செஞ்சோற்றுக் கடன்!!!

தாமரை

Facebook User
செஞ்சோற்றுக் கடனில் எது தர்மம்?

1) உப்பிட்டவனுக்காக உடனின்று போர் புரியும் கர்ணன், துரோனர், பீஷ்மர், சல்லியன்

2) உப்பிட்டவனாதலால் எதிர்த்தும் உடனின்றும் போரிடாது நடுநிலை வகிக்கும் விதுரர்.

3) உப்பிட்டவனாயிருந்தும் எதிர்த்து போர் புரிந்த யுயுத்சு.

இம்மூவரில் யார் செய்தது தர்மம்?
 
Last edited:
செஞ்சோற்றுக் கடன் என்பதே மாயை ஆகும்.

உலகில் எதுவும் யாருக்கும் சொந்தமில்லை. எல்லாம் இறைவனின் சொத்துகள். இது அனைத்து உயிரினங்களுக்கும் பொது. அதை ஒருவன் தன்னுடையது என எண்ணுவது மமகாரம் என்ற மலம் ஆகும்.

எதுவும் யாருக்கும் சொந்தமில்லாத பொழுது யார் கொடுப்பது? யார் பெறுவது?

தர்மம் என்பது நாம் சரி என்று நினைப்பது அல்ல. தர்மம் சூட்சமமானது.

தன்னுயிர் காத்தோன், தன் மானம் காத்தோன், தனக்கு உணவிட்டோன் இவர்களுக்கெல்லாம் அடிமைகளாகிக் கொண்டிருந்தால் இறைவன் இருப்பது மறந்து போகத்தான் செய்யும். இது தான் என்னும் அகங்காரத்தின் வெளிப்பாடாகும்.

ஆக செஞ்சோற்றுக் கடன் செய்கிறேன் என தர்மத்தின் எதிர்பக்கம் நிற்பது அகங்காரம் ஆகும்.

அப்படிப் பார்த்தால் நாம் இறைவனுக்குத்தான் செஞ்சோற்றுக் கடன்பட்டிருக்கிறோம். உயிரையும், உடலையும் உலகையும் தந்தவன் அவனே.... அதை விட மிகப்பெரிய கடன் எது? அதை அடைக்காமல் சின்னச் சின்ன சில்லறை ஏமாற்றுக் கடனைப் பற்றிக் கவலைப்படுவானேன்.

ஆக, கர்ணன், பீஷ்மர், துரோணர் போன்ற செஞ்சோற்றுக் கடன் தீர்க்கிறேன் என்ற அகங்காரிகள் சிறந்தவர்கள் அல்ல.

யுயுத்சு, தர்மனின் பக்கம் நிற்கிறான். தான் சரி என்று நினைக்கும் ஒன்றிற்காகப் போராடுகிறான். இவன் இவர்களை விடச் சிறந்தவன் ஆவான். ஆனால் மிக உயர்ந்தவன் அல்ல. ஏனென்றால குருஷேத்திரத்தில் மடிந்தது சம்பந்தப்பட்டவர்கள் மட்டும் அல்லவே.. எத்தனை கோடி மனிதர்கள் மாண்டனர்? எதற்காக இத்தனை உயிர்கள் சாய்க்கப்பட்டது? மன்னர் குலம், பிராமணர் குலம் தவிர மற்ற உயிர்களுக்கு மதிப்பே இல்லையா? விழும் ஒவ்வொரு உயிருக்கான தர்மக்கணக்கு என்ன?

சுயதர்மத்தை பெரிதாக மதித்தவர்கள் கர்ண, பீஷ்ம, துரோணர்கள். பொதுதர்மத்தை பெரிதாக மதித்தான் யுயுத்சு. ஆனால் இதுதான் தர்மம் என்ற மாயையால் கட்டுண்டவர்கள் இவர்கள். சுயதர்மத்தை விட பொதுதர்மம் உயர்ந்தது. ஆனால் சுயதர்மத்திற்கும் பொதுதர்மத்திற்கும் முரண் வரக்காரணம் என்னவென்றால் அதைத்தான் மாயை என்கிறோம். வாய்மை என்பது என்ன என்று வள்ளுவர் சொல்லும்பொழுது பொய்யும் வாய்மையிடத்த புரைதீர்த்த நன்மை பயக்குமெனின் என்கிறார். ஆக பொதுதர்மத்திற்காக சுயதர்மத்தை விடுதலே தர்மம் என்ற விதிப்படி யுயுத்சு உயர்கிறான்.


விதுரர், இவர் செய்த செயல்தான் தர்மம். ஏனெனில் அவர் தன் கடமையை மட்டுமே செய்கிறார். செய்கின்ற பணிக்கு உரிய பலனை மட்டுமே அனுபவிக்கிறார். அத்தினாபுரத்தில் குடிசையில் வாழ்ந்த ஒரே மந்திரி இவர்தான். எதிலும் இவன் பெருமையை எடுத்துக் கொள்வதில்லை. அனைவருக்கும் நல்லதை மட்டுமே உரைத்தார். எந்த உயிரென்றாலும் சமமாகப் பார்த்தார். எல்லாவற்றுக்கும் மேலாக எப்பக்கமும் சாராமல் இறைவனை மட்டுமே சார்ந்தார்.

விதுரர் மஹாபாரதப் போரில் மட்டுமல்ல எந்தப் போரிலும் பங்கு கொள்ளவில்லை. தன் அண்ணன் மன்னன், பெரியப்பா பெரிய வீரர், அண்ணன் மகன்கள் பெருவீரர்கள் என்ற மாயையில் சிக்காதவர்.

உடல்-உயிர்-உலகம் என அனைத்தையும் கொடுத்த இறைவனுக்கு உண்மையாகவும், அகங்காரம், மமகாரம் மற்றும் மாயைகளில் சிக்காத விதுரனுடையதே உண்மையானச் செஞ்சோற்றுக் கடன்.

இவரிடம் அகங்ககாரம் இல்லை. மமகாரம் இல்லை. இவர் யார் பக்கம் சார்ந்தும் இல்லை. தர்மம் தன்னைக் காத்துக் கொள்ளும் என்பதில் உறுதியானவர். இவர் யாரையுமே அழிக்கவில்லை, எல்லாம் ஒரு காரணத்தினால்தான் என்பதில் நம்பிக்கை கொண்டவர்.

கண்ணன் மற்றும் விதுரனின் உறவு மிக அற்புதமானது. தான் மறையும் முன்பு கூட உத்பவர் மூலம் விதுரனுக்கு பல தர்மங்களை, தத்துவங்களை விதுரனுக்குத் தருகிறார் கண்ணன்.

செஞ்சோற்றுக் கடன் என்பது இறைவனுக்கு உண்மையாய் இருப்பது ஆகும்.. அதனால் விதுரனே செஞ்சோற்றுக் கடன் தர்மத்தை சரியாக கடைபிடித்தார்.
 
கேள்வியும் நானே பதிலும் நானே எனும் பழைய தலைப்பினை நினைவு படுத்துகிறது,,

செஞ்சோற்றுக் கடன் என்பது இறைவனுக்கு உண்மையாய் இருப்பது ஆகும்..

இவ்விடத்தில் எனது சிற்றறிவுக்கு எட்டிய வரை இந்த உண்மையை தவிர வேறொன்றும் தோன்றவில்லை..

ஆனால் இது விவாத்துக்குறியது எனினும் தகவல்கள் நான் அதிகம் படித்ததில்லை எனவே தகவல் அறிந்த ஏனையோர் தொடர்ந்தால் நன்று..

அருமையான தகவல்கள் தரும் தாமரையார் அவர்களுக்கு என் நன்றிகள்..தொடரட்டும் ..அப்படியே அனைத்து பிரிவுகளிலும் வந்தால் மிக மகிழ்வேன்..
 
உணவு, உடை முதலியன கொடுத்துத் தம்மை வளர்த்து ஆளாக்கிய ஒருவருக்குத் தம் உயிரையும் கொடுத்து நன்றிக் கடனாற்றுதல்


நடக்கின்ற போரில் தமக்கு உணவளித்துக் காத்த மன்னனின் பக்கம் நயன்மை இல்லையெனத் தெரிந்திருந்த போதிலும் மன்னனுக்காகப் போரிட்டு உயிர்ஈகம் செய்தல்.


இதுவே " செஞ்சோற்றுக் கடன் " என்பதற்குச் சரியான விளக்கம் .


" உப்பிட்டவரை உள்ளளவும் நினை " என்பது " செஞ்சோற்றுக் கடனின் " மறுபெயர் என்று சொல்லலாம் .



இதையே " புரந்தார் கண் நீர்மல்கச் சாதல் " என்பார் திருவள்ளுவர் .
 
மேலோட்டமாகப் பார்த்தால் ஜெகதீசன் ஐயா சொல்வது சரிதான் எனத் தோன்றும். பல ஆண்டுகள் நானும் அதையே நம்பி வந்தேன்.

ஆனால் கொடுப்பது, எடுப்பது எல்லாம் யாருடைய உடமை என்றக் கேள்வி வந்தது மனதில் ஒரு நாள். யாருடையதுமல்ல. அது முன்பும் இருந்தது.. பின்பும் இருக்கிறது. மரத்தில பழம் யாருக்குச் சொந்தம். விதை தந்த மரத்திற்கா, மரம் நிற்கும் பூமிக்கா, நீர்தந்த ஆற்றிற்கா? நீரைத் திருப்பி விட்ட மனிதனுக்கா? மரம் ஏறிப் பறித்தவனுக்கா? இல்லை அதை இன்னொன்றைக் கொடுத்து வாங்கியவனுக்கா? இதில் யார் யாருக்குச் செஞ்சோற்றுக் கடன்பட்டவர்?

ஒரு சின்ன நிகழ்ச்சி மட்டும் பார்த்தால் புரியும் செஞ்சோற்றுக் கடன் என்ற வார்த்தை விரித்துப் பார்த்தால் ஒன்றுமே புரியவில்லை. அதுதான் நிலைமை. நாடு முன்னோர்கள் உருவாக்கியது. உருவாக்கியர்கள் மக்கள். திருதிராஷ்டிரனுக்கோ, துரியோதனனுக்கோ உரிமை வந்தது என நாம் சொல்வது தர்மக் கற்பனையே ஆகும். அதே வள்ளுவர் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எங்கிறார். பிறப்பினால் இப்பூமியில் சகலருக்கும் சகல உரிமைகளிலும் சம உரிமை உண்டு.

செஞ்சோற்றுக் கடனின் உச்சபட்சம் ஒன்றையும் கண்டேன். பிள்ளையாரே உனக்கு எத்தனை தேங்காய் உடைச்சேன், கொஞ்சமாவது நன்றி இருக்கா உனக்கு எனத் திட்டுகிறான் பக்தன்.

உண்மையில் உடமை என்ற ஒன்று இல்லவே இல்லை எனப் பகவத் கீதையும் சொல்கிறது. அலெக்ஸாண்டரும் சொன்னார், தன் இறுதிக் காலத்தில்.

நல்லதைச் செய்தல் பிறவியின் கடமை. புரத்தலும் அதில் ஒன்றுதான். என் உயிர் காப்பாற்றிய ஒரு மருத்துவர் ஒரு உயிர்க்கொல்லி தொற்றுவியாதியை என்னைப் பரப்பச் சொல்கிறார். நான் செய்யலாமா? கூடாதா? செய்வதுதான் செஞ்சோற்றுக் கடன் என்பீர்கள். ஆனால் உண்மையில் அதைச் செய்யாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் பிறந்தது முதல் அன்றுவரை என்னைக் காப்பாற்றி வந்தது மருத்துவர் அல்ல. உலகம், உலகில் உள்ள மக்களின் வேறுபட்ட உழைப்புகள், இயற்கை. நான் என்பங்கு உழைப்பைச் சமூகத்திற்குத் தந்தேன் வாழ்ந்தேன். அச்சமூகத்திற்கு இதை விட அதிகம் செஞ்சோற்றுக் கடன் பட்டிருக்கிறேன்.

உன் உயிரை மட்டுமே கொடுக்க உனக்கு உரிமை உண்டு. அடுத்தவன் உயிரை ஏன் எடுக்கிறாய் என்பதுதான் இங்கேத் தொக்கி நிற்பதாகும்.

உடல் தந்த அன்னை தந்தையே குழந்தையைக் கொல்லுதல் தவறு எங்கிறோம் தர்மமல்ல என்கிறோம். காரணம் உயிர் தந்தது இறைவன்.

போரிடும்போது உன் உயிரை மட்டும் கொடுக்கவில்லை. அடுத்தவர் உயிரை எடுக்கிறாய் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தர்மம் மிகச் சூட்சுமமானது, பீஷ்மரோ, கர்ணனோ, துரோணரோ, சல்லியனோ தர்மத்தை தன் அளவில் மட்டுமே யோசித்தார்கள். எனக்கு உணவிட்டான், என் மானம் காத்தான், நான் சபதம் செய்தேன். நான் உணவுண்டு வாக்களித்தேன். ஆனால் தர்மம் அவ்வளவுச் சிறியது அல்ல. செஞ்சோற்றுக் கடன் என்றால் இவர்கள் தம் உயிரை மட்டுமே கொடுக்க வேண்டுமே தவிர, அடுத்தவர் உயிரைப் பறிக்கக் கூடாது. அடுத்தவர் உயிர் மீது யாருக்கும் உரிமை இல்லை. அதுவும் தான் நல்லது செய்பவர்கள் என அதி தீவிரமாக நம்புபவரின் உயிரை? அது எப்படித் தர்மமாகும்.

செஞ்சோற்றுக் கடன் என்றுச் சொல்லி வெறும் சாப்பாட்டிற்காக/மரியாதைக்காக/வாக்குத்தவறாமைக்காக கூலிப்படையாளியாக மாறு என்றா சொல்லித் தருகிறது தர்மத்தில்? இல்லையே!

தர்ம சங்கடம் என்றால் என்ன என்பதை உணர்ந்து கொண்டால் இதை அழகாக உணர்ந்து கொள்ளலாம்.

இதற்கென ஒரு கிளைக்கதையுண்டு.. மகாபாரதப் போரின் முன்பு திரௌபதியை பீஷ்மர் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறார் கிருஷ்ணர். மழைபெய்திருக்கிறது. கிருஷ்ணன் திரௌபதியின் காலணிகளைக் கழட்டச் சொல்லி தன் மார்போடு அணைத்து வைத்துக் கொண்டு, உறங்க்கிக் கொண்டிருக்கும் பீஷ்மரின் கால்களைச் சிறிதும் சத்தம் செய்யாமல் தொட்டு வணங்கச் சொல்கிறார். திரௌபதியும் அதேபோல் செய்ய, திடுக்கிட்டு எழுந்த பீஷ்மர் தீர்க்கசுமங்கலி பவ என ஆசிர்வாதம் செய்கிறார். பின்னர்தான் அது திரௌபதி எனத் தெரிகிறது. பார்த்தால் மூலையில் சேறும் சகதியும் அப்பிய கிருஷ்ணன்.

கிருஷ்ணா, என் வாக்கு தர்மப்படி நான் துரியோதனனை வெல்ல வைக்க வேண்டும். இப்போது சொன்ன வாக்கின்படி பாண்டவர் அனைவரும் நெடு நாள் வாழ வைக்க வேண்டும். இரண்டில் நான் எந்த தர்மத்தைக் காப்பாற்றினாலும் இன்னொன்றை உடைத்தே ஆகவேண்டும். என்னை இப்படித் தர்ம சங்கடத்தில் மாட்டவிட்டு விட்டாயே... நீயும் இதே போல் உன் தர்மத்தை உடைக்க வேண்டியதாக ஆகட்டும் என்கிறார்.

9 ஆம் நாள் யுத்தத்தின் போது, அர்ச்சுனன் ஒரு தயக்கத்துடனேயே பீஷ்மருடன் போரிடுவதைப் பார்த்த பார்த்தசாரதி பார்த்தனிடம் உனக்குப் பதினெட்டு அத்தியாயமாக நான் உபதேசித்த கீதை வீணானது. இனியும் பீஷ்மனை நான் விடப்போவதில்லை, நானே அவரைக் கொல்கிறேன் என இறங்க்கி கையில் சுதர்சனமேந்திப் பாய்கிறார். ஆயுதம் ஏந்த மாட்டேன் என்ற அவரது வாக்கை அவர் உடைக்கிறார். பீஷ்மரும் கைகளைக் கூப்பி யாரோ ஒரு பெண் / நபும்சகன் கையால் சாவதை விட உன் கையால் என்னக் கொன்று விடு கிருஷ்ணா எனக் கைகூப்புகிறார். அவருக்குச் சட்டென்று ஞானம் பிறக்கிறது. தர்மம்தான் முக்கியம். தன்னுடைய வாக்கு அல்ல. இறைவனான கிருஷ்ணனே தர்மத்திற்காக தன் சுய வாக்கை உடைக்கிறான். நான் என்பதைப் பெரியதாக நான் நினைப்பதால்தான் என் வாக்கு என்ற அகங்காரத்தினால்தான் இத்தனை மோசங்கள் என்பதைப் புரிந்து கொள்கிறார். என் வாக்கு என்பதை விட தர்மம்தான் முக்கியம் என்கிற ஞானம் வருகிறது. இரு தர்மங்கள் ஒன்றிற்கொன்று எதிராகும்பொழுது பலருக்கும் நன்மைதரும் பொதுதர்மத்தையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற ஞானம் உண்டாகிறது..

இதற்குப் பின் தான் யுதிஷ்டிரனை பீஷ்மரிடம் அனுப்புகிறான் கண்ணன். பீஷ்மரின் மனது தெளிந்து நீரோடையாய் இருக்கிறது. உங்களை எப்படிச் சாய்ப்பது என்ற கேள்விக்குப் பதில் அளிக்கிறார்.

அவரது மனதில் அது துரோகமாகத் தெரியவில்லை. ஏனென்றால் அவருக்குத் தெளிவு பிறந்துவிட்டது. தர்ம சங்கடம் உண்டாகவில்லை. அந்த இடத்தில் எது தர்மமோ அதைச் செய்தார்.

துரியோதனனுக்கு வேண்டுமானால் பீஷ்மர் செய்தது நம்பிக்கைத் துரோகமாகத் தோன்றலாம். ஆனால் தர்மத்தின் தெளிவு பெற்றதனால்தான் பீஷ்மர் தருமனுக்கு சிகண்டியுடன் போரிட மாட்டேன் என்பதைச் சொன்னார்.

மகாபாரதமே குழப்பத்தையும் தருகிறது. பொறுமையுடன் இருந்தால் தெளிவையும் தருகிறது.

எல்லாம் இறைவனால் என்று என்பவன் செஞ்சோற்றுக் கடன் என்ற மாயையில் சிக்கிக் கொள்வதில்லை. ஏனென்றால் நீ எனக்கு உயிர் உதவி செய்திருந்தாலும் சரி செய்திருக்கா விட்டாலும் சரி, சரியானதை, கருணையுள்ளதை, தருமத்தைச் செய்வேன் என்கிறான். அவன் கொடுத்தவனுக்கும் உயிர் கொடுப்பான். கொடுக்காதானுகும் உயிர் கொடுப்பான்.

அப்படி இல்லாமல் இது நான், இது என்னுடையது, இது அவனுடையது என் மாயையால் மயக்கப்பட்டவருக்கு மட்டுமே செஞ்சோற்றுக் கடன் என்ற வார்த்தையே உண்டு.
 
இந்த கேள்விக்கு திருவள்ளுவர் அழகாக பதில் சொல்லி இருக்கிறார்.

ஈன்றாள் பசிகாண்பாள் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.

இதை நான் விளக்க முற்படவில்லை. காரணம் தாயிற் சிறந்த கோயிலுமில்லை என்ற சொல்லை வைத்து சிலர் வாதாட முற்படலாம். என் மனமும் இதில் மயங்கும் என்பதை நேர்மையாக ஒப்புக்கொள்கிறேன். ஆனால் உண்மை இதில் பொதிந்துள்ளது. காரணம் சான்றோர் பழிக்கும் வினையை செய்யலாகுமா கூடாதா என்பதே இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

மஹா பாரதத்தில் அரசுரிமை தனக்கே உள்ளது என்று கூறி பேராசையால் போருக்கு வழி வகுப்பது சான்றோர் பழிக்கும் வினை. இதற்கு துரியோதனன் வழிவகுத்தான் . அதற்கு துணை போனவர்கள் பீஷ்மர் முதலியோர். அதை எதிர்த்தவர் விதுரர். எதிர்த்து போராடியவர் சிறந்த தர்மிஷ்டர். காரணம். செஞ்சோற்று கடன் தீர்ப்பது உலகியல் தர்மம். நீதிக்காக போராடுவது ஆன்மிக தர்மம். உலகம் அழியும் தன்மையுடையது. நீதியை நிலைபெறச்செய்வதே நிலையான நன்மை பயக்கும். கர்ணன் இன்றளவும் போற்றப்படுவதற்கு காரணம் அவன் செஞ்சோற்று கடன் தீர்த்தான் என்பதற்காக அல்ல. அவன் கொடைத்திறம். இவ்வுலகில் பெற்றதை இவ்வுலகத்தவருக்கே கொடுத்துவிடவேண்டும் என்ற சிறந்த ஆன்மிக தர்மத்தை தனிப்பட்டமுறையில் கடைப்பிடித்தான் கர்ணன் . உயிர்காக்கும் கவசத்தையும் கேட்டவருக்கு அது என்ன காரணத்திற்காக கேட்கப்படுகிறது என்று அறிந்தே கொடுத்தான். அங்கு தான் அவன் மங்கா புகழ் நிலை பெறுகிறது. அவன் துரியோதனனிடம் காட்டிய நட்பிற்க்கோ செஞ்சோற்றுக்கடனுக்கோ இல்லை.

செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா

இந்த திரைப்பட பாடல் வரி இன்றும் பலர் நினைவில் நிழலாடுகிறது. செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்தால் வஞ்சிக்கப்படத்தக்கவன் என்பதே இதன் மறை பொருள்.

இதையே வள்ளுவர் வலியுறுத்துகிறார்.
 
Back
Top