The Shawshank Redemption (1994) - விமர்சனம்

ஆதவா

New member
the_shawshank_redemption.jpg


The Shawshank Redemption (1994) - விமர்சனம்

வாழ்க்கை என்பது என்ன? வெறும் கற்றுக் கொண்டிருப்பது மட்டும்தானா? அல்லது கற்றதை வெறுமனே செய்வது மட்டும்தானா? ஒரு institutional வாழ்க்கை வாழ்வதற்கா அறிவு ஒன்று மற்ற பிராணிகளைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது??

கனவுகள்!!
நாம் இன்னவாக ஆவோம் என்ற கனவுகள் அல்ல.. நாம் இன்னவாக இருப்போம் என்ற கனவுகள்... கனவுகளே பிரதேசங்களாக இருக்கும் இடத்தில் கனவுகள் ஒரு ஆச்சரியமல்ல.. ஆனால் கனவுகள் உலர்ந்து போன அல்லது மறுக்கப்பட்ட உலகத்தில் தன்னம்பிக்கையும் புத்திச்சாலித்தனமுமே கனவுகள். ஷாஷாங் ரிடெம்ப்ஷன் இதைத்தான் படம் முழுக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறது.

போர்ட்லேண்ட் வங்கியின் துணை அதிபர் Andy Dufresne ஒரு மூடிவைத்த புத்தகம் போன்ற குணமுடையவராக இருப்பதாக அவன் மனைவி அவனிடம் சொல்வதுண்டு. ஒரு மோசமான கணவனிடமிருந்து தன்னை விலகிவிட நினைத்தாள். ஆனால் ஆண்டி அப்படியல்ல... அவளை மிகவும் நேசித்தான்.. ஒரு சமயம் தன் மனைவியும் இன்னொரு கோல்ப் விளையாட்டு வீரனும் ஒன்றாக காதலித்து ஒன்றாகப் புணரும் காட்சியைக் கண்ட ஆண்டிக்கு இருவரையும் சுட்டு வீழ்த்தவேண்டும் என்று தோணுகிறது. கையில் பிஸ்டலும் மதுவுமாக இணைந்து அவரை கோர விளையாட்டிற்கு அழைக்கிறது.... ஆனால் ஆண்டி டூஃப்ரேன் தனது சுயநினைவிலிருந்து வெகு தூரம் விலகிப் போயிருந்தார். மதுவின் மயக்கமும் மனைவியின் மீதான வெறியும் கொலைத் தூண்டுதலும்......... இறுதியில் மனைவியும் கள்ளக்காதலனும் ஒருவர் கரத்தில் ஒருவராக இறந்துபோய்விடுகிறார்கள். இது நடப்பது 1947 ம் வருடம்...

டுஃப்ரேன் இரட்டை ஆயுள் தண்டணை பெற்று ஷாஷாங் சிறைச்சாலைக்கு வருகிறார். அங்கே ஏற்கனவே 20 வருடங்கள் சிறையில் கழித்துவிட்ட ரெட், பரோல் விசாரணையில் வழக்கம் போல நிராகரிக்கப்பட்டு புதிய கைதிகளின் வருகைக்காக பார்வையிடுகிறார். ஆண்டி, அவரது முதல் இம்ப்ரெஷன்.... இருவரும் பழகுகிறார்கள் ஒன்றோடு ஒன்றாக...... சிறைச்சாலை என்பது கெட்டவர்கள் மட்டுமே உள்ள இடமா? ரெட் சொல்கிறார்... இங்கே யாவரும் குற்றமற்றவர்கள்தான்.... பார்க்கப் போனால் சிறைச்சாலை என்பது வாழ்க்கையைப் பிடுங்கும் இடம். வாழ்க்கை என்பதை இன்னொருவரின் கட்டுக்குள் வந்து நிர்மாணிக்கும் இடம். உங்களது வாழ்க்கையை இன்னொருவர் அனுபவித்துக் கொண்டிருப்பார்.... அல்லது பிடுங்கியெறிந்து கொண்டிருப்பார்...
ம்ம்... நான் இரண்டு பேரை அறிமுகப்படுத்தவேண்டும் முதலாவது ஷாஷாங் சிறைச்சாலை அதிகாரிகளின் கேப்டன் ஹாட்லீ, இரண்டாவது சிறைச்சாலை வார்டன் நார்டன்.

மிக முக்கியமாக கதையைக் கூறிக் கொண்டிருக்கும் ரெட்...

வெளியே இருந்து எந்த பொருளையும் சிறைக்குள் கொண்டு வந்து விற்கும் திறமையுடைய ரெட்டிடம், தனது வாழ்நாளில் உறுப்படியாக ஏதாவது ஒன்றை கல்லில் செதுக்குவதற்கு சிறிய சுத்தியல் வேண்டும் என்று டுஃப்ரேன் கேட்கிறார். ரெட் ஏற்பாடு செய்து தருகிறார். அது மட்டுமல்ல... 20 சதம் கமிஷன் வைத்து எந்த பொருளென்றாலும் ரெட்டினால் ஏற்பாடு செய்துதர இயலும்... 1950 களில் கவர்ச்சிக் கன்னியாக இருந்த Rita Hayworth இன் புகைப்படம் கூட ரெட்டினால் கொண்டு வர இயலும்.... எல்லாவற்றிலும் கமிஷன்... காற்று கூட உள்ளே நுழையமுடியாத மிகப்பெரும், கடும் காவல் உள்ள அந்த சிறைச்சாலையில் பணம் மட்டும் எளிதாக நுழைந்துவிடுகிறது.... பணம் பாதாளமும் செல்லும்.!!!

1949 ல் அந்த சிறைச்சாலை மேற்கூரையில் தார் பூசுவதற்கு ஒரு டஜன் ஆட்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்... உள்ளே வேலை செய்வதற்குப் பதில் வெளியே செய்வது கைதிகளுக்கு பேரின்பமாகவே இருக்கும்... ரெட் “கவனித்ததால்” அவனது சகாக்கள் மேற்கூரையில் வேலை செய்ய பணிக்கப்படுகிறார்கள். கேப்டன் ஹாட்லியின் சொத்து வரி ஏய்ப்பு குறித்து பேசும் ஆண்டிக்கு அதுதான் சிறைச்சாலையில் மிக முக்கிய நாளாக இருந்திருக்கும். ஒரு பேங்கராக இருக்கும் ஆண்டி, ஷாஷாங்கின் எல்லா அதிகாரிகளுக்கும் ஏன் வார்டன் உட்பட எதிர்கொள்ளும் எல்லா ஆண்டுகளுக்கும் வருமான வரி ஏய்ப்பு , விண்ணப்ப பூர்த்தி, சட்ட உதவி, ஆகியவற்றை இலவசமாக செய்து தருகிறார்..... இலவசம் என்ற சொல் தகாது.... ஏனெனில் வாழ்க்கையைப் பிடுங்கும் சிறைச்சாலையில் வருமானம் எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது!!

ஒவ்வொருவரும் ஒவ்வொருவகையில் சிறைச்சாலை நாட்களைக் கழிப்பார்கள்... ஆண்டி, நூலகத்தை விரிவாக்குகிறார். அதற்காக உதவியும் பெறுகிறார். தனது அறையில் பொருட்கள் வைத்துக் கொள்வதையும் போஸ்டர் ஒட்டிக் கொள்வதையும் வார்டனின் அனுமதியைப் பெற்றுக் கொள்கிறார்.... வருடங்கள் வேகமாக விரைகின்றன... இப்பொழுது மர்லின் மன்றோ ஆண்டியின் அறையை நிரப்பினாள். ஒரு சமயத்தில் வார்டன் செய்யும் எல்லா சட்டவிரோதமான சம்பாதனைக்குப் பின்னும் ஆண்டியின் உழைப்பு இருக்கிறது.. குறைந்த ஊழியத்திற்கு வேலை வாங்கி, காண்ட்ராக்டர்களிடம் பெறும் லஞ்சத்தை Randel Stephens எனும் பெயரில் போலி நபரை உருவாக்கி, போலியான விபரங்கள், லைசன்ஸ், முகவரி, ஐடி ஆகியவற்றை உருவாக்கி கையெழுத்தும் இட்டு, வார்டனுக்காக செய்து தருகிறார்.... ஒருவேளை சட்டவிரோதமான செயலுக்கு பொறுப்பாக வேண்டுமென்றால் ராண்டல் என்ற ஒரு போலியான நபரையே சட்டம் பிடித்துக் கொள்ளும்படியான பாதுகாப்பு வார்டனுக்குக் கிடைக்கிறது...

1965 ம் வருடம் Raquel Welch எனும் நடிகை, ஆண்டியின் அறையில் பெரிதாக ஒட்டப்பட்டிருந்த மர்லின் மன்றோவை அகற்றியிருந்தாள். அச்சமயம் வந்த புதுவரவு கைதிகளில் Tommy Williams எனும் இளைஞன் ஆண்டி மற்றும் ரெட் குழுவினரிடம் பழகுகிறான்.. அவன் வாயிலாக ஆண்டிக்கு ஒரு உண்மை தெரியவருகிறது... அது ஆண்டி தன் மனைவியைக் கொல்லவில்லை என்பதே!! உடனே வார்டனிடம் இதைப் பற்றிச் சொல்லும் ஆண்டி, வெளியே சென்றால் வார்டனை இம்மியளவும் காட்டிக் கொடுக்கமாட்டேன் என்றும் சொல்கிறார். வார்டனுக்கு ஆண்டியை விட மனதில்லை... இப்பொழுது ஆண்டி வார்டனுக்கு பணம் கொட்டும் அடிமை.... அவரது சூத்திரத்தனத்தால் டாமி கொல்லப்படுகிறான். ஆண்டி வேறு வழியில்லாமல் தொடந்து வேலை செய்கிறான் வார்டனுக்காக.....

அந்த இரவு வரையிலும்தான் இவையெல்லாம்.................
ரெட் சொல்லுவார்... ஒரு ப்ரேக்பாயிண்ட் எல்லாருக்கும் வரும்...... ஆண்டிக்கு அப்படியொரு ப்ரேக் பாயிண்ட்,.. 1966ம் வருடம் ஓரிரவு ஆண்டி, தனது சிறை அறையில் மாயமாக மறைந்து போகிறார்...........அவர் எப்படி சென்றிருப்பார் என்று ரெட் சொல்லுகிறார்..... ஆண்டி ஒரு தன்னம்பிக்கையான மனிதன்.... அவனது கனவு Zihuantanejo எனும் பசிபிக் கடற்கரையோரம் ஹோட்டல் கட்டி வாழுவது..... இருபது வருடங்கள் தேக்கி வைத்திருந்த கனவு இனி நிறைவேறும்....

1994 ல் Stephen King ன் Rita Hayworth and Shawshank Redemption எனும் நாவலைத் தழுவி ஃப்ராண்ட் டாராபாண்ட் இயக்கிய இப்படம் முடியும் தருவாயில் நாம் நாமாகவே இருக்க முடிவதில்லை... நம்மை எப்படியாவது இழுத்து, ஆண்டி மற்றும் ரெட் போன்ற சக கைதிகளுக்குள் நுழைத்துவிடுகிறது.... படத்தில் மிக முக்கியமாக ஷாஷாங் சிறைச்சாலை லைப்ரரியனாக வரும் ப்ரூக்ஸின் இறுதி மனதை உடைத்துவிடுகிறது

ஐம்பது வருட சிறை தண்டனை முடிந்து பரோலில் வெளிவரும் ப்ரூக்ஸ் (Brooks) தன் சிறுவயதில் ஒரு வாகனம் ஒன்றை பார்த்திருக்கிறார்.... ஆனால் உலகம் மாறிக் கொண்டேயிருக்கிறது. அது அவசரமாக இரவையும் பகலையும் முடித்துக் கொள்ள நினைக்கிறது.. இப்பொழுது வாகனங்கள் எல்லா இடங்களிலும் இருக்கின்றன...... எல்லாரும் ஏதாவது ஒரு பணியில் தங்களை இடம்மாற்றிக் கொண்டேயிருக்கிறார்கள்.... ஒரு சிறைச்சாலை லைப்ரரியனாகவே ஐம்பது வருடத்தை நன்கு உறிஞ்சிய பிறகு அந்த முதியவரால் என்ன செய்ய இயலும்?
தொங்குவதைவிட!???

40 வருடங்கள் கழித்து பரோலில் வெளி வரும் ரெட்டுக்கு அப்படியொரு சூழ்நிலை ஏற்படுவதில்லை... ஆண்டியின் நட்பு, ரெட்டுக்கு இரண்டாம் வாழ்க்கையைத் தருகிறது....

Andy Dufresne ஆக வரும் Tim Robbins னின் நடிப்பு எந்த கதாப்பாத்திரத்தோடும் ஒப்பிடாமல் தனித்துவமாகவே பார்க்கத்துவங்கியபோது, அவரது பாத்திரத்திற்கான வலு கொஞ்சம் அதிகரித்ததாகவே தெரிகிறது... உடன் ரெட் ஆக வரும் மார்கன் ஃபிரிமன்...... படத்தை நமக்கே கொடுத்துவிடுகிறார்கள். முழுக்க முழுக்க சிறைச்சாலையிலேயே செல்லும் கதை, அதன் சூழ்நிலை, வாழ்வாதாரம் பிடுங்கப்படல், சுயநலம், அடிமை நிலை ஆகியவற்றைக் குறித்து பேசுகிறது.

The Shawshank Redemption.... நீங்கள் திரைப்பட விரும்பியாக இருந்தால் ஒருமுறையேனும் பார்த்துவிடுங்கள்.. இதுவரை வெளி வந்த சிறந்த நூறு படங்களில் இதுவும் ஒன்று... மறுப்பதற்கில்லை. ஆனால் விருதுகள் எதுவும் தாங்கவில்லை என்பது காந்திக்கு நோபல் தராதது போல இருக்கிறது!!

IMDB யில் 9.2 மதிப்பெண்களோடு முதலிடத்தில் இப்படம் உள்ளது!!
 
நன்றி ஆதவா!!

எனக்கு மிகவும் பிடித்த ஒரே ஒரு படம் சொல்லு என்று கேட்டால், அது இப்படம்தான். அற்புதத் திரைக்கதை, ஃப்ரீமனின் நடிப்பு, இப்படி பல. டிவியில் சேனல்களை திருப்பிக்கொண்டே வரும்போது, இப்படம் எந்த சானலிலாவது ஓடிக்கொண்டிருந்தால், அப்படியே நிறுத்தி முழு படத்தையும் பார்ப்பதற்கு “ஷாஷான்க் ரிடெம்ஷன் டிவி சின்ரொம்” என சொல்லுகிறார்கள். அதை பல முறை செய்திருக்கிறேன்.

விருதுகள் பெறாதது ஒரு துரதிர்ஷ்டமே. அதே வருடத்தில் “ஃபாரஸ்ட் கம்ப்” வந்து வெகுஜன ஆதரவைப் பெற்றுவிட்டதால், அது எல்லா விருதுகளையும் அடித்துச் சென்றுவிட்டது. (காந்தி - ஈடி ஞாபகம் வருகிறதா? ஈடி - வெகுஜன ஆதரவு காந்தி - விருதுகள்).

”தருமம் மறுபடி வெல்லும்” என்பதற்கு எடுத்துக்காட்டான படம். கண்டிப்பாக பார்க்கவேண்டிய ஒன்று.

நீங்கள் ஏற்கனவே பார்த்திருந்தால், இந்த சுட்டி, சில தெரியாத தகவல்கள் தரும்
http://markwinburn.blogspot.com/2010/03/11-things-you-didnt-know-about.html

-கண்ணன்
 
நன்றி ஆதவா!!

எனக்கு மிகவும் பிடித்த ஒரே ஒரு படம் சொல்லு என்று கேட்டால், அது இப்படம்தான். அற்புதத் திரைக்கதை, ஃப்ரீமனின் நடிப்பு, இப்படி பல. டிவியில் சேனல்களை திருப்பிக்கொண்டே வரும்போது, இப்படம் எந்த சானலிலாவது ஓடிக்கொண்டிருந்தால், அப்படியே நிறுத்தி முழு படத்தையும் பார்ப்பதற்கு “ஷாஷான்க் ரிடெம்ஷன் டிவி சின்ரொம்” என சொல்லுகிறார்கள். அதை பல முறை செய்திருக்கிறேன்.

விருதுகள் பெறாதது ஒரு துரதிர்ஷ்டமே. அதே வருடத்தில் “ஃபாரஸ்ட் கம்ப்” வந்து வெகுஜன ஆதரவைப் பெற்றுவிட்டதால், அது எல்லா விருதுகளையும் அடித்துச் சென்றுவிட்டது. (காந்தி - ஈடி ஞாபகம் வருகிறதா? ஈடி - வெகுஜன ஆதரவு காந்தி - விருதுகள்).

”தருமம் மறுபடி வெல்லும்” என்பதற்கு எடுத்துக்காட்டான படம். கண்டிப்பாக பார்க்கவேண்டிய ஒன்று.

நீங்கள் ஏற்கனவே பார்த்திருந்தால், இந்த சுட்டி, சில தெரியாத தகவல்கள் தரும்
http://markwinburn.blogspot.com/2010/03/11-things-you-didnt-know-about.html

-கண்ணன்

நீங்கள் சொல்வது உண்மைதான் நண்பரே!! நிச்சயம் இப்படம் மிகச்சிறந்த பத்து படங்களுக்குள் வந்துவிடும்.. ஃபாரஸ்ட் கம்ப் உம் அருமையான படம் தான்... எனினும் ஷாஷாங் அதை தூக்கிச் சாப்பிட்டுவிட்டது!! வசூலில் பெரிய ஏமாற்றமிருந்தாலும் “பெயரில்” ஃபாரஸ்ட் கம்பை முந்தி வெகுதூரம் வந்துவிட்டது.... இப்படத்திற்கு டிம் ராபின்ஸுக்குப் பதில் டாம் ஹேங்ஸ் நடித்திருந்தால் (அவர் நடிப்பதாகச் சொல்லப்பட்டது) என்னால் நினைத்துப் பார்க்க இயலவில்லை.... அவரை விட டாம் ஹேங்க்ஸ் இன்னும் நன்றாக நடித்திருப்பார்... எனினும் டிம் ராபின்ஸ் எந்த குறையும் வைத்திடவில்லை....
ரெட் பாத்திரத்தில் ஹாரிசன் ஃபோர்ட் நடிப்பதாக இருந்ததாம்..... சான்ஸே இல்லை... மார்கன் ஃப்ரிமன் அளவுக்கு வேறு யாரையும் அந்த பாத்திரத்தில் வைத்துப் பார்க்க முடியவில்லை!!
 
வாழ்க்கையில் நம்பிக்கை இழந்தவர்களுக்கு இப்படம் ஒரு வரப்பிரசாதம்தான். இதுவரை பார்க்காதவர்களையும் பார்க்கத்தூண்டும் அழகான ஆழ்ந்த விமர்சனம். நன்றி, ஆதவா.
 
மிக நேர்த்தியாக சொல்லப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று.
இப்படத்தை நானும் மிகவும் இரசித்துப்பார்த்தேன். இப்போதைய காலகட்டத்தை ஒப்பிட்டால் மிகவும் பழைய படம் என்றாலும் கூட மிகவும் அருமையாக இருந்தது. படத்தில் ஒவ்வொரு பாத்திரமும் மிக கவனமாக செதுக்கப்பட்டிருக்கும். ஆதவா கூறுவதை நானும் வழி மொழிகிறேன். நல்ல திரைப்படங்களை விரும்புபவர்கள் ஒரு முறையேனும் தவறாமல் இப்படத்தைப் பாருங்கள். பார்த்த பின்னர் இத்திரியில் உங்கள் கருத்துக்களைத் தாருங்கள்.

ஆழ்ந்த விமர்சனம் அளித்த ஆதவாவிற்கு மிக்க நன்றி. (இப்படத்தைக்குறித்து விமர்சனம் எழுத வேண்டும் என்ற ஆவல் நீண்ட நாட்களாக என் மனதில் இருந்தது. உங்கள் விமர்சனம் அப்பளுவை நீக்கி இருக்கிறது.:))
 
ஆதவாவோட எழுத்துக்கள் இந்த அற்புதப் படத்துக்கு மேலும் ஆழமான அழுத்தத்தை அளிக்கிறது. மிக அருமையான விமர்சனம். ஊருக்குப் போனால் பதிவிறக்கிப் பார்த்துவிட வேண்டியதுதான்.

நன்றி ஆதவா.
 
Back
Top