மாலை மங்கும் நேரம், களைத்துப்போய் இருந்தும் விரைந்தேன் விடுதி நோக்கிய இரயில் பயணத்திற்காக.............. கொஞ்சம் கோபம் கொஞ்சம் ஏமாற்றம் கொஞ்சம் சோர்வு......... ஒரு நொடி தாமதம்தான் , ஓடி வந்தும் இரயிலை பார்க்க மட்டுமே முடிந்தது.காத்திருக்கும் வேலையில் என் தோழியும் வந்துவிட்டாள். அப்பாடா பேச்சுத்துணைக்கு ஆள் இருக்கு , மனம் சொல்லிக்கொண்டது.இரயில் வருவதை கவனிப்போமா என்பது போல் பேசிக்கொண்டே இருந்தோம்.இமயம் உயரத்தையும் தாண்டிய கோபம், வார்த்தைகள் கொந்தளிக்க திட்டினேன் . என் வயது தான் எனது அலுவலகம் தான், ஓடிய இரயிலில் ஏறி உயிரிழந்த அந்த அறிவிழந்த அரிவை. என்ன தான் அவசர உலகமோ? இரயில் போனால் வரும் , உயிர் போனால் வருமா? கோபமாய் வினவினேன்.இரயில் சத்தம் காது துளைக்க சாந்தமாய் விரைந்தோடும் எண்ணம் மட்டும் நிறைந்தது. உதிக்கும் ஆதவனோடு உதயமானது இன்று அலுவலக கூட்டம் என்னும் எண்ணம். ஒரு மணி நேரம் ஒடியது, நானும் ஓடினேன் இரயில் பயணத்திற்காக...........கடைசி படியில் கால்கள், மணியடிக்கும் ஓசை செவியில், தடதடவென ஓட்டம், பச்சைக்கொடி அசைக்க, கைகள் கம்பியை பற்ற கால்கள் இரயில் படியை மிதித்தன......... ஓடிய இரயிலில் ஏறி உயிரிழக்கும் எண்ணமோ அறிவிழந்த அரிவைக்கு என என் செவியில் யாரோ இதயத்தின் மொழி கேட்டது இரு நொடி படபடப்புக்கு பின். தவறிழைத்தேன்............தன்னிலையும் முன்னிலையும் இலக்கணத்தில் மட்டும் அல்லாது எங்குமே மாறும் என உண்மை கண்டேன். சராசரி மனிதமாய் வாழ்வது தவறில்லை, தவறு செய்ய சராசரி மனிதமாய் நானும் வாழ்ந்துவிட்டேனோ?