PDA

View Full Version : வெகுதூரம் வந்துவிட்டேன்



சிவா.ஜி
09-06-2007, 02:47 PM
வெகுதூரம் வந்துவிட்டேன்!
பால்ய நட்புகள் பலதையும் பிரிந்து,
உறவுகள் மறந்து,
ஊரை விடுத்து,
உழைப்பை மட்டுமே சுமந்து
செல்வம் சேர்க்கிறேன்!
சொந்த ஊரின் பேர் படிக்கும் போதெல்லாம்
பழகிய பேர்களை பார்க்கும் போதெல்லாம்
அழகிய அந்த நினைவுகள்
அரிதாகத்தான் வந்து போகிறது!
ரப்பர் செருப்புக்களை கக்கத்தில் சுமந்து
வயல் சேற்றில் விழாதிருக்க
இயல் நடை மாற்றி
எக்குத்தப்பாய் நடந்து
வரப்பு வளையில் நண்டு பிடித்ததையும்,
நண்டு பிடிக்க கை நுழைத்து
சுண்டுவிரலில் நீர்பாம்பு பல் பதித்ததையும்,
ஓடும் நீரில் விளையாடி
உடுத்திய துணி உருவிப்போனதறியாமல்
கரையேறி நாணியதையும்,
ஏரிக்களிமண்ணில்
மூக்கொழுக மும்முரமாய்
சிலை செய்து சிற்பியானதையும்,
சொல்லிச்சிரிக்க சொந்தங்கள் இல்லை,
மறந்ததை நினைவூட்ட நன்பர்கள் இல்லை,
நினைத்து சிரிக்க நேரமுமில்லை
வெகுதூரம் வந்துவிட்டேன்!

ஆதவா
09-06-2007, 03:05 PM
அருமை சிவா
நானும் உம்முடனே வெகுதூரத்திற்கு வந்துவிட்டேன்.

பால்ய காலத்து நினைவுகள் தரக்கூடிய சில கவிதைகளுல் ஒன்று இம்மாதிரி கவிதைகள்.. ஆனால் இது சற்று யதார்த்தம் தருவது போன்ற உணர்வு. சில கவிதைகள் அந்த காலம் மாதிரி வருமா என்று கேட்பதுண்டு. சில நினைவுகளோடு போய்விடுவதுண்டு. ஒரு சில இந்த மாதிரி நினைவுகளை நினைத்து நமட்டுச் சிரிப்பு சிரிப்பதுண்டு..

அதிலும்

நண்டு பிடிக்க கை நுழைத்து
சுண்டுவிரலில் நீர்பாம்பு பல் பதித்ததையும்,
ஓடும் நீரில் விளையாடி
உடுத்த துணி உருவிப்போனதறியாமல்
கரையேறி நானியதையும்,
ஏரிக்களிமண்ணில்
மூக்கொழுக மும்முரமாய்

இந்த வரிகள் மிக அருமை.. யதார்த்தம்... நன்றாக வாழ்த்திருக்கிறான் கவிதை நாயகன்..

அருமை..

சிவா.ஜி
10-06-2007, 04:25 AM
உணர்ந்து எழுதிய பின்னூட்டம். ஆதவனின் அலசல் என்றுமே நன்று.பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி ஆதவா.

இதயம்
10-06-2007, 04:33 AM
பால்ய காலத்து மலரும் நினைவுகள், பணம் சேர்க்க பலரை இழந்த சோகம், பொருளிருந்தும் மனம் நிறையா கோலம் என்று உங்கள் கவிதையில் சூழ்நிலை ஆறு கால ஓட்டத்தில் பலரையும் வெகு தொலைவு கொண்டு வந்து விட்டதை நினைவுபடுத்துகின்றன. இப்படி நம் ஒவ்வொருவரின் மனதிலும் இது போன்ற ஒரு ஏக்கம், அழுத்தம் இருக்கத்தான் செய்கிறது. இது பண்பட்ட கவிதை, பதற வைக்கும் சுமையோடு..!

பாராட்டுக்கள் சிவா.ஜி

சக்தி
10-06-2007, 05:37 AM
மீண்டும் என்னை என் பழைய வாழ்க்கையை நினைவுபடுத்திய சிவாவிற்கு என் வாழ்த்துக்கள். இப்பொழுது என்னுடைய கடந்த காலங்களை நினைத்தால் அதில் வாழ்ந்தவன் வேரொருவன் என்றே எண்ணத் தோன்றுகிறது. நன்றி சிவா நல்லதொரு கவிதை கொடுத்ததிற்கு.

சிவா.ஜி
10-06-2007, 05:45 AM
மிக்க நன்றி இதயம்.கால ஓட்டம் நம்மை எப்படியெல்லாம் அழைக்கழிக்கிறது. எல்லோருக்கும் அந்த ஏக்கம் ஆழ்மனதில் உண்டு. நிறைய சந்தர்ப்பங்களில் நாம் காலத்தோடு சமரசம் செய்துகொள்வேண்டியிருக்கிறது.உண்மைதான் சக்தி, நம்மை நாமே தொலைத்துவிட்டு கடந்த காலங்களுக்குள் தேடிக்கொண்டிருக்கிறோம். பாராட்டுக்களுக்கு நன்றி.

ஓவியன்
14-06-2007, 09:42 AM
அருமை ஜி!

நாட்டை விட்டு தூரம் வந்ததில் எனக்கும் பல நினைவுகள் உங்களைப் போலவே!!, எங்கள் கைகளில் றியாலும் திர்காமும் கொட்டிக்கிடக்கலாம் ஆனால் ஊரில் உண்டியலில் சேர்த்த ஒற்றை ரூபாய்க்கு ஈடாகுமா அவை எல்லாம்?

ஷீ-நிசி
14-06-2007, 09:47 AM
உணர்வுகளை தட்டியெழுப்பும் கவிதை நண்பரே! வரிகளில் உணர்வு மேலோங்குகிறது.. வாழ்த்துக்கள்!

சிவா.ஜி
14-06-2007, 09:50 AM
அருமை ஜி!

நாட்டை விட்டு தூரம் வந்ததில் எனக்கும் பல நினைவுகள் உங்களைப் போலவே!!, எங்கள் கைகளில் றியாலும் திர்காமும் கொட்டிக்கிடக்கலாம் ஆனால் ஊரில் உண்டியலில் சேர்த்த ஒற்றை ரூபாய்க்கு ஈடாகுமா அவை எல்லாம்?

மிக மிக சத்தியமான வார்த்தைகள் ஓவியன். என்னுடைய அந்த சிறிய வயதில் எனக்கு கிடைத்த அந்த அற்புதமான சுதந்திர வாழ்க்கை இன்று என் மகனுக்கு கிடைக்கவில்லை என்பது வருத்தமான ஒன்று. விஞ்ஞானமும் வாழ்க்கைத்தரமும் எல்லாவற்றையும் வாரி சுருட்டிக்கொண்டு போய்விட்டது. நன்றி ஓவியன்

மனோஜ்
14-06-2007, 09:57 AM
கவிதையில் தயகம் சென்று வந்தேன் நண்பரே
அருமையாக பாலிய சம்பவங்கள் மனதில் வந்து சென்றது நன்றி

சிவா.ஜி
14-06-2007, 09:59 AM
ஷீ-நிசி, மனோஜ் மனப்பூர்வமான நன்றிகள்.

அமரன்
14-06-2007, 10:02 AM
சிக்கவில்லையே இக்கவி கண்களில்
வெகுதூரம் வந்தும் கூட
வருகின்றேன் சில நேரத்தில் பின்னூட்டமிட...

ஷீ-நிசி
14-06-2007, 10:06 AM
கவிதையில் தயகம் சென்று வந்தேன் நண்பரே
அருமையாக பாலிய சம்பவங்கள் மனதில் வந்து சென்றது நன்றி

மனோஜ்.. அது பால்ய சம்பவங்கள்.. படிக்கற வேகத்தில் வேறமாதிரி படித்துவிட்டேன்....
மாற்றிவிடுங்கள்..

சிவா.ஜி
14-06-2007, 10:10 AM
மனோஜ்.. அது பால்ய சம்பவங்கள்.. படிக்கற வேகத்தில் வேறமாதிரி படித்துவிட்டேன்....
மாற்றிவிடுங்கள்..

ஹாஹ்ஹா... ஷீ உங்கள் பின்னூட்டம் படித்து உண்மையாகவே சிரித்துவிட்டேன். மனோஜ் எப்போதுமே சின்ன சின்ன எழுத்துபிழை செய்வார். ஆனால் இந்த ஒற்றை எழுத்து மாற்றம் எத்தனை பெரிய அர்த்த மாற்றத்தைக்கொடுத்துவிட்டது.

அமரன்
14-06-2007, 02:50 PM
தப்பு கண்ணா தப்பு
உழைப்பை மட்டும் சுமக்கவில்லை
நினைவுகளையும் சுமக்கின்றீர்கள்
ஊர் உழைப்பையும் சுமக்கின்றீர்கள்.
க(வி)தை நாயகனைச் சொன்னேன்.

பிச்சி
15-06-2007, 05:55 AM
இது உங்கள் நினைவுகளா? நீஇங்க இந்த மாதிரி எல்லாம் பண்ண மாதிரி ஞாபகம் வருது. நல்ல கவிதை

lolluvathiyar
15-06-2007, 09:03 AM
என்னோடு போதுமடா இந்த குடியானவன் வாழ்கை என்று தப்பா புரிந்த அப்பன் பேச்சை கேட்டு படித்த நாமும் தப்பா புரிந்து
அருமையான கிராமத்து வாழ்கையை இழந்து நாம் காசை துரத்த நகரத்துக்கு வந்த பின் தானெ உனர்கிறோம்
வெகு தூரம் வந்து விட்டதை.
ஏக்கம் வார்த்தையாக சிலருக்கு மட்டுமே வருகிறது, அந்த சிலரில் நீங்களும் ஒருவர்

சிவா.ஜி
16-06-2007, 04:49 AM
இது உங்கள் நினைவுகளா? நீஇங்க இந்த மாதிரி எல்லாம் பண்ண மாதிரி ஞாபகம் வருது. நல்ல கவிதை

நன்றி பிச்சி. இவையெல்லாமே என்னுடைய இளமைக்கால நிகழ்வுகள்தான்.இன்னமும் என்னை நானாகவே வாழ உதவும் நினைவுகள்.
நன்றி அமரன். நீங்கள் குறிப்பிட்டபடி நினைவுகளையும்தான் சுமந்து கொண்டிருக்கிறேன் ஆனால் சுமையாக அல்ல சுகமாக.
நன்றி வாத்தியார் அவர்களே. கிராமவாழ்க்கை என்பது நமக்கெல்லாம் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம். அந்த வாழ்க்கையின் வாசத்தில்தாம் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் நிஜமான மனிதர்களாய்.

rocky
16-06-2007, 05:16 PM
வெகுதூரம் வந்துவிட்டேன்!
பால்ய நட்புகள் பலதையும் பிரிந்து,
உறவுகள் மறந்து,
ஊரை விடுத்து,
உழைப்பை மட்டுமே சுமந்து
செல்வம் சேர்க்கிறேன்!
சொந்த ஊரின் பேர் படிக்கும் போதெல்லாம்
பழகிய பேர்களை பார்க்கும் போதெல்லாம்
அழகிய அந்த நினைவுகள்
அரிதாகத்தான் வந்து போகிறது!
ரப்பர் செருப்புக்களை கக்கத்தில் சுமந்து
வயல் சேற்றில் விழாதிருக்க
இயல் நடை மாற்றி
எக்குத்தப்பாய் நடந்து
வரப்பு வளையில் நண்டு பிடித்ததையும்,
நண்டு பிடிக்க கை நுழைத்து
சுண்டுவிரலில் நீர்பாம்பு பல் பதித்ததையும்,
ஓடும் நீரில் விளையாடி
உடுத்திய துணி உருவிப்போனதறியாமல்
கரையேறி நாணியதையும்,
ஏரிக்களிமண்ணில்
மூக்கொழுக மும்முரமாய்
சிலை செய்து சிற்பியானதையும்,
சொல்லிச்சிரிக்க சொந்தங்கள் இல்லை,
மறந்ததை நினைவூட்ட நன்பர்கள் இல்லை,
நினைத்து சிரிக்க நேரமுமில்லை
வெகுதூரம் வந்துவிட்டேன்!


கவிதை மிகவும் அருமை நன்பரே. இந்தக் கவிதையை எழுத நிச்சயம் நீங்கள் அதிக நேரம் எடுத்திருக்க மாட்டீர்கள் என்று எண்ணுகிறேன். மனதில் உள்ளவற்றை மிகவும் எளிய வார்த்தைகளாக்கி கொட்டிவிட்டீர்கள். கவிதை மிகவும் அருமை நன்பரே.