நாடுகளை ஆளும் வேந்தர்களும் உழவுத் தொழில் செய்பவர்களை மதித்து மேன்மையாகக் கருதினர். வேந்தர்களையே தம் குடையின் கீழ் இழுக்க வல்லமை பெற்றது இந்த உழவுத்தொழில் என்றால் அது மிகையாகாது.

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.

மீனாகுமார்
25-07-2007, 04:33 PM
உழவுத் தொழிலைச் சிறப்பாகச் செய்ய வேண்டுமானால் முதலில் வளமான பூமி வேண்டும். மண்ணின் தரத்தை, திறத்தை அறிந்து அது உழவுக்கு ஏற்றதா என்று ஆராய வேண்டும். ஏரினால் உழும் போது சற்றே கீழிருக்கும் மண் மேலே வரும். மேலும் கடினமாக இருக்கும் மண் லேசானதாய் மாறிடும். இவ்வாறு செய்தல் பயிருக்கு மிகவும் நல்லது. (உழுதலினால் வேறு ஏதேனும் பயன் இருப்பின் தெரிந்தவர்கள் கூறவும்). உழுதலை விட அதிக வளமை சேர்ப்பது எருவிடுதலினால். இது மண்ணுக்கு உரம். பயிரின் வளர்ச்சிக்கு உரம். அடுத்து களை எடுத்தல் முக்கியம். இல்லையென்றால் பயிர் சாப்பிட வேண்டிய வளத்தையெல்லாம் தேவையில்லாத களைச் செடிகள் சாப்பிட்டு விடும். அடுத்து நீரிடுதல் மிக முக்கியம். அதுவும் தேவையான பருவத்தில் தேவையான அளவு நீர் விடுவது மிக அவசியம். அதனினும் முக்கியம் பயிர்களைக் காப்பது. நெடுநாட்களாக பாடுபட்டு வளர்த்த பயிற்றை அறுவடை செய்யும் போது கயவர்கள் கவர்ந்து சென்றால் நம் மனம் பாடாய் பாடுபடும். எனவே பாதுகாத்தல் மிக அவசியம்.

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.

மீனாகுமார்
25-07-2007, 04:37 PM
மேலே உள்ள குறள் உழவுத் தொழிலை ஒட்டி கூறியிருப்பினும் பிற எந்தத் தொழிலுக்கும் பொருந்தும் வண்ணம் இருப்பதை நான் காண்கின்றேன். எந்தத் தொழில் செய்தாலும், செய்யப்படும் தொழிலுக்கு என்னென்ன உபகரணங்கள் தேவைப்படுகிறது, நம்மிடம் என்ன உள்ளது, அவற்றைப் பெறுவதற்க்கு என்ன செய்ய வேண்டும், அவற்றை எப்படிப் பராமரிக்க வேண்டும், அவற்றை எப்படி வளர்க்க வேண்டும், அவ்வாறு வளர்வதை பிற கயவர்களிடமிருந்து எப்படிக் காக்க வேண்டும் என்பதெல்லாம் அப்படியே பொருந்தும்.

ஒரு நாட்டை நாசமாக்க வேண்டுமென்றால் அங்கு விளையும் விளைச்சலைத் தடுக்க வேண்டும். அப்படித் தடுக்க பல வழிமுறைகள் உள்ளது. அப்படி ஒரு வழிமுறை தான் வளம்மிக்க மண்ணில் கருவேல மரத்தை தூவி காடாக்கி பயிரிடுவது. இந்தக் கருவேல மரம் நிலத்தில் உள்ள சத்துக்களையெல்லாம் உறிஞ்சி களையாக வளர்ந்து பயனில்லா முட்களைத் தந்திடும். கருவேல மரம் பற்றிய என் குமுறலை இங்கே காண்பீர்-

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8859

மீனாகுமார்
25-07-2007, 04:39 PM
உழவு அதிகாரத்தில் மற்ற குறள்களில், சோம்பல் இல்லாமல் நிலத்தை பயிரிட்டு பயன்படுத்த வேண்டும், பயிருக்குத் தேவையான செயல்களை சரியான நேரங்களில் செய்ய வேண்டும் என்று எடுத்துரைக்கிறது குறள்.

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்.

இலமென் றசையி இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.

lolluvathiyar
26-07-2007, 07:34 AM
உழவு தொழிலை பற்றி வள்ளுரும் மிக சிறப்பாக சொல்லி சென்று விட்டார், அதை அழகாக விளக்கி இருகிறீர்கள் மீனா அருமை.
ஆனால் இன்று வள்ளுவருக்கு வெறும் சிலை மட்டும் வைத்து விட்டு,
எங்கோ தொலைவில் இருக்கும் சில் தொழில் நகரங்களை இனைக்க பெரிய சாலைகள் அமைக்க வழியோர கிராமங்களில் எல்லாம் விளை நிலங்களை பிடுங்குகிறார்கள்.
சிறப்பு பொருளாதர மன்டலம் என்ற பெயரில் வருங்காலத்தில் பல்லாயிர ஏக்கர் விளை நிலங்களை கான்கிரீட் காடுகளாக்குவார்கள்.

மீனாகுமார்
03-08-2007, 02:27 PM
உரையாடல்களின் போது முக்கிய பங்கு வகிப்பது குறிப்பு. ஒருவர் சொல்ல வரும் விசயத்தை அவர் வாய் கூறுவதற்க்கு முன்னரே அவர் கண்களும் பிற அங்கங்களும் கூறி விடும். அந்த குறிப்புகளைக் கவனித்து அறிதலே குறிப்பறிதல் எனப்படும்.

கண். உடலில் மிக முக்கிய உறுப்பு. கண்களினால் செய்தி பரிமாற்றம், மிக வேகமாகவும் மிகத் துல்லியமாகவும் நடக்கிறது என்றால் அது மிகையாகாது. கண்களுக்கு அவ்வளவு சக்தி உள்ளது. கண்களின் சக்தியைப் பற்றி காதலர்களிடம் கேளுங்கள். அநேகமாக எல்லா காதலர்களுக்கும் முதலில் காதலை அவர்களுக்குள் அறிவித்திருப்பது அவர்கள் கண்களாகத்தான் இருக்கும். காதலியின் கடைக்கண் பார்வைக்கு ஏங்காத காதலர்கள் உளரோ ? இந்த கண் பரிமாற்றத்தை விளக்க எத்தனை சினிமா பாடல்கள் உள்ளன, எத்தனை கவிதைகள் உள்ளன.

ஒருவரிடம் ஒரு செய்தியைக் கூற வேண்டுமாயின் நாம் அவரின் கண்களைப் பார்த்தே கூறுவோம். நம் உரையாடல் முழுவதும் அவரின் கண்களைப் பார்த்தை நடக்கும். கண்களே உள்ளத்தின் கதவு என்றும் கூறுவர். அதனாலேயே நாம் கூறப் போகும் செய்தியை வாய்க்கு முன் கண்களே கூறிவிடும். அதே போல் ஒருவர் கூறும் போது அவரின் கண்களை நோக்க வேண்டும். அவர் வாய் கூறுவது சரியா என்று அவர் கண்கள் கூறிவிடும். பொய் கூறுபவர்கள் கண்களை நோக்கத் தயங்குவார்கள். அதனால் ஒருவர் உண்மை கூறுகிறாரா இல்லை பொய் கூறுகிறாரா என்ற குறிப்பு அவர் கண்களில் இருக்கும். நாம் அதைப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். கண்களோடு சேர்ந்து அந்த முகமும் உருமாறும்.

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.

உன் உள்ளத்தில் இருக்கும் செய்தியை உன் முகம் அப்படியே தாங்கி நிற்கும்.

மீனாகுமார்
03-08-2007, 02:27 PM
ஒருவரின் உள்ளத்தில் நட்பு இருக்கிறதா இல்லை பகைமை இருக்கிறதா என்பதை அவரின் கண்களே உரைக்கும். அதை உணரத் தெரிந்தவர் அவரின் கண்களைப் பார்த்தே உணர்ந்திடலாம்.

பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்.

மீனாகுமார்
03-08-2007, 02:28 PM
பார்த்து பார்த்து பழகி அனுபவம் பெற்றவர்கள் ஒன்றைப் பார்த்த மாத்திரத்திலேயே அதன் தன்மையைக் கண்டறிந்துவிடுவர். பார்க்க பார்க்கத் தான் தெரியும் இன்னும் நிறைய செய்தி நாம் பார்க்கும் காட்சியில் இருக்கிறதென்று. நாம் பார்க்கும் காட்சியில் தெரியும் குறிப்புகளை உணர்ந்து அது தெரிவிக்கும் செய்தியை மிகத் துல்லியமாக உணர்ந்திடுதல் நலம்.

இத்தகைய தன்மையைக் கொண்டவன் இந்த உலகத்துக்கே அணிகலன் போன்றவன் என்கிறது குறள்-

கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கனி.

அதே போல் கொஞ்சமும் ஐயமில்லாமல் தவறில்லாமல் பிறர் உள்ளத்தில் உள்ளதை உணர்ந்து கொள்ளக்கூடியவன் தெய்வத்திற்க்கு ஒப்பாவான் என்றும் உரைக்கிறது குறள்-

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோடு ஒப்பக் கொளல்.

மீனாகுமார்
03-08-2007, 02:36 PM
அவ்வாறு கண்களாலும் பிற உறுப்புகளாலும் தரும் செய்தியை உணராத நம் கண்கள் முகத்தில் இருந்தாலும் அது இல்லாமைக்குச் சமம்.

குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினும்
என்ன பயத்தவோ கண்.

மீனாகுமார்
03-08-2007, 02:50 PM
நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற.

மிக நுட்பமான அறிவைப் பெற்றிருப்பவர் பிறரை எளிதில் அளந்து விடுவர். அவ்வாறு அவர் பிறரை அளப்பதற்க்குப் பயன்படுத்தும் ஆயுதம் கண். கண்ணைத் தவிர பிறரை எளிதாக ஆழமாக அளப்பதற்க்கு வேறு உறுப்பு இல்லை என்றுரைக்கிறது பொதுமறை.

மீனாகுமார்
07-08-2007, 03:57 PM
திருக்குறள் பொருட்பாலில் சில அதிகாரங்கள் நாம் செய்யப் போகும் செயலின் தன்மையை ஒட்டியே அமைந்துள்ளது. உதாரணத்திற்கு வலியறிதல், காலமறிதல், அவையறிதல், இடன் அறிதல், குறிப்பறிதல், தெரிந்து தெளிதல் என்பவையெல்லாம் சில. இவையாவும் நாம் இனிமேல் செய்யப் போகும் செயலையும் திட்டத்தையும் ஒட்டியே அமைந்திருந்தாலும் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு முக்கிய அங்கத்தை வலியுறுத்துவதாகவே அமைந்துள்ளது. ஆதலால், நாம் பார்க்கும் ஒவ்வொரு உதாரணங்களிலும் செய்யப் போகும் செயல் வந்தாலும் ஒவ்வொரு முறையும் எதில் கவனம் செலுத்துகிறோம் என்பதைக் கூர்ந்து அறிக. இல்லையெனில் ஒரே விசயத்தை கூறுவது போலவே தோன்றும்.

மீனாகுமார்
07-08-2007, 03:58 PM
எந்த ஒரு செயலையும் தகுந்த காலம் கொண்டே செய்ய வேண்டும். பருவத்தே பயிர் செய் என்கிறார் ஔவையார் தம் ஆத்திசூடியில். பயிர்களை அறுவடை செய்யும் காலத்தில் அறுவடை செய்தே ஆக வேண்டும். நீர் பாய்ச்சும் தருணத்தில் நீர் பாய்ச்ச வேண்டும். பருவத்தை விட்டு விட்டால் மொத்தமும் கெட்டுப் போகும்.

75 வயது முதியவர் 22 வயது பெண்ணைத் திருமணம் செய்தால் உலகம் வியப்போடு பார்க்கும். 10 வயது சிறுவனை சிசேரியன் ஆப்பரேசன் செய்ய சொன்னால் அதை உலகம் ஏற்காது. செலவு செய்து விட்ட காலம் வாழ்வில் திரும்பி வராது. சரியான சமயத்தில் சரியான செயல்களைச் செய்திட வேண்டும். அவ்வாறு செய்தால் தான் நம்மிடம் உள்ள செல்வங்கள் நம்மை விட்டு அகலாமல் இருக்கும்.

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை யாக்கும் கயிறு.

ஸ்டாக் சந்தையில் விளையாடியவர்கள் இதை அனுபவபூர்வமாக உணர்ந்திருப்பார்கள். அவர்களை விட சிறந்த அனுபவசாலி இக்குறளுக்கு வேறு ஆதாரமில்லை. நீங்கள் பங்குகள் வைத்திருக்கும் நிறுவனத்தின் பேரில் ஏதேனும் கெட்ட செய்தியோ, அதன் புகழுக்கு களங்கமோ வந்திருந்தால் நீங்கள் உடனடியாக விற்க முயல்வீர்கள். தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் உங்கள் செல்வத்தை பலமடங்கு அழித்து விடும்.

எந்த நிறுவனத்தின் பங்குகளை எந்த சமயத்தில் வாங்க வேண்டும் என்பது மிக முக்கியம். குறைத்த விலையில் வாங்கி நிறைந்த விலையில் விற்று பெருத்த இலாபம் காண்பதே முதலீட்டாளர்களின் குறிக்கோளாக இருக்கும். நாளை நன்றாக வளர்ச்சியடையும் என்று நம்பிக்கையுள்ள பங்குகளில் முதலீடு செய்வீர்கள்.

மீனாகுமார்
07-08-2007, 03:59 PM
உலகத்தையே நீங்கள் வெல்ல நினைத்திருந்தாலும் தகுந்த முயற்சியோடு தகுந்த காலத்தில் நீங்கள் ஈடுபட்டால் அதுவும் ஈடேறும் என்கிறது குறள்.

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்.

எந்தத் துறையிலும் நீங்கள் உலகின் மதிப்பைப் பெற வேண்டுமாயின் தகுந்த முயற்சியை சரியாக காலத்தில் செய்ய வேண்டும்.

இப்போது தான் கணினியிலும் கணினி சார்ந்த அமைப்புகளிலும் ஒவ்வொரு மைக்ரோ செக்கண்டாக வேலை செய்ய ஏவுகிறார்களே.... சில மைக்ரோ செக்கண்டை விட்டாலும் கூட அமைப்பு இயங்காமல் போகலாம். எனவே ஒவ்வொரு மைக்ரோ செகண்டின் மதிப்பையும் மின்னணு பொறியாளர்கள் நன்கு அறிவார்கள்.

மீனாகுமார்
07-08-2007, 04:00 PM
நீங்கள் முயற்சி செய்யும் செயல்களிலோ, திட்டத்திலோ கண்டிப்பாக சோதனைகள் வரும். பெரும்பாலும் அவையெல்லாம் கலைந்து செல்லும் மேகம் போல் மெதுவாக விலகிச் சென்று விடும். அதுவரை மெதுவாக பொறுமையாக கலங்காமல் காத்திருப்பது அவசியம்.

காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்

தம் நோய் குணமாக காத்திருப்பவர்கள் அது முற்றிலும் குணமாகும் வரை பொறுமையாகக் காத்திருக்கத்தான் வேண்டும். கர்ப்பிணிப்பெண் 10 மாதம் காத்திருந்தால் தான் ஆரோக்கியமான குழந்தை மகிழ்ச்சியூட்டும். எனவே வெற்றி பெற வேண்டுமாயின் தகுந்த தருணத்திற்கு காத்திருத்தல் அவசியம்.

மீனாகுமார்
07-08-2007, 04:48 PM
பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

இது நமக்கெல்லாம் தெரிந்த பாடம். தன்னை விட வலிமை பொருந்திய ஆந்தையை காகம் பகலில் வெல்லும். அதே போல் பகைவரின் வலிமையில்லா அம்சங்களை அறிந்து தக்க சமயத்தில் போர் தொடுத்தால் வெற்றி நிச்சயம்.

உருவத்திலும் மக்கள் தொகையிலும் ஒரு சிறு பகுதியே கொண்ட இங்கிலாந்து தகுந்த ஆயுதங்களையும், தமக்குரிய போர் முறைகளையும், பகைவரின் ஒற்றுமையின்மையும் பயன்படுத்தி மாபெரும் இந்தியாவைப் பிடிக்கவில்லையா. இப்பொழுது இதே இங்கிலாந்து இந்தியாவைப் பிடிக்க இயலுமா. காலம் கடந்து விட்டது.

அந்தந்த காலத்தில் தான் சில விசயங்களை செய்ய முடியும். எந்தக்காலத்தையும் வெற்றி கொள்வது மிகக் கடினமே. அவ்வாறு காலத்தை வென்றது இவ்வுலகில் சில அதிசயங்களே. அதில் தமிழ் மொழியும், திருக்குறளும் அடக்கம்.

மீனாகுமார்
07-08-2007, 04:53 PM
அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.

தகுந்த சரியான கருவிகளோடு காலத்தையும் அறிந்து செய்தால் செய்வதற்க்கு அரிய செயல் என்று ஒன்று இருக்கிறதோ ? எனவே செயலுக்குத் தகுந்த காலமும், கருவியும் முக்கியம்.

மீனாகுமார்
08-08-2007, 02:41 PM
குளத்துப் பக்கம் சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றதுண்டா நீங்கள் ? நகரத்தில் வாழ்பவர்களுக்கு இந்த வாய்ப்பு எளிதில் கிடைக்காது. ஆனால் சிலசமயம் உங்கள் நண்பர்களின் திருமணங்களுக்கு கிராமத்துப் பக்கம் செல்லும் போது வாய்ப்பு கிடைக்கும். உங்கள் கவனத்தை குளத்தில் நிற்கும் கொக்குகளிடமும் நாரைகளிடமும் செலுத்தினால் சில பாடங்கள் கிடைக்கும். தண்ணீரின் நீலநிற பின்புறத்தில் வெண்மையாக ஒற்றைக் காலைத் தூக்கிக் கொண்டு கண்களைக் கூர்மையாகத் தன் இரைக்காக அந்த கொக்கு காத்திருக்கும். எவ்வளவு நேரம். சில சமயங்களில் நீண்ட நேரம் கூட காத்திருக்கும். மீனைப் பார்த்து விட்டாலோ சடக் கென்று ஒரே கொத்தில் மீனைப்பிடித்து விடும்.

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.

காத்திருக்க வேண்டிய தருணத்தில் கொக்கைப் போல் பொறுமையாக காத்திருந்து, இரை கிடைத்தவுடன் கொக்கு கொத்துவதைப் போல் உடனடியாக செயல் பட்டு நம் இலக்கை அடைந்திட வேண்டும்.

மீனாகுமார்
08-08-2007, 02:41 PM
-டேய் என்னைய ரொம்ப சீண்டாதடா. நீ என் பொறுமைய ரொம்ப சோதிக்கிற- என்ற வசனத்தை அடிக்கடி கேட்டிருப்போம். இவர்கள் ஊக்கம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். ஆனால் பொறுமையாகவும் இருப்பார்கள். அவர்களின் பொறுமையின் எல்லையைத் தாண்டினால் கோபம் கொண்ட பாம்பைப் போல் சீறுவார்கள். இதற்கு வள்ளுவர் எதை உவமையாகக் கூறுகிறார் என்று பார்ப்போம்.

ஆடு! இரண்டு ஆடுகள் சண்டையிடும் போது பார்த்திருக்கிறீர்களா ? இரண்டு ஆடுகளும் நெற்றியைத் தூக்கிக் கொண்டு கால்களைப் பின்னோக்கி நகரும். மெதுவாக. பொறுமையாக. அதன் பொறுமையும் ஒடுக்கமும் சரியான தருணத்தை எதிர் நோக்கி இருக்கும். கண நேரத்தில் மண்டையை நேருக்கு நேர் முட்டி நச் சென்று மோதும். அவ்வாறு முட்டும் போது தம்மால் முயன்ற மட்டும் தன் வலிமையெல்லாம் ஒன்று திரட்டி முட்டும். அதே போல் தான் காலம் கருதி காத்திருக்க வேண்டும். சரியான காலம் வாய்த்த போது நம் பலத்தை எல்லாம் திரட்டி நம் காரியங்களை நிறைவேற்றிவிட வேண்டும்.

ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேரூந் தகைத்து.

சரியான காரியத்தை செய்வதற்கு எப்போதும் எதற்கும் அஞ்சக்கூடாது. அவ்வாறு சந்தர்ப்பம் வாய்க்கும் போது அரிய செயல்களையும் தம் பலம் கொண்ட மட்டும் செய்திடல் வேண்டும். கீழே உள்ள குறளும் இதையே வலியுறுத்துகிறது.

எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற்கு அரிய செயல்.

மீனாகுமார்
08-08-2007, 04:28 PM
சில நாட்களுக்கு முன்னர் எனக்குள் ஒரு கேள்வி. நம் குழந்தைகளுக்கு ஒரு தந்தையாக, நம்மால் செய்யக்கூடியது எது ? நம் குழந்தைகளுக்கு நாம் எப்போதும் தலைசிறந்தவற்றையே கொடுக்க வேண்டும் என்று தான் எண்ணுவோம். இவ்வாறு எண்ணாத தந்தையும் உண்டோ ?

சரி. வீடு, சொத்து, சுகம் என்று அடுக்கிக்கொண்டே சென்றது மனம். ஆனால் இவையெல்லாம் போதுமா ? பொருட்செல்வம் அழியக்கூடியதே. அப்போது அழியாத செல்வம் ஏது ? இந்நிலையில் திருவள்ளுவர் ஒரு தந்தை மகற்க்கு ஆற்றும் உதவியென எதைக்கூறுகிறார் என்று பார்ப்போம் என்று திருக்குறள் புத்தகத்தைப் புரட்டினேன். அதிகாரம் 7 மக்கட்பேறு. இதில் பல குறள்கள் பரீட்சயமாக இருந்தன. இன்னும் மனதில் ஆழப் பதிந்திருக்கிறது.

தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

ஒரு தந்தையானவன் தன் மகற்கு செய்யக்கூடிய மிகப் பெரிய நன்றி அவன் இவ்வுலகில் ஒவ்வொரு விசயத்திலும் முதன்மை பெறுவதற்க்குத் தேவையானவற்றை அமைத்துக் கொடுப்பதே என்கிறார் வள்ளுவர் பெருமான்.

ஆகா.. என் மனதில் காட்டாறு போல் ஓடிக்கொண்டிருந்த எண்ணம் இப்போது இந்த ஒரே குறளில் அடங்கிவிட்டது. ஆம். இந்த கடுகுக்குள் ஆற்று வெள்ளம் அடங்கிவிட்டது.

இளசு
14-08-2007, 07:27 PM
அளவுக்கதிகமாய் கணினி பார்ப்பது முதல்
ஆட்டுச்சண்டை, பங்குச்சந்தை வரை
அனுபவப் பாடங்களாய் குறள்கள்..

அதிலும் கடுகில் ஆற்றுவெள்ளம் −− அருமை!
நன்றி மீனாகுமார் அவர்களே!

மீனாகுமார்
15-08-2007, 11:38 AM
மேற்சொன்ன குறளில் -முந்தியிருப்ப- என்ற சொல் மிகவும் ஆழமானது. உதாரணமாக கற்றவர்களின் அவையில் ஒருவர் முந்தியிருக்க வேண்டுமென்றால் எப்படியெல்லாம் இருக்க வேண்டும். எவ்வளவு பங்களித்திருக்க வேண்டும். அது மட்டுமல்ல, ஒழுக்கமும், பிறரை மதித்தலும், சொல் திறனும், செயல் திறனும் என்றெல்லாம் பல துறைகளில் திறனுற்றிருப்பது அவசியம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இவ்வளவையும் கற்றுத்தர வேண்டும். பள்ளிகள் உதவினாலும், அவர்கள் அந்த திறமையைப் பெற்றிருக்கிறார்களா என்று மேற்பார்வை பார்ப்பது அவர்களின் கடமை. ஒழுக்கமும் கீழ்ப்படிதலும் தான் எந்த குழந்தையும் முதலில் கற்றுக்கொள்ள வேண்டியது. இந்த நல்ல பண்புகளையெல்லாம் கற்று அதனைத் தம்மிடமிருந்து காலத்தில் நீங்காவண்ணம் வைத்திருத்தல் அவசியம்.

சரி, நாம் ஓரளவு பகுத்தறியும் தன்மை பெற்றபின் நாம் நம் தந்தைக்கு என்ன செய்திருந்திருக்க வேண்டும் என்று எண்ணியிருப்போம். ஒரு மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி என்ன என்று வள்ளுவர் என்ன கூறுகிறார் ?

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனுஞ் சொல்.

-ஆஹா.. இவனல்லவா பிள்ளை. இவனைப் பெறுவதற்கு இவன் தந்தை என்ன தவம் செய்தாரோ- என்ற புகழ்ச்சி வருமாறு செய்தல் வேண்டும். ஒரு விளையாட்டுக்கு உங்கள் நண்பர் ஒருவரை அழைத்து உங்கள் தந்தையின் முன்னர் நீங்கள் செய்ய ஏதாவது ஒரு வெற்றியைப் புகழச்செய்து அப்படியே -இவ்வளவு திறமையுள்ள பிள்ளையைப் பெறுவதற்கு நீங்கள் என்ன தவம் செய்தீர்களோ- என்றும் சொல்லல் சொல்லிப் பாருங்கள். உங்கள் தந்தையின் மனம் பூரிப்படையும்.
அது நீங்கள் உங்கள் தந்தைக்கு கொடுக்கும் பரிசு. நீங்கள் உண்மையிலேயே அவ்வாறு புகழ் பெற்றிருந்தால் உங்கள் கடமையை நீங்கள் செய்து விட்டீர்கள் என்று அர்த்தம்.

மீனாகுமார்
15-08-2007, 11:39 AM
நமக்கு மிகவும் பரீட்சயமான குறள். நம்ம ஊர் டவுன்பஸ்ஸில் ஒட்டுனரின் இருக்கைக்கருகில் எழுதப்பட்டிருக்கும் பல குறள்களில் இதுவும் ஒன்று.

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக் கேட்டதாய்.

இந்த இன்பத்தை விட சிறந்த இன்பம் நம் பெற்றோருக்கு கொடுக்கக்கூடியது எதுவுமில்லை. பல முறைகள் உங்கள் பெற்றோர்களை நீங்கள் மகிழ்வித்திருந்தாலும் இன்று மீண்டும் ஒரு முறை அவர்களுக்கு உங்களை கஷ்டப்பட்டு வளர்த்து வழிகாட்டியதற்கு நன்றி கூறிடுங்கள்.

என்னைப் போல் தந்தை உங்களுக்கு இல்லையென்றால் அந்த பொறுப்பிலிருந்து உங்களை கவனித்துக் கொண்டவருக்கு நன்றி தெரிவித்திடுங்கள். தந்தை இல்லாத பட்சத்தில் அந்த பொறுப்பைத் தாய் செய்திருப்பாள். இதே தான் தாய்க்கும் பொருந்தும். இருவருமே இல்லையென்றால் உங்களுக்கு வழிகாட்டியவர்களை உங்களுக்குத் தெரியும். அவரிடம் நன்றி பாராட்டுங்கள்.

மீனாகுமார்
15-08-2007, 12:06 PM
தம்முடைய மக்களின் அறிவானது தமக்கு மட்டுமல்லாது மண்ணில் வாழும் பிற உயிர்க்கும் நன்மை தரும் என்கிறார் வள்ளுவர். எவ்வளவு உண்மை ? தன் மகன் ஒரு வைத்தியராக பட்டம் பெற்றிருப்பின் தமக்கு நோய் வந்த காலத்தில் கவனித்துக் கொள்ளுதல் அல்லாது பிறரையும் அவரது நோய் காலத்தில் கவனிப்பது இந்த மண்ணுயிர்களுக்கெல்லாம் நன்மை.

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

தம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்த கல்வி பிறருக்கும் பயன்படும்.

மீனாகுமார்
15-08-2007, 12:06 PM
குழந்தைகளைக் கொஞ்சியிருப்பீர்கள். உங்களுக்கு எவ்வளவு இன்பம் அது தந்திருக்கும். உங்கள் கோபங்கள் எவ்வளவு வந்தாலும் அதை நொடிப்பொழுதில் நீக்கிடுவர் குழந்தைகள். இவ்வளவு ஏன். நரசிம்ம அவதாரம் எடுத்த ஆண்டவனே தம் உச்சமிகுந்த கோபத்தை பிரகலாதனைப் பார்த்துத்தான் தணிவித்தார் என்பது புராணம். குழந்தைகளின் பாதங்களை வருடுவது இன்பம். அவர்களுக்கு முத்தம் கொடுப்பது இன்பம். பதிலுக்கு அவர்கள் முத்தம் கொடுப்பது பேரின்பம். இந்த இன்பம் நம் நரம்பு மண்டலத்தில் ஊர்ந்து சென்று நம்மை மகிழ்விக்கும், நன்மை விளைவிக்கும். அவர்களின் அமுத மொழி நம் செவிக்கு இன்பம்.

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

குழந்தைகளின் சொற்களின் இனிமையை சுட்டிக்காட்டும் இன்னொரு குறள். மிகவும் பரீட்சயமானது -

குழல்இனிது யாழ்இனிது என்பர்தம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

தமிழ் பெரும் இன்பம். மழலைச் சொல் பெரும் இன்பம். இந்த இரு இன்பமும் சேர்ந்தால்.. அதை அனுபவித்தால் தான்
உணர முடியும்.

மீனாகுமார்
15-08-2007, 04:11 PM
குழந்தைகளின் கையால் கிடைக்கும் உணவு கூழே ஆயினும் அது பெற்றவர்க்கு
அமுதாகும்.

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.

மீனாகுமார்
15-08-2007, 04:12 PM
திருமணமானபின் சில ஆண்டுகள் பிள்ளைப் பேற்றைத் தள்ளிப்போடுவது இப்போது பழக்கமாகிவிட்டது. அதற்குப் பின்னர் குழந்தைக்கு முயற்சி செய்து உடனே பெற்று விட்டால், குழந்தையை தள்ளிப்போடலாம், தவறில்லை என்பர். அவரே சில ஆண்டுகளாகியும் பிள்ளைப் பேறு கிடைக்கவில்லையென்றால், தாம் தள்ளிப்போட்டது தவறோ என்னும் குற்ற உணர்ச்சி கவ்விக் கொண்டு தவிப்பர். பிறகு வேண்டாத தெய்வமிருக்காது. பார்க்காத மருத்துவமனையிருக்காது. சுற்றாத கோவில் இருக்காது. இருக்காத விரதம் இருக்காது. பிள்ளைக்காக தவமிருப்பர். நீண்டநாளாகியும் அப்பேறு கிட்டவில்லையாயின் பழிச்சொற்கள், நிம்மதியின்மை என்று பிரச்சனை வேறு திசையில் செல்ல ஆரம்பிக்கும். அவர்களிடம் சென்று பிள்ளைச் செல்வத்தின் மகிமையை கேளுங்கள். அவர்கள் கூறுவார்கள் -எக்காரணம் கொண்டும் பிள்ளைப் பேற்றைத் தள்ளிப் போடாதீர்கள்- என்று.

நல்ல அறிவு மிகுந்த பிள்ளைகளை பெறும் பேற்றை விட சிறந்த பேறு வேறு இல்லை. அதுபோல் தம்முடைய பொருள் என்பது அவர்தம் மக்களே. அது அவரவர் செய்த வினைப்பயனால் வரும் என்கிறது குறள்.

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.

தம்பொருள் என்ப தம்மக்கள் அவர்பொருள்
தத்தம் வினையான் வரும்.

மீனாகுமார்
15-08-2007, 04:12 PM
நல்ல பண்புடைய மக்களைப் பெற்றிருந்தால் ஏழு பிறப்புக்கும் தீயவைகள் தீண்டாமலிருக்கும். சிலர் கூறுவர் - எங்கள் இரண்டாவது தாத்தன் ஒழுங்கா இருந்திருந்தான்னா நாங்க இன்னைக்கு இந்த நிலைமைக்கு வந்திருக்க மாட்டோம்- என்று. ஒருவர் தாம் செய்யும் நன்றும் தீதும் அவரையும் அவரின் சந்ததிகளையும் பின்தொடரும்.

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.

மீனாகுமார்
15-08-2007, 04:13 PM
உயிரை விட மேலானது ஒழுக்கம். பல வருடங்கள் ஒழுக்கமாயிருந்தவரும் சில சமயங்களில் தவறிவிடுகின்றனர். ஒழுக்கமாயிருப்பவருக்கு அவ்வப்போது சவால்கள் வருவது இயற்கை. ஆனால் அப்போது திடமாக ஒழுக்கத்தை கடைப்பிடிப்பாரேயானால் யாவர்க்கும் நன்று. ஒழுக்கம் ஒருவர்க்கு சிறப்பும் நன்மையும் தருமாதலால், அது உயிரைவிடச் சிறந்தது. இக்குறள் மனதினுள் எப்போதும் ஒலித்துக் கொண்டேயிருக்க வேண்டிய குறள்.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஒம்பப் படும்.

வருந்தியேனும் ஒழுக்கத்தைக் காத்திட வேண்டும். ஒழுக்கமே உயிருக்கு எப்போதும் துணையாகும்.

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.

மீனாகுமார்
20-08-2007, 12:44 PM
ஒழுக்கத்தினால் என்ன நன்மை, என்ன தீமை என்று பார்ப்போமேயானால், ஒழுக்கத்தைப் பின்பற்றினால் எப்போதும் மேன்மையே அடைவோம். ஒழுக்கம் தவறினால் தீராத பழி நம்மிடம் வந்து சேரும். இதிலிருந்து தப்பித்தார் இல்லை. எனவே ஒழுக்கத்தைக் கடைபிடிப்பது மிக முக்கியம்.

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.

அதே போல் ஒழுக்கம் இனிமையான நல்ல வாழ்க்கைக்கு வித்திடும். தீய ஒழுக்கம் எப்போதும் துன்பத்தையே தரும்.

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.

மீனாகுமார்
20-08-2007, 12:45 PM
ஒழுக்கம் தவறுதலால் எப்போதும் தீமையே வரும் என்பதையறிந்த மனவலிமையுடையவர் அந்த ஒழுக்கத்திலிருந்து எப்போதும் தவற மாட்டார்.

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் பாடுபாக் கறிந்து.

அதே போல், ஒழுக்கமுடையவர் தவறிககூட தீய சொற்களைக் கூற மாட்டார்.

ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.

lolluvathiyar
20-08-2007, 03:04 PM
நிரைய வேலை இருக்கும் போது நேரம் கிடைக்கும் போது ஆக்கபூர்வமாக அருமையான படைப்பாக இதை தொரர்ந்து எழுதி வருகிறீர்கள். மிக்க நன்றி மீனா குமார்.
இதை பத்திரமாக எடுத்து வைத்திருகிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அடிகடி படித்து கொண்டிருகிறேன்
நன்றி

மீனாகுமார்
20-08-2007, 04:22 PM
அடுத்து தெரிந்து தெளிதல் என்ற 51வது அதிகாரத்தைக் காண்போம்.

நம்பிக்கையின் அடிப்படையில் தான் இவ்வுலகமே இயங்குகிறது. உங்கள் வாழ்விலோ அல்லது அலுவலகத்திலோ புதியதாக வரும் ஒருவரை எப்படி நம்புவது ? அறம் பொருள், இன்பம், உயிருக்கு அச்சம் இந்த நான்கையும் நன்கு ஆராய்ந்த பின்னரே ஒருவரை நம்ப வேண்டும்.

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.

ஒருவரைப் பற்றி நன்றாக அறிய வேண்டுமென்றால் முதலில் அவருடைய அடிப்படைக்குணங்களை அறிதல் வேண்டும். மேலும் அவருடைய குற்றங்கள் எவை என்று அறிதல் வேண்டும். இந்த அறிதலை அடிப்படையாகக் கொண்டே இன்றைய நேர்முகத்தேர்வுகள், மற்றும் பிற எழுத்து தேர்வுகள் இயங்குகின்றன. நேர்முகத்தேர்வில் ஆய்வாளர் கேட்பார்- உங்களுடைய சிறந்த வலிமைகள் எவை எவை... முன்னேற வேண்டியவைகள் எவை என்று (strong and weak points). உங்களைப் பற்றி அறிந்து ஆழம் பார்ப்பதற்கேற்ற கேள்விகளை முன்நிற்கும். இந்த நல்ல குணத்தையும் குற்றங்களையும் ஆராய்ந்து அவற்றுள் எது மிக்கது என்று தெரிந்து அதற்கேற்றார் போல் அவரைக் கொள்ளுதல் வேண்டும்.

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.

மீனாகுமார்
20-08-2007, 04:22 PM
உங்கள் கருமமாகிய செயல்களே உங்களின் பெருமைக்கும் சிறுமைக்கும் காரணமாகையால்... பெருமை தரும் செயல்களையே செய்வீர்.

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்

மீனாகுமார்
20-08-2007, 04:22 PM
எதிலுமே பற்றில்லாதவர் எப்படி இருப்பார் ? அவர் எதையுமே மதிக்க மாட்டார். அஞ்சுவதற்கு அஞ்ச மாட்டார். பழிச்சொல்லுக்கும் அஞ்ச மாட்டார். அப்படி பழிச்சொல்லுக்கு அஞ்சாதவரை நம்பக்கூடாது.

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.

மீனாகுமார்
20-08-2007, 04:25 PM
நிரைய வேலை இருக்கும் போது நேரம் கிடைக்கும் போது ஆக்கபூர்வமாக அருமையான படைப்பாக இதை தொரர்ந்து எழுதி வருகிறீர்கள். மிக்க நன்றி மீனா குமார்.
இதை பத்திரமாக எடுத்து வைத்திருகிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அடிகடி படித்து கொண்டிருகிறேன்
நன்றி

இந்த நீண்ட கட்டுரை 133 குறள்களை ஆய்ந்தபின் முற்றுப் பெற உள்ளது. இதற்கு இன்னும் 4-5 முக்கிய அதிகாரங்களை ஆராய உள்ளேன். உங்கள் ஊக்கத்திற்கு நன்றி.

இளசு
22-08-2007, 07:56 PM
ஒழுக்கத்தின் மேன்மை.. தெரிந்து தெளிந்து மிகைநாடி மிக்க கொளல் என
உங்கள் அருமையான விளக்கங்களால் அதிகம் அறிகிறேன்..

நன்றி மீனாகுமார்..

உங்கள் தொடர் முழுமை அடைய என் வாழ்த்துகள்!

paarthiban
28-08-2007, 12:00 PM
மிக அருமையான கட்டுரை மீனாகுமார் அவர்களே. அய்யனின் திருக்குறளை எத்தனை விதமாய் படித்தாலும் இன்னும் இன்னும் அர்த்தங்கள் வரும். உங்கள் கட்டுரைகளால் அதை உணர்கிறேன் அய்யா. தொடரவும்.மிக்க நன்றி.

மீனாகுமார்
28-08-2007, 01:48 PM
ஒரு செயலுக்கோ அல்லது திட்டத்துக்கோ தேவையான மூலப்பொருட்களைப் பற்றித் தெரியாதவரை அதற்கு பயன்படுத்துவோமேயானால், அவரால் நாம் அனைத்து துன்பங்களையும் பெறுவோம். இதை மிக எளிய உதாரணம் கொண்டு உணரலாம். SAP பற்றி எள்ளளவும் தெரியாத ஒருவர் அது மிகத் தேவையான வேலையில் புகுந்து அத்திட்டங்களை செயல்படுத்த முயல்வாராயின், அவர் தரும் தொல்லைகளை அவருடைய மேலாளர் அறிவார். இல்லை, உங்களுக்குத் தெரிந்தவர் எவராயினும் அவ்வாறு முன் அனுபவமில்லாத துறையில் அனுபவம் இருக்கிறது என்று கூறி வேலையில் சேர்ந்திருந்தால், அவர் பட்ட இன்னல்களை நீங்கள் அறிவீர்கள்.

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமே யெல்லாம் தரும்.

மீனாகுமார்
28-08-2007, 01:48 PM
நீங்கள் காதலிக்காமல் இந்திய முறைப்படி திருமணம் செய்திருப்பீர்களேயானால் கட்டாயம் இந்த சூழலுக்கு வந்திருப்பீர்கள். அதாவது முன்பின் தெரியாத ஒருவரோடு எப்படி வாழ்நாள் முழுதும் குடும்பம் நடத்தப்போகிறோமென்ற கேள்வி உங்கள் முன் அமர்ந்திருக்கும்.

வேலைக்கு ஆள் தெரிவுசெய்பவர்களே ஒரு மணியோ, இல்லை இரு மணியோ, இல்லை ஒரு நாளிலோ நேர்முகத்தேர்வு வைத்து தெரிவு செய்துவிடுகிறார்கள். ஆனால் அவர் அலுவல் சரியில்லையென்றால் எப்போது வேண்டுமாயினும் நீக்கிவிடலாமென்ற தைரியமும் இருக்கும். ஆனால் இது உங்கள் வாழ்க்கையல்லவா.. முக்கியமாக திருமண வாக்கு கொடுக்கப் போகின்றீர்கள் அல்லவா. அதுவும் உங்கள் வாக்கை மீறினால் அது நன்றாக இருக்காது, மேலும் பழியும் வந்து சேரும்.

எனக்கு இதே கேள்வி என் முன் அமர்ந்திருந்த போது நான் சிந்தித்தேன். நமக்கு திருமணத்திற்கு பெண் பார்க்கும் முன்னர் பெண்ணிடம் சில நிமிடங்களோ மணிகளோ தான் பேசுவதற்கு அனுமதிப்பார்கள். அதற்குள் அப்பெண் நம் வாழ்விற்கு ஏற்றவளா என்று எப்படி கண்டுபிடிப்பது என்று. அப்போது நான் திருக்குறளை புரட்டவில்லை. ஆனால், சிந்தித்தேன். வாழ்க்கை மகிழ்வாக இருக்கும் வரை யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது. ஆனால் வாழ்வில் பிரச்சனை என்று வரும் போது அப்பெண் எப்படி நடந்து கொள்வாள் என்பது தான் முக்கிய எதிர்பார்பாக இருந்தது. பிரச்சனை வருங்காலத்தில் நமக்கும் நம் குடும்பத்திற்கும் துணையாக இருப்பாளா ? நம்மை ஆதரிப்பாளா. இல்லை நம்மைத் தூர எரிந்து விட்டு சென்றுவிடுவாளா... இதை எப்படி அறிந்து கொள்வது என்று என் சிந்தனை ஓடியது. அப்போது இந்த யோசனை தோன்றியது. ஒரு பெண் தெய்வத்துக்கு பயப்படுபவளாக இருந்தால் கண்டிப்பாக அவள் பிறரையும் மதித்திடுவாள். தவறுகள் செய்யப் பயப்படுவாள். அவளிடம் கண்டிப்பாக குணங்களின் இலட்சுமி குடியிருப்பாள். இவளை நாம் எளிதே அடையாளம் கண்டு கொள்ளலாம். இந்த பேச்சு வார்த்தையும் கிட்டதிட்ட நேர்முக தேர்வு போல்தான். யதார்த்தமாக பேசி, அப்பெண்ணைப் பற்றி அறிவது திறமையே.

அதே பெண் பயப்பட வேண்டியவைகளுக்கு பயப்படாமல் இருந்தால் பின்னாளில் நமக்கு பிரச்சனை காலத்தில் எப்படி நடந்து கொள்வாள் என்பதை கணிப்பது கடினமே.

குடிபிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பிரியும்
நாணுடையான் கட்டே தெளிவு.

நல்ல குடியிலே தோன்றி, குற்றங்கள் இல்லாமல், பழிச்சொல்லுக்கு அஞ்சுபவரை அடையாளம் கண்டு அவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பது இதன் பொருள்.

நான் திருமணத்தின் போது இக்குறளை அறிந்திருக்காவிடினும், இக்குறளில் கூறப்பட்டது போன்ற முறைகளே எனக்கு உதவியிருந்தது என்று எண்ணும் போது மிகவும் மகிழ்வாயிருந்தது.

மீனாகுமார்
28-08-2007, 01:49 PM
தீர ஆராயாமல் ஒருவரின் மீது நம்பிக்கை கொண்டு அவரைத் துணையாகக் கொண்டால், அவராலும் அவர் வழிமுறையினராலும் தீமையே வரும் என்பதை உணர்த்துகிறது இக்குறள் -

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.

எனவே, தீர ஆராயாமல் யாரையும் துணையாகக் கொள்ளாதே. அதே போல் தீர ஆராய்ந்து ஒருவரை தன் துணையாகக் கொண்டபின் அவரை முழுமையாக நம்ப வேண்டும். அவரின் மீது சந்தேகம் கொள்ளுதல் கூடாது.

தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.

மீனாகுமார்
28-08-2007, 01:51 PM
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பைத் தரும்.

இக்குறளும் அதே கருத்துக்களையே வலியுறுத்துகின்றது.

இன்றைய நவீன தேர்வு முறைகள் இந்த தெரிந்து தெளிதலின் ஓர் அங்கமே.

அக்னி
28-08-2007, 05:18 PM
இயல்பான விளக்கங்கள்... எளிமையாக, ஆனால் ஆழமாக மனதில் பதிகின்றது....
திகட்டாத சுவையில், குறையாத நிறைவில்...
பாராட்டுக்கள் மீனாகுமார்...

puppy
28-08-2007, 05:43 PM
அன்பரே

மிக சிறந்த பணியை செய்து வருகீறீர்க்ள். எனது நன்றியும் பாராட்டுக்களும்

அன்புடன்
பப்பி

ஓவியன்
28-08-2007, 05:47 PM
அன்பரே

மிக சிறந்த பணியை செய்து வருகீறீர்க்ள். எனது நன்றியும் பாராட்டுக்களும்
அன்புடன்
பப்பி

ஆகா!
நான் மன்றம் வந்து இன்று தான் உங்கள் பதிவை பதித்த உடன் இன்று தான் பார்கின்றேன் பப்பி அவர்களே!

உங்கள் மீள் வருகை மன்றத்தின் எழுச்சிக்கு இன்னும் இன்னும் உந்துதலாக அமையட்டும்!.

aren
29-08-2007, 01:51 AM
ஆகா!
நான் மன்றம் வந்து இன்று தான் உங்கள் பதிவை பதித்த உடன் இன்று தான் பார்கின்றேன் பப்பி அவர்களே!

உங்கள் மீள் வருகை மன்றத்தின் எழுச்சிக்கு இன்னும் இன்னும் உந்துதலாக அமையட்டும்!.

நீங்கள் சொல்வது உண்மைதான் ஓவியன் அவர்களே. பப்பி அவர்கள் இங்கே வந்துவிட்டால் இனிமேல் நம் மன்ற மக்களுக்கு கொண்டாட்டம்தான்.

இளசு
29-08-2007, 06:54 AM
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பைத் தரும்.

இக்குறளும் அதே கருத்துக்களையே வலியுறுத்துகின்றது.

இன்றைய நவீன தேர்வு முறைகள் இந்த தெரிந்து தெளிதலின் ஓர் அங்கமே.

அருமை மீனாகுமார் அவர்களே!

குறிப்பாய் வினாவும் கொடுத்து, ஒன்றுக்கு மேற்பட்ட விடைகளில் இருந்து
சரியானதைத் தேர்வு செய்யும் முறையில் −

இதுதான் சரி என்ற உறுதியும்
மற்றவை ஏன் தவறு என்ற தெளிவும் வேண்டும்!


உங்கள் இல்லத்துணைவி தேடும் படலத்திலும்
குறள் பின்புலத்தில் நின்று உதவியது அருமை!

வாழ்வின் எந்தச்சூழலுக்கும் ஒரு குறள் பின்னணியில் பொருந்துவது
உண்மையே..


அரிய தொடருக்கு என் பாராட்டுகள்!

மீனாகுமார்
29-08-2007, 03:16 PM
இந்தியர்கள் கடுமையான உழைப்பாளிகள். அவர்கள் மிகவும் பலவித முயற்சி மேற்கொள்பவர்கள் என்று ஒரு வயதில் பெரிய மூத்த வெள்ளைக்காரர் ஒருவர் என்னிடம் கூறினார். நம்மிடமுள்ள ஒரு நல்லதொரு பண்பை அவர் கூர்ந்து கவனித்திருக்கிறார்.

ஒரு இந்தியர், சாலையில் இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறார். திடீரென்று ஒரு மரம் நடு சாலையில் விழுந்து சாலையை முழுவதுமாக மறைத்து விடுகிறது. ஒரு ஓரத்தில் இரண்டு சிறிய மரங்களுக்கிடையில் சில தடுப்புகள் இருக்கின்றன. அவைகளைக் களைந்தால் சிறிய வாகனங்கள் சென்று விடும். இந்த இந்தியர் உடனே இறங்கி அந்த தடுப்புகளை அகற்றி வாகனத்தை கிளப்பிக் கொண்டு சென்று விடுவார். அவருக்கு பின்னால் வருபவரும் அதையே பயன்படுத்தி சென்றுவிடுவார். சிறிய இடைவெளி கிடைத்தாலும் நாம் அதை சரியாக பயன்படுத்திக்கொள்வோம். ரயில்வே கேட் போட்டிருந்தாலும் நம் மக்கள் சைக்கிளைத் தூக்கிக் கொண்டு கிளம்பி விடுவார்கள். இதே மரம் வேறு வளர்ந்த நாடுகளின் சாலைகளில் விழுந்திருப்பின், யாரும் இறங்கி வந்து அதை அகற்றி செல்ல மாட்டார்கள். ஆனால், 911, 999 போன்ற எண்களை சுழற்றி காவல்காரர்கள் வந்து அப்புறப்படுத்தியபின்தான் செல்வார்கள். அதுவரை பொறுமையாக தத்தம் வாகனத்தில் அமர்ந்திருப்பர்.

இன்றைய இந்தியர்களின் வெற்றிக்கு ஆங்கிலம் தெரிந்து கல்வி கற்றலும் மட்டுமே காரணமில்லை. அதோடு கூடிய நம் கடுமையாக உழைக்கும் பண்பும், முயற்சியுடைமையுமே ஆகும்.

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.

முயற்சி செய்யவில்லையென்றால் இல்லாமை செயலாமை என எல்லா ஆமைகளும் புகுந்து விடும்.

மீனாகுமார்
29-08-2007, 03:17 PM
உழைத்து சாப்பிட்ட உணவே உடலில் சேரும். பிறரை ஏமாற்றி சேர்த்த பொருள் நம்மிடம் இருந்தாலும் தக்க சமயத்தில் உதவாமல் போகும் என்று கூறுவர். எது எப்படியோ... தெய்வம் உங்களுக்கு அருள் கொடுக்கவில்லையென்றாலும், நீங்கள் முயற்சி செய்து உழைத்த உழைப்பு உங்களுக்கு தக்க கூலி தரும் என்கிறது குறள்.

தெய்வத்தா னாகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

சோம்பல் இல்லாதவன் வீட்டில் தாமரையில் வாழும் திருமகள் சென்று வாழ்வாள். சோம்பலுடையவன் வீட்டில் மூதேவி வாழ்வாள்.

மடியுளான் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள்.

மீனாகுமார்
29-08-2007, 03:18 PM
எந்த ஒரு செயலையும் திரும்ப திரும்ப செய்யும் போது தளர்ச்சியும் சோர்வும் ஏற்படும். இவையிரண்டையும் வலிமையான மனதினால் ஆன இடைவிடாது முயற்சி மேற்கொண்டு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடித்தல் வேண்டும். இதற்கு பிறவற்றின் துணையையும் அணுகலாம். உதாரணமாக, சோர்வு தெரியாமலிருக்க நம் முன்னோர்கள் பாட்டு பாடுவார்கள். களத்திலும் மேட்டிலும் வேலை செய்யும் போது பாடுவதற்கென்றே பல பாடல்களையும் உருவாக்கினார்கள். நாற்று நடும் போது ஒரு பாடல். அறுவடை செய்யும் போது ஒரு பாடல் என்று....

அருமை யுடைத்தன்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.

இதற்கு எதிர்மறையாக முயற்சியில்லாமல் ஒரு செயலைச் செய்யாமல் விட்டவரை இந்த உலகம் கைவிட்டு விடும்.

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.

மீனாகுமார்
29-08-2007, 03:18 PM
விடாமுயற்சி செய்து ஒரு செயலை செய்து முடித்து விட வேண்டும் என்ற ஊக்கம் ஒருவனிடம் இல்லையென்றால் அது கோழைத்தனம் கொண்ட பேடியின் கையில் இருக்கும் ஆண்மையில்லாத வாள் போன்றதாகும் என்கிறார் வள்ளுவர்.

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.

மேலும், விடாமுயற்சியுடையவரிடத்து பிறருக்கு உதவி செய்தல் என்ற பெருமை தரக்கூடிய பண்பு குடி கொண்டிருக்குமாம்.

தாளாண்மை யென்னுந் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை யென்னுஞ் செருக்கு.

மீனாகுமார்
29-08-2007, 03:19 PM
கிராமங்களில் சிலர் எந்த வேலை கொடுத்தாலும் தயங்காமல் செய்து தருவார்கள். இவர்களிடம் பலர் பல்வேறு வேலைகளைச் சொல்லுவர். இவர்களுடைய சலிப்பில்லாமல் வேலை செய்யும் தன்மையால் இவர்கள் இவரைச் சுற்றியுள்ள அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொண்டு விடுவர். இது போல், விடாமுயற்சியுடன் தன் அலுவல்களை மட்டுமின்றி தம் சுற்றத்தாரின் அலுவல்களையும் செய்பவன் அவர்களின் தூணாவான்.

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றுந் தூண்.

முயற்சி இல்லாதவன் எல்லா விதியையும் நோவான். நல்ல விதி இல்லாமல் இருப்பது ஒருவருக்கு பழியன்று. ஆனால் அறிய வேண்டியதை அறிந்து முயற்சியில்லாமல் இருப்பது நீங்காத பழியைத் தரும்.

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.

மீனாகுமார்
29-08-2007, 03:19 PM
வெல்லவே முடியாது என்று கருதப்படும் ஊழையும் தம் பக்கம் காண்பர், விடாமுயற்சியுடையவர்.

ஊழையும் உப்பாக்கம் காண்பர் உலைவின்றித்
தாளா துஞற்று பவர்.

மனோஜ்
29-08-2007, 03:23 PM
அனைத்து குறள்களின் விளக்கம் தறகால ஏற்படி அமைந்துள்ளது அருமை நன்றி மீனாகுமார் அவர்களே

மீனாகுமார்
10-09-2007, 08:35 AM
அடுத்து ஒரு செயலை எவ்வாறெல்லாம் ஆராய்ந்து சிறப்பாக செய்ய வேண்டும் என்பதை வினைசெயல்வகை அதிகாரத்தில் காண்போம்.

ஒரு திட்டத்தை நீங்கள் செயல்படுத்த வேண்டுமென்றால், என்னவெல்லாம் தேவை -

1. பொருள்
பணம். மற்றும் இதர பொருட்கள்.
2. கருவி
சரியான கருவிகள்.
3. காலம்
எந்த மாதம், நாட்கள், மற்றும் எவ்வளவு நாட்கள். கால அட்டவணையோடு.
4. வினை
என்ன செய்ய வேண்டும், அதை எப்படிச் செய்ய வேண்டும் என்ற அறிவு.
5. இடம்
எங்கெங்கு எதை எதை செய்ய வேண்டும் என்ற திட்டம்.

உதாரணத்திற்கு, நீங்கள் வீடு கட்டுவதாக வைத்துக் கொள்வோம். அதற்கு தேவையான பணத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். பின்னர், இடம். எங்கு வீடு கட்டுவது என்று. அதற்குரிய நிலத்தை வாங்க வேண்டும். கட்டுமான பணிக்கு தேவையான பொருட்களை முடிவு செய்ய வேண்டும். எந்த பொறியாளர் தலைமையில் எந்த குழு இதை செய்யும் என்பதையும் ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும். மேலும், வீட்டு திட்டம் வரைய வேண்டும். அரசாங்கத்தில் உரிய அனுமதி பெற வேண்டும். வீடு கட்டுவது என்பது வாழ்வில் ஒரு முறையோ இல்லை சில முறையோ மட்டுமே வாய்க்கும் அரிய சந்தர்ப்பமாகும். இதைப் பற்றி மட்டுமே ஒரு முழு புத்தகமே எழுதலாம். எனினும், இந்த உதாரணம், ஒரு செயலைச் செய்யத் தேவையானவைகளை அற்புதமாக நம் கண்முன் நிறுத்தும்.

பொருள்கருவி காலம் வினைஇடனோடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.

மீனாகுமார்
10-09-2007, 08:36 AM
அடுத்து என் மனதில் நிற்கும் சில குறள்களைக் காண்போம்.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

பொறாமை, ஆசை, சினம், தீமைதரும் கடுஞ்சொல் இந்த நான்கையும் நீக்கி இடைவிடாமல் நிற்பதே அறமாகும்.

அறத்தை ஏன் கடைப்பிடிக்க வேண்டும் ? அறத்தை கடைப்பிடிப்பதே சான்றோர்களின் செயலாகும்.

அறத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் நம் வாழ்வும் நம்மைச் சுற்றியிருப்பவர் வாழ்வும் சிறப்பாக இருக்குமென்று வள்ளுவர் கூறுகிறார். ஆகவே தான் அறத்தைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
அறம் என்பது நேரடியாக ஒரே பொருளைக்குறிப்பதாக இல்லை. அறம் என்பது பலவற்றைக் குறிக்கும் சொல்லாகும். அறன் என்பது பற்றி பல குறள்களில் குறிப்புகளைக் காணலாம்.

மீனாகுமார்
10-09-2007, 08:37 AM
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று.

அறன் என்பது இல்லற வாழ்கையேயாகும். அதிலும் பிறர் பழிச்சொல் கூறாதிருப்பின் மிகவும் நன்மையைத்
தரும். ஆகவே இல்லற வாழ்க்கையை நல்லபடியாக நடத்திச் செல்ல வேண்டும். அதுவே சிறந்தது.

நல்ல அருமையான பழங்கள் ஓர் தட்டில் இருக்கும் போது யாராயினும் கடினப்பட்டு காய்களை எடுத்து
உண்பார்களா ? அதே போல் தான், நல்ல இனிமையான சொற்கள் இருக்கும் போது, கடுஞ்சொற்களைப்
பயன்படுத்துவதுமாகும்.

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

பிறருக்கு இம்சை தராத சொற்களைப் பயன்படுத்துபவரை யாவரும் விரும்புவர். எவரையும் நாம் தீண்டும் போது அவருக்கும் நமக்கும் இடையே ஒரு சிறு திரைச்சுவர் உருவாகும். நல்ல சொல் திறமையுடையவர் இது போன்ற கடுமையான சொற்களைப் பயன்படுத்தி யாரையும் புண்படுத்தமாட்டார். இத்தகைய குணத்தைக் கொண்டவருக்கு நன்மை அடுத்த பிறவியிலும் வந்து சேரும் என்கிறது குறள்.

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பந் தரும்.

உறவினராயிருப்பினும், நண்பராயிருப்பினும் ஒருவருக்கு தகுந்த நேரத்தில் தக்க உதவி செய்தால் அது உலகத்தை விட மிகப் பெரியதாகும்.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

இந்த உதவி செய்தவரைக் காட்டிலும் உதவி பெற்றவருக்குத் தான் இதன் மகிமை விளங்கும்.

மீனாகுமார்
10-09-2007, 08:38 AM
மனிதன் நிலத்தை என்னவெல்லாம் செய்கிறான். தோண்டுகிறான், துளையிடுகிறான், உருக்குலைக்கிறான்... ஆனால் அந்த நிலம் இவனை ஏதாவது திருப்பிச் செய்ததா ? அவன் செயல்கள் யாவையும் நிலமானது பொறுத்துக் கொள்கிறது. இத்தகைய குணத்தைப் போன்று தம்மை இகழ்பவரையும் பொறுத்துக் கொள்வது ஒருவருடைய மிகச் சிறந்த பண்பாகும்.

அகல்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகல்வார்ப் பொறுத்தல் தலை.

பிறர் செய்யும் தீங்கை நாம் மன்னித்து விடுதல் வேண்டும். செருக்கினால் தீமைகளை ஒருவர் செய்யும் போது அதை நம் பொறுமையினால் வெல்ல வேண்டும். இதே கருத்தை பல குறள்களில் வலியுறுத்துகிறது குறள்.

இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.

விருந்தினரைப் போற்றாமல் இருப்பது வறுமையுள் வறுமையாகும். அதே போல் அறிவில்லாதவர் செய்யும் செயல்களைப் பொறுத்திருப்பது வன்மையுள் வன்மையாகும்.

எப்போதாவது அல்லது எந்த சூழ்நிலையிலாவது பிறருக்குத் தீமை செய்யாலாமா ? மறந்தும் கூட கூடவே கூடாது என்கிறார் வள்ளுவர். அவ்வாறு செய்தால் அத்தீமையை எண்ணியவருக்கே தீமை வந்து செய்யுமாறு செய்யும் அறம்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.

மீனாகுமார்
10-09-2007, 08:39 AM
இன்னும் என் மனதைக் கவர்ந்த பல குறள்கள் உள்ளன. ஆனால், அவையெலாம் எழுதுவதற்கு இன்னும் பல காலமாகலாம். இருப்பினும் நான் சொல்ல வந்த கருத்தை தெளிவாக எடுத்துரைத்த திருப்தி இருக்கிறது. இதன் முடிவுரையாக, திருக்குறளை இன்று எப்படிப் பயன்படுத்துவது என்பதைக் கொடுக்கிறேன்.

முடிவுரை:

இன்று திருக்குறளைப் பயன்படுத்துவது எப்படி -

காலத்தை வென்ற குறள் ஒவ்வொரு காலத்திலும் அதன் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பொருளைத் தந்து மனிதருக்கு உதவியாயிருப்பது யாவருமறிந்த ஒன்று. இக் குறள் தற்போதைய காலத்திற்கு பொருந்தும் வகையில் பலர் பல வகைகளில் திருக்குறளைக் காண்கிறார்கள். சிலர் ஒரு திருக்குறளை எடுத்துக் கொண்டு பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். ஒரு சில குறள்களின் முழு ஆழத்தினை இன்னும் உணரமுடியவில்லை என்பது ஒரே குறளுக்கு பலர் பலப்பல புது அர்த்தங்கள் கொடுப்பதிலிருந்து தெரிகிறது.

அறிவுரை கேட்பது கடினமானது தான். வாழ்க்கை ஆனந்தமாக செல்லும் போது அறிவுரைகள் தேவைப்படாது. அதே வாழ்க்கையில் புயல் அடித்து தவிக்கும் போது ஆதரவு தோள்களும் அறிவுரைகளும் தேவைப்படும். இதே அறிவுரைகளை முதலிலேயே அறிந்து வாழ்வில் கடைப்பிடித்தால், பின்னால் வரப்போகும் துன்பங்களில் இருந்து தப்பிக்கவும் அதைக் கையாளவும் உறுதுணையாக இருக்கும். அப்போது வாழ்வு தொடர்ந்து இனிக்கும்.

திருக்குறள் உலகப்புகழ் பெற்றது என்பதை யாவருமறிவர். இதனாலேயே இப்போது திருவள்ளுவர் தம் இனத்தவர், தம் மதத்தவர், தம் சாதிக்காரர் என்று பலர் கூறிக் கிளம்பியிருக்கிறார்கள். இவர்கள் வள்ளுவர் கூறியிருக்கும் திருக்குறளிலேயே உதாரணத்தையும் எடுத்துக் கூறுகிறார்கள். இன்னும் சிலர் திருவள்ளுவர் ஒருவரே அல்லர். அவர் பல முனிவர்கள் கூறியதை வெறுமனே தொகுத்தவர் என்றும் புதுப்புது கதைகள் விடுகின்றனர். இது சான்றோர்களுக்கு உகந்த செயல் அல்ல. திருவள்ளுவர் எவராயிருந்தாலும் அவர் கூறிய கருத்துக்களை எடுத்து அவற்றை தம் வாழ்வில் கடைப்பிடித்து வருவதுதான் தகுந்த செயலாகும்.

திருக்குறள் நமது பொக்கிஷம். திருக்குறளை நன்றாக ஆராய்ந்து ஒவ்வொரு துறைக்கும் எப்படி இது பொருந்தும் என்பதையும் நல்ல நூற்களாக உருவாக்கி, அதன் பெயரில் நல்ல பாடத்திட்டங்களும்(Courses) உருவாக்கி சான்றிதழ்களும்(Certification, Just like Project Management Courses in the west) வழங்கிட வேண்டும். இந்த சான்றிதழ்கள் வேலை பார்க்கும் இடங்களில் பெருமை மிக்கதாக கருதப்பட வேண்டும்.

சிவகாசியில் இருக்கும் நீங்கள் சென்னைக்கு செல்வது எப்படி என்று என்னைக் கேட்பீர்களேயானால், என்னால் வரைபடம் கொடுத்தும், செல்வதற்கான வழிமுறைகள் கொடுத்தும் உதவமுடியும். ஆனால், நீங்கள் தான் அதைப் பயன்படுத்தி தலைநகர் சென்னைக்கு செல்ல வேண்டும். அதே போல் தான், நான் திருக்குறளில் இருந்து பத்து சதவிகித குறட்களை எடுத்து எப்படி நமது வாழ்வில் பயன்படுத்தலாம் என்பதை இங்கே அனுபவ குறளாக கொடுத்திருக்கிறேன். திருக்குறள் கடலில் சில மீன்களை உங்களுக்கு பிடித்து கொடுத்து அதை மேலும் எப்படி பிடிக்க வேண்டும் என்பதையும் கூறிவிட்டேன். நீங்கள் திருக்குறளை பயன்படுத்தி உங்கள் வாழ்வில் வெற்றியும் இன்பமும் காண எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

முற்றும்.

நன்றி,
ஆக்கம்: மீனாகுமார்.

lolluvathiyar
10-09-2007, 09:29 AM
மீனாகுமார் திருகுறள் விளக்கத்தை நீங்கள் உங்கள் ஸ்டைலில் செய்து வ்ந்தீர்கள். அதை முற்றும் என்று பார்த்தவுடன் வருத்தம் அடைந்தேன். இன்றை நவீன வாழ்கையில் உங்கள் அளவுக்கு யாராலும் விளக்க முடியாது.
ஆனால் நீங்கள் கடைசியில் சொன்னீர்களே ஒரு வார்த்தை மீன் பிடிக்க தான் கற்று கொடுப்பேன், பிடித்து தந்து கொண்டே இருக்க மாட்டேன் என்று அந்த வாக்கியம் மிக முக்கியமானது. சுலபமாக நீங்கள் சொல்வதை மட்டும் படித்து கொண்டிருந்தால் பலன் கிடைக்காது. அதை நம் அனுபவத்தில் இருந்து உனர்ந்து கொண்டு தான் அடாப்ட் செய்ய வேண்டும் என்பதை கூறி முடித்த உங்களை பாராட்டுவதோடு நில்லாமல் இந்த தெய்வீக பனிக்கு உங்களுக்கு 1000 இபணம் என் மகிழ்ச்சிக்காக* தருகிறேன்

அமரன்
10-09-2007, 10:08 AM
முற்றும்.
நன்றி,
ஆக்கம்: மீனாகுமார்

இதுக்காகவே காத்திருந்தேன். இனி முழு விருந்தையும் ருசிக்கவேண்டியதுதான். நன்றி மீனாகுமார்.
(படுக்கும்போது அப்பபோ தனி மடலிலும் இங்கேயும் தொல்லை கொடுப்பேன். இப்பவே அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன்)

அக்னி
10-09-2007, 10:15 AM
அனுபவக் குறள்கள் அனுபவிக்க வைத்த குறள்கள்...
முற்றும் என்பதில் முற்றுப்புள்ளியிட்டு, எமக்குத் தொடக்கப்புள்ளி ஆக்கிவிட்டீர்கள்...
மிக்க நன்றி...
பாராட்டுக்கள்...
(இறுதியான பதிவுகள் இன்னமும் கொள்ளவில்லை. நிச்சயம் கொள்ளுவேன்...)

சிவா.ஜி
10-09-2007, 10:22 AM
அற்புதமான ஒரு பாதுகாக்கப்படவேண்டிய பதிவு.குறளின் குரலாக ஒலித்த மீனாகுமார் அவர்களுடைய இந்த முயற்சி மிக மிக பாராட்டப்பட வேண்டியது. எவ்வளவு அழகாக,எவ்வளவு விளக்கமாக...எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தார்போல்..இந்நாளைய உதாரணங்களுடன் எந்நாளும் பயன்படும் வகையில் மீனாகுமார் அவர்களின் பதிவு இருக்கிறது. மனம் நிறைந்து பாராட்டுகிறேன்.

மனோஜ்
10-09-2007, 10:27 AM
குறள் கொண்டு நவின வாழக்கை அர்த்தங்கள் கொடுத்த தங்களின் படைப்பு மிகவும் முக்கிய பதிவு வருங்காலத்தில் பலருக்கு பயனுள்ளதாக அமையும் வாழ்த்துக்கள்

மீனாகுமார்
10-09-2007, 04:20 PM
என்னோடு கூடவே வந்து, எனக்கு தொடர்ந்து ஊக்கமளித்த அனைத்து நெஞ்சங்களுக்கும் மிக்க நன்றி.

எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கேளுங்கள்.. அமரன். எனக்கும் சிந்திக்க கூடிய வாய்ப்பு அது.

இளசு
10-09-2007, 08:20 PM
அன்பு மீனாகுமார்,

இந்த அரிய தொடருக்கு உங்களை எத்தனைப் பாராட்டினாலும் தகும்..

இன்றைய தலைமுறைக்கான குறள் விளக்க தலைமைப் பதிவு இது..

இதைத் தொகுத்து நூலாக்க என் பரிந்துரை...

உங்களுக்கு வந்தனமும் பாராட்டும் நன்றியும் சமர்ப்பிக்கிறேன்..

மீனாகுமார்
26-09-2007, 02:15 PM
இதோ சிறிய மாற்றங்களுடன் புத்தக வடிவில்....

யாவர்க்கும் திருக்குறள்

http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=170

அக்னி
26-09-2007, 05:47 PM
இதோ சிறிய மாற்றங்களுடன் புத்தக வடிவில்....

மிகவும் பயனுள்ள செயல்...
உங்களை நினைக்க பெருமையாக உள்ளது....
சிறு கௌரவிப்பு செய்கின்றேன்... (தப்பாக நினைத்துவிடாதீர்கள்)
இந்தச் சுட்டியை முதற்பதிவில் இணைத்துவிடுமாறு கேட்டுக் கொள்கின்றேன்...

கௌரவிப்பாக 2000 iCash.

மீனாகுமார்
27-09-2007, 11:49 AM
இந்தச் சுட்டியை முதற்பதிவில் இணைத்துவிடுமாறு கேட்டுக் கொள்கின்றேன்...

கௌரவிப்பாக 2000 iCash.

செய்தாகிவிட்டது அக்னி. மிக்க நன்றி....

இராஜேஷ்
14-05-2008, 02:53 AM
இப்பகுதியை மீண்டும் தொடர்ந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

பாண்டியன்
22-10-2008, 02:24 PM
உலக பொதுமொழி என்ன பொது நூல்தானே குறள்...
அதை அனுபவ நீதியாக சொல்லும் போது.. ஆகா ஆகா.. தொடருங்கள்.

தமிழ் மைந்தன்
12-07-2010, 06:05 PM
திருவள்ளுவர் அளித்த திருக்குறளை எமக்கு அளித்த மீனா குமார் அவர்களுக்கு நன்றி..........

பாலன்
13-07-2010, 02:59 PM
உங்கள் அனுபவ குறள் வாசிப்பதற்க்கு இனிமையாக உள்ளது. ஆனால் நீங்கள் கொடுத்த புத்தகத்தை ட்வுன்லோட் செய்ய அனுமதியில்லை என்று வருகிறது.

குணமதி
13-07-2010, 03:47 PM
அருமை.

பாராட்டும் வாழ்த்தும்.

இமை
31-10-2010, 12:16 PM
நன்றி மீனாகுமார் அவர்களே! மிக அருமை.... நீங்கள் கொடுத்த விளக்கம் தெளிவாக நெஞ்சில் நின்றது... மீண்டும் நன்றி என் அடுத்த கதைக்கு கரு கொடுத்தமைக்கு.

ஜான்
03-04-2011, 03:42 AM
அடுத்து என் மனதில் நிற்கும் சில குறள்களைக் காண்போம்.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

பொறாமை, ஆசை, சினம், தீமைதரும் கடுஞ்சொல் இந்த நான்கையும் நீக்கி இடைவிடாமல் நிற்பதே அறமாகும்.

அறத்தை ஏன் கடைப்பிடிக்க வேண்டும் ? அறத்தை கடைப்பிடிப்பதே சான்றோர்களின் செயலாகும்.

அறத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் நம் வாழ்வும் நம்மைச் சுற்றியிருப்பவர் வாழ்வும் சிறப்பாக இருக்குமென்று வள்ளுவர் கூறுகிறார். ஆகவே தான் அறத்தைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
அறம் என்பது நேரடியாக ஒரே பொருளைக்குறிப்பதாக இல்லை. அறம் என்பது பலவற்றைக் குறிக்கும் சொல்லாகும். அறன் என்பது பற்றி பல குறள்களில் குறிப்புகளைக் காணலாம்.

என் இளவயதில் பணியிடத்தில் நான் முதல் பக்கத்தில் எழுதி வைத்திருந்த குறள்

ஆண்டுகள் சென்றதால் அறம் மறந்து விட்டேனா தெரியவில்லை

இங்கே பதித்தமைக்கு நன்றிகள்

M.Jagadeesan
03-04-2011, 04:47 AM
"அறம்"என்ற சொல்லுக்கு பல பொருள் உண்டு. இதற்கு இணையான சொல் எந்த மொழியிலும் கிடையாது.