கலைஞனைக்கு வீழ்ச்சி கிடையாது

tnkesaven

New member
""பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னை "நியூ எல்பின்ஸ்டன்' தியேட்டரில் "இரு சகோதரர்கள்' என்ற படம் வெளியானது. "இந்திய மேடைப்புலி' என்று பட்டம் பெற்ற கே.பி.கேசவன் (k.p.k)அதில் கதாநாயகன். நாடகம், சினிமா இரண்டிலும் பெரும் புகழ்பெற்ற நடிகர் அவர். அவருடன் நானும் (எம்.ஜி.ஆர்) வேறு சிலரும் அந்தப் படத்தைப் பார்க்கச் சொன்றிருந்தோம்.

இடைவேளையின்போது அவர் வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் அவரைப் பார்ப்பதற்காக எழுந்து கூச்சலிட்டனர். அந்தப் படத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மிகச் சிறிய வேடங்களில் நடித்திருந்த நான் இதைக் கண்டு திகைத்து, கே.பி.கே. அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். இத்தனை புகழ் பெற்றவர் அருகில் நாம் அமர்ந்து படம் பார்க்கிறோம் என்ற பெருமை எனக்கு உண்டாயிற்று.

படம் முடிவதற்குள் வெளியே வந்துவிட வேண்டும் என்று புறப்பட்டோம். எனினும் நாங்கள் வெளியே வருவதற்குள் மக்களும் வெளியே வந்து எங்களைச் சூழ்ந்து கொள்ளவே திக்கு முக்காடிப் போனோம். ஒரு வழியாய் மற்றவர்களைப் பிடித்துத் தள்ளி கே.பி.கே.யைப் பாதுகாப்பாய் காருக்கு அழைத்துச் சென்று அவரை அனுப்பி வைத்தேன். அன்று மக்களுக்கு என்னை யார் என்று தெரியாது. இதற்குப் பல ஆண்டுகளுக்குப் பின்- சென்னை நியு க்ளோப் தியேட்டருக்கு நானும்- கே.பி.கே. அவர்களும் ஒரு ஆங்கிலப் படம் பார்க்கப் போனோம். அப்போது நான் நடித்த "மர்மயோகி' வெளிவந்து சில மாதங்களே ஆகியிருந்தன. இடைவெளியின்போது நான் வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் எழுந்து கூச்சல் போட்டார்கள். எனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த கே.பி.கே. அவர்களை யார் என்றே படம் பார்க்க வந்தவர்கள் தெரிந்து கொள்ளவில்லை.

படம் முடிந்து வெளியே வந்ததும் மக்கள் கூட்டம் எங்களைச் சூழ்ந்து கொண்டது. கே.பி.கே. அவர்கள் ரசிகர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றி ஒரு டாக்சியில் ஏற்றி அனுப்பினார்! நான் புறப்படும்போது அந்த மக்கள் கூட்டத்தில் அவரும் ஒருவராக நின்றிருந்தார். அவரது நடிப்பாற்றல் எந்த வகையிலும் குறைந்துவிடவில்லை.

கலைஞர்களுக்கு உச்ச நிலை, தாழ்ந்த நிலை என்பதெல்லாம் மக்களால் தரப்படும் ஒரு மயக்க நிலை. அவ்வளவுதான். கலைஞனைப் பொருத்தவரை அவனுக்கு வீழ்ச்சி கிடையாது. சூழ்நிலை அவனை உயர்த்தும்; தாழ்த்தும்; அது மக்களின் மனதில் தோன்றும் முடிவு.''

(பொம்மை சாரதி எழுதிய "வாழ்ந்து காட்டிய வள்ளல் எம்.ஜி.ஆர்.' நூலில் எம்.ஜி.ஆர். சொன்ன நிகழ்ச்சி)

nandri;kadhir
 
Back
Top