PDA

View Full Version : முக்கோண புலம்பல்களின் நியாயங்கள்!



டாக்டர் அண்ணாதுரை
11-06-2007, 10:02 AM
பெற்றவளின் புலம்பல்......

'அடிப் பாவி.........
பொத்தி பொத்தி வளர்த்தேனே...
பெத்தவயிறு எறிய,
பித்துபிடிக்கவச்சிட்டியே....
பத்துமாதம் மடியில் சுமந்தவளை
பாரம் என நினைத்து,
என்னை இடையில் இறக்கிவிட்டு,
இடையில் வந்தவனோடு ஒடிய
பாவி மகளே.....
பெத்தவயிறு எறியுதடி,
ஊர்கூடி சிரிக்குதடி!

பெற்றவனின் புலம்பல்.....

அஞ்சுமாதத்தில்
பிஞ்சு கால்களால் நெஞ்சை
எட்டி எட்டி உதைத்தாய்;
கொஞ்சும்மொழி பேசினாய்...
நெஞ்ச வலியெள்ளாம் மறந்தேன்,
சூரியனை முந்திக்கொண்டு
பிஞ்சு வயதில்
பள்ளிக்கு ஓடினாய்....
பார்த்து பார்த்து பூரித்தேன்!
இன்று.......
இருபது வயதில்,
வழியில் வந்தவனோடு ஓடினாய்!
வெட்கட்தின் உச்சிசூட்டில்
வெந்ததடி பாவி என் மனம்!!

ஓடியவளின் புலம்பல்.....

'பத்துமாதம் சுமந்தாய்....
பொத்தி பொத்தி வளர்த்தாய்....
பாசத்தைமட்டும் ஏன் பதுக்கிவைத்தாய்?
நெஞ்சில் சுமந்து வளர்த்தாய்....
நெஞ்சில் இருந்ததை அறிந்தாயா?
வீட்டை காடாக்கி,
தணிக்கை செய்யாத வார்தைளால்
உள்ளத்தை இரணமாக்கினாய்...
மரணப்படுக்கையில் கிடந்த உணர்வுகளை
வழியில் வந்தவன் மட்டும் அறிந்தான்!
காதலைக்காட்டி தாலியைக் கட்டினான்...
ஊரைக்கூட்டி ஒப்பாரிவைக்கும் நீ,
என்னை கேட்டாயா?'.

(இந்த புலம்பல்களில்....நியாயமானது எது?)

ஓவியன்
17-06-2007, 09:10 AM
கருத்துக்களும் சிந்தனைகளும், அந்த அந்த சட்டத்தின் நிலையிலிருந்தே எழும். அவர் தம் கருத்துக்களை பூரணமாக அறிந்து தெளிய வேண்டின் அவர்களது சட்டத்திலேயே நின்று பார்க்கவேண்டும்.

அவ்வாறு இங்கே மூன்று வெவ்வேறு சட்டத்திலே ஒரு விடயம் சொல்லப்பட்டிருக்கிறது....

அருமை அண்ணா!

பி.கு - இங்கே இதுவரை நண்பர்கள் எவரும் பின்னூட்டமிடாதது ஏனோ?

greatsenthil
18-06-2007, 08:33 AM
ஒவ்வொருவரின் உள்ள புலம்பல்களையும் தெளிவாக எடுத்துரைத்துள்ளீர்கள் வளர்க உமது படைப்பு

ஆதவா
18-06-2007, 09:05 AM
புலம்பல்கள்.. கண்ணீர் அலம்பல்கள்.

நேரடியான கவிதை.. எங்கும் நடக்கும் கவிதை.. அதோடு இப்போது எனது பார்வையில் புலம்பலின் சிறந்தது எது?

ஓடியவள் நினைப்பது என்ன?


'பத்துமாதம் சுமந்தாய்....
பொத்தி பொத்தி வளர்த்தாய்....

இதிலிருந்து தெரிவது என்னவென்றால் தாய் மிக பாசமாகத்தான் வளர்த்தியிருக்கிறாள்... பொத்தி பொத்தி வளர்த்தலுக்கு அதுதானே அர்த்தம்.. அது புரியாமலா ஓடிவிட்டாள் மகள்?

பாசத்தைமட்டும் ஏன் பதுக்கிவைத்தாய்?
நெஞ்சில் சுமந்து வளர்த்தாய்....
நெஞ்சில் இருந்ததை அறிந்தாயா?[/ஈ]
பாசம் சிலருக்கு கிடைப்பதில்லை... காரணம் வெளிக்காட்டலின் தயக்கம் தான். நெஞ்சில் சுமந்து வளர்த்திருப்பதாகக் கூறுவதால் அப்பனுக்கு நிச்சயம் பாசமிருந்திருக்கும்... ஆனால் நெஞ்சில் இருந்ததை அறிவது இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்களுக்கு சிரமமாக இருக்கிறது. அதேசமயம் அதைச் சொல்வதற்கும் மகள்கள் கஷ்டப்படுகிறார்கள்


[I]வீட்டை காடாக்கி,
தணிக்கை செய்யாத வார்தைளால்
உள்ளத்தை இரணமாக்கினாய்.

..
என்ன தவறு செய்தீர்கள் மகள்?? ஒரு தாய் அல்லது தகப்பன் திட்டுவார்கள் என்றால் தேவையில்லாத காரணமாக இருக்க முடியாது... தகாத வார்த்தைகளால் திட்டுவது கிராமத்துப் புறத்தில் மிகுந்து இருக்கும்... நகரத்தார் ரொம்ப கேவலமாக திட்டுவார்கள் என்பது தனிக்கதை


மரணப்படுக்கையில் கிடந்த உணர்வுகளை
வழியில் வந்தவன் மட்டும் அறிந்தான்!
காதலைக்காட்டி தாலியைக் கட்டினான்...
ஊரைக்கூட்டி ஒப்பாரிவைக்கும் நீ,
என்னை கேட்டாயா?'.


சில பெற்றோர்களுக்கு சாதிப்பிரச்சனைகள் இருக்கின்றன.. ஊரோடு ஒத்துவாழ் என்று கொள்கையோடு இருப்பவர்கள் இவர்கள்.. அதோடு உணர்வுகளை சொல்லி அழும் அளவிற்கு அவர்கள் நிலை இருந்திருக்காது. ஊரைக்கூட்டி ஏன் ஒப்பாரி வைக்கவேண்டும்/???? ஆதங்கம் தான்.. மானம் போய்விட்டதே என்று நினைப்பது..

சிலர் சாதிமுறைகளால் மானம் போய்விட்டதாக எண்ணூவார்கள். எது எப்படியோ இருபது வயதுவரை வாழவைத்த பெற்றோர்களை மறப்பது துர்லபம். தவறான காரியம்.. செய்யக் கூடாது...

ஊரைவிட்டு ஓடிப் போய் காதலித்து கலியாணம் செய்வது தவறான விஷயம்

ஓடிப்போவோர்
முதலில் செய்கிற காரியம்
உள்ளம் திகட்ட
உயிர் அதிரப் புணர்வதுதான்..

−−மகுடேசுவரன்

சூரியன்
18-06-2007, 09:10 AM
பெற்றவளின் புலம்பல்......

'அடிப் பாவி.........
பொத்தி பொத்தி வளர்த்தேனே...
பெத்தவயிறு எறிய,
பித்துபிடிக்கவச்சிட்டியே....
பத்துமாதம் மடியில் சுமந்தவளை
பாரம் என நினைத்து,
என்னை இடையில் இறக்கிவிட்டு,
இடையில் வந்தவனோடு ஒடிய
பாவி மகளே.....
பெத்தவயிறு எறியுதடி,
ஊர்கூடி சிரிக்குதடி!

(இந்த புலம்பல்களில்....நியாயமானது எது?)




இதில் அனைவ*ரின் புல*ம்ப*லுமே நியாய*மான*துதான் அதில் குறிப்பிட்டு எதை சொல்வ*து என்று தெரிய*வில்லை

ஷீ-நிசி
18-06-2007, 09:11 AM
மிக வித்தியாசமாய் சிந்தித்து அவரவர் பார்வையில் உலவ விட்டிருக்கிறீர்கள் கவிதையை... யாருடையதும் நியாயம் என்று கற்பிக்கமுடியாது.... நியாயமில்லை என்றும் கூட.........

கலைவேந்தன்
18-06-2007, 09:18 AM
மூன்று புலம்பல்களும் முரண்பட்டவை.
காரணம் பெற்றோர் மிகவும் பாசமாக வளர்த்துள்ளமை

'''அடிப் பாவி.........
பொத்தி பொத்தி வளர்த்தேனே...
பெத்தவயிறு எறிய,
பித்துபிடிக்கவச்சிட்டியே....''

இந்த வரிகளில் தெரிரிகிறது....

''அஞ்சுமாதத்தில்
பிஞ்சு கால்களால் நெஞ்சை
எட்டி எட்டி உதைத்தாய்;
கொஞ்சும்மொழி பேசினாய்...
நெஞ்ச வலியெள்ளாம் மறந்தேன்,
சூரியனை முந்திக்கொண்டு
பிஞ்சு வயதில்
பள்ளிக்கு ஓடினாய்....
பார்த்து பார்த்து பூரித்தேன்!''


இதனை மகளும் மறுக்கவில்லை.

''
'பத்துமாதம் சுமந்தாய்....
பொத்தி பொத்தி வளர்த்தாய்....''

பின் என்ன தான் பிரச்சினை?
புரிந்துகொள்ளாமை!
தம் மகளின் மனம் புரிந்துகொள்ளாத பெற்றோர்.
பெற்றோரின் உள்ளக்கிடக்கையை உணராத மகள்!


அவரவர் நியாயங்கள்!!!!


மகள் அவர்களுக்குப் புரியவைத்திருக்கலாம்.
புரியவைக்க முயன்று தோற்று இருக்கலாம்.

எனவே இந்த புலம்பல்களை ஒப்புமை படுத்துவதே தவறென்பேன்.
மொத்தத்தில் இது ஒரு புதுமையான கவிதை எனலாம்!
பாராட்டுக்கள் ஆனந்த்!

டாக்டர் அண்ணாதுரை
20-06-2007, 10:54 AM
கருத்துகளை வர்ணமாக்கிய அனைவருக்கும் நன்றி. அவரவர் பார்வையில் அவர்கள் செய்வது நியாயமாகப் படுகிறது. அதை நியாப்படுத்துவதும் அவர்களது உரிமையாகப் படுகிறது. இருப்பினும் எது சரியான செயல் என்பது நம் அனைவருக்குக்குமே தெரிந்த ஒன்றுதானே.

தெரிந்தே செய்யும் தவறு.....பாசத்தை மறுப்பதும் மறைப்பதும். தண்டனை தாமதித்தே வரும்!!!
மீண்டும் மன்றம் வந்த இன்பம்...இனிக்கிறது.