நோபல் பரிசு பெற்ற சந்திரசேகர்

பிப்ரவரி 28 , " தேசிய அறிவியல் நாள் " என இந்தியவில் கொண்டாடப்பட்டது . அதை முன்னிட்டுத் தமிழ் விஞ்ஞானி ஒருவரைப் பற்றிய தகவல்களை இரு ஆங்கில நூல்களிலிருந்து திரட்டி மொழிபெயர்த்து மன்றத்தில் பதிகிறேன் , சில நாள் தாமதமாய் .
கோளியற்பியலில் ( Astrophysics) உலகு புகழும் தமிழர் , பேராசிரியர் சந்திரசேகர் . இவருடைய தந்தை சுப்பிரமணியம் இந்திய வடமேற்கு ரயில்வேயின் துணைப் பொதுக் கணக்காய்வராய் ( Auditor) லாகூரில் பணி ஆற்றியபோது சந்திரசேகர் பிறந்தார் . ( 19 -10 -90 ) . இது இவரது பாட்டனாரின் பெயர். அவர் ஆந்திராவில் கணிதப் பேராசிரியர் . அவருடைய பிள்ளைகளுள் ஒருவர் இயற்பியல் நோபல் பரிசு பெற்ற வெங்கட்டராமன் (சி.வி.ராமன் ) ; நம் சந்திரசேகருக்குச் சிற்றப்பா .
குழந்தைக்கு எட்டு வயது ஆனபோது குடும்பம் சென்னைக்குக் குடி பெயர்ந்தது .

இங்குப் பட்டப் படிப்பை முடித்துவிட்டு இங்கிலாந்தில் வானியல் கற்றபின் சந்திரசேகர் , 1936 இல் , அமெரிக்காவின் கேம்பிரிட்சு பல்கலைக்கழகத்து மாணவர் ஆனார் ; அந்தப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் , சர் . ஆர்தர் ஸ்டான்லி எடிங்டன் ( Sir Arthur Stanley Eddington) உலகக் கோள் இயற்பியல் அறிஞர்களுள் தலை சிறந்தவராய் மதிக்கப்பட்டவர் . அவர் கிரீன்விச் நோக்ககத்தின் ( Observatory ) பிரதான உதவியாளராய் 1906 இலிருந்து ஏழாண்டுக் காலம் உழைத்துவிட்டுக் கேம்ப்ரிட்சில் பேராசிரியரானார் . 1926 இல் அவர் வெளியிட்ட " விண்மீன்களின் உள்கட்டமைப்பு " ( The internal constitution of stars ) என்னும் நூல் இன்றளவும் செவ்வியல் படைப்பாகக் கருதப்படுகிறது . அவரது காலம் 1882 - 1944 .

சந்திரசேகர் , தம் அரிய ஆராய்ச்சியின் விளைவாய்க் கண்டுபிடித்த ஒரு புதிய கோட்பாட்டைத் (Theory ) தெரிவித்தார் : ஒரு விண்மீன் , வெள்ளைக் குள்ளன் ( white dwarf) நிலையை அடைந்தபின்பும் இறுகும் என்பதுதான் அந்தக் கோட்பாடு . அதுவரை அறிவியலுலகு நம்பியிருந்தது என்னவென்றால் , " எந்த விண்மீனும் தன் இறுதிக் காலத்தில் மிகச் சிறுத்து ஒரு கடைசிக் கட்டத்தை அடையும் ; அப்போது அதற்கு வெள்ளைக் குள்ளன் என்று பெயர் " என்பதே . இதற்கு மாறாய்ச் சந்திரசேகரின் கோட்பாடு இருந்தமையால் வானியல் அறிஞர்கள் அதை எதிர்த்தார்கள் > முதன்மை எதிர்ப்பாளர் எடிங்டன் . இந்தப் பேராசிரியர்க்கும் இவரது மாணவர் சந்திரசேகருக்கும் இடையே காரசார விவாதங்கள் நடைபெற்றன ; ஆயினும் பகைமை தோன்றவில்லை .

இறுதியில் சந்திரசேகரே வென்றார் . ஒரு வெள்ளைக் குள்ளன் அடையக்கூடிய அதிக பட்ச பொருண்மையின் ( Mass) அளவை அவர் கணித்துக் கூறினார் ; அதனை ஏற்றுக்கொண்ட வானியல் வல்லுநர்கள் அந்த அளவினுக்குச் " சந்திரசேகர் எல்லை " ( Chandrasekar Limit ) எனப் பெயர் சூட்டி அவரது புகழ் , உலகம் உள்ளவரை நின்று நிலைபெறச் செய்துள்ளார்கள் .

அது மட்டுமல்ல ; இன்னொரு பெருமையும் அவருக்குக் கிட்டியது :

1999 ஜூலை 23 இல் , விண்ணில் இருக்கிற புதிர்க் கதிர்களை ( X Rays ) க் கவனித்து அறிவதற்காக ஒரு நோக்ககச் செயற்கைக் கோள் ( Observatory Satellite ) அமெரிக்காவிலிருந்து வான் நோக்கி வெற்றிகரமாய்ச் செலுத்தப்பட்டது . அதற்கு அட்வான்ஸ்டு எக்ஸ்ரே அஸ்ட்ரானமி ஃபசிலிட்டி எனப் பெயர் வைத்திருந்தார்கள் ; தமிழில் , " முன்னேற்றமுடைய புதிர்க் கதிர் வானியல் கருவி " எனலாம் . சந்திரசேகரைக் கௌரவப்படுத்துவதற்காக அந்தப் பெயரைச் " சந்திரசேகர் நோக்ககம் " என மாற்றினர் ; அது சுருக்கமாகச் " சந்திரா நோக்ககம் " என்று சுட்டப்படுகிறது .

73 ஆம் பிறந்த நாளாகிய 19-10-1983 இல் வெளியாயிற்று நோபல் பரிசுக்கான அறிவிப்பு ; இயற்பியலுக்காக அதைப் பெற்ற இரண்டாம் தமிழர் என்பது நமக்கெல்லாம் பெருமை அல்லவா ?

அவருடைய தாயார் சீத்தாலட்சுமி ; மனைவி லலிதா , கணவரைவிட நான்கே நாள் இளையவர் . குழந்தைப் பேறு வாய்க்கவில்லை மாரடைப்பால் 21-8-95 இல் சந்திரசேகர் காலமானமை அறிவியல் உலகுக்குப் பேரிழப்பு என்பது மிகை அல்ல .

================================
 
சிற்றப்பாவும் , மகனும் நோபல் பரிசு பெற்றது, தமிழ் மண்ணுக்குக் கிடைத்த பெருமையாகும்.!
 
அரிய தகவலை அறியத் தந்ததற்கு நன்றி ஐய்யா...!!!
 
நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சந்திரசேகர் அவர்களைப் பற்றி பல அறியாத செய்திகளைத் தெரிந்துகொண்டேன். தேசிய அறிவியல் நாளில் ஒரு தமிழ் விஞ்ஞானியின் பெருமை பற்றிய பதிவைத் தந்து பலரும் அறியச் செய்த தங்கள் முயற்சி பாராட்டத்தக்கது. மேலும் x ray - புதிர்க் கதிர், observatory - நோக்ககம் போன்ற புதிய தமிழ்ச்சொற்களையும் அறிய முடிந்தது. தங்களுக்கு நன்றியும் பாராட்டும்.

சிறு சந்தேகம்: சந்திரசேகர் அவர்களது பிறந்த தினம் 19- 10-10 என்றிருக்கவேண்டுமோ?
 
Back
Top