நினைவில் நின்ற கதைகள் - 4. ஒரு பிரமுகர்

Keelai Naadaan

New member
அன்பு நண்பர்களுக்கு வணக்கங்கள்.
இந்த திரியிலே கதைகளைப் பற்றி சிலாகித்து பேச விரும்புகிறேன்.

சிறுவயது முதலே வீட்டில் கதை கேட்டு வளர்கிறோம். சில கதைகள் நம் மனப்போக்கையும், வாழ்க்கையின் போக்கையும் மாற்றி விடுகின்றன.
செய்யுள் கவிதை வெண்பா போன்ற வடிவங்களை விட கதைகள் எளிதில் யாவர்க்கும் - பாமரருக்கும் விளங்கும் வண்ணம் இருக்கிறது.

கதைகள் படிப்பது நம் மனதை செம்மை படுத்துகிறது. வாழ்வில் ஏற்படும் சூழ்நிலைகளை விளக்குகிறது
பிறர் நிலையில் நம்மை வைத்து பார்த்து சிந்திக்க வைக்கிறது. சிலசமயங்களில் நாம் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டவும் செய்கிறது.
பல தரப்பட்ட மனிதர்களை, அவர்களின் பிரச்னைகளை புரியவைக்கிறது.
காலங்களை தாண்டி நம் முன்னோர்களின் வாழ்க்கையையும் அறிய தருகிறது.

நண்பர்கள் தங்களை பாதித்த, தங்களுக்கு பிடித்த கதைகளை பற்றியும் எழுதும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

எல்லோரும் எல்லா கதைகளையும் படித்தது கிடையாது.
இதன் மூலம் நாம் படிக்காத சில சிறந்த கதைகளை அறிமுகம், அடையாளம் காண முடியும் என நம்புகிறேன்.

நண்பர்களின் ஆதரவை வேண்டுகிறேன்.

இந்த திரியை துவக்க ஊக்கமளித்த அன்பு நண்பர் பாரதி அவர்களுக்கு மிகவும் நன்றி.

.........................................................................................................................................................
ஒரு பிடி சோறு - ஞான பீடம் திரு ஜெயகாந்தன்

கதை சுருக்கம்:


பக்கது வீட்டில் திருடி தின்று விட்டு வந்து, சிறுவர்களுக்கே உரிய செல்லத்துடன் வாங்கி சாப்பிட காசு கேட்கிறான் மண்ணாங்கட்டி சிறுவன். காசு இல்லாததால் திட்டுகிறாள் அவன் தாய் ராசாத்தி. அவள் நிறைமாத கர்ப்பினியாய் இருக்கிறாள். இந்த நேரத்தில் பக்கத்து வீட்டு பெண் மாரியாயி வந்து, வேலைக்கு போயிருக்கும் தன் புருஷனுக்கு எடுத்து வைத்திருந்த உணவை சாப்பிட்டதற்காக மண்ணாங்கட்டியை அடிக்கிறாள். ராசாத்திக்கும் மாரியாயிக்கும் வாய்தகராறு முற்றுகிறது. அடித்து கொள்கிறார்கள். அதற்குள் மாரியாயி புருஷன் மாணிக்கம் வந்து சத்தம் போட்டு சண்டையை நிறுத்துகிறான். இதற்கிடையில் சிறுவன் எங்கோ ஓடிவிட்டான்.

கோணி + கந்தல் பாய் + மூங்கில் தட்டி + சினிமா போஸ்டர் = ஒரு கூரை! என்ற நிலையில் உள்ள குடிசையில் வாழும் ராசாத்திக்கு வயிற்றில் பசி அல்லது வலி. சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு.
படுத்தவாறே கால்களை தேய்த்து கொண்டிருக்கும் போது மாரியாயி வருகிறாள். வலி வந்திடுச்சா என விசாரிக்கிறாள். ராசாத்தி தன் பசியை சொல்ல, மாரியாயி தன்னிடமிருந்த அரிசி கொண்டுவந்து தந்துவிட்டு விறகு சுமக்க போகிறாள் மாரியாயி. கடுமையான வலியோடு சுள்ளிகளை பற்ற வைத்து கஞ்சி காய்ச்சுகிறாள் ராசாத்தி. கடுமையான வலியுடனும் பசியுடனும் காலை தேய்த்து கொண்டு இடுப்பு சேலையை தளர்த்தி கொண்டும் சோறு கொதிக்கும் மணத்தை சுவாசித்தபடி ஊறுகாய் எடுத்து வைத்துகொண்டு நாக்கில் எச்சில் ஊற காத்திருக்கிறாள். அந்த நேரத்தில் பசியோடு வந்து விட்டன் சிறுவன் மண்னாங்கட்டி. பசிக்குது பசிக்குது என அழுது புரள்கிறான். ராசாத்தி தனக்கிருக்கும் பசியிலும் வலியிலும் அவன் முதுகில் சுளீரென போடுகிறாள். அவன் அதற்கெல்லாம் அசரவில்லை.
அவள் சாப்பிட வாயருகே கொண்டு போகும் நேரம், யம்மா எனக்கும்மா என அவன் கஞ்சி கலயத்தை எடுக்க, அவள் பிடுங்க.... கலயம் உடைந்து போகிறது.
கொட்டிய சோற்றை கையில் அள்ளியபடி ஓட்டம் எடுக்கிறான் மண்ணாங்கட்டி. வந்த கோபத்தில் கலயத்தை அவன் மேல் வீசி எறிகிறாள் ராசாத்தி. அழுகிறாள்.
அதே நேரத்தில் அவளுக்கு பிரசவ வலி வர துடிக்கிறாள். அவளுடைய ஒரே உறவான மகனை அழைக்கிறாள். ஒருவாய் சாப்பிட வந்தவனை விரட்டி விட்டோமே என அழுகிறாள்.
அப்படியே இறந்து போகிறாள்.
எங்கெங்கோ சுற்றிவிட்டு மாலை வீடு வந்த மண்ணாங்கட்டி தாயை பார்த்து பிரமை பிடித்தாற்போல் இருக்கிறான்

மாரியாயிக்கு இரவு சாப்பிடும் நேரத்தில் மண்ணாங்கட்டி நினைவு வர மாணிக்கத்திடம் அவனை அழைத்து வர சொல்கிறாள். மண்ணாங்கட்டியை தேடும் போது அவன்
சுடுகாட்டில் இருப்பதாய் சொல்கிறார்கள் அங்கிருக்கும் சிறுவர்கள். சுடுகாட்டில் நின்று கொண்டிருக்கும் மண்ணாங்கட்டியை அழைத்து ஆறுதல் படுத்தி அழைத்து வருகிறார்கள்

அவனுக்கு சாப்பிட சோறு தரும்போது சோறை வெறித்து பார்க்கும் அவன் ஒரு கவள சோற்றை அங்கிருந்த தகர குவளையில் போட்டு கந்தல் துணியால் மூடி வைக்கிறான்

மாரியாயி அவனிடம் அதை சாப்பிட சொல்லும் போது
"அது... எங்கம்மாவுக்கு!" என்கிறான்

குறும்புத்தனமும் துடிதுடிப்பும் குடியோடிப்போய், சாந்தமும் ஏக்கமும் நிறைந்த அவன் கண்கள் மீண்டும் வானத்தை வெறித்தன. கண்களில் நீர் பளபளத்தது-

"என்னடா, அப்படிப் பார்க்கறே?" என்று அவனைப் பிடித்து உலுக்கினாள் மாரி.

"அம்மா...ஆ...ஆ!" - அழுகையில் குரல் கரகரக்க மாரியைப் பிடித்து அணைத்துக்கொண்டு கதறினான் மண்ணாங்கட்டி.

"மவனே!" என்று அவனை உச்சிமோந்து இறுகத் தழுவிக் கொண்டு அழுதாள் மாரி.

இந்த கதையை படிக்கும் ஒவ்வொரு முறையும் கண் கலங்குகிறேன்
ஒரு கதாசிரியன் இந்த அளவுக்கு அத்தனை கதாபாத்திரமாகவும் மாற முடியுமா என் அதிசயிக்கிறேன்.
கதாசிரியரை வணங்குகிறேன்
 
Last edited by a moderator:
ஆஹா! அருமையான திரியொன்றை அரம்பித்திருக்கின்றீர்கள்!
நம்ம மன்ற கதாசிரியர்கள் உங்கள் திரிக்கு பலம் சேர்ப்பார்கள்
என்று நம்புகின்றேன்.

திரி சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்
 
நல்ல முயற்சி நண்பரே. உறவுகளின் கவனம் ஈர்த்த கதைகளை நாமும் அறிந்து கொள்ள அருமையானா வாய்ப்பு. ஆனால் கதைகளை இங்கே தட்டச்சி பதிப்பது உண்மையிலேயே பெரிய விடயம்தான். நானும் முன்பு மேலாண்மை பொன்னுசாமி என்பவரின் கதையை தந்துள்ளேன். இந்த திரி தினமும் நன்றாக பிரகாசிக்க வாழ்த்து.
 
அன்பிற்கினிய நண்பர்கள் நாரதர், பாரதி அவர்களுக்கு மிகவும் நன்றி.

இந்த கதையை படிக்க இந்த திரியை சொடுக்கவும் ஒரு பிடி சோறு
 
நான் படித்த மிக அருமையான கதைகளில் ஒன்று நொண்டி பிள்ளையார். என்ன அருமையான கற்பனை. என்னவொரு வர்ணனை.
மனித மனத்தை சரியாக பரிந்த கதாசிரியர்கள் மட்டுமே இத்தனை அருமையான கதையை தரமுடியும் என நம்புகிறேன்


நொண்டி பிள்ளையார் - ஜெகசிற்பியன்

கதை சுருக்கம்:

நொண்டி பிள்ளையார் கோயிலிலே பக்தர்களுக்கு கற்பூர ஆரத்தி தட்டிலிருந்து விபூதி எடுத்து தருகிறார் பூசாரி ஆண்டியப்பன். அவர் முதுகில் கூன் விழுந்து முதுகு சற்று வளைந்திருக்கிறார். கோயிலில் வழிபட வந்த மின்சார வாரியத்தில் பணிபுரியும் நபரிடம் ஒரு 40 பக்க நோட்டு புத்தகத்தை தருகிறார். அதில் மின்சார வாரிய ஊழியர் சொன்னபடி கோயில் வாசலிலே தெருவிளக்கு அமைக்க வேண்டி விண்ணப்பமும் அதற்கு ஊர்மக்களின் கையெழுத்தும் வாங்கி தந்திருந்தார் ஆண்டியப்பன்.

அன்று கோவிலில் கூட்டம் குறைந்த பின் ஆண்டியப்பன் தன் கடந்த காலத்தை நினைத்து பார்க்கிறார்.

பல வருடங்களுக்கு முன்பு அந்த ஊருக்கு வந்த ஆண்டியப்பனுக்கு கடுமையான பசி. சாப்பிட்டு நாட்களாகி விட்டது. அவர் தோளில் ஒரு துணி மூட்டையும் கையில் ஒரு போணியும் இருந்தது. அப்போது சாலையில் மாட்டுவண்டியில் செங்கல் கொண்டு செல்பவரிடம் அண்ணா, ஏதாவது காசு போடுண்ணா என்கிறார்.
மாட்டுவண்டிகாரரோ எங்கிட்ட காசில்ல, நீ கேட்டிட்ட நா கேக்கல அவ்வளவு தான் வித்தியாசம் என தான் சூளையிலிருந்து அதிகமாய் கொண்டு வந்திருந்த இரண்டு செங்கலை எடுத்து போடுகிறார். அதைவைத்து என்ன செய்ய...? ஆண்டியப்பன் மரத்தடியில் படுத்து களைப்பு மிகுதியில் தூங்கி விடுகிறார்.

அப்போது அந்த பக்கமாக வரும் பொம்மை விற்கும் வயோதிகர், வெயிலுக்காக மரத்தடியில் அமர்ந்து இளைப்பாறி பொம்மைகளை அடுக்கி வைக்கிறார். அப்போது ஒரு பிள்ளையார் பொம்மையில் கை உடைந்து போயிருக்க வருத்தத்துடன் அதை வெளியே எடுத்து வைத்து விடுகிறார். சிறிது நேரம் இளைப்பாறி விட்டு பொம்மை விற்பவர் சென்று விடுகிறார்

தூங்கி எழுந்த ஆண்டியப்பன் தனக்கு பக்கத்தில் சில்லறை காசுகள் கிடப்பதை பார்த்து அதிசயிக்கிறார். அதாவது அனாதை பிணம் என்று எண்ணி பொதுமக்கள் தூரநின்று காசு போட்டுவிட்டு போயிருந்தனர். மேலும் அருகில் கை உடைந்த பிள்ளையார் பொம்மையையும் பார்த்தார். தன் முதுகிலும் கூன் இருப்பதால் பிள்ளையாருக்கு ஒரு கை இல்லாதது ஒரு குறையாக தோன்றவில்லை. தன்னிடமிருந்த இரண்டு செங்கலை தலைகீழ் V வடிவத்தில் வைத்து அதில் பிள்ளையாரை வைக்கிறார். அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு அருகில் இருந்த குழாயில் நீரை போணியில் பிடித்து குடித்தார். முகம் கழுவினார். இப்போது களைப்பு நீங்கியிருந்தது. மேலும் உற்சாகமும் ஏற்பட்டிருந்தது. எங்காவது வேலை கேட்டால் என்ன என தோன்றியது அவருக்கு.

அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில வீடுகள் மட்டுமே இருந்த அந்த ஊரில் சற்று தொலைவில் ஒரு பாத்திரம் செய்யும் கம்பெனி இருந்தது. அங்கு வேலை கேட்க சென்றார். வேலை கேட்க செல்லும்போது அந்த துணிமூட்டையும் போணியும் வேண்டாமென தோன்ற போணியை பிள்ளையாருக்கு பக்கத்திலேயே வைத்து விட்டு சென்றார். ஆண்டியப்பனுக்கு அங்கு இரவு காவல் புரிய வேலை கிடைத்தது. மகிழ்ச்சியுடன் திரும்பினார். பிள்ளையார் அதற்குள் தனக்கென சிலபக்தர்களை பிடித்திருந்தார். யாரோ பிள்ளையாருக்கு பூ ஊதுபத்தி எல்லாம் வைத்திருந்தனர். மேலும் போணியை உண்டியலாக நினைத்து காசும் போட்டிருந்தனர்

ஆண்டியப்பன் ஆச்சர்யத்துடன் மகிழ்ந்து அந்த காசில் சாமிக்கு வேண்டியதை வாங்கி பூஜை செய்தார். ஊரில் வீடுகள் அதிகமாகின நொண்டி பிள்ளையாரை தரிசிக்க பக்தர்கள் வருகையும் அதிகரித்தது. கோவிலும் வளர்ந்திருந்தது. அப்ரஞ்சி அங்கே பூக்கடை வைத்தாள். நாயர் ஒரு தேங்காய் கடை போட்டார். நொண்டி பிள்ளையார் கோயில் பஸ் ஸ்டாப் ஒன்றும் அமைந்தது.

ஆண்டியப்பன் தன் கடந்த காலத்தை நினைத்து பார்த்திருந்தார்

கோவில் வாசலில் தெருவிளக்கு கம்பமும் அமைத்தார்கள். மின் இணைப்பு ஓரிரு தினங்களில் கொடுக்கப்படலாம்.
பூக்கடை அபரஞ்சி அவ்வப்போது உணவு பலகாரம் என ஏதாவது ஆண்டியப்பனுக்கு தருவாள். அவர்களுக்குள் ஒருவித சினேகம், அன்பு ஏற்பட்டிருந்தது.
ஒருமுறை அப்ரஞ்சி தன் பண கஷ்டத்தை சொல்லி ஆண்டியப்பனிடம் உதவி கேட்டாள். ஆண்டியப்பன் தன்னால் உதவ முடியவில்லை என்பதை சொல்லி வருந்தினான். அப்போது அவள் கோயில் உண்டியலில் இருந்து பணத்தை எடுத்து தரும்படியும் அடுத்த மாதம் சீட்டு எடுத்து பணத்தை கொடுத்து விடுவதாக கேட்கிறாள். ஆண்டியப்பன் பதறி போய் தனக்கு எந்த நிலை வந்தாலும் கோவில் பணத்தை எடுக்க மாட்டேன். அது பிள்ளையாருடையது என கூறி விடுகிறார்.
ஒருநாள் ஆண்டியப்பனுக்கு அரசாங்கத்திடமிருந்து ஒரு கடிதம் வந்தது. திரு ஆண்டியப்பன் நொண்டிபிள்ளையார் கோயில் தர்மகர்த்தா என குறிப்பிட்டிருந்தது. அவருக்கு படிக்க தெரியாததால் மின்சாரவாரிய நண்பரிடம் படிக்க சொல்லி கேட்கவேண்டும் என பத்திரப்படுத்தி எடுத்து வைத்தார். சில தினங்களுக்கு பிறகு அரசாங்க அதிகாரி ஒருவரும் டவாலி ஒருவரும் வந்தனர். மிஸ்டர் ஆண்டியப்பன் யார் என கேட்டனர் நாந்தானுங்க சாமி என வந்தார் ஆண்டியப்பன். அரசு அதிகாரி தான் இந்து அறநிலையதுறையில் இருந்து வருவதாக சொன்னார்.

சில தினங்களுக்கு முன் கடிதம் அனுப்பியதை சொல்லி இனிமேல் இந்த நொண்டி பிள்ளையார் கோயிலை அறநிலையதுறை எடுத்துக்கொள்ளும் நீங்க விரும்பினால் கோயிலில் பூசாரியாக பணியாற்றலாம் என்றார். ஆண்டியப்பன் அதிர்ந்து போய் இல்லை சாமி இது என்னுடைய கோயில் என்கிறார். அதிகாரியோ கோவில் இடம் அரசுக்கு சொந்தமானது, ஊர்பணத்தில் தானே கட்டினாய், எப்படி உன்னுடைய கோயில் ஆகும், ஒரு நாளைக்கு உண்டியலில் நூறு ரூபாய் வருமா இத்தனை காலமாக உண்டியல் பணத்தையெல்லாம் என்ன செய்தாய் என விசாரிக்கிறார். உண்டியல்ல அவ்வளவு பணமா புழங்குது..? என அதிர்கிறார் ஆண்டியப்பன். அதிகாரி உறுதியாய் சொல்லி விடுகிறார் இன்று முதல் கோயில் அறநிலையதுறைக்கு சொந்தம். ஆண்டியப்பன் விரும்பினால் அங்கே பூசாரியாக பணியாற்றலாம்.

ஆண்டியப்பன் சொன்னார், ஆமா சாமி இடம் அரசாங்க இடம்தான், கோயில் கட்டின பணம் ஊர்க்காரங்க குடுத்ததுதான், இதையெல்லாம் நீங்களே வச்சுக்கோங்க ஆனா பிள்ளையார் என்னோட பிள்ளையார் என்றவர் பிள்ளையாரையும் தன் துணிமூட்டையையும் எடுத்த்க்கொண்டு வேகமாய் போகிறார்.
புதிதாக போட்ட தெருவிளக்கு கம்பத்தில் மின்விளக்கு பளிச்சென்று எரிந்தது.

இந்த கதையை வலைதளங்களில் தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை. அதனால் சற்று விரிவாக விவரித்துள்ளேன்.
நான் ஆச்சர்யப்படும் கதைகளில் இதுவும் ஒன்று. கதையை படிக்கும் போது இது உண்மை சம்பவமோ என எண்ணும் அளவுக்கு வர்ணனை இருக்கும்.
தமிழ் துணைப்பாட நூலில் இந்த கதை இடம் பெற்றிருந்தது.

ஒருமுறை சில வருடங்கள் ஒரு அலுவலகத்தில் பணியாற்றி விட்டு ஏதோ காரணத்தால் அங்கிருந்து விலக நேர்ந்தபோது
இந்த ஆண்டியப்பன் கதாபாத்திரம் கண்ணின் முன் நின்றது.
 
நல்ல விவரிப்பு திரு.கீழை நாடான் அவர்களே! எனக்கும் இதே போன்ற ஒரு கதையை சிறு வயதில் படித்தது போல ஒரு நினைவு.

எல்லாமே காசுதான் (?) என்பதை மெய்ப்பிக்கிறது இக்கதை. உங்கள் மனம் கவர்ந்த கதைகளைத் தட்டச்சி காணத்தருவதற்கு மிக்க நன்றி.
 
நொண்டிப் பிள்ளையார், ஒருநாள் கழிந்தது, காளையார் கோவில் ரதம் இவையெல்லாம் +1, +2 ல படிச்ச நான் டீடெய்ல் கதைங்க..

:D :D :D
 
நல்ல விவரிப்பு திரு.கீழை நாடான் அவர்களே! எனக்கும் இதே போன்ற ஒரு கதையை சிறு வயதில் படித்தது போல ஒரு நினைவு.

எல்லாமே காசுதான் (?) என்பதை மெய்ப்பிக்கிறது இக்கதை. உங்கள் மனம் கவர்ந்த கதைகளைத் தட்டச்சி காணத்தருவதற்கு மிக்க நன்றி.
நொண்டிப் பிள்ளையார், ஒருநாள் கழிந்தது, காளையார் கோவில் ரதம் இவையெல்லாம் +1, +2 ல படிச்ச நான் டீடெய்ல் கதைங்க..

:D :D :D
நானும் ஒருமுறை 11 அல்லது 12ம் வகுப்பு துணைப்பாட புத்தகத்தில் தான் இந்த கதையை படித்தேன்

பின்னூட்டம் தந்து ஊக்கப்படுத்தியமைக்கு மிகவும் நன்றி
 
நண்பர்களே நினைவில் நின்ற கதைகளில் இந்த வார கதை நம் மன்றத்தில் பலரும் படித்தது.
ஆடி நந்தவன இதழில் இடம்பெற்றது.
பலரையும் பாதித்தது.
ஆம்...!

3. நோட்டீஸ¤ம் புள்ளட்கோதும் - அன்பு ரசிகன்
கதை சுருக்கம்

சீ-பிளேனிலிருந்து (நோட்டமிடும் விமானம்) துண்டு பிரசுரங்களை வீசிவிட்டு செல்கின்றனர் சிங்கள ராணுவத்தினர். சிறுவர்கள் அதை ஆர்வத்துடன் எடுக்கிறார்கள்.
நாளை பள்ளிகூடத்தில், யாரிடம் அதிகம் நோட்டிஸ் என போட்டி போடுவதற்காக. பயங்கரவாதிகள் கேம்புக்கு பக்கத்தில் யாரும் இருக்க வேண்டாம் என்பது நோட்டிஸில் இருக்கும் செய்தி.
இங்க இருக்கிற எல்லா வீடும் அந்த பாவியளுக்கு கேம்ப் தான் என்று ராசுபிள்ளை தியாகுவிடம் புலம்புகிறார். ராசுவும் தியாகுவும் அந்த ஊர் அரசு அலுவலகத்தில் பணி.

தன் கால்சட்டை நிறைய நோட்டீஸ¤களை நிரப்பி கொண்டு "இங்க பாத்தியளா என்னட்ட எத்தின நோட்டிஸ் இருக்கெண்டு" என அறிமுகமாகிறான் கதையின் நாயகன் பவி, எட்டு வயது பாலகன்-ராசுவின் கடைக்குட்டி. தேனீருக்கு பனங்கட்டி துண்டு எடுத்துவர சொல்ல (சீனி விலை தங்கத்துக்கு நிகராய் விற்கபடுவதால்) இரண்டு மூன்று பனக்கட்டிகளை கால்சட்டை பையில் திணித்து கொண்டு ஒன்றை மட்டும் நீட்டுகிறான் பவி. அவனுடைய கள்ளத்தனத்தை அறிந்த தாய் அவனை மடியில் போட்டு கால்சட்டை பையில் இருந்தவற்றை கைப்பற்றுகிறாள். இதனால் கோபமடைந்த மகனை தன்னிடமிருந்த பனங்கட்டியை கொடுத்து சமாதானம் செய்கிறார் ராசு. தன் செல்லமகன் பவி ஜாதகபலனால் தான் இந்த வீடு கட்ட முடிந்தது என அவருக்கு நம்பிக்கை
இரவு சாப்பாடு நேரத்தில் "டேய் இன்னிக்கு எத்தினி நோட்டிஸ் பொறுக்கினெ" என அண்ணன் கேட்க
நான் இன்னும் எண்ணல..... பொறு என்கிறான் பவி

மறுநாள் நோட்டிஸை தன் நண்பர்களுடன் காட்டி மகிழ்ந்தான். அதை பார்த்த பவியின் நண்பன் "இங்க பார் என்னட்ட எத்தன புள்ளட் கோது இருக்கு என காட்டியவன் வீட்டில் உரபாக்குக்குள்ள வேற வச்சிருக்கேன், இதுண்ட ரவக்கூடு கூட என்னட்ட வீட்டில இருக்கு என பெருமையுடன் மல்லுகட்டுகிறான்.

பவியின் மனம் துவண்டாலும் "இது நேற்று போட்ட நோட்டிஸ் உன்னட்ட நேற்று போட்ட புள்ளட் கோது இருக்கா? என்கிறான் நண்பன்.
மனதிற்குள் தானும் ஒரு தொகுதி புள்ளட் கோது சேர்த்து விட வேண்டும் என மனதில் நினைத்துக்கொண்டான் பவி.

பாடசாலை விட்டு நண்பர்களுடன் அரட்டை அடித்தபடி வரும் பவி, பூவரசு மர கிளையை பிடுங்கி தொட்டாசினுங்கி செடிகளை தட்டி அவை சிணுங்குவதை ரசிப்பதும், பூவரசு இலையில் நாதஸ்வரம் வாசிப்பதும், அதற்கேற்ப தலையாட்டுவதும் பதையில் உள்ள வேலிகளில் கம்பால் அடித்து கொண்டு நடப்பது, யாரடா அது என அதட்டினால் சத்தம் போடாமல் நடப்பதும் கண்ணில் பட்ட மாமரங்களில் கல்லடித்து நண்பர்களுடன் மாங்காய் உண்பதும், வெள்ளை சீருடை மண் நிறத்திற்க்கு மாறுவதும் கவிதை தனமாய் விவரிக்கிறது கதை. கோகுலத்தில் கண்ணனை நினைவூட்டுகிறது.

வீட்டுக்கு வந்ததும், அழுக்கு உடையை துவைக்க கிணற்றடியில் போட சொல்கிறாள் அம்மா. உடையை மாற்றிக்கொண்டு வீட்டுக்குள் நுழையும் நேரம் வான்பரப்பில் இரண்டு சியாமா செட்டி ரக விமானம் வர ஐ.. அம்மா இங்க பாருங்க ரெண்டு பொம்பர் வந்து சுத்துது என குதிக்கிறான் பவி.

அதே நேரம் அங்கு ராசுவும் வர பங்கருக்குள் (பதுங்கு குழிக்குள்) ஓடுங்க என்று குரல் கொடுக்க எல்லோரும் பங்கருக்குள் ஒளிகிறார்கள். அம்மா அண்ணன் இன்னும் வரல என கேட்கிறான் பவி. அதே நேரத்தில் தாழ்வாக பறந்த விமானம் இரண்டு குண்டுகளை வீசிவிட்டு சென்றது. அவர்கள் வீட்டுக்கு அருகில் 200 மீட்டர் தூரத்தில் குண்டு விழுந்து வெடிக்கிறது. மேலும் 50 கலிபர் துப்பாக்கியால் அந்த பகுதியில் சுட்டு விட்டு தங்கள் இருப்பிடத்துக்கு திரும்புகிறது

ராசு வேலைக்கு-கடைக்கு போகிறார்,பவி-க்கு அந்த புள்ளட் கோதுகள் கிடைக்க போகுது என்ற குதூகுலம். அவங்கள் "போட்டாங்கள் போல" என அம்மா சொல்லவும் துப்பாக்கியால் சுட்ட அந்த இடத்துக்கு போகிறான் பவி. டே அங்க போகாத நீ ரத்தத்த பாத்தால் பிரச்னை-அங்க ரெண்டு பொடி (பிணம்) இருக்காம் என்கிறார் ராசு

பவி மீண்டும் கெஞ்சி கேட்க "கவனமா போட்டு கெதியா வாடாப்பு" என்கிறார்

துப்பாக்கி சூடு நடந்த இடத்துக்கு போகிறான் பவி. அங்கே இறந்திருந்த உடலங்களுக்கு அருகில் சிலர் கூடியிருந்தனர். அதற்கு எதிர்புறமாக அவன் எதிர்பார்த்த மாதிரியே கோதுகள் இருக்க ஆவலுடன் பொறுக்குகிறான். அதே நேரத்தில் உலங்கு வானூர்தி வரும் சத்தம் கேட்டு கூட்டத்தினர் விலகி ஓட பவி தன் கால்சட்டை பைகளை கோதுகளால் நிரப்பினான். ஒரு பெரியவர் டேய் அவன் சுடபோறான் ஓடிவாடா என குரல் கொடுக்க, அவன் சின்னபிள்ளய சுடமாட்டன் என சொல்லிவிட்டு புள்ளட்கோதுகளை பொறுக்குகிறான் சிறுவன்

அதே நேரம் அந்த அரக்கர்களின் துப்பாக்கி குண்டுகள் சிறுவனின் முதுகை பதம் பார்க்கின்றன. அவனை தாங்க வந்த முதியவரையும் பதம்பார்க்கின்றன.
இருவர் உயிரும் அங்கேயே பறி போகிறது.

சற்று நேரத்தில் அவனை தேடிவரும் பவியின் அண்ணன் சுட்டெரிக்கும் வெயிலில் கிடக்கும் தம்பியை பார்த்து "டேய் சுடப்போகுது எழும்பு" என்றபடி எழுப்புகிறான். பிறகு தம்பியின் உடலை தூக்கி வந்து வீட்டுப்படலை கோபத்துடன் உதைக்கிறான். முற்றத்தில் படுக்க வைத்துவிட்டு அருகில் தானும் படுக்கிறான். எந்த வித அசைவுமின்றி வானத்தை வெறித்து பார்த்துகொண்டிருக்கிறான்

தாய் மயங்கி விழுகிறாள். அவளுக்கு தண்ணீர் தெளிக்கிறார்கள்.
அவனை அனுப்பி வைத்த தந்தை குற்ற உணர்வுடன் சத்தம்போட்டு அழமுடியாமல் தவிக்கிறார்
எனக்கு பந்தம் பிடிக்கும் காலத்தில் உனக்கு ஒப்பாரி வைக்க வைத்து விட்டாயே என கதறுகிறார் பாட்டி.
இரவு முழுவதும் தன் மடியிலேயே மகனை வைத்திருக்கிறாள் தாய்.
கதாசிரியன் அன்பு ரசிகனின் வார்த்தையிலேயே சொல்வதென்றால் "கன்றுக்குட்டியின் கைகள் அந்த பசுவை அணைக்க மறுத்ததுதான் கொடுமை'
மறுநாள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடலுக்கு அவன் நண்பன் அந்த புள்ளட் கோதுகளை காணிக்கையாக வைக்கிறான்

சாதாரணமானவர்கள் எப்படி தீவிரப்போக்கு கொண்டவர்களாய் மாறுகிறார்கள் என்பதை அருமையாய் விளக்கும் கதை

கதை முழுவதும் வீட்டை சுற்றியே சென்றாலும் சரியாக நகர்ந்து சென்று சொல்ல வருவதை அழுத்தமாய் சொல்கிறது.
இலங்கையில் நடக்கும் கொடுமையை கண்முன் கொணரும் இந்த கதை படிப்பவரின் கண்களையும் குளமாக்குகிறது. அங்கிருக்கும் சூழலை விளக்குகிறது.
ஒரு நிகழ்கால வரலாற்றினை சொல்லும் காவியம் என்றாலும் மிகையில்லை.
தம்பியின் உடலை தூக்கி வரும் காட்சியை வர்ணிக்கும் நேரத்தில் கதாசிரியர் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்
என்றுதான் சொல்ல வேண்டும்
இந்த கதையை சிங்களமொழியில் மொழிப்பெயர்த்து சிங்கள பத்திரிக்கைகளில் இடம்பெற செய்தால் கொஞ்சமேனும் அவர்கள் மனதை உறுத்தும்

புதியவர்கள் கதையினை படிக்க இந்த திரியினை சொடுக்கவும்: [COLOR="\DarkRed"]நோட்டீஸூம் புள்ளட் கோதும்[/COLOR]
 
உங்களின் புண்ணியத்தினால் நானும் மீண்டும் வாசித்தேன்... உங்களது விமர்சனம் கிடைத்ததை எண்ணி பெருமைகொள்கிறேன்.
 
நினைவில் நிற்கும் கதைகளில் அன்புவின் கதையும் இடம்பெற்றது குறித்து நானும் பெருமிதம் கொள்கிறேன். கதைக்கருவும், சொல்லப்பட்ட விதமும் மிகச்சிறப்பானவை என்பதை உங்களின் தேர்வு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது திரு.கீழை நாடான் அவர்களே. மிக்க நன்றி.
 
உங்களின் புண்ணியத்தினால் நானும் மீண்டும் வாசித்தேன்... உங்களது விமர்சனம் கிடைத்ததை எண்ணி பெருமைகொள்கிறேன்.
உண்மையில் நினைவில் நிற்கும் கதையை படைத்திருக்கிறீர்கள்.:icon_b:
மனமார்ந்த பாராட்டுக்கள்

நினைவில் நிற்கும் கதைகளில் அன்புவின் கதையும் இடம்பெற்றது குறித்து நானும் பெருமிதம் கொள்கிறேன். கதைக்கருவும், சொல்லப்பட்ட விதமும் மிகச்சிறப்பானவை என்பதை உங்களின் தேர்வு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது திரு.கீழை நாடான் அவர்களே. மிக்க நன்றி.
நிச்சயமாய்.
இந்த கதையில் சொல்லப்பட்டிருப்பது போல் சொல்ல வரும் விஷயத்தை யதார்த்தமாக அழுத்தமாக சொல்வதற்கு நிறையவே யோசிக்க வேண்டும்.
தாங்கள் தரும் ஊக்கத்துக்கு மிகவும் நன்றி.

ஒரு சிறு வேண்டுகோள்: தயவு செய்து என் பெயருக்கு முன்னால் "திரு" வேண்டாமே. நான் அத்தனை மூத்தவன் அல்ல.
 
நல்லாயிருக்கு கீழைநாடன்
இந்த திரியை இப்பதான் முதல் முறையா பார்க்கிறேன், மனதில் நின்ற கதையை பற்றி பேசுவதே சுகம் தான், வாழ்த்துக்கள்.
 
நல்லாயிருக்கு கீழைநாடன்
இந்த திரியை இப்பதான் முதல் முறையா பார்க்கிறேன், மனதில் நின்ற கதையை பற்றி பேசுவதே சுகம் தான், வாழ்த்துக்கள்.
நன்றி மூர்த்தி.
நீங்களும் உங்கள் மனம் கவர்ந்த கதைகளை பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
 
ஒரு பிரமுகர் - ஜெயகாந்தன்
கதைச் சுருக்கம்:

ஒரு கிராமத்து சாலை-அதில் ஒரு பாழ்மண்டபம்- அதற்கு எதிரே ஒரு வேலமரம்-வேல மரத்தை சுற்றி படர்ந்திருக்கும் ஒரு நாள்பட்ட காட்டுக்கொடி-
அதில் எப்போதும் விழும் நிலையில் உள்ள பழுப்பு இலை. அதற்கு நேர் கீழே ஒரு சிறு மண்ணுருண்டை...

மீசையை தடவியபடி கம்பீரமாக வருகிறது ஒரு பெரிய கட்டெறும்பு. "உலகத்தை பார்த்து ரொம்ப நாளாச்சு" என ஒரு சிங்கத்தை போல் தலையை ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்கு திருப்பி உலகை நோட்டம் விடுகிறது.
அங்கு வந்த சிற்றெறும்பை பார்த்து என்னடா பயலே செளக்கியமா என குசலம் பேசியது. சிற்றெறும்பு பயந்து ஓட்டம் பிடிக்கிறது.
உடம்பில் பயமிருக்கிறதா..? பிழைத்து போ என்றவாறு மீசையை நீவி விட்டபடி எழுந்து நின்று உலகை பார்க்க தலையை நிமிர்த்தும் போது..
ஏதோ குறுக்கே மறைக்கின்றது.. என சிந்தித்த கட்டெறும்பு ஓ.. இந்த மலை தானா என்றவாறு மண்ணுருண்டையின் மேல் தனது கையை வைத்து தலை நிமிர்ந்து சந்தையில் இருந்து வரும் மனிதர்களை பார்த்து "யாரது மனுச பசங்களா.. சுத்த சோம்பேறிகள்" என சிந்திக்கிறது
திடீரென அதற்கு சந்தேகம் "உலகில் மனுச பசங்க ஜாஸ்தியா.? நம்ம எறும்பு கூட்டம் ஜாஸ்தியா? யோசித்து பார்க்கிறது... கணக்கு சரிவரவில்லை.
யாரையாவது கூப்பிட்டு கேட்கலாம் என மண்ணுருண்டைக்கு பின்னே நின்று கொண்டு கையை உயர்த்தி கடுகு பிளந்தன்ன வாயை திறந்து,
"ஏ மனுச பயல்களா..உங்களில் ஒருவன் இங்கே வாங்க..? என கர்ஜனை செய்கிறது.
அவ்வளவு தான்..சாலையில் போய்க்கொண்டிருந்த மனிதர்கள் பாழ் மண்டபத்தில் ஓடி ஒளிந்து கொண்டனர்
அடடே என்னை கண்டு இவ்வளவு பயமா என கைதட்டி ஆரவரித்த படி மண்ணுருண்டையை சுற்றி வருகிறது கட்டெறும்பு.

என்ன இது இந்த வெய்ய காலத்தில திடீர்னு மழை புடிச்சுகிச்சு..
கோடைமழை அப்படித்தான்..
என பாழ்மணடபத்தில் மனிதர்கள் பேசி கொள்கிறார்கள்

அதை கேட்ட எறும்பு "இது என்னடா சுத்த பைத்தியகாரத்தனமா இருக்கே... மழையாமில்ல.. நான் வெளியத்தானே நிக்கறேன்.. வானம் இருட்டியிருக்கு வாஸ்தவந்தான்.. அதுக்கே இவ்வளவு பயமா? சுத்த பயந்தாங்கொள்ளி பசங்க..இந்த மனுச பசங்களே இப்படித்தான். ஒண்ணுமில்லாததுக்கெல்லாம் பிரமாதப்படுத்துவாங்க"
சிரித்து குதிக்கிறது கட்டெறும்பு. எறும்பின் கேலிசிரிப்பு மண்டபத்தில் இருப்பவர்களுக்கு கேட்கவில்லை. வானம் பளீரென பிரகாசிக்கிறது.
சற்று நேரத்தில் உஷ்னம் தகித்தது. மண்டபத்தில் ஒதுங்கிய மனிதர்கள் நடையை கட்டுகிறார்கள்

வேலமரத்தில் படர்ந்திருந்த கொடியிலுள்ள பழுப்பு இலையில் படிந்திருந்த நீர்த்துளி, ஒவ்வொன்றாய் ஒன்று சேர்ந்து முத்தாய் திரண்டு மெல்ல மெல்ல உருண்டு கீழே இருந்த மண்ணுருண்டையின் மீது ஆரோகனித்திருந்த கட்டெறும்பின் மேல் விழுகிறது. தொடர்ந்து பழுப்பு இலையும் உதிர்ந்து மண்ணுருண்டையின் மேல் விழுகிறது.

ஐயோ பிரளயம்.. பிரளயம்.. வானம் இடிந்து விழுந்து விட்டதே என கதறியவாறு பழுப்பு இலையை நீக்கி கொண்டு வருகிற கட்டெறும்பு மண்ணுருண்டை கரைந்திருப்பதை பார்த்து கூக்குரலிடுகிறது. அடே மனிதர்களே சீக்கிரம் ஓடுங்கள்... பிழைத்து போங்கள்.. பிரளயம் வந்து விட்டது.. என அலறியவாறு செய்வதறியாது பரபரத்து முன்னும் பின்னும் ஓடுகிறது.

"அப்பா என்ன உஷ்ணம்" என மேல்துண்டை வீசிக்கொண்டு ஒருவன் மரத்தடியில் ஒதுங்குகிறான்.

அட பைத்தியக்கார மனிதர்களே! ஒன்றுமில்லாததுக்கெல்லாம் உலகமே புரண்டு விட்டதாய் ஓடுகிறீர்கள்.. பேராபத்து விளைந்து விட்ட இந்த சமயத்தில் முட்டாள் தனமாக நடந்து கொள்கிறீர்களே.. உங்கள் முகத்தில் விழிக்க கூட வெட்கமாயிருக்கிறது.. நான் இப்பொழுது எப்படி என்னை பாதுகாத்து கொள்வேன்? பிரளயம் வந்து விடும் போலிருக்கிறதே... என கூவியவாறு
விழுந்தடித்து ஓடி தனது பொந்துக்குள் போய் புகுந்து கொள்கிறது கட்டெறும்பு.

இந்த கதை எதைப்பற்றி உருவகப்படுத்துகிறது என்பது சொல்லப்படாவிட்டாலும் கதையின் பெயரைக்கொண்டு பார்க்கும்போது,
நீண்டு பரந்த உலகில் ஒரு எறும்பத்தனை உள்ள மனிதன் தனக்கு சிலர் பயப்படுவதை பார்த்து தான் தான் எல்லாம் ஆணவம் கொண்டு ஆடுவதும்,
தன் அறியாமையால் மிகச்சிறிய விஷயத்தையும் பெரிதாக எண்ணி ஆர்ப்பாட்டம் செய்வதையும் சுட்டி காட்டுவதாய் எண்ணிப்பார்க்க முடிகிறது.

வாழ்வில் தோன்றும் எத்தனையோ சிறுசிறு இன்னல்களை மனிதர்கள் பெரிய பிரளயமே வந்து விட்டது போல் எண்ணி பயப்படுகிறார்கள் என்பதாகவும் எண்ணி பார்க்க முடிகிறது

எறும்பை பற்றிய வர்ணனை மிக அருமையானது. "கதாயுதத்தை பூமியில் ஊன்றிக்கொண்டு நிற்கும் பீமசேனனைப்பற்றி அதற்கு தெரியுமோ என்னவோ..அதன் பாவனை அப்படி இருந்தது" என்ற வரிகளில் எறும்பின் தோரணையை கண்மும் காட்டுகிறார் காதாசிரியர்.
கதைக்கான கருவும், அதை சொல்ல எடுத்துக்கொண்ட கற்பனையும், அதை சொல்லிய விதமும்.. !!! பாராட்டுக்கெல்லாம் அப்பாற்பட்டது.
ஞான பீட நாயகனின் கிரீடத்தில் இந்த கதையும் ஒரு வைரக்கல்.
தமிழ் துணைப்பாட நூலில் இடம்பெற்ற சிறுகதை.
 
எறும்பின் மூலமாக, அகந்தை மனிதனின் ஆணவம் தெரிகிறது. தெரியப்படுத்திய விதம் நீங்கள் சொன்னதைப்போல அசத்தலாக இருக்கிறது. உண்மையிலேயே மிக நல்ல கதை.

தொகுத்துத்தரும் உங்களுக்கு மிக்க நன்றி கீழைநாடாரே.
 
பின்னூட்டம் தந்து தாங்கள் தரும் ஊக்கத்துக்கு மிக நன்றி.
 
ஆஹா...! அருமையான கதை. வழக்கம் போல வித்தியாசமான கதாபாத்திரங்கள், கதைக்களன். தனக்கு வரும் பிரச்சினைதான் பிரச்சினை ; மற்றவை பிரச்சினையே அல்ல என்று நினைக்கும் மனக்கணக்கு இருப்பவர்களுக்கு ஒரு சிறிய மனமாற்றத்தையாவது கொண்டு வர முயற்சிக்கும் நல்ல கதை. சிறிய கதை என்று ஒதுக்கி விடாமல் சிறந்த கதை என்று எங்கள் பார்வைக்கு கொண்டு வந்திருக்கும் கீழை நாடான் அவர்களுக்கும், நல்ல கதையை தந்த ஜெயகார்ந்தனுக்கும் நன்றிகள்.
 
தங்கள் தரும் ஊக்கத்திற்கு மிகவும் நன்றி.

இந்த கதை முழுவதும் நகைச்சுவை உணர்வோடு இருப்பது இந்த கதையின் சிறப்பு.

ஜெயகாந்தன் அவர்களின் கதைகளில் நான் படித்த வரையில் இது மிக சிறிய கதை.
 
இப்படி என்னிடம் நிறைய கதைகள் இருக்கின்றன ..பொறுமையாக நானும் வலையேற்றுகிறேன்
 
Back
Top