உருவ வழிபாடு, அருவ வழிபாடு எது சரி ?

ஆதி

New member
ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு கோட்பாடுகளும், நம்பிக்கையும், வழிபாட்டு முறையும் உண்டு, என்றாலும் எல்லா மதமும் அடிப்படையில் போதிப்பது அன்பு ஒன்றைத்தான். எந்த ஒரு மதமும் உன் அயலானை வெறுத்து ஒதுக்கு என்று கூறவே இல்லை.

ஆனால் இன்று அயலான் என்றால் நான் பின் பற்றுகிற மதத்தில் இருப்பவன் என்ற மனநிலைக்கு மக்கள் சென்றுவிட்டார்களோ என்று எண்ணத்தோன்றும் அளவிற்கு, பிற மத நம்பிக்கையில் உள்ளவர்கள் மீது தாக்குதலையும், வெறுப்பையும் கொட்டுகிறார்கள்.

இந்த வெறுப்பென்பது நேரடியாகவும், சில நேரம் அவன் நேசிக்கும் மதத்தின் மீது நெருப்பென கொட்டப்பட்டு ஒரு கலவரத்தீயை மூளவிடும் அளவிற்கு செல்கிறது. இப்படி அடிக்கடி சர்ச்சைக்குள்ளாகி பெருஞ்சண்டை மூள்கிற ஒரு முக்கிய பொருளாய் இருப்பது உருவ வழிபாட்டு முறை. இது அதிகமாய் விமர்சனத்துக்கும் சர்ச்சைக்கும் உள்ள முக்கிய கரணமாய் இருப்பது, இறைவனுக்கு நிகர் எதுவுமில்லை, இறைவனுக்கு உருவமில்லை, இறைவனால் படைக்கப்பட்ட எதையும் கொண்டு அவனை வழிபட இயலாது, இறைவன் எதற்கும் நிக*ரில்லாத*வ*ன் எனும் கருத்துக்கள்.

அதுமட்டுமின்றி ஹிந்து மதத்தில் இறைவனுக்கு என்று பல உருவங்கள், பல பெயர்கள், பல கதைகள் இருப்பதால், பல கடவுள் கொள்கை கோட்பாடும் விமர்சனத்துக்கு வைக்கப்படுகிறது

இது எல்லாம் எந்த அளவிற்கு சரியானது ?

உருவ வழிபாடு பற்றி தங்களின் கருத்துக்கள் என்ன ?

என்பதைக்குரித்து இந்த திரியில் விவாதிப்போம், வாருங்கள் உறவுகளே.
 
தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்தது எப்பேர் அப்பேர் - தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையாதிருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம் - பொய்கையாழ்வார்.

‘எப்படி வேண்டுமானாலும் நினைத்துக் கொள்! எப்படி வேண்டுமானாலும் பெயர் சொல். எந்த வடிவத்தில் சிந்தித்துப் பார்க்கிறோமோ, அந்த வடிவம் தான் கடவுள்!’

உங்கள் கருத்தும் கிட்ட தட்ட இதுதானே ஆதி ?

ஈஸ்வர அல்லா தேரே நாம் என்றார் மகாத்மா. ஒருவனே தேவன் என்கிறார். ஆனால் நாம் தான் அதை சிந்திப்பது இல்லை.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருண்
மெய்ப்பொருள் காண் பதறிவு என்கிறது குறள்

குணங்கண் மூன்றும் மாறி மாறி வருதல் யார்க்கும் உண்மையின், உயர்ந்த பொருள் இழிந்தார் வாயினும், இழிந்த பொருள் உயர்ந்தார் வாயினும், உறுதிப்பொருள் பகைவர் வாயினும், கெடுபொருள் நட்டார் வாயினும் ஒரோவழிக் கேட்கப்படுதலான், 'எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும்' என்றார். சொல்வாரது இயல்பு நோக்காது, அப்பொருளின் பயன்நோக்கிக் கொள்ளுதல் ஒழிதல் செய்வது அறிவு என்பதாம். ( நன்றி - விக்கிபீடியா)

நன்றி ஆதி...அருமையான் விசாரணை. எனக்கும் இது தெரிந்து கொள்ள ஆவல்.

விஷயம் தெரிந்தவர்களின் கூற்றை எதிர் நோக்கியுள்ளேன்.
 
’அருவத்திற்கேன் உருவம்?’ என்ற கேள்விக்கு ஒரே பதில்தான்:
’உருவம் இல்லாது மனித மனத்தால் உள்ள முடியாது!’

ஆதி முரளி இருவருமே மனிதர்கள் (’ஏலியன்’கள் அல்ல)! மனிதர் என்பதன் முடிவான, பொதுமையான உண்மை எல்லோர்க்கும் தெரியும்போது, இவர்கள் இருவரும் தன் அஞ்சல்களில் ஏன் ஒரு ’அவதாரச் சின்னம்’ விழைகிறார்கள்? நாம் ஏன் நம் மனைவி/கணவன், குழந்தைகளின் சிறு புகைப்படங்களைப் பணப்பையில் வைத்துக் கொள்கிறோம்? ஏன் நம் அஞ்சல்களில் உணர்ச்சிக் படிமக்குறிகள் போட்டு உருவம் தருகிறோம்? ஏன் நமக்குச் சாலகளில் வழிகாட்டுக் குறிகள் தேவைப் படுகின்றன, நாம் என்ன படிக்காதவர்களா?

இது போன்ற கேள்விகளுக்கான பதிலுடன் தொடர்புடையதே இறையுருத் தத்துவம். எழுத்தால், ஒலியால் விளங்கும் உண்மைகளை நாம் படம் போட்டு மனதில் நிறுத்துவது போல, மனம்-மொழி-மெய்க்கு அப்பாற் பட்ட இறைவனையும் உருவங்கள் மூலம் மனதில் நிறுத்த முயல்கிறோம். எல்லா மதங்களிலும் இறையுரு ஏதேனும் ஓர் வடிவில் நிச்சயம் இருக்கும், அவர்கள் அந்த உண்மையை ஒத்துக்கொள்கிறார்களோ, இல்லையோ!

என்னுடைய ’உறவாடும் படிமக் குறிகள்’ கவிதையையும் பார்க்கவௌம்:
http://www.tamilmantram.com/vb/showthread.php/31068-ரமணியின்-கவிதைகள்/page2

*****
 
நன்றி ரமணி.

” உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ” – கந்தரனுபூதி

உருவம் உள்ளவரோ, இல்லதவரோ, இறைவனை மனதில் நிலை நிறுத்த , வணங்க உருவங்களை உருவாக்கினது மனித இனம். இது பண்டை காலம் முதலே. சாதாரண மனிதர்கள் மத்தியில், அவர்கள் மனங்களில் இறைவனை நிறுத்துவதற்கு இது தேவைப் பட்டது. யோகிகள் அல்லது ஞானிகளுக்கு இது பொருந்தாது. ஏன் வேறு வேறு திரு வுருவம், இதற்கு திரு முருக கிருபானந்த வாரியார் சொன்னது:

`தங்கம் ஒன்று தான் என்றாலும் அது வெவ்வேறு வடிவங்களில் அணிகலன்களாகச் செய்யப்படும் பொழுது வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது அல்லவா?' என்று கேட்கிறார் வாரியார்.

சுவாமி சின்மயானந்தர் சொன்னது :

"வேதங்கள் அக்கினியைத் தவிர எந்தத் தேவதையையும் குறிப்பாக உணர்த்தவில்லை. இயற்கையின் சக்தி வடிவங்களாகவே அவை கருதப்பட்டன. இப்படி வைத்துக்கொள்ளும்போது வழிபாட்டில் உள்ள சிரமத்தை, அன்று ஞானாசிரியர்களாக இருந்து சொல்லிக் கொடுத்தவர்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டும். சாதரண மனிதனும் புரிந்து கொண்டு, தெய்வ வடிவங்களாகக் கருதி வழிபடும் முறையை அப்போது அவர்கள் உருவாக்கினார்கள். தியானத்தில் ஈடுபடவும், மனத்தை ஒருமுகப்படுத்தவும் அந்த வழிபாட்டு முறையே சிறந்தது என்று அவர்கள் கருதினார்கள்.

"உன்னுடைய தந்தையும் தாயும் நீ கண் முன்னால் கண்டு வணங்க வேண்டிய உயிருள்ள தெய்வங்கள்" என்று அவர்கள் சொல்லிக் கொடுத்தார்கள். பிறகு அந்தத் தாய் தந்தை வடிவங்களாகவே அம்மனையும் ஈருவரனையும் அமைத்துக் கொடுத்தார்கள். அந்த உருவத்திலேயே வழிபாட்டையும் நடத்தக் கற்றுக் கொடுத்தார்கள். உயிருள்ள தெய்வங்களாகப் பெற்றோரை வணங்க முற்பட்டவன், அந்த வடிவத்தில் உள்ள இறைவனையும் உயிர்ப்புள்ள பூஜையினால் வழிபடத் தொடங்கினான். விக்கிரக ஆராதனை என்பது இப்படித்தான் ஏற்பட்டது.
 
அதற்கு முன்பு இறைவன் என்றால் என்ன என்று கொஞ்சம் வரையறுத்து விடுங்கள்
அதாவது இறைவன் என்றால் எது/என்ன/எவர்/ என்பதை நாம் எப்படி உணர்கிறோம்

அ)பிரபஞ்சத்தை ஒரு சுப்பர் ப்ரோக்ராம் படைத்து செயல்படுத்திக் கொண்டிருக்கும் ஓர் உயிரினமா?

ஆ)வியாதியைக் குணப்படுத்துவது,காணாமல் போனதைக் கண்டுபிடித்துக் கொடுப்பது,காணிக்கை போட்டால் பத்து மடங்காகத் திருப்பித் தருவது இப்படி உதவி செய்யும் சூப்பர் ரோபோ வா?

இ)நன்மை தீமை, உண்மை பொய், இப்படி இரண்டிரண்டாக எல்லாமே நிலவும் இயல்பில் நன்மை மட்டும் விளைந்த ஒரு உயர் பண்பா?

அடுத்து செல்லலாம்
 
உளன் எனில் உளன் ...அவன் உருவம் இவ்வுருவுகள்
உளன் இலன் எனில் இலன் ..அவன் அருவம் இவ்வருவுகள் ..

இதையும் அடுத்து யாரேனும் விளக்குங்கள்
 
மனிதன் இயற்கையைக் கடவுளாக வணங்கினான். அப்போது எந்தப் பிரச்சினையும் எழவில்லை. எப்போது மனிதன் கடவுளுக்கு உருவம் கற்பிக்கத் தொடங்கினானோ அப்போதிருந்தே நம்நாட்டில் சமயப் பூசல்கள் எழ ஆரம்பித்தன.

கடவுள் மனிதனைவிட மேம்பட்டவர், அதிகசக்தி கொண்டவர் என்பதைக் காட்டுவதற்காக , அவருக்குப் பல வினோதமான, அறிவுக்கு ஒவ்வாத பல வடிவங்களைக் கொடுக்க மனிதன் முற்பட்டான். முருகனுக்கு ஆறுதலை , பிரம்மனுக்கு நான்கு முகங்கள், சரஸ்வதிக்கு நான்கு கைகள், ( பல தெய்வங்களுக்கு இவ்வாறே ) பஞ்சமுக ஆஞ்சிநேயர் என்றெல்லாம் வைத்தான். இதுதவிர மனித உடலோடு மிருகங்களின் தலையைப் பொருத்திக் கடவுளை வழிபடத் தொடங்கினான். மனித உடலோடு யானையின் தலையைப் பொருத்தி விநாயகரையும், சிங்கத்தின் தலையைப் பொருத்தி நரசிம்மரையும், காளை மாட்டின் தலையைப் பொருத்தி நந்திதேவரையும் உருவாக்கினான்.

இரத்தமே மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது. ஒரு மனிதனுடைய இரத்தத்தை , மற்றொரு மனிதனுடைய உடல் ஏற்றுக்கொள்வதில்லை. இவ்வாறு இருக்கும்போது மனித உடல், எவ்வாறு மிருகத்தின் தலையை ஏற்றுக்கொள்ளும் ? ஏற்றுக்கொள்ள இயலாது என்ற அறிவியல் உண்மையை வசதியாக மறந்துவிட்டுக் கன்னத்தில் போட்டுக்கொண்டு மனிதன் கடவுளை வழிபடுகிறான். நாத்திகம் பேசுவதாக எண்ணவேண்டாம்;நானும் கடவுளை வழிபடுகிறவன்தான். எப்படிப்பட்ட கடவுளை? திருவள்ளுவர் குறிப்பிடுகின்றாரே அந்தக் கடவுளை ! திருவள்ளுவர் கடவுளுக்கு எந்த உருவமும் கற்பிக்கவில்லை. அவர் கடவுளின் திருவடிகளைப் பற்றி மட்டுமே பேசுகிறார். அவன் திருவடிகளை மட்டுமே வணங்கச் சொல்கிறார். " கடவுள் " என்ற சொல்லைக் குறிப்பிட்டால் கூட அது இந்து சமயத்தைக் குறிக்கும் என்பதற்காக அச்சொல்லையே அவர் திருக்குறளில் பயன்படுத்தவில்லை. விநாயகர் வீட்டோடு இருந்த வரையில் எந்தப் பிரச்சினையும் எழவில்லை; ஆனால் விநாயகர் சதுர்த்தியின் போது அவருக்குப் பிரம்மாண்டமான சிலைகளை முச்சந்தியில் எழுப்பி, ஊர்வலமாகச் சென்று கடலில் கரைப்பது என்ற வழக்கம் வந்தபின்னர்தான் சமயச் சண்டைகள் தோன்ற ஆரம்பித்தன.

எனவே " ஓர் உருவம், ஓர் நாமம் இல்லாத " கடவுளை வழிபடுவோம். திக்கை வணங்கிடும் துருக்கர்போல , தீயை வணங்கக் கற்றுக்கொள்வோம். ஞாயிற்றைப் போற்றுவோம்; திங்களைப் போற்றுவோம்.கங்கையைப் போற்றுவோம், காவிரியை வணங்குவோம். இயற்கை அன்னையை வணங்கக் கற்றுக்கொள்வோம்.
 
"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலற்வன் நற்றாழ் தொழார் எனின்"
என்பது வள்ளுவர் வாக்கு.

கற்றவர்கள் உணர்ந்ததை மற்றவர்களும் உணர்ந்து அனுபவிக்க வேண்டும் என்பதற்காக ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அப்போதிருந்த நிலைமைக்குத் தகுந்தாற்போல் உருவாக்கியதே உருவ வழிபாட்டு முறையாக இருக்கும்.

மனிதன் வழி வழியாக உருவ வழிபாட்டை பின்பற்றிய அளவிற்கு உணர வேண்டிய விஷயங்களக் கற்றுக்கொள்வதில் முனைப்பைக் காட்டாமல் போனது துரதிஷ்டமே.
இன்றும் பலரும் பல சடங்குகளை அவை எந்த சூழ் நிலையில் எதற்காக உருவாக்கப்பட்டது என்பதை மறந்து வெற்று சடங்காக அர்த்தமில்லாமல் கடனே என்று பின்பற்றுவதை நாம் காண்கிறோம் அல்லவா ?
நல்ல திரியைத்துவக்கியதற்கும் பயனுள்ள தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கும் அனைவருக்கும் நன்றி.
 
அதற்கு முன்பு இறைவன் என்றால் என்ன என்று கொஞ்சம் வரையறுத்து விடுங்கள்
அதாவது இறைவன் என்றால் எது/என்ன/எவர்/ என்பதை நாம் எப்படி உணர்கிறோம்

அ)பிரபஞ்சத்தை ஒரு சுப்பர் ப்ரோக்ராம் படைத்து செயல்படுத்திக் கொண்டிருக்கும் ஓர் உயிரினமா?

ஆ)வியாதியைக் குணப்படுத்துவது,காணாமல் போனதைக் கண்டுபிடித்துக் கொடுப்பது,காணிக்கை போட்டால் பத்து மடங்காகத் திருப்பித் தருவது இப்படி உதவி செய்யும் சூப்பர் ரோபோ வா?

இ)நன்மை தீமை, உண்மை பொய், இப்படி இரண்டிரண்டாக எல்லாமே நிலவும் இயல்பில் நன்மை மட்டும் விளைந்த ஒரு உயர் பண்பா?

அடுத்து செல்லலாம்

ஜான் நல்ல கேள்விதான்.

அ):
அது ஒரு சக்தியைக்குறிப்பதே அன்றி ஒரு உயிரினத்தைக்குறிப்பதாக ஆகாது.
ஆ):
சில பயிற்சிகள் மூலம் சக்தியைக்கையாளும் முறைகளை அறிந்து கொண்டால் நீங்களும் சில மாயங்களை செய்து சூப்பர் ரோபோ ஆகலாம். அது கடவுள் தன்மை என்று நான் கருத வில்லை.
இ):
கடவுள் என்பது நன்மை மட்டும் விளைந்த ஒரு உயர் பண்பும் இல்லை. சொல்லப்போனால் நன்மை தீமை இர்ண்டுமே அவசியமானதுதான். அதில் ஒன்று மட்டும் உயர்வான பண்பு என்பதெல்லாம் கிடையாது.

'GOD' என்பதை

Generator,
Operator &
Destructor

என்பதன் முதல் எழுத்துக்களின் கூட்டாக எடுத்துக்கொள்வோமே.

கடவுள் என்பதே காணப்படுவது அல்ல, உணரப்படுவது என்பதே உண்மை.
எல்லா இயக்கங்களுக்கும் ஆதாரமாக இருக்கும் ஒரு சக்தியைத்தான் கடவுள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
 
1. கடவுள் என்பது ஒரு சக்தி.

அப்படியானால் இயற்கைச் சக்திகளான காற்று, நீர், ஒளி, ஒலி, புவியீர்ப்பு -- இவையெல்லாம் கடவுளா?
அல்ல என்றும், கடவுளின் சக்தி இவற்றையெல்லாம் ஆளுவதாகவும் மீறுயதாகவும் அறிகிறோம்.

2. ’கடவுளின் சக்தி’ என்னும் போது அவ்வளவு தூரம் சக்திகொண்ட அந்தக் கடவுள்தான் யார் அல்லது எது என்ற கேள்வி வருகிறது.
இயற்கை சக்திகளுக்கு இப்படித்தான் செயல்பட வேண்டும் என்று தெரியாது. அவை சில நியதிகளுக்கு உட்பட்டுச் செயல்படுகின்றன.
கடவுளின் சக்தி செயல்படும் விதம் கடவுளால் தீர்மானிக்கப் படுகிறது.

3. மனித உடலுக்கென்று பொருண்மையும் நுண்மையும் கொண்ட சில சக்திகள் இருப்பதை அறிவோம். அவை எவ்வாறு செயல்படுகின்றன?
இப்படி யொரு கேள்வி கேட்டால் உடனே பதில் வரும், மனிதனின் பிரக்ஞையால் என்று.

இந்த மனிதப் பிரக்ஞைதான் இன்றைய அறிவியலில் ஒரு பெரிய சவாலாகவும் கேள்விக் குறியாகவும் உள்ளது.

4. அந்தப் பிரக்ஞை--consciousness தான் கடவுள். ’ப்ரக்ஞானம் பிரம்ம’ என்பது வேத வாக்கு.
கடவுளின் பிரக்ஞை எப்படிப்பட்டது? அது மனிதனின் பிரக்ஞையிலிருந்து வேறுபடுகிறதா அல்லது இரண்டும் ஒன்றா?
இரண்டும் ஒன்றே என்பது வேத வாக்கு: ’தத் த்வம் அசி’.

5. மனித, கடவுள் பிரக்ஞை ஒன்றேதான் என்றால் ஏன் மனிதனால் கடவுள் போலச் செயல்பட முடிவதில்லை?
காரணம், அந்த ’நான்’ என்று பிரித்துணரும் தன்னுணர்வு. அஹங்காரம், அகந்தை, நான், தான் எல்லாம் ஒரு பொருட் பன்மொழி.
கடவுளிடம் இந்த ’நான்’ என்பது இல்லை. கடவுளின் அவதாரங்களும் இறைத் தூதர்களும் தம்மைக் கடவுளாகச் சொல்லவில்லை. தாம் கடவுளின் உருவம் என்றே சொன்னார்கள். இந்து மதத்தில் இன்னும் ஒரு படி மேலே போய் ’ஒவ்வொரு மனிதனும் இருப்பில் கடவுளே’ என்று சொல்கிறோம்.

6. மனிதனின் பிரக்ஞையை அவனது உருவமாகக் காணும் போது, ஏன் கடவுளின் பிரக்ஞையையும் உருவாகக் காணக் கூடாது?
தண்ணீர் உறைந்து பனிக்கட்டியாகி அது குழந்தைகள் கையில் பொம்மை வடிவம் பெறுவது போல கடவுளின் சக்தி மனித மனத்தில் உறைந்தெழுந்து உருவம் பெறுகிறது.

7. கடவுள் என்பது ஒரு உருவமே அல்ல என்று ’விஞ்ஞான’ முறைப்படி சொல்லும் போது, மனிதன் என்பதும் உருவல்ல என்ற உண்மையையும் அந்த ’விஞ்ஞானம்’ கடுமையாக வலியுறுத்த வேண்டும். நிலம், மரம், புழு, மிருகம், மனிதன் எல்லாமே அணுத்துகள் நிலையில் ஒன்றுதான் என்று விஞ்ஞானம் சொல்லும் போது, நாம் எல்லோரும்--அந்த விஞ்ஞானிகள் உட்பட--ஏன் உலகில் பிரக்ஞையும் பொருணமையும் சேர்ந்த உயிரின உருவங்களைக் காண்கிறோம்?

ஏனென்றால் அதுபோல உருவகிப்பது நமக்கு ஓர் ஆறுதல், வசதி, மனதுக்கு ஒரு பிடிப்பு, எண்ணத்திற்கு ஓர் வலிமை.
விஞ்ஞானிகளுக்கு ஒரு வசதியான கருத்துரு. அரசியல்வாதிகளுக்கு ஒரு வசதியான ஆளுமை யுத்தி, போன்று பல காரணங்கள்.
உலகினை இவ்வாறு உருவகிக்கும் போது இறைவனை உருவகித்தல் தவறல்ல என்பது என் வலிய கருத்து.

8. உலகையும் உயிரங்களையும் ’உருவை மீறிய பிரக்ஞை உறையும் சக்தி’ என்பதைப் பொருண்மை விஞ்ஞானத்தால் முழுதும் அறியவோ வலியுறுத்தவோ முடியாது என்பதும் என் கருத்து. இங்குதான் நமக்கு மதங்களும் அறநெறிகளும் தேவைப் படுகின்றன.

கடவுளை உருவில் வழிபடச் சொல்லும் இந்து மதம், அது ’நீக்கமற நிறைந்து இலங்கும் (நிற்கும் அல்ல) ஒன்றாம் பரம்பொருள்’ என்ற உண்மையையும் வலியுறுத்திக் கூறுகிறது.

நானும் முரளியும் இங்குள்ள மற்ற நண்பர்களும் உருவ வழியில் தான் ஒருவருக்கொருவர் நேசம் பாராட்ட முடியும்.
அதே உருவ வழியில் கடவுளுடனும் நேசம் பாராட்ட வைப்பதுதான் உருவ வழிபாடும் பக்தியும்.

*****
 
உணரும் வரை உருவம், உணர்ந்த பின் அருவமும் உருவமும் ஒன்றே!
 
கோயில்கள் நிரம்பிய தமிழ்நாட்டில் 'விக்கிரக ஆராதனை அவசியமா?" என்ற கேள்விக்கே இடமில்லை. ஊருக்குப் பொதுவான கோயில், வீதிக்குப் பொதுவான கோயில், வீட்டில் பூஜை அறை என்று வைத்துப் பல முர்த்திகளைத் தொன்றுதொட்டு வழிபட்டு வருகிறோம். ‘அடையாளம், பெயர், உருவம் இல்லாத கடவுளுக்கு உருவம் இல்லாத கடவுளுக்கு உருவம் அமைப்பது நியாயமா?’ என்று இவற்றின் உண்மையைத் தெரியாதவர்கள் கேட்கக்கூடும்.
நாம் வழிபடும் ஆலயங்களும் விக்கிரகங்களும், நாம் வாழ்கின்ற வீடும் நாம் எடுக்கும் உடம்பும் போன்றன அல்ல. வீடும் நாம் எடுக்கும் உடம்பும் போன்றன அல்ல. வீடும் உடம்பும் மனிதனுக்குப் பயன்படுவன. அதுபோலக் கடவுளுக்காக ஆலயமும் விக்கிரமும் உண்டாகவில்லை, கடவுளை வழிபட்டுப் பயன் அடையும் பக்தர்களுக்காகவே அவை எற்பட்டன.
எந்தப்பொருளையாவது மனதில் எண்ணவேண்டுமானால் அந்தப் பொருளுக்கு ஓரு பெயரும் உருவமும் இருக்கவேண்டும். நாமரூப நாட்டம் உடையது மனம். அவை இல்லாவிட்டால் மனம் பற்றாது. இறைவன் உலகிலுள்ள உயிர்களைக் காப்பாற்றியருள உருவம் எடுத்து வருகிறான். அவன் குணம் இல்லாதவன்; உருவம் இல்லாதவன். ஆயினும் வேண்டுமானால் உருவம் எடுத்துக்கொண்டு வருவான்; அகடித கடனா சாமார்த்தியம் உள்ளவன். ஆதலின் அடியார்களைக் காப்பாற்ற வேண்டிய உருவம் எடுத்துக்கொள்ளும் ஆற்றல் படைத்துதவனாக இருக்கிறான் அடியார்களுக்கு நன்மை செய்யவேண்டுமென்ற கருணை உள்ளவன்.
ஓர் ஏழைக்கு மற்றோர் ஏழையினிடம் இரக்கம் பிறக்கிறது. அவனுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று எண்ணுகிறான். எண்ணி என்ன பயன்? அவனுடைய கருணை மனத்தளவில் நின்றுவிட வேண்டியதுதான் அவனும் ஏழையாக இருப்பதுதான் அதற்க்குக் காரணம். பணக்காரனாக இருப்பவனுக்கு ஆயிரம் ரூபாய் அளிக்கும் சக்தி இருந்தாலும், கொடுக்கவேண்டும் என்ற இரக்கம் இல்லவிட்டால் ஏழைக்குப் பயன் இல்லை. ஆகவே ஆற்றலும் வேண்டும்; இரக்கமும் வேண்டும். இறைவனிடம் இந்த இரண்டும் உள்ளன.
உயிர்க்கூட்டங்களின் மனமும் வாக்கும் இறைவனை அணுக முடியாது. மனம் எண்ணவும் வாக்குப் பேசவும் வேண்டுமானால் உருவமும் பெயரும் வேண்டும். மனமும் வாக்கும் அவனை அணுகா என்பது உண்மை. ஆனால் அவன் ஆற்றலாலும் கருணையினாலும் மனத்தையும் வாக்கையும் அணுகுகிறான். அவனுடைய திருவருள் துணையினால் அவன் திருவுருவத்தைக் கண்ட பெரியார்கள் தாம் கண்டதைப் பிறரும் தெரிந்து வழிபட விக்கிரகங்களிலும் ஓவியங்களிரும் உருவாக்கிக் காட்டச் செய்கிறார்கள்.
அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவஃவண் ணத்தன்
இவன் இறைவன் என்று எழுதிக் காட்டொ னாதே
என்று அப்பர் சுவாமிகள் கூறுவார்.
அருட்கண்ணால் நோக்காதார் அல்லா தாரே
என்றும் அருளுவார்.
ஆகவே அருட்கண்ணினால் இறைவன் தேகத் திருவுருவத்தைத் தரிசித்து இன்புற்றவர்கள், நாமும் புறக்கண்ணால் கண்டு வழிபட்டு இண்பம் அடையும்படி அந்த உருவத்தை அமைக்கச் செய்தார்கள். முதலில் அகத்தே கண்ட திவ்ய வடிவத்தைப் பிறகு புறத்தே வடிக்கச் செய்தார்கள். நாம் அந்த வடிவத்தை முதலில் கண்ணால் கண்டு பிறகு மனத்திலே பதித்தால் முறுகிய பயிற்சியின் விளைவாக அந்த தேகத்திருவுருவத்தை அக்கண்ணினால் தரிசிக்கும் பேறு நமக்கும் கிடைக்கும் அகக் கண்ணில் கண்டவர்கள் முகக்கண்ணில் கண்டவர்கள் பின்பு அகக்கண்ணில் காணும் நிலை பெறவேண்டும்.
ஆலயங்களிலுள்ள மூர்த்திகளைத் தரிசிக்கிறோம். மற்றக் காட்சிகளை மறந்து இறைவன் திருவுருவத்தையே கூர்ந்து கண்டு இண்புறவேண்டும். பல நாளகப் பிரிந்திந்த கணவனை கூட்டத்தில் கண்ட மனைவி மற்றவர்கள்பால் பார்வையை ஓட்டாமல் அவனையே பார்ப்பது போல் பார்க்கவேண்டும். இந்த ஒருமைப்பாடு நமக்கு எளிதிலே கிடைக்காது. தீபாராதனை செய்யும் போது இறைவன் திருவுருவத்தைத் தரிசித்து நன்றாகப் படம் எடுத்துக்கொள்ளவேண்டும். புறத்திலே கண்டதை அகத்திலே ஒருகணம் நினைக்கலாம், நிலையாக அதை வைத்துப் பார்பது எளிதில் முடியாது. ஆகவே இடைவிடாமல் புறத்தே கண்ட திருவுருவத்தை அகத்தே நிறுத்தி நிறுத்தி பயிலவேண்டும். இந்த தியானச்சிறப்பினால் உள்ளத்திலே புகுந்த அந்த வடிவம் உயிரோவியமாகவும் சுடருருவமாகவும் மாறும். அப்பால் இன்ப அனுபவம் தலைப்படும். விக்கிரக வழிபாட்டின்பயனே இந்த உண்முக அநுபந்தான். இதற்கு முதற்படியே வழிபட்டாலும், தானே பூஜை செய்தாலும் உண்முகத்தில் தியானம் செய்து பயிலவேண்டும். புறத்திலே வழிபாடு செய்யாமல் உள்ளே தியானம் செய்வது எளிதில் கைகூடாது. ஆதலால்தான் சரியை, கிரியை, யோகம் என்று படிப்படியாக வைத்திருக்கிறார்கள். பிறர் பூஜை செய்வதைப் பார்த்து உருகுவது சரியை; தானே பூஜை செய்வது கிரியை; உண் முகத்திலே தியானம் செய்வது யோகம். ஒன்றுக்கு ஒன்று படியாக இருப்பது.
- நன்றி – அபிராமி அந்தாதி விளக்கவுரை – கி.வா.ஜ
 
கி.வா.ஜ அவர்களின் விளக்க உரையை பொருத்தமான திரியில் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி, கு.கோ.பி
 
நல்ல திரி. பலர் நான் நினைப்பதை ஏற்கனவே சொல்லிவிட்டார்கள். இறை வணக்கம் என்பது உருவ வழிபாட்டில் துவங்கி மேம்பாட்டு அருவ வழிபாட்டில் முற்று பெற்று முழுமை அடைகிறது. உருவமற்ற இறைவன் எல்லா உருவத்தையும் எடுக்கவல்லவன். இதுவே என் கருத்து.
 
Back
Top