4. சிறுகதையில் மனவோட்டம்
மனித மனம் விஷயங்களை ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்படுத்தி நினைக்கிறது. இதனை ஆங்கிலத்தில் thinking by association என்பர். ஒரு விஷயத்தைப் பற்றி மனம் நினைக்கும்போது இடைப்படும் எண்ணக் கூறுகளில் தென்படும் ஒரு வார்த்தை, ஒலி அல்லது சித்திரத்தை எடுத்துக்கொண்டு அது தொடர்பான விஷயங்களில் விலகியும் வழுவியும் சஞ்சரிக்கிறது; பின்னர் மீண்டும் மைய நினைவுக்கு வருகிறது. இன்னோரிடத்தில் வேறொரு சம்பந்தம் தட்டுப்பட வழுவிப் பின் மீண்டும் மைய எண்ணத்திற்குத் திரும்புகிறது. இவ்வாறு நிகழ்வதால் மனவோட்டம் என்பது ஓர் தெளிந்த ஆற்றொழுக்குப் போல் அல்லாமல் குழம்பிச் சுழித்துச் செல்லும் நீரோட்டமாக இருக்கிறது. இதனை ஆங்கிலத்தில் stream of consciousness என்பர்.
இன்னொரு விஷயம். மனம் தனக்குத் தானே பேசிக்கொள்ளும் போது, நாம் வாயால் படிப்பது போல் இலக்கண சுத்தமாவோ அல்லது பேசும்போது எழும் வழக்குச் சொற்களிலோ நினைக்கிறதா? பெரும்பாலும் இல்லையென்று சொல்லிவிடலாம். மனத்தின் எண்ணவோட்டத்தில் முற்றுப் பெறாத வாக்கியங்களும் சொற்றொடர்களும் ஒலிகளும் சித்திரங்களும் சலனப் படங்களும் நினைப்பே இல்லாத புரிதல்களுமே அதிகம்.
இப்படிப்பட்ட மனவோட்டத்தை அப்படியே கதையில் எழுதினால் எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு மாதிரி:
கல்பனாவை எதிர்பார்த்துக் கடற்கரையில் காத்திருந்தேன். கல்பனா ஓவியங்கள்--கல்கியிலா? கல்பனா சாவ்லா ஸ்பேஸ் ஷட்டில் வெடித்து இறந்தாள் பாவம்! ஆஹா, இளம் தென்றல்! வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்! அதென்ன மூசு வண்டறை? வண்டுக்குத் தமிழில் இன்னொரு பெயர் சுரும்பு. அரும்பு-சுரும்பு. கல்பனா மலரத் தொடங்கியிருக்கும் அரும்பு. என்ன அரும்பு, ரோஜாவா, மல்லிகையா? மலர்களிலே அவள் மல்லிகை! மல்லிகை? ஆம், கள்ளங் கபடமற்ற வெள்ளை யுள்ளம், ஒரு குழந்தையின் மனதைப் போல! இதோ ஒரு குழந்தை என்னைப் பார்த்துக் கையாட்டி அழகாகச் சிரிக்கிறது. அம்மாவும் அழகுதான்! ஜாக்கிரதை, பக்கத்தில் அப்பா! அப்பா போய் எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன? அம்மா எத்தனை வருஷங்கள் குடும்பத்தைத் தாங்கினாள்! வசுதேவ குடும்பகம். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வசனத்தின் பொருள் உலகம் ஒரு குடும்பமாம், ஸில்லி! பட்டினப் பாலையில் இதை எழுதிய கணியன் பூங்குன்றனார் ஒரு ஜோதிடர். அடுத்த வரியிலேயே அவர் ’தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்று மனிதனின் கர்ம வினைகளைப் பற்றியும் பிறவிச் சுழலைப் பற்றியும் அல்லவா பேசுகிறார்? இத்தனை பிறவிகளில் எத்தனை ஊர்களில் பிறந்திருப்போம், எத்தனை பேரைக் கேளிராகப் பெற்றிருப்போம்? என்றெல்லவா இதன் உட்பொருள்?
"என்ன பலமான சிந்தனை?" எதிரில் கல்பனா!
*****
இப்படி மனவோட்டச் சலனங்களைச் சித்தரித்துக் கதை முழுவதும் எழுதிக் கதையின் ஒருமை சிதறாமல் வாசகனை மகிழ்வூட்டும் திறன் உங்களுக்கு இருந்தால் தாராளமாக இப்படி எழுதலாம். இது பெரும்பாலும் சாத்தியம் இல்லை என்பதால் கதாசிரியர் ஒரு பாத்திரத்தின் மனவோட்டத்தைச் சொல்லும் போது கதையை விட்டு விலகாதபடி ஓர் ஒழுங்கினைக் கையாள நேரிடுகிறது.
ஒரு நாவலில் கதையை நிறுத்திக் கதை மாந்தர்களின் மனவோட்டத்தை விவரித்துச் சொல்லிப் பின் கதையைத் தொடரலாம். சிறுகதையில் இப்படி முடியாது. எனவே மனவோட்டம் என்பது சிறுகதையில் கதாபாத்திரத்தின் குணத்தைக் காட்டவும், கதையை நகர்த்தவும், உரையாடலுக்குப் பின்புலமாகவும் பொதுவாகக் கையாளப் படுகிறது. வேறு விதங்களில் கையாளும் போது கதையின் ஒருமையும் குரலும் பார்வையும் சிதறிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டுவது அவசியம். கீழ்வரும் சான்றுகளைக் கொண்டு சம்பந்தப்பட்ட கதைகளை முழுவதும் ஊன்றிப் படித்துக் கதையில் மனவோட்டம் சொல்லப் படும் விதங்களை அறிந்துகொள்ளவும்.
1. ’கணவன், மகள், மகன்’: அசோகமித்திரன்
http://www.sirukathaigal.com/காதல்/கணவன்-மகள்-மகன்/
[மனதில் கூடப் பிறருக்கு வருத்தம் தரும் நினைவுகளை அகற்ற முயலும் ஒரு அப்பாவிப் பெண்ணின் மனத்தை அசோகமித்திரன் வருணிக்கிறார்.]
மங்களத்திற்கு ஒவ்வொரு கட்டத்திலும் புதிராக இருந்தது. அவள் இவ்வளவு நாட்கள் எந்த மனிதனோடு வாழ்க்கை நடத்தினாள்? இருபத்தைந்து ஆண்டுகள் கூடவே இருந்தும் கூட அவளறியாத ரகசியங்கள் இவ்வளவு அவனிடமிருந்ததா? அவன் மறைத்தானா அல்லது அவள் தான் ஒரேயடியாகக் கண்ணை மூடிக் கொண்டு இருந்து விட்டாளா? இவ்வளவு குருடாக இருந்தவளால் கணவன் மீது பிடிப்பு வைத்திருக்க முடியுமா? அதனால் தான் அவன் ஓடிவிட்டானா?...
உமாவும் ஒரு சீட்டு கம்பெனியில் ரசீது எழுதும் வேலைக்குப் போனாள். அவள் வேலைக்குச் சேர்ந்து இரு மாதங்களுக்குள் அவளுக்குக் கல்யாணம் ஆகிவிட்டது என்று வேறு யாரோதான் மங்களத்துக்குச் சொன்னார்கள். மங்களத்துக்கு நம்ப முடியவில்லை. அவள் பெண் அன்று காலைகூட ஏதும் புதிதாக நடந்திராத மாதிரிச் சாப்பிட்டுக் கைக்குச் சிறிது மோர்சாதமும் எடுத்துப் போயிருக்கிறாள். உமா மாலையில் வீடு வந்தவுடன் அவளை கேட்க வேண்டும் என்றுதான் நினைத்திருந்தாள். ஆனால் கேட்க வாய் வரவில்லை. அடுத்த நாளும் வாய் வரவில்லை. அதற்கடுத்த நாளும்.
பதினைந்து நாட்கள் கழித்து உமாவாகவே தனிக்குடித்தனம் போகப் போவதாகச் சொன்னபோதும் கேட்க முடியவில்லை. அவளுடைய மாப்பிள்ளை இளவயதுக்காரனா, வயதானவனா, சைவமா, அசைவமா என்று கூடக் கேட்க்கவில்லை. உமாவாகவும் அம்மாவுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்ததாக தோன்றவில்லை...
ராமு அந்த முறை எழுந்து விட்டான். ஆனால் இதோ மறுபடியும் சீக்காளியாவதற்கான பாதையில் இருக்கிறான். அவனை இன்னமும், ’குடிக்காதேடா’ என்று ஒரு வார்த்தை அவளால் சொல்ல முடியவில்லை. அவன் குடிப்பது அவளுக்கு தெரியும் என்ற நிலையை உண்டாக்க மனம் வேண்டவில்லை. அவளுக்குத் தன் மகனறிய அவனைக் குடிகாரன் என்று அவள் நினைப்பது கூடச் சாத்தியமாயில்லை. அவனும் அவள் அறியாதவள் என்றுதான் நினைக்க விரும்புவான். இவ்வளவு முற்றிப் போயும் தெரியாமல் இருக்குமா என்ற தோன்றாது. அவளுக்குத் தெரியாதது போல அவள் நடந்து கொள்ளவேண்டும்; அவளுக்குத் தெரியாது, அவளுக்கு தெரிவதை அவன் விரும்பவில்லை என்பது போல அவன் நடந்து கொள்ளவேண்டும்...
*****
2. ’ஒரு பழைய கிழவரும், ஒரு புதிய உலகமும்’: ஆதவன்
http://azhiyasudargal.blogspot.in/2012/03/blog-post_08.html
[மனிதத் தன்மைகள் குறைந்துவரும் இளைய தலமுறையை ஒரு கிழவரின் மனம் மூலம் வருணிக்கிறார் ஆதவன்.]
டர்ரென்று கனவேகமாகச் சீறிப் பாய்ந்து வரும் மோட்டார் சைக்கிளின் ஓசை, தரையின் அதிர்வு-நாகராஜன் பதற்றத்துடன் அவசரமாக நடைபாதை மீது தாவி ஏறினார். ஆம், அதே இளைஞன்தான். மோட்டார் சைக்கிள் செயலற்றுப் போக வைக்கும் மூர்க்கமான ஓசையை உமிழ்ந்தவாறு அவரை அடித்துத் தள்ளிவிடும் போல சின்னா பின்னமாக்கிவிடும்போல தோன்றியது.
ஒரே கணம்தான்; அதோ, அவனும் அவனுடைய* வாகனமும் தூரத்தில் சென்று மறைந்துவிட்டன.
அவருக்குப் படபடப்பு அடங்குவதற்கு சில விநாடிகள் பிடித்தன. அவர் மனதில் அந்த இளைஞன்பால் மீண்டும் வெறுப்புணர்ச்சி ஏற்பட்டது. அவன் வேண்டுமென்றேதான் இப்படிச் செய்கிறானென்பதை இந்தக் கணம் மறுபடி ருசுப் படுத்தியிருந்தது. அவர் வீட்டை விட்டு வெளியே இறங்க* வேண்டியதுதான் தாமதம், உடனே அவனுடைய மோட்டார் சைக்கிள் எங்கிருந்தோ அவரைத் துரத்திக் கொண்டு வந்து விடுகிறது. அவரைப் பதட்டமடையச் செய்வதில் அவனுக்கு ஒரு குரூரமான மகிழ்ச்சி கிடைப்பதாகப் தோண்றியது. உருப்படியான எதிலும் தீவிரப் பிடிவில்லாமல், ஆழமான* எதனுடனும் தம்மை முழுமையாகச் சம்பந்தப்படுத்திக் கொண்டு அதன் விளைவுகளைச் சந்திக்கத் துணிவில்லாமல், தாமே உருவாக்கிக் கொண்ட ஒரு நிரந்தரமான சலிப்பில் உழலும் இக்கால இளைஞர்களுக்கு இதுபோன்ற பொறுக்கித்தனமான முறைகளில்தான் மனக் கிளர்ச்சியையும் பரவசத்தையும் உருவாக்கிக் கொள்ளத் தோன்றுகிறது. தம்மை நிரூபித்துக்கொள்ளத்தெரிகிறது. அவருடைய பதட்டம் அவனுக்கு ஒரு எல்.எஸ்.டி. அவனுடைய உப்புமா வாழ்க்கையில் அவர் ஒரு ஊறுகாய்.
*****
3. ’இணைப்பறவை’: ஆர்.சூடாமணி
http://azhiyasudargal.blogspot.in/2010/07/blog-post.html
[வாழ்க்கை அனுபவம் மனதை எவ்வளவு புதிராக ஆக்கிவிடுகிறது!]
வந்தவர் போனபோது தன் நண்பர்களிடம் , "என்னைக்குமே மண்டைக்கனந்தான். இந்த சந்தர்ப்பத்தில் கூட மூஞ்சி கொடுத்துப் பேச இஷ்ட்டப்படலே பாருங்களேன். அந்தம்மா எப்படித்தான் இந்த மனுஷன் கூட குடித்தனம் பண்ணினாளோ, பாவம் !" என்று சொல்லிக்கொண்டு போனது ஸ்ரீமதியின் காதில் விழுந்தது. அவள் மீண்டும் கொல்லைப் பக்கம் வந்தாள்.
தாத்தா இப்போது வானத்தைத்தான் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு பார்வையை இறக்கி மாட்டுத் தொழுவத்தைப் பார்த்தார். அதனருகில் இருந்த துணி துவைக்கும் கல்லைப் பார்த்தார். பிறகு வேலியாகப் படர்ந்திருந்த மல்லிகைக் கொடிகளைப் பார்த்தார். ஒவ்வொன்றையும் பார்வை தடவிக் கொடுப்பதுப்போல் இருந்தது. பாட்டி தொழுவத்திலே மாட்டுக்கு தவிடும், பிண்ணாக்கும் வைப்பது, கல்லில் தன் மடிப்புடவையைத் தோய்ப்பது, மல்லிகைக் கொடிகளை ஆசையுடன் வளர்ப்பது எல்லாம் ஸ்ரீமதிக்கு நினைவு வந்தன. பாட்டி இறந்தபோது சடலத்தை தாத்தா இமைக்காமல் நோக்கினார். ஆனாலும் அழவில்லை. அப்போது சரி, பிறகு இந்த இரண்டு வாரங்களிலும் சரி, அவர் அழுது யாரும் பார்க்கவில்லை. இப்படி வீட்டை இடம் இடமாக பொருள் பொருளாக கண்களினால் வருடிக் கொடுக்கிறாரே அவ்வளவுதான் !.
வந்த சுவடு தெரியாமல் திரும்பிவிட அவள் முனைந்தபோது தாத்தாவின் பார்வை தற்செயலாக அவள் மேல் விழுந்தது.
"என்ன, இன்னும் யாரானும் வந்திருக்காளோ, துக்கம் விசாரிக்க ?"
*****
4. ’காகிதப் பாலங்கள்’: ஜி.எச்.எஸ்.மணியன்
http://www.indusladies.com/forums/s...7-2990-3015-2994-3009-2990-a.html#post2753326
[உரையாடல்களில் பின்புலமாமாய் இயங்கும் மனது பல சந்தர்பங்களில் சொல்லுவது ஒன்றும் நினைப்பது ஒன்றுமாக அல்லவோ செயல்படுகிறது!]
எழுதி முடிச்சுட்டியாடி கௌசல்யா?" என்றபடியே ஹாலுக்குள் வந்தாள் அவள் ’அம்மா’... அதாவது, அவளோட அவரின் அம்மா. அவள் இப்படிக் கேட்டதற்கு லெட்டரைப் படித்துக் காட்டேன் என்று அர்த்தம்...
"கவர்ல எழுதறயா?... கவர் எதுக்கு? ஒரு கார்டுல ரெண்டு வரி எழுதிப்போட்டா பத்தாது? உன் போஸ்டேஜுக்கே மாசா மாசம் தனியா பணம் ஒதுக்கணும் போலிருக்கு. வந்து நீ லெட்டர் எழுதிட்டு இருக்கே... இல்லாட்ட கதை எழுதறேன்னு பேப்பரை வேஸ்ட் பண்ணிண்டிருக்கே!"
கௌசல்யாவின் விழிக்கடைகளில் நீர் முத்துக்கள் தென்பட்டன. "படிக்கறேம்மா, கேக்கறேளா?"
"ம்...ம்... பாபுக்கு ரெடியா கரைச்சு வச்சிருக்கியா?"
"ரெடியா இருக்கும்மா! அது எழுந்திருக்க நாழியாகும். ம்... அன்புள்ள அண்ணாவுக்கு கௌசல்யா அநேக நமஸ்காரம். அப்பா நலமாக வந்து சேர்ந்திருப்பா (எழுதியிருந்தது: அப்பா விவரமெல்லாம் சொல்லியிருப்பார். அவரிடம் சரியாகவே பேச முடியவில்லை.) இங்கு நாங்கள் எல்லோரும் சௌக்யம். பாபு... ம்... சமர்த்தாக இருக்கிறது. ஒண்ணு ரெண்டு வார்த்தை பேசுகிறது. (படிக்காமல் விட்டது: பாபு வரவர முரண்டு பிடிக்கிறது. இந்த வயசிலேயே இத்தனை பிடிவாதம். இவரை அப்படியே உரிச்சு வெச்சிருக்கு.) நிற்க, இவருக்கு ஆபீஸில் ஜாஸ்தி வேலை. எக்ஸாஸ்டட் ஆக வருகிறார். அட்வான்ஸஸ் செக்க்ஷன் பார்க்கிறார். சீ.ஏ.ஐ.ஐ.பி.யில்..." என்று ஆரம்பிததுமே,
"அதெல்லாம் எதுக்கு எழுதறே? அவன் பெயிலாயிட்டான்னு அப்படியே உங்க வீட்டுக்கு ஒப்பிக்கணுமாக்கும்?"
"..."
"சரி சரி, படி! மணி பன்னெண்டாகப் போறது."
"அக்கௌண்டன்ஸி பாஸ் பண்ணிவிட்டார். அறுபத்தெட்டு மார்க்... ம்... இவருக்கு ப்ரமோஷன் கிடைக்கலாம். (படிக்காமல் விட்டது: அக்கௌண்டன்ஸியை ஜுரத்தோடுபோய் கடனுக்கேன்னு எழுதினார். அவுட்!) நான் நேற்று ஒரு கதை எழுதி முடித்தேன்..."