ஒரு சாதிக்க இயலா மாபெரும் கலைஞன்...
புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதனெல்லம் புத்திசாலி இல்லை
புத்திசாலி இல்லை..
பணமிருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை
மனம் இருக்குக்ம் மனிதரிடம் பணம் இருப்பதில்லை
பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லம் சொந்தம்
பணம் இல்லாத மனிதருக்கு சொந்தம் எல்லாம் துன்பம்.
(புத்தியுள்ள மனிதனெல்லாம்........)
பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணமுடிப்பதில்லை
மணமுடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை
(புத்தியுள்ள மனிதனெல்லாம்........)
கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லம் உறவு
அவன் கனவில் அவள் வருவாள் அவனை பாத்து சிரிப்பாள்
அவள் கனவில் யார் வருவாள் யாரை பாத்து அணைப்பாள்
(புத்தியுள்ள மனிதனெல்லாம்........)
படம்: அன்னை(1962)
இசை: ஆர். சுதர்சனம்
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
பாடகர்கள்: ஜே பி சந்திரபாபு
சொந்த வாழ்க்கை ...சோகம்தான் ...சாதாரண சோகம் அன்று...
நகைச்சுவை நடிகராக மற்றவர்களை சந்தோசப் படுத்திய இவரின் சொந்த வாழ்க்கை மகிழ்ச்சிகாரமானதாக இல்லை.
அவர் திருமணம் செய்துகொண்ட பெண் முதலிரவில் வேறொருவரைக் காதலிப்பதாகக் கூறவே, மறுநாள் அவரை மரியாதையுடன் அனுப்பிவைத்தவர்.
அவருக்குப் பொதுவாகவே தன் நடிப்பின் மீது எப்பொழுதும் ஒரு கர்வம் உண்டு,
ஆகையால் ‘நினைத்ததை செயல்படுத்தியே தீருவேன்’ என்ற பிடிவாத குணம் கொண்டதால் பலரால் திமிர் பிடித்தவன் என்று புரிந்துகொள்ளப்பட்டார்.
கண்ணதாசன் அவரை வைத்து படம் - ' கவலை இல்லாத மனிதன் ' என்று நினைவு - எடுத்த போது
சந்திரபாபுவின் கவலை அவரை மட்டும் அரிக்கவில்லை ;கண்ணதாசனையும் அரிக்கலாயிற்று !
உண்மையில் இப்பாடல் வரிகள் யாருக்கும் சிந்தனையைத் தூண்டக்கூடியதெனினும் சந்திரபாபுவின் புத்தி தெளிதற்கே
கண்ணதாசன் இப்படி எழுதியதாகச் சொல்வோருண்டு !!
சரி, வேறு கோணத்தில் பார்ப்போமே ; சந்திரபாபுவின் ஆளுமைக் குணங்கள் பல ; இந்நிகழ்ச்சி அதற்கோர் எடுத்துக்காட்டு .
என்னதான் நடந்தது ...
குடியரசுத்தலைவர் மாளிகை நிகழ்வுக்கு முன்னர் நடந்தது இது ...
( இது இணையத்தில் எடுத்தது அல்ல ; இணையத்திலும் இல்லையென்றே நினைக்கிறேன் )
பாகிஸ்தானை இந்திய ராணுவம் முறியடித்த 1965 . படை வீரர்களுக்கு உற்சாகம் ஊட்ட தென்னாட்டுக் கலைஞர் குழு ஒன்று
எல்லைகளுக்குச் சென்று கலை நிகழ்ச்சிகள் வழங்கியது. குழுவில் சிவாஜி, பத்மினி, சாவித்திரி , ஜெயலலிதா , சந்திரபாபு,
விசுவனாதன் , கண்ணதாசன்...ஜலந்தர் நிகழ்ச்சியில் நடந்ததுதான் இந்நிகழ்வு !
சந்திரபாபு வாயாலேயேக் கேட்போமே...
" ஜவான்களுக்கு மட்டும்தான் கலைநிகழ்ச்சி என்று சொல்லியிருந்தார்கள்... என்ன காரணமோ பொதுமக்களையும் உள்ளே
விட்டுவிட்டார்கள்...25,000 பேர்களுக்கு மேல் கூட்டம்...
M S V ஹார்மோனியம் வாசிக்க P B S , P சுசீலா பாட ஆரம்பித்தார்கள்.
இந்திப்பாட்டைப் பாடு என்றொரு குரல் எழுந்தது . பின்பு , பத்மினி எங்கே ? அவரை ஆடச் சொல்லுங்கள் என்ற கோஷம் வலுத்தது....
மைக்கை வைத்திருக்கும் இடத்திற்குப் போனேன் ...( இதனை இங்கே சொல்லிடுதல் நலம் - சந்திரபாபு முறையான கல்வி போதனை
பெற்றவர் இல்லையாயினும் , ஒர் அம்மையாரின் தொடர்பினால், நல்ல ஆங்கிலம் எழுதவும் பேசவும் வல்லவராய் இருந்தார் )
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் யார் ? ...
அவர் உடனே இங்கே வர வேண்டும் என ஓங்கிச் சொன்ன்னேன் ; ஒரு கர்னல் வந்தார்.
இதுதான் நீங்கள் நிகழ்ச்சி நடத்தும் லட்சணமா என்று சொல்லிவிட்டு
நான் பேசுவதை அப்படியே இந்தியில் மொழிபெயர்க்கச் சொன்னேன்...
இதோ இங்கே உட்கார்ந்திருக்கும் குள்ளமான ஆள் யார் தெரியுமா ? அவர்தான் எங்கள் பிரபல சங்கீத டைரக்டர் விஸ்வனாதன்.
உங்கள் சங்கர் - ஜெய்கிஷனை விட உயர்ந்தவர்....
இதோ சிவாஜிகணேசன்...ஆசியாவிலேயே சிறந்த நடிகர் ...நான் யார் தெரியுமா ...
இந்தியாவின் சிறந்த ஹாஸ்ய நடிகர் நான் தான்... உங்கள் ஹாஸ்ய நடிகர்களையேக் கேட்டுப்பாருங்கள்
( கேட்டிருந்தால் பூம் ,பூம், பூம் மாடு மாதிரி தலையசைத்திருப்பார்கள் - சந்தேகமென்ன..!? )
நான் நடிகன் மட்டுமல்ல ... தயாரிப்பாளர் , டைரக்டர் , கதாசிரியன் ,
பாடாகன் , நாட்டியக்காரன் ... எல்லாமே... இப்போது நான் பாடப்போகிறேன்...தமிழ்ப்பாட்டுதான் பாடப்போகிறேன் ;
நீங்கள் அதை கேட்கத்தான் போகிறீர்கள்... அதை அடுத்து சில இந்திப்பாடல்களும் பாடுவோம் ...பத்மினியும் நடனமாடுவார்..."
கலைநிகழ்ச்சி பின்னர் சிறப்பாய்த்தான் முடிந்திருக்கும் ... அதிருக்கட்டும் ...அத்தனை பேர் சென்றிருக்கையில் இவர்தான்
இந்த ஆளுமையை கொண்டிருந்தார் ...அதுதான் சந்திரபாபு என்ற நாயகன்...
ஆணவக்காரன் என்று சொல்லக்கூடிய அளவுக்கு துணிச்சல்காரன் ... தற்பெருமைக்காரன் என்று பிறர் நினைக்கும் அளவிற்கு தன்னம்பிக்கை உள்ளவர்...
தன் , தங்கள் சுயமரியாதைக்குப் பங்கம் என்றபோது சிங்கம்போல் கர்ஜித்த தன்மான மிக்கவர் அன்றைய சந்திரபாபு.
நீக்குப்போக்கும் , உலகியல் போக்கும் உணராத - உணர்ந்தாலும் , அதற்கு ஈடுகொடுக்காத - காரணத்தால் வழுக்கி விழுந்தவர் ;
அப்படி வழுக்கியவரை கரை ஏற்ற முயாலாது, மேலும் அமுக்கி , முங்கிப்போய் மூச்சுத்திணறச் செய்தவர்கள்தான் புரட்சித்திலகங்கள் ஆனார்கள்....
எப்படியாயினும் சந்திரபாபு என்பவன் ஒரு மாமனிதன் ...சந்தேகமே வேண்டாம்...
அவருக்குத் திருமணம் நடந்த சாந்தோம் சர்ச்சின் இன்னொரு கோடியில்தான் அவர் கல்லறை உள்ளது .
அக்கல்லறை அருகில் செல்வோர் இம்முணுமுணுப்பை இப்போதும் கேட்கலாம்...
" என்னைத் தெரியலையா , இன்னும் புரியலையா , குழந்தை போலே என் மனசு , என் வழியோ என்றும் ஒரு தினுசு ..."
அன்பன்,
சுந்தரம்