PDA

View Full Version : நண்பனின் ராஜபார்வையும் செங்கோலும்...rambal
18-05-2003, 06:08 PM
நண்பனின் ராஜபார்வையும் செங்கோலும்...


நண்பனின் கவிதைகள் பற்றி ஓர் அலசல்..

நம் மன்றத்தில் நான் ரசித்து சிலாகிக்கும் கவிஞர்களில் நண்பன் முதன்மையானவர்..

எத்தனையோ இடங்களில் சிலாகித்து.. எனக்கு நானே கேள்வி கேட்டுக் கொண்டு.. எனக்கு நானே இதுபற்றி பேசிக்கொண்டு.. ஒரு குறும்படம் பார்த்த மாதிரி இருக்கும்..
சிறுகதை படித்த உணர்வாய் இருக்கும்...
அடுத்து என்ன வருமென்று பார்த்தால் குறியீடுகளின் புரியாத புதிர் விளையாட்டாய் இருக்கும்...
கொஞ்சம் குழம்பி பின் இறுதியில் விடைகண்டு.. மகிழ்ச்சியடைந்து..
விமர்சணம் எழுதும் போது நான் கண்ட புதிரின் விடையை சொல்லலாமா என பல சமயங்களில் யோசித்ததுண்டு..
வேண்டாம் நம்மைப் போல் எல்லாரும் இன்பமுறவேண்டும் என்று வெறும் வார்த்தைகளால் பாராட்டிவிட்டு...
கவிதையில் இவர் உருவகப்படுத்தும் அழகு..
அந்த மாதிரி கவிதைகள் என்றால் முதல் மூன்று வரிகளைப் படித்தவுடன் நான் படிப்பது கடைசி வரியைத்தான்..
அந்த வரியில் தான் ஒரு பூகம்பத்தை வைத்திருப்பார்..
அதை இளகிய மனமுடையவர்களால் ஏற்றுக் கொள்ளமுடியாது....
பலருக்கும் அறுவெறுப்பாகவோ அல்லது ஜீரணிக்கமுடியாததாகவோ இருக்கும்..
ஆனால், அதுவும் ஒருவகை இலக்கியம்.. உலகின் தலைசிறந்த இலக்கியம் அது போன்றதுதான்..
உள்வெளியீடு..(எக்ஸ்டெண்சியலிசம்) என்று ஒரு வகை கவிதை உண்டு..
இவரின் கவிதைகள் அந்த வகையைச் சார்ந்தவை..
இப்படி பல வித பரிமாணங்கள் கொண்ட நண்பன் கவிதைகளை இங்கு அலசப் போகிறேன்..

முதலில் நான் ரசித்த சில வரிகள்...


கவிதையின் எல்லைகள் தேய்ந்து
நேர்காணலுக்கு
பொழுதும், இடமும் குறித்து
நேரில் நீ வந்த பொழுது
உன்னை எனக்குத் தெரியவில்லை -
நீ உடலை உடுத்தி வந்தாய்.
(.......மின் அஞ்சல் நண்பர்கள்..)

ஜன்னலோரம் அமர்ந்து கொண்டு
வாழ்வில் இழந்து போன
தருணங்களின் நினைவுகளை
ஒரு பசு மாட்டினைப் போன்று
அசை போட்டுக் கொண்டிருந்தேன்.
(..........இழப்புகள்.....)

குப்புறக்கிடக்கும்
ஒரு பெண்ணின் நிர்வாணமாய்
பாலைவனம் கிடக்கிறது...
(பாலைவனக் கணவன்..)


முதலில் கவிஞனைப் பற்றியும் கவிதைகளைப் பற்ரியும் இவரின் பார்வையை கொஞ்சம் பார்க்கலாம்...


கவிஞன்..

நான் மட்டும் தனியாக
சுற்றித் திரிகிறேன்
எந்த ஒரு இலக்குமின்றி -

.........................
..............................
..........................
......................

என்னாலும் உங்களாலும்
ஒருவருக்கொருவர்
ஒன்று கொடுக்கமுடியும் -
என் பயணத்தின் முடிவில்
உருவமற்ரு தோன்றும்
நான் கண்டெடுத்த
ஒரு புன்னகையை
உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன் -
என்னை யாரென்று
தேடுவதை விட்டுவிட்டு
உங்கள் உதடுகளில்
எனக்கும்
கொஞ்சம் இடம் கொடுங்கள்..

அது போதும் -
நான் தேடிய அனைத்தும்
உங்களுக்குச் சொந்தமாக..

கவிஞன் எங்கெங்கோ பயணித்து இறுதியில் ஒரு புன்னகையாக கவிதையை கண்டெடுத்து அனுப்பிவைக்கிறான்.. அந்தக் கவிஞனைப் பற்றிய பின்புலம் அறிவதை விட்டு விட்டு அவன் அனுப்பும் புன்னகையை மட்டும் ஏற்றுக் கொள்ள உங்கள் உதடுகளில் இடம்கொடுங்கள்..

இதைத்தான் இன்னொரு இடத்தில் வேறுமாதிரி கொடுக்கிறார்...

வெட்கங்கெட்ட தாய்..

மகளே,
உன்னை
ஒவ்வொருவரும் முத்தமிட்டுப் போனதும்
ஆவலுடன் ஓடிவந்து பார்க்கிறேன்...
உன் கன்னங்கள் எப்படிச் சிவந்திருக்கின்றன என்று...

நான் ஒரு வெட்கங்கெட்ட தாய்...

தன்னை தாயாகவும் கவிதைகளை மகளாகவும் உருவகப்படுத்தி அவரது கவிதைகளுக்கு வரும் விமர்சணங்களை முத்தங்களாகவும்...
கவிதைகள் பற்றியும் கவிஞனின் மனநிலை பற்றியும் இவர் எழுதியது இவ்வாறிருக்க..

கவிதையை வாசிப்பவரில்லை.
விமர்சிப்பவரில்லை
கைம்பெண்.

இப்படி கவிதைகள் புறக்கணிக்கப்படுவது பற்றியும்..

இவரது இயற்கை + எதார்த்த பழைய நியாபகங்களாக எழுதிய மழைக்கவிதைகள் சிலாகிப்பிற்குறியது..

..............................
மழையில் நனைந்து
நைந்த காகிதமாய்
மனம் துவளும்
வேலையிலே மட்டும்தான்
மண் வாசனை மட்டுமல்ல,
முந்தானையைக் கொண்டு
என்னையும் தன்னையும்
காக்க முயற்சித்துத் தோற்ற
அவளின் நனைந்தக் கூந்தலின்
மணத்தையும்
நான் உணர்கிறேன் -
அவளுக்கும் எனக்கும் மட்டும்தான்
மழை மருத்துவத்தை அழைக்காது
பொழிந்தது.

மற்றொரு இடத்தில் தன் அம்மாவைப் பற்றி நினைப்பதற்காகவே மழை பெய்யவேண்டும் என்கிறார்.

....................
..........................
கற்பனையிலாவது மழையே
என் வீட்டுக் கூரையைப்
பிய்த்துக் கொண்டு கொட்டு -
என் அம்மாவின் வீட்டு முற்றத்தில்
நான் நனைந்த நாட்களை
ஞாபகப் படுத்திக் கொள்ள -
என் அம்மாவையும் தான்.

இவரிடம் அம்மா கவிதைகள் ஏராளம்..

எனக்கு உயிர் ஊட்டியவளே...

நீ வாழ்ந்த மண்ணை ஒரு முடிச்சு போட்டு
எடுத்துக் கொண்டு வந்துவிடு -
நீ இறக்கும் பொழுது
நீ நேசித்த மண்ணைக் கொண்டு
உன்னை மூடத்தான்.

இன்னும் என்ன தயக்கம்,
தயவு செய்து என்னைப் புரிந்து கொள் -
வந்துவிடு அம்மா
வந்துவிடு அம்மா....

இந்தக் கவிதைகளில் கவிஞர் வாழ்ந்தே இருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்..

இவர், காதல் கவிதைகளில் கையாண்டிருக்கும் உவமை உருவகம் குறியீடு.. அது அலாதியானது..

நெருப்பிட்டாய்..

உன் கண்கள் திறந்து மூடும்
கணத்தில்
நெருப்பின்றி சாம்பலாவேன் நான்.
..............
....................
ஒவ்வொரு வாயிலிலும்
நெருப்பிடத்தான் நீ வருகிறாயென்று
நான் எப்படி அறிவேன் -
நீ விழி இமைக்கும்
கணத்திற்குப் பின்னும்
நான் வாழ்ந்திருந்தால்
நெருப்பிடத்தான் நீ வருகிறாய்
என்றறிவேன்.


பிரபஞ்சம்...

ஐன்ஸ்டைன் கண்ட
சார்பியல் வாக்கியத்தை
நானும் கண்டேன் -
கோடி வருடங்களுக்கு முன்,
காதலியே,
பிரபஞ்ச வெளியிலே
உன்னை நான் பார்த்த பொழுதிலே.

எங்கே இருக்கிறேன்..


கடிகார முட்களிலிருந்தும் விலகினேன்.
காலபரிமானமற்ற பிரதேசத்தினுள்
நான் தூக்கி எறியப் பட்டேன்.
.....................
.................
எப்படி சொல்வேன்?
என்னை ஊமையாக்கி
எங்கோ நீ எறிந்து விட்டதை?

உன் ஒரே பார்வையால்.......


வெள்ளம்........

புகை வளையம் வளையமாக
மேலே மேலே கரைந்து போய்
கூரையை முட்டி முட்டித்
திரும்புகிறது -
கனவுச் சுவற்றில்
உன் நினைவுகளைப் போல.
..........................
..............................
எல்லாம் சரிதான் -
என் கைகடிகாரம் மட்டும் தான்
வெள்ளத்தில் எங்கோ தொலைந்து
போயிருந்தது.

இப்படி ஒரு திடுக்.. என்று கவிதையை முடித்து குறும்படம் பார்த்த பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறார் கவிஞர்..


ஒரு பூவின் நினைவு...

பரணைக் கிளறிய பொழுது
ஒரு பழைய கணக்குப் புத்தகம்.
தூக்கியெறிந்த பொழுது
தன்னாலே திறந்து நின்றது
நீ தந்த மலரொன்றை
மறைத்து வைத்த பக்கம்.
..........................
............................
அம்மா சொல்கிறாள் -
நம்ம திருநெல்வேலி முன்னேறிச்சுடா.
முன்னேறியது நகரம் மட்டும்தானம்மா -
பெருமூச்சுடன் மூடினேன் புத்தகத்தை
நீ தந்த பூவும்
நம் நினைவுகள் போலவே
மெலிந்து கருத்துப் போய்
சருகாகியிருந்தது.

பழைய பரணில் இருந்து பழைய டைரி.. பழைய காதல் அடையாளமாய் பூ.. தற்காலிக நகரம் பூவாய் கருகி.. இப்படி உருவக ஒப்பீடுகளில் இவரை மிஞ்ச ஆள் கிடையாது... இந்தக் கவிதை படித்தபின் முகத்தில் அடித்த உண்மையை,
ஒரு சிறுகதை படித்த உணர்வை ஏற்படுத்திகிறது..


கருநீலவண்டே...

............................
................................
நானும் உன்னைப் போல
ஒரு வண்டு தான்.
மதுவுண்டு ஆடுகிறேன்
மயக்கத்தில் பாடுகிறேன்
முயக்கத்தில் அமைதியாகிறேன் -
காலத்தில்
எங்கோ மறைந்திருக்கும்
ஒரு வலிய கரம்
என்னை வீசியடிக்கும் வரை.


இதுதான் எல்லோரின் கேள்வியும்..

என் கனவில் வண்ணத்துப் பூச்சி வந்ததென்றால் நான் வாழும் வாழ்க்கை யாருடைய கனவாக இருக்கும்.. கொஞ்சம் குழம்புகிறதா?
இதுதான் லாட்சு சொன்ன கடைசி பாடலின் கரு..

இதை அனாயசமாக சொல்லி.. தத்துவத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார் கவிஞர்..


இன்னும் இவரது தனியாய் ஒரு மரம், முகமூடியணிந்தவன், பாகிஸ்தானியக்காதலிக்கு.. என்று ஒரு மிகப்பெரிய பட்டியலே இருக்கிரது.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை..

கவிதை, கவிஞன், தத்துவம், காதல், இயற்கை, கணவன், மனைவி, அம்மா, விதவை, சமூகம்......
இப்படியாக இவரது விரிவடைந்த எல்லைகளை தனது
தனிப்பட்ட எழுத்துவடிவில் எழுதி படிப்பவரைக் கிறங்கடிக்கச் செய்யும் நண்பனின்
பார்வைகள் ராஜபார்வையே... அவரது எழுதுகோல் செங்கோலே...

karikaalan
18-05-2003, 06:28 PM
ராம்பால்ஜி!

நண்பரின் கவிதைகளைப் பற்றிய தங்களது Critique (தமிழில் சொல் அறியேன்) அருமை. அவரது கவிதைகளை தங்களது உதவியுடன் மீண்டும் படிக்கும்போது நாம் எதையோ பறிகொடுத்துவிட்டோம் என்று எண்ணத் தோன்றுகிறது. நன்றிகள்.

===கரிகாலன்

Nanban
18-05-2003, 07:27 PM
தலை தாழ்த்தி வணங்கி நிற்பதை விட வேறு என்ன செய்ய முடிய்ம் என்னால்.............

மிக்க நன்றி, தளத்தின் நண்பரிகளுக்கும், ராம்பாலுக்கும்...............

gankrish
20-05-2003, 10:44 AM
நண்பா உனக்கு இதற்க்கும் மேல் என்ன வேண்டும். ராம் உங்களின் விமர்சனம் கண்டு பெருமை கொள்கிறேன். அருமை.

அறிஞர்
20-05-2003, 11:03 AM
இரு கவிஞர்களுக்கும்.. தலை வணங்குகிறேன்... படிக்க விட்ட.. பல கவித்தொகுப்புகளை.. கொடுத்த... நண்பர் ராம்பாலுக்கு நன்றி....

anushajasmin
20-05-2003, 01:59 PM
அவர் கவிதை தொகுப்புகள் அருமையோ இல்லையோ உங்கள் தொகுப்பு மிக அருமை....
அவருக்கு கட்டியங்கூறி நீங்கள் செய்த இப்படைப்பு வெகு அருமை...பாராட்டுக்கள்.....
நல்ல படைப்பு தானும் சிறந்து பிறரையும் படைக்க தூண்டுமாம்... எங்கோ படித்தது
பாராட்டுக்கள்

prabha_friend
20-05-2003, 05:39 PM
இதைப்படித்தவுடன் எனக்கு கவிதை படிக்கும் உணர்வு கொஞ்சம் அதிகமாகிவிட்டது .

Nanban
24-05-2003, 09:24 PM
ராம்பால்ஜி!

நண்பரின் கவிதைகளைப் பற்றிய தங்களது Critique (தமிழில் சொல் அறியேன்) அருமை.
===கரிகாலன்

Critique என்பதன் தமிழ்ப் பதம் திறனாய்வு என்பது. எல்லோருக்கும் அத்தனை எளிதாக வந்திடாது. Subjectல் நல்ல பரிச்சயம் இருக்க வேண்டும்.

rambal
07-04-2004, 05:07 PM
நண்பனின் கவிதைகளை
படிப்பதற்கு
நேரம் இருந்தால்...

மீண்டும் ஒரு முறை அலச ஆசை..
நேரத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்..

இது மன்றம் தொடங்கி ஒரு வருடம் முடியும் தருவாயில்
பழையதை நினைவு கூறும் தினம்..
சமீபத்திய நண்பனின் கவிதைகளை அலச ஆவல்..

நேரம் ஒத்துழைக்க வேண்டும்..

மற்றபடி நண்பனுக்குப் பாராட்டுக்கள்...

இக்பால்
07-04-2004, 05:28 PM
ராம்பால் தம்பி அலசல் படிக்க காண ஆவலாக காத்திருக்கிறோம்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு காண்பதில் மகிழ்ச்சி. வரவேற்கிறோம்.
அடிக்கடி வந்து கவிதைகள், கதைகள் நல்ல விதத்தில் தரவும்.
-அன்புடன் இக்பால்.