ரமணியின் கவிதைகள்

பிள்ளையார் சதுர்த்தி துதி: வேரினைக் காணும் நாள்வரவே...
(குறும்பா)

வேழமுகன் உன்னழகைப் பாட
ஆழவுளம் வந்தருளி யாடு
. . தினைத்துணையே எறும்பாக
. . உனைக்கொளவே குறும்பாவில்
ஏழைநானும் படுவேனே பாடு! ... 1

எத்தனையோ உன்னுருவில் சின்னமே
அத்தனையும் அர்த்தமுடன் உன்னவே
. தந்தியுருக் களமாகும்
. சிந்தனையும் வளமாகும்
சித்தமெலாம் உன்நாமம் பின்னுமே. ... 2

எத்தனையோ உன்பிறப்பில் கதையுமே
அத்தனையும் அர்த்தமுடன் வதியுமே
. . தந்தையிடம் செற்றனையே
. . தந்திமுகம் பெற்றனையே
சித்தமெலாம் உன்நாமம் பதியுமே. ... 3

ஆனைமுகம் அன்புருவாய் ஆகுமே
தானெனவே எண்ணுவதும் போகுமே
. . அருகினிலே அருகுவினை
. . அருளொளியாய்ப் பெருகுமுனை
வானமுதல் என்றுவையம் காணுமே. ... 4

பாரதத்தின் பழமைவளம் மீள்வரவே
சாரதரின் நாதனுன்றன் தாள்தருவாய் ... ... [சாரதர் = பூதகணத்தார்]
. . ஊழலெலாம் வாழ்வறவே
. . சூழுவினை தாழ்வுறவே
வேரதனை யாம்காணும் நாள்வரவே! ... 5

--ரமணி, 17/09/2015, கலி.31/05/5116

*****
 
நீண்ட நாட்கள் மன்றம் வராததால்பல நல்ல படைப்புகளைப் தவற விட வேண்டியதாகப் போய்விட்டது. முதலில் இருந்து படிக்க வேண்டும்.
 
'வல்லமை' மின்னிதழில் இன்று வெளியான பாடல் கீழே.
http://www.vallamai.com/?p=62749

01. அரசமர கணபதியே ஆறுதல்!
(குறும்பா)

அரசமரம் கீழமர்ந்த கணபதியே
தரிசுமனம் நின்றருளக் கணமிதுவே
. தென்காற்றின் அலையோட
. என்காற்றும் நிலையாக(க்)
கரிசனத்தின் காப்பருள்வாய் குணநிதியே. ... 1

எத்தனையோ உருவமுன்றன் கதையுமே
அத்தனையும் அர்த்தமுடன் வதியுமே
. ஓங்காரம் உள்ளமுற
. ரீங்காரப் பள்ளமறும்
சித்தமெலாம் உன்நாமம் பதியுமே. ... 2

ஏகதந்த இறைமகனாம் ஏரம்பன்
ஆகுவாக னத்திலருள் ஆரம்பம்
. முக்கண்ணன் நாமமெலாம்
. எக்கணமும் சேமமென
வேகுமன வேதனைகள் ஓரம்போம்! ... 3

சிந்தையிலே உன்னுருவைக் கொள்ளுவனே
வந்தவினை போனதெனத் தள்ளுவனே
. தும்பிக்கைக் காப்பினிலே
. நம்பிக்கை கூப்புவனே
வந்தனையில் வருவதெலாம் அள்ளுவனே. ... 4

என்னாயுள் எதுவென்றே ஆனாலும்
என்வாழ்வில் எதுவந்தே போனாலும்
. தந்திமுகன் வந்தனையில்
. சிந்தனையில் பந்தமறும்
என்நாவில் உன்பெயரே தேனாமே. ... 5

--ரமணி, 07/10/2015, கலி.20/06/5116

*****
 
பிரதோஷத் துதி: மாலை நடந்தரும் மாதேவா!
(சந்தக் கலித்துறை: தானன தந்தன தானன தந்தன தானானா)

கம்பன் பாடல்: ஆழநெ டுந்திரை யாறுக டந்தவர் போவாரோ?

மாலைந டந்திடும் வேளைந டந்தரும் மாதேவா!
சோலைவ ளந்தனில் சூழுமி ளந்திரை நீயன்றோ!
சூலியி டம்வர மேவுமி ளம்பிறை தோய்சென்னி
தோலணி அந்திரன் மேலணி அங்கதம் தோள்மேலே! ... 1 ... [அந்திரன் = கடவுள்]

நந்திசி ரந்தனில் வந்துந டஞ்செயும் நல்லானே!
சிந்தையு ரம்பெற வந்தப ரம்பொருள் நீயன்றோ?
பந்தம றுந்திடும் விந்தைநி கழ்ந்திட வாராயோ?
வந்துவ ரந்தர வேண்டும னந்தனில் வாழாயோ? ... 2

ஆரணம் தொண்டையில் வானதி மண்டையில் ஆனந்தன்
பூரணன் பண்ணுறும் நீரினில் தண்ணுறும் பூசைதான்
ஊரினில் உன்னருள் ஊருணி யின்சுவை யாயேறும்
காரணன் மந்திரம் காப்பருள் சிந்தனை காலூன்றும்! ... 3

போதுக ழிந்திடும் மேனிய ழிந்திடும் பூஞ்சைதான்
போதும னந்தனில் பூரித மென்னுளம் பூவாதோ? ... ... [பூரிதம் = மிகுகளிப்பு]
வேதன னந்தனை வேள்விம னந்தனில் கொண்டேயென்
சேதம ழிந்திட வாதுவி ழுந்திடும் சேர்வென்றோ? ... 4

வாரியெ ழுந்திடும் வாசுகி நஞ்சுணி வான்மூலா!
மாரியெ ழுந்திடும் வானவ ளந்தரும் மாதேவா!
வேரிலெ ழுந்திடும் வேதம ளந்திடும் வீடேதான்
தேரவெ ழுந்திடும் சோதியை யென்னுளம் சேராதோ? ... 5

--ரமணி, 09/10/2015, கலி.22/06/5116

*****
 
சித்தலப் பாக்கப் பொண்ணு!
(அறுசீர் விருத்தம்: விளம் மா விளம் மா விளம் காய்)

சித்தலப் பாக்கப் பொண்ணுதான்
. செவத்த மாமனப் பாக்கணும்னு
வெத்தலப் பாக்கு வாயுடன்
. வீட்டுப் பக்கமாப் போனாளாம்
முத்தலை வேலன் வாழ்விலே
. முழுசா எப்பவும் கொடுக்கலையே
பொத்தலு சேலைத் தலைப்பிலே
. புன்ன கையில மறைச்சாளே!

--ரமணி, 12/10/2015

*****
 
கேள்விகள்
(அறுசீர் விருத்தம்: தேமா மா காய் அரையடி)

என்னை எனக்குப் புரியலையே
. எண்ணம் எதுவும் சம்மதமாய்
முன்னர் இன்று நாளையென
. மூன்று பொழுதும் ஓடிடுமே
இன்னும் மூச்சில் பேச்செனவே
. இங்கே நானும் இருந்திடவே
பின்னர் ஓர்நாள் போனதுமே
. பேயென் றேதான் அலைவேனோ?

பேயென் றேதான் அலைந்தேநான்
. பித்தன் உன்னைக் காணுவனோ?
நீயென் னையாட் கொள்ளவென
. நீசன் நானும் மாறுவனோ?
சேயென் றேநீ கொண்டாலும்
. தேறல் இன்றித் தள்ளுவனோ?
தீயைக் கையில் ஏந்தும்நீ
. திண்மை ஞானம் தருவாயோ?

--ரமணி, 12/10/2015

*****
 
தமிழும் வடமொழியும்
(தரவுக் கொச்சகக் கலிப்பா)

இடமுறையும் தமிழ்மொழியே யென்தாயின் மொழியாமே
வடமொழியே தந்தையென வலமுறையும் மொழியாமே
நடமாடும் ஈசனவன் நலந்தரவே அருள்மொழியாய்த்
திடமாக இவையிரண்டும் தேன்மொழியென் றுணர்வோமே!

--ரமணி, 12/10/2015

*****
 
அன்புடையீர், வணக்கம்.

இன்று வெள்ளிக்கிழமை வல்லமை மின்னிதழில் 'தெய்வ தரிசனம்' தொடரில் படைப்பு பற்றிய ரிக்வேத நாஸதீய சூக்தம்,10.129-இன் எளிய மொழிபெயர்ப்பாகக் குறும்பா வடிவில் நான் எழுதிய ஏழு பாடல்கள் வெளிவந்துள்ளன. பாடல்கள் கீழே. அன்பர்கள் படித்துக் கருத்துச் சொல்லுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

http://www.vallamai.com/?p=62950

அன்புடன்,
ரமணி

*****

தெய்வ தரிசனம்:
02. பரம்பொருளும் படைப்பும்
(குறும்பா)

[ரிக்வேதம் பத்தாவது மண்டலத்தில் 129-ஆவது சூக்தமாக
உள்ளது ’நாஸதீய சூக்தம்’. இப்பாடல் அதன் எளிய மொழிபெயர்ப்பு.]

இல்லையென்றோ உள்ளதென்றொ ஏதுமிலை
தொல்லுலகம் தொடுவானம் போதுமிலை
. மூடுபனி கூடியதோ
. கூடெனவே மூடியதோ
வல்லிருளோ வெள்ளமதோ பேதமிலை! ... 1

மரணமென்றும் மோட்சமென்றும் இல்லாதே
இருள்தனியே பகல்தனியே செல்லாதே
. அதுவொன்றே மூச்சற்றே
. அதிர்ந்ததுவே பேச்சற்றே
உருவெமென வேறெதுவும் கொள்ளாதே! ... 2

இருளொன்றே இருளென்றே மூடியதே
உருவற்ற வெள்ளம்போல் கூடியதே
. ஒன்றெனவே ஓர்பொருளே
. தன்நிலையை ஓர்பொருளே
எரிதவத்தால் தன்னுள்ளே தேடியதே! ... 3

உள்ளியதில் ஓராசை எழுந்ததுவே
உள்ளத்தின் மூலவித்தாய் விழுந்ததுவே
. தன்னிதயம் ஆயுமுனி
. உண்மையென மாயையென
உள்மனத்தின் உணர்வினிலே இழிந்ததுவே! ... 4

கதிர்பலவாய் சூனியத்தில் விரிந்ததுவே
அதிர்வாற்றல் அடியெனவே இருந்திடவே
. சந்ததிகள் உருவாக
. விந்தொன்றே கருவாக
அதிவேகம் உச்சியிலே திரிந்திடவே! ... 5

யாரறிவார் எங்கிருந்து படைப்பிதுவே
யாருரைப்பர் இதுவென்ன புடைப்பெனவே
. கடவுளரும் தேவருமே
. படைத்தபினே மேவினரே
யாரறிவார் எங்கிருந்த உடைப்பிதுவே! ... 6

படைப்பிதனைப் படைத்ததுவே புரப்பதுவோ
படைப்பிதனைப் படைத்ததுவே புரந்திலையோ
. பரவான வெளியினிலே
. அரசாளும் ஒளியவனே
படைப்புண்மை அறிவானோ அறிந்திலையோ? ... 7

--ரமணி, 12/10/2015, கலி.25/06/5116

*****
 
நகைச்சுவை வெண்பா: முழி பிதுங்கும் மொழிமாற்றம்!
(அளவியல் இன்னிசை வெண்பா)

சாஸ்திரம் என்பது சாத்திரம் ஆகுமே
ஆஸ்திகன் என்பவன் ஆத்திகன் ஆவனே
நாஸ்திகன் என்பவன் நாத்திகன் ஆவனே
வாஸ்து உருவமோ வாத்து? ... 1

வஸ்து எனும்சொலை வத்து வெனச்சொல
அஸ்த மனமது அத்த மனமாக
மஸ்து எனும்சொலே மத்து வெனச்சொல
அஸ்து எனிலது அத்து? ... 2

ஈஸ்வரன் என்பவர் ஈச்சுரன் ஆவதால்
சாஸ்வதம் என்பது சாச்சுதம் ஆகுமோ?
ஸ்வப்னம் எனும்பதம் சொப்பனம் ஆக
ஸ்வயம்பு உருவமோ சொம்பு? ... 3

--ரமணி, 12/10/2015

*****
 
சமஸ்கிருத மூலத்தின் மெட்டுக்கேற்பச் சொற்களைத் தமிழ்ப்படுத்தி எழுதியது. பாடக்கூடியவர்கள் யூட்யூப் மூலத்தை வைத்துக்கொண்டு தமிழில் பாடிப்பார்க்கவும்.
(மீள்பதிவு)


ஶ்ரீ அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம்
(எழுசீர் விருத்தம்: விளம் விளம் விளம் விளம் விளம் விளம்/மா காய்)

முக்கூர் சீனிவாச வரதாச்சாரியார் இயற்றிய
சமஸ்கிருத தோத்திரத்தின் தமிழ் யாப்பு


இசை வடிவம்:
http://www.youtube.com/watch?v=M0VNJ6KT2XY

நல்மனம் போற்றிடும் இன்னெழில் மாதவி
. சந்திரன் சோதரி பொன்னொளியே
பன்முனி சூழ்ந்திடும் முத்திய ளித்திடும்
. நன்மொழி இன்மொழி மறையொளியே
இன்கம லத்தினில் வானவர் போற்றிடும்
. தேன்குணம் பெய்திடும் சாந்தியுரு
வென்றிடு வாய்மது சூதனன் காமுறு
. ஆதிலக்ஷ் மியென்றும் காத்தருள்வாய். ... 1

புன்மைகள் கலியினில் நீக்கிடும் பாவையே
. நன்மறை யுருவினள் வேதமயம்
வன்கடல் தோன்றிய மங்கள உருவமே
. மந்திரம் உறைபவள் மந்திரமாம்
இன்னருள் தருபவள் பங்கயம் உறைபவள்
. விண்ணவ ருன்கழல் பணிந்திடுவார்
வென்றிடு வாய்மது சூதனன் காமுறும்
. தான்யலக்ஷ் மியென்றும் காத்தருள்வாய். ... 2

வென்றிடு வோர்புகழ் வைணவி பார்கவி
. எந்தவோர் மந்திர உருவினளே
விண்ணவர் வழிபடும் விரைவினில் பலன்தரும்
. மிகுதரும் ஞானமும் நூல்போற்றும்
ஜன்மப யத்துடன் பாவமும் போக்கிடும்
. பற்றிலா ருன்தாள் பணிந்திடுவார்
வென்றிடு வாய்மது சூதனன் காமுறும்
. தைர்யலக்ஷ் மியென்றும் காத்தருள்வாய். ... 3

இருள்வழி மாற்றியே காப்பவள் காமினி
. கேட்டவ ரம்தரும் நூல்வடிவாம்
பரியுடன் கரித்தேர் காற்படை யாய்வரும்
. நாற்படை நாயகி பாற்கடலாள்
அரியுடன் அரனும் பிரம்மனும் வழிபடும்
. அழலினத் தீர்த்திடும் தாளுடையாள்
வெற்றியே நீமது சூதனன் காமுறும்
. ஶ்ரீகஜ லக்ஷ்மிநீ காத்தருள்வாய். ... 4

கருடனில் வலம்வரும் சக்கர மோகினி
. பற்றுகள் நீக்கிடும் ஞானவுரு
இறைகுண வாரியாம் நலனுளம் கொள்பவள்
. சுரங்களின் ஒலிகளின் நாயகியே
வரருடன் தானவர் துறவியர் மானவர் ... ... (வரர்=தேவர்கள்)
. யாவரும் வழிபடும் தாளுடையாள்
வெற்றியே நீமது சூதனன் காமுறும்
. சந்ததி லக்ஷ்மிநீ காத்தருள்வாய். ... 5

வனச முன்னாசனம் நற்கதி யளிப்பவள் ... ... (வனசம்=தாமரை)
. ஞானமும் மிகுதரும் கானவுரு
தினம்தினம் அர்ச்சனைக் குங்குமத் தூளணி
. எங்கணும் வாத்திய வழிபாடு
கனக தாராதுதி போற்றிட மகிழ்வுடன்
. சங்கரர்க் கருள்மழை பெய்தவளே
வென்றிடு வாய்மது சூதனன் காமுறும்
. விஜயலக்ஷ் மியென்றும் காத்தருள்வாய். ... 6

அண்டருன் தாள்படும் பாரதி பார்கவி ... ... (அண்டர்=தேவர்கள்)
. அயர்ச்சியை நீக்கிடும் ரத்னவொளி
மணிகளை யணிந்தவள் காதினில் குண்டலம்
. சாந்தியும் புன்னகை மிளிருமுகம்
ஒன்பது நிதிதரும் கலிமலம் மாய்த்திடும்
. உவந்திடும் வரம்தரும் கரமுடையாள்
வென்றிடு வாய்மது சூதனன் காமுறும்
. வித்யா லக்ஷ்மிநீ காத்தருள்வாய். ... 7

திமிதிமி திந்திமி திந்திமி திந்திமி
. பேரிகை யோசைநி றைந்தருள்வாய்
குமகும கும்கும கும்கும கும்கும
. சங்கொலி கேட்டிடத் திகழ்ந்திடுவாய்
வேதபு ராணயி திகாசமும் போற்றிட
. வேதநல் நெறியினைக் காட்டிடுவாய்
வென்றிடு வாய்மது சூதனன் காமுறும்
. ஶ்ரீதன லக்ஷ்மிநீ காத்தருள்வாய். ... 8

--ரமணி, 20/09/2013, கலி.04/06/5114

மூலம் (தமிழ் உருவில்):
http://ammanpaattu.blogspot.in/2012/07/1.html

பொருள்:
http://devotionalonly.com/ashtalakhsmi-stotram-meaning-and-pdf/#chitika_close_button
http://www.sadagopan.org/index.php/categories/doc_details/641-sh107-ashtalakshmi-stotram

*****
 
இன்றைய வல்லமை இதழில்:
http://www.vallamai.com/?p=63404

தெய்வ தரிசனம்
04. பிரமனுக்கேன் ஆலயமில்லை?
(தரவு கொச்சகக் கலிப்பா)

[காஞ்சி மகாபெரியவர் உரையிலிருந்து திரட்டிய செய்திகள்]

நான்முகனாய் நாரணனின் நாபியிலே தோன்றியுமே
நான்முகமும் எப்போதும் நான்மறையை ஓதியுமே
வான்முதலாய் வைத்துலகும் மானிடரும் ஆக்கியுமே
ஏனோநான் முகனுக்கே எங்கணுமே கோவிலிலை! ... 1

படைப்பின்றேல் காப்பில்லை பண்ணியதை அழிப்பதில்லை
உடைத்தழிக்கும் பித்தனவன் உன்னதமாய் ஆலயத்தில்
நடைமுறையைக் காத்தருளும் நாரணனும் ஆலயத்தில்
படைப்புதரும் பிரமனுக்கோ பண்ணில்லை கோவிலிலை! ... 2

வீட்டினிலே வழிபாட்டில் விடையவனும் விட்டுணுவும்
பாட்டினிலே புகழ்ந்தேத்தப் பலதெய்வம் படமாக
நாட்டினிலே எல்லோரும் நாடுதெய்வ வழிபாட்டில்
ஏட்டினிலே செய்கையிலே இடமில்லை பிரமனுக்கே! ... 3

மூன்றுதேவர் பத்தினியும் முறையாக வழிபாட்டில்
ஊன்றிநிற்க உமையன்னை உள்ளத்தில் திருமகளாம்
தோன்றுஞானம் தந்திடவே தொழுதிடுவோம் நாமகளை
ஆன்றவனாம் அந்தணனாம் ஆரணனுக் கேதுமிலை! ... 4

பிரும்மமெனப் பரம்பொருளே பேர்பெற்றி ருந்தாலும்
பிரும்மவித்தை பேரெனவே பிரும்மஞானம் ஆனாலும்
பிரும்மானந் தம்நிலையாய் பிரும்மவித்தை யானாலும்
பிரமனுக்கோ கோவிலிலை பேர்சொல்லிப் போற்றவிலை! ... 5

ஆரணத்தின் ஒலியாலே அனைத்துலகும் உருவாக்கும்
ஆரணனாய்த் தந்தையென அனைத்துயிர்க்கும் வேராகிச்
சீரணவும் பிரமனுக்கோ சிறப்புவழி பாட்டிலையே!
காரணத்தைத் விளக்குவரே கருணைமிகு காஞ்சிமுனி. ... 6

[சீரணவும் = சீர் பொருந்திநிற்கும்]

பிறவியிதைத் தருகின்ற பிரமனுக்கா வழிபாடு?
பிறவியிதே ஈனமெனப் பேரின்ப நிலையிருக்க
பிறவியிதன் போக்கினையே பிரம்மலிபி தலையெழுத
பிறவியிதைத் தருகின்ற பிரமனெவண் வழிபடவே! ... 7

நம்பிறவிக் காரணமாய் நான்முகனெங் ஙனமாவான்?
நம்பிறவி அமைவதெலாம் நம்வினைகள் துய்ப்பதற்கே
நம்பிறவிப் போக்கொன்றே நம்தலையில் எழுதிவைக்கும்
அம்பாவான் பிரமனவன் அம்பெய்த வர்நாமே! ... 8

பாலனத்தைச் செய்பவராய்ப் பரந்தாமன் ஆனாலும்
சூலத்தாற் கொல்பவராய்ச் சொக்கனவர் ஆனாலும்
ஏலுவரே இருவருமே எதுவுமருள் தெய்வமென
கோலமிகு இந்தநிலை குரவனுக்கோ என்றுமிலை! ... 9

[பாலனம் = பாதுகாப்பு; ஏலுவரே = தகுதியாவரே; குரவன் = பிரமன்]

பாலனத்தைச் செய்பவளாய்ப் பாற்கடலாள் ஆனாலும்
சூலத்தாற் கொல்பவளாய்த் துர்க்கையவள் ஆனாலும்
ஏலுவரே இருவருமே எதுவுமருள் தெய்வமென
கோலமிகு இந்தநிலை குரவனுக்கோ என்றுமிலை! ... 10

பரம்பொருளால் ஆனாலும் பரம்பொருளய்த் தோன்றாத
பிரமனைமற் றிருவருடன் பேசுமுறை இல்லையென
உருவமேதும் ஆலயத்தின் உள்ளறையில் வைக்காமல்
கருவறைவி மானத்தில் காணவைத்த உருவெனவே! ... 11

மூவரிலே ஒருவரென முன்னிற்கும் பிரமன்பேர்
ஆவதெவண் என்பதனை ஆன்றமுனி சொன்னசெய்தி:
பூவுலகம் அண்டமெலாம் பொருந்திநிற்கும் பரம்பொருளே
மேவிவரும் லீலையென வேதாவைச் செய்ததுவே. ... 12

[வேதா = பிரமன்]

ஆடவர்பெண் சேர்க்கையிலே அவனியெலாம் செய்பிரம்மம்
தோடணியான் நாமகளைச் சோதரராய்ச் செய்ததுடன்
நீடுமாலும் அம்பாளும் நிலையினிலே சோதரராய்
நாடுகின்ற போகநிலை ஞானநிலை தருவதற்கே. ... 13

[தோடணியான் = காதில் தோடணிந்த சிவன்; நீடுமால் = நிலைத்திருக்கும் திருமால்]

உலகியலும் ஞானமுமே ஒன்றாகக் கலப்பதெனத்
தலைப்பட்ட பிரம்மமது தம்பதியாய்ச் சோதரர்க்கு
விலையொன்றைத் தருவதற்கே வேதாவை இலக்குமியை
நிலைபேற்றில் சோதரராய் நிற்பதெனச் செய்ததுவே. ... 14

அரன்-உமையாள் அரி-கமலை அயன்-வாணி எனமூன்றாய்
உருவான தம்பதியில் முதலிருவர் முழுமுதலாய்
இருந்திடவே பின்னிருவர் எழுஞானம் ஒன்றுமட்டும்
அருள்வதற்கே தெய்வமாக ஆலயத்தில் நின்றிலையே. ... 15

பிரமனவர் குருவாகப் பாற்கடலோன் பின்னின்றே
பிரம்மவித்தை ஞானமெனும் பேற்றினையே அருளுவதால்
உருவமென ஆலயத்தின் உள்ளில்லா பிரம்மதேவன்
குருவாக நாம்போற்றிக் கூடுதரும் பிறப்பறுப்போம். ... 16

--ரமணி, 29/10/2015, கலி.12/07/5116

குறிப்பு:
மேல்விவரம்:
தெய்வத்தின் குரல், பாகம் 5, பக். 187-230

*****
 
தெய்வ தரிசனம்
05. கேடுநீக்கும் கேசவன்
(குறும்பா)

கேசியெனும் தானவனைக் கொன்றேநீர்
கேசவனாம் பேர்தன்னைக் கொண்டீரோ?
. குழலழகர் கூந்தலதே
. அழகெல்லாம் ஏந்துவதே
நேசமுடன் போற்றுவமே இன்றேநாம்!... 1

[தானவன் = அசுரன்]

சடைமுடியே ராகவனின் தலையினிலே
பிடரிமயிர் நரசிம்மம் கலையெனவே
. சிக்கமெலாம் மும்மூர்த்தி
. சக்தியென இம்மூர்த்தி
இடையூறு நீக்கும்தாள் தலையிதுவே!... 2

[சிக்கம் = உச்சி மயிர்]

கண்ணனுக்கோ வண்ணமயில் கேசந்தான்
எண்ணமெலாம் மாயவனின் நேசந்தான்
. காதலிப்பர் கோபியரே
. ஆதுரத்தில் பாபியரே
கண்ணன்மேல் நம்நெஞ்சில் பாசந்தான்!... 3

[ஆதுரம் = பரபரப்பு, வியாதி]

ககரமெனில் பிரமனவன் பேராமே
அகரமதோ விட்டுணுவின் பேராமே
. ஈசனுரு கொண்டவரும்
. நேசமுடன் ஒன்றுவரே
பகவனிவர் பரம்பொருளாம் சீராமே!... 4

தண்ணுலவும் கேசமெனும் கிரணமிதே
மண்டலத்தில் உள்ளுறையும் அருணமிதே
. கொண்டிடிவார் அவதாரம்
. விண்டிடுவார் பவரோகம்
கொண்டல்வண் ணன்போற்றத் தருணமிதே!... 5

கேசவனே கேடுகளை நீக்குபவர்
கேசவனே கேசரியாய்த் தாக்குபவர்
. பண்ணுறுமே பூவுறுமே
. கண்நிறுத்த நாவறுமே
கேசவனின் கேசம்தாள் நோக்குவமே!... 6

--ரமணி, 05/11/2015, கலி.19/07/5116

*****
 
தெய்வ தரிசனம்
06. நாராயணா என்னும் நாமம்
(குறும்பா)
http://www.vallamai.com/?p=63782


நாராய ணாவென்னும் பேரினிலே
வேராக உள்ளிருக்கும் சீரினிலே
. ஏறிநிற்கும் பொருளெல்லாம்
. ஊறிநிற்கும் அருளெல்லாம்
ஆராயப் புகுவோமிப் பாவினிலே. ... 1

நரவென்னும் சொற்பொருளாய் ஆன்மாவாம்
நரத்தினின்று வருவதெலாம் நாராவாம்
. அயனமெனில் இருப்பிடமாம்
. வியனுலகின் பிறப்பிடமாம்
உருவத்தின் உள்ளீடாய் நாரணனாம். ... 2

நரம்தந்த வெளியீடே வான்வெளியாம்
விரிகாய வெளியீடாய்த் தான்வளியாம்
. காற்றதுவே தீயாகி
. நீராகி நிலமாகும்
நரம்விளைத்த பேரதுவே நாராவாம். ... 3

நாரமதே நாரணனின் உறைபொருளாம்
காரணோத கம்சொல்லும் மறைபொருளாம்
. அஞ்சுபூதம் இயல்தனியே
. அப்புவெனும் பெயரிலினிலே
பேரணவும் படைப்பாகும் இறைபொருளாம். ... 4

[பேர்-அணவும் = பெயர் பொருந்தும்]

உயிருள்ள உருவுள்ளே நாரணனே
உயிரற்ற உருவுள்ளே நாரணனே
. உயிருள்ளதோ இல்லாததோ
. பெயருள்ளதோ இல்லாததோ
பெயரற்ற உள்ளமைதி நாரணனே. ... 5

நீராடும் போதினிலே நாமமென
நாராய ணன்நாமம் சேமமென
. எட்டெழுத்து மந்திரமே
. கட்டுமனம் தந்திடுமே
வேரோடும் செய்கையெலாம் ஏமமென. ... 6

[ஏமம் = களிப்பு, இன்பம்]

நாரணனின் நினைவுவரும் இறுதிமூச்சே
வேரறுக்கும் பிறப்பென்றே உறுதியாச்சே
. கருமமுறும் சோதனையோ
. கருமமறு சாதனையோ
சீரிதுவே உயிரொன்றின் அறுதியாச்சே. ... 7

ஓம்நமோ நாராய ணாயவென்றே
போம்வினைப் பாராய ணமாமென்றே
. எட்டெழுத்து மந்திரமே
. உட்டுளையாய் வந்துறினே
நாம்மேன்மை கொள்வதற்கா தாயமென்றே. ... 8

[உட்டுளை = உள்+துணை]

--ரமணி, 12/11/2015, கலி.26/07/5116

*****
 
பிரதோஷத் துதி
எங்களுக்கேன் அபிஷேகம் ஈசனே?
(முச்சீர் சமநிலைச் சிந்து)

வானதியைத் தாங்குதலைச் செஞ்சடை - கொஞ்சம்
. வாகாகச் சிலிர்த்தாயோ ஈசனே!
ஊனுருக நீராடும் பொழிவிலே - கொஞ்சம்
. உன்பங்காய் எங்களுக்கா ஈசனே!

ஏனிந்தப் பெருவெள்ள லீலையோ - எம்மை
. ஏங்கவைத்துப் பார்ப்பதுமேன் ஈசனே!
வானத்தில் சோதிநிலை யாகுமோ - இந்த
. வான்மீன்கள் மூழ்கினவோ ஈசனே!

நீயேந்தும் திருவோட்டை நாங்களும் - ஏந்தி
. நீர்நிலையில் அலைகின்றோம் ஈசனே!
கார்தந்த கொடையினிலே மற்றவை - யாவும்
. கரமேந்த வைத்தனையே ஈசனே!

திருவாடல் போதுமையா இத்துடன் - எங்கள்
. தெருவாடல் தீர்த்தருள்வாய் ஈசனே!
நரியாடல் பரியாடல் போதுமே - எங்கள்
. நலமீண்டும் ஆடவருள் ஈசனே!

--ரமணி, 23/11/2015, கலி.07/08/5116

*****
 
தெய்வ தரிசனம்
07. மாதவன் மகிமை
(குறும்பா)
http://www.vallamai.com/?p=63997

மாதவனின் பேர்சொல்லும் பேறிதே
மாதவத்தின் பலனென்றே ஆவதே
. முற்பிறப்பின் தவமென்றே
. இப்பிறப்பின் நலமென்றே!
வேதனைகள் தீர்த்துவைக்கும் பேரிதே. ... 1

சராசரியாம் மனிதனுமே அறியவே
பராசரராம் பட்டரவர் உரையிலே
. மாதவனின் பேர்விளக்கம்
. யாதெனவே வேர்விளக்கம்
பிரார்த்தனையாம் நாமமெனத் தெரியுமே. ... 2

மாவென்னும் அட்சரத்தின் மௌனமே
தவென்னும் அட்சரத்தின் தியானமே
. மோனத்தில் உருவற்ற
. தியானத்தைத் தருவிக்க
வவென்னும் அட்சரத்தின் யோகமே. ... 3

[பராசர பட்டரின் விஷ்ணு ஸஹஸ்ரநாம உரை]

மதுவித்தை சாதனையில் ஆதவனே
மதுவென்றே சங்கரரின் போதனையே
. உண்ணாத அமுதாகவே
. கண்ணாலே நமதாகவே
அதுவென்னும் பரம்பொருளாம் மாதவனே. ... 4

[ஆதிசங்கரரின் சாந்தோக்ய உபநிடத உரை]

ஹரிவம்சம் சொல்லுகின்ற பொருளாமே
பரமாத்ம ஞானத்தின் அருளாமே
. பேரறிவின் போதனையாய்
. வேரெனவே மாதவனாம்
உரையெல்லாம் இப்பொருளில் உருவாமே. ... 5

அஞ்சுபுலன் நம்சித்தம் ஆட்கொள்ளும்
சஞ்சரிக்கும் மனதையதன் மேற்தள்ளும்
. வெளியுணர்வில் ஈடுபடும்
. நளிவுள்ளம் பாடுபடும்
தஞ்சமெனப் பலநிலைகள் மேற்கொள்ளும். ... 6

[நளிவுள்ளம் = செருக்கினைக் கொள்ளும் உள்ளம்]

புறவுணர்வைக் கட்டுதற்கு மௌனமாம்
அறிவதனில் அமிழ்ந்திருக்க தியானமாம்
. நூலறிவால் ஏற்பட்ட
. வாலறிவின் பாற்பட்டு
பொறியற்று நிலைநிறுத்த யோகமாம். ... 7

[வாலறிவு = பேரறிவு, உண்மை]

மாவென்று திருமகளின் பேரதுவே
மாவென்னும் முதலெழுத்தின் வேரதுவே
. செல்வமெலாம் திரமாக
. செல்வதெலாம் அறமாக
வாவென்றால் வரமருளும் சீராமே. ... 8

--ரமணி, 19/11/2015, கலி.03/08/5116

உதவி:
மாதவன் என்ற சொற்பொருள்
https://ta.wikipedia.org/wiki/மாதவன்_என்ற_சொற்பொருள்
purAnic encyclopedia: vETTam maNi

*****
 
வெண்பா வித்தகம்: கட்டளைக் கலித்துறையில் வெண்பா
அமைத்தவர்: கவிமாமணி இலந்தை இராமசாமி
https://groups.google.com/forum/#!topic/santhavasantham/-mnQvFbRT7w

விழிமனக் கவிதை!
(கட்டளைக் கலித்துறையில் வெண்பா)

(கட்டளைக் கலித்துறை)
விழியின் மணியே விழிக்குறும் சொந்தம் விழுவதெலாம்
இழிதலைக் கொள்மனம் என்று விழிமுன் எழுத்தினிலே
இழைக்கும் கவிதைகள் இன்று மலரும் இனிமையிலே
உழைக்கும் உளத்தின் உவப்பு முழுதும் உணர்வினிலே!

(நேரிசை அளவியல் வெண்பா)
விழியின் மணியே விழிக்குறும் சொந்தம்
இழிதலைக் கொள்மனம் என்று - விழிமுன்
இழைக்கும் கவிதைகள் இன்று மலரும்
உழைக்கும் உளத்தின் உவப்பு

(நேரிசைச் சிந்தியல் வெண்பா)
விழியின் மணியே விழிக்குறும் சொந்தம்
இழிதலைக் கொள்மனம் என்று - விழிமுன்
இழைக்கும் கவிதைகள் இன்று

(குறள் வெண்பாக்கள்)
விழியின் மணியே விழிக்குறும் சொந்தம்
இழிதலைக் கொள்மனம் என்று

இழைக்கும் கவிதைகள் இன்று மலரும்
உழைக்கும் உளத்தின் உவப்பு

--ரமணி, 29/11/2015

*****
 
பிரதோஷத் துதி: வெள்ளம் தலைக்கேறும் வீழல் தீர்ப்பீர்!
(நேரிசை வெண்பா அந்தாதிப் பஞ்சக மாலை)

வெள்ளம் தலையேற்றி வெள்விடை யேறியென்
உள்ளத் தமர்வீர் உமைகோனே - வெள்ளம்
தலைக்கேறி வீட்டிய தாக்கத்தில் என்னுள்
மலைபோல் அழுத்தும் மயல். ... 1

மயலின் முயக்கில் மனமெங்கும் முட்கள்
தயக்கமே என்னைத் தழுவும் - துயரில்
செயலற்றே கற்பனை செவ்விதம் இல்லா(து)
அயலாகிப் போமென் அகம். ... 2

அகமிதே ஆவுடை யாராய்க் கருதி
உகந்தவோர் லிங்கமாய் உள்ளம் - அகழ்வீர்
பொழிகங்கை நீரால் புனிதம் அரும்ப
விழல்தீர்த் தருள்வீர் விழிப்பு. ... 3

விழித்தே உமைநான் விதவிதமாய்ப் போற்ற
வழித்துணை யாக வருவீர் - கழிபொழுதில்
என்சொல்லில் என்செயலில் எந்தை உமையெண்ணும்
தன்மை தருவீரே சம்பு. ... 4

சம்புவின் சம்பந்தம் சாதனை யில்சேர்க்க
சம்புவை அம்பாள் சகிதமாய் - நம்பிநான்
காரிருள் நீங்கிக் களிக்கும்நாள் என்னுளத்து
ளாரும் பரசிவவெள் ளம். ... 5

--ரமணி, 06/02/2016, கலி.23/10/5116
(சனி மஹா பிரதோஷ நன்னாள்)

*****
 
சரக்கொன்றை...
(மடக்கணி அமைந்த அளவியல் நேரிசை வெண்பா)

சரக்கொன்றைக் கைப்பற்றிச் சட்டென் றமர்ந்தார்
சரக்கொன்றைப் பூமரம் கீழே - ஒருவர்
சரக்குந்து ஓட்டுனர் மற்றவர் செல்வர்
சரக்குந்து போதை சமம்.

--ரம்ணி, 13/12/2015

*****
 
மீட்டிடப் போதுமான: மடக்கணி
(நேரிசை வெண்பா)

மீட்டிட வந்தனள் வீணையை! என்னைநீ
மீட்டிட வந்தாயோ வேலவா! - மீட்டிடப்
போதுமான காசில்லாப் பொன்னணி போலவென்
போதுமான தேமூழ்கிப் போய்!

விளக்கம்
மீட்டிட என்ற சொல்லின் பொருள் முறையே:
இசைத்திட, காப்பாற்ற, அடகு வைத்ததைத் திருப்ப.

போதுமான என்ற சொல்லின் பொருள் முறையே:
தேவையான அளவு; பொழுதும் ஆனதே!

குறிப்பு:
போதுமான என்ற சீர் விளாங்காய்ச் சீராகி ஓசை குறைப்பினும்,
மடக்குப் பொருளாக வருவதால் அதை அங்ஙனம் அமைத்தேன்.

--ரமணி, 29/01/2016

*****
 
Back
Top