பிளாட்டிபஸ் - ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினம் (4)
ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினங்களில் ஒன்றான பிளாட்டிபஸ் (platypus) பற்றி இப்போது அறிந்துகொள்வோம். ஆஸ்திரேலியாவுக்கு மட்டுமல்ல, உலகுக்கே அதிசயமான உயிரினம் அது. இப்படியும் ஒரு உயிரினம் இருக்கமுடியுமா என்று விஞ்ஞானிகளைத் தலையைப் பிய்த்துக்கொள்ளவைத்த விலங்கு பிளாட்டிபஸ்.
வாத்தைப் போல தட்டையான அலகும், சவ்வினால் இணைந்த கால்விரல்களும், பீவரைப் (beaver) போல வாலும், ஓட்டர் (otter) போல தோலும் ரோமமும், பாம்பைப்போல விஷமும் கொண்ட கலவையான உடலமைப்போடு கூடிய ஒரு அபூர்வ விலங்கினம், உடலமைப்பு மட்டுமல்ல, அவற்றின் வாழ்க்கைமுறையும்தான் எவ்வளவு விசித்திரம்!எலிகளைப் போல மண்ணுக்குள் வளை பறித்து வாழ்ந்து, மீன்களைப் போல் தண்ணீரில் மணிக்கணக்காக நீந்தி உணவுதேடி உண்டு, பாம்பின் முட்டையைப் போல் மெல்லிய தோல்முட்டை இட்டு, பறவைகளைப் போல் அடைகாத்து, பாலூட்டிகளைப் போல் குட்டிகளுக்குப் பால்கொடுத்து வளர்க்கும் அதிசயத்தை என்னவென்று சொல்வது?
1798- இல் தான் முதன்முதலாக இப்படியொரு உயிரினம் இருப்பது உலகுக்குத் தெரியவந்தது. இந்த விலங்கின் பதப்படுத்தப்பட்ட உடல் இங்கிலாந்துக்கு அனுப்பிவைக்கப்பட்டபோது, விஞ்ஞானிகள் மிகவும் குழம்பிப்போனார்களாம். விளையாட்டாய் பீவரின் உடலுக்கு வாத்தின் வாயைத் தைத்துவைத்திருக்கும் ஏதோ ஒரு விஷமியின் வேலை என்றே முடிவுக்கு வந்தனராம். அன்றைய புரளிகளைப் பொய்யாக்கத் தான் பட்ட வடுக்களை சுமந்தபடி அந்த மாதிரிச்சான்று (specimen) லண்டன் அருங்காட்சியகத்தில் இன்றும் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.
கோடிக்கணக்கான வருடங்களாக பூமியில் நிலைகொண்டிருக்கும் இந்த உயிரினத்தைப் பற்றி உலகம் பரவலாய் அறிந்துகொண்டது இருநூறு வருடங்களுக்கு முன்புதான். ஆஸ்திரேலியாவில் கிடைத்துள்ள பிளாட்டிபஸ் எலும்புக்கூடு படிமம் ஒன்று, ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
பாலூட்டிகளில் மோனோட்ரீம்ஸ் என்னும் வகையைச் சார்ந்த ஐந்து இனங்களில் இன்று உயிருடன் இருப்பவை மூன்று இனங்கள்தாம். அவற்றில் இரண்டு எக்கிட்னா (echidna) வகையைச் சார்ந்தவை. மூன்றாவது பிளாட்டிபஸ். இவை இரண்டுமே ஆஸ்திரேலியாவில் மட்டுமே வாழும் உயிரினங்கள் என்பது சிறப்பு.
பிளாட்டிபஸ் என்றால் தட்டையான பாதங்களுடைய என்று பொருள். பிளாட்டிபஸ்ஸின் கால்கள் மிகவும் குட்டையானவை. ஒவ்வொரு காலிலும் ஐந்து விரல்கள் கூரிய நகங்களோடு காணப்படும். நீர்மூஞ்சூறு, வாத்துமூஞ்சூறு, வாத்துவாய் என்றெல்லாம் ஆரம்பகாலத்தில் அழைக்கப்பட்ட அதற்கு இப்போது வாத்துவாய் பிளாட்டிபஸ் (duck-billed platypus) என்ற பெயரே நிலைத்துவிட்டது.
பிளாட்டிபஸ் ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளிலும் தாஸ்மேனியாவிலும் பரவலாகக் காணப்படுகின்றன. நன்னீர் ஏரி மற்றும் ஆற்றுப்படுகைகளில் வளை தோண்டி வசிக்கும் இவை இரவு விலங்குகள் (nocturnal animals). இரவுநேரம் முழுவதையும் நீரில் நீந்தியபடி உணவுண்ணுவதிலேயே கழிக்கின்றன. ஒரு இரவில் ஐந்தாறு கிலோமீட்டர்கள் தூரத்தைக் கடப்பதொன்றும் பெரிய விஷயமில்லை இவற்றுக்கு. இவை ஒரு நாளைக்கு தங்கள் உடல்எடையில் ஐம்பது சதவீத அளவுக்கு இரையுண்கின்றன.
நீருக்கடியில் வாழும் இறால்வகைகள், லார்வாக்கள், புழுக்கள், கிளிஞ்சல் பூச்சிகள் போன்றவையே இதன் உணவு. நீருக்கடியில் மண்ணில் புதைந்திருக்கும் தன் உணவினை மண்ணோடும் சிறுசிறு கற்களோடும் கரண்டி போன்ற அலகால் ஏந்தி கன்னத்துப் பைக்குள் அடக்கிக்கொள்ளும். பின் நீருக்குவெளியில் வந்து அனைத்தையும் வாய்க்குள் அரைத்து விழுங்கும். பிளாட்டிபஸ்ஸுக்கு பற்கள் கிடையாது. பற்களுக்குப் பதிலாக சொரசொரப்பான தட்டுகள் மட்டுமே இருக்கும். எனவே பற்கள் செய்யவேண்டிய வேலையை உணவுடன் அள்ளிவரும் சிறுசிறு கற்கள் செய்துவிடும். பிளாட்டிபஸ்ஸின் அலகு வாத்தைப் போன்று இருந்தாலும் வாத்தினுடையதைப் போல் கடினமானதன்று. ரப்பர் போல் வளைந்துகொடுக்கும் இயல்புடையது.
பிளாட்டிபஸ் நீந்தும்போது கண், காது, மூக்குத்துவாரங்கள் அனைத்தையும் நீர்புகாவண்ணம் இறுக்கமாக மூடிக்கொள்ளும். தொடர்ந்து பன்னிரண்டு மணிநேரம் நீருக்குள் இருந்தாலும் மூச்சுவிடுவதற்காக இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை நீருக்கு மேல் வந்தாகவேண்டும். அரைநிமிடத்தில் மீண்டும் நீருக்கடியில் சென்றுவிடும். ஆழ்கடலில் வாழும் சில வகை உயிரினங்களைப்போல பிளாட்டிபஸ்ஸும் தனது அலகில் உள்ள மின்னேற்பிகளின் நுட்பமான உணர்திறன் மற்றும் தொடுதிறன் மூலமே அருகில் உயிருள்ள இரை இருப்பதை அறிந்துகொள்கிறது.
பிளாட்டிபஸ் நீந்தும்போது தன் முன்னங்கால்களைத் துடுப்பாகவும், பின்னங்கால்களையும் வாலையும் சுக்கானாகவும் நிறுத்தியாகவும் பயன்படுத்துகிறது. நீந்தும்போது சுக்கானாய் பயன்படுவது தவிர, வாலுக்கு பல பயன்கள் உண்டு. பிளாட்டிபஸ்ஸின் உடற்கொழுப்பில் ஐம்பது சதம் வாலில்தான் சேமித்துவைக்கப்படுகிறது. உடலிலிருக்கும் மென்ரோமங்களுக்கு மாறாக வாலின் ரோமங்கள் சற்றே கடினமாகவும் தடித்த முட்களைப் போன்றும் இருக்கும். வளைதோண்டும்போது மண்ணை ஓரங்கட்டவும் வளையில் சேரும் குப்பைகளை ஒதுக்கிச் சுத்தம் செய்யவும் ஒரு துடைப்பம் போன்று செயல்படுவதுடன், பெண் பிளாட்டிபஸ் அடைகாக்கும் சமயத்தில் முட்டையைப் பொத்திவைத்து வெப்பத்தைப் பேணவும் வால் உதவுகிறது. வாலுக்கு எவ்வளவு பயன்கள்!
பிளாட்டிபஸ்ஸின் தோல் இரண்டு அடுக்குகளாலானது. உடலை ஒட்டிய முதல் அடுக்கு காற்றை உள்ளுக்குள்ளேயே தக்கவைத்து வெப்பத்தைப் பேணுகிறது. இரண்டாவது அடுக்கு வெளியிலிருந்து குளிர் தாக்காமல் ஒரு காப்புறை போல செயல்படுகிறது. இதன் ரோமம் போலார் கரடியின் ரோமத்தை விடவும் மிகவும் அடர்த்தியானது. இதன் உடலில் ஒரு சதுர மில்லிமீட்டர் பரப்பில் 600 முதல் 900 ரோமங்கள் உள்ளனவாம். கற்பனைக்கே எட்டவில்லை, அல்லவா? அதன் தோலும் ரோமங்களும்தான், உறையவைக்கும் குளிர்நீரில் மணிக்கணக்காக நீந்தும்போதும், உடல்வெப்பம் குறைந்துவிடாமல் பாதுகாக்கின்றன.
பிளாட்டிபஸ்ஸின் ஆயுட்காலம் பன்னிரண்டு ஆண்டுகள் என்று ஆய்வு சொல்கிறது. சராசரி எடை ஒன்று முதல் இரண்டரை கிலோகிராம் வரையிலும் இருக்கலாம். ஆண் பெண்ணை விடவும் சற்றுப் பெரியதாக இருக்கும். ஜூன் – அக்டோபர் மாதங்கள்தாம் இவற்றின் இனப்பெருக்கக் காலம். முட்டையிடுவதோடு அடைகாத்து குட்டிகளை வளர்ப்பது பெண்தான். பொதுவாய் ஆண் பெண் இரண்டுமே நீருக்கு உள்ளேயோ நீர்ப்பரப்பை ஒட்டிய புதர்களிலோ, மரங்களின் வேரிடுக்குகளிலோ தனித்தனி வளைகள் தோண்டி அதில் ஓய்வெடுக்கின்றன. ஆனால் பெண், முட்டையிடும் பருவத்தில் மற்றொரு வளையை சில சிறப்பம்சங்களுடன் அமைக்கிறது. அப்போது அமைக்கப்படும் வளைகள், வெள்ள அபாயத்தை மனத்தில் கொண்டு, நீர்ப்படுகையினின்று பல மீட்டர் உயரத்தில் அமைக்கப்படுகின்றன.
பிளாட்டிபஸ் பொதுவாக ஒரு ஈட்டுக்கு ஒன்று முதல் மூன்று முட்டைகள் இடும். மல்லாந்த நிலையில் அவற்றைத் தன் உடலோடு அணைத்து வாலால் மூடி வெப்பத்தைப் பேணும். அடைகாக்கும் சமயம் எதிரிகள் உள்ளேவந்துவிடாமல் தன் வளையின் வாசல்களை அடைத்துவைத்துவிடும். பத்து நாட்களில் முட்டை பொரிந்து குட்டிகள் வெளிவரும். கண்,காது,ரோமம் போன்று எந்த உறுப்பும் வளர்ச்சியடையாமல் ஒரு புழுவைப் போல அவை இருக்கும். ஒரு திராட்சை அளவிலான முட்டையிலிருந்து மொச்சைக்கொட்டை அளவிலான குட்டிகள்!
பிளாட்டிபஸ் பால்கொடுக்கும் விதத்திலும் மற்ற விலங்கினங்களிலிருந்து வேறுபடுகிறது. இதற்கு பாலூட்டும் முலைகள் கிடையாது. தாயின் மார்பிலிருக்கும் சுரப்பியிலிருந்து தோல்துவாரங்கள் வழியே கசிந்து வெளியேறும் பாலை குட்டிகள் நக்கியும் உறிஞ்சியும் குடிக்கும். குட்டிகளை ‘பிளாட்டிபப்’ (platypup) என்பர். குட்டிகள் நான்கைந்து மாதங்கள் வரை தாயிடம் பால்குடிக்கும். அந்த சமயங்களில் தாய் வெளியே போகும்போது வளையின் குறுக்கும் நெடுக்கும் பல மண்தடுப்புகளை உண்டாக்கிவிட்டுப் போகும். எதிரிகள் உள்ளே நுழையாமலிருக்கவும், குட்டிகள் ஊர்ந்து வெளியில் போய்விடாமலிருக்கவும் இந்த ஏற்பாடு.
ஐந்து வாரங்களுக்குப் பிறகு தாய் குட்டிகளை விட்டு பெரும்பாலான நேரம் விலகியே இருக்கும். நான்கு மாதங்களில் குட்டிகள் வளையை விட்டு வெளியே வரும். இரண்டு வயதில் ஆண், பெண் இரண்டுமே முதிர்ச்சி அடைந்து இனப்பெருக்கத்துக்கு தயாராகிவிடும். நாய்க்குட்டியின் சன்னமான குரைப்பு போல ஒலியெழுப்பும் பிளாட்டிபஸ், ஆபத்து சமயங்களில் கோழியின் கொக்கரிப்பு போல உரத்த ஒலி எழுப்பும்.
ஒரு பிளாட்டிபஸ்ஸைப் பார்க்கநேர்ந்தால் பார்ப்பதற்கு குட்டியாய் அழகாய் இருக்கிறதே என்று நாய்க்குட்டியைப்போல தூக்கி வைத்துக்கொள்ளக் கூடாது. ஏனெனில் ஆண் பிளாட்டிபஸ்ஸின் பின்னங்கால்கள் ஒவ்வொன்றிலும் ஒன்றரை செ.மீ. நீளத்துக்கு ஒரு விஷமுள் உள்ளது. இதன் விஷம் ஒரு நாயைக் கொல்லும் அளவுக்கு வீரியமுள்ளது. இதனால் மனிதர்கள் இறப்பதில்லை என்றாலும் தாங்கமுடியாத அளவுக்கு கடுமையான வலி இருக்குமாம். பிளாட்டிபஸ்ஸின் விஷத்தால் தாக்கப்பட்டால் உடனடியாக பாம்புக்கடிக்கு செய்வதுபோலவே முதலுதவி செய்யவேண்டியது அவசியம். இனப்பெருக்க காலத்தில் பிற ஆண் பிளாட்டிபஸ்களை எதிர்கொள்ளவும், எதிரியைக் கொல்லவும் இவை இந்த நச்சுமுள்ளைப் பயன்படுத்துகின்றன.
நிலத்தில் நரி, நாய் போன்ற விலங்குகளும், கழுகு, ஆந்தை போன்ற பறவைகளும், வளைக்குள் பாம்பு, உடும்பு போன்ற ஊர்வனவும், தண்ணீரில் முதலை, நீரெலி போன்றவையும் பிளாட்டிபஸ்ஸுக்கு ஆபத்து விளைவிக்கும் எதிரிகள் என்றாலும் எல்லாவற்றையும் விட மிகப்பெரிய எதிரி என்று மனிதர்களைச் சொல்லலாம். மீன்பிடிவலைகள் மற்றும் தூண்டில் முட்களில் சிக்கி நீருக்குள்ளேயே பல பிளாட்டிபஸ் உயிரிழக்கின்றனவாம். மேலும் அவை வசிக்கும் நீர்நிலைகளை மாசுபடுத்துவன் மூலமும், இயற்கையை அழிப்பதன் மூலமும் அவற்றின் வாழ்வாதாரத்தை அழித்துக்கொண்டிருக்கிறோம் நாம்.
பிளாட்டிபஸ் தனித்த வாழ்க்கை வாழ்ந்தாலும் அதன் இரைதேடலில் பயனடைய ஒரு கூட்டாளியும் அவ்வப்போது இணைவதுண்டு. அது மற்றொரு பிளாட்டிபஸ் என நீங்கள் நினைத்தால் தவறு. ஆஸ்திரேலியன் கார்மோரான்ட் என்னும் நீர்ப்பறவைதான் அது. பிளாட்டிபஸ் கூடவே நீரில் மூழ்கும். பிளாட்டிபஸ் நீருக்கடியில் மண்ணைக்கிளறி அங்கு ஒளிந்திருக்கும் சிறு உயிரினங்களை வெளிக்கொண்டுவரும்போது, இப்பறவை சட்டென்று பாய்ந்து அவற்றைக் கவ்வித்தின்றுவிடும். கண்தெரியா பிளாட்டிபஸ் பாவம்தான்.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தோலுக்காவும் ரோமத்துக்காகவும் இவை பெருமளவில் வேட்டையாடப்பட்டுவந்தனவாம். ஆனால் இப்போது கடுமையான சட்டங்கள் மூலம் பாதுகாக்கப்பட்டுவருகின்றன. பிளாட்டிபஸ்ஸை பொதுமக்கள் செல்லப்பிராணியாகவோ, வேறுவிதமாகவோ வீட்டில் வைத்திருப்பது சட்டவிரோதமாகும். ஆஸ்திரேலியாவின் குறிப்பிட்ட சில உயிரியல் பூங்காக்களில் காட்சிக்காகவும், சில பல்கலைக் கழகங்களில் ஆராய்ச்சிக்காகவும் வனத்துறையின் அனுமதியுடன் பேணப்படுகின்றன. இப்போதைய ஆஸ்திரேலிய சட்டம் எந்தக் காரணத்தை முன்னிட்டும் பிளாட்டிபஸ்ஸை பிறநாடுகளுக்கு எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கிறது.
ஆஸ்திரேலியாவின் உயிரியல் மற்றும் கலாச்சார அடையாளங்களுள் பிளாட்டிபஸ்ஸுக்கு முக்கிய இடமுண்டு. ஆஸ்திரேலியாவின் இருபது செண்ட் நாணயத்தில் இடம்பெற்றுள்ள இது, நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் மாநில விலங்குமாகும்.
2000 ஆம் ஆண்டில் நடைபெற்ற சிட்னி ஒலிம்பிக்கின் அடையாளச் சின்னங்களாக (Sydney Millennium Olympic) என்பதைக் குறிக்கும் வகையில் சிட் (syd) என்னும் பிளாட்டிபஸ்ஸும் மில்லி (millie) என்னும் எக்கிட்னாவும் ஓலி (Olly) என்னும் கூக்கபரா பறவையும் தேர்ந்தெடுக்கப்பட்டன. 1988 இல் பிரிஸ்பேனில் நடைபெற்ற உலகப் பொருட்காட்சியில் (World Expo 88) அடையாளச்சின்னமாக Expo Oz என்னும் பிளாட்டிபஸும் ஆப்பிள் கம்ப்யூட்டரின் இயக்குதளம் Mac OS X இன் முத்திரைச்சின்னமாக ஹெக்ஸ்லி (Hexley) என்னும் பிளாட்டிபஸும் இடம்பெற்றன.
ஆஸ்திரேலியப் பூர்வகுடி மக்களுடைய பாரம்பரியக் கதைகளிலும் பிளாட்டிபஸ் இடம்பெற்றுள்ளது. அவர்களைப் பொறுத்தவரை நீரெலிக்கும் வாத்துக்கும் பிறந்த பிள்ளைதான் பிளாட்டிபஸ். பூர்வகுடி மக்கள் சொல்லும் கதை ஒன்று. ஒரு சமயம் விலங்கினங்கள், பறவையினங்கள், நீர்வாழ் உயிரிகள் அனைத்துக்கும் போட்டி வந்ததாம். பிளாட்டிபஸ்ஸை தங்களுடன் இணையுமாறு ஒவ்வொன்றும் கேட்டுக்கொண்டனவாம். தான் தனித்துவமே சிறப்பென்று கூறி பிளாட்டிபஸ் எவற்றோடும் இணைய மறுத்துவிட்டதாம். நம்ம ஊர் வௌவால் கதை போலவே இல்லை?
*******************************
படங்கள் நன்றி: இணையம்