நண்பர் எம்.கே. மாறன் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கேள்வி கேட்டிருக்கிறார்.
அதற்கு பதில் சொல்லும் முயற்சியில் இந்த பதிவு.
நமது கண்கள் அழகான உறுப்பு மட்டுமல்ல ஒரு அற்புதமான உறுப்பும் கூட.
இந்த கேள்விக்கு பதில், நமது கண்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை
விளக்கும் போது தான் கூற முடிகிறது. அதற்கு நமது கண்ணின்
அமைப்பையும், அதன் சில பாகங்களையும் சற்று புரிந்து கொள்ள வேண்டும்.
அடிப்படையில் நமது கண்கள் நமது மூளையின் ஒரு நீட்சியே (Extension)
ஆகும்.
உதாரணமாக நீங்கள் எதிரில் இருக்கும் உங்கள் நண்பரின் கண்களைப்
பார்க்கின்றீர்கள்.
அவரது கண்ணின் முன்புறம் கறுப்பாக ஒரு பகுதி, பலரையும் கவரும்
விதமாக அழகாக இருக்கிறது.
அந்த கறுப்பான பகுதி முதல் உறுப்பு அல்ல, நமது கண்ணின் முன்புறம் உள்ள
முதல் உறுப்பு, கார்னியா (Cornea) என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும்
விழி வெண் படலமே ஆகும்.இதற்கு அடுத்து இருக்கும் கருவிழியே
(ஆங்கிலத்தில் ஐரிஸ் (Iris) என்று சொல்லப்படுகிறது)கார்னியா வழியாக
தெரிகின்றது.
கார்னியா ஒரு நிறமேயில்லாத, ஒளி ஊடுருவிச் செல்லக் கூடிய, இரத்த
குழாய்கள் ஏதுமேயில்லாத ஒரு மெல்லிய திசு.
இதனை நமது கண்களின் கண்ணாடி ஜன்னல் எனலாம்.
நாம் பார்க்கும் பொருளிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் கார்னியாவில் தான்
முதலில் குவிகின்றது. கார்னியா குவிந்த அமைப்பில் இருப்பதனால் எவ்வளவு
பெரிய பொருளாக இருந்தாலும் அந்த பொருளின் ஒளிக்கதிர்கள் கார்னியாவில்
குவிகின்றது. (உதாரணம்- நீங்கள் இரு சக்கர வாகனம் ஓட்டும் போது,
உங்கள் கைப்பிடி (handle bar) மற்றும் விசை அழுத்தி (ஆக்சிலேட்டர்)
அருகே உள்ள பின்னால் உள்ள அல்லது நம்மைத் தொடரும் பொருட்களைக்
காண்பிக்கும் குவி ஆடியில் (ரியர் வியூ மிரரில்), அது ஒரு குவி ஆடியாக
இருப்பதனால் உங்களுக்குப் பின்னால் வரும் உங்கள் இருசக்கர
வாகனத்தைக்காட்டிலும் மிகப் பெரிய பேருந்தின் உருவம் தெரிகிறதல்லவா அது
போல).
அடுத்த செயல்பாடு; கார்னியாவிற்கு அடுத்த பகுதியான ஐரிஸ் எனப்படும்
கருவிழி நமக்கும் அல்லது நமது கண்ணுக்கும், நாம் பார்க்கும் பொருளுக்கும்
இடையே உள்ள தூரத்தைப் பொறுத்து, கருவிழியானது ஒரு திரையப்போல
விரிந்தோ அல்லது சுருங்கியோ ஒளிக்கதிர்களை உள்ளே அனுப்புகிறது.
கருவிழிக்கு அடுத்து இருக்கும், விட்ரியஸ் ஜெல் எனும் திரவத்தினால்
நிரம்பியிருக்கும் பின் அறை என்னும் பகுதியில் அந்த ஒளிக்கதிர்கள் பயணம்
செய்து, கண்ணின் பின்புறம் ஆனால் உள் அடுக்கான விழித்திரை எனப்படும்
ரெட்டினாவில் (Retina) குவிந்து பிம்பம் பதிவாகிறது. இங்கேதான் நாம்
பார்க்கும் பொருளின் பிம்பம் தலைகீழாக பதிவாகிறது.
விழித்திரையில் பதிவான பிம்பமானது விழித்திரையைத் தொடர்ந்து இருக்கும்
பார்வை நரம்பின் மூலமாக பிம்பம் செய்தி மூளையில் உள்ள பார்வை
மண்டலத்திற்கு செய்தியை எடுத்துச் செல்கிறது.பார்வை மண்டலத்தில்
பல்வேறு உயிர் வேதி மாற்றங்கள் மூலம் ஒரு பொருளை நாம் பார்க்க
முடிகின்றது.
பொதுவாக நாம் அனைவரும் ஒரு நல்ல பார்வையை அனுபவிக்க
வேண்டுமானால், இரண்டு கண்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
அப்போது தான் நாம் பைனாகுலர் விஷன் எனப்படும் இரண்டு கண்களும்
இணைந்து செயல்படும் சிறந்த பார்வையை பெறுகிறோம்.
நமது கண்ணின் அமைப்பு, நமது வலது கண் நமது மூளையின் பார்வை
மண்டலத்தில் இடது புறத்தோடும், நமது இடது கண் நமது மூளையின்
பார்வை மண்டலத்தில் வலது புறத்தோடும் இணைந்துள்ளது.
நண்பர் திரு எம்கே மாறன் அவர்கள் கேள்வியில் குறிப்பிட்டிருப்பது போல
”மூளைக்குள் ஒரு பகுதியில் தலைகீழாக மாற்றப்பட்ட பின்னரே
மூளையின் உண்ர்விகளால் புரிந்து கொள்ளபடுகிறது.
(அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது)” என்பது தவறாகும்.
விழித்திரையில் ஒளிக்கதிர்கள் குவிந்து பிம்பமாக தலைகீழாக பதிவாகிறது
என்பதே சரி.
இரண்டாவது கேள்வி; நமது உடலின் வலது பாகத்தை இடது பக்க மூளையும்,
இடது பாகத்தை வலது பக்க மூளையும் இயக்குகிறது என்பது உண்மை. இது
மனித உடலியற்கூறு மற்றும் செயல்படும் தன்மை (Anatomy and
Physiology)ஆகும். இயற்கையின் படைப்பில் அல்லது இறைவனின்
படைப்பில் மனித உடலியற்கூறு அவ்வாறு அமைக்கப்பட்டிருப்பதன் காரணம்
என்ன? என்பது பதில் காண முடியாத புதிர் எனலாம்.
மன்றத்து நண்பர்களுக்கு,
ரொம்ப நாட்களாக ஒரு சந்தேகம், இணையத்தில் தேடியவரை சரியான பதில் கிடைக்கவில்லை (அல்லது எனக்கு சரியாக கேள்விக்கான வார்த்தை கொடுக்க தெரியவில்லை
)
கேள்வி இதுதான்:
1.
நாம் ஒரு காட்சியை காணும்போது
பிப்பம் நேராக கண்களுக்குள் செல்கிறது ஆனால்
மூளைக்குள் ஒரு பகுதியில் தலைகீழாக மாற்றப்பட்ட பின்னரே
மூளையின் உண்ர்விகளால் புரிந்து கொள்ளபடுகிறது.
(அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது)
2.
நமது உடலின் வலது பாகத்தை இடபக்க மூளையும்
இடதுபாகத்தை வலபக்க மூளையும் இயக்குகிறது.
இவை பள்ளி பாடத்தில் படித்தது.
இதற்கான காரணம் தெரியவில்லை.
இது பற்றி 90'களில் வாசகர் ஒருவர் சுஜாதா அவர்களிடம் கேட்டபோது மருத்துவர்களின் விடைகாண முடியாத கேள்விகளில் இவைகளும் அடங்கும் என்று கூறியதாக எனக்கு நியாபகம்.
இது சம்பந்தமாக மன்றத்தின் நண்பர்களின் கருத்துகளை அறிய விரும்புகிறேன். அதன் மூலம் எனக்கு பதில் கிடைக்கலாம்!
இந்த பதில்கள் எனக்கு பயன்படகூடியது. அது பற்றி பிறகு கூறுகிறேன்!