தமிழுக்கு ஒரு தாலாட்டு!!!

தாமரை

Facebook User
தமிழுக்கு ஒரு தாலாட்டு!!!


உள்ளத்தில் உருவாகி உயிர் மூச்சில் கருவாகி
உலகத்தில் பிறந்தாயடி - நீ
பள்ளத்தில் பாய்ந்து வரும் பைம்புனல் போலிந்த
பக்தனை கவர்ந்தாயடி
அள்ளக் குறையாத அறிவென்னும் செல்வத்தை
அடிமைக்குத் தந்தாயடி - என்
உள்ளத்தில் கோயில்கட்டி உள்ளே எழுந்தருளி
உட்கார்ந்து கொன்டாயடி


எண்ணத்தில் உனைக்கொன்டு ஏட்டில் எழுதிவைத்து
எம்புலவர் வளர்த்தாரடி - பல
வண்ணத்தில் உனைப்பாடி வனப்பூட்டும் அணியாக்கி
வஞ்சியுனக் களித்தாரடி
மண்ணுக்கு எட்டாத மாண்புகழ் அமுதுக்கு
மணம்செய்து தந்தாரடி - எந்தன்
கண்ணுக்கு கண்ணான காரிகை உன்காலில்
காவலர் பணிந்தாரடி


காவிரி நதிதந்த கர்னாடக நாட்டினது
கன்னடத்தை யீன்றாயடி - உயர்
மாவரைகள் சூழ்ந்திட்ட மண்ணும்புகழ் கேரளத்து
மலையாளம் யீன்றாயடி
தேவரெல்லாம் போற்றுகின்ற தென்னகத்து ஆந்திரத்து
தெலுங்கை நீதந்தாயடி - இசைத்
தூவானம் போலிருக்கும் துளுவத்தை தந்திங்கு
திராவிடம் படைத்தாயடி


விருந்தோம்பி வாழ்வதிலே வித்தகியே உனக்கிணையாய்
வேறொருவர் கிடையாதடி - பாரில்
உருதோன்றி நிலையாகி உயர்ந்தநிலை எய்தியவர்
உனையன்றி வேறாரடி
அருள்தோன்றும் முகமாகி ஆனந்த மயமாகி
ஆளவந்தாய் நீதானடி - வீசி
வருந்தென்றல் காற்றினைப்போல் வானத்துச் சூரியன்போல்
வையத்தில் வாழ்வாயடி.
 
Last edited:
அநியாயம்!!!

தமிழைக் குழந்தையாக்கித் தாலாட்டினால் 15 பேர்தான் பார்த்தார்களா? அநியாயம்!!! அநியாயம்!!!

இதைக் கேட்பதற்கு ஆளில்லையா?
 
எல்லாரும் பாத்தாங்க செல்வன்.
ஆனாப் பாருங்க தாலாட்டில மயங்கித் தூங்கிப் போயிட்டாங்க... மலையாளம் தெலுங்கு எல்லாத்தையும் ஈன்று கொமரியாகிட்ட தமிழுக்கு எதுக்குய்யா தாலாட்டு?
ஆனா கடைசியில ஒரு வாழ்த்து போட்டிருக்கீங்களே, அது நிறைவேறட்டும்.
 
pradeepkt said:
எல்லாரும் பாத்தாங்க செல்வன்.
ஆனாப் பாருங்க தாலாட்டில மயங்கித் தூங்கிப் போயிட்டாங்க... மலையாளம் தெலுங்கு எல்லாத்தையும் ஈன்று கொமரியாகிட்ட தமிழுக்கு எதுக்குய்யா தாலாட்டு?
ஆனா கடைசியில ஒரு வாழ்த்து போட்டிருக்கீங்களே, அது நிறைவேறட்டும்.

இது "தாய்க்கு ஒரு தாலாட்டு" பா
 
தாய்க்கு ஒரு தாலாட்டா? தமிழுக்கு ஒரு தாலாட்ட?

பேசாம தாய்த் தமிழுக்கு ஒரு தாலாட்டுன்னு சொல்லீருங்க. அதுதான் பெஸ்ட்.

நல்ல தாலாட்டு. ஆனா தமிழ் தூங்க வேண்டியதில்லை. அதுனால தமிழ் உலா, அம்மானை, காப்புன்னு எழுதுங்க. அதையும் ரசிச்சுப் படிக்கிறோம்.
 
ஏன் பிள்ளைத்தமிழை விட்டுட்டீங்க...
நேத்திக்கு ஆழ்வார்கள் - ஒரு எளிய அறிமுகம் படிச்சிட்டு இருந்தேன். நா.தி.பி.ல பெரியாழ்வார் என்னமா பிள்ளைத்தமிழ் எழுதியிருக்கார்???
 
pradeepkt said:
ஏன் பிள்ளைத்தமிழை விட்டுட்டீங்க...
நேத்திக்கு ஆழ்வார்கள் - ஒரு எளிய அறிமுகம் படிச்சிட்டு இருந்தேன். நா.தி.பி.ல பெரியாழ்வார் என்னமா பிள்ளைத்தமிழ் எழுதியிருக்கார்???

பிள்ளைத்தமிழ்... அறிமுகம் செய்யுங்களேன்.. இதன் அடக்கம் என்ன
 
தேவரெல்லாம் போற்றுகின்ற தென்னகத்து ஆந்திரத்து
தெலுங்கை நீதந்தாயடி

இது சரியா? தெலுங்கும் தமிழ் போன்று தொன்மை மொழியென்றும் இது தமிழிலிருந்து வந்த்ததல்ல என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

கன்னடம்கூட சமஸ்கிரதம், மராட்டி ஆகிய மொழிகளின் வழிவந்தது என்று கேள்வி, ஆனால் கன்னடத்தில் சம்ஸ்கிரதம், மராட்டி அளவு தமிழும் கலந்துள்ளது என்று மற்றவர்கள் பேசுவதிலிருந்து தெரிகிறது.

மலையாளம் - நிச்சயம் தமிழிலிருந்து வந்ததுதான்.

சிங்களம் எப்படி. அதில் தமிழின் சாயல் இருக்கிறதா?
 
வார்த்தைகளை விடுங்கள்.. இலக்கண அடிப்படியை எடுத்துக்கொள்ளுங்கள். உயர்திணை அஃறிணை வட இந்திய மொழிகளில் கிடையாது... தென்னிந்திய மொழிகளில் உண்டு..
வாக்கிய அமைப்பும் தென்னிந்திய மொழிகளில் ஒன்றுதான்..

தமிழை தோற்றுவித்தவர் அகத்தியர் என்பார் வட நாட்டார். ஆனால் அகத்தியர் தமிழ் இலக்கணத்தை தொகுத்தவர். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் தமிழ்தாய் வாழ்த்தை அடிப்படையாய் கொன்டு இதை எழுதி உள்ளேன்.

தென்னிந்திய மொழிகள் ஒன்றாய் தோன்றி இருக்கலாம்.. அல்லது ஒரே மொழி பல மொழிகளாக மருவி இருக்கலாம். எது முதலில் என்பது ஆராய வேன்ட்டிய ஒன்று.

ஆனால் வடவிந்திய மொழிகளின் இலக்கணத்தையும், தென்னிந்திய மொழிகளின் இலக்கணத்தையும் ஆராய்ந்தால் அவை வேறு இவை வேறு என்று தெரியும். ஒன்றிற்கொன்று அருகருகே இருப்பதால் வார்த்தைகள் ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கு கலப்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.

தமிழ், கன்னடம், மலயாளம் மற்றும் தெலுங்கின் அடிப்படைகளையும், மராட்டி, இந்தி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி, பெங்காளி போன்ற மொழிகளை பற்றி அறிந்ததினால் சொல்கிறேன்.
 
எனக்குத் தெரிந்தவரை மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளின் எழுத்து வகைகள் சமஸ்கிருதத்தில் இருந்து வந்தன.
ஆனால் சொற்கள் தென்னிந்திய மொழிகளுக்குத் தமிழும் சமஸ்கிருதமும் சமமாகவே வழங்கியுள்ளன. மலையாளத்துக்கும் கன்னடத்துக்கும் கொஞ்சம் அதிகமாகத் தமிழ் கொடுத்திருக்கிறது.
தமிழைத் தவிர மற்ற மொழிகள் எழுத்து வடிவம் பெற்ற காலத்தில் வேதம் படித்தவர்களே அதிகமாக எழுத்தறிவு பெற்றதன் காரணமாகவே சமஸ்கிருதம் போன்று எழுத்து வகைகள் அமைந்திருக்கலாம் என்று கருதுகிறேன்.

இந்தக் கூத்தில் அன்னைத் தமிழில் வந்து பல பிறமொழிச் சொற்கள் கலந்ததையும் வருத்தத்தோடு நினைவு கூர்கிறேன். தமிழனின் "வந்தாரை வாழ வைக்கும் பண்பு" இதிலும் தொடர்ந்தது வேதனை!
 
எழுத்துகள் ஒரு பக்கம் இருக்கட்டும்.. தன்மை மற்றும் முன்னிலை வாக்கிய அமைப்புகளை கவனிக்கவும்.

நான் வருகிறேன்.. நானு பர்த்தினி.. நேனு ஒஸ்தானு.. ஞான் வரும்..நீ வருகிறய்.. நீனு பர்தியா.. நுவ்வு ஒஸ்தாவு..

இது ஆண்கள் சொன்னாலும் ஒன்றுதான்.. பெண்கள் சொன்னாலும் ஒன்றுதன்..ஆனால் வடமொழிகளில் ஆன் சொன்னால் ஒருவிதம் பெண் சொன்னால் ஒருவிதம்..

மே ஆத்தாஹ¥ம் ... மே ஆத்தீஹ¥ம்
தமிழிலும் ஹ, ஜ, ஷ, ஸ, க்ஷ, போன்ற எழுத்துகள் ஊடுருவியதன் நோக்கம் அனைத்து மொழி வாசகங்களையும் தமிழில் எழுதவென இருக்கலாம்.

அல்லது எழுத்துகள் உருவாகும் முன்னரே இம்மொழிகள் பிரிந்து இருக்கலாம்.
 
தாய்த்தமிழை வாழ்த்திய செல்வனுக்கு வாழ்த்துகள்..

தமிழ்மன்றக் கவிப்பக்கத்தில் நிலையாய் இருக்க ..

இக்கவிதையை ' ஒட்டி' வைப்போம்
 
ilasu said:
இக்கவிதையை ' ஒட்டி' வைப்போம்

நிச்சயம் ஒட்டப்படவேண்டிய கவிதை. பாராட்டுக்கள் செல்வம் அவர்களே.

நன்றி வணக்கம்
ஆரென்
 
pradeepkt said:
இந்தக் கூத்தில் அன்னைத் தமிழில் வந்து பல பிறமொழிச் சொற்கள் கலந்ததையும் வருத்தத்தோடு நினைவு கூர்கிறேன். தமிழனின் "வந்தாரை வாழ வைக்கும் பண்பு" இதிலும் தொடர்ந்தது வேதனை!

விருந்தோம்பி வாழ்வதிலே வித்தகியே உனக்கிணையாய்
வேறொருவர் கிடையாதடி


உங்கள் ஏக்கம்.. எனது வரிகளில் ஏற்கெனவே பதிந்து விட்டது நண்பரே!!!
 
stselvan said:
வருந்தென்றல் காற்றினைப்போல் வானத்துச் சூரியன்போல்.
இந்த கவிதைக்காக உங்களையும் அப்படியே வாழ வாழ்த்துகிறேன்.
அன்புடன்
கன்ஸ்

 
Last edited by a moderator:
தமிழை வாழ்த்திய கவிதை அருமை...

பிற்காலங்களில் பல பாடல்களை எழுதி... பல துறைகளில் வெற்றிக்காண வாழ்த்துக்கள்....

இந்த பதிப்பை ஒட்டிய இளசுவுக்கு நன்றி
 
aren said:
சிங்களம் எப்படி. அதில் தமிழின் சாயல் இருக்கிறதா?
ஆம் நண்பரே சிங்களத்தில் தமிழ் சாயல் சில இடங்களில் உண்டு.

உதாரணம்:- சிங்களவர் இரவை 'ராத்திரி' என்றே அழைப்பர்
 
தமிழைத் தாலாட்டி தூங்க வைத்தால்
நாங்கள் எப்படிக் கதைப்பது?
பதில் அவசியம் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ
 
thirukanaga said:
தமிழைத் தாலாட்டி தூங்க வைத்தால்
நாங்கள் எப்படிக் கதைப்பது?
பதில் அவசியம் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ

உள்ளத்தில் உருவாகி
உயிர் மூச்சில் கருவாகி பிறப்பது தமிழ்...
நாம் ஒவ்வொரு முறை சுவாசிக்கும் போதும் தமிழ் பிறக்கிறது..

தமிழின் இளமை ரகசியம் புரிந்ததா?

அந்தத் தமிழை தூங்க வைக்க ஒரு வழி, அமைதித் தியானம்


பேச்சைக் குறைங்கம்மா!!!!


உடலுக்கு உறுதி தருவது மூச்சிப் பயிற்சி
மனதுக்கு வலிமை தருவது தமிழ்ப் பயிற்சி
 
தாலாட்டுக்கள் கோடி தந்த தமிழுக்கே ஒரு தாலாட்டா?
பலே.. பலே... அபாரம் உங்கள் கருத்தும் கற்பனையும்.
தமிழுக்கு ஒரு ஆபரணம், மேலும் பல ஆபரணம் படைக்க வாழ்த்துக்கள்.

நண்பரே, நான் தற்போது சில மென்பொருட்களை தமிழுக்கு மாற்றம் செய்து வருகிறேன். அதில் இந்த கவிதையை மாதிரி பதிப்புகளில் சேர்க்க விரும்புகிறேன். அனுமதி உண்டா?
 
Back
Top