முழுமையான மது விலக்கு சாத்தியமே!!!
நண்பர்கள் இதனை தாராளமாய் பகிர்ந்து மக்களுக்கு தெளிவு கொடுக்குமாய் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
முழு மதுவிலக்கு முற்றிலும் சாத்தியமே....
அரசுக்கு வருமானம் அவசியம்தான். ஆனால் அரசின் வருமானம் எப்படி இருக்க வேண்டும்?
மக்களின் வருமானத்தின் ஒரு பகுதியாக அரசின் வருமானம் இருக்க வேண்டும். ஆனால் நமது வரியமைப்பு முறையில் வருமான வரி தவிர மற்ற அத்தனையும் தவிர மக்களின் செலவின் ஒரு பகுதியாக இருக்கிறது. அதாவது ஒரு பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனம் அனைத்து வரிகளையும் நுகர்வோரிடமிருந்து பெற்றே செலுத்துகிறார்கள். ஆக எவ்வளவு அதிகமாக வியாபாரம் நடக்கிறதோ அவ்வளவு அதிகம் அரசுக்கு வருமானம்.
அரசுக்கு 1 ரூபாய் வருமானம் வர ஒரு குடிமகன் 3 ரூபாய் செலவழிக்க வேண்டும். அப்படியானால் மக்கள் அதிகம் செலவழித்தால் நாடு முன்னேறுமா என யோசிக்க வைக்கும்.
அப்படி அல்ல. மக்கள் முறையாக செலவழிப்பார்களானால் நாடு முன்னேறும்.
முறையற்று செலவழித்தால் நாடு முன்னேறுவதைப் போல ஆரம்பத்தில் தோன்றினாலும் காலம் போகப்போக மக்களின் கையிருப்பு குறையும். நாடு சிக்கலில் மாட்ட ஆரம்பிக்கும்.
ஒரு நாட்டின் மொத்த மதிப்பானது நான்கு வகைகளில் பிரிந்து கிடக்கிறது.
1. இயற்கை வளம்
2. மக்களின் உழைப்பு
3. அறிவியல் முன்னேற்றம்
மற்றும்
4. மக்களின் செலவு பழக்கங்கள்.
1. இயற்கை வளம்
இது அளவானது. எனவே இதை மாற்ற முடியாது. இயற்கை வளம் நாட்டை விட்டு வெளியேறுவதைக் குறைத்தல், இயற்கை வளத்தை குறைவாக உபயோகித்தல் ஆகியவை மட்டுமே சாத்தியம்
2. மக்களின் உழைப்பு
உழைப்பை சடாரென உயர்த்த முடியாது. உழைப்பை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும். திறன்கள் அதிகரிக்கப்பட வேண்டும். மக்களிடம் நம்பிக்கையும் தெளிவும் இருக்க வேண்டும். ஏமாற்றி பிழைத்தால்தான் வாழமுடியும் என மக்கள் சோர்ந்து விடாத மாதிரி சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும். உழைப்பிற்கான சரியான பலன் கிடைக்க வேண்டும். சட்டப்படி வாழ்வது எளிதாகவும், சட்டம் மீறி வாழ்வது கடினமாகவும் இருக்குமாறு சட்டங்கள் இருக்க வேண்டும். அரசே இதில் தனது சட்டத்தை கூர் நோக்கி திருத்த வேண்டும். மக்களின் திறன் பெருக்கும் திட்டங்கள் அறிவியல் வளர்ச்சி மூலமே சாத்தியம். ஆனால் மக்களின் உழைப்பு நோக்கிய முனைப்பை உருவாக்குவது நல்ல சட்ட விதிமுறைகள். அரசு சட்டங்களை மதிப்போரின் வாழ்வை எளிதாக்க வேண்டும். மிதிப்போரின் வாழ்வை மிகக்கடினமானதாக ஆக்க வேண்டும். இதனால் உழைப்பின் மீது ஆர்வம் கூடும். உற்பத்தி கூடும். வியாபாரம் விருத்தியாகும். அரசின் வருமானம் கூடும்.
3. அறிவியல் முன்னேற்றம்.
உற்பத்தி பெருக்கத்தில் அறிவியல் முன்னேற்றம் மிக முக்கியமானது. இயந்திரங்களின் திறன் அதிகரிக்கப்பட்டு, குறைந்த மூலப்பொருள், குறைந்த நேரம், குறைந்த மனித முயற்சியில் உற்பத்தி செம்மையாக்கப்பட வேண்டும். கழிவுகளைக் குறைக்க வேண்டும். இதனால் மட்டுமே நீண்ட காலத்திற்கு நமது இயற்கை வளத்தை தக்க வைக்க முடியும்.
சக்தி உற்பத்திக்கு முதல் தேர்வாக சூரிய ஒளி, காற்று அலை சக்தி, நீரோட்டம் போன்ற வீணாகும் சக்திகளை உபயோகிக்க வேண்டும். தாவர எரிபொருள் போன்ற நம்மால் தயாரிக்க இயலும் சக்திகளை இரண்டாவது தேர்வாக வைக்க வேண்டும்.
புதிய புதிய தொழில் வாய்ப்புகளை உண்டாக்க வேண்டும். உட்கட்டமைப்பை மிகச் சிறந்ததாக மாற்ற வேண்டும்.
நமது செலவில் ஒரு பகுதி இப்படி அறிவியல் முன்னேற்றத்தில் செல்லுமானால் அரசின் வருமானம் பன்மடங்காகும்.
4. மக்களின் செலவு பழக்கங்கள்.
மக்களுக்கு ஐந்து வகை செலவு பழக்கங்கள் உண்டு.
1. அத்தியாவசிய செலவுகள். உணவு, உடை, வீடு, கல்வி, மருத்துவம், புத்துணர்ச்சியூட்டும் பொழுதுபோக்கு
2. வருமானம் பெருக்குவதற்கான செலவுகள். புதிய தொழில் நுட்பம் கற்றல். புதிய இயந்திரங்கள் உருவாக்குதல். வாங்குதல் என தொழில் மேம்பாட்டுக்காக செலவு செய்வது
3. ஆடம்பர செலவுகள். அத்தியாவசியமில்லா செலவுகள். உதாரணமாக 20 ஆயிரம் ரூபாய் கைபேசி போதுமென்றாலும் வீண்பெருமைக்காக 60 ஆயிரம் ரூபாய் கைபேசி வாங்குவது.
4. பொழுது போக்கும் செலவுகள்.
விளையாட்டு, கலைகள் போன்றவற்றில் செலவு செய்வது. இவற்றால் நேரடியான பலன் இல்லாவிட்டாலும் மனதையும் உடலையும் புத்துணர்வாக்கி சோர்வை போக்கும். இதனால் புதிய சக்தியுடன் வேலையில் ஈடுபட முடியும்.
5. தண்டச் செலவுகள்
மது, சூது, புகைப் பழக்கங்கள், போதை பழக்கங்கள் போன்ற பலன் இல்லா உடலையும் மனதையும் கெடுக்கும் வழிகளில் பணத்தை செலவிடுவது. இதனால் அரசுக்கு ஒரு முறை வருமானம் வரும். ஆனால் இதில் சுழலும் பெரும்பான்மையான பணம் வெறும் செலவாக மாத்திரமே இருப்பதால் இது போகப் போக மனித சக்தியை அழித்து விடும். அறிவியல் முன்னேற்றத்திற்கு தகுந்த அளவு மூலதனம் கிடைக்காமல் தடுக்கும். இதன் வகையில் வருமானம் அதிகரிக்க அதிகரிக்க மற்ற வகைகளில் வரும் வருமானம் குறைய ஆரம்பிக்கும். ஒரு காலகட்டத்திற்கு பின் ஒட்டு மொத்த வருமானம் குறையும்.
.
உதாரணமாக இன்று மது வருமானம் 22400 கோடிகள் என சொல்கிறது அரசு. அப்படியானால் மது உற்பத்தி, வினியோகம், அனைத்து முதலாளிகளின் இலாபம் என கணக்கு பார்த்தால் குடிமக்கள் குறைந்த பட்சம் ஒண்ணரை இலட்சம் கோடி செலவு செய்தால்தான் அரசுக்கு இவ்வளவு வருமானம் வரும்.ஆக தமிழக பட்ஜெட் அளவிற்கு தமிழக மக்கள் தங்கள் பணத்தை மதுவுக்கு செலவு செய்கிறார்கள். அந்த செலவினால் விருத்திக்கு பயன்படுவது இந்த 22400 கோடி மட்டுமே.. அதாவது ஒட்டுமொத்தமாக தமிழம் ஒரு இலட்சம் கோடியை மதுவால் இழக்கிறது. இதுதானே உண்மை நிலை.அதாவது பலன் தராத உடலைக் கெடுக்கும் மதுவுக்கு தமிழ் நாட்டு பட்ஜெட்டை விட அதிகம் மக்கள் செலவு செய்யத்தான் வேண்டுமா? இது நாட்டை வளர்க்குமா? அழிக்குமா?
எனவே மது அடிப்படையிலான பொருளாதாரம் தமிழ் நாட்டின் நிதி நிலைமையை மோசமாக்குமே தவிர வளர்க்காது, இன்னும் இருபது ஆண்டுகளில் அரசின் ஒட்டு மொத்த வருமானம் குறைய ஆரம்பிக்கும். தொலை நோக்கு இல்லாத தலைவர்களுக்கு இது தெரியாது. தெரிந்தவர்களும் இதை வெளிப்படையாக சொல்வதில்லை.
ஆரம்பத்தில் திடீர் வருமானக் குறைவு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் மக்கள் மதுவுக்கு செலவு செய்யும் பணத்தை வருமானம் பெருக்குவதற்கான செலவுகளாக மாற்ற அரசு திட்டங்கள் வகுத்து செயல்படுமானால் மதுவின் வருமானத்தை விட பல மடங்கு வருமானத்தை அரசு பெறலாம்.
உதாரணமாக கட்டமைப்பை உண்டாக்க அரசு பங்கு பத்திரங்கள் வெளியிட்டு இந்த 75000 கோடி ரூபாயில் 25000 கோடி ரூபாயை எளிதில் பெறலாம். சரியான திட்டமிட்ட பரப்புரை உண்டெனில் வெளிநாட்டு வங்கிகளில் கடன் பெறாமல் மக்களிடம் இருந்தே பணம் புரட்டலாம். அதன் மூலம் உற்பத்தியை பெருக்கினால் ஐந்தாண்டுகளில் நாம் பாதை முன்னேற்றத்தை நோக்கி திரும்பிவிடும்.
இறுதியாக
1. சட்டங்கள் சட்டப்படி வாழ்வதை எளிதாக்க வேண்டும். சட்டத்தை மீறுவோர் வாழ்க்கை கடினமானதாக வேண்டும். அப்படி இந்தியாவின் சட்டங்கள் மீளமைக்கப்பட வேண்டும்.
2. மக்களின் திறன் கூட்டல், அறிவியல் வளர்ச்சி திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும்.
3. இயற்கை வளங்கள் கொள்ளை தடுக்கப்பட்டு, இயற்கை வளங்கள் மிகச் சிக்கனமாக திறனுடன் உபயோகிக்கப்பட வேண்டும்
இந்த மூன்றும் செய்தாலே போதும். மது என்னும் அரக்கன் தேவையே இல்லை.!!!