PDA

View Full Version : தாய் பொழப்பு.



சிவா.ஜி
09-06-2007, 09:24 AM
எனக்கு முன்ன
சாமிக்கிட்ட போன எஞ்சாமி,
ஒன்னோட நானும் போயிருந்தா
மண்ணோட போயிருக்கும் இந்த பொறப்பு
நாய்க்கும் வேணா இப்ப
நான் பொழைக்கும் இந்த பொழப்பு!
பிஞ்சிப்போனாலும் ஒதவுமேன்னு
உள்ள வெச்சுக்கிட்டான் பாயை
ஓஞ்சி போன சென்மமின்னு
ஒதுக்கித்தள்ளிட்டான் தாயை!
மவனுக்கு பால் குடுத்த
மாரும் காஞ்சிப்போச்சி,
மருமவ மகராசியால
வயிறும் வறண்டு போச்சி!
பார்வை கொறைஞ்சிப் போச்சி,
கேள்வி மந்தமாச்சி,
நாக்கு ருசி செத்து போச்சி,
பாழாப்போன பசி மட்டும் போவலியே!
நாள பின்ன நான் செத்தா
வாக்கரிசி வெப்பீங்களே,
செத்தவளுக்கு போடறதுல கொஞ்சம் இந்த
பெத்தவளுக்கும் போடுய்யா
பசியால செத்தான்னு பேரு வேணா
சாபம் குடுத்து செத்தான்னு பேச்சு வேணா!

ஓவியா
09-06-2007, 08:26 PM
நன்பரே சிவா.

அருமையான மண்வாசனயில் கவிதை கலங்க வைக்கிறது.

மிகவும் நன்றி.

மருமகள் அனைவரும் இப்படி இல்லை, மாமியாரை அரவனைக்கும் நல்ல பெண்களும் பலர் இவ்வுலகில் இருகின்றனர்.

அமரன்
09-06-2007, 08:30 PM
கதை பேசலாம்
கவிதையாகப் பேச்லாம்
உங்க
கவிதையே கதை பல பேசுகின்றது.
பா(ர்)ராட்டுகள்

சிவா.ஜி
10-06-2007, 04:22 AM
நன்றி ஒவியா அவர்களே. கண்டிப்பாக எல்லா மருமள்களும் அப்படி இல்லை. மிக நல்லவர்களும்,மிக கெட்டவர்களும்தான் பேசப்படுகிறார்கள். அந்த வகையில் இந்த மருமகள் முதல் ரகம்,தரத்தில் கீழ்ரகம். நன்றி அமரன் கவிதையாக ஒரு பின்னூட்டம்.அருமை.

இளசு
10-06-2007, 03:15 PM
பொருளை முன்னே வைத்து
மனிதத்தைப் பின்னே தள்ளிய
அவசர உலகம்..

அதனால்தான் கிழிந்த பாயை உள்ளே வைத்தவன்
உலர்ந்த தாயை வெளியே தள்ளினான்...

வாழைக்கும் கீழ்க்கன்று உண்டென்று அறிந்தும்
வாழ்வை இப்படி நடத்தும் பிறவிகள் எங்கெங்கும்...


வாழ்த்துகள் சிவா.ஜி!

ஷீ-நிசி
10-06-2007, 03:36 PM
இப்படியான விமர்சனம் பார்த்து எத்தனை நாளானது! அருமை இளசு அவர்களே!

---------------


நாள பின்ன நான் செத்தா
வாக்கரிசி வெப்பீங்களே,
செத்தவளுக்கு போடறதுல கொஞ்சம் இந்த
பெத்தவளுக்கும் போடுய்யா

வார்த்தைகள் உள்ளத்தை உலுக்குகின்றன! அருமை!

சிவா.ஜி
11-06-2007, 11:23 AM
அருமையான விமர்சனத்திற்கு இளசு ஐயாவிற்கு என் மனமார்ந்த நன்றி.
ஷீ உங்கள் பின்னோட்டம் என்னையும் நெகிழவைத்துவிட்டது மிக்க நன்றி.