3. சிறுகதையில் உரையாடல்
ஒரு வரிகூட உரையாடலே இல்லாமல் ஏதேனும் சிறுகதை படித்திருக்கிறீர்களா? அதேபோல் முழுவதும் உரையாடலாகவே எழுதப்பட்ட சிறுகதை? இத்தகைய கதை பற்றி அறிந்தவர்கள் கதைத் தலைப்பு, ஆசிரியர், சுட்டி முதலிய விவரங்களை இங்குப் பதியலாம்.
கதை மாந்தர்களின் பேச்சாக எழுதப்படும் உரையாடல் அவர்களின் குரலாகக் கதையில் ஒலிக்கிறது. பேச்சு என்பது ஒரு செய்தி அல்லது உணர்ச்சியின் வெளிப்பாடு. அந்த செய்தி அல்லது உணர்ச்சி சொற்களில் வடிக்கப்படும் போது ’ஏறத்தாழ சரியானது’ என்றுதான் சொல்லமுடியும். மனதின் உணர்ச்சிகளையோ, நினைவுகளையோ அல்லது ஒரு நிகழ்ச்சியைப் பார்த்த செய்தியையோ யாராலும் ’முற்றிலும் சரியாகச்’ சொல்ல முடிவதில்லை.
நடைமுறை வாழ்வில் போலன்றி ஒரு சிறுகதையில் உரையாடல் வெறும் வெட்டிப் பேச்சாக இருக்க முடியாது அல்லவா? எனவே உரையாடல் என்பது கதையின் கூறுகள் பலவற்றை ஒரே சமயத்தில் பார்த்துக்கொள்ளுமாறு எழுத வேண்டுவது அவசியம். உரையாடல் நடை இன்றைய கதையில் பொதுவாக பேச்சுத் தமிழில் அமைந்து பேசும் பாத்திரத்தின் குலம், குணம், வளர்ப்பு இவற்றிற்கேற்ப மாறுபடும்.
1. உரையாடல் கதையின் மனச்சூழலை (mood) அமைக்கலாம்:
’நிஜத்தைத் தேடி’: சுஜாதா
(
http://vithiyagangai.blogspot.in/2007/12/blog-post.html)
"யாரு?" என்றான். சற்றுத் திடுக்கிட்டு கிருஷ்ணமூர்த்தியைப் பார்தது தன் சோகக் கதையை காப்ஸ்யூல் வடிவத்தில் சொன்னான்: "ஊருக்குப் புதுசுங்க. வேலை தேடி வந்தேங்க .என் மனைவி காலைல இறந்து போய்ட்டாங்க பிணம் கிடக்குதுங்க. எடுக்கக் காசில்லை. பெரிய மனுசங்க உதவி பண்ணணும்" அவன் வைத்திருந்த தட்டில் சில ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. எதற்கோ புஷ்பங்கள் இருந்தன. ஒரு ஊதுவத்தி புகைந்து கொண்டிருந்தது.
"வீடு எங்கே" என்றான்.
"இஙகதான் ஸார் கோகுலா பக்கம். தெரிஞ்சவங்க வீட்டில நிகழ்ந்து போச்சுங்க."
"சரி அட்ரஸ் சொல்லு."
"போனாப்போறது எதாவது கொடுத்து அனுப்பிடுங்களேன்" என்றாள் சன்னமாக. "இரு."
"நான் இங்க பெங்களுர் வந்தே மூணே நாள்தான் ஆவறது ஸார்! காலைல இறந்துட்டா."
"சரிதாம்பா, அட்ரஸ் என்ன? சொல்லேன்!"
அவன் சற்றே யோசித்து "மூணாவது கிராஸ்" என்றான்.
"மூணாவது க்ராஸ்னா? எச்.எம்.ட்டி லே அவுட்டா? சுந்தர் நகரா? இல்லை கோகுலா காலனிக்குள்ளயா?"
"சொல்லத் தெரியலிங்களே, சினிமா தியேட்டர் பக்கத்தில."
"அவனோட என்ன வாக்குவாதம்?" "இப்ப நீ சும்மா இருக்கப் போறியா இல்லையா? எந்த சினிமா தியேட்டர்யா?"
"என்ன ஸார் இப்படி கேக்கறிங்க இருக்கறதே ஒரு சினிமா தியேட்டர் தானே! பேர் தெரியாதா உங்களுக்கு?"
"எனக்குத் தெரியும். நீ சொல்லு."
அவன் மறுபடியும் அனுபல்லவியைப் பிடித்தான் "பங்களூர் வந்தே மூணு நாள் ஆவுது ஸார் காலைல இறந்துட்டா."
"சரிப்பா.எந்த இடம்? அதைச் சொல்ல மாட்டியா?"
"என்ன ஸார்,பெண்டாட்டி செத்துப் போன துக்கத்தில இருக்கேன், என்ன என்னவோ போலிஸ்காரங்க மாதிரி கேக்கறிங்களே. காசு கொடுக்க முடியும் இல்லைன்னு சொல்லிடுங்க, நான் போவணும். பிணம் கிடக்கு அங்கே!"
"அட்ரஸ் சரியா சொல்லு தரேன். "
"அதான் சொன்னேனே."
"சரியா சொல்லு."
"அய்யோ" என்றான். "வேண்டாம் ஸார்.என்ன நீங்க..."
(மேலே கதையில் படித்துக்கொள்ளுங்கள்.)
*****
2. உரையாடல் கதையின் கருப்பொருளை (theme) வெளிப்படுத்தலாம்.
மேலே உள்ள சுஜாதா கதையின் ஆரம்ப உரையாடல் மையப் பாத்திரமும் அவன் மனைவியும் வந்தவன் சொல்லும் செய்தியை நம்புவதா வேண்டாமா என்ற கதையின் கருப்பொருளை வெளிப்படுத்துகிறது. கணவன் நம்ப மறுக்கின்றான். சாவு பற்றிய செய்தியைத் தாங்கி வருபவன் பொய் சொல்லமாட்டான் என்று மனைவி நினைக்கிறாள்.
*****
3. முன்கதையை, கடந்த காலத்தை வெளிப்படுத்த, சிறுகதையில் உரையாடல் ஒரு சிறந்த கருவி:
’சிலிர்ப்பு’: தி.ஜானகிராமன்
(
http://azhiyasudargal.blogspot.in/2011/01/blog-post_2831.html)
"யப்பா, யப்பா!"
"ஏண்டா கண்ணு!"
"பிச்சி மாமாவுக்கு வந்து, வந்து, தொளாயிர ரூபா சம்பளம். பணக்காரர். இவ்வளவு பணக்காரர்ப்பா!" என்று கையை ஒரு கட வாத்திய அளவுக்கு அகற்றி, மோவாயை நீட்டினான் – குறை சொல்லுகிறாற்போல.
"அதுக்கு என்ன இப்ப?"
"வந்து, செத்தே முன்னாடி ஆரஞ்சு கேட்டேனோல்லியோ, வாங்கிக் குடுக்காம எங்கேயோ பாத்துண்டு நின்னார்ப்பா."
"அவர் காதிலே விழுந்திருக்காது. விழுந்திருந்தா வாங்கியிருப்பார்."
"நான் இரைஞ்சுதான்பா சொன்னேன்".
"பின்னே ஏன் வாங்கிக் கொடுக்கலை?" கேள்வியை நானே திருப்பிக் கேட்டுவிட்டேன். பையன் திணறினான்.
"வந்துப்பா, வந்து, பிச்சி மாமாவை வந்து ஒரு மூணு கால் சைக்கிள் வாங்கித் தான்னேன். வந்து, தரேன் தரேன்னு ஏமாத்திப் பிட்டார்ப்பா…"
"அவர் என்னத்துக்குடா வாங்கணும்? நான் வாங்கித் தரேன்."
"நீ எப்படி வாங்கித் தருவியாம்?"
"ஏன்?"
"உனக்கு நூறு ரூபாதானே சம்பளம்?"
"உனக்கு யார் சொன்னா?"
"வந்து, பிச்சி மாமாதான் சொன்னா."
"உங்கிட்ட வந்து சொன்னாரா, உங்கப்பாவுக்கு நூறு ரூபாதான் சம்பளம்னு?"
"வந்து எங்கிட்ட இல்லேப்பா. மாமிகிட்டச் சொன்னா. நீ வந்து மெட்ராஸ்லேந்து லெட்டர் எழுதியிருந்தே பாரு, புள்ளையார் பூஜையன்னிக்கி; அப்பச் சொன்னா மாமிகிட்ட. வெறுமெ வெறுமே நீ மெட்ராஸ் போறியாம். உனக்கு அரணாக்கொடி வாங்க முடியாதாம்."
இது ஏதுடா ஆபத்து!
*****
4. உரையாடல் கதையில் ஒரு பாத்திரத்தின் குணவிசேஷங்களைக் கோடிட்டுக் காட்ட உதவும் ஓர் உத்தி.
ஒரு பாத்திரத்தின் குணத்தை நேரடியாகச் சொல்வதை விட அதன் மனம், பேச்சு, செயல் மூலம் காட்டுவது ஒரு தேர்ந்த ஆசிரியரின் அடையாளம். சிறுகதையில் எதையும் சொல்வதை விடக் காட்டுவதே மிக இயல்பாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
தற்குணம் காட்டும் உரையாடல்
’காகிதப் பாலங்கள்’: ஜி.எச்.எஸ்.மணியன்
(
http://www.indusladies.com/forums/s...7-2990-3015-2994-3009-2990-a.html#post2753326)
லெட்டர் எழுதிட்டு இருக்கேம்மா, இதோ வந்துட்டேன்..."
"ஏண்டி, கௌசல்யா, போனவாரம்தானே ஒங்க அப்பா வந்துட்டுப் போனார். வெறுமனே அதுக்குள்ள என்ன லெட்டர்? என்ன... நாங்கள் சௌக்யம், நீங்கள் சௌக்யமான்னுதானே...!"
"ஆமாம்மா, எங்க அண்ணாக்கு லெட்டர் எழுதி ரொம்ப நாளாச்சு; மன்னி வேற ரெண்டு லெட்டர் போட்டுட்டா..."
"ரெண்டு லெட்டரா?... வொண்ணுதானே காண்பிச்சே?"
"நேத்திக்கு ஒரு கார்டு வந்ததேம்மா. மிக்ஸி வாங்கிருக்கான்னுகூட எழுதலே?"
"யாருக்கு ஞாபகம் இருக்கு அதெல்லாம்? ஒங்காத்துலே இருக்கறவா வாரம் பத்து லெட்டர் எழுதறா. என்னமோ நீ இங்கே முள்ளுமேலே இருக்கறதா நெனைப்பு அவங்களுக்கு."
*****
பிறர் குணம் காட்டும் உரையாடல்
’உஞ்சவிருத்தி’: சுஜாதா
(
http://balhanuman.wordpress.com/category/srirangathuk-kathaigal/)
"ஏன் கேக்கறே... ஸ்கூல்ல புதுசா ஹெட்மாஸ்டரை நியமனம் பண்ணிட்டா. ரெண்டு பேருக்கும் ஆகலை. நோட்ஸ் போடக் கூடாதுன்னு தடை பண்ணிட்டா. கோவிச்சுண்டு ரிஸைன் பண்ணிட்டார். மணச்சநல்லூர்ல போய்ச் சேர்ந்தார். அங்கயும் சரிப்பட்டு வரலை. சம்பளம் சரியா வரலை. அதுக்கப்புறம் நோட்ஸ் போட்டு விக்கறதும் பாழாப் போச்சு. இவர் போட்ட நோட்ஸையே காப்பி அடிச்சு இன்னொருத்தன் போட்டு அரை விலைக்கு வித்தான். அவன்மேல கேஸ் போடறேன்னு வக்கீல்கள்ட்ட காசு நிறைய விட்டார். ஏறக்குறைய பாப்பர் ஆறநிலைக்கு வந்துட்டார். சொத்தும் இல்லை. பத்ரிக்கு போறேன்னு காலை ஓடிச்சுண்டார். மனசொடிஞ்சு போய்ட்டார். அப்றம்..." என்று ரங்கு பேச்சை நிறுத்தினான்.
*****
சரித்திரக்கதை உரையாடல்
சரித்திரக்கதைகளில் உரையாடல் பெரும்பாலும் செந்தமிழில் அமையும் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
’குடிப்பெருமை’: கி.வா.ஜகந்நாதன்
(
http://www.sirukathaigal.com/சமுகநீதி/குடிப்-பெருமை/#more-2123)
"என்ன, தாமப்பல் கண்ணனாரே, இன்று சதுரங்க பலம் உம்மிடத்திலே இல்லையே! நான் அரச குலத்திலே பிறந்தவன், சதுரங்க வலியுடையவன்; நான் தான் வெல்கிறேன். உம்முடைய பக்கம் வெற்றி உண்டாக இது தமிழ்க் கவிதை அல்ல", என்று அந்த உற்சாகத்திலே மாவளத்தான் பேசத் தொடங்கினான்.
"போர்க்களத்துப் படைக்கும் இந்தச் சதுரங்கத்துக்கும் சம்பந்தமே இல்லை. அது வேறு, இது வேறு", என்று புலவர் சொல்லிக் காயை நகர்த்தி வைத்தார்.
*****
மனவோட்டம் பற்றி அடுத்த பதிவில்....