ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினங்கள்

கீதம்

New member
ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினங்கள் சிலவற்றைப் பற்றி இங்கு தொடர்ந்து எழுதவிருக்கிறேன். கீழே உள்ள சுட்டிகளைச் சொடுக்க அந்தந்த விலங்கினைப் பற்றிய விவரங்கள் அறியலாம்.

1. கங்காரு

2.கொவாலா

3. ஈமு

4. பிளாட்டிபஸ்


ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினம் (1) - கங்காரு

ஆஸ்திரேலியாவின் தேசியவிலங்கு கங்காரு என்று பள்ளிகளில் படித்திருப்போம். உண்மையில் ஆஸ்திரேலியாவின் தேசியவிலங்கு என்று கங்காருவைக் குறிப்பிடுதல் சரியன்று. ஆஸ்திரேலியாவின் ஒவ்வொரு மாநிலமும் யூனியன் பிரதேசமும் தத்தமக்கென்று தனித்த முத்திரை, விலங்கு, பறவை, பூ, கொடி, நிறம், வாசகம் போன்ற அடையாளங்களைக் கொண்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் தேசியமுத்திரையில் இடம்பெற்றுள்ள பெருமை விலங்குகளில் கங்காருவுக்கும் பறவைகளில் ஈமுவுக்கும் மட்டுமே உள்ளது. இரண்டுக்குமே பின்னோக்கி நடத்தலோ நகர்தலோ அசாத்தியம் என்பதால் முன்னேற்றத்துக்கான அடையாளமாக இவை அரசு முத்திரையில் இடம்பெற்றுள்ளன.

Kangaroo_and_joey04.jpg


கங்காருவை ஆங்கிலத்தில் கேங்கரு (kangaroo) என்று சொல்வார்கள். கங்காரு மார்சுபியல் (marsupials) என்னும் வகையைச் சேர்ந்தது. மார்சுபியல் வகையென்றால் என்ன தெரியுமா? அவற்றின் வயிற்றில் நெகிழும் தன்மையுடைய பை போல ஒரு அமைப்பு இருக்கும். இந்த வகை விலங்குகளுடையக் குட்டிகள் முழு வளர்ச்சியடையாத நிலையில்தான் பிறக்கும். அந்தக் குட்டிகள் முழு வளர்ச்சி பெறும்வரை தாய் தன் வயிற்றிலிருக்கும் பையில் வைத்துதான் வளர்க்கும்.

மார்சுபியல் வகையைச் சேர்ந்த இன்னும் சில விலங்குகள் கொவாலா (koalas), போஸம் (possums), ஒபோஸம் (opossums), டாஸ்மேனியன் டெவில் (Tasmanian devils), வோம்பேட்(wombats) போன்றவை. இந்தவகையான விலங்கினங்களில் இப்போது உலகத்தில் வாழ்பவை மொத்தமாக 334 இனங்கள்தானாம். அவற்றில் கிட்டத்தட்ட 70 சதவீதம் அதாவது 220 இனம் ஆஸ்திரேலியாவிலும், நியூ கினியாவிலும், சுற்றியுள்ள தீவுகளிலும் வாழ்கின்றன. மற்ற முப்பது சதவீதம் அமெரிக்காவில் வாழ்கின்றன.

மார்சுபியலிலேயே மேக்ரோபாட் (macropod) என்னும் வகையைச் சார்ந்தவை கங்காருக்கள். மேக்ரோபாட் என்றால் மிக நீண்ட பாதங்கள் கொண்டவை என்று அர்த்தம்.

கங்காருவுக்கு கங்காரு என்கிற பெயர் வந்தது பற்றி செவிவழித் தகவல் ஒன்று உண்டு. முதன் முதலில் இங்கு வந்திறங்கிய ஐரோப்பியர்கள், இந்த விலங்கைப் பார்த்து வியந்துபோனார்களாம். தலை மானைப் போல இருக்கிறது. ஆனால் கொம்பு இல்லை, நின்றால் மனுஷன் மாதிரி நிற்கிறது, ஆனால் நடக்கத்தெரியவில்லை, தவளை போல தாவித்தாவிப் போகிறது. இது என்ன மாதிரியான விலங்கு என்று தெரியலையே என்று விழித்தார்களாம். அங்கே போன சில கங்காருக்களைக் காட்டி, இது என்னவென்று அங்கிருந்த பூர்வகுடிகளைக் கேட்டார்களாம். அவர்களோ, ‘நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்குத் தெரியலை’ என்பதை அவர்களுடைய மொழியில் குங்குரு என்று சொன்னார்களாம். இவர்கள் அதன்பெயரே அதுதான் என்று நினைத்து திருவல்லிக்கேணியை ‘ட்ரிப்ளிகேன்’ ஆக்கினமாதிரி, குங்குருவை காங்கருவாக்கிவிட்டார்கள். அதுமட்டுமில்லை, வயிற்றில் குட்டிகளோடு திரிந்த தாய் கங்காருக்களைப் பார்த்து அவையெல்லாம் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் என்று நினைத்திருந்தார்களாம்.

கங்காரு இனங்களிலேயே அறுபதுக்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன. குளிர் பிரதேத்தில் வாழ்பவையும் உண்டு, பாலைவனத்தில் வாழ்பவையும் உண்டு, மழைக்காடுகளில் வாழ்பவையும் உண்டு, கடலோரப் பகுதிகளில் வாழ்பவையும் உண்டு. வாழும் இடத்தில் தட்பவெப்ப சூழலுக்கேற்றபடி அவை தங்கள் வாழ்க்கைமுறையை அமைத்துக்கொள்கின்றன.

கங்காருக்கள் இரவு விலங்குகள் (Nocturnal animals). இரவுநேரத்தில்தான் சுறுசுறுப்பாக இயங்கும். உணவு தேடிப்போகும். சில வகைகள் அதிகாலை நேரத்திலும், பின்மதியத்திலும் உணவு உண்ணப்போகும். பகல் முழுவதும் ஏதேனும் மரநிழலிலோ, மலையிடுக்குகளிலோ, படுத்து ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும். கங்காரு பெரும்பாலும் புல்தான் தின்னும். மற்ற கால்நடைகளைப் போலவே கங்காருக்களுக்கும் இரைப்பை அறைகள் உண்டு. அதனால் இவையும் இரவில் உண்ட உணவை பகலில் அசைபோட்டு விழுங்கும். மிகவும் குறைந்த அளவே தண்ணீர் குடிக்கும். தண்ணீர் இல்லாமலேயே பல மாதங்கள் அதனால் உயிர்வாழ முடியும்.

எல்லாக் கங்காருகளுக்கும் உள்ள ஒற்றுமை என்னவெனில்… வலிமையான பின்னங்கால்களும் நீண்ட பாதங்களும். கங்காரு மணிக்கு நாற்பது முதல் அறுபது கிலோமீட்டர் வேகம் வரையிலும் ஓடும். அது வேகமாக ஓடும்போது பேலன்ஸ் (balance) செய்ய அதன் வால்தான் உதவுகிறது. படங்களில் கங்காரு ஓடும்போது பார்த்திருப்பீர்கள், வாலால் உந்தி உந்தி ஓடுவது போல இருக்கும். உண்மைதான். வாலில்லையென்றால் கங்காருவால் ஒட மட்டுமில்லை, நகரவும் முடியாது. நமக்கு கட்டை விரல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் கங்காருவுக்கு வால். கங்காருக்களால் தங்கள் கால்களைக் கொண்டு நடக்க முடியாதது மட்டுமல்ல, பின்னோக்கி நகரவும் இயலாது. ஆனால் கங்காருவுக்கு நன்றாக நீந்தத்தெரியும். ஏதாவது ஆபத்து வரும்போது பக்கத்தில் ஏதாவது நீர்நிலை இருந்தால் அதற்குள் இறங்கித் தப்பித்துவிடும்.

கங்காருக்கள் குழுக்களாகத்தான் வாழும். குழுவை மாப் (mob), கோர்ட் (court), என்று குறிப்பிடுவார்கள். ஒரு குழுவில் பத்து முதல் நூறு வரையிலும் கூட இருக்கும். கங்காருவுக்கு எதிரிகள் என்றால் டிங்கோ நாய்கள், நரிகள், காட்டு நாய், பூனைகள் மற்றும் மனிதர்கள். பொதுவாக இவை மனிதர்களை தாக்காது என்றாலும் அவர்களால் ஏதேனும் ஆபத்தின் அறிகுறியைக் கண்டால் தாக்கக் கூடியவை.

கங்காருக்கள் குத்துச்சண்டையில் தேர்ந்தவை. எதிரியை சமாளிக்கவேண்டிய நெருக்கடியில் தங்கள் முன்கால்களால் நன்றாக குத்து விடும். அல்லது பின்கால்களால் பலமாக உதைவிடும். தங்கள் ஆளுமையை நிரூபிக்கவும், பெண் கங்காருக்களை கவரவும் பலம் வாய்ந்த ஆண் கங்காருக்கள் தங்களுக்குள் இதுபோன்ற சண்டைகளில் ஈடுபடுவதுண்டு.

-_fighting_red_kangaroos_1.jpg


கங்காருக்கள் பெரிய அளவில் சத்தமெழுப்பாது. சின்னதாய் செருமல்கள், மெல்லிய குரைப்பொலி, சன்னமான பக் பக், க்ளக் க்ளக் போன்ற ஒலிகளைத்தான் வெளிப்படுத்தும். கங்காருக்கள் பெரும்பாலும் தரையில் கால்களைத் தட்டி ஒலியெழுப்பும். குட்டியை அழைக்கவும், ஆபத்தில் எச்சரிக்கவும் இப்படி செய்கின்றன.

கங்காருக்களில் மிகவும் பெரிய வகை சிவப்பு கங்காரு இனம்தான். கங்காரு இனத்தில் மட்டுமல்ல, உலகிலுள்ள மார்சுபியல் வகை விலங்குகளிலேயே பெரியதும் இதுதான். இது நின்றால் ஆறடி இருக்கும். கிட்டத்தட்ட மனிதர்களின் உயரம். எடை 85 கிலோ இருக்கும். சிவப்புக் கங்காரு இனத்தில் பெரியதும் ஆளுமையுடையதும் ஆண்தான்.

ஆண் கங்காருக்களை பக் (buck), பூமர் (boomer), ஓல்டுமேன்(old man), ஜாக் (Jack) என்றெல்லாம் குறிப்பிடுவாங்க. பெண் கங்காருக்களை டொ (doe), ஃப்ளையர் (flyer), ஜில் (Jill) என்று சொல்வார்கள். குட்டிகளை ஜோய் (Joey) என்று குறிப்பிடுவார்கள். கங்காருக்குட்டிகள் பார்க்க அவ்வளவு அழகு. அதிலும் அம்மா வயிற்றுப்பைக்குள் அமர்ந்தபடி தலையை மட்டும் வெளியில் நீட்டி உலகமறியாத குழந்தை போல அது விழிக்கிறது அவ்வளவு அழகு.

கங்காரு வருஷத்துக்கு ஒரு குட்டி போடும். அதனுடைய கர்ப்பகாலம் வெறும் 33 நாட்கள்தான். அதனால் குட்டி பிறக்கும்போது இரண்டுகிராம் எடையுடன் ஒரு மொச்சைக்கொட்டை அளவுதான் இருக்கும். கண், காது கால் உடல் என்று எதுவும் முழுமையாக உருவாகாமல் ஒரு புழுவைப் போல இருக்கும். மனிதக் கருவோடு ஒப்பிடுகையில் இது ஏழுவார சிசுவுக்கு சமம். 23 வாரங்களுக்குக் குறைந்த காலத்தில் குறைப்பிரசவமாகும் மனித சிசுக்கள் உயிர்பிழைப்பது அரிது. ஆனால் கங்காருவின் குட்டி பிறந்த நொடியே உள்ளுணர்வு காரணமாக உந்தப்பட்டு தன் தாய்மடியை நோக்கி நகர ஆரம்பித்துவிடுகிறது. ஏனென்றால் அதற்குத் தெரியும் தனக்கான உணவு அங்கேதான் உள்ளது என்று.

Joey_in_pouch.jpg


தாய்க்கங்காருவால் அந்தக் குட்டியைத் தொடக்கூட இயலாது. அவ்வளவு சிறியதாக இருக்கும். ஆனால் அம்மா என்ன செய்யுமென்றால், குட்டி, பைக்கு போகும் பாதையை நக்கி நக்கி சுத்தம் செய்து கொடுக்கும். குட்டியும் தன்னுடைய முன்கால் விரல்களால் அம்மாவின் வயிற்று ரோமத்தைப் பற்றிக்கொண்டே முன்னோக்கி நகர்ந்து நகர்ந்து நான்கு அல்லது ஐந்து நிமிடத்தில் பைக்குப் போய்விடும். பைக்குள் நான்கு பால்காம்புகள் இருக்கும். அதில் ஒன்றை வாயால் பிடித்ததென்றால் அவ்வளவுதான். உடனே அந்த பால்காம்பு வீங்கி குட்டியின் வாயைவிட்டு வெளியில் வராதபடி உள்ளே நன்றாகப் பொருந்திவிடும். அப்புறமென்ன, அம்மா எத்தனை குதி குதித்தாலும் தாவினாலும் குட்டி பத்திரமாக பைக்குள் இருக்கும். விழவே விழாது.

இன்னுமொரு வியப்பான விஷயம் என்னவென்றால் அந்தக் குட்டிக்கு பாலை உறிஞ்சிக் குடிக்கவும் தெரியாது. தசைகள் சுருங்கிவிரிவது மூலமாகதான் பால் குட்டிக்குப் போய்ச்சேரும்.

கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஜோயி அதே நிலையில்தான் இருக்கும். அதற்குள் அது முழுவளர்ச்சி பெற்றுவிடும். எவ்வளவு நேரந்தான் உள்ளேயே இருப்பது. அலுத்துப்போகுமே… அவ்வப்போது மெதுவாக தலையை மட்டும் பைக்கு வெளியே நீட்டி ஜன்னல் வழியாக வேடிக்கை பார்ப்பதுபோல் வெளியில் வேடிக்கை பார்க்கும். ஆனாலும் பையைவிட்டு முழுவதுமாய் வெளியில் வர பயமிருக்கும். இன்னும் கொஞ்சம் வளர்ந்ததும் வெளியில் வரும். வந்தாலும் அம்மா கூடவே நிற்கும். சின்ன சத்தம் கேட்டாலும் உடனே பைக்குள் ஒடி ஒளிந்துகொள்ளும். இன்னும் கொஞ்சம் வளர்ந்ததும், பயமெல்லாம் போய்விடும். அம்மாவை விட்டு கொஞ்சதூரம் விலகிப் போய் மேய ஆரம்பித்துவிடும். முன்போல் பயமிருக்காது. ஆனால் அம்மா எப்போதும் கவனமாகவே இருக்கும். ஆபத்து வரும் அறிகுறி அறிந்தால், உடனே தரையில் காலைத் தட்டும். சட்டென்று குட்டி அம்மாவின் பைக்குள் ஏறிக்கொள்ள, அம்மா அந்த இடத்தை விட்டு ஓட ஆரம்பித்துவிடும்.

பொதுவாகவே கங்காரு ஒரு குட்டி ஈன்றாலும் இன்னொரு குட்டியையும் அடுத்த ஈட்டுக்குத் தயாராக கருப்பையில் வைத்துக்கொள்ளும். ஆனால் வளரவிடாது. காத்திருப்போர் பட்டியலில் இருப்பதுபோல் அந்தக் குட்டி அம்மா மனம் வைக்கும்வரை கருவாகவே கருப்பைக்குள் காத்திருக்கும். முதலில் பிறந்த குட்டி பையை விட்டு வெளியேறும்வரை அம்மா காத்திருக்கும். தொடர்ந்து பஞ்ச காலம் வருவதைப் போல் தெரிந்தால் அம்மா அப்போதும் குட்டியீனுவதைத் தள்ளிப்போடும். அம்மாவுக்கு நல்ல உணவு கிடைத்து, நல்லமுறையில் பால்கொடுக்கமுடியும் என்ற நம்பிக்கை வந்தால்தான் குட்டியை ஈனத் தயாராகும்.

ஒரே சமயம் இரண்டு குட்டிகள் அம்மாவிடம் பால் குடிப்பது உண்டு. பால்குடி மறக்காத அண்ணன் ஜோயி அவ்வப்போது அம்மாவின் மடிக்குள் தலைவிட்டு பாலைக்குடிக்கும். அதே பைக்குள் தம்பி ஜோயி ஒரு பக்கம் குடித்துக்கொண்டிருக்கும். ஒரு ஜோயி பிறந்தது முதல் கடைசிவரை ஒரே பால்காம்பில்தான் பால் குடிக்கும். தவறியும் அடுத்ததில் வாய் வைக்காது. அதனால் பாலும் அக்குட்டிகளின் வயதுக்கேற்ப தனித்தன்மையுடன் இருக்கும். வளர்ந்த குட்டி மாற்று உணவுக்குப் பழகிவிட்டதால் அதற்குக் கிடைக்கும் பாலில் அத்தனை சத்துகள் இருக்காது. வளர்ச்சியடையாத ஜோயிக்கோ அது ஒன்றே உணவென்பதாலும் வளர்ச்சிக்குத்தேவை என்பதாலும் மிகவும் சத்தான பால் கிடைக்கும். அண்ணனுக்கு தண்ணிப்பால், தம்பிக்கு சத்தான பால். சின்னதென்றாலே எப்பவுமே செல்லம்தானே…

ஆஸ்திரேலியாவில் யாரும் கங்காருக்களை வீடுகளிலோ பண்ணைகளிலோ வைத்து வளர்ப்பதில்லை. கங்காரு ஆஸ்திரேலியாவின் முத்திரையில் இடம்பெறுமளவுக்கு அங்கீகாரம் பெற்றிருந்தாலும் பல இடங்களில் அது ஒரு பயிரழிக்கும் பிராணியாகத்தான் (pest) கருதப்படுகிறது. அதனால் பல இடங்களில் அரசாங்கமே அனுமதி கொடுத்து அவற்றை எக்கச்சக்கமான அளவில் வேட்டையாடச் சொல்கிறது. அவற்றின் இறைச்சிகள் கடைகளில் விற்பனையும் ஆகிறது. முதன் முதலில் கடைகளில் கங்காரு இறைச்சியைப் பார்த்து அதிர்ச்சியானேன். ஒரு நாட்டின் அடையாளச்சின்னமாய் விளங்கும் விலங்கைக் கொல்வதோடு, இப்படிக் கூறு போட்டு விற்கிறார்களே என்று… அவற்றால் விவசாயிகளுக்கு உண்டாகும் பிரச்சனைகளைப் பற்றித் தெரிந்துகொண்ட பிறகுதான் தெளிவானது.

ஆஸ்திரேலியாவில் கங்காரு வேட்டை காலங்காலமாகவே நடைபெற்று வருகிறது.. ஆஸ்திரேலியாவின் பூர்வகுடி மக்கள் தங்களுடைய உணவுக்காகவும், உடைக்காகவும் கங்காருக்களை வேட்டையாடிக் கொண்டுதான் இருந்திருக்கிறார்கள். ஐரோப்பிய காலணி உருவான பிறகு வேட்டையாடப்படும் கங்காருக்களின் எண்ணிக்கை கூடியதாம். ஐரோப்பிய முறை விவசாயமும் கங்காருக்களின் இனப்பெருக்கத்துக்கு ஒரு முக்கியக் காரணமாம். முறையான விவசாயத்தின் மூலம் விளைவிக்கப்பட்ட பல பயிர்கள் அவற்றுக்கு தடையில்லாத உணவு வழங்க, கங்காரு இனம் வஞ்சனையில்லாமல் பெருகிவிட்டதாம். தங்கள் உணவைத் தக்கவைக்க, வேறு வழியில்லாமல் கொத்தோடு வேட்டையாட வேண்டிய நிலை இவங்களுக்கு உண்டாயிற்று. அது இன்றும் தொடர்கிறது.

ஆஸ்திரேலியப் பொருளாதாரத்தில் பெரும் சரிவை உண்டாக்கும் விதத்தில் இவற்றுடைய இனப்பெருக்க வளர்ச்சி இருப்பதாலும் அவற்றால் பாழ்படுத்தப்படும் விவசாய நிலங்களின் அளவு கூடிக்கொண்டே போவதாலும் கங்காருக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த,, குறிப்பிட்டப் பகுதிகளில் குறிப்பிட்ட இனம் மட்டும் வேட்டையாடப்படுகின்றன. சிவப்பு கங்காரு, கிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகளைச் சேர்ந்த சாம்பல் நிறக் கங்காருகளுக்குதான் வேட்டையில் முதலிடம். வருடாவருடம் இந்த இன கங்காருக்களின் எண்ணிக்கையைக் கண்காணித்தும், சந்தையில் கங்காரு இறைச்சியின் தேவையைப் பொறுத்தும் வேட்டைக்கான கால நிர்ணயம் செய்யப்படுகிறது. இதை கங்காரு அறுவடை என்றுதான் அரசு குறிப்பிடுகிறது.

அதே சமயம் ஆஸ்திரேலியாவின் ஒவ்வொரு மாநிலமும் தங்கள் சட்டத்தில் கங்காருக்களைப் பாதுகாப்பதற்கான உறுதிமொழிகளைக் கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த சட்டங்கள் மேலே குறிப்பிட்ட இனங்களுக்குப் பொருந்தாது.

கங்காருவை ஆஸ்திரேலியாவிலிருந்து உயிரோடு பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது சட்டப்படி குற்றம். உயிரியல் பூங்காக்கள் விதிவிலக்கு. ஆனால் ஆஸ்திரேலியாவிலிருந்து கிட்டத்தட்ட 55 நாடுகளுக்கு உணவுக்காக கங்காரு இறைச்சி ஏற்றுமதியாகிறது. ரோமங்களுக்காகவும், தோல்பொருள் தயாரிக்கவும் அதன் தோலும் கூட ஏற்றுமதியாகிறது. இதனுடைய தோல் மிருதுவாக இருப்பதால் காலணிகள், முக்கியமாக விளையாட்டு வீர்ர்களுக்கான காலணிகள் தயாரிக்க மிகவும் ஏற்றதாம்.

Australian_coat_of_arms_1912.jpg


ஆனாலும் பல விலங்குநல அமைப்புகள் கங்காருவைக் கொல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல ஆய்வரங்கங்கள் நடத்தி, அறிக்கைகள் சமர்ப்பித்தபடிதான் இருக்கின்றன. ஆஸ்திரேலியாவின் கலாச்சார அடையாளங்களில் முக்கியமானதாயிற்றே கங்காரு. கங்காரு இல்லாத ஆஸ்திரேலியாவை நம்மால் கற்பனை செய்துபார்க்க முடிகிறதா?

படங்கள் உதவி:விக்கிமீடியா

**********************************************************************************************************************
 
Last edited:
'..பயிரழிக்கும் பிராணியாகத்தான் (pest) கருதப்படுகிறது...' மிக விரிவான பார்வை- கூடுதலாக அறிய முடிந்தது. நன்றி. பிள்ளைகளுக்கான நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துக்கள்.
 
கங்காருவைப் பற்றிய பல தகவல்களை, விரிவாக, சுவையுடன் சொல்லியிருக்கிறீர்கள் !

அரும்பி, மலர்ந்து, உதிரும் சமயத்திலாவது இத்தகவல்களைத் தெரிந்துகொண்டதில் குழந்தைபோல நானும் ஆச்சரியத்துடன் மகிழ்கிறேன். முடிந்தால் படங்களும் பதியவும்.
 
கங்காரு பற்றிய அருமையான தகவல்களை
அதிகமாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.

மகன் ராகவ்-க்கும் சொல்லிக் கொடுத்தேன்.
மிக்க நன்றி கீதம் அக்கா.
 
கங்காருவைப் பற்றிய பல தகவல்களை, விரிவாக, சுவையுடன் சொல்லியிருக்கிறீர்கள் !

அரும்பி, மலர்ந்து, உதிரும் சமயத்திலாவது இத்தகவல்களைத் தெரிந்துகொண்டதில் குழந்தைபோல நானும் ஆச்சரியத்துடன் மகிழ்கிறேன். முடிந்தால் படங்களும் பதியவும்.

தங்கள் வேண்டுகோளுக்கிணங்க, படங்களை இன்று இணைத்திருக்கிறேன். :icon_b:
 
படித்து ரசித்துக் கருத்திட்ட ந.கண்ணப்பு அவர்களுக்கும், ஜானகி அம்மா அவர்களுக்கும், கோவிந்த்துக்கும் மிகவும் நன்றி.
 
பேச்சு நடையின் எழுத்து...

தங்கையின் குரலில் கற்பனை பண்ணிப் பார்த்தேன்...(கேட்கத் தவறியதால்)...

அறியாத விஷயங்கள் நிறைய அறியத் தந்ததற்கு தங்கைக்கு நன்றிகள் பல...!!!
 
கங்காரு பற்றி தெரியாத பல தகவல்களையும் படங்களுடன் பதிந்தது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
நன்றி அக்கா.
 
கங்காரு குட்டி வளர்ப்பு விபரங்கள் புதிய செய்தியாக இருந்ததோடு மிகவும் சுவாரசியமாகவும் இருந்தன. கிட்டத் தட்ட கங்காருவைப் பற்றிய முழுமையான தகவல்களை அறிந்து கொள்ள உதவியது. நிகழ்ச்சியைக் கேட்க முடியவில்லை என்பதால் இப்பதிவு பயனுள்ளதாய் இருந்தது.
இப்பதிவுக்கு மிக்க நன்றி கீதம்!
 
கேட்டதும் கொடுப்பவளே....நன்றி !

:) :icon_b:

பேச்சு நடையின் எழுத்து...

தங்கையின் குரலில் கற்பனை பண்ணிப் பார்த்தேன்...(கேட்கத் தவறியதால்)...

அறியாத விஷயங்கள் நிறைய அறியத் தந்ததற்கு தங்கைக்கு நன்றிகள் பல...!!!

நன்றி ஜெயந்த் அண்ணா.

கங்காரு பற்றிய அருமையான தகவல் உங்களுக்கு நன்றிகள் பல...

நன்றி அச்சலா.
 
கங்காரு பற்றி தெரியாத பல தகவல்களையும் படங்களுடன் பதிந்தது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
நன்றி அக்கா.

ரசித்தமைக்கு நன்றி செல்வா.

கங்காரு குட்டி வளர்ப்பு விபரங்கள் புதிய செய்தியாக இருந்ததோடு மிகவும் சுவாரசியமாகவும் இருந்தன. கிட்டத் தட்ட கங்காருவைப் பற்றிய முழுமையான தகவல்களை அறிந்து கொள்ள உதவியது. நிகழ்ச்சியைக் கேட்க முடியவில்லை என்பதால் இப்பதிவு பயனுள்ளதாய் இருந்தது.
இப்பதிவுக்கு மிக்க நன்றி கீதம்!

பயனுள்ளதாய் இருந்தது அறிந்து மகிழ்ச்சி அக்கா.
 
ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினம் (2) - கொவாலா

ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினங்கள் அறிமுக வரிசையில் இன்று நாம் அறிந்துகொள்ள இருப்பது ஆஸ்திரேலியாவின் மற்றொரு அடையாளவிலங்கினமான கொவாலாக்கள் (koalas) பற்றி.

Koala_climbing_tree.jpg


ஆஸ்திரேலியாவில் மட்டுமே வாழும் கொவாலாக்கள் அழியக்கூடிய அபாயத்திலிருக்கும் உயிரினங்களில் ஒன்று என்பது வருத்தம் தரும் செய்தி. இவை ஆஸ்திரேலியாவின் கிழக்கு மற்றும் தெற்குக் கடலோரப் பகுதிகளான குவீன்ஸ்லாந்து, நியூ சௌத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா ஆகிய மாநிலங்களில் மட்டுமே காணப்படுகின்றன.

கொவாலாக்கள் கரடி வகையைச் சார்ந்தவை என்று தவறாக கணிக்கப்படுகிறது. கரடிக்கும் கொவாலாவுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. கொவாலாக்கள், கங்காருவைப்போல் மார்சுபியல் இனத்தைச் சார்ந்தவை. பார்ப்பதற்கு டெடிபேர் (Teddy bear) போல இருப்பதால் இவையும் கரடி இனத்தைச் சேர்ந்தவை என்று பலராலும் நம்பப்படுகிறது. கொவாலாவின் உயிரியல் பெயர் Phascolarctos cinereus என்பதாகும். லத்தீன் மொழியில் இதற்கு ‘வயிற்றில் பையுடைய சாம்பல் நிறக் கரடி’ என்ற பொருளாகும்.

கொவாலாவின் ரோமத்தின் தன்மையும் நிறமும் அவற்றின் வசிப்பிடத்துக்கேற்ப வேறுபடுகின்றன. தென்திசைக் குளிர்காற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தெற்குப்பகுதியில் வசிக்கும் கொவாலாக்களுக்கு வடக்குப் பகுதிகளில் வசிக்கும் கொவாலாக்களை விடவும் நீளமான மற்றும் அடர்த்தியான ரோமங்கள் உள்ளன. கொவாலாக்கள் பெரிய காதுகளையும் பெரிய மூக்கையும், கூரான பற்களையும், கால்களில் கூரிய நகங்களையும் கொண்டவை. வயிற்றுப் பகுதியில் வெள்ளை நிறமும் பிற பாகங்களில் சாம்பல் நிறம் அல்லது சாக்லேட் பழுப்பு நிறம் கொண்டவை. கொவாலாக்களுக்கு வால் கிடையாது. அதாவது முன்னொரு காலத்தில் வால் இருந்ததன் அடையாளமாக வால் எலும்பின் நீட்சி காணப்பட்டாலும், வால் வெளியில் தெரிவதில்லை.

கொவாலா பொதுவாக 25 முதல் 30 செ.மீ உயரம் வரை வளரும். ஆண் கொவாலா தோராயமாக 12 கிலோ எடையிலும் பெண் கொவாலா 8 முதல் 9 கிலோ வரையிலுமாக இருக்கும். இவை 12 முதல் 16 வருடங்கள் வரை உயிர்வாழக்கூடியவை. இவை குறட்டை, செருமல் போன்ற ஒலிகள் மூலம் ஒன்றையொன்று தொடர்புகொள்கின்றன. கொவாலாக்கள் பற்றிய மற்றொரு சுவாராசியமான விஷயம் ஒன்று உண்டு. இவற்றுடைய விரல் ரேகைகள் மனித விரல் ரேகைகளை ஒத்திருக்குமாம். மின்னணு நுண்ணோக்கி (electron microscope) வைத்துப்பார்த்தாலும் வேறுபாடு கண்டுபிடிக்க இயலாதாம். என்ன ஆச்சர்யம்!

கொவாலாக்களும் கங்காருக்களைப் போலவே இரவு விலங்குகள்தாம் (nocturnal animals). பகல் முழுவதும் உறங்கிக் கழித்துவிட்டு இரவில் மட்டுமே உணவு உண்கின்றன. கொவாலா ஒரு நாளைக்கு அரைக்கிலோ முதல் ஒரு கிலோ வரை யூகலிப்டஸ் இலைகளைத் தின்னும். கூலா (gula) என்றால் ஆஸ்திரேலிய பூர்வீக மொழிகளுள் ஒன்றான தாருக் மொழியில் தண்ணீர் தேவையில்லை என்ற பொருளாம். கொவாலாக்கள் தண்ணீர் குடிப்பதில்லை. தாங்கள் தின்னும் யூகலிப்டஸ் இலைகளிலிருந்தே தேவையான ஈரப்பதத்தைப் பெற்றுக்கொள்கின்றன. கொவாலாவின் பிரதான உணவு யூகலிப்டஸ் இலைகளே. யூகலிப்டஸ் மரக்காடுகள்தாம் அவற்றின் வசிப்பிடம். மழைக்காடுகளிலோ, பாலைநிலங்களிலோ இவற்றால் வாழ இயலாது.

ஆஸ்திரேலியாவில் 600 வகையான யூகலிப்டஸ் மரங்கள் உள்ளன. அவற்றில் குறிப்பிட்ட 50 வகை மரங்களின் இலைகளை மட்டுமே கொவாலாக்கள் உண்கின்றன. இந்த இலைகளில் 50 சதவீதம் நீராகும். நார்ச்சத்தும் நச்சுத்தன்மையும் குறைந்த அளவே ஊட்டமும் கொண்ட யூகலிப்டஸ் இலைகளை சீரணிக்க இவற்றுக்கு அதிக அளவு சக்தி தேவைப்படுவதால் தூக்கமொன்றே ஒரே வழி. ஒருநாளைக்கு 18 முதல் 22 மணிநேரத்தைத் தூங்கியே கழிக்கின்றன. மற்ற நேரத்தை உணவு உண்பதில் கழிக்கின்றன. அவசரமாக உண்ணவேண்டிய நிலையில் தங்கள் உணவை, குரங்குகள் செய்வதைப் போல, கூடுமானவரைக் கன்னத்தில் அதக்கிக்கொண்டு பின்னர் மெதுவாக அவற்றை உண்டுமுடிக்கின்றன.

இவை இயங்குவதில் மந்தமாக இருந்தாலும் நீந்துவதில் கெட்டி. கொவாலாக்கள் தரையில் நான்கு கால்களையும் ஊன்றி நடக்கும். முயலைப் போல் மிகவேகமாக ஓடக்கூடியவை. கொவாலாக்களுக்கு வியர்வை சுரப்பிகள் இல்லாமையால் அவை தங்கள் பாதங்களை நக்கியும், கால்களை உடலிலிருந்து விலக்கி நீட்டித் தொங்கப்போட்டும் உடல் வெப்பத்தைத் தணித்துக்கொள்கின்றன.

ஒரு யூகலிப்டஸ் மரத்தில் ஒரு கொவாலா மட்டுமே வசிக்கும். வாழுமிடங்கள் அழிக்கப்படும்போது இவை பதற்ற நிலையடைந்து இறக்கின்றன. பொதுவாக கொவாலாக்கள் தங்களுக்கென்று எல்லைகளை நிர்ணயிப்பதில்லை என்றாலும் இனப்பெருக்க காலத்தில் ஆண் கொவாலாக்கள் தங்கள் மார்பில் சுரக்கும் ஒருவித வாசனை சுரப்பி நீரை மரத்தின் கீழ்ப்பகுதிகளில் தேய்த்து தங்கள் மரத்தை மற்ற ஆண் கொவாலாக்கள் நெருங்காதபடி எச்சரிக்கின்றன. கொவாலாக்கள் பார்ப்பதற்கு சாதுவைப்போல் தோன்றினாலும் மிகவும் மூர்க்கமானவை. அவற்றுடைய கூரிய பற்களால் கடித்தும், கூரிய நகங்களால் தாக்கியும் எதிரிகளை சமாளிக்கின்றன.

கொவாலாக்களின் இனப்பெருக்க காலம் டிசம்பர் முதல் மார்ச் வரை. கொவாலா பொதுவாக வருடத்துக்கு ஒரு குட்டி ஈனும். மிகவும் அரிதாக இரட்டைக் குட்டிகள் பிறக்கும். வயது முதிர்ந்த பெண் கோவாலாக்கள் இரண்டு அல்லது மூன்று வருடத்துக்கொருமுறை ஒரு குட்டியீனும். இவற்றின் கர்ப்பகாலம் 35 நாட்கள். கொவாலா குட்டி பிறக்கும்போது இரண்டு செ.மீ. அளவுதான் இருக்கும். கண், காது போன்ற எந்த உறுப்பும் வளர்ச்சியுறா நிலையில் அவை தவழ்ந்து தாயின் மடிக்குள் தஞ்சம் அடைந்துவிடுகின்றன. அங்கிருக்கும் இரண்டு பால்காம்புகளில் ஒன்றைப் பற்றிக்கொண்டுவிடும். மார்சுபியல் வகையைச் சேர்ந்ததாக இருந்தாலும் இதனுடைய வயிற்றுப்பை தலைகீழாக இருக்கும். அதாவது கொவாலா மரத்தில் அமர்ந்திருக்கும்போது அதன் பையின் திறப்பு கீழ்நோக்கி இருக்கும்.

Koala_and_joey.jpg


மார்சுபியல் இனத்தில் இப்படி கீழ்நோக்கிய பையுள்ள மற்றொரு இனம் வோம்பேட். வோம்பேட் நிலத்தில் வாழும் உயிரினம். அவை தமது கால்களால் மண்ணைக் கிளறி புழு பூச்சிகளைத்தேடி உண்ணும். அப்போது மண் வயிற்றுக்குள்ளிருக்கும் குட்டியைப் பாதிக்காதிருக்க அவற்றின் பைக்கு பின்னோக்கிய திறப்பு அமைந்திருப்பதில் அர்த்தம் உண்டு. ஆனால் கொவாலா போன்ற மரத்தில் வாழும் உயிரினத்துக்கு பை தலைகீழாய் அமைந்திருப்பதன் காரணம் தெரியவில்லை. மரத்தில் ஏறும்போதும், தாவும்போதும் பையிலிருந்து குட்டி கீழே விழுந்துவிடாதிருக்க, கொவாலாக்கள் வெகு சிரத்தையுடன் தசைகளை இழுத்துப் பிடித்துப் பையைச் சுருக்கிக் குட்டிகளைப் பாதுகாக்கின்றன. ஒரு சுருக்குப்பை போல மூடிக்கொள்வதற்கென்றே இதற்கென பிரத்யேக தசைநார்கள் நாடாக்களாக செயல்படுகின்றன.

கொவாலாக்குட்டிகளை கப் (cub), ஜோய் (joey), பேக் யங் (back young), பௌச் யங் (pouch young) என்ற பெயர்களில் குறிப்பிடுகின்றனர். தாயின் பைக்குள் ஆறுமாதங்கள் பாலைக்குடித்தபடி இருக்கும் குட்டிக்கு அதற்குள் கண், காது, கால்கள், ரோமம் அனைத்தும் உருவாகி கிட்டத்தட்ட முழுவளர்ச்சி பெற்றுவிடும். அதன்பின் அவை பையை விட்டு வெளியேறி தாயின் வயிற்றைப் பற்றிக்கொண்டோ, முதுகில் சவாரி செய்துகொண்டோ அவ்வப்போது பைக்குள் தலையை நுழைத்துப் பால் குடித்துக்கொள்ளும். இந்த சமயத்தில் குட்டிகள், தாய் வெளியேற்றும் மலக்கழிவல்லாத மற்றொரு விசேடக் கழிவை உண்டு வளர்கின்றன. இது குட்டிகள் வருங்காலத்தில் தின்னவிருக்கும் நச்சுமிகுந்த யூகலிப்டஸ் இலையை செரிக்கவைக்கும் பாக்டீரியாக்களை அவற்றின் உடலில் உருவாக்குமாம்.

குட்டிகளுக்கு மூன்று வயது வரும்வரை தாய்க்கு அருகிலேயே வாழும். பெண்குட்டிகள் இரண்டு வயதிலும் ஆண் குட்டிகள் நான்கு அல்லது ஐந்து வயதிலும் முதிர்ச்சி அடைகின்றன. இந்த நேரத்தில் அவை தாயை விட்டுப்பிரிந்து தமக்கென்று தனிப்பட்ட வசிப்பிடத்தைத் தேடவேண்டிய நிர்ப்பந்தம் உருவாகிறது.

இறந்துபோய்விட்ட கொவாலாவொன்றின் மரத்தையோ அல்லது இதுவரை வேறெந்த கொவாலாவும் குடியேறியிராத புதிய மரத்தையோ தங்கள் வசிப்பிடமாக்கிக்கொள்கின்றன. மரங்களின் எண்ணிக்கை குறையும்போது வசிக்க இடமில்லாது அவை மன அழுத்தத்துக்கு ஆளாகின்றன என்றும் அவ்வாறு வசிப்பிடமிழந்து அலைபவற்றில் கிட்டத்தட்ட நாலாயிரம் கொவாலாக்கள் வருடந்தோறும் கார்களில் அடிபட்டும், நாய்களிடம் சிக்கியும் உயிரிழப்பதாகவும் ஆஸ்திரேலியன் கொவாலா ஃபௌண்டேஷன் தகவல் தெரிவிக்கிறது.

கொவாலாக்கள் அவற்றுடைய ரோமத்துக்காக பெருமளவில் வேட்டையாடப்பட்டுவந்தன. 1908 முதல் 1927 ஆம் ஆண்டு வரையிலும் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் கொவாலாக்கள் கொல்லப்பட்டனவாம். குடியிருப்புகள், நெடுஞ்சாலைகள், விவசாயம், பண்ணைத்தொழில் போன்றவற்றுக்காக கொவாலாவின் வசிப்பிடங்கள் அழிக்கப்படுவதாலும் இவற்றின் தொகை பெருமளவில் குறைந்து வருகின்றன. இப்போது உலகில் உயிர்வாழ்பவை நாற்பதாயிரம் முதல் எண்பதாயிரம் என்ற குறுகிய எண்ணிக்கையில்தான் இருக்கின்றவாம்.

கொவாலா குவீன்ஸ்லாந்து மாநிலத்தின் மாநில விலங்காக மதிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் சட்டங்கள் கொவாலாவுக்கு எதிரான செயல்களைக் கண்டித்து, அவற்றுக்கு பாதுகாப்பு அளிக்கின்றன. கொவாலாவைப் பிடிப்பதோ, அடைப்பதோ, அதைத் தொந்தரவு செய்வதோ சட்டவிரோதமாகும். வளர்ப்பு மிருகமாய் அதை வைத்திருப்பதும் சட்டப்படி குற்றமாகும். உயிரியல் பூங்கா காப்பாளர்கள், விஞ்ஞானிகள், மற்றும் கொவாலா பாதுகாவலர்கள் போன்றோரும்கூட வனத்துறை அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற்றபிறகே கொவாலாக்களைத் தங்கள் பாதுகாப்பில் வைத்திருக்க இயலும்.

காட்டை ஒட்டிய பல குடியிருப்புகளில் கொவாலாக்கள் வந்து தொந்தரவு தருவதாக சிலர் புலம்புகிறார்கள். நம் வசிப்பிடங்களில் காட்டுமிருகங்கள் வந்து அட்டகாசம் செய்வதாய்ப் புலம்பும் நாம் என்றைக்கு உணரப்போகிறோம் அவற்றின் வசிப்பிடங்களைத்தான் நாம் ஆக்கிரமித்திருக்கிறோம் என்னும் உண்மையை!
 
Last edited:
ஆச்சர்யமான அதே சமயம் மிக சுவாரசியமான தகவல்கள். இரண்டு விலங்குகளைப் பற்றியும் மேம்போக்காகத்தான் தெரிந்து வைத்திருந்தேன்...அதிலும் கொவாலா பற்றி மிகக் கொஞ்சமே தெரிந்திருந்தது. தங்கையின் இந்தப் பதிவுகளால்...நிறைய தெரிந்துகொண்டேன்.

மிக்க நன்றிம்மா.
 
மிக அருமையான தகவல்கள். அழகாக, படங்களுடன். நிறைய தெரிந்து கொண்டேன். நன்றி கீதம்.....
 
நல்லதொரு கட்டுரை கீதம் :) இன்னும் பல விலங்குகள் பற்றி எழுதுங்கள் :)
 
நல்ல பயனுள்ள தகவல்..:)

ரசித்தமைக்கு மிக்க நன்றி சூரியன்.

ஆச்சர்யமான அதே சமயம் மிக சுவாரசியமான தகவல்கள். இரண்டு விலங்குகளைப் பற்றியும் மேம்போக்காகத்தான் தெரிந்து வைத்திருந்தேன்...அதிலும் கொவாலா பற்றி மிகக் கொஞ்சமே தெரிந்திருந்தது. தங்கையின் இந்தப் பதிவுகளால்...நிறைய தெரிந்துகொண்டேன்.

மிக்க நன்றிம்மா.

தங்கள் வருகைக்கும் ஊக்கம்தரும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி அண்ணா.

நல்லதொரு கட்டுரை கீதம் :) இன்னும் பல விலங்குகள் பற்றி எழுதுங்கள் :)

எழுதும் எண்ணம் இருக்கிறது சுபாஷிணி. தொடர்ந்து எழுதுவேன். தங்கள் ஆர்வத்துக்கு மிக்க நன்றி.

மிக அருமையான தகவல்கள். அழகாக, படங்களுடன். நிறைய தெரிந்து கொண்டேன். நன்றி கீதம்.....

ரசித்து இட்டப் பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி முரளி ஐயா.
 
ஈமு - ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினம் (3)

ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினங்கள் வரிசையில் அடுத்ததாய் நாம் அறியவிருப்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பறவையினமான ஈமு பறவைகளைப் பற்றி. ஈமுவளர்ப்பு பண்ணைகளின் உதவியால் ஈமுவை தற்போது தமிழகத்தில் பலரும் பார்த்திருக்கும் வாய்ப்பு உள்ளது. உலகிலுள்ள பறக்கவியலாத பறவையினங்களில் இரண்டாவது பெரிய பறவை இது. முதலாவது பெரிய பறவை ஆப்பிரிக்காவின் தீக்கோழி. ஆஸ்திரேலிய அரசு முத்திரையில் இடம்பெறும் அந்தஸ்து கொண்ட இந்த ஈமு பறவை பற்றி தெரிந்துகொள்வோம், வாருங்கள்.

ஈமு என்று தமிழில் எழுதினாலும் சரியான ஆங்கில உச்சரிப்பு ஈம்யூ என்பதாகும். கங்காருவைப்போலவே ஈமு பறவையும் ஆஸ்திரேலியாவின் தேசிய, கலாசார அடையாளங்களுள் முக்கியமானது. இது ஆஸ்திரேலிய அரசின் முத்திரையில் இடம்பெற்றதோடு நாணயங்களிலும், தபால் தலைகளிலும் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவின் பூர்வகுடி மக்களின் பல பாரம்பரிய கதைகளோடும், கலாச்சாரத்தோடும் நெருங்கிய தொடர்புடையது.

Emu-wild.jpg


டைனோசார் காலத்திலிருந்தே உலவிவந்த இந்தப் பறவையினத்தில் மூன்று வகைகள் இருந்தனவாம். ஆனால் உணவுக்காகவும் உடைக்காகவும் வேட்டையாடப்பட்டு இரண்டு வகைகள் அழிந்துபோய், இப்போது இருப்பது இந்த ஒரு வகைமட்டும்தான். ஆஸ்திரேலியா முழுக்க காணப்பட்டாலும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளைத் தவிர்த்த பிற பகுதிகளிலும் பாலை நிலங்களிலும் குறுங்காடுகளிலும்தான் இவை பெரும்பாலும் காணப்படுகின்றன. மழைக்காடுகளில் இவை வசிப்பதில்லை. இந்தப் பறவை தோராயமாக ஒன்றரை மீட்டரிலிருந்து இரண்டு மீட்டர் வரைக்கும் உயரமாய் வளரக்கூடியது. எடை கிட்டத்தட்ட 35 கிலோ இருக்கும். பொதுவாக இந்த இனத்தில் ஆணை விடவும் பெண்ணே அளவில் பெரியதாக இருக்கும். பறக்க இயலாவிட்டாலும் அதிக வேகத்தோடு ஓடக்கூடியது இந்தப்பறவை. தேவைப்பட்டால் மணிக்கு 70 கிமீ வேகத்தில் கூட ஓடுமாம். தன்னிச்சையாய் காடுகளில் வாழும் ஈமுவின் ஆயுட்காலம் பத்து முதல் இருபது வருடங்கள் என்று கணக்கெடுப்பு சொல்கிறது.

ஈமுவுக்கென்று ஒரு குறிப்பிட்ட வாழும் எல்லை கிடையாது. நாடோடியைப் போல உணவு கிடைக்குமிடத்தில் திரிந்து வாழக்கூடியது. இது புல், இலைகள், பூச்சிகள் போன்றவற்றைத் தின்னும். அதே சமயம் உணவில்லாமலும் பல வாரங்களுக்கு அதனால் தாக்குப்பிடிக்க முடியும். உணவின் மூலம் கிடைக்கும் கொழுப்பை உடலில் சேகரித்து வைத்துக்கொள்ளும் தன்மை இதற்கு உண்டு. தண்ணீருக்காகவும் தவிக்காது. ஆனால் கிடைக்கும்போது தொடர்ந்து பத்து நிமிஷம் குடிக்கும். இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவெனில் இந்தப்பறவை தன் உணவோடு சின்ன சின்ன கற்கள், கண்ணாடித்துண்டுகள், இரும்புத்துண்டு என்று கண்ணில் படுவதையெல்லாம் தின்றுவிடுமாம். அவை அதன் இரைப்பையில் தங்கி உணவைச் செரிக்கவைக்க உதவுமாம். ஈமு பற்றிய மற்றொரு சுவாரசியமான விஷயம் உண்டு. இது ஒரு விலங்கையோ, மனிதனையோ கண்டால் மிகுந்த ஆர்வத்தோடு, தனக்கு அலுத்துப்போகும் வரை அவர்களைத் தொடர்ந்து வருமாம். வேடிக்கையான பழக்கம்தான் இல்லையா?

ஈமுவுக்கு ஏதாவது ஆபத்து என்றால் தன்னுடைய கால்களைத்தான் பயன்படுத்தும். அதனுடைய காலில் மூன்று விரல்கள் உள்ளன. அதனுடைய கால் மிகவும் வலிமையானது. இரும்புக்கம்பி வேலியையே காலால் கிழித்துவிடுமென்றால் எவ்வளவு வலிமையிருக்கும் அந்தக்கால்களுக்கு! ஈமுவுக்கு எதிரிகள் என்றால் டிங்கோ நாய்களும், கழுகு பருந்து போன்ற வேட்டைப் பறவைகளும்தான். நாய்களிடமிருந்து தப்பிக்க காலால் உதைத்தும், தாவிக்குதித்தும் நாய்களை எதிர்த்து விரட்டித் தப்பிவிடும். ஆனால் பாவம், கழுகு, பருந்துகளிடமிருந்து தப்ப ஓடி ஒளியவேண்டும்.

ஈமுவின் கண்கள் மிகச்சிறியவை. சிமிட்ட ஒன்றும் தூசுகளினின்று பாதுகாக்க ஒன்றும் இரண்டு சோடி இமைகள் உண்டு. ஈமுவுக்கு கூர்மையான கண்பார்வையும் செவித்திறனும் இருப்பதால் இதனால் தனக்கு வரவிருக்கும் ஆபத்தைத் தொலைவிலேயே கண்டுணரமுடியும். உடனே தன் பாதுகாப்புக்காக ஆயத்தமாகிடும். இதனுடைய இறக்கைகளும் இது வாழும் சூழலுக்கேற்றபடி தக்கதாக அமைந்துள்ளன. அடுக்கடுக்காக அமைந்திருக்கும் ஈமுவின் இறக்கைகள் இதனுடைய உடலை வெப்பத்திலிருந்து பாதுகாக்கின்றன. அதனால் ஈமுவால் நல்ல வெயில் நேரத்திலும் சுறுசுறுப்பாக இயங்கமுடிகிறது. ஈமு பெரும்பாலான நேரத்தை தன் இறக்கையைக் கோதிக்கொண்டே இருக்கும். ஈமுவுக்கு நன்றாக நீந்த தெரியும் என்றாலும் வெள்ள சமயத்திலோ, ஆற்றைக் கடக்கவேண்டியிருந்தாலோ தவிர வேறு சமயங்களில் நீந்துவதில்லை. ஆனால் தண்ணீரில் சும்மா உட்கார்ந்திருக்கப் பிடிக்குமாம். சின்னக்குழந்தைகள் போல் தண்ணீரிலும் சேற்றிலும் விளையாடவும் பிடிக்குமாம்.

ஈமு தூங்கும்போது கால்களை மடக்கி அதன்மேல் அமர்ந்து, தன்னுடைய நீண்ட கழுத்தை இறக்கைக்குள் நுழைத்து தூங்கும். அப்போது தூரத்தினின்று பார்ப்பதற்கு சிறு மணற்குன்று போல தெரியும். தூங்கும்போது எதிரிகள் கவனத்தில் படாமலிருக்க இப்படி ஒரு உபாயமாம்.

பயிர்களை அச்சுறுத்தும் வெட்டுக்கிளிகள், கம்பளிப்பூச்சிகள் போன்றவற்றைத் தின்று விவசாயிகளுக்கு நன்மை புரியும் ஈமுக்களே பல சமயம் தங்களையறியாமல் நாம் விரும்பாதவற்றையும் செய்துவிடுகின்றன. ஈமுக்கள் கள்ளிச்செடியின் பழங்களைத் தின்று போகுமிடங்களிலெல்லாம் அவற்றின் விதைகளை எச்சத்தின் மூலம் பரப்ப, விளைநிலங்களில் எல்லாம் தேவையில்லாத அச்செடி வளர்ந்து பெருந்தொந்தரவாகிவிட்டதாம். ஆஸ்திரேலிய அரசால் 1930 – 1940 களில் மிகப்பெரிய அளவில் ஈமு மீதான தொடர்வேட்டைகள் நடத்தப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாம்.

Emu_Gelege.jpg


ஆண்பறவைகளை விடவும் பெண்பறவைகள் சற்று பெரியவையாக இருக்கும். ஆண்பறவைகள் பன்றியைப் போல் உறுமல் ஒலி எழுப்பும். பெண்பறவைகள் பெரிதாய் முழங்கும். ஈமு பறவைகள் மே, ஜூன் மாதங்களில் முட்டையிடும். இதனுடைய கூடு ஒன்றரை மீட்டர் அகலம் வரை இருக்கும். கூட்டைக் கட்டுவது ஆண்பறவைதான். பெண்பறவை பல ஆண்பறவைகளோடு இணைந்து பல ஈடு முட்டைகளை இடும். பொதுவாக ஒரு ஈட்டுக்கு இருபது முட்டைகள் வரை இடும். முட்டைகள் கரும்பச்சை நிறத்திலும், ஒவ்வொன்றும் 700 முதல் 900 கிராம் வரையிலான எடையோடும் இருக்கும். அதாவது ஒரு ஈமு முட்டை பன்னிரண்டு கோழிமுட்டைகளின் எடைக்கு சமமானதாக இருக்கும். முட்டையிடுவது மட்டும்தான் பெண்பறவையின் வேலை. கூடு கட்டும் வேலையோடு அடைகாக்கும் வேலையும் ஆண்பறவைக்கு உரித்தானது. அடைகாக்கும்போது உணவு எதுவும் உட்கொள்ளாது.விடிகாலைப் பனித்துளிகளை அருந்தி தொண்டையை நனைத்துக்கொள்ளும்.உணவுண்ணாமல் உடலில் சேமித்துவைக்கப்பட்டுள்ள கொழுப்பும் கரைந்துவிடுமாம். ஆனாலும் மிகவும் சிரத்தையுடன் அடைகாக்கும். ஒருநாளைக்கு பத்துமுறை எழுந்து நின்று முட்டைகளைத் திருப்பிவிட்டு சரியான வெப்பத்தைப் பேணுமாம்.

எட்டுவாரங்கள் கழித்து குஞ்சுகள் பொரிந்துவந்தபின்னும் அதன் கடமை முடிந்துவிடுவதில்லை. அவற்றை வளர்த்தெடுப்பதும் முழுக்க முழுக்க அப்பாவின் வேலைதான். குஞ்சுகள் பொரிந்தவுடன் 25 செ.மீ. உயரத்தில் உடல் முழுக்க கறுப்பு வெள்ளை வரிகளுடன் இருக்கும். மூன்று மாதங்களுக்குப் பின் மெல்ல மெல்ல கருப்பு, பழுப்பு, கரும்பழுப்பு என்று நிறமாறி முழுவளர்ச்சியடையும். சிலவற்றுக்கு கழுத்தில் நீலநிறமும் காணப்படும்.

Emu_family.jpg


ஆஸ்திரேலியாவின் சொந்தப்பறவையான ஈமு, அமெரிக்காவின் உயிரியல் பூங்காவுக்கென அங்கு அறிமுகப்படுத்தப்பட்டு, இப்போது அமெரிக்கப் பொருளாதாரத்தில் முக்கியப்பங்கு வகிப்பது மறுக்கமுடியாத உண்மை. உலகச்சந்தையில் ஒரு முதலீடாகவே ஈமு கணிக்கப்படுகிறது. ஈமு முட்டையோடுகள் அலங்காரப்பொருட்கள் செய்யவும் அணிகலன்கள் செய்யவும் பயன்படுகின்றன. ஈமுவின் கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் ஈமு எண்ணெய் நுண்ணுயிர்க்கொல்லியாகவும், தீக்காயங்களை ஆற்றும் மருந்தாகவும் பயன்படுகிறது. பல சரும நிவாரண மற்றும் சரும அழகு சாதனங்களில் ஈமு எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. ஈமுவின் தோல் காலணிகள், கைப்பைகள் மற்றும் ஆடைகள் தயாரிக்கப் பயன்படுகிறது. இதன் தோல் எந்தவிதமான சாயத்தையும் ஏற்கும் திறன் கொண்டிருப்பதால் தோல்சந்தையிலும் ஆடை வடிவமைப்பாளர்களிடத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

எட்டுகோடி வருடங்களுக்கு முன்பிருந்தே ஆஸ்திரேலிய மண்ணில் நிலைகொண்டிருக்கும் பறவையினமான இவை பூர்வகுடி மக்களால் உணவுக்காகவும் உடைக்காகவும் வேட்டையாடப்பட்டுவந்தன. அவற்றின் கொழுப்பு வலிநிவாரணியாக பயன்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் ஒருவகை காவிமண்ணுடன் ஈமு எண்ணெய் கலந்து உடல்களில் ஓவியம் தீட்டி அலங்கரித்துக்கொண்டு பாரம்பரிய விழாக்களைக் கொண்டாடுவது பழங்கால பூர்வகுடி மக்களின் சிறப்பாகும். பூர்வகுடி மக்களின் புராணக்கதைகளோடு பெரும் தொடர்புடைய ஈமுவுக்கு மதிப்பளிக்கும் விதமாக ஆஸ்திரேலிய அரசு, மலைகள், ஆறுகள், வாய்க்கால்கள், ஊர்கள் போன்று கிட்டத்தட்ட அறுநூறு இடங்களுக்கு ஈமுவின் பெயரை வைத்து சிறப்பித்துள்ளது.
 
Last edited:
Back
Top