பாதுகாப்பு ?

எழுத்தறிவித்தவன் இறைவனாவான், பிச்சை புகினும் கற்கை நன்றே, கண்ணுடையார் என்போர் கற்றோர் இப்படி எண்ணற்ற பொன்மொழிகள் கல்வியின் இன்றியமையான்மையை வலியுறுத்துவது நம் தமிழ்ச்சமூகம் அறிந்த ஒன்றே. இவையெல்லாம் ஏட்டோடு நின்று விடாமல் இயல்பிலும் இருப்பது மகிழத்தக்கது. அதிலும் பெண்கல்வியின் அவசியம் குறித்து தினமும் ஒலி, ஒளி, அச்சு, கேளிக்கை ஊடகங்களின் பரப்புரை மக்களைச் சென்றடைகிறது. ஒரு தலைமுறையை உயர்த்தக் கூடிய ஒரே ஏணி கல்வி மட்டுமே. பெண்ணடிமைத்தனத்தை உடைத்தெடுக்கும் மிகப் பெரிய ஆயுதம் கல்வி. இதை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர் என்பதன் கண்முன் சாட்சியாக நிற்கிறது இந்திய அரசின் 2010ஆம் வருட கணக்கெடுப்பு.

இந்திய அளவில், 2001 ஆம் ஆண்டு 53.67%ஆக இருந்த பெண்களின் படிப்பறிவு விகிதம், 2010 ஆம் ஆண்டு 65.46%ஆக உயர்ந்திருக்கிறது. 10ஆண்டுகளில் ஆண்களை விடப் பெண்களின் படிப்பறிவு விகிதம் இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது. இன்று அநேகமாக எல்லாத்துறைகளிலும் பெண்கள் புலமை பெற்று விளங்குகிறார்கள். கிராமங்களிலும் முன்பிருந்ததை விடக் கணிசமான அளவு பெண்கல்வி அதிகரித்து வருகிறது. இவையெல்லாம் இந்தியனைக் கண்டு ஏளனிப்பவர்கள் தலையில் விழுந்த இடி.

ஆனால் இதன் இன்னொரு முகத்தை மறைப்பது நியாயமாகாது. சமூகத்தில் பெண்களுக்கு முன் இருக்கும் சவால்கள் அதிகம். உடல் மீதும் உணர்வுகள் மீதும் நடக்கும் வன்முறைகளைத் தாண்டித்தான் ஒரு பெண் ஜெயிக்க வேண்டியிருக்கிறது. அதிலும் ‘பெண்கள் பாதுகாப்பு’ என்ற பெயரில் ஆண் வர்க்கம் செய்யும் அராஜகம் வேதனையானது.

டெல்லி மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்தையடுத்து, பெண் பாதுகாப்பு குறித்து நன்கு படித்தவர்களும், உயர்பதவியில் இருப்பவர்களும் அரசியல்வாதிகளும் வெளியிட்ட கருத்துக்கள் பல அபத்தங்கள் நிறைந்ததாகவே இருந்தது. ஆடைக்கட்டுப்பாடு, நேரக்கட்டுப்பாடு என்று விரிந்தவைகள் என் நினைவில் வந்து செல்கின்றன. இந்த அபத்தங்களின் இன்னொரு வடிவமாக இருக்கிறது சில கல்லூரிகளின் பெண்கள் விடுதிகள்.

எனக்குத் தெரிந்த பெண் ஒருத்திக்கு, ஒரு புகழ்பெற்ற கண் மருத்துவமனைக் குழுவிற்குச் சொந்தமான கல்லூரி ஒன்றில் இடம் கிடைத்திருந்தது. அவள் ஏழை வீட்டுப் பெண். நல்ல மதிப்பெண்கள் வைத்திருந்தாலும், மேலே படிக்க வைக்க வசதியில்லாமல் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில், அந்தக் கல்லூரியில் இடம் கிடைத்தது. படிப்புச் செலவு, விடுதிச் செலவு என அனைத்தையும் அவர்களே ஏற்றுக் கொள்வார்கள். கண் நர்சிங் படிப்புடன் அங்கேயே பகுதி நேர வேலையும் பார்க்க வேண்டும். 5 வருடம் கட்டாயமாக அங்கே இருக்க வேண்டும். தமிழகத்தின் எந்தக் கிளையில் வேண்டுமானாலும் பணிக்குப் போடுவார்கள். மாதாமாதம் சின்னத் தொகை சிறப்பூதியமாக (stipend) உண்டு. 5 வருட நிறைவில் ஒரு குறிப்பிட்ட தொகை கைக்கு வரும். சராசரி மத்திய வர்க்கத்திற்கு அது திருமணம் போன்ற செலவுகளுக்குப் போதுமானதாக இருக்கும். பெண்கள் மட்டும் படிக்கும்/பணிபுரியும் இடம் வேறு.

இத்தகைய சலுகைகள் ஏழை மாணவர்களுக்கு அவசியம். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் விடுதியில் இவர்களுக்கு இருக்கும் கட்டுப்பாடுகளைக் கேட்டால் கண்கள் பனிக்கின்றன.

Rule 1: யாரும் செல்போன் பயன்படுத்தக்கூடாது.

Rule 2: ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அம்மா, அப்பாவிற்கு மட்டும் விடுதியின் லேண்ட்லைன் போனில் பேசிக் கொள்ளலாம்.

Rule 3: அம்மா, அப்பா மற்ற சொந்தங்கள் யாரும் மாணவியைத் தொடர்பு கொள்ள முடியாது. அவளாகப் அழைத்தால் தான் பேச முடியும்.

Rule 4: ஞாயிற்றுக்கிழமைகளில் அப்பா, அம்மா விடுதி சென்று பார்க்கலாம். அதிலும் காத்திருப்பு அறையில் இருந்துதான் பேசிக் கொள்ள வேண்டும்.

Rule 5: அம்மா கூட பெண்ணின் அறைக்குச் சென்று பார்க்க முடியாது.

Rule 6: அம்மா உடன் இருந்தால் ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்ணை வெளியே அழைத்துப் போகலாம்.

Rule 7: நினைத்த நேரத்தில் வீட்டுக்கு வர முடியாது. ஆண்டிற்கு 15 நாட்கள் விடுப்பு. (தீபாவளி, பொங்கல் இப்படி...) அந்தக் குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே வீட்டிற்குச் செல்ல முடியும்.

Rule 8: அம்மாவோ, அப்பாவோ யாராவது வந்து தான் அழைத்துச் செல்ல முடியும்.

இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்திற்கும் நிர்வாகம் சொல்லும் ஒரே ஒரு காரணம்: 'பெண்கள் பாதுகாப்பு'

இதன் பெயர் பாதுகாப்பா? அடிமைத்தனமா?

செல்போன் வைத்துக் கொள்ள முடியாது. நினைத்த நேரத்தில் பெண்ணுடன் பேச முடியாது. அவளாகப் பேசினால் தான் பேச முடியும். அதுவும் நிர்பந்திக்கப்பட்ட நிமிடங்கள். எவ்வளவு கொடுமை இது? ஆத்திர அவசரமென்றால் என்ன செய்வார்கள்? இங்கு கல்வி என்ற பெயரில் பெற்றோர்களிடமிருந்து பிரித்தல்லவா வைத்திருக்கிறார்கள்!

இந்தக் 'கால்'(call) கட்டுப்பாடுகளுக்கு அவர்கள் சொல்லும் காரணங்கள் அபத்தோபத்தம். போன் பேசினால் காதல் வயப்பட்டு விடுவார்களாம். இதென்ன கொடுமை? 17 வயதான பெண்ணிற்கு எது சரி தவறு என்று தெரியாதா? கல்லூரி படிக்கும் பெண்ணின் மன முதிர்ச்சியின் மேல் இப்படியொரு சந்தேகமா? அப்படியே காதலித்தால் தான் என்ன தவறு? ஒரு பெண் தன் மனத்திற்குப் பிடித்தவனை விரும்புவது எந்த விதத்தில் தவறாகும்? இது அவள் தனியுரிமைகள். இதில் தலையிட அரசாங்கத்திற்கே அதிகாரம் இல்லையெனும் போது நிர்வாகத்திற்கு ஏது? பெண்ணென்பவள் அதே உணர்வில் திரிபவள் என்ற எண்ணமா? அதைத் தாண்டி செல்போனில் செய்வதற்கு எதுவுமே இல்லையா? அவள் கனவுகளும் வேட்கைகளும் இங்குமே பாலியல் ரீதியில் தான் பார்க்கப்படுகிறது என்பது எப்பேர்ப்பட்ட அடக்குமுறை!

16 வருடமாய் பெற்றோர்களின் செல்லமாய் இருந்துவிட்டு, திடீரென்று வாழ்ந்த சூழல்களை மறந்து இன்னொரு இடத்தில் படிப்பது/வேலை செய்வது என்பது நடைமுறைச் சவால் தான். மனம் இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள கொஞ்ச காலம் பிடிக்கும். பெற்றோர்களை நினைத்த நேரத்தில் பார்க்கத்தான் முடியாது. பேசிவிட்டுப் போகட்டுமே! இதில் நிர்வாகத்திற்கு என்ன வயிற்றெரிச்சல்?!

அது விடுதியா? இல்லை சிறைச்சாலையா? விடுதிக்கு வெளியே அப்பா, அம்மா இல்லாமல் தனியாகப் போக முடியாது. பின் எப்படி எதிர்கொள்வது இந்தச் சமுதாயத்தை? திருமணத்திற்கு முன்பு வரை பெற்றோர்களைச் சார்ந்து, அதன் பின் கணவனைச் சார்ந்து வாழ நிர்பந்திக்கப்படுகிறாள். பின்பு எதற்கு இவ்வளவு படிப்பு! எப்படி வரும் சொந்த சிந்தனைகள்! பெற்றோரோ, கணவனோ சரியாக அமையாத பெண்ணின் கதி என்னவாக இருக்கும்? அவள் படித்த கல்விச்சூழல் இப்படியானதாக இருக்கும் போது தைரியமான மனோநிலைக்கு அவளால் வர முடியுமா? ஏழைகள் என்பதால் இவ்வளவு கட்டுப்பாடுகளா? இல்லை பெண் என்பதால் இப்படியா? அவள் இளமைக்கால மகிழ்ச்சிகளை இந்த அடக்குமுறைகள் தின்பது உரிமைமீறல் அல்லவா?

பாதுகாப்பு என்ற போர்வைக்குள் இங்கே நடப்பது அனைத்தும் பெண்கள் மீதான அப்பட்டமான அடக்குமுறைகள். இந்தக் கல்லூரி என்றில்லை, பெரும்பாலான கல்லூரி விடுதிகளின் கதி இது தான். இதற்கெல்லாம் என்ன பதில் வைத்திருக்கிறோம் நாம்?

உயரப் பறக்கும் போது தவறி விழுந்தால் அடிபடும். தடுமாறாமல் பறப்பது எப்படி, தடுமாறும் போது சமாளிப்பது எப்படி என்று கற்றுத் தருவதன் பெயர் தான் பாதுகாப்பு. மாறாக, சிறகுகளை முறிப்பது சரியான செயலா?

இங்கே முடக்கப்படுவது பட்டாம்பூச்சியின் சிறகுகள் அல்ல. குருவிகள் கூடு கட்டிக் குடியிருக்கும் மரத்தின் ஆணிவேர். அதன் பெயர் சமுதாயம்!

(முற்றும்)
 
மொதல்ல கொஞ்சம் தண்ணீர் குடிங்க இராஜி,
அப்பப்பா, என்னா கோபம் இந்த இராஜி பொண்ணுக்கு !

உங்கள் கருத்துக்களின் அடிப்படை உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

மிகப்பல வருடங்களாக பெண்ணை அடிமையாக வைத்திருந்தவர்களின் கருத்துக்களுக்கு நாம் அதிகமான மதிப்பை கொடுக்க வேண்டாம்.

சிறு வயதிலேயே தன்னுடன் படிக்கும், விளையாடும் தன்னுடைய தோழிக்கும் தன்னைப்போலவே விருப்பு வெறுப்புகளும் கொள்கைகளும் இலட்சியங்களும் இருக்கும் என்று ஒவ்வொரு சிறுவனும் உணரும் போதுதான் நீங்கள் எதிபார்க்கும் பாதுகாப்பு பெண்களுக்கு சமூகத்தில் இயல்பாக கிடைக்கும்.

இப்போது இருக்கும் நிலைமை நாம் நினைப்பது போல இல்லாததாலேயே எல்லாம் தவறு என்று கூறிவிட முடியாது என்பதை மறுக்க முடியாது.

நீங்கள் குறிப்பிடும் நிறுவனம் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இவ்விதமான கட்டுப்பாடுகளை வைத்திருக்கக்கூடும் அல்லவா ?

வேறு கோணத்தில் இதை பார்க்க முயல்வோமா ?

அந்தக்காலத்தில் குருகுலவாசம் என்ற முறை இருந்ததைப்பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். குருகுலவாசத்தின் போது இப்போது நீங்கள் கட்டுப்பாடு என்று குறை பட்டுக்கொள்ளும் எல்லா நிபந்தனைகளும் இருந்தது என்பதுதானே உண்மை.

இப்போதாவது மாணவி நினைத்தால் பெற்றோருடன் தொடர்பு கொள்ள முடியும் என்ற நிலை இருக்கிறதே, அப்போது குரு நினைக்கும் வரையில் சீடன் யாருடனுமே தொடர்பு கொள்ள முடியாதே.

அப்போது இருந்த குருவைப்போலவே இப்பொது இல்லை என்பதையும் நான் உணர்ந்தே இருக்கிறேன்.

ஆனால் குருகுல வாசம் போன்ற ஒரு நிலையை ஒரு நிறுவனம் நல்ல எண்ணத்துடன் எற்படுத்தினால் அது பெரும்பாலோருக்கு நல்லதுதனே.

நீங்கள் குறிப்பிட்டிருப்பது எந்த நிறுவனம் என்று எனக்கு தெரியாது. நான் எந்த தனிப்பட்ட நிறுவனத்தையும் ஆதரிப்பதற்காக இதையெல்லாம் சொல்லவில்லை.

சுமார் நூறு வயது வாழப்போகும் ஒருவர் ஒரு 5 வருட காலத்திற்கு சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இருப்பது நீண்டகால நோக்கில் நன்மை பயக்கும் என்றே நான் கருதுகிறேன்.

பெரும்பான்மையானவர்களால் செய்யமுடிவதை தானும் செய்ய முடிவதுதான் சுதந்திரம் என்று கருதுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

இந்த கட்டுப்பாடுகள் நல்லமுறையில் ஒரு ஒருங்கினைந்த முனைப்போடு, எந்த விதமான திசை மாற்றும் வாய்ப்புக்களுக்கு இடம் தராமல், செய்யும் பணியில் ஈடுபடுவற்கான சூழலை தரும் என்ற முறையில் கொஞ்சம் அணுகிப்பாருங்களேன்.

அப்படி கொஞ்ச காலத்திற்கு இருப்பது பிற்காலத்தில் எந்தவித சூழ்னிலையையும் எதிகொள்ளும் வல்லமையை தரும் என்றே நான் கருதுகிறேன்.

மனதளவில் பொறுமை, நிதானம், பொறுப்புணர்ச்சி எல்லாவற்றையும் நடைமுறை சாத்தியமாக பயிற்றுவிப்பதற்கு இது ஒரு நல முறை என்பதே என் கருத்து.

மற்றவர்கள் உற்சாகமாய் நினைத்ததையெல்லாம் செய்து கொண்டிருக்கும்போது நான் மட்டும் ஏன் இம்மாதிரி கட்டுப்பாட்டுக்குள் இருக்கவேண்டும் என்று கேட்பீர்கள்.

சில / பல வருடங்களுக்கு பிறகு வாழ்வில் யார் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள், எந்த சூழ்னிலையையும் புன்னகையுடன் எதிகொள்கிறார்கள் என்பதற்கான பதிலில்தான் உங்களுக்கு விடை கிடைக்கும்.

ஆனால் இதற்கெல்லாம் பொறுமை வேண்டும். இன்றைய உலகில் உள்ள மிகப்பெரும்பான்மையான பிரச்சனைகளுக்கும் குழப்பங்களுக்கும் திருப்தியின்மைக்கும் "பொறுமை" குறைவாக இருப்பதே காரணம் என்பதை புரிந்துகொள்ள ரூம் போட்டு யோசிக்கவா வேண்டும் ?

மற்றபடி பெண்களுக்கான பாதுகாப்பு என்பது மற்றவரை சார்ந்து இருக்காமல் தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ள முடிகிற அளவில் இருக்க வேண்டும் என்பதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு.

ஆனால் அப்படி ஒரு சூழ் நிலை வரும் வரையில் (நிரந்தரமாக என்று கருத வேண்டாம்) இம்மாதிரியான கட்டுப்பாடுகள் தேவையே.

எனக்கு சாதாரணமாக குளிர்ந்த பச்சைத்தண்ணீரில்தான் குளிக்க பிடிக்கும். ஆனால் காய்ச்சல் / உடல்வலி இருக்கும் போது வென்னீரில் குளிக்க வேண்டி இருக்கும். வீட்டில் மற்ற எல்லோரும் பச்சைத்தண்ணீரில் குளிக்கும் போது நான் மட்டும் வென்னீரில் குளிக்க வேண்டுமா என்று நான் வருத்தப்படுவது பொருத்தமில்லை அல்லவா.

நான் அடிப்படையில் வாசகனே தவிர படைப்பாளி இல்லை. என்றாலும் உங்கள் பதிவைப்பார்த்ததும் எனக்குத்தோன்றியதை சொல்லிவிட்டேன்.
 
Last edited:
அம்மா ராஜி... இது அடிமைத்தனம் இல்லை...

அந்த விடுதியில் சேர்ந்து படிச்சுதான் ஆகணும் கட்டாயப்படுத்தறாங்களே... அதுதான் அடிமைப்படுத்தல்...

வேப்பிலை கசக்கும். பலாச்சுளை இனிக்கும். உங்களுக்கு வேண்டியதை நீங்க சாப்பிடணுமே தவிர வேப்பிலை இனிக்கணும்னு சட்டம் (சத்தம்???) போடக்கூடாது.

" மேலே படிக்க வைக்க வசதியில்லாமல் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில், அந்தக் கல்லூரியில் இடம் கிடைத்தது. படிப்புச் செலவு, விடுதிச் செலவு என அனைத்தையும் அவர்களே ஏற்றுக் கொள்வார்கள். கண் நர்சிங் படிப்புடன் அங்கேயே பகுதி நேர வேலையும் பார்க்க வேண்டும். 5 வருடம் கட்டாயமாக அங்கே இருக்க வேண்டும். தமிழகத்தின் எந்தக் கிளையில் வேண்டுமானாலும் பணிக்குப் போடுவார்கள். மாதாமாதம் சின்னத் தொகை சிறப்பூதியமாக (stipend) உண்டு. 5 வருட நிறைவில் ஒரு குறிப்பிட்ட தொகை கைக்கு வரும். சராசரி மத்திய வர்க்கத்திற்கு அது திருமணம் போன்ற செலவுகளுக்குப் போதுமானதாக இருக்கும்."


இதை மட்டும் பாருங்க. அந்தப் பெண்ணை என்னவோ இங்கதான் நீ படிச்சாகணும்னு யாரோ இழுத்து போட்டு அடைச்ச மாதிரியில்ல பேசறீங்க.

இங்க பாருங்க.. உங்களுக்கு எது முக்கியம்னு நீங்கதான் சரியான முடிவு எடுக்கணும். ஒரு விஷயத்தை அடைய சில பல தியாகங்கள் செய்தாகணும். எத்தனைப் பசங்க அரபு நாடுகளில் அடிமைத்தனமா வேலை செய்யறாங்கண்ணு தெரியுமில்ல..

விதிகளற்று இருந்தால்தான் வீரம் வரும் என்பது தப்பு.. தப்பு.. தப்போ தப்பு.. குறிக்கோளில் உறுதியாய் இருத்தல்தான் வீரம் வளர வழி..

ஒரு வேளைச் சாப்பாடு போட்ட துரியோதனுக்காக போரிட்டுச் செத்தான் சல்லியன் என்பது நம் நாட்டுக் கதை. இவ்வளவு பெரிய சகாயம் செய்பவர்களுக்காக சில தியாகங்கள் கூட செய்ய மாட்டேன் என் சுதந்திரம் எனக் கோபப்பட்டால் எப்படீங்க? காரண காரியங்களை அலசிப் பார்த்தால் விதிகள் கடுமை எனச் சொல்லலாமே தவிர அடக்குமுறைன்னு சொல்ல முடியாது. பலப் பலச் சிறுவர்களே இதை விட கடுமையான.. கொட்டிலில் இலட்சலட்சமாய் கொட்டிக் கொடுத்து அடைக்கப்படுகிறார்கள்.. (நாமக்கல் பள்ளிகள்). போங்கம்மா போய் புள்ள குட்டிகளைப் படிக்க வைங்க
 
Back
Top