கதையை அமரன் சொல்லிவிட்டதால் நான் அதைப்பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை, இருப்பினும் சில விசயங்கள் இருக்கின்றன சொல்வதற்கு. ஏனெனில் நீண்ட நாளைக்குப் பிறகு கமல் படமொன்றை ரசித்துப் பார்த்தது இந்த படத்தில்தான்.
மனோரஞ்சன் என்ற உச்ச நட்சத்திர நடிகனின் இறுதிக் காலம் என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டாலும், ஒரு உச்ச நடிகரின் இறுதிக் காலம், அவன் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதனைக் கையாண்டவிதம் என்று பல இடங்களில் கமல் சிக்ஸர் அடிக்கிறார். மிக மிக இயல்பான கமல்.... என்னால் ஆச்சரியம் தாங்க முடியவில்லை, ஏனெனில் ஒவ்வொரு படத்திலும் கமலுக்குள் இருக்கும் நடிகன் ஃபேட் அவுட் ஆகி கமல் வெளியே தெரிவார்.. ஆச்சரியகரமாக இந்த படத்தில் அப்படியேதும் தெரியவில்லை. மனோரஞ்சன் என்ற திமிர் பிடித்த, அந்திம காலத்தை நெருங்கும், கள்ளக் காதலும், பழைய காதலியின் மகளை எதிர்கொள்ளும், ஒரு சாதாரண குடும்பஸ்தனாக மட்டுமே கமலைப் பார்த்தேன். ஒருவேளை நடிகனாக நடிப்பது கமலுக்கு சுலபமோ என்னவோ (ஆனால் அப்படி நடிப்பதுதான் கஷ்டமே). மனோரஞ்சன் வரும் காட்சிகள் அனைத்தும் க்லாஸ்.... மிக மிக அற்புதமான காட்சிக்கோவைகளால் நிறைந்தது. எந்த காட்சியையும் தவிர்க்க முடியாது. அவ்வளவு அழகு. பார்த்துப் பார்த்து செதுக்குவது என்பது அதுதான்... அற்புதமான திரைக்கதை... ஆண்ட்ரியா சரக்கடித்துவிட்டு புலம்பும் காட்சியில் சொல்லாததை சொல்லிவிடுகிறார், கமல் அவரது மகளையும், மகனையும் எதிர்கொள்வது இதுவரையிலும் எந்த படத்திலும் அவ்வளவு ஃப்ரஷான காட்சியைப் பார்த்ததேயில்லை. மனைவி ஊர்வசியிடம் பேசுவது, கள்ளக்காதலி ஆண்ட்ரியாவிடம் கொஞ்சுவது.... இறுதி நேரத்திலும் முத்தமிட்டு கண்ணடிப்பது..... கள்ளக்காதலை ரசிக்கும்படி எடுத்தது கூட இந்தப் படமே முதலாக இருக்குமென நினைக்கிறேன். பாலச்சந்தர் சிறப்பாக நடித்திருக்கிறார் (நடித்திருந்தார்).. சிற்சில காட்சிகளே வந்தாலும் பார்வதி, ஜெயராம், கமலின் மாமனார்.... யாரை விடுப்பது ?? குறிப்பாக எம்.எஸ் பாஸ்கர்.... திறமையான நடிகன்யா..
ஆனால்
இத்தனை ப்ளஸ்களுக்கும் நேரெதிரே இருக்கிறது உத்தமன் கதை. மனோரஞ்சிதன் தன் குருநாதரிடம் இறுதியாக ஒரு படம் பண்ண வேண்டும் என்கிறார். பல எதிர்ப்புகளைத் தாண்டி எடுக்கப்படும் அப்படம் வெறும் பப்படமாக இருப்பதுதான் முரணாக இருக்கிறது. குருநாதர் (பாலச்சந்தர்) கதையை நம்புகிறவர். மனோரஞ்சிதனோ ஹீரோயிசத்தை நம்புகிறவர். (அந்த முதல்பாடல் ஒரு ஸ்பூஃப். தொப்பையுடன் மொக்கை நடனம், ஹீரோயிசத்தை கிண்டல் செய்வதாகவே இருந்தது) ஆனால் குருநாதர் எடுக்கும் திரைப்படத்தின் கதை மிக மிக அரதப்பழசான கதை. கதை என்பதே இல்லையென சொல்லலாம். உத்தமன் கதையில் மிருத்ஞ்ஜயன் என்ற சாகாவரம் பெற்றவனாக காட்டப்படுகிறார் கமல். அந்த மந்திரத்தை நாசர் பெறவேண்டும் என்று துடிக்கிறார். நாசரோ மன்னனைக் கொன்றுவிட்டு இளவரசியை சிறையிலிட்டு அவளை அடையவேண்டுமெனத் துடிக்கிறார். இறுதியில் நாசர் அந்த மந்திரத்தைப் பெறவேண்டுமென்றால் கலைகளில் வித்தகராகவேண்டுமென பொய் சொல்லி அவரை இரணியன் நாடகத்தில் நடிக்க வைத்து கொல்கிறார்கள், இதெயெல்லாம் செய்யும் ம்ருதுஞ்ஜயன் பக்கத்து நாட்டு அரசன் என்று முடித்துவிடுவார்கள். ஆரம்பத்தில் காட்டிய உத்தமன் திடீரென கடைசியில் அரசன் என்பது பூக்கூடையையே காதில் சுற்றுவதைப் போல லாஜிக் இல்லாமல்... சரி அதைத்தான் ஒழுங்காகச் சொன்னார்களா? அதுவுமில்லை, காமெடிப் படம் என்ற பெயரில் நம்மை சோதனை செய்துவிடுகிறார்கள். குருநாதரின் கடைசி படம் எப்படி இருந்திருக்க வேண்டும்??
மனோரஞ்சிதன் கதைக்கு நேரெதிரான கதை உத்தமன் கதை... மனோ இறப்பை எதிர்பார்ப்பவர், உத்தமன் சாகாவரம் பெற்றவர்... மனோவின் கதையில் பல பிரச்சனைகள், கஷ்டம், துன்பம்... ஒரே சோகமயம்.. உத்தமன் கதையில் கஷ்டம் என்பதே இல்லை, துன்பப்படுவதுமில்லை, சந்தோசமயம். இப்படி நேரெதிர் முரணாகவே செல்லும் திரைக்கதையில் மனோவின் பகுதி மிக அற்புதமாகவும் உத்தமன் பகுதி நாராசமாகவும் இருப்பதையும் உணரமுடியும்..
அந்த இறுதிக் காட்சி பற்றி அமரன் சொல்லியிருந்தார். அது அவரது கருத்து. இறுதிக் காட்சியில் இரணிய வதம் தவிர்த்து மீதி மிக மிக அற்புதம்..
தவிர தெய்யம் என்ற கேரளக் கூத்துக் கலையையும், வில்லுப் பாட்டு என்ற தமிழகத்தின் கலையையும் பயன்படுத்துகிறேனென அதனை சிதைத்துவிட்டார்.... அதெல்லாம் தேவையில்லாத வேலை.
உத்தம வில்லன்
உத்தமம் மனோவின் கதை... வில்லன் - உத்தமனின் கதை.
மனோவின் கதையில் மிக இயல்பான அட்டகாசமான கமலின் நடிப்பைப் பார்க்கலாம்.
உத்தமனின் கதையில் நடிப்புக்கு வெளியே துருத்திக் கொண்டிருக்கும் கமலைப் பார்க்கலாம்.
அன்புடன்
ஆதவா.