PDA

View Full Version : கலைவேந்தன் கவித்துளிகள்கலைவேந்தன்
18-06-2007, 06:28 AM
கலைவேந்தன் கவித்துளிகள்

தீஞ்சுவை கவிவடிக்க தேமதுரத் தமிழ்கேட்டேன்
வாஞ்சல்யத் துடன்என்னைக் காப்பாய் வடிவேலா!
இத்தமிழ் மன்றத்து முதிர்ந்த பெருமக்கள்
சத்தமிட் டென்னை சாபமிடா வரம்தருவாய்

********************************************************************************************************
பராபரமே பரம்பொருளே பரஞ்சொதீ பற்றற்றே
தராதரம் உணராது நல் தீது அறியாது உமை
சிராதாரமாய் உணர்ந்து தமை உருக்கி தவம் கண்டு
நராதாரி மெய் துறந்து பிறவித் துயர் களைவோமே!

********************************************************************************************************
போகின்றவர் கொண்டு போவதென்ன இங்கே
வாழ்கின்றவர் வைத்து வாழ்வதையே விட்டு
சாகின்ற போது காதற்ற ஊசியும் இல்லாது
வேகின்றபோது வேதனையின்றி போவதெ மிச்சம்!

********************************************************************************************************
காதலெனக் கூறி காமந்தனை செய்யும்
பாதகரை வெட்டிப் பாடையில் அனுப்பும்
சோதனை விதியொன்றை வைத்திடுவோம் சபைதனிலே
போதுமென விட்டோடி ஒளிந்திடுவர் காமுகரே!

********************************************************************************************************
முன்னேயும் பின்னேயும் நான்குபேர் பல்லக்கை
தூக்கவும் காக்கவும் நூறுபேர் கொண்டவன்
நாட்டையும் வீட்டையும் காக்காத பண்டாரம்
அவனியில் பவனியில்! ஏற்குமோ நல்மனம்?

********************************************************************************************************
போகுவதேன் வாழ்வின் முத்தான மதிப்புகள் (values)
வீழ்குவதேன் சான்றோரின் சத்தான விதிப்புகள்
மாள்குவதேன் மானிடன் மனச்சான் றுகள்தாம்
தோல்விதான் வந்திடுமோ மனிதனின் வேள்விக்கே?
********************************************************************************************************
ஈந்து வாழ்தலுக்கீடு இணை ஏதுமில்லை
தாழ்ந்து போவதில்லை தரக்குறைவும் ஏதுமில்லை
சோர்ந்துபோன மானிடர்க்கு சோறிட்டு குறைவதில்லை
காந்தம்போல் கடவுளிங்கு குடிகொள்வார் உன்னகத்தே!

********************************************************************************************************
அரசியல் என்றொரு மர்மக்கூடம்!
அனைவரும் அங்கே போடுவர் ஆட்டம்
இங்கே பானையில் பருக்கை தேடும்
இச்சைமுத்து பசியில் வாட்டம்!

********************************************************************************************************
சமத்துவம் என்பதை சமத்து வமாய் சமைத்து
சட்டுவத்தை மட்டும் காட்டிவிட்டு சாதத்தை மறைத்து
சத்துள்ளதை தான் மட்டும சுவைத்து
சொத்தை தான்சேர்த்துவிட்டு சொத்தையை தந்துவிட்ட
வித்தைதான் இங்கே ஜனநாயகம்!

********************************************************************************************************

மட்டற்ற மகிழ்ச்சிகள் கணநேரமும் ஏழைக்கில்லை
பற்றற்ற வாழ்க்கை வாழவும் முடியவில்லை
இரக்க மற்ற வயிறு! இறக்கவும் துணிவில்லை!
அரக்கர்கள் திருந்தும் நாள் எந்நாளோ தெளிவில்லை!

********************************************************************************************************
நிலையென நினைத்தே நிலைதடுமாறும் நிறைவிலாநிலைமை
நினைத்ததை நிகழ்த்திட நிதம் போராட்டம்!
நிம்மதியில்லை நித்திய நித்திரை நிரந்தரமில்லை.
நிறுவுக நிலையாய் நிம்மதி வாழ்வே!

********************************************************************************************************

ஒன்று மட்டும் இதயத்தை ஒப்படைத்த இறைவன்
இரண்டு கண்களால் காணவைத்தான்..
காரணம் யோசித்தேன்...
நல்லவை கெட்டவை இரண்டையும் பார்
நன்மையை மட்டுமே மனதில் வை!
காரணம் இன்றி காரியம் காணுமோ
இறைவன் கணிதம் தவறாகுமோ?

********************************************************************************************************

ரசிக்கின்றேன் இயற்கையை
எத்துணை மருக்கள்
எங்கள் நிலாவில்
இருந்தும் ரசிக்கின்றேன்...

எத்தனை ஊழல்கள்
எங்கள் அரசியலில்
இருந்தும் ரசிக்கின்றேன்...

எத்தனை அசிங்கங்கள்
எங்கள் சினிமாவில்
இருந்தும் ரசிக்கின்றேன்...

ஏனென்றால் நான்
எதையும் தாங்கும்
இந்தியன் அன்றோ?

********************************************************************************************************

நாமென்ற சொல்லை ஏற்றிடுவோம் இன்றே
நானென்ற சொல்லை மாற்றிடுவொம் நன்றே
யாமொன்றும் சளைத்தவர் இல்லை மற்றோர்க்கு
யாதும் பெறுவோம் நாம் ஒன்றிணைந்தால்!

praveen
18-06-2007, 06:45 AM
எளிதில் புரியும் வண்ணம் படைத்திருக்கிறீர்கள், உங்களின் மற்ற கவிதைகளை படிக்க தூண்டுகிறது, இந்த பதிப்பு.

பதித்து பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

கலைவேந்தன்
19-06-2007, 07:38 AM
நன்றிகள் அஷோ!
மரபுக்கவிதைக்கு இன்றைக்கு மதிப்பிழந்து போய்விட்டது.
பின்னூட்டம் இல்லாததை வைத்துப் பார்க்கும்போது
மரபுக்கவிதை எழுதுவது வீணோ எனறு தோன்றுகிறதே!

இதயம்
19-06-2007, 07:46 AM
படைப்புகளை படைப்பதில் இரு வகை இருக்கின்றன.

1. தன் ஆத்ம திருப்திக்காக படைப்பவை
2. மற்றவர்களை திருப்திபடுத்த படைப்பவை

இப்போதெல்லாம் மரபுக்கவிதைகள் முதல் வகைக்காகவும், புதுக்கவிதைகள் இரண்டாவது வகைக்காகவும் படைக்கப்படுகின்றன என்பது என் கருத்து.மக்களின் ரசனை நிரந்தரமாக இருப்பதில்லை. அவை மாறிக்கொண்டே இருக்கின்றன. என்னை பொருத்தவரை புதுக்கவிதை ஏறக்குறைய எல்லோராலும் படைக்க முடியும். ஆனால், மரபுக்கவிதைகள் அனைவருக்கும் வசப்படுவதில்லை. அது எழுதுவதற்கு மட்டுமல்ல, சில நேரங்களில் புரிந்து கொள்வதற்கும் கூட..!!

உங்கள் கவிதைகள் படித்தேன். அருமையாக இருக்கின்றன. முயற்சிக்கு வாழ்த்துக்கள் கலைவேந்தன்..!!

சிவா.ஜி
19-06-2007, 08:02 AM
நல்ல சொல்லாட்சி கலைவேந்தன். கவிதைகள் படைக்கப்படும் போது கிட்டும் ஆனந்தத்தைவிட அது பிறரால் படிக்கப்பட்டு, கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும்போது கிடைக்கும் ஆனந்தம் அதிகம். பார்க்காமல் விடப்பட்ட கவிதைகள் அல்ல உங்களுடையது. அப்படி விட்டுவிடக்கூடியதுமில்லை. மிகவும் நன்றாக இருக்கிறது. மரபுக்கவிதைகள் அருகிவிட்ட நிலையில் அழகான கவிதைகள் படைத்துள்ளீர்கள். ஆயின் இரண்டிரண்டாய் பதித்திருந்தால் ஆற அமர்ப்படித்து அர்த்தம் புரிந்துகொண்டு கருத்து சொல்ல ஏதுவாய் இருந்திருக்கும். அதனால்தான் நிறைய பேர் பின்னூட்டம் இடவில்லை என அடியேனின் கருத்து. இருப்பினும் இவகள் சர்வநிச்சயமாய் படிக்கப்படும்,சுவைக்கப்படும். மேலும் மேலும் இப்படிப்பட்ட அற்புதமான படைப்புக்களை படையுங்கள்.எல்லா கவிதைகளிலும் சமூக சிந்தனையூடே நல்ல கருத்துக்களை சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

ஆதவா
19-06-2007, 08:14 AM
கலைவேந்தன்.

பல வார்த்தைகளை பல பொருள்களை ஒரே வரியில் அடக்கி ஆழமான பொருள் தரக்கூடியவையும் தேவையற்ற வார்த்தைகள் அதிகம் இடம்பெறாதவையுமான மரபுக் கவிதைகள் எழுதுவதற்கு ஆளில்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்தேன். இன்றைக்கு நான்கு வரிகளில் எழுதுவதெல்லாம் கவிதையாகிறது. ஆனால் அவர்களால் மரபுக் கவிதையில் எழுத முடியுமா என்றால்... தயங்குகிறார்கள். ஏன்? முடியாது.

சில கவிதைகள் மரபு கலந்து புதுக்கவிதை படைக்கும்.... இலக்கணங்களை மீறிய மரபு/புதுக் கவிதைகள்.. நீங்கள் படைத்திருப்பது அந்த நிலையில்தான். அதற்கே ஒரு சபாஷ்... (உடன் 500 பணம். ) எளிமையாக அதேசமயம் வார்த்தைகளின் எதுகைகளும் சரியாக அமைய எழுதும் (நம்ம ஷீ−நிசி மாதிரி நிறைய பேருங்கோ) சிலர் மத்தியில் உங்கள் கவிதைகள் தனி...

நல்ல சமூகக் கருத்துக்கள் அடங்கிய வரிகள்

அரசியல் என்றொரு மர்மக்கூடம்!
அனைவரும் அங்கே போடுவர் ஆட்டம்
இங்கே பானையில் பருக்கை தேடும்
இச்சைமுத்து பசியில் வாட்டம்!

குறிப்பாக மேற்கண்ட வரிகள் நாட்டின் நிலையை அடித்துச் சொல்லுகிறது.. பாராட்டுக்கள்..

அமரன்
19-06-2007, 08:58 AM
நன்றிகள் அஷோ!
மரபுக்கவிதைக்கு இன்றைக்கு மதிப்பிழந்து போய்விட்டது.
பின்னூட்டம் இல்லாததை வைத்துப் பார்க்கும்போது
மரபுக்கவிதை எழுதுவது வீணோ எனறு தோன்றுகிறதே!

அப்படியில்லை கலைவேந்தன்
என் அறிவுக்கு எட்டியவரை மரபுக்கவிதைகள் ஆழ்ந்து படிக்கவேண்டியவை. நிச்சயாமாக நிறை சுவையுள்ளவை. படித்துவிட்டு பின்னூட்டம் இடுவேன்

அமரன்
22-06-2007, 07:18 AM
தீஞ்சுவை கவிவடிக்க தேமதுரத் தமிழ்கேட்டேன்
வாஞ்சல்யத் துடன்என்னைக் காப்பாய் வடிவேலா!
இத்தமிழ் மன்றத்து முதிர்ந்த பெருமக்கள்
சத்தமிட் டென்னை சாபமிடா வரம்தருவாய்

இனிய சுவை மிக்க கவிதை கலைவேந்தன். வடிவேலன் வாஞ்சையுடன் உங்களுக்கு அருள் தந்துவிட்டான். ரசித்தேன். மன்றத்தில் இளையவன் நான் சத்தமிட்டுகிறேன் உங்களைப் பாராட்டுவதற்காக.

பாரதி
22-06-2007, 07:39 AM
நன்றிகள் அஷோ!
மரபுக்கவிதைக்கு இன்றைக்கு மதிப்பிழந்து போய்விட்டது.
பின்னூட்டம் இல்லாததை வைத்துப் பார்க்கும்போது
மரபுக்கவிதை எழுதுவது வீணோ எனறு தோன்றுகிறதே!

மதிப்பு என்பது பின்னூட்டங்களைப் பொறுத்ததல்ல நண்பரே.

பலரும் தொடக்கூட தயங்குவதை நீங்கள் எளிதாக சாதிக்கிறீர்கள் என்ற பெருமிதம் உங்களுக்கு வேண்டும். உங்களுக்கு மனப்பூர்வமான திருப்தி கிடைப்பதை விட வேறதுவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்காது.

கவலையை விடுங்கள்; கவிதை படையுங்கள்.

எனது உளங்கனிந்த பாராட்டுக்கள்.

கலைவேந்தன்
23-06-2007, 12:52 PM
பாராட்டிய அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.