சிற்றிதழ்களும் வணிக இதழ்களும்

பேராசிரியர் பாரதி சந்திரன்
தமிழ்ப் பேராசிரியர்
வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரி,ஆவடி


உலகத்தில் இன்று நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுகளும் நாளைய வரலாறாகின்றன. அந்நிகழ்வுகள் அனைத்தும் சரியான இடத்தில், சரியான நோக்கில் பதிவு செய்யப்படும் போது, அது வரலாற்றின் மிகச் சிறந்த அடித்தளமாகி விடுகின்றது. அதே வகையில், இலக்கியங்களும், இலக்கியங்களை உருவாக்குகின்ற இதழ்களும் பதிவு செய்யப்படுவது வரலாற்றிற்கு இன்றியமையாத செயலாக அமையும்.

காலம்தோறும் சமூகம் பல மாறுபாடுகளைப் பெற்றே வந்திருக்கின்றது. சமூகத்தைப் பிரதிபலிக்கின்ற ‘காலக் கண்ணாடியாக’ இருக்கின்ற இதழ்களும் தன்னகத்தில் பல்வேறு நிலைகளில், இதழ் கட்டமைப்பிலும், கருத்தாக்கத்திலும், வெளியீட்டு முறையிலும் மாற்றங்களைத் தன்னகத்தில் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது. அவ்வாறான மாற்றங்களை வரலாற்றின் பக்கங்களில் பதிவு செய்யப்பெறுவது இன்றைய முக்கியமான பணியாக அமைகின்றது. இதழ்களின் வரலாறுகளை; ஆய்வு செய்து விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.
தமிழ்ச் சிற்றிதழ்களின் நவீன இலக்கியப் போக்குகளை ஆய்வதே ஆய்வின் முக்கியக் கருதுகோளாக இருப்பினும், அவ்வாய்வினுக்கு அடித்தளமானச் சிற்றிதழ்களின் வரலாறையும் பதிவு செய்வது ஆய்வினை முழுமை பெறச் செய்யும் என்பதாலும், அவ்விதழ்களின் கருத்தாக்கம், புதுமை முயற்சிகளை உணர்ந்து கொள்ளவும், ஒப்பிட ஏதுவாக இருக்கும் என்பதாலும் இக்கட்டுரை தேவையானதாக அமைகிறது.

இதழ் பெயர்க்காரணம்

“இதழ், ஏடு ஆகிய சொற்களுக்குப் பனையோடு என்னும் பொருள் இருப்பதைக் காண்கின்றோம். முற்காலத்தில் ஓலைகளையே எழுதுவதற்குப் பயன்படுத்தினர். எழுதப்படாத ஓலைகளையும், எழுதப்பட்ட ஓலையையும் ‘ஓலை’-என்ற ஒரே சொல்லாலேயே குறித்தனர். ‘சுவடி’ என்ற சொல் எவ்வாறு சுவடியில் (பனையேட்டில்) எழுதப்பட்ட நூலையும் குறிக்கின்றதோ அவ்வாறே பனை ஓலை என்ற பொருளைக் குறிக்கின்ற இதழ், ஏடு, ஆகிய சொற்கள் செய்திகள் எழுதப்பட்ட அல்லது அச்சடிக்கப்பட்ட ஓலையை அல்லது தாளைக் குறிக்கும் வகையில் இன்று பயன்படுத்தப்படுகின்றது”1 “இதழ் தொடர்பான சொற்கள் தமிழில் முதலில் ‘பத்திரிக்கை’, ‘பத்திரிக்கையாளர்’ என்று வழங்கின தனித்தமிழ் இயக்கம் தோன்றிய பிறகு ‘இதழ்’, ‘இதழாளர்’ ‘இதழியல்’ என்ற சொற்கள் பிறந்தன. ஏடு, மலர், மடல், முடங்கல், தாள், தாளிகை, சுவடி முதலிய சொற்களும் இதழைக் குறிக்கும்”2 சொற்களாகப் பயன்பாட்டில் இருந்தன.
1937-ல் வெளியிடப் பெற்ற மதுரைத் தமிழ்ப் பேரகராதி ‘இதழ்’ என்பதற்குப் ‘புத்தகத்தின் தாள்’ என்று விளக்குகிறது. தனித்தமிழ் இயக்கவாதிகள் பலர் இதழினைத் ‘தாளிகை’ என்ற தனித்தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தினர் என்றாலும் அவை பெருவழக்கமாக மாறிவிடவில்லை. ‘தாளிகை’ எனும் சொல் தாள் இகை எனப் பிரிந்து ‘தாள்வழிச் செய்தி முதலியவற்றைக் கொடுத்தல்’ எனும் பொருளைத் தந்தது.
இதழ்’ என்னும் சொல்லே அறிஞர்கள் மத்தியில் அதிகமாகப் பயன்பாட்டில் இருந்தது. “சித்தாந்த சங்கிரகம்” (1877) என்னும் இதழில் ‘இதழ்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 1877-ஆம் ஆண்டிலேயே அல்லது அதற்கு முன்பிருந்தே ‘இதழ்’ என்ற சொல் பத்திரிகையைக் குறிக்கப் பயன்பட்டமையை அறிய முடிகின்றது”3 எனும் கருத்து உறுதிப்படுத்துகிறது.
பல்வேறு சொற்கள் பயன்பாட்டில் இருந்தது என்றாலும், ‘இதழ்’ எனும் சொல்லே பல்வேறு அறிஞர்கள் மத்தியிலும், இதழாளர்கள் மத்தியலும், படைப்பாளர்கள் மத்தியிலும் மிகுதியாக இன்று பயன்படுத்தப் பெறுகின்றன.
‘இதழ்’ என்பதற்கான விளக்கத்தைத் தமிழ் விக்கிபீடியா வெளிப்படுத்தும் போது,
“இதழ் அல்லது சஞ்சிகை என்பது அச்சிட்டுச் செய்திகளையும், கருத்துக்களையும், இயற்கலை படைப்புக்களையும் அறியவும், பகிர்ந்து கொள்ளவும் பரப்பவும், வெளி வருகின்றவையாகும்”4 என விளக்குகிறது.


சிற்றிதழ் - பெயர்க்காரணம்;;

சிற்றிதழ் என்பதைச் சிறுபத்திரிகைகள் என்றும், சீரிதழ் என்றும் பெயரிட்டு வழங்குகின்றனர். இருப்பினும் இன்று ‘சிற்றிதழ்’ எனும் சொல்லாட்சியைப் பெரும்பான்மையான இதழாளர்கள் பயன்படுத்துகின்றனர். சிற்றிதழ் என்பதற்கான பொருளைத் தரும் பொழுது பொள்ளாச்சிநசன், “நடக்கின்ற நிகழ்வுகளைக் கவனித்து அடக்கு முறைக்காகக் கொதித்து எழுந்து மொழி, கலை, கலாச்சார வளர்ச்சி;க்காகச் சிந்தித்து, உள்ளிருந்து எழுகிற உணர்வுகளை ஏதாவது ஒரு இலக்கிய வடிவ (கதை-கவிதை-நாடகம்) வழி பகிர்ந்து கொள்ள அச்சாக்கி, சுற்றுக்கு விடப்படும் பதிவுகளையே –பத்திரிகைகளையே ‘சிற்றிதழ்கள்’ எனலாம்”5 என்பர்.

“படைப்பிலக்கியத்தை நோக்கமாகக் கொண்டவையும், பிற கலைகளுக்கும் இடமளிப்பவையுமான வணிக நோக்கமில்லாத கலை இலக்கிய இதழ்களையே சிற்றிதழ்கள் என அழைக்கலாம்”6 எனச் சிற்றிதழ்களின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு பெயரமைந்த நிலையை விளக்குவார் பெருமாள் முருகன்.

சிற்றிதழ்கள் தமிழ்ச்சூழலில் மிகப் பெரிய மாற்றத்தையும், வளர்ச்சியினையும் ஏற்படுத்துகின்றவைகளாக அமைந்திருக்கின்றன. ‘சிற்றிதழ்’ என்பதற்குத் தமிழ் விக்கிபிடியா பொருள் தரும்பொழுது, “சிற்றிதழ் என்பது தீவிரமான உள்ளடக்கத்துடன் ஒரு குறிப்பிட்ட வாசகர்களைச் சென்றடையும் இதழ் ஆகும்”7 என்கிறது. சிற்றிதழ்களுக்கு என்று ஒரு கொள்கை உண்டு அது தமிழைச் சரியான பாதையில், சரியான எல்லைக்குக் கொண்டு செல்வது. வாசகரை, வாசகரின் இரசனையை, வாசகரின் படைப்பாற்றலை உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் சென்று அமர வைப்பது என்பதாகச் சிற்றிதழ்கள் செயல்படுகின்றன.

இலங்கை அறிஞர் கா.சிவத்தம்பி சிற்றிதழ்களின் தன்மையினைப் பின்வருமாறு விளக்குவது இங்கு எண்ணத்தக்கதாகும். “இலக்கியச் சிற்றிதழ்கள் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர்களுக்குப் பிரதான தொடர்புச்சாதனமாகும். இதனுள் படைப்பியல் அம்சங்களும் (ஆக்கங்கள்) விமர்சனவியல் அம்சங்களும் இடம்பெறும். தமிழ் இலக்கியச் சிற்றிதழ் வளர்ச்சியை நோக்கும் போது, அது. பிரதானமாக நவீன இலக்கியம் பற்றியதாகவும் அந்த இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட படைப்பிலக்கிய கர்த்தர்கள் விமரிசகர்கள், வாசகர்கள் சம்பந்தப்பட்டதாகவும் அமைவதைக் காணலாம்”8 இக்கருத்தின் மூலம் சிற்றிதழ்களின் படைப்பு முயற்சிகள் காலத்திற்கேற்ப புதுமையாக்கப்படுகின்றன என்பதை அறிய முடிகிறது.

சிற்றிதழ்களும் வணிக இதழ்களும்

முதுபெரும் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் சிற்றிதழ்களின் போக்குகள், வணிக இதழ்களுக்கு மாறாக அமைந்திருக்கும் முறையைக் கூறும் பொழுது, “ஜனரஞ்சகமாக, அதிக விநியோகம் உள்ள, பெரிய முதலீட்டுடன் பெரும் அளவில் நடத்தப்படுகிற, வியாபார ரீதியான பத்திரிகைகளுக்கு முற்றிலும் மாறானவை சிறுபத்திரிகைகள் ‘டுவைவடந ஆயபயணiநௌ’ எனும் ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கம் தான் இது. சிறுபத்திரிகைகள் லட்சியப் பிடிப்பும் கொள்கையில் உறுதியும், சோதனை முயற்சிகளில் ஈடுபாடும், புதுமைகளை வரவேற்பதிலும் வளர்ப்பதிலும் உற்சாகமும், புதிய திறமைகளைக் கண்டு ஊக்கம் தருகிற போக்கும் கொள்பவை”9 என்று கூறுவர். வணிக நோக்குடைய இதழ்கள் எவ்விதமான இலக்கிய வளர்ச்சிக்கும் உதவாதவையாகவும், பழமையினைக் காத்து, புதுமைகளை ஏற்காதவையாகவும், இளம் எழுத்தாளர்களுக்கு வாய்ப்பளிக்காதவையாகவும் அமைந்திருக்கின்றன. அவை, முழுக்க முழுக்க வணிக நோக்குடையவை. அவ்வகை மக்கள் தரப்பினரையும் திருப்திப்படுத்தக் கூடிய வகையிலேயே தங்கள் இதழ்களை வடிவமைக்கின்றனர் என்ற நிலைப்பாட்டை பல அறிஞர்களும் பதிவு செய்துள்ளனர்.

சிற்றிதழ்கள் வணிக இதழ்களுக்கு மாறாக அமைந்திருப்பதை, “வணிக இதழ்கள் அனைத்தும் வாசகனின் பையைக் குறிவைத்து பல்லிளித்தும் கையேந்தியும் குட்டிக்கரணம் போட்டும் தாயத்து விற்றும் தரகு நடத்தியும், கிச்சுக் கிச்சு மூட்டியும் பாம்புக்கும் கீரிக்கும் சண்டை நிகழ்த்தியும் எத்துவாளிப் பிழைப்பு நடத்துகையில், தமிழில் சிறுபத்திரிகைகள் தாம் தமிழனின் சிந்தனைத் தளத்தை உயர்த்த குறிவைத்து இயங்கின”10 என நாஞ்சில்நாடன் விளக்குகிறார்.

வணிக இதழ்கள் பலதரப்பு மக்களையும் திருப்திப்படுத்தி, அவர்களுக்குத் தேவையான செய்தி, பொழுது போக்கு அம்சங்கள், கவர்ச்சிப் படங்கள், அரசியல் என இலக்கியத்திற்கு அப்பாற்பட்டவற்றிலேயே கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலையில் அவை உள்ளன. இவ்வாறு வெளிவரும் இதழ்கள் அதிக அளவு இலாபத்தைக் கருத்தில் கொண்டு, விளம்பரங்களை வெளியிடுகின்றன. இச்சூழலில் வெளிவரும் வணிக இதழ்களின் போக்குகள் பற்றி வல்லிக்கண்ணன் கூறும்பொழுது, “வாசகர்களின் தரம் உயராமல் இருந்தால் தான், பத்திரிகையாளர்களின் மலிவான, தரம் குறைந்த, உற்பத்திச் சரக்குகள் எளிதில் விலையாகிக் கொண்டிருக்கும். வாசகர்களின் அறிவும் சிந்தனையும் ரசனையும் ஈடுபாடும் புதியனவற்றை –நல்லவனவற்றை – உயர்ந்து சிறந்தனவற்றை அறிந்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வமும் வளர்ந்து விடுமானல் பணஅதிபர்களின் ஆசைகள் பாதிக்கப்பட்டு விடும். இதனாலேயே பத்திரிகை நடத்துகிற பண அதிபர்கள் மக்களுக்குப் பிடிக்கிற – மக்கள் விரும்புகிற – சுவையான ரசம் நிறைந்த விஷயங்களையே நாங்கள் கொடுக்கின்றோம் என்று கூறிக் கொண்டு தங்களது வக்கிர ருசிகளையும், கோணல்தனங்களையும் கோளாறான நோக்குகளையும் கதைகள், கட்டுரைகள், செய்திகள், சித்திரங்கள் அனைத்திலும் திறமையாகப் புகுத்தி நாட்டு மக்களின் ரசனையையும் பண்பாட்டையும் அறிவையும் சிந்தனைத் திறனையும் மழுங்கி கொண்டிருக்கிறார்கள்”11 என ஆதங்கப்படுவார். இவ்வாறே வணிக இதழ்களின் போக்குகள் தமிழ்ச் சூழலில் காணப்படுகின்றன.
சிற்றிதழ்களின் நோக்கமும் பயனும்

சிற்றிதழ்களின் நோக்கம் இலக்கியத்தினை மேம்படுத்துவதாகவும், புதுமைப்படுத்துவதாகவும் உலக இலக்கியத்தினுக்கு இணையாக எழுதும் தன்மையினதாகவும் அமைந்திருக்கின்றன. வடிவத்திலும் உள்ளடக்கத்திலும், வெளிப்பாட்டுத் திறனிலும் பல முன்னோடியான மாற்றங்களைச் சிற்றிதழ்கள் கொண்டிருக்கின்றன.

“சிற்றிதழ்களின் வேலை படைப்பிலக்கியங்களை ஊக்கப்படுத்துவதோடு மட்டும் நின்று போவதில்லை. தீவிரமான மதிப்புரைகள் வெளியிடுவதாகும். வணிகப் பத்திரிகைகள் வெளியிடும் மதிப்புரைகள் மேலோட்டமானவை தமிழின் பிரபலமாக வாராந்திரிகள் மதிப்புரைகள் வெளியிடுவதே இல்லை.”12 சிற்றிழ்கள் “ஒரு வகையில் பார்த்தால் பெரிய பத்திரிக்கைகளின் எதிர்ப்பதமாகச் சிறுபத்திரிக்கைகளின் உலகம் அமைந்துள்ளது. ‘Pநசழைனiஉவைல’ என்று சொல்லப்படும் கால முறைமை, இல்லாத தன்மை பெரு இயந்திரங்களுக்குத் தீனி போடும் வண்ணமய அச்சுக்கு எதிரான ஒருவகை ‘ஏழ்மை’ குறைவுபட்ட வாசகர் எண்ணிக்கை. புகழ் வட்டத்தில் வாழும் எழுத்தாளர்களுக்கு மறுதலையாகச் சிந்திக்கும் புதுமையும் ஆர்வமும் அல்லது மேற்கத்திய வழிபாடும் புதுப்படைப்பாளிகளின் பங்களிப்பும் சிறுபத்திரிக்கைக்கு குணங்களை நிர்ணயித்தன”13
‘சிறு’ எனும் அடைச்சொல், சிற்றிதழ்களுக்கு பொருத்தமானதன்று. அவைகள் தாம் பேரிதழ்கள் என்று அழைக்கப்பட வேண்டும் எனும் கருத்தை, “சிறுபத்திரிகைகள் தாம் இன்று நம்பிக்கை அளிக்கக் கூடியவைகளாக இருக்கின்றன. அவைகள் இந்தத் தொழிலைச் சந்தைச் சரக்காக ஆக்காமல். ஒரு குறிக்கோளுக்காகவே நடத்துகின்றன. “குறிக்கோள்” என்பதே முதலாக நிற்கும்போது. சென்றடையும் வட்டமும் சுருங்குவது இயல்பே! எனவே இவைகளை நாம் சிறு பத்திரிகைகள் என்கிறோம். உண்மையில் உள்ளடக்கத்தில் பெரும் பெரும் படைப்புக்களையும் கருத்துக்களையும் சுமக்கும் இந்தப் பத்திரிகைகளைச் சிறுபத்திரிகைகள் என்று அழைப்பது ஒரு முரணுரையே! (Pயசயனழஒ)”14 எனும் மேற்கோள் நமக்கு வெளிப்படுத்துகிறது. இதிலிருந்து சிற்றிதழ்கள் தமிழுக்கு ஆற்றும் பெரும்பணி புலப்படுத்தப்பட்டிருக்கிறது.

தமிழின் தரத்தைக் குறைக்கும் விதமாக இலக்கணப் பிழை, ஆங்கிலக் கலப்பு. கொச்சைத் தமிழ்ச் சொல்லாடல்களைப் பயன்படுத்தும் வணிக இதழ்களுக்கு மாறாகச் சிற்தழ்களின் நோக்கம் தமிழின் தரத்தை உயர்த்துவதாக அமைந்துள்ளன என்பதைப் “பேச்சுத் தமிழும் ஆங்கிலக் கலப்பும் மலர்ந்திருக்கும் பெரும் பத்திரிகைச் சூழலுக்கு முற்றிலும் மாறுபட்டு, தமிழை வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றுபவை சிறுபத்திரிகைகள்”15 எனும் கூற்றின்படி அறிய முடிகின்றது. சிற்றிதழ்களின் நோக்கம். தமிழின் தரம் வளர்ச்சி ஆகியவற்றிலேயே அதன் கவனம் உள்ளன.

நம்மைச் சுற்றி “நடக்கின்ற நிகழ்வுகளைக் கவனித்து அடக்குமுறைக்காகக் கொதித்தெழுந்து மொழி, கலை, கலாச்சார வளர்ச்சிக்காகச் சிந்தித்து உள்ளிருந்து எழுகிற உணர்வுகளை ஏதாவது ஒரு இலக்கிய வடிவ வழி பதிவு செய்து அப்பதிவை ஒத்த கருத்தாளர்களுடன் பகிர்ந்து கொள்ள அச்சாக்கி சுற்றுக்கு விடப்படும் பதிவுகளையே பத்திரிகைகளையே சிற்றிதழ்கள்”16 என்பர் பொள்ளாச்சிநசன். சிற்றிதழ்கள் நவீன இலக்கியத்தினை முன்னெடுத்துச் செல்கின்றன. அவை மொழிபெயர்ப்புகள், கோட்பாட்டுச் சிந்தனைகளுடனான படைப்புகள், புதிய முயற்சிகள், இளம் படைப்பாளர்களுக்கான வாய்ப்புகள் இவற்றைச் சிற்றிதழ்கள் சிறப்பாகச் செய்து வருகின்றன. இவ்விதமான “இதழ்கள், சிந்தனைக்குத் தூண்டுகோல் போன்று பயன்படுகின்றன. பொழுதுபோக்குக் கருவியாகவும், கருத்துப் பரிமாற்றக் கருவியாகவும் மட்டுமின்றிச் சிந்தனை, ஆய்வு முதலியவற்றிற்குத் தூண்டுகோல்களாக இதழ்கள் விளங்குகின்றன.”17
சிற்றிதழ்களின் பயன் குறித்து அறிஞர் அ.மா.சாமி கூறும் பொழுது, “இதழ்கள் எல்லா மக்களும் படிக்கக்கூடிய எளிய தமிழில் இருந்தன. இதற்காகப் புதிய சொற்களையும் படைத்துக் கொண்டன. சில நேரம் ஆங்கிலச் செய்திகளைத் தமிழ்ப்படுத்தவும் புதிய சொற்களைப் படைக்க வேண்டியிருந்தது. இது காலத்தோடு ஒட்டிக் கன்னித்தமிழை வளர்ச்சி அடையச் செய்ததோடு ‘இதழ்த்தமிழ்’ என்ற புதிய பிரிவையும் தோற்றுவித்தது”18 எனக் விளக்குவார். புதியனவற்றை உருவாக்கும் தன்மை கொண்டவைகளாக இதழ்கள் அமைந்திருக்கின்றன.

சிற்றிதழ்களின் நோக்கும் பயனும் குறித்துத் தமிழ் விக்கிப்பீடியா தமது பக்கத்தில், “தமிழ்க் கருத்துருவாக்கத்தில் சிற்றிதழ்களின் பங்கு கணிசமானது. அது வணிக நோக்கில் அமையாததால் கூடிய விமர்சனக் கருத்துச் சுதந்திரத்தைக் கொண்டது. புனிதங்களைக் கட்டுடைப்பதிலும் அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்துவதிலும் சிற்றிதழ் பங்கு கொள்கின்றது. விளிம்புநிலை மனிதர்களைப்பற்றியும் பொதுக் கவனத்தைப் பெறாத பிரச்சனைகள் பற்றியும் சிற்றிதழ் குரல் எழுப்புகிறது. கலகக்காரர்களின் குரல்களை ஒலிக்கச் செய்கிறது. சிற்றிதழ் சமூகத்தின் தொடர் கதையாடலின் ஒரு களமாக இருக்கிறது. துறைசார் விடயங்களை ஆய்வுக்குட்படுத்தி ஆவணப்படுத்துகிறது.”19 என்று இவ்வாறு தெரிவிக்கின்றது. மேலும் இந்த இணையதளத்தில் சிற்றிதழ் குறித்த பதிவானது சிற்றிதழ்களின் தேவையை உறுதிப்படுத்துகின்றது. “எதிர்காலத்தில், தமிழ்ச் சூழலில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டுமானால் அது சிற்றிதழ்களால் மட்டுமே நிகழும் என்பதை உறுதியாகக் கொள்ளலாம்”20 எனவும் தமிழ் விக்கிப்பீடியா தெரிவிக்கின்றது.

அடிக்குறிப்புகள்

1. அகமது மரைக்காயர், ‘தமிழ் இலக்கியக் கொள்கை – 9’, பக்;;.233-234.
2. அ.மா. சாமி, தமிழ் இதழ்கள் தோற்றம் வளர்ச்சி’, ப.83
3. அகமது மரைக்காயர், ‘தமிழ் இலக்கியக் கொள்கை -9’, ப.235
4. றறற.வய.றமைipநனயை.ழசப. பார்வை நாள்: 13.5.14
5. பொள்ளாச்சி நசன், ‘சிற்றிதழ்கள்’, ப.126
6. பெருமாள் முருகன், ‘ஆய்வுக் கோவை -89’, ப.618
7. றறற.வய.றமைipநனயை.ழசப. பார்வை நாள்: 2.6.13
8. கா. சிவத்தம்பி, ஆளமைநூல்: ‘தமிழில் இதழியல்’, ப.543
9. வல்லிக்கண்ணன், ‘தமிழில் சிறுபத்திரிகைகள்’, ப.11
10. நாஞ்சில் நாடன், ‘;தமிழில் சிறுபத்திரிகைகள்’, ப.112
11. வல்லிக் கண்ணன், ‘முற்போக்கு இலக்கியத்திறன்’, ப.52
12. மேலது, ப.123
13. பாலா, ‘தமிழ் இலக்கியத்தின் படைப்புப் பின்புலம்’, ப.59
14. க. பஞ்சாங்கம், ‘எண்பத்திரண்டில் தமிழ்’, ப.187
15. றறற.யனொiஅயணாயi.உழஅ. பார்வைநாள்: 6.3.12
16. பொள்ளாச்சி நசன், ‘தமிழில் சிறுபத்திரிகைகள்’, ப.1
17. செ. சூடாமணி, ‘தீபம் இதழ்கள் - ஓர் ஆய்வு’ – ப.20
18. அ.மா. சாமி, ‘19-ஆம் நூற்றாண்டுத் தமிழ் இதழ்கள்’ பக்.252-253
19. றறற.வய.றமைipநனயை.ழசப. பார்வை நாள்: 13.4.14
20. மேலது, பார்வை நாள்: 13.4.14
 
Last edited:
Back
Top